காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை !

0
12

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ),  புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது என்ற அடிப்படையில் கடந்த 28.1.2018 அன்று  சென்னையில் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.  அவர் பேசுகையில், “ சில நாட்களுக்கு முன்பு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் ”மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்திற்கு பேராபத்து இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை தங்கள் நலனுக்கு ஏற்ப உபயோகப்படுத்துகிறது மோடி அரசு” என்று குறிப்பிட்டனர். 1975-ம் ஆண்டு எமர்ஜென்சியின் போது கருத்துரிமை ரத்து செய்யப்பட்டது. அவ்வகையில் இந்நாடு மீண்டும் ஒரு அவசரநிலை பாசிசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது என்பதை தான் இந்த 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பேட்டி மறைமுகமாக தெரிவிக்கிறது.

அத்தகையதோர் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்தக்கூடிய ஆற்றல் தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், இதனை எத்தனை தொழிற்சங்கங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

வாஞ்சிநாதன்

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கும் முழக்கங்கள் அனைத்தும் எப்போது சாத்தியமாகும் என்பது தான் கேள்வி. இந்த அரசியல் சாசன அமைப்பு முறையில் இது சாத்தியமா ? இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின் படிதான் இந்த அரசு அமைப்பு முறை செயல்படுகிறது.

இந்தியாவில் இருந்துவரும் இரு பெரும் பிரச்சினைகளான முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்திற்குள்தான் தொழிலாளர் பிரச்சினை வருகிறது. இதனை இந்த அரசு அமைப்பு முறை தீர்க்குமா?

இந்தியாவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அகதிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். பணிப்பாதுகாப்பு கிடையாது. வெளிமாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர் நிலை என்பது அகதிகளை விட மோசமான நிலையில் இருக்கிறது. அடுத்த நாள் வாழ்க்கை குறித்து அகதிகள் எப்படி எந்நேரமும் ஒரு பயத்தில் இருந்த்தப்பட்டிருப்பார்களோ அதே அளவிற்கு காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் பயத்தில் இருத்தி வைக்கப்படுகின்றனர்.

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தங்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுமார் 13,000 தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அவர்களை நிரந்தரப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை அவர்கள் நிரந்தரப்படுத்தப்படவில்லை. 1970களில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டமே அயோக்கியத்தனமான சட்டமாக இருக்கிறது. முழுமையான தீர்வைத்தராததாக இருக்கிறது. 90-களில்  தனியார்மயம் வந்த பிறகு இது வெறும் குப்பைக் காகிதமாகத்தான் இருக்கிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்றுதான் சட்டமும், உச்சநீதிமன்றமும் சொல்கின்றன. ஆனால் இந்தியாவில் இச்சட்டம் எங்கும் அமல்படுத்தப்படவில்லை. மற்ற மேலை நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளம் மாதம் ரூ.80,000-க்கும் அதிகம். ஆனால் இங்கு ரூ.8,000தான் அதிகபட்ச சம்பளமே.

 

 

மக்கள் நீதிமன்றத்தைத்தான் கடைசிப் புகலிடமாக நம்புகிறார்கள். ஆனால் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் இந்நீதிமன்றம் மக்களுக்கானது அல்ல என்பதை இங்கு சொல்லவேண்டியது எனது கடமையாகும். இதற்கு சமீபத்தில் நடந்த செவிலியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் விடுத்த மிரட்டல்களே மிகச்சிறந்த உதாரணம்.

பிரிக்கால், மாருதி தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடினால் அதனை வன்முறை என்று கூறும் நீதிமன்றம், சாமியார் ராம்ரஹிம் சிங் கைது செய்யப்பட்ட போது நடைபெற்ற வன்முறைகளுக்கும், பத்மாவதி படம் குறித்து சாதி வெறியர்கள் நடத்திய வன்முறைகளுக்கும் வாய் மூடி மவுனம் சாதிக்கிறது.

பாபர் மசூதியை விட நீதிமன்றத்தை அம்பலப்படுத்த தனியாக ஒன்று தேவையில்லை. மசூதி இடிப்பின் சூத்திரதாரிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டார்களா? அவர்கள் வெளியே சுதந்திரமாக உலவுகிறார்கள். அமித்ஷாவை கொலை வழக்கில் இருந்து விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி. அமித்ஷா வழக்கை நேர்மையாக விசாரித்த நீதிபதி லோயா கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலை பற்றிய வழக்குகூட இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது தான் நீதிமன்றத்தின் யோக்கியதை.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். டிராக்டர் கடனில் ரூ.1,00,000 தவணை செலுத்தாதற்காக விவசாயிகளை அடியாட்கள் கொண்டு தாக்கும் வங்கி,  ரூ.1,96,000 கோடி கடனை திரும்பச் செலுத்தாத அம்பானிக்கு மீண்டும் கடன் கொடுக்கிறது. இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 73% மக்களின் சொத்து குவிந்துள்ளது என்கிறது ஒரு முதலாளித்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனம். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களா?

அரசியல் அமைப்புச் சட்ட முறையில் இந்த ஏற்றத்தாழ்வை என்றுமே சரி செய்ய முடியாது. ஏனெனில், ஒருவன் குவிக்கும் செல்வத்திற்கு அது எவ்வித வரம்பையும் விதிப்பதில்லை. இது சாதி, மத பிரச்சினைகளுக்கும் எவ்வித தீர்வும் தரவில்லை. அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கர் தனது இறுதிக்காலத்தில் இந்த அரசியல் சாசன சட்டத்தைக் கொளுத்துவேன் என்றார். பெரியார் அதனைக் கொளுத்தினார்.

இந்த ஏற்றத்தாழ்வு பிரச்சினை உலகில் எங்குதான் தீர்க்கப்பட்டது ? 100 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பிரச்சினை சோவியத் ரசியாவில் தீர்க்கப்பட்டது. அதற்குக் காரணம் அங்கு உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் இருந்தது. தொழிலாளர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் மாற்ற வல்லவர்களாக இருந்தனர்.

வெறும் கூலி உயர்வுக்காக இல்லாமல், அரசியல் அதிகாரத்திற்காகத்தான் நமது போராட்டம் இருக்கவேண்டும். அகதியைப் போல் வாழும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்றாவது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருக்கிறதா ? தொழிலாளர்கள் சங்கமாக திரண்டால் மட்டுமே அது சாத்தியம். அதனை நோக்கி நமது முயற்சிகள் இருக்க வேண்டும்”என்று பேசினார்.

கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமாரும் தொழிலாளி வர்க்கம் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். ஆந்திரம், தெலுங்கானா பகுதியிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஏற்றவாறு அவர் தெலுங்கு மொழியில் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  அவ்வுரையை தோழர் விஜயகுமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 

தோழர் சுதேஷ்குமார் பேசுகையில், “இன்றைய நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது,  நிரந்தரத் தொழிலாளர்களும் தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர். மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறித்து வருகிறது. இந்த அமைப்பு முறையே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இங்கு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இரண்டு அனுபவங்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மிட்சூபா என்ற ஜப்பான் நிறுவனம் இருக்கிறது. அங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் 2 நிமிடம் தாமதமாக வந்தால் வீட்டிற்கு திருப்பியனுப்பப்படுவார்கள். தொடர்ந்து ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்தால் வேலையைவிட்டு நீக்கப்படுகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கே இது தான் கதி என்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதி என்ன என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு நிறுவனம், மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி (MRF). இது இந்தியாவின் மிகப்பெரிய டயர் நிறுவனங்களில் ஒன்று . இங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலேயே வேலையை விட்டு நீக்கப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது மேற்பார்வையாளர்கள் தொடுக்கும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளும், சுரண்டலும் இங்கு சொல்லி மாளாது. நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காகவே மாதக்கணக்கில் போராடி வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது எனில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

பெரும்பாலானோர், இங்கு தொழிலாளர்களுக்கான உரிமைகளை நீதித்துறை வழியாக சாதிக்கமுடியும் எனக் கருதுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அப்படியில்லை. பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கிய பின், ரிசர்வ் பட்டாளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை நிரப்புகிறார்கள். முருகப்பா குழுமத்தின் நிறுவனத்தில் புஜதொமு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைத்து அவர்களுக்கு போனஸ் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் இதனை நாங்கள் சாதனையாகக் கருதவில்லை.

சட்டப்பூர்வமாக தொழிலாளர்களின் உரிமைகளை சாதிக்க முடியாது என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்கள் இருக்கின்றன. ஒப்பந்த செவிலியர்கள், நிரந்தரப்படுத்தப்படுவ்தற்கும், வெறும் 7000 ரூபாய் சம்பளத்தை உயர்த்தவும் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ”இஸ்டம் இருந்தால் 7000 சம்பளத்தில் வேலை பாருங்கள், இல்லையெனில் வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்” எனத் திமிராக உத்தரவிட்டார்.

இதே போல போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் தங்களது சேமிப்புப் பணத்தையும் திரும்பக் கேட்டு போராடினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, உங்களால் இந்த வேலையை இந்த சம்பளத்திற்கு செய்யமுடியவில்லை என்றால், வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்துத் துறையை தனியார்மயப்படுத்தவும் பரிந்துரைத்தார். ஆகவே நீதித்துறை தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்காது.

மோடி, ராகுல் போன்ற தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை என்றும் பாதுகாக்க மாட்டார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களே தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அதிகாரத்தில் பாட்டாளி வர்க்கத்தை நிறுத்தவும் செய்வார்கள். செங்கொடியின் பதாகையின் கீழ் அணிதிரண்டு நமது உரிமைகளை வென்றெடுப்போம்.” என்று கூறினார்.

 

சந்தா