privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !

ஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !

-

”நடிகை ஸ்ரீதேவியின் மரணம்… அந்தக் கடைசி 15 நிமிடங்களில் பாத்ரூமில் நடந்தது என்ன?” என்பதைத் தமது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப் போவதாக அறிவித்தது ஏ.பி.பி (ABP) செய்தித் தொலைக்காட்சி. இதன் போட்டியாளரான ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு இப்போது வேறு வழியில்லை. தனது செய்தி அறிவிப்பாளரை நேரடியாக கக்கூசு ஒன்றுக்குள் நிப்பாட்டி வைத்து அங்கிருந்தே நேரலை செய்யத் துவங்கியது.

இவர்களுக்கெல்லாம் அப்பனான அர்னாப் கோஸ்வாமி நடிகையின் மரணத்திற்கும் அவளது கணவருக்கும் என்ன தொடர்பு என்பதை அலசி ஆராயத் துவங்கி விட்டார். கல்லூரி பேராசிரியரைப் போல் ஒரு வெள்ளைப் பலகையில் ஒவ்வொரு காரணங்களாக எழுதி, அதை கலர் கலரான மார்க்கர்களால் வட்டமிட்டு…. சரி, ஏன் நீட்டி முழக்க வேண்டும், ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் காங்கிரசு தலைவர் சஷிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதாக தனது கச்சேரியை அர்னாப் கோஸ்வாமி நிறைவு செய்தார். இனி வரும் நாட்களில் ராகுல் காந்தி வீட்டிலும் ஒரு குளியல் தொட்டி இருப்பதை ரிபப்ளிக் அம்பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதற்குத் தோதாக சுப்ரமணியம் சாமியும் ஸ்ரீதேவியின் மரணத்தை கொலை என்பதோடு அது தாவுத் இப்ராஹிமின் கைவரிசை என்று அடித்து விட்டிருக்கிறார்.

ரிபப்ளிக்கின் போட்டியாளரான டைம்ஸ்நௌவும் தனது பங்குக்கு வாட்சப் வெறியர்கள் பரப்பி வரும் டுபார்க்கூர்களான “டயட்டின் விளைவாய் மாரடைப்பு” “முகச் சீரமைப்பு சிகிச்சையால் மாரடைப்பு” போன்ற மொக்கைகளுக்கு ஆங்கில மருத்துவ விஞ்ஞானத்திடம் பதில் தேடிக் கொண்டிருந்தது. எப்படிப் பார்த்தாலும் இதில் அமித்ஷாவுக்குத் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்பதாலோ என்னவோ ஆங்கில மற்றும் இந்தி செய்தித் தொலைக்காட்சிகள் ஒருவித உளக்கிளர்ச்சியோடு ஸ்ரீதேவியின் பிணத்தை பிராண்டிக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான ஆங்கிலச் சேனல்களில் வழக்கமான நிலைய வித்துவான்களோடு சுப்பிரமணியன் சுவாமி, அமர்சிங் போன்றவர்களும் கருத்துக் கந்தாஸ்களாக அவதாரமெடுத்து நின்றனர்.

ஆங்கில மற்றும் இந்தி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு ஸ்ரீதேவி விசயத்தில் கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது நம்முடைய அக்கட தேசம்லு. தெலுங்குச் சேனலான டி.வி9 மசாலா தெலுங்கு  உலகிற்கே உரிய கற்பனை வளத்தோடு ஒரு குளியல் தொட்டியில் தண்ணீர் இருப்பது போலவும் அதில் மேற்படி நடிகையின் படம் மிதப்பது போலவும் பக்கத்திலேயே நடிகையின் கணவர் நின்று எட்டிப் பார்ப்பது போலவும் பின்னணியை வடிவமைத்துக் கொண்டது.

இது தெலுங்குச் செய்திகளில் “மஞ்சள் சட்டை – பச்சை பேண்ட்” ரகமென்றால் அடுத்து வருவது “பச்சை சட்டை மஞ்சள் பேண்ட்” ரகம். இன்னொரு தெலுங்குச் சேனல் தனது புலனாய்வுச் செய்தியாளரை ஒரு குளியலறைக்குள் அனுப்பி குளியல் தொட்டிக்குள் எந்தெந்த வகைகளில் எல்லாம் மூழ்கிச் சாக முடியும் என்பதை செயல் விளக்கமாக செய்து காட்டிக் கொண்டிருந்தது. உச்சகட்டமாக அவரே குளியல் தொட்டிக்குள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு (கையில் மைக்குடன்) கேமரா முன் பேசிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கை என ஒரு நான்கு வரிகள் கொண்ட கடிதம் ஒன்று ஜனநாயகத்தின் நான்காம் தூண்களின் கைகளுக்குச் சிக்குகிறது. அந்த நான்கு வரிகளில் ஒரு வரியில் “இரத்தத்தில் சாராயத்தின் எச்சங்கள்” இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆஹா என்னவொரு அருமையான வாய்ப்பு. இப்போது நடிகை எந்த பிராண்டு சரக்கை எத்தனை ரவுண்டு அடித்தார் என்கிற திசையை நோக்கி விசாரணைகள் நகர்ந்தன.

நடிகை குடிக்கலாமா? எத்தனை ரவுண்டு குடிக்கலாம்? என்ன சரக்கு குடிக்கலாம்? குடித்து விட்டு குளியல் தொட்டியில் குளிக்கலாமா? எத்தனை நேரம் குளிக்கலாம்? ஸ்ரீதேவிக்குப் பிடித்த சரக்கு என்ன? அவர் அன்றைய தினம் எவ்வளவு குடித்திருந்தார்? குடித்து விட்டு அவரே குளியல் தொட்டியில் இறங்கினாரா, வேறு யாரும் தள்ளி விட்டார்களா என்பன போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுடன் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் களமாடிக் கொண்டிருக்கின்றன. ஆங்கில மற்றும் இந்திச் சேனல்களின் ஆபாசங்கள் இவ்வாறிருக்க, தமிழ் ஊடகங்களும் ஓரிரு நாட்களுக்கு ஸ்ரீதேவியின் பழைய திரைப்படக் காட்சிகளை ஒளிபரப்புவதிலும், சினிமா பிரபலங்களின் பேட்டிகளை வாங்கிப் போடுவதிலுமே முனைப்பாக செயல்பட்டன. ஒரு நடிகையின் மரணம் என்பதைத் தாண்டி இதற்கு வேறு எந்த செய்தி முக்கியத்துவமும் இல்லை, தினத்தந்தியின் எட்டாம் பக்கத்துக்கு மட்டுமே தகுதியுடைய ஒன்றைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஊடகங்கள் போட்ட குத்தாட்டம் ஆபாசத்தின் உச்சம்.

ஆபாசம் என்கிற வார்த்தை கூட போதாது; அதை விடக் மோசமான வார்த்தைகளுக்கும் வசவுகளுக்கும் இவர்கள் தகுதியானவர்கள். கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்கிற பழைய சொலவடையை இவர்கள் மெய்ப்பித்துள்ளனர். இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை. அரசியல் குழப்பங்கள், வங்கித் துறையை ஒட்டுமொத்தமாக மரணக் குழிக்குள் தள்ளிய ஊழல்கள், வேலையின்மை, சிரியா போரின் அழிவு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகள் அனைத்தையும் குளியல் தொட்டிக்குள் அமிழ்த்திக் கொன்றுள்ளன இந்த ஊடகங்கள்.

மேலும் படிக்க