privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !

காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.

-

ம்மு காஷ்மீரின் மிகப்பெரிய தொழிற்பேட்டையின் துணைத் தலைவரான முகமது சஃபி, திவாலாவதிலிருந்து தப்பிக்க தங்களுடைய பூர்வீக நிலத்தை விற்பது குறித்து திட்டமிட்டு வருகிறார்.

“நான் ஏற்கனவே பல கோடி ரூபாய் இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆகஸ்டு 5-ம் தேதி முதல் என்னுடைய இரண்டு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. லாபத்தை ஈட்டுவதற்குப் பதிலாக, செலுத்தவேண்டிய வட்டி அளவுகள் அதிகரித்து வருகின்றன. கடனை அடைப்பதற்கான எந்த வழியும் இல்லை” என்கிறார் சஃபி.

“என்னுடைய அனைத்து பணியாட்களும் (பெரும்பாலும் வெளியிலிருந்து வந்தவர்கள்) வெளியேறிவிட்டனர். எங்களுக்கு ஒரு பழத்தோட்டம் உள்ளது. இந்த பிரச்சினை தொடருமானால், இழப்புகளை ஈடுசெய்ய பழத்தோட்டத்தின் ஒரு பகுதியை விற்க வேண்டியிருக்கும்” என்கிற அவர்,

கடந்த 12 வாரங்களாக தொழில் முடங்கியுள்ள நிலையில், கடனை திருப்பிச் செலுத்த வங்கிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் தொழிற்பேட்டையில் உள்ள பல தொழிற்சாலைகள் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய ஆகஸ்டு 5-ம் தேதி முதல் தொழிற்பேட்டையின் 350 யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாகத்தான் சில குளிரூட்டப்பட்ட சேமிப்பு அறைகள் இயங்கி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமையுடன் 84-வது நாளாக இந்த முடக்கம் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படிக்க:
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு
♦ முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

காலை மற்றும் மாலையில் சில மணி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளத்தாக்கில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் தனியார் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், முக்கிய வர்த்தக அமைப்பான காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Kashmir Carpets
பாதிக்கப்பட்டுள்ள கார்ப்பெட் தயாரிப்பு தொழில். (மாதிரிப் படம்)

வர்த்தக சபையின் தலைவர் ஷேக் ஆஷிக், இந்த எண்ணிக்கை ஒரு ஆரம்ப மதிப்பீடுதான் என்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நிரந்தர இழப்பீட்டை வெளிப்படுத்தும் ஒரு வெள்ளை அறிக்கையை அமைப்பு கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

“சில துறைகள் மற்ற துறைகளைவிட அதிக கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. உதாரணத்துக்கு தகவல் தொழிற்நுட்ப துறையை எடுத்துக்கொள்ளுங்கள், அது பெரிதாக இல்லையென்றாலும் வளர்ந்து வந்தது. இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுடன் பணியாற்றிய ஐடி நிறுவனங்கள் சேவையை வழங்கவில்லை. இதனால் சர்வதேச வாடிக்கையாளர்கள், பிற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்களுடைய சேதம் நிரந்தரமாகிவிட்டது” என்கிறார் அவர்.

“எங்கள் அமைப்புக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த இழப்புகளை கணித்திருக்கிறோம். தினசரி இழப்பே ரூ. 120 கோடியாக இருக்கும். நிபுணர்களைக் கொண்ட 15 -16 துணை குழுக்களை வைத்து, எவ்வளவு இழப்பு நடந்திருக்கிறது என்கிற துல்லிய மதிப்பை அறிவோம்” என்கிற ஆஷிக் ஒரு கார்பெட் முகவராக உள்ளார்.

படிக்க:
முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

கைவினைத் துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருப்பதாகக் கூறுகிறார் அவர். எவ்வளவு இழப்பு என்பது இன்னமும் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

“சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் நெசவாளர்கள் வரை வேலையில்லாமல் உள்ளனர். பொதுவாக, கிறித்துமஸ் – புத்தாண்டை ஒட்டி ஜூலை மற்றும் ஆகஸ்டில் ஆர்டர்களைப் பெறுவோம். ஆர்டர்கள் கிடைக்காத நிலையில், அனைவரும் வேலையற்றவர்களாகிவிட்டோம்” என்கிறார் அவர்.

“சுற்றுலா உள்ளிட்ட சில தொழில்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், உணவகங்கள், படகு வீடுகள் காலியாக உள்ளன. லட்சக்கணக்காண மக்கள் பணியில்லாமல் இருக்கிறார்கள்”.

இதேபோல் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். 20 லட்சம் டன் ஆப்பிளின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 5 முடிவை ஒட்டி எதிர்ப்பு கிளம்புவதைத் தடுக்க அரசாங்கம் மாநிலத்தை முடக்கியதிலிருந்து பாதிக்கப்பட்ட சமூகங்களில், வர்த்தக சமூகமும் ஒன்று.

விசாரணையில்லாமல் நீண்ட காலத்துக்கு சிறையில் அடைக்கக்கூடிய பொது பாதுகாப்பு சட்டம் என்ற கோடூர சட்டத்தின் கீழ், பள்ளத்தாக்கின் முக்கிய வர்த்தகர்களான முபீன் ஷா, யாசின் கான் மற்றும் ஷாகில் குலந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாசினின் தாயார் இறந்துவிட்ட நிலையில், மனிதநேய அடிப்படையில் அவரை விடுவிக்க வேண்டும் என கோரியபோதும், அரசாங்கம் அவரை விடுவிக்கவில்லை.

மாநிலத்தை மொத்தமாக முடக்கியுள்ள அரசாங்கம், இந்த இழப்புகள் குறித்து வெளிப்படையாக சொல்ல மறுக்கிறது. இந்த இழப்புகளுக்கு இழப்பீட்டை வழங்குமா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து பதில் இல்லை.

370 பிரிவு நீக்கத்துக்குப் பின் பிற மாநிலங்களில் மோடி பேசுகையில், “நிலத்தை வாங்கலாம்; சினிமா எடுக்கலாம்; சுற்றுலா போகலாம்” என காவியம் பாடினார். ஆனால் கள நிலைமையில் உள்ளதையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள் மக்கள். காவிகள் புரட்டுகளின் மீதே வாழ்கிறவர்கள் என்பதை இந்த உண்மை நிலவரம் எடுத்துக்காட்டுகிறது.


அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா.