குஜராத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை ஏமாற்றி, ரூ.11 கோடிக்கு தேர்தல் பத்திரத்தை வாங்க வைத்துள்ளது வெல்ஸ்பன் குழுமம் (Welspun Group). இந்த தேர்தல் பத்திரத்தில் ரூ. 10 கோடி பா.ஜ.க வுக்கும், ரூ.1 கோடி சிவசேனா கட்சிக்கும் சென்றுள்ளது. இந்த வெல்பன்ஸ் குழுமமானது அதானியுடன் இணைந்து பல நிறுவங்களை நடத்திவரும் நிறுவனமாகும்.
வெல்ஸ்பன் நிறுவனமானது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் பகுதியில் புதிய தொழில் தொடங்குவதற்காக, விவசாயி ஹரேஷ் சவகராவின் நிலத்தை கடந்த ஆண்டு வாங்கியது. மொத்தம் ரூ.16.61 கோடிக்கு ஹரேஷ் சவகராவின் நிலம் விற்பனையானது. இதில், ரூ.2.80 கோடி முன்பணமாக தரப்பட்டிருந்தது. மீதமுள்ள ரூ.13.81 கோடியை ஹரேஷ் சவகரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பியது வெல்ஸ்பன் குழுமம்.
ஆனால் மீண்டும் ஹரேஷ் சவகராவையும் அவரது மகனையும் விருந்தினர் விடுதிக்கு அழைத்துப் பேசியுள்ளார் வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரி மகேந்திர சிங் சோதா. அப்போது அங்கு நகர பா.ஜ.க தலைவரான ரஜினிகாந்த் ஷாவும் உடனிருந்துள்ளார். ”உங்களுடைய 11 கோடி பணத்தை நீங்கள் வங்கியில் வைத்திருக்காதீர்கள். தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். அது தான் பாதுகாப்பானதும் கூட. மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்” என்றும் கூறியுள்ளார், வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா.
விவசாயி ஹரேஷ் சவக்கரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வங்கி டெபாசிட் பத்திரத்துக்கும் தேர்தல் பத்திரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாததால், அவர்கள் செலுத்தும் பணம் ஒன்றரை மடங்காக திரும்பி வரும் என்று வெல்ஸ்பன் நிறுவன அதிகாரி சொன்னதை நம்பி தேர்தல் பத்திரத்தை வாங்க சம்மதித்துள்ளனர்.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
முன்னதாக, அதானியுடன் தொடர்புடைய இந்த வெல்பன்ஸ் குழுமம், தனது மூன்று துணை நிறுவனங்களின் மூலம் ரூ.55 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதில் ரூ.42 கோடி பா.ஜ.க-வுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயி ஹரேஷ் சவகரா வெல்பன்ஸ் குழுமத்தால் ஏமாற்றப்பட்டது குறித்தான செய்தியை மோடி ஆதரவு ஊடகங்கள் வெளியிடவில்லை. இந்த விவசாயி விசயத்தில் மட்டுமல்ல, தேர்தல் பத்திர மோசடியில் பா.ஜ.க செய்த ஊழலையும் இந்த ஊடகங்கள் (Godi media) திட்டமிட்டே விவாதப் பொருளாக மாற்றவில்லை.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube