மனிதகுலம் உயிர்ப்புடன் இயங்குவதற்கு முதன்மை பங்காற்றுவது இயற்கை அமைப்புதான். ஆனால், கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக இந்தியா முழுவதும் இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்று வருகிறது பாசிச மோடி அரசு. அந்த வரிசையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் துணையுடன் பழைமையான ஆரவல்லி மலைத்தொடரை சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடுவதற்கான சதி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
ஆரவல்லி மலைத்தொடர் என்பது வெறும் கற்களாலும் பாறைகளாலும் ஆன நிலப்பரப்பு அல்ல; அது வட இந்தியாவின் உயிர்நாடி. சுமார் 3.2 பில்லியன் (320 கோடி) ஆண்டுகள் பழைமையான இந்த மலைத்தொடரானது குஜராத் முதல் டெல்லி வரை சுமார் 650 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ளது.
தார் பாலைவனத்தின் மணல், தூசிப் புயல் ஆகியவற்றை வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்து, கோடிக்கணக்கான மக்கள் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்றை வழங்குவதன் மூலம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துகிறது. மேலும், சிறுத்தைகள், கோடிட்ட கழுதைப்புலிகள், நீலமான்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அரியவகை பறவை இனங்கள் உள்ளிட்டவற்றுக்கு புகலிடமாக விளங்குகிறது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உயிராதாரமானதாக திகழும் ஆரவல்லி மலைத்தொடர், ஒட்டுமொத்த இந்தியாவின் இயற்கை சமநிலையை பாதுகாப்பதிலும் அரணாகத் திகழ்கிறது. இந்த மலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டாலே அது மீளமுடியாத இயற்கைப் பேரிடரை நோக்கி நம்மை தள்ளும்.
ஆனால், இம்மலையில் காப்பர், ஜிங்க், ஈயம், வெள்ளி, இரும்புத் தாது மட்டுமின்றி லித்தியம், நிக்கல் உள்ளிட்ட அரிய வகை தனிமங்கள் நிறைந்திருக்கும் காரணத்தினால், கார்ப்பரேட் கழுகுகள் மலையை வேட்டையாட காத்துக்கிடக்கின்றன, வேட்டையாடியும் வருகின்றன.
குறிப்பாக, ஆரவல்லி மலைகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கங்களுக்கு 1980-களிலிலேயே எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வழக்குகளில் ஆரவல்லி பகுதிகளில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் பல்வேறு தடைகளை விதித்திருந்தது. எனினும் சட்டங்களிலிருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தியும் சட்டவிரோதமாகவும் கார்ப்பரேட்டுகளின் இயற்கைவளச் சுரண்டல் தொடர்ந்தது.
இத்தகைய சூழலில்தான் ஒட்டுமொத்த ஆரவல்லி மலைத்தொடரையே கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆரவல்லியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தீர்ப்பு
ஆரவல்லி மலைத்தொடர் பரந்துவிரிந்துள்ள டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களும் ஆரவல்லி மலைக்கென்று எந்த வரையறையையும் வகுக்கவில்லை. இராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆரவல்லி மலையை வேறுபடுத்தும் பொருட்டு சில வகைப்படுத்தும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2024 மே மாதத்தில், மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆரவல்லி மலை தொடர்பான ஒரே சீரான வரையறையை கொண்டுவரும் பொருட்டு, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. சீரான வரையறையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரவல்லி மலை தொடர்பான வரையறை என்ற ஒன்றே இல்லாததால், இது குழப்பத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை என்று கூறியது.
ஆனால், ஒரு சூழலியல் சிக்கலைத் தீர்க்க அமைக்கப்படும் குழுவில் அந்தத் துறை சார்ந்த விஞ்ஞானிகளும் சூழலியல் வல்லுநர்களும்தான் (Ecologists) முதன்மையாக இடம்பெற வேண்டும். ஆனால், ஆரவல்லி வழக்கில் அமைக்கப்பட்ட ‘நிபுணர் குழு’வில் இடம்பெற்றவர்கள் பெரும்பாலும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள்தான்.
சுரங்கத்துறை மற்றும் தொழில்துறைக்கு நிலங்களை ஒதுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களே, அந்த நிலங்களைப் பாதுகாக்கும் குழுவிலும் இருப்பது எவ்வளவு முரணானது!
வரையறையை நிர்ணயிப்பதில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த 2025 ஆகஸ்டில், “வரையறையை நிர்ணயித்து கொள்கை முடிவு எடுப்பதற்கு ஏன் இரண்டு மாத காலத்திற்கும் மேல் அவகாசம் எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று எவ்வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி அவசரகதியில் முடிவெடுக்க துடித்துக் கொண்டிருந்தது, அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான கவாய் தலைமையிலான அமர்வு.
இதனையடுத்து சீரான வரையறையை தீர்மானிக்க முடியாது என்று முதலில் கூறி வந்த நிபுணர் குழு அதற்கு நேர்மாறாக வரையறையை நிர்ணயித்தது. “நிலையான சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உள்ளூர் தரைமட்டத்திலிருந்து 100 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைகள். 500 மீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் அருகருகே இருந்தால் மட்டுமே அதனை மலைகளின் தொடர்ச்சியாக கருத முடியும்” என்ற நாசகர வரையறையை முன்வைத்தது.
இதற்கு முன்னர் 2010-இல் “இந்திய வன ஆய்வு” (Forest Survey of India – FSI) உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், ஆரவல்லி மலைத்தொடருக்கு ஒரு வரையறையை கொடுத்திருந்தது. இந்த வரையறையானது முழுமையான பாதுகாப்பை கொடுக்கும் வகையில் இல்லை எனினும், தற்போது நிபுணர் குழுவால் கொடுக்கப்பட்ட வரையறையை விட சற்று பாதிப்பு குறைந்தது ஆகும். ஆனால், நீதிமன்றத்தில் 2010 எஸ்.எஃப்.ஐ. வரையறையை ஏற்காமல், நிபுணர் குழுவின் வரையறையை நடைமுறைப்படுத்தினால் ஆரவல்லியின் பெரும்பகுதி பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சகம் அப்பட்டமாக பொய்யுரைத்தது.
இந்த இரண்டு வரையறைகளிலும் எவ்வளவு மலைப்பகுதி உள்ளடங்கும் அல்லது வெளியேற்றப்படும் போன்ற தரவுகளை ஒப்பிட்டு வாதத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வேதங்கள் ஓதுவதைக் கேட்பது போல ஒன்றிய அரசு முன்வைத்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்ற அமர்வு.
இந்த வரையறையினால் ஆரவல்லிக்கு ஏற்படப் போகும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு பத்தி கூட தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே இந்த விவகாரத்தை நீதிபதிகள் எவ்வளவு அலட்சியமாக கையாண்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் ஆரவல்லி!
இந்தப் புதிய வரையறையினால் 99 மீட்டர் உயரம் கொண்ட ஒரு குன்று, 100 மீட்டர் மலைக்கு இருக்கும் அதே சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தாலும், இந்த 100 மீட்டர் விதியின்படி அது “மலை அல்லாதவை” என்று அறிவிக்கப்படும்.
அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்” என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான “நீர்ப்பிடிப்புப் பகுதிகள்” உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம். இதில் இராஜஸ்தான் மாநிலம்தான் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
மேலும், புதிய வரையறையினால் ஆரவல்லியில் 91 சதவிகித பகுதிகள் இதுவரை பெற்றுவந்த சட்டப்பூர்வ பாதுகாப்பை இழந்துவிடும். இதன்மூலம், வேதாந்தா (Hindustan Zinc) மற்றும் அதானி குழுமம் (Adani Group) போன்ற பெருநிறுவனங்களுக்கும் இனானி (Inani Marbles) போன்ற பளிங்கு மற்றும் கிரானைட் நிறுவனங்களுக்கும் ஆரவல்லியின் வளமிக்க தாதுக்கள் மற்றும் உலோகங்களை கொண்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தாரைவார்க்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேலும், ஆரவல்லி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி (Reserved Forest), அறிவிக்கப்பட்ட வனப்பகுதி (Notified Forest), உத்தேச வனப்பகுதி (Deemed Forest) உள்ளிட்ட பகுதிகள் உள்ளதால் அவை பிரிவு ஏ மற்றும் பி (Category A and B) ஆகிய சட்டப்பூர்வ பாதுகாப்பையும், அவற்றில் சில பகுதிகள் “சூழலியல் உணர்திறன் மண்டலம்” (Eco-Sensitive Zone – ESZ) என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன. இங்கு எந்தவிதமான சுரங்கப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி கிடையாது.
ஆனால், 2024-25-ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அனுமதி (Environment Clearance) பெறுவதற்கு பல்வேறு சட்டத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை விதிமீறித் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னேற்பு அனுமதி (Ex-post Facto – சுரங்கம் போன்ற செயல்பாடுகளை தொடங்கிவிட்டு பின்னர் அனுமதி பெறுவது) பெற வழிவகை செய்வதோடு, சிறிய அளவிலான சுரங்கங்களுக்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையையும் உருவாக்கியுள்ளன. அதேபோல், 2023-இல் கொண்டுவரப்பட்ட வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டங்களிலும் பல்வேறு சட்டத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்கள், ஒரு பெரிய மலைப்பகுதியைச் சிறிய துண்டுகளாகப் பிரித்துக் காட்டி அவற்றை பிரிவு பி2 (Category B2 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தேவையில்லை) என்கிற வரையறைக்குள் கொண்டுவந்து அனுமதி பெறுவது (Salami Slicing); ஆவணங்களில் “மலை” அல்லது “வனம்” என்பதை “தரிசு நிலம்” என மாற்றுவது போன்ற உத்திகளைக் கையாண்டு மலைகளை கூறுபோடுகின்றன.
இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது ஆரவல்லி மலையை கேள்விக்கிடமற்ற வகையில் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கே அடித்தளமிட்டுக் கொடுத்துள்ளது.
மக்கள் போராட்டங்களுக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்
பகாசுர சுரங்க நிறுவனங்களுக்கு ஆரவல்லியை படையலிடுவதற்கு சாதகமாக வெளிவந்த இந்தத் தீர்ப்பையடுத்து, இராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள “சேவ் ஆரவல்லி” அறக்கட்டளை (Save Aravalli Trust) போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் இறங்கினர். இது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மக்களின் போராட்டத்தைக் கண்டு பாசிச கும்பல் குலைநடுங்கி போனது. எனவேதான், கடந்த டிசம்பர் 29, 2025 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்து “100 மீட்டர் விதி”யை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
ஜனவரி 21, 2026 அன்று மீண்டும் நடைபெற்ற வழக்கு விசாரணையில், பழைய குழுவில் இருந்தவர்கள் சூழலியலை விட அரசு நிர்வாகத்திற்கே முன்னுரிமை அளித்தனர் என்று கூறி, அவர்களின் பரிந்துரையை நிராகரித்து இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும், உண்மையான சூழலியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு புதிய “உயர் அதிகாரக் குழுவை” அமைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய நிபுணர் குழுவின் அறிக்கை வரும்வரை, ஆரவல்லி பகுதிகளில் எந்தப் புதிய சுரங்கக் குத்தகையும் வழங்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், புதிய நிபுணர் குழுவானது “கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டை எளிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூவிவந்த முன்னாள் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அக்குழுவின் லட்சணத்தைக் காட்டுகிறது. இனி எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அவை பழைய சுரண்டலைப் புதிய முறையில் செய்வதற்கு அரசு பயன்படுத்தும் ஒரு திரையாக இருக்குமே ஒழிய, ஒருபோதும் சுரண்டலைத் தடுக்காது என்பதே எதார்த்தம்.
நீதிமன்றத்தின் துணையுடன் நாசமாக்கப்படும் இயற்கை வளங்கள்
இது ஒருபுறமிருக்க, நிக்கோபார் பழங்குடியின மக்களையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் “தி கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய மோடி அரசு தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் (என்.ஜி.டி.) காடுகளை அழிப்பது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் இரு வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வழக்குகளில் இறுதித் தீர்ப்புகள் முடிவாகவில்லை என்றாலும் இந்த நாசகர திட்டத்தை எந்த தங்குதடையுமின்றி நைச்சியமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச கும்பல். நிக்கோபார் பழங்குடியின மக்களை அவர்களது முன்னோர்களின் பாரம்பரிய நிலங்களை கைவிட்டு “சரணடையும் சான்றிதழில்” (Surrender Certificate) கையெழுத்திடுமாறு கூட்டம் நடத்தி மிரட்டுவது; கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பது என முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றமோ இதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆரவல்லி வழக்கிலும் போதிய அளவில் வாதங்களை கேட்டறியாமலும், இறுதி விசாரணையை வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே நடத்தியும் தீர்ப்பெழுதியது உச்சநீதிமன்றம்.
ஆரவல்லி மற்றும் நிக்கோபார் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள், வனவிலங்கு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு வழக்குகளும் அவசரகதியிலும் பாதிக்கப்படும் தரப்பினரின் கருத்துக்களை கேட்காமலுமே நடத்தப்படுகிறது. இதன் உச்சமாக, கார்ப்பரேட்டுகள் திட்டங்களை தொடங்கிவிட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு (Ex-post Facto) விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்தாண்டு இறுதியில் நீக்கி உத்தரவிட்டது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு.
இவ்வாறு ‘தேசிய பாதுகாப்பு’ மற்றும் ‘பொருளாதார வளர்ச்சி’ என்கிற போர்வையில் சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து, மீள முடியாத இயற்கை பேரழிவை நோக்கி இந்தியாவைத் தள்ளிக் கொண்டிருக்கும் பாசிச கும்பலுக்கு பக்கபலமாக செயல்படுகிறது உச்சநீதிமன்றம்.
களப்போராட்டம் ஒன்றே தீர்வு!
பாசிச கும்பலின் இந்த மக்கள் விரோத சட்டத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் வகையில் நீதித்துறை முழுவதுமே மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், சட்டப் போராட்டத்தின் வழியாக மட்டும் உரிமைகளை மீட்டுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது புதைக்குழிக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பது போன்ற நடவடிக்கையே ஆகும்.
மறுபுறம், காஞ்சா கச்சிபவுலியில் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியது முதல் டெல்லி மாசுபாட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இந்தக் கட்டமைப்பை எதிர்த்து வீதியில் இறங்கி உறுதியாக போராடிவரும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாய் திகழ்கின்றன.
இதனை உணர்ந்து, “சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிதைக்கும் அனைத்து சட்டங்களையும் உடனடியாக இரத்து செய்!”, “சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் எந்தவிதமான சுரங்கப் பணிகளையும் தொடராதே, தொடங்காதே!”, “சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திவரும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து இயற்கை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்!” உள்ளிட்ட முழக்கங்களின் கீழ் இந்திய உழைக்கும் மக்களை அணிதிரட்டி களப்போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
அதோடு நின்றுவிடாமல், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்கிற மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பாதையில் மக்களை களமிறக்குவது சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் உடனடி கடமையாகும்.
![]()
ஜென்னி லீ
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











