கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை (Prototype Fast Breeder reactor – PFBR), ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது.
திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட வணிக அளவிலான இந்த வகை ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதார சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் இயங்கும் மற்ற அணு உலைகளைப் போலல்லாமல், FBR யுரேனியம்-புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளைப் பயன்படுத்துகிறது.
PFBR-இன் மையப்பகுதி யுரேனியம்-238-ன் ஒரு போர்வையால் சூழப்பட்டிருக்கும். வேகமான நியூட்ரான்கள், யுரேனியம்-238-ஐ பிளவுபடக்கூடிய புளூட்டோனியம்-239 ஆக மாற்றுகின்றன. இது, அணு உலை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனாலேயே இது ‘ஈனுலை’ என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அமைக்கப்படப்போகும் ஈனுலைகளின் நோக்கம் அதுவல்ல.
ஏனென்றால் 2024-ல் சூரிய ஆற்றல் மூலம் 136.8 TWh மற்றும் காற்றாலை மூலம் 81.5 TWh மின்சாரம் கிடைத்துள்ளது. ஆனால் அணுசக்தி மூலம் வெறும் 54.7 TWh தான் கிடைக்கும். அதாவது, காற்றும் சூரியனும் இணைந்து அணுசக்தியை விட 4 மடங்கு அதிக மின்சாரத்தைத் தருகின்றன.
மேலும் கூடங்குளம் அணுவுலைகள் போன்று மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டுமே (Civilian List-இல்) ஈனுலைகள் வராது. பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால் இவ்வுலைகளிலிருந்து வெளியாகும் புளுட்டோனியம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக ஆபத்தான தொழில்நுட்பத்தையே பாசிச மோடி அரசு தற்போது கொண்டாடி வருகிறது. இது இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் திட்டமாகும். இதனை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மிகத் தீவிரமான போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் முன்னெடுத்தனர்; இன்றளவும் போராடி வருகின்றனர்.
மிகப்பெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே பாசிச மோடி அரசின் இத்திட்டத்தைப் பின்வாங்க வைக்கவும், இந்திய மக்களைக் காப்பாற்றவும் முடியும்.
இந்திய அணுசக்தித்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான சட்டத்தை (SHANTI Act), நடந்துமுடிந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச மோடி அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
- இந்திய மக்களைப் பேராபத்துக்கு உள்ளாக்கும் கல்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள வேக ஈனுலை திட்டத்தை உடனடியாக கைவிடு!
- இந்திய அணுசக்தித்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான புதிய சட்டத்தைத் திரும்பப் பெறு!
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு-புதுவை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads









