10.05.2026

கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க
என்ன செய்ய வேண்டும்?

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலரும் குழந்தை திருமணத் தடுப்பு அலுவலருமான (CMPO) ஆர். சக்தி சுபாஷினி, பொதுமக்களிடத்தில், தங்களது கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது தேர்வு காலம் முடிந்து விடுமுறையில் இருக்கும் ஏப்ரல் – ஜூன் மாதங்கள் 10, 11, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் காலமாகும்; சமூக நலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறை இணைந்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியைத் தொடருவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன; இருப்பினும், சில குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் அஞ்செட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 17 வயது மாணவி கட்டாய திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியை அறிந்து அவரை மீட்டு சமூகநலத் துறையின் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக, வறுமை முதன்மைக் காரணமாகும். மாவட்டத்தில் ஓசூர் போன்ற தொழில்மயமான நகரங்கள் இருந்தாலும் மாவட்டத்தின் பெருமளவிலான பகுதிகள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன. விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலைமை, பருவ மழையின் காரணமாக ஏற்படும் நட்டம்; அரசின் மானியங்கள் கிடைக்காதது என தொடர்ந்து விவசாயம் அழிந்து வருகிறது.

மற்றொருபுறம், அரசின் தனியார்மயக் கொள்கையின் காரணமாகக் கொண்டு வரப்பட்ட காண்ட்ரேக்ட்மயத்தால் படித்த இளைஞர்கள் மிகவும் அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த பொருளாதாரத்தைக் கொண்டு வீட்டை நிர்வகிப்பது சிரமமாக இருக்கும் நிலையில் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது என்பது மிகுந்த சவாலாக உள்ளது. எனவே, விரைவிலேயே திருமணம் முடித்து விடுவது என்று முடிவெடுக்கின்றனர்.

அண்மையில், தேன்கனிக்கோட்டை அருகே பிறந்த இரண்டு மாதமேயான பெண் சிசுவை மஞ்சப் பையில் வைத்து வீசிச் சென்ற சம்பவத்தைப் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அண்மையில், வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். கல்வியறிவு குறைந்து வருவது என்பது குழந்தை திருமணத்தைத் தீவிரப்படுத்தும்.

தவிர, அரசின் தோல்வியால் சமூகத்தில், கஞ்சா, போதைக் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதுதான் பாதுகாப்பு எனக் கருதியும் இளம் வயதிலேயே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

மற்றொருபுறம் ஆணாதிக்க பிற்போக்குத்தனமான சமூகத்தில், பெண் என்பவளுக்கு திருமணம் மட்டுமே போதும் எனக் கருதுவதும், பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பதும் குழந்தைத் திருமணங்களுக்குக் காரணமாக மாறுகிறது.

ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் – பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

  • வறுமையை ஒழித்திட வீட்டில் உள்ள ஒருவருக்கு நிரந்தரப் பணியை கொடுத்திடு!
  • மாவட்டத்தில் விவசாயத்தை மீட்டெடுக்க உரிய விலை, மானியம், இழப்பீட்டை வழங்கிடு!
  • கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தடை செய்!
  • டாஸ்மாக்கை மூடு!
  • போதைக் கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்து!
  • சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க பிற்போக்குத்தனமான கருத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வை அதிகப்படுத்து!
  • பள்ளிப் பாடத் திட்டத்தில் அறிவியல்பூர்வமான கல்வியை வழங்கு!

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.


இவண்,
தோழர் அருண்,
கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க