Tuesday, November 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 816

கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

69

 

ஈழத்தின் நினைவுகள்: பாகம் – 12

சமகால கனடாவும் அதன் வரலாற்றுப் பின்னணியும்!

 

O Canada! Our home and native land! கனடாவின் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணை எங்களின் வீடு மட்டுமல்ல பூர்வீகமும் கூட என்று தேசியகீதத்தில் பாடுமளவிற்கு அனுமதித்திருக்கிறார்கள். கனடா ஒரு வந்தேறு குடிகளின் நாடு. அவலப்பட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

முதலில் பிரான்சிலிருந்தும் பிறகு பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் கனடாவை தேசியகீதத்தில் தங்கள் பூர்வீக பூமி என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் புரிதல். கால ஓட்டத்தில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் குடிபெயர்ந்தோ அல்லது அகதியாகவோ வருபவர்கள் எல்லோரும் அவர்களை தொடர்ந்து அதையே பாடிக்கொண்டிருக்கிறோம். கனடாவுக்கு உண்மையாகவும் இருக்கிறோம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு விடயங்கள் கனடியர்களை அவ்வப்போது சில சமயங்களில் எதையாவது முணு, முணுக்கவைக்கிறது.

அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் அருகாமையில் இருந்துகொண்டு அதை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்று நான் நினைப்பதுண்டு. இரண்டாவது கனடாவின் Constitutional Monarchy.  இன்னமும் இங்கிலாந்தின் ராணிதான் கனடாவுக்கும் ராணி. முந்தையது மாற்ற முடியாது.  முணுமுணுக்க மட்டுமே முடியும். பிந்தயதை மாற்ற வேண்டுமென்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

கனடாவுக்குள் நுழையுமுன் வரலாற்றின் கரையோரம் கொஞ்சம் கால் நனைக்கலாம். கனடாவுக்கென்று ஓர் சுவாரசியமான வரலாறு உண்டு. ஐரோப்பியர்கள் கிழக்கு இந்தியாவை கண்டுபிடிக்கிறோம் என்று அதிர்ஷடவசமாக தடுமாறி பகுதி, பகுதியாக   கனடாவையும் கண்டுபிடித்தார்கள். இந்த மண்ணில் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் இங்கிருந்த பூர்வீக குடிகளோடு வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தி இங்கேயே தங்கியும் விட்டார்கள். இந்த நாட்டை சீரும்  சிறப்புமாய் கட்டி எழுப்பியவர்களும் அவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இந்த நாட்டின் மூத்த குடிகள் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிகம் பங்களிக்கவில்லை என்ற ஓர் கூற்றும் முன் வைக்கப்படுகிறது. கனடாவின் மூத்த குடிகளை (Aboriginal Peoples) மூன்று வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். First Nations (Indians), Inuits அல்லது Metis அல்லாதவர்கள். இவர்களில் (First Nations) பாதிப்பேர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் (Reserve Land) தான் வாழ்வதாக சொல்லப்படுகிறது. Inuits, இவர்களின் முன்னோர்களின் பூர்வீகம் Arctic ஆதலால் இன்றும் சிறு, சிறு குழுக்களாக அங்கேதான் வாழ்கிறார்கள். பூர்வீக குடிகள் அல்லாத ஐரோப்பியர்களை மணந்தவர்கள் Metis என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரினதும்  பூர்வீக பூமி இதுவென்றாலும் அதற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு தங்களை கனடிய அரசிடம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரசியல் நடைமுறை.

சில சமயங்களில் ஒரே நாட்டிற்குள்ளிருக்கும் இன, மத, மொழி, பண்பாடு, கலாச்சாரம் இன்னும் என்னென்னெல்லாம் உண்டோ அதன் முரண்பாடுகளிலேயே மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டுப் போயிருப்பார்கள். பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். ஒருவேளை அப்படியேதும் இல்லையென்றாலும் தங்கள் பங்கிற்கு அரசியல்வாதிகள் எதையாவது கிளப்பிவிடுவார்கள். ஒத்துவராது என்றால் சிலசமயங்களில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஜனநாயக வழிகளில் முயல்வதே மேல் என்பது என் கருத்து.

கனடாவிலும் Quebec மாகாணத்தின் மொழி, கலாச்சாரம் முதல் அனைத்து உரிமைகளுக்கும் சட்டரீதியான சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தன் பிரெஞ்ச் தனித் தன்மைகளோடு வாழ, பிரிந்துபோக இரண்டுமுறை ஜனநாயக வழியில் (Referendum) முயன்று வெற்றியளிக்காமல் போனாலும் இன்னோர் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஈழத்தில் எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத எங்களுக்கு இப்படியோர் ஜனநாயக ரீதியான ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க மறுக்கும் உள்ளூர், உலக அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஊமைப்படங்கள். உலகத்தமிழரெல்லாம் அதன் பார்வையாளர்கள்.

கனடாவில் நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்லின, பல்கலாச்சார மக்கள் (Multiculturalism) அடுத்தவர் நம்பிக்கைக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தனித்தன்மைகளை பேணிக் காப்பதோடு, இந்த நாட்டின் ஆங்கில, பிரெஞ்சு மொழி, கலாச்சாரம், பொருளியல் வாழ்க்கை முறை என்பவற்றிற்க்கு தங்களை பழக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் கலந்து போகிறார்கள் (Assimilation). வாழச்சிறந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா தனக்கென்றோர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக ஜனநாயகம் போலல்லாது அந்த தலைப்பை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதில் கனடாவை யாரும் குறை கூற முடியாது.

ஆனாலும் கனடாவின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் கழிசடை அரசியல் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும். பூர்வீக குடிகளுக்கும், 1800 களில் Canadian Railway யை கட்டி முடிக்க குறைவான கூலியில்  கொண்டு வரப்பட்ட சீன தேசத்தவர்களுக்கும் இந்த அரசு செய்த தவறுகள் “White-Collar Crime” என்று தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலைத் தேசங்களின் வரலாறு, அரசியல், பொருளாதார கொள்கைகளை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் தான் புரியும், எங்களைப்போன்ற அகதிகள் எல்லாம் இந்நாடுகளில் வேண்டப்படாத விருந்தாளிகள் என்பது. அதுவும் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு அதை எங்கள் மனங்களில் இன்னும் ஆழமாக பதிந்து போக வைத்து விட்டார்கள்.

கனடாவின் சமூகவாழ்க்கை – ஒரு பறவைப் பார்வை

கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா. நிறைகளும் குறைகளும் அதனதன் அளவுகளில் பரிமாணங்களில் இருந்தாலும் (pros and cons), கனடாவின் ஒவ்வொரு சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் சிறப்பாகத்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது. வேலை பறிபோனால் அதன் தாக்கங்கள் தனிமனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்காமல் விடாது. அது மனித இயல்பு. துன்பியல் வாழ்வு. ஆனால், வேலை போய்விட்டதே இனி ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது, பிள்ளை குட்டிகளோடு வீதியில் உறங்கமுடியுமா என்ற கவலைகள் எல்லாம் இங்கு வாழ்பவர்களுக்கு வரக்கூடாது என்று அரசு கவனமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காமல் விட்டால் அது தனிமனித வாழ்வில், சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் அதன் பன்முகத்தாக்கத்தை உண்டுபண்ணுமே; பஞ்சம், திருட்டு, சமூகவாழ்வின் சீர்கேடுகள், கொள்ளை, எல்லாவற்றுக்கும் மேல் குடும்ப உறவுகள் சீரழியும் என்பது வரை. குடும்ப உறவுகள் சீரழிந்தால் குழந்தைகளின் மனநலம் மற்றும் எதிர்காலம்  பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டிருகின்றன. அரச சேவைகள் ஆயிரந்தான் செலவு செய்தாலும் இங்கேயும் வருமானம் குறைந்த மக்கள் வாழும் பகுதிகள், அதன் விளைவான சமூகப் பிரச்சனைகள், வீடில்லாதவர்கள் பிரச்சனை (Homeless people) என்பதெல்லாம் அரசுக்கு தலையிடியாக இல்லாமலும் இல்லை.

என்னைப்பொறுத்த வரை இந்த வீடில்லாதவர்கள் என்போர் அவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த, தாங்களாக தெரிந்தெடுத்த வாழ்க்கை அது. அரசு எவ்வளவுதான் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களில் பலர் மறுபடியும் வீதியில் வந்து முடிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு shelters என்று வைத்து உணவு, உறங்கும் வசதிகள் எல்லாம் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள். பொதுமக்கள் பலபேர் அங்கே சேவையாக (Volunteer) பணியாற்றுகிறார்கள். இங்கே volunteer work என்பது மிகவும் மதிக்கப்படும் ஓர் விடயம். அதாவது, நான் சொல்லவருவது என்னவென்றால் அரசு, மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது, சகமனிதர்கள் மீது அக்கறையோடும் விழிப்புணர்வோடும்  இருக்கிறார்கள் என்பது தான்.

எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன. கல்லில் நார் உரிக்கும் கடும் முயற்சி மட்டுமே அதன் மூலதனம்.

கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை தொடர கடனுதவிகள் வழங்கப்படும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். வாங்கிய கடன் வட்டியோடு குட்டிபோடும் என்பதால் மாணவர்கள் பொறுப்போடு படிப்பார்கள். பெற்றோருக்கும் அது பொருளாதார சுமையாக இருக்காது. காரணம், வாங்கும் கடனுக்கும் வட்டிக்கும் அவரவரே (மாணவரே) பொறுப்பு. வேலைக்கு செல்பவராயின் அவரின் வருமானத்திற்கேற்றவாறு குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும். ஒருவர் வீட்டில் இருந்து குழந்தையை பராமரிப்பதிலும் படித்து வேலைக்கு போனால் அரசுக்கு வரி வருமானம் வரும் அல்லவா. வரி செலுத்தும் போது வலித்தாலும், அதன் பலன்களை கல்வி, சுகாதாரம் என்று உலகின் எத்தனையோ பேருக்கு கிடைக்காத சர்வதேச தராதரத்துடனான சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் போது மூன்றாம் உலக ஜனநாயகத்தில் இருந்து தப்பி வந்த ஓர் visible minority யின்  மனம் நிறைந்து போகிறது.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஓர் சாதாரண கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்கும் படி செலவின்றி, பாரபட்சமின்றி இருக்கிறது. கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.

கனடாவில் ஈழத்தமிழர்கள் – வந்த விதமும், இணைந்த நிலையும்!

கனடாவில் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாய் தஞ்சமடைந்தவர்கள்தான். ஆசியாவிற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழுவது இங்குதான். மேல்தட்டு இந்தியர்களைப் போல் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி குடிவந்தவர்களோ அல்லது மில்லியன் டாலர் வியாபாரத்தை முதலீடு செய்தவர்களோ கிடையாது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று கல்வி, வியாபாரம், பொருளாதாரம் என்று மிக குறுகிய காலத்திலேயே ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் மற்றவர்கள் வியக்கும் படி அதன் எல்லைகளைத் தொட்டிருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பங்கள் கனடாவில் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவாயிருப்பதால் அது சாத்தியமும் ஆயிற்று.

முயற்சி திருவினையாக்கும் என்பதை என் அனுபவத்தினூடே உணர்ந்து கொண்டது இங்கேதான். கனடாவின் வாக்கு வங்கியில் எங்கள் வாக்குகளின் இருப்பு லட்சத்திற்கு மேல் என்பதால் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் உள்வாங்கப்படுகிறோம். கனடாவின் வளங்கள், பொருளாதாரம் பற்றி தெரிய வேண்டுமானால் அண்மையில் கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து சிரித்துபேசி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து பாருங்கள் புரியும்.

செல்வமும், செழுமையும் புதைந்தும் ஒளிந்தும் கிடக்கும் இந்த பரந்த பூமியில் தான் தஞ்சமடைவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வரவில்லை. தமிழ்நாட்டில் அகதி வாழ்வின் கசப்பான அனுபவங்கள், கொழும்பில் எந்த நேரமும் ஏதோ ஓர் இனம்புரியாத பயம், உயிரை பிச்சையாய் கேட்கும் தலைவிதி இவற்றிலிருந்து தப்பிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் முயன்று எனக்கு கிட்டியது கனடா என்ற நாடு. “சிங்கள” என்ற அடைமொழியோடு கூடிய எல்லாமே என்னை, என் உயிரை வதைத்தது. இதில் நல்லது, கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து பயப்படுமளவிற்கு ஓர் ஈழத்தமிழ் என்ற வகையில் எனக்கு தெரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.

தலைநகரில் தமிழர் என்றாலே வெளியில் தலைகாட்டப் பயம். கைது, சித்திரவதை, தமிழனா காவல் நிலையத்தில் உன் வரவை பதிந்துகொள் என்ற நடைமுறைகளும் பீதியை கிளப்பின. பாரதியார் பாணியில் சொல்வதானால், ஈழத்தமிழன் அஞ்சாத பொருள் இல்லை இலங்கையிலே. அது அப்படியே எங்களுக்குப் பொருந்துவது போல் கொழும்பில் அன்றும் சரி இன்றும் சரி தமிழர்கள் ஏதோ Phobia வால் பீடிக்கப்பட்டவர்களாய்தான் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக “தெனாலி” திரைப்படத்தில் எங்களை பரிதாபத்திற்குரிய கோமாளிகளைப்போல் போல் உருவகப்படுத்தியது, கேலிபேசியது எல்லாம் கசப்பானதே. பசியை கூட பிணி என்ற உவமையால் அதன் கொடுமையை உணரவைக்கலாம். சிங்களப்பேரினவாதம் எங்கள் மனங்களில் அதன் வன்கொடுமைகள் மூலம் உண்டாக்கிய வலிகள், வடுக்கள், தீராப்பயம் அனுபவங்களால் மட்டுமே உணர முடியும். அதை எழுத்துக்களில் விவரிக்க முடியாது.

கடல் கடந்து பரதேசம் வந்த உடனேயே பயம் மறைந்து சந்தோசம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் புதிதாய் எதுவுமே புரியாத ஓர் தேசமாய் தோன்றியது. இலங்கை ராணுவம், மனித உரிமை மீறல்கள் பற்றிய பயம் போலில்லாமல் புதிதாய் ஓர் இனம்புரியாத மிரட்சி மனமெங்கும் விரவிக் கிடந்தது; மொழி, கல்வி, வேலை, கலாச்சாரம், காலநிலை முதல் மனிதர்கள் வரை. இலங்கையிலிருந்து வந்ததாலோ என்னவோ கருத்து சுதந்திரம் (Freedom of Speech) என்பதின் யாதார்த்தபூர்வமான அர்த்தத்தை புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது.

பயமுறுத்தும் ஆங்கிலத்தை கற்ற கதை!

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டுமே தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அந்நாட்களில் ஆங்கிலத்தோடு எனக்கு ஏதோ ஒரு பயம் கலந்த சிறிய பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அதுவே தொடர்பாடலுக்கான என் ஊடகமானது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கண்டு நான் மிரண்டதுதான் அதிகம். பொது இடங்களுக்குப் போனாலும் யாராவது ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு தொலைத்து விடுவார்களோ

என்ற பயம் மூளையின் முடுக்கில் கூட மண்டிக் கிடந்தது. கனடாவில் என் சுய முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை நான் ஓர் வெறியோடுதான் படித்தேன். அதற்கு வேறோர் காரணமும் உண்டு. புலத்தில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எம்மவர்களில் ஒருசாரார் அடுத்தவரை இளக்காரமாய் பார்த்த, பார்க்கும் சமூக அவலம் தான் அது.

ஈழத்தில் நான் என் சொந்த ஊரில் கல்வி கற்ற நாட்களில் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்தில் இருக்கும் பாடசாலைகளில்தான் ஆங்கில வழிக்கல்வி கற்கும் வசதிகள் இருந்தன. அது அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் எரிச்சலாகவும் கூட இருந்தது.

இங்கே குடியேறியோ அல்லது தஞ்சமடைந்தோ வருபவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓர் பாரமாய் அல்லது சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்து கனடிய அரசு புதிதாய் வருபவர்களுக்கு மொழியை அரச செலவில் கற்றுத் தருகிறார்கள். நாங்கள் மொழியை கற்றுக் கொண்டு மேலும் படிப்பிலோ அல்லது வேலையிலோ முன்னேறி இந்நாட்டிற்கு எங்களின் பங்களிப்பை வரியாகவும், வேறு வழிகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலத்தில் எனக்கு அதிகம் பிடித்த வார்த்தை “determination”. அது மட்டும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் ஒன்றும் கடினமல்ல என்பது என் சொந்த அனுபவம். ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புகளோடு பேசவேண்டுமென்ற அவாவோடு நான் குழந்தைகளின் Cartoon மற்றும் செய்திகளிலிருந்துதான் தொடங்கினேன். அதில்தான் நிறுத்தி நிதானித்து அழகாக பேசுகிறார்கள். ஆனாலும், புலம் பெயர் வாழ்வில், பொருளுலகில் மனிதம் தொலைத்த மானுட வாழ்வு ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரம்மையை என்னிலிருந்து உதறமுடியவில்லை.

இந்த அக்கப்போரில் எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் அதற்காக யாரும் எனக்காக காத்திருந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, எல்லோருக்கும் சமமாய் நானும் ஓடவேண்டுமானால் என்னை நான் தயார்ப்படுத்த வேண்டும். இப்படித்தான் கனடாவில் ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தோடு மல்லுக்கட்டி, அப்படியே படிப்படியாக படிப்புவரை சென்று, அகதியாய் அடிமேல் அடிவாங்கினேன். அழுவதற்கு கூட நேரமில்லாமல் அடித்துப் பிடித்து படித்து முடித்து அந்நியதேசத்தில் ஓர் கெளரவமான  வேலைசெய்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டே இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.

உத்தியோகம் புருஷலட்சணம் என்ற பழமைவாதம் ஈழத்திலே குழிதோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு பெண்கள் படிப்பில், வேலைக்குப்போவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் என் கருத்து. போர்பூமியில் ஏதோ இயன்றவரை படித்தார்கள். தலைநகர் வாழ்வின் சம்பிரதாயம் மீறாமல் அங்கே வாழ்ந்தவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றார்கள். இந்த வாழையடி வாழை வழமைகளை வேரோடு தறித்தது புலத்தின் பொருளாதார வாழ்க்கை முறை. கனடாவில் தமிழ்ப் பெண்களின் மன உறுதியையும் முயற்சிகளையும் நான் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி குழந்தைகள், கணவன், உறவுகள் என்பவற்றுக்கு நடுவே தங்களையும் வளர்த்து முன்னேறும் அளவிற்கு ஈழப்போர் பெண்களை புடம்போட்டு புதியவர்களாக்கியிருக்கிறது. இது நிஜம். ஈழத்தவர்களின் யதார்த்த வாழ்க்கை. குறைந்தபட்ச கூலியை கொடுக்கும் வேலைகள். படித்து கொஞ்சம் கெளரவமான நான்கிலக்க ஊதியத்துடனான வேலை. புலத்தில் இதில் எது வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு அல்லது முயற்சி. தனி ஆளாய் அல்லது மாணவராய் இருக்கும் பட்சத்தில் இதில் கஷ்டங்கள் குறைவே. ஆனாலும், இங்கே படிப்பை தொடர்ந்து கொண்டே ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சுமையையும் தாங்கிக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்.

குடும்பத்தையும் கட்டிக்காக்க வேலை ஒருபுறம், பகுதிநேர படிப்பு மறுபுறம் என்ற முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அதன் அழுத்தங்கள் எங்களுக்கு புதிது. புலத்தில் ஈழத் தமிழர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல ஓர் தனிப்பதிவே போடவேண்டும். ஆனாலும் சுருக்கமாகவேனும் அதை சொல்லாமல் விடமுடியாது.

கடின உழைப்பில் காலம் தள்ளும் ஈழத்து அகதிகள்

சாதாரண வேலை,General Labor, (தமிழாக்கம் சரியா தெரியவில்லை) செய்பவர்கள் இங்கே இரண்டு, மூன்று வேலை செய்து மனைவி, குழந்தைகள் குடும்பம் வீட்டிலிருக்க இவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை வேலை தளத்திலேயே வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் பொதுவான ஓர் சொல்வழக்கு, “நான் double அடிக்கிறன்”. அதன் அர்த்தம் ஒன்றில் பதினாறு மணித்தியாலங்கள் மாடாய் உழைக்கிறார்கள் அல்லது இரண்டு வேலை செய்கிறார்கள் என்பது தான். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாயிருந்தால் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

யார் எந்த வேலை செய்தாலும் அடிப்படை தேவைகள் இந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படவேண்டுமென்று அதற்கான கூலியும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்திற்கேற்றவாறு தனக்கென்றோர் வீட்டையோ, சொத்தையோ வாங்குமளவிற்கு பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எல்லலாமே சரிதான். ஆனால் அன்றாட வாழ்விலும், வேலைவாய்ப்பு என்று தேடும் சந்தர்ப்பங்களிலும் என் சிந்தனையில் அடிக்கடி இடறும் ஓர் வார்த்தை “Visible Minorities”. இவர்கள் யாரென்று கேட்டால், பூர்வீக குடிகள் தவிர்ந்த இனத்தாலோ அல்லது நிறத்தாலோ வெள்ளையர்கள் அல்லாதவர்கள். (Visible Minorities, “Persons, other than Aboriginal peoples, who are non-caucasian in race or non-white in colour” -Federal Employment Equity Act). Visible Minority என்று சொல்லப்படும் சிறுபான்மை சமூகங்களில் நாங்களும் அடக்கம்.

எங்களுக்கும் வேலைவாய்ப்புகளில் சமமாக சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமென்று சட்டம் போட்டது சந்தோசம்தான். ஆனால் சட்டத்தின் அளவுகோலும் சமூகத்தின் அளவுகோலும் எப்போதுமே ஒன்றாய், சமமாய் இருப்பதில்லையே. வேலை வாய்ப்புகளில், வேலைத்தளங்களில், அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.

இப்படி அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலுள்ள சவால்களை எதிர்கொண்டுதான் வாழ்க்கையையும் ஈழத்தில் எங்கள் உரிமைப்போருக்கான அங்கீகாரத்தை பெறுவதையும் முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.

பண்பாட்டு அதிர்ச்சியும், பாதை மாறிய ஈழத்து இளையோரும்!

கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. கனடாவில் தனிமனித உரிமைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் கூட சுதந்திரமாகவே, இன்னும் சொன்னால் கொஞ்சம் காட்டாற்று வெள்ளம் போன்றது. அது மொழி, நடை, உடை, மரபுகள், கல்வி என்று வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கிளைபரப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டற்ற வேகத்தோடும் பண்புகளோடும் ஒட்டிக்கொண்டு ஓடவும் முடியாமல், வெட்டிக்கொண்டு வாழவும் முடியாமல் தத்தளிக்கும் போது ஈழத்தமிழர்கள் (பெற்றோரும் குழந்தைகளும்) தொடக்கத்தில் திணறத்தான் செய்வார்கள்.

புலத்தில் இப்படியான சவால்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவற்றை சமாளித்து தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில்தான் வேறுபடுகிறார்கள். மனிதனுக்கு எந்த கலாச்சாரம் அல்லது மதம் எதைக் கற்றுக் கொடுத்தாலும் சீரிய சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பனதான் ஓர் மனிதனை தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பது என் கருத்து. சீரான சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் தேடல், கற்றுக்கொள்ளல் மற்றும் அனுபவம் மூலம்தான் சாத்தியமாகிறது. ஆனால் மாறாக மன உளைச்சலுக்கு ஆளாகி புலத்து வாழ்வின் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது சிலபேர் தவறான வடிகால்களை தேடிக் கொள்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் குறிப்பாக இளைய சமுதாயம் போர்பூமியிலிருந்து கசக்கி எறியப்பட்டவர்கள் ஆதலால் சரியான நெறிப்படுத்தலும் வழிகாட்டலும் இன்றி ஆரம்பகாலங்களில் கொஞ்சமல்ல நிறையவே வன்முறைகளில் இளைப்பாறி மனச்சலனங்களோடு குழுச்சண்டைகளில் ஈடுபட்டார்கள். நானும் ஓர் முன்முடிவோடு யோசித்ததால் ஆரம்பத்தில் அவர்கள் மேல் எனக்கு கோபமே விஞ்சியிருந்தது. அதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் எப்படி தங்களை சூழ உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களை அறியாமலேயே வன்முறைக்குள் நழுவிப்போனார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.

இந்த நாட்டில் கல்விக் கூடங்களில் சகமாணவர்கள் அவர்களுக்குரிய comfort zone என்னவோ, அது பெற்றோர், வீடு முதல் சமூகம் வரை அவர்களின் செளகர்யங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் குழந்தைகள் போரில் பெற்றோரை, இரத்த உறவுகளை இழந்தவர்கள். உறவினர்களின் உதவியில், தயவில் புலத்தில் வாழ்பவர்கள். இல்லையென்றால், கலாச்சார முரண்பாடுகள், அன்றாடவாழ்வின் அழுத்தங்கள் காரணமாக மனதின் சமநிலையை தடுமாறவிட்டு வீட்டோடு, பெற்றோரோடு முரண்பட்டு போவார்கள். பெற்றோர்களால் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் விலக்கிவைக்கப்பட்ட (taboo) சில நியாயமான விருப்பங்களுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிட்டியது. ஒருசிலரின் முரண்பாடுகளின் உடன்பாடுகளே அவர்களை ஓர் குழுவாய் உருவாக்கியது.

இந்த குழுக்கள் என்பது தமிழ் இளையோர் சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களினாலும் கூட உருவாக்கப்படதுதான். ஆனால், சில அரசியல் அநாமதேயங்கள் அதற்கு அரசியல் சாயம் பூசி அதில் குளிர்காய்ந்துகொண்டதுகள். இப்படியாக இவர்களின் வன்முறை சமன்பாடுகளில் இவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டபோது, தங்கள் சொந்த எதிர்காலத்தையே இருண்டதாய் ஆக்கிக் கொண்டபோது தான் வன்முறையிலிருந்து விழித்துக் கொண்டார்கள்.

தமிழ்சினிமாவில் காண்பிப்பது போல் ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு ஸ்லோ மோஷனில் இந்தநாட்டு சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார்கள். புலத்தில் ஈழத்தமிழ்சமூகத்திற்கு இவர்களின் வன்முறை உண்டாக்கிய அவப்பெயர் இவர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிவைத்தது. முடிவாக அவர்களே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்றுவரை புலம்பெயர் வாழ்வில் இவர்களின் மன உளைச்சலையும் கலாச்சார பண்பாட்டு முரண்பாடுகளையும் ஒத்துக்கொள்ளும் என்னால் அதற்குரிய வடிகாலாய், வழிமுறையாய் இவர்களின் வன்முறைச் சமன்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், எங்களை இன்று புலத்தில் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழவைப்பது இந்த இளைய சமுதாயம் என்றால் அது நிச்சயமாய் மிகையில்லை. இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.

இளையவர்களின் கலாச்சார முரண்பாடுகள் சீரியஸாக இருந்தால், பெரியவர்களின் முரண்பாடுகள் அர்த்தங்களோடு அபத்தங்களும் கலந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க தமிழர்கள் பொருளீட்டுவதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. புலம் பெயர்ந்து வந்தாலும் வேலை, வேலையென்று ஓடுவார்கள். அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்வார்கள். மேலைத்தேய கலாச்சார சம்பிரதாயப்படி சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்களில்தான் வாழ்க்கையை வாழ முயற்சிப்பார்கள். கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம்,  சாவு என்று எல்லாத்துக்குமே Week-end தான்.

இந்தியாவிலிருந்து நிறையவே விதம், விதமாக ஆடை ஆபரணங்கள் இறக்குமதியாகின்றன. இவற்றையெல்லாம் உடுத்தி, அழகு காட்டி, உண்டு, குடித்து, புலத்து வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறவில்லை நாங்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் புடவைகளில், ஆடைகளில் FLA (Fair Labor Association)  லேபிள் இருந்தால் மனட்சாட்சி உறுத்தாமல் இருக்கும் என்று நான் நடைமுறை சாத்தியமற்று சிந்திப்பதுமுண்டு. வியர்வை கூடங்களில் (Sweat Shops) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிய மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை எனக்கு.

ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம். எப்படியோ, ஈழ, இந்திய, கனடிய கலாச்சாரங்களை ஒன்றாய் கலந்து வாரநாட்களில் கனடியர்களாகவும், வார இறுதி நாட்களில் ஈழத் தமிழர்களாகவும் இரட்டை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டோம். கொஞ்சம் போதையோ, கவலையோ மிஞ்சிப்போனால், “சூ! அதென்ன வாழ்க்கை” என்று ஈழம் பற்றிய பழைய நினைவுகளை அடுத்தவர்கள் கேட்டே தீரவேண்டும் என்று அடம் பண்ணி ஒப்புவித்தோம்.

அப்படி ஒப்புவிக்கும் நினைவின் மீட்சிகள் உறவுகள் அல்லது நண்பர்களின் இழப்புகள், ஈழத்தில் நாங்கள் இழந்த சந்தோசம், பள்ளிக்கூடவாழ்க்கை, போர் தின்ற காதல், பழகிய நண்பர்கள், பறிகொடுத்த நண்பர்கள், ராணுவத்திடமிருந்தும் தலையாட்டியிடமிருந்தும் (கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட ஆட்காட்டி) தப்பித்தது என்று மனதில் காட்சிகளாய் நீளும். உடல் இங்கேயும் மனம் ஈழத்திலுமாய் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போம். அதன் நீட்சியாய் தூக்கம் தொலைக்கும் இரவுகள். கலையாத தூக்கமும், தொலையாத துக்கமுமாய் திங்கட்கிழமை அடித்துப் பிடித்து காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் வேலைக்கு ஓடுவோம்.  இன்னோர் அல்லது அடுத்த  week-end இல் வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையுடன்…..!

_____________________________________________ தொடரும்……..

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!

vote-012 25 ஏப்ரல், 2010 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் கூட்டத்தில் அமர்ந்திருந்த வக்கீல்கள் எத்தனை பேர்? வக்கீல்கள் உடுப்பில் வந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் குண்டர்கள் எத்தனை பேர்?

கருப்புக் கொடி காட்டி அடிபட்ட HRPC வழக்குரைஞர்கள் மீது வழக்கு. வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் இருந்தும் வக்கீல்களைத் தாக்கிய ரவுடிகள் மீது வழக்கு இல்லை.

______________________________________________

“வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் 200 வக்கீல்கள் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள்”- இது ஏப்ரல் 22, 2010 தினத்தந்தி செய்தி. ஏப்ரல் 23 அன்று தினத்தந்தியில் பால் கனகராஜின் மறுப்பு செய்தி. — இடையில் நடந்தது என்ன?

நீதி மன்றத் தடை ஆணை காரணமாகத்தான் 4 போலீசு அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று முதல்வர் கூறியிருப்பது உண்மையா? அல்லது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கச் சொன்ன பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?

_____________________________________________________

மறக்க முடியுமா?

பிப்ரவரி 19, 2009.

உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசு வெறியாட்டம்

அன்று குற்றமிழைத்த போலீசுக்கு அரணாக இருக்கும் முதல்வருக்கு இன்று கருப்புக் கொடி காட்டிய HRPC  வழக்குரைஞர்கள் மீது வக்கீல் வேடமணிந்த திமுக ரவுடிகள் தாக்குதல்!

__________________________________________________________

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா?  கண்டனக்கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு

கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.

ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

_____________________________________________

கறுப்புக் கொடியும் பெருச்சாளிகளும்!

கறுப்புக் கொடிக்கெல்லாம்
அஞ்சாதவராம் கலைஞர்.
ஒத்துக் கொள்ளலாம் உண்மைதான்,
இந்தியக் கொலைக்கரத்தால்
துண்டு துண்டாக்கப்படட்ட
ஈழத்தமிழரின் தொப்புள்கொடிக்கே
அஞ்சாதவர்தான்…!

“யாரோ! தூண்டிவிடப்பட்டவர்களாம்”
உண்மைதான்,
ஈழத்தமிழர்களுக்காக போராடிய வழக்குரைஞர்களை
போலீசை ஏவித் தாக்கிய கருணாநிதி அரசுதான்
புறநிலையாக அவர்களைத் தூண்டிவிட்டது.
மற்றபடி,
காக்கிச் சட்டைகள், குண்டாந்தடிகள்
கரைவேட்டியில் ரியல் எஸ்டேட்டும்
கந்துவட்டியுமாக கழகப் பணியாற்றும் குண்டர்கள்
இத்தனையும் சூழ்ந்திருக்க
எழுந்து நின்று முழங்கிய தோழர்களைத் தூண்டியது
மார்க்சிய-லெனினிய அரசியல் சக்தி.

“கறுப்புக்கொடி காட்டியவர்கள்
எண்ணிக்கை குறைவாம்!”
உண்மைதான் ஆனால்
அந்த ஆறு தோழர்களின்
அரசியல் உறுதி கண்டு
சாயம்போன உங்கள் முகத்திற்கு
அது ஒன்றும் குறைவில்லை.

ஆள், அம்பு, சேனை, அதிகாரம்
அத்தனைக்கும் மத்தியில்
அவர்களால் உண்மை பேச முடிந்தது.
அத்தனையும் வைத்துக்கொண்டு
உங்களால் தைரியமாக
ஒரு உண்மை பேச முடிந்ததா?

தெளிவாகக் “கருணாநிதிக்கு கறுப்புக் கொடி”
எனக் கண்டனம் முழங்கியும்
“அம்பேத்கார் சிலை திறப்புக்கோ!?”
என நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை விஞ்சியதைப் பார்த்து
அதிர்ச்சியில்,
கோல்வால்கர் கோயபல்சு பிணங்கள்
குப்புறத் திரும்பிப் படுத்துக் கொள்கிறது.

தமிழினத் தலைவரின் நாக்கிலேயே
தூக்குமரம் பார்த்து
உயிரெழுத்து தவிக்குது!
மெய்யெழுத்து நடுங்குது!
பொய்யுரைகள் தீண்டியதால்
செம்மொழி உயிருக்குப்போராடி  துடிக்கிறது!

உற்சவமூர்த்திக்கே உக்கிரம் குறைந்தாலும்
அடிப்பொடி, ஆழ்வார்களுக்கோ
வக்கிரம் குறையவில்லை.

“ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக
கறுப்புக் கொடி காட்டினார்கள்” என்று
கோபாலபுரத்து பூனை இரவிக்குமார்
கலைஞர் மடியிலிருந்து குதிக்கிறார்.

பீச்சாங்கரையில் படுத்துக்கொண்டு
மூச்சுக்காற்று இரத்தத்தில் கலப்பதற்குள்
இலங்கை யுத்தத்தை நிறுத்தியதாக
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட
கருணாநிதியின் ஊடகக்கவனத்தைப் பற்றி
மூச்சு கூட விடாத இந்த சூரப்புலி
முந்திக் கொண்டு பாய்வது எதற்காக?

இரவிக்குமார் சாதாரண ஆள் இல்லை!
என்றாவது கலைஞர் ஒரு
எம்.பி. துண்டை வீசியெறிந்தால்
சிறுத்தை வேடத்தை கலைத்துவிட்டு
கரைவேட்டியில் உலாவர காத்திருக்கும்
புளுகுப் பூனை இது!

எங்கே பிணம் விழுந்தாலும்
இடப்பக்கம் எனக்கு, வலப்பக்கம் உனக்கு
என போயசு நரியுடன் சேர்ந்து
புரட்சிகர ஊளையிடும்
புல்லறிவாளர்களுக்கும் பொத்துக் கொண்டு வருகிறது.

சட்டவரம்பை மீறி கருப்புக் கொடி காட்டியதை
எங்கள் திட்டப்படி ஏற்க முடியாது என
போற வழிக்கு புண்ணியம் தேடுகிறார்
வலது கம்யூனிஸ்டு சிவபுண்ணியம்.

சட்டமன்றத்தில் சமர்த்தாக
“என்ன இருந்தாலும் கொஞ்சம்
இடம் பார்த்து அடித்திருக்கலாம்” என்று
இதமாக நலங்கு வைக்கிறார்
நாத்தனார் பாலபாரதி!

மனிதகுல விரோதி
ஞானசேகரனுக்கோ
மாவோயிஸ்டு பேதி!

மொத்தத்தில் நாறியது ஜனநாயகம்!

ஒரு கறுப்புக்கொடியை உதறப்போக
சட்டமன்றப் பொந்திலிருந்து
எத்தனை பெருச்சாளிகள்
எடுக்குது ஓட்டம்!

கறுப்புக்கொடிக்கே உருட்டுக்கட்டை அடி என்றால்
இது பேசி தீர்க்க கூடிய ஜனநாயகமா?
இல்லை… தீர்த்துவிட்டு
பேசக்கூடிய ஜனநாயகமா?

தெரிந்துகொள்ளுங்கள்
உழைக்கும் மக்களே!

–          துரை. சண்முகம்

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

37

vote-012

ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் என்றும், அதில் ஈடுபட்ட பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

_______________________________________

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.

வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.

எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?

கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.

அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.

ஏன் தண்டனை இல்லை ?
கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?

கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.

1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர் Crimen Sollicitationis. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றதுதான். இது குறித்த ஒரு பிபிசி ஆவணப்படத்தில் தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் ஏழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?

தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு

பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமரிசகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்
போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல் – பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார். இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.

இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடி மறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?

போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.

************

மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

___________________________________________________

– தமிழ் சசி

தமிழ் சசியின் வலைப்பூ முகவரி: http://www.tamilsasi.com/

(தோழர் தமிழ் சசி எழுதிய இந்தக் கட்டுரையை, அவரது அனுமதியோடு,  நன்றியுடன் வெளியிடுகிறோம்)

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

45

“365 நாளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”

சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

காலனிய விளையாட்டு காசு கொட்டும் விளையாட்டாய் ஆனது எப்படி?

இந்தியாவை ஆட்சி செய்து களைத்துப்போன வெள்ளையர்கள் பொழுது போக்கிற்காக ஆபத்தில்லாத விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிதோடு, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மெக்காலே கல்வி கற்ற இந்தியக் குமாஸ்தாக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை வானொலி மூலம் பெருமைபடக் கேட்கும் கூட்டத்தினர் மேற்கண்டவர்களின் வழியில் கிரிக்கெட்டின் இரசனையை கீழே வரை பரப்பினர். பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக நேரடி ஒளிபரப்பு சாத்தியமானதும் கூடவே ஒரு நாள் பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய சந்தையும் இணைந்து இதன் வர்த்தக மதிப்பை ஆயிரக்கணக்கான கோடிகளில் எகிற வைத்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

இந்திய அணி எப்போதும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது. வெற்றி பெறும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய முதலாளிகள் ஸ்பான்சர் செய்வதும் இயலாது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் முறையில்தான் கிரிக்கெட்டின் எதிர்கால வர்த்தகம் உண்டு என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிகளின் ஒரு பிரிவு உருவாக்கியதுதான் ஐ.சி.எல் கோப்பை போட்டி.

21ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, பிரபலமாகிவிட்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் இந்த விளையாட்டும் மற்ற விளையாட்டுகள் போல ஒரிரு மணி நேரங்களுக்குள் ஆடும்படியான அம்சத்தை கொண்டிருந்தது. இதனால் கிரிக்கெட்டை நேரிலும், சின்னத்திரையிலும் பார்க்கும் கண்களை வகை தொகையில்லாமல் அதிகப்படுத்தலாம் என்று முதலாளிகள் கண்டு கொண்டனர்.

அப்படித்தான் Z டி.வி முதலாளிகள் இருபது ஓவர் போட்டிகளை ஐ.சி.எல் என்று சர்வதேச வீரர்களைச் சேர்த்துக் கொண்டு நடத்த ஆரம்பித்தனர். உலகிலேயே கிரிக்கெட்டை வைத்து அதிகம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏகபோகத்தை தகர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐ.சி.சி)  இந்திய சங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது ஐ.சி.எல் எதிர்பார்த்தது போல களை கட்ட அனுமதிக்கப்படவில்லை.

லலித் மோடியின் ஐ.பி.எல்லும் அதன் அசுரவளர்ச்சியும்

ஆரம்பத்திலிருந்தே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தை பெரிய இடத்து மனிதர்கள்தான் நிர்வகித்து வந்தனர். இன்றும் கூட முதலாளிகளும், அரசியல்வாதிகளும்தான் சங்கத்தின் கடிவாளத்தை வைத்திருக்கின்றனர். சரத்பவார், காங்கிரசின் சுக்லா, பி.ஜெ.பியின் அருண் ஜெட்லி, முதலான அரசியல்வாதிகளும் பல்வேறு முதலாளிகளும் சங்கத்தில் உள்ளனர். முக்கியமாக கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரமென்று தெரிந்த உடன் இந்த போக்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இப்படி கிரிக்கெட்டிற்கு மக்களிடம் இருக்கும் பேரார்வமும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் என அனைத்து மேல்மட்டப் பிரிவினரிடமும் இருக்கும் செல்வாக்கையும் புரிந்து கொண்ட லலித் மோடி முழுவீச்சில் அறிமுகப்படுத்தியதுதான் ஐ.பி.எல். இதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பி.சி.சி.ஐ யும் ஐ.சி.சி. யும் செய்து கொடுத்தது. புதிய வழிகளில் கோடிகள் கொட்டப்ப் போகிறது என்பதால் அவர்களும் இதில் ஆதாயமடையலாம் என்பதை மோடி உறுதி செய்தார். ஏற்கனவே மேட்ச் பிக்சிங் போன்ற ஊழல்கள் வெளியே தெரியும்படியாக பரவியிருந்த்தால் கவலைப்பட்ட முதலாளிகளுக்கு அப்படி ஒரு பிக்சிங் தேவைப்படாமலேயே பணத்தை சுருட்டலாம் என்பதை மோடி நிரூபித்துக் காட்டினார்.

விளையாட்டு உணர்ச்சியை வர்த்தகமாக்கிய  கிளப் போட்டிகள்!

பல்வேறு விளையாட்டுக்களில் கிளப் பாணி போட்டிகள் இருந்தாலும் கால்பந்தில் அது மிகவும் பிரபலம். குறிப்பாக ஐரோப்பாவில் நடக்கும் இந்த கிளப் கால்பந்து போட்டிகளில் பல பில்லியன் டாலர் பணம் புரள்கிறது. இதன் மூலமாகத்தான் தேசிய அணிகளின் மோதலாக பிரபலமடைந்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கம் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனம் போல வளர்ந்திருக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் கால்பந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக இதன் பரிமாணம் பரந்து விரிந்து கிடக்கிறது. நாடுகளுக்காக ஆடும் வீரர்கள் தங்களது திறமையைக் காட்டிவிட்டால் போதும், பிறகு அவர்கள் ஆயுசுக்கும் கஷ்டமில்லை என்பதாக கோடிகளை கிளப்போட்டிகளில் அள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கிளப் முதலாளிகள் திறமையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போடுவர். கிளப்புகளை பின்னணியில் இருந்து கட்டுப்படுத்தும் முதலாளிகளும், கால்பந்தை வைத்து விளம்பரம் செய்யும் பன்னாட்டு முதலாளிகளும் இதன் வர்த்தக மதிப்பை தீர்மானிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் லீக்-களும் கிளப் வகை போட்டிகள்தான். இங்கும் கிளப்புகளை முதலாளிகள்தான் கட்டுப்படுத்துகின்றனர்.

விளையாட்டில் தேசியவெறி மட்டும் இருக்காது கிளப் வெறியையும் உருவாக்க முடியும் என்பதை இந்த சர்வதேச அனுபவங்கள் நிரூபிக்கின்றன. முக்கியமா தேசிய வகை போட்டிகளில் குறிப்பிட்ட அணி வெற்றி பெற்றால்தான் அந்த அணி வீரர்களை வைத்து செய்யப்படும் விளம்பர முதலாளிகள் ஆதாமடையும் என்ற ரிஸ்க் கிளப் போட்டிகளுக்கு இல்லை.  ஐ.பி.எல்லும் முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும். இந்திய அணியை ‘தேசப்பற்றுடன்’ ஆதரித்துக் கொண்டிருந்த இரசிகர்கள் இன்று பிராந்திய அணியினை ஆதரிப்பவர்களாக உடனடியாக மாறினர்,  வெள்ளையர்களும், வேற்று மாநிலத்தவர்களும், நாட்டவர்களும் இருந்தாலும் இந்த ‘நம்ம டீம்’ உணர்வு சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

தொழிற்துறை முதலாளிகளை ஈர்த்த கிரிக்கெட்டின் பெரும் வர்த்தகம்!

இத்தகைய பின்புலத்தில்தான் லலித்மோடியால் ஐ.பி.எல் போட்டிகள் திறமையாக வடிவமைக்கப்பட்டது. எட்டு அணிகள், எட்டு முதலாளிகள், எட்டு முதலாளிகளின் பின்னே உள்ள மற்ற முதலாளிகளின் விவரம் தெரிவிக்கப்படாமை, வீர்ர்களை ஏலம் எடுக்கும் உரிமை, எங்கிருந்து வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வசதி, அணிகளை ஏலத்தின் மூலம் முதலாளிகள் வாங்கும் வசதி, அந்த ஏலத்தை சிண்டிகேட் அமைத்து நிதானப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, விளம்பரம், போட்டிகள் மூலம் அணி உரிமையாளர்கள் இலாபம் காண்பதற்கு உத்திரவாதம், ஒளிபரப்பும் உரிமை மூலம் ஊடக முதலாளிகள் பணம் அள்ளுவதற்கு வாய்ப்பு, இதையெல்லாம் அனுமதித்து கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பி.சி.சி.ஐக்கு தரப்படும் கப்பம், என்று ஐ.பி.எல்லின் மூலம் கிரிக்கெட் புரட்சியை லலித் மோடி பிரம்மாண்டமாக விற்பனை செய்திருக்கிறார். Z டிவியின்  ஐ.சி.எல்லை ஒழிப்பதற்க்காக இறக்கப்பட்ட அங்கீகாரிக்கப்பட்ட ஒன்றைப்போல போல தோற்றம் கொண்டிருந்தாலும் ஒரே வருடத்தில்  அதுவே தனியாக தனது சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பத்துவங்கியது.

அமெரிக்காவில் அபின் வைத்திருந்த்தாகவும், ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாளி மைனரான லலித் மோடியின் கிரியேட்டிவிட்டி ஐ.பி.எல்லில் பூத்துக் குலுங்கியதை எல்லா முதலாளிகளும் பாராட்டியிருக்கின்றனர். சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின் போது போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்ற பிரச்சினை வந்த போது போட்டியையே தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றி வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் மோடி. இனி வருங்காலத்தில் ஐ.பி.எல் போட்டியின் போதுதேர்தல் வந்தால் தேர்தலைத்தான் ஒத்திவைப்பார்கள் எனுமளவுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் தனி அரசையே நடத்திவருகிறது.

நேரடிப் போட்டிகளைக் காண பன்மடங்கு விலை உயர்த்தப்பட்ட மதிப்பிலான டிக்கெட்டுகள், திரையரங்கத்தில் பல மடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு போட்டிகளைக் காண ஏற்பாடு, இணையத்தில் யூ டியூப் உதவியுடன் நேரடி ஒளிபரப்பு, மொபைல் ஃபோன்களில் ரீப்ள்ளே என்று தொழில்நுட்பத்தில் எல்லா சாத்தியங்களோடும் ஐ.பி.எல் தனது வர்த்தக்த்தை வேர்விடச்செய்திருக்கிறது.

அம்பானியும், இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனும், டெக்கான் குரோனிக்கிளின் ராமோஜி ராவும், விஐய் மல்லயாவும் இன்று மக்களின் ஆதரவு பெற்ற ஐ.பி.எல் அணி முதலாளிகளாகப் பரிணமித்திருக்கின்றனர் என்றால் அவர்கள அதற்கு லலித் மோடிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த முதலாளிகளிடம் பணியாற்றும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியாத செல்வாக்கை இரசிகர்கள் இம்முதலாளிகளுக்கு கொடுக்க முடியும். மேலும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, முதலான சினிமா முதலாளிகள் பினாமி வேடத்தில் அணி உரிமையாளர்களாக முன்னேற்றம் அடைந்திருப்பதற்கும் மோடியே காரணம். இதனால் மார்க்கெட்டை பெற்ற, இழந்த எல்லா நட்சத்திரங்களும் பினாமி முதலாளிகளின் முகவராக வலம் வருவர்.

இன்று ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு பற்றி தினசரிகளில் புதிய புதிய கதைகள் நாளொருமேனி பொழுதொரு வண்ணம் வந்த படி இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு 20,000த்தில் தொடங்கி 50,000 கோடிகள் வரை இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. 2008இல் சிலநூறு கோடிகளுக்கு எடுக்கப்பட்ட அணிகளின் மதிப்பு இன்று சில ஆயிரம் கோடி என்று உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தலா 60 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 180 ஆட்டங்களுக்கான வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி என்பதை நம்பத்தான் முடியவில்லை. ஒன்றரை மாதமாக நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் முதலாளிகளைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

ஆளும்வர்க்கங்களின் ஆசியுடன்தான் ஐ.பி.எல் மோசடிகள்!

இன்று ஐ.பி.எல் மோசடிகளை இந்திய அரசு பயங்கரமாக புலனாய்வு செய்வதாக நடிக்கிறது. எட்டு அணிகளை வைத்தே இவ்வளவு கொள்ளையடிக்க முடியுமென்றால் இன்னும் எத்தனை அணிகளை சேர்க்க முடியுமோ அத்தனையும் கொள்ளை இலாபம்தான் என்பதை முதலாளிகள் உணராமலில்லை. இப்படித்தான் கொச்சி, புனே அணிகள் ஏலமிடப்பட்டு தலா 1,500 கோடிகளுக்கு விலை போயிருக்கின்றன. இனி ஆண்டுக்கு 90 பந்தயங்களாம்.

இதில் கொச்சி அணியை உருவாக்குவதற்கு துணைநின்ற முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தனது தோழியான சுனந்த புஷ்காருக்கு 70கோடி மதிப்பிலானா பங்குகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கொச்சிக்குப் பதில் அகமதாபாத் அணி வென்றிருந்தால் லலித்மோடிக்கும் வேறு சில முதலாளிகளுக்கும் ஆதாயம் கிடைத்திருக்கும். அந்த ஆத்திரத்தில் ஐ.பி.எல் வளர்ச்சியினால் தன்னை அளவு மீறிய ஆண்டவனாகக் கருதிக் கொண்ட லலித்மோடி கொச்சி அணியின் பினாமி இரகசியங்களையும், சசிதரூரின் பங்கையும் வேண்டுமென்றே வெளியிட்டார்.

இத்தகைய இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பதுதான் ஐ.பி.எல்லின் சட்டதிட்டம். எனினும் முதலாளிகள் மக்களிடமிருந்து பெறும் இலாபத்தை சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதும் அமைதியாக பிரித்துக் கொள்வார்கள் என்பது எப்படி ஒரு மூடநம்பிக்கையோ அது போல இதுவும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெளிவந்தே தீரவேண்டும். இங்கே அது ஒரு அழகுக்கலை அலங்காரத் தொழிலைச் செய்யும் ஒரு சீமாட்டியை வைத்து வந்திருக்கிறது.

லலித் மோடியால் மந்திரி பதவியைத் துறக்கும் நிலைக்கு ஆளான சசிதரூர் பதிலுக்கு லலித் மோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கொண்டிருக்கும் பங்கு மற்றும் ஐ.பி.எல்லை வைத்து அவர் ஒரிரு வருடங்களில் சம்பாதித்திருக்கும் சில ஆயிரம் கோடிகளையும் பற்றி கசியவிட்டார். அப்புறம் ஏகப்பட்ட பூனைக்குட்டிகள் வெளிவரத்துவங்கின.

பி.சி.சி.ஐயில் இருக்கும் நிர்வாகிகள் எவரும் கிரிக்கெட்டை வைத்து வர்த்தக ஆதாயம் அடையக்கூடாது என்பது கூட ஐ.பி.எல்லுக்காக தளர்த்தப்பட்டது என்கிறார் ஸ்பிக் முத்தையா. அவரது தொழில் எதிரியான இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் பி.சி.சி.ஐயில் செயலாளராக இருக்கும்போதே சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். மற்ற நிர்வாகிகளும் கூட பல பினாமிகளின் பெயரில் பல அணிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கலாம்.

முதலாளிகளின் நேரடிப் பிரதிநிதியாக அரசியலில் இருப்பவர் சரத்பவார். முன்னாள் பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்து வேலை செய்த நேரம் போக உணவுத் துறை அமைச்சராக பொழுது போக்கியவர். மேற்கு மராட்டியத்தின் சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும்  பெருமுதலாளியான சரத்பவார் லலித்மோடியின் தீவிர ஆதரவாளராவார். சொல்லப்போனால் லலித்மோடி கூட ஓரவளவுக்கு சரத்பவாரின் பினாமி என்றால் மிகையில்லை. சரத்பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல்பட்டேல் விமானத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவரது மகள் பூர்ணா ஐ.பி.எல் நிர்வாகத்தின் விருந்தோம்பல் குழுவின் தலைவராம். இவரது செல்வாக்கில்தான் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

காங்கிரசைச் சேர்ந்த எம்.பியான சுக்லாவும், பா.ஜ.கவைச் சேர்ந்த அருண்ஜேட்லியும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். லல்லு போன்ற சமூகநீதி அரசியல்வாதிகள் கூட மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்களில் இருந்திருக்கிறார்கள். நாளைக்கு சசிகலாவும், அழகிரியும் கூட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது வெளிவந்த மோசடிகளின் படி இந்தப் பகல் கொள்ளையில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகமுதலாளிகள் எல்லோரும் சேர்ந்தே கூட்டணி வைத்து நடத்தியிருக்கின்றனர். மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் வரி இல்லை என்பதை வைத்து எல்லா ஐ.பி.எல் அணிகளின் பினாதி முதலீடும் அந்த தீவிலிருந்துதான் வந்திருக்கின்றன. அந்தத்தீவுக்கு வந்த பணம் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்பு பணம் ஸ்விஸ் நாட்டுக்கு போயிருக்கிறது. இதன் அளவு ஐந்து இலட்சம் கோடிகள் என்பது ஏற்கனவே வெளிவந்த விசயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகளின் மீதான போர் தொடுத்திருக்கும் இந்திய அரசின் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இப்போதைக்கு கவலைப்படும் விசயம் ஐ.பி.எல் மோசடிகள். அதுவும் எப்படியோ கசிந்துவிட்ட இந்த ஊழலை இதற்கு மேல் முட்டு கொடுத்து நிறுத்தவதற்கு பிரதமர், ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி, சோனியா எல்லோரும் அல்லும் பகலும் தனியாகவும், சந்தித்தும் வேலை செய்கிறார்கள். மக்களை தற்காலிகமாக ஏமாற்றுவதற்காக வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் ஐ.பி.எல் முதலாளிகளின் அலுவலகங்களை சோதிப்பதாக சீன் போடுகிறார்கள்.

சசிதரூர் கூட தனது வாய்க்கொழுப்பினாலும், வெட்டி பந்தாவினாலும்தான் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். இந்த மோசடி ஆட்டத்தில் வெளியே தெரியாமல் பணிவாக ஆடவேண்டும் என்ற விதியை அவர் மீறியதால்தான் இந்தப்பதவி இழப்பு. அதே போல இப்போது லலித் மோடி மீது அவருக்கு போட்டியான முதலாளிகள், அரசியல்வாதிகள் குழுவிலிருந்து நிர்ப்பந்தம் வந்திருப்பதால் அவரையும் நீக்கியிருக்கிறார்கள். எனினும் இவ்வளவு அப்பட்டமான ஊழல் மோசடி நாயகனைக் கூட அம்பானி, விஜய் மல்லையா, சரத்பவார் போன்றவர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் கூட இந்த மோசடிகளை ஒரு பரபரப்பிற்காக வேறு ஒரு பகைமை காரணமாகவும் வெளியிடுகின்றன. முக்கியமாக இந்த ஆண்டு ஊடகங்கள் செய்தி நேரத்தில் ஐ.பி.எல்லின் பந்தயங்களை நேரடியாக காட்டக்கூடாது, சமீபத்திய பதிவையும் காட்டக்கூடாது என்ற விதிகள் ஊடக முதலாளிகளுக்கு கடுப்பேற்றியிருக்கலாம். லலித்மோடியை அம்பலப்படுத்துவதன் மூலம் எதிர்கால நிர்வாகத்திற்கு தோழமையுடன் தெரிவிக்கக்கூடிய விமரிசனமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இனி புதிய நிர்வாகிகளின் கீழ் ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள். இதன்படி கொள்ளைப் பணத்தை எல்லா முதலாளிகளும் சரிசமமாக பிரித்துக் கொண்டு லலித்மோடி போட்ட ராஜபாட்டையில் அதே போலத்தான் பயணிக்கும். லலித் மோடி போனாலும் அவரது மோடியிசம் என்ற அமைப்பு முறையை இவர்கள் தகர்க்கப் போவதில்லை. இப்போது வெளிநாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலே சென்றிருக்கிறது என்ற தொழில்நுட்பமெல்லாம் புதிய நுட்பங்களால் நிரப்பப்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணம் மொரிஷியஸ் வழியாக இந்தியா வரும் இரகசிய வழித்தடங்கள் இப்போது போல வெளிப்படையாக தெரியாத வண்ணம் மறைக்கப்படும். மற்றபடி இரசிகனுக்கு தேவை  சிக்ஸரும், விக்கெட்டும் மட்டும்தான் என்பதால் இவையெல்லாம் முதலாளிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஐ.பி.எல் மோசடியில் இரசிகனின் பங்கு!

முதலாளித்துவ புரட்சி நிலைநிற்பதற்கு முந்தைய சமூகங்களில் விளையாட்டு என்பது சமூகம் தழுவியதாக இருந்தது. இன்றிருப்பது போல தனித்திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பர்மேன் வீரர்கள் அன்றில்லை. போட்டிகளும் மக்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமளவு அனைவரின் வாழ்விலும் விளையாட்டு என்பது இரண்டறக் கலந்திருந்தது. முக்கியமாக அவர்களது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன.

இன்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் தனது உடலின் அதீத திறமைகளை காட்டும் சூப்பர் வீரர்கள் தோன்றி விட்டார்கள். நூறு மீட்டரை ஒன்பதே முக்கால் விநாடிகளில் கடந்து விட்ட சாதனை எதிர்காலத்தில் ஒன்பது, எட்டு, ஏழு என்று கூட வரலாம். ஆனால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காணும் வசதியைக் கண்டிருக்கும் இக்காலத்தில், அந்த அளவுக்கு விளையாட்டு என்பது சமூகமயமாவதற்குப் பதில் மக்களின் வாழ்விலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?

இந்த உலகிலேயே சிக்கலான ஆட்ட விதிகள், நுணுக்கம் ஏதுமில்லாமல் இரசிக்கப்படும் விளையாட்டும் கிரிக்கெட்தான்.  ஸ்டெம்பு விழுந்தால் அவுட், பந்து பிடித்தால் கேட்ச், எல்லைக் கோட்டை உருண்டு தாண்டினால் நான்கு, பறந்து தாண்டினால் ஆறு என்பதை அறிந்து கொண்டாலே கிரிக்கெட் தெரிந்தமாதிரிதான் .

ஐந்து நாட்கள் போட்டியினை பொறுமையாக அசைபோடும் பெரிசுகள் ஒருநாள் போட்டி வந்தபோது மிரண்டு போனார்கள். இருபது ஓவர் போட்டி வந்தபோது புலம்பத் துவங்கினார்கள். ஆனாலும் கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் முன்பை விட பெரிதாகிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அறிவியல்-தொழில்நுட்ப புரட்சியும், வர்த்தக நோக்கமும் இணைந்து உருவாக்கிய பெரும் சந்தையே. கிரிக்கெட் ஒரு அமுதசுரபி என்று முதலாளிகள் புரிந்து கொண்ட பிறகு அது வெறும் விளையாட்டு என்பதை என்றோ இழந்துவிட்டது.

இன்றைக்கு மைதானத்தில் பார்க்கும் ஆட்டத்தை விட சின்னத்திரையில் பார்ப்பது என்பது விளையாட்டின் இந்திய தேசிய உணர்ச்சியாகி விட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பும் ஹாலிவுட் படங்களின் நேர்த்தியை விஞ்சும் வண்ணம் வளர்ந்து வருகிறது. கோக்கைக் குடித்தவாறும், லேயிஸ் சிப்ஸை கொறித்தவாறும் பார்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே என்பது இரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெற்று நாளாகி விட்டது. இவ்வளவு நாள் இந்திய அணியின் வெற்றிக்காக பதட்டப்பட்ட இரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக மாநில அணிகளுக்காக டென்ஷனாகிறார்கள்.

ஐந்து நாள், ஒரு நாள் போட்டிகளை அசைபோட்ட நேரத்தை விட இந்த குறுகிய காலப்போட்டிகள் அசைபோடப்பட்ட நேரம் அதிகம்தான். இந்த ஒன்றரை மாதமாக நாட்டின் பேசுபொருளாக ஐ.பி.எல் மட்டுமே நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தது. விளையாட்டிலிருந்து ஆட்டம், பாட்டம், இசை, ஆடை அணிவகுப்பு, குடி விருந்து, என்று எல்லா வகையிலும் அவை தொடர்ந்தது. பதிவுலகிலும் ஐ.பி.எல்லுக்காக வரையப்பட்ட இடுகைகள் எத்தனை எத்தனை?

ஏற்கனவே மதமாச்சரியங்களுக்குள் ஆழ்த்தப்ப்ட்ட இந்திய சமூகத்தின் நவீன மதமாக கிரிக்கெட் நிலை பெற்றுவிட்டது. கிரிக்கெட்டின் சமூக பொழுது போக்கு நேரங்களில் ஆழ்ந்திருக்கும் ஒரு இரசிகன் பலவற்றையும் இழக்கிறான் என்பதை அறியமாட்டான். முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது.

பெப்சி, கோக் போன்ற முதலாளிகள் நினைத்தால் அவன் இந்திய வெறியையும், பால்தாக்கரே போன்ற இனவெறியர்கள் நினைத்தால் அவன் பாக் எதிர்ப்பு வெறியனாகவும், ஐ.பி.எல் முதலாளிகள் நினைத்தால் அவன் தேசிய இனவெறியனாகவும் மாறிவிடுவான். இந்திய அணிக்காக அவனால் பாரட்டப்பட்ட வீரர்கள் இன்று எதிர் ஐ.பி.எல் அணியில் இருந்தால் வெறுக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களை இந்திய அணியின் எதிரிகளாக நினைத்துப் பழக்கப்பட்டவன் இன்று அவர்களை வேட்டி கட்டிய தமிழனாகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவதில்லை.

முதல் ஆண்டு போட்டியில் பாக் வீரர்களை ஆரவாரத்துடன் ஏற்றவன் பின்பு லலித்மோடியின் சதியால் பாக் வீர்ர்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் ஏற்றிருக்கிறான். இப்படி விற்பனைக்கேற்ற உணர்ச்சியை மாற்றி மாற்றி தரித்துக் கொள்வதில் அவனுக்கு வெட்கம் ஏதுமில்லை. அவனுக்குத் தேவை நான்கும், ஆறும்தான்.

வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில் மூட்டை சிமிண்டை நானூறு ரூபாய்க்கு கொள்ளை விலையில் விற்பனை செய்யும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதால் அவன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். பேருந்து நிலையத்தில் கருப்பு வெள்ளை போர்டு பேருந்து வந்தால் ஓரிரு ரூபாய்களை மிச்சப்படுத்தலாம் என்று பொறுமையாக காத்திருக்கும் அவன், சென்னை அணியின் இன்றைய மதிப்பு மூவாயிரம் கோடி என்பதை அறியமாட்டான்.

விதர்பாவில் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்திருக்கும் விவசாயிகளின் மண்ணில் புனே அணி 1500 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்பதும், ஒரிரு ஆண்டுகளில் அந்த அணியின் முதலாளி அதைப் போல பலமடங்கு சுருட்டப்போகிறார் என்பதையும் அவன் அறிய மாட்டான். உலகப் பணக்காரர்களின் வரிசையில் அணிவகுக்கும் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன் அணிக்குச் சொந்தக்காரர்தான், தொழில் மோசடியில் நம்பர் ஒன் முதலாளி என்பது அவனுக்குத் தெரியாது.

ரப்பர் இறக்குமதியால் பால்வெட்டும் தொழிலாளிகள் பட்டினி கிடக்க, பாமாயில் இறக்குமதியால் தென்னை விவசாயிகள் காய்ந்து கிடக்க, தொழிலாளிகள் வரத்து இல்லாத்தால் கிராமப் புற டூரிங் தியேட்டர்கள் மூடப்படும் கேரள மண்ணில்தான் 1500 கோடிக்கு கொச்சி அணி வாங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு கேரள அணி இடம்பெற்றிருப்பதே அவனுக்கு கிடைத்திருக்கும் ஜன்மசாபல்யம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

ஆயினும் இந்த அழுக்கான இந்திய எண்களை விட ஐ.பி.எல்லின் அலங்காரமான ஃபோரும். சிக்ஸரும் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்றால், ஐ.பி.எல் மோசடிகளின் ஊற்று மூலம் உங்கள் பலத்தில்தான்.

இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. அடுத்து உலகக்கோப்பை ட்வெண்டி 20 போட்டி, சாம்பியன்ஸ் லீக், ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி என்று அடுத்த திருவிழாக்கள் வரப்போகின்றன. இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சிரிப்பாச் சிரிக்கிது சி.பி.எம் வேலை நிறுத்தம் !!

vote-012இந்தியாவில் நிலவி வரும் கடுமையான விலைவாசியை எதிர்த்து நாளை, ஏப்ரல் 27ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்தப்போவதாக போலிக் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்தன. தொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பான வேலை நிறுத்த அறிவிப்புகள் வரும்போது கோடநாடு எஸ்டேட் சென்று ஓய்வெடுக்கும் ஜெயா திடீரென இந்த வேலைநிறுத்த அறிவிப்பின் மேல் கரிசனம் கொண்டு இடது, வலது, மதிமுக போன்ற கட்சிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து, அவர்களும் அம்மாவிடம் மரியாதையாக நுனி சேரில் அமர்ந்து கொண்டு இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்ததாக நாளிதழ்களில் செய்தி பார்த்தோம்.

பொதுவாக இது போன்ற வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து, தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து, காப்பீடு மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனையை எதிர்த்து என அறைகூவல் விடப்பட்டு, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் தோழர்கள் அன்றைய தினம் ஒரு மறியல் என்பதையும் கூடுதலாக அறிவித்து, காலையிலேயே அரசுப்பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக திருமண மண்டபங்களில் கைது என்ற பெயரில் வைக்கப்பட்டு மாலை டீ பிஸ்கட்டுடன் விடுதலையாவார்கள்.

எந்த நிறுவனங்களின் மேல், எந்த அரசின் மேல் தொழிலாளர் வர்க்கத்திற்கு வருகிற நியாயமான கோபத்தை, வன்முறை நோக்கி சென்றுவிடாமல் பாதுகாத்து ஒரு நாள் சம்பள இழப்புடன் அத்தகைய போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்படும். இதில் பிரதான பங்கு வகிப்பது முறைப்படுத்தப்பட்ட அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்களின் செயலை சிறிதளவு முடக்கினால்தான் வேலை நிறுத்தம் வெற்றி என மறுநாள் அறிக்கை விட முடியும்.

ஆனால் சமீப காலங்களில் போக்குவரத்துக் கழகங்களில் பெருகிவிட்ட தொழிற்சங்க எண்ணிக்கையினால் அந்த தொழிலாளியின் பெரும்பகுதியினர் இது போன்ற வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கிளை மட்டத் தலைவர்கள் இது போன்ற வேலைநிறுத்தங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மாலை 6 மணிக்கு மேல் பேருந்து பணிக்கு சென்று அன்றைய தினத்திற்கு வருகைப் பதிவை பெற்றுவிடுவார்கள். ஸ்டைரைக்கிலும் கலந்த மாதிரி ஆச்சு, வேலைக்கும் போன மாதிரி ஆச்சு!

இத்தகையப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தோடு முடித்துக்கொண்டு டி.வி பார்க்க சென்றுவிடுவார்கள். மாநில ஆளும்கட்சி சார்பு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அன்றைய தினம் பேருந்துகளில் இரட்டிப்பு பணி பார்த்துவிடுவார்கள். அடுத்தநாள் ஆப்சென்ட் கணக்கு பார்த்தால் 1.5 லட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்களில் 14,340 பேர் ஆப்சென்ட் என கணக்கு வரும். அது அந்த மாத சம்பளத்திற்கு கணக்கு முடிக்கும் போது பார்த்தால் 8000 மாக குறைந்திருக்கும்.

பலர் முதல் நாள் டபுள் டியூட்டி வண்டிக்கு போய்வந்தேன் எனவே எனக்கு டியூட்டி ரெஸட், சிலர் நான் அவசர வேலையாக சென்றேன் என விடுப்பு மனு அனுமதி வாங்கி மொத்தத்தில் அப்பாவியாகிய 8000 பேருக்கு சம்பள இழப்பு ஏற்பட்டிருக்கும். இதையும் அம்மா ஆட்சி வந்தால் அய்யா காலத்து ஆப்சென்ட்களுக்கு சம்பளம் தரப்படும், அய்யா ஆட்சி வந்தால் அம்மா காலத்து ஆப்சென்ட்களை லீவாக மாற்றி சம்பளம் தரப்படும். சேது சமுத்திர ஆப்சென்ட் (அய்யா உண்ணாவிரதம் இருந்தது) மட்டும் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அம்மா தொடர்ந்த வழக்கு நிலுவையிருப்பதால் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

தற்போது அரசு ஊழியர்களின் 6 வது ஊதியக் குழு சம்பளம் அமுல் படுத்தப்பட்டு, அது போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மட்டும் அமுல்படுத்தப்பட்டு, மற்ற ஒன்றேகால் லட்சம் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் அது 27 சங்கங்கள் போடும் ஒப்பந்த வரம்பில் உள்ளதால் தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

இந்த பின்னணியில் தற்போது அறிவிக்கப்பட்ட 27ம் தேதி வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்களின் முடிவுகளைப் பார்ப்போம்.  சி.பி.எம் தொழிற்சங்கத்திற்கு போக்குவரத்தில் முதன்மையாக சென்னை, மதுரை, மற்றும் கோவையில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது போன்ற வேலைநிறுத்த அறைகூவல் வந்தவுடன் தடபுடலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு பறக்கும். அந்த கூட்டத்தில் பங்கு பெறும் சி.பி.எம் ஆதரவு வங்கி, போக்குவரத்து, அரசு ஊழியர், கூட்டுறவு, ஆவின், சிவில் சப்ளை போன்றவர்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்பார்கள்.

ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ் போன்ற சங்கங்கள் தங்கள் பேரவையை கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என கலைந்து செல்வார்கள். கடைசிவரை முடிவு சொல்ல மாட்டார்கள். இந்நிலையில் 17ம் தேதி மதுரையில் சி.ஐ.டி.யு மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.பத்மநாபன் தலைமையில் மதுரையில் கூடிய அவர்கள் சார்பு தொழிற்சங்கத்தினர் (பாசிச ஜெயா காலத்து ஒரு லட்சம் பேர் டிஸ்மிஸ்-ஐ மனதில் வைத்துக்கொண்டு), “15 நாள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க அவகாசம் இல்லை. மேலும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அன்று உள்ளது. எனவே அன்றைய தினம் அவரவர் ஆலைவாயிலில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்து முடித்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர். இப்படி கள்ளழகர் ஆத்துல இறங்குவதை வைத்து தோழர்கள் வேலைநிறுத்தத்திற்கு தண்ணி தெளித்துவிட்டனர்.

மற்றுமொரு சுவையான சம்பவம் என்னவெனில் சி.பி.எம் தலைமை ஜெயாவுடன் அவ்வப்போது உறவாட தயாரானாலும் அதன் தொழிலாளர் அணியினர் இன்னும் பழையவற்றை மறப்பதாக இல்லை. எனவே உள் அரங்க கூட்டங்களில் கொதிக்கின்றனர்.  இந்நிலையில் “மதுரையில் மட்டும் வேலை நிறுத்தம் இல்லை மற்ற மாவட்டங்கள் வேலைநிறுத்தம் செய்யுங்கள்” என்றால் போக்குவரத்துத் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க பொறுப்பாளர் என்ற பதவியுடன் சி.பி.எம்-லும் பொறுப்பில் இருப்பவர்கள் “மாஸ் கேசுவல் லீவு” என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதுதான் இந்தியாவையே முடக்கிப் போடும் சி.பி.எம்மின் பாரத் பந்தாம். ஒரு நாள் காலை 6 முதல் மாலை 6 வரை சம்பிரதாய வேலைநிறுத்தம் என்பதே பம்மாத்து வேலை. அதையும் மதுரை அழகர் பெயர் சொல்லி கேலிக்கூத்து ஆக்கிவிட்டார்கள் நமது போலி கம்யுனிஸ்ட்டுகள்.

தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கத்திலேயே சி.பி.எம் கட்சி இப்படி தில்லாலங்கடி வேலை செய்து வேலை நிறுத்தம் செய்வது போல நடிக்கிறது என்றால் இந்தியா முழுவதும் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இன்னுமா இந்த ஊரு இவுகளை கம்யூனிஸ்ட்டுன்னு கூப்பிடுது?

________________________________________________

-சித்திரகுப்தன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

கருணாநிதி கூட்டத்தில் தோழர்கள் முழக்கம்: தாக்கப்பட்டு படுகாயத்துடன் கைது!

vote-012பிப்ரவரி 19, 2009 ஆம் நாள் பலருக்கும் மறந்திருந்தாலும் அன்று நடந்த வழக்கறிஞர்கள் போலீசு மோதல் மறந்திருக்காது. ஈழப் பிரச்சினைக்காக  சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முழக்கமிட அன்று முழுநாளும் போலீசு வழக்குறைஞர்களை அடித்து நொறுக்கியது. இந்த காக்கிச் சட்டைப் பயங்கரவாதத்தில் நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே லத்திக்கம்புகளாலும், கற்களாலும் சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தைக் கண்டித்தும் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குறைஞர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இருப்பினும் இன்றுவரை எந்த போலீசு அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டாலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஏன்?

அரசாங்கத்தின் முக்கியமான துறையான போலீசை எந்த அரசும் விட்டுக்கொடுக்காது என்பதே காரணம். போலீசு என்ன தவறிழைத்திருந்தாலும் ஆட்சியையும், அதிகாரிகளையும் பாதுகாக்கும் விசுவாசமான நாய்கள் என்பதால் அந்த நாய்கள் நீதிபதியையே கடித்துக் குதறியிருந்தாலும் கருணாநிதி அரசுக்கு கவலையில்லை. எனவேதான் நீதிமன்ற உத்திரவைக்கூட நிறைவேற்றாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 25.4.2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரை.முருகன், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் முத்தாய்ப்பாக கருணாநிதி பேச ஆரம்பித்த போது தோழர்கள் முழக்கமிட்டனர்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குறைஞர்களான தோழர்கள், பெண்களையும் உள்ளிட்டு சுமார் பத்துபேர் ஏற்கனவே திட்டமிட்ட படி கருப்புக் கொடி ஏந்தி கருணாநிதி பேசும் போது முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் வழக்குறைஞர்களைத் தாக்கிய போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்க எடுக்க துப்பில்லாத கருணாநிதி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

முதல்வர் கூட்டத்திலேயே எதிர்ப்பா என்று வேடிக்கை பார்ப்பதற்காக அழைத்து வரப்பட்ட தி.மு.கவின் குண்டர்கள் உடனே தோழர்கள் மீது அடிக்கப் பாய்ந்தனர். போலீசு வேடிக்கை பார்த்தவாறு அனுமதி கொடுத்தது. முழக்கமிட்ட தோழர்களை இழுத்து வந்து வெளியே ஆசை தீர அடித்து இரசித்தது அந்த கும்பல். குறிப்பாக தோழர் பார்த்தசாரதி இதில் படுகாயமடைந்தார். எனினும் தோழர்கள் தங்களது முழக்கத்தையும், பிரச்சாரத்தையும் விடவில்லை.

பெரிய பெரிய வழக்குறைஞர் சங்கங்களும், மற்ற முற்போக்கு, தமிழனவாத வழக்குறைஞர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் நலனுக்காக தோழர்கள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். இப்படி அடிபடுவோம் எனத் தெரிந்துதான் தோழர்கள் இந்தக் கலகத்தில் ஈடுபட்டனர். அதன்படி அந்த நோக்கமும் நிறைவேறியது.

அடிபட்ட தோழர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தோழர்கள் அடிபடும்போது வேடிக்கை பார்த்த போலீசு பின்னர் ஆறு தோழர்களை பல பிரிவுகளில் வழக்குப்போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. தலையில் தையல்போட்ட நிலையில் தோழர்கள் இப்போது சிறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்கள் மூட்டிய நெருப்பு எப்படியும் பரவி உயர்நீதிமன்றத்தில் ஆட்டம்போட்ட போலீசு அதிகாரிகளை நிச்சயம் தண்டிக்கும்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைத் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!

அன்பார்ந்த நண்பர்களே,

vote-012மே நாள்! தொழிலாளி வர்க்கம் தமது உரிமைகளைப் போராடி வென்ற நாள். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணிநேரம் உழைக்க வேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவுதான்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் வெகுண்டெழுந்தார்கள் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள். இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள். சிவந்தது சிகாகோ வீதி. அந்த சிவந்த மண்ணிலிருந்து மே நாளில் முளைத்ததுதான் 8 மணிநேர வேலை, 8 மணி நேர குடும்ப சமூகப்பணி,  8 மணி நேர உறக்கம் என்கிற உரிமை. அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகத்தையும் பற்றிக் கொண்டது அந்தப் போராட்டத் தீ. அதன்பின் சிகாகோவின் வெற்றி உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாக நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இன்றோ, பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது தொழிலாளி வர்க்கம். கையில் செல்போன், கடன் வாங்கிக் கட்டிய வீடு, எந்நேரமும் பிடுங்கப்படலாம் என்கிற நிலையில் உள்ள இரு சக்கர வாகனம் இவற்றையெல்லாம் காட்டி தொழிலாளி வர்க்கம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக ஆளும் வர்க்கமும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றன. ‘முன்னேற்றம்’ என்கிற மயக்கத்தில் உரிமை என்கிற உணர்வு மறக்கடிக்கப்படுகிறது.

உலகமயமாக்கத்தின் இன்றைய விளைவாக 20 மணிநேரம் வரைக்கூட உழைக்க வேண்டியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கக் கூடத் தடை விதிக்கிறது, முதலாளித்துவ அடக்குமுறை. கால் மணிநேரத்திற்கு மேல் சாப்பிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற பின்தங்கிய மாநிலத் தொழிலாளர்கள் ஓய்வு, உறக்கம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் தானியங்கி எந்திரமாகவே மாற்றப்பட்டு விட்டார்கள்.

கொள்ளுப் பையைக் காட்டி,  குதிரையை ஓட வைப்பதைப் போல தாலியைக் காட்டி இளம் பெண்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் உறிஞ்சும் ‘சுமங்கலித் திட்டம்’ இலட்சக்கணக்கான ஏழை இளம் பெண்களைக் கொத்தடிமைகளாய் பிணைத்து போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி, வேலைக்கும் சம்பளத்திற்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூலி அடிமைகளாய் இன்று கோடிக்கணக்கில் தொழிலாளர்கள். உலகையே தனது வியர்வையால் கட்டியெழுப்பிய தொழிலாளி வர்க்கம், இன்று பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது. விலையுயர்வுக்கேற்ப சம்பள உயர்வு, மருத்துவப்படி, போனஸ், ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை போன்று போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க சங்கம் அமைக்கக் கூட உரிமையில்லை. மொத்தத்தில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் சுனாமிபோல் சுருட்டி 124 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு இழுத்து தள்ளிவிட்டது முதலாளித்துவ பயங்கரவாதம்.

தொழிலாளர்களோ, புதிதாக எதையும் உரிமையாக கேட்கவில்லை. ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகளான சங்கம் கூடும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை இவற்றுக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சங்கம் வைக்க தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. குறிப்பாக சென்னையில் உள்ள தென்கொரிய நாட்டு ஹுண்டாய் கம்பெனியில் சி.ஐ.டி.யு. சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் பு.ஜ.தொ.மு. செயல்படும் புதுச்சேரி லியோஃபாஸ்ட்னர்ஸ், மெடிமிக்ஸ், பவர் சோப், சென்னை நெல்காஸ்ட், கோவை எஸ்.ஆர்.ஐ., உடுமலை சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் போன்ற கம்பெனிகளிலும் சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கூறிய கம்பெனிகளில் சங்கம் வைத்ததற்காகவே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆலைமூடல், அடியாட்கள்  மூலம் கொலை மிரட்டல், போலீசை ஏவி பொய் வழக்கு  சிறை வைப்பு என அடுக்கடுக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல, விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்து பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது. விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் விதைகளையும், விவசாயம் சார்ந்த அனுபவ அறிவையும் பயன்படுத்த தடை விதிக்கும் “தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம்” என்னும் கொடிய சட்டமும், அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்று விதைகள் போன்றவற்றை எதிர்ப்போரை ஓர் ஆண்டு சிறையில் தள்ளவும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் “உயிரி தொழில் நுட்பவியல் ஒழுங்காற்று ஆணைய சட்டம்” என்னும் கருப்பு சட்டமும் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

பன்னிரண்டு கடல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என சட்டமியற்றி மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு வழக்குரைஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என சட்டமியற்றி வழக்குரைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைகழக மசோதா நிறைவேற்றப்பட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல கோடி மதிப்புள்ள கனிவளங்களுக்கு பாதுகாப்பாய் இருந்து வருகிறார்கள் பழங்குடி மக்கள். போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பெனிகள் அந்த தாதுப்பொருட்களையும் கனிவளங்களையும் கொள்ளையடிக்க அப்பழங்குடிகள் மீது “காட்டு வேட்டை” எனும் பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் துணை இராணுவ வீரர்களை ஏவி அம்மக்களின் வாழ்வுரிமையும், உயிரும் பறிக்கப்படுகிறது.

தங்களின் வாழ்வுரிமை, பறிப்புக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் தனித்தனியாக போராடுகின்றனர். போராடும் அம்மக்கள்மீது போலீசு மற்றும் இராணுவத்தை ஏவி கொடூரமான யுத்தம் நடத்தப்படுகிறது. அதாவது பன்னாட்டு முதலாளிகள் நம் விவசாயத்தையும், விளைநிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், நமது கடல் வளங்களை அள்ளிச் செல்லவும், காடு மற்றும் கனிவளங்களை கொள்ளையடிக்கவும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது, மத்திய  மாநில அரசுகள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அந்த மக்களின் மீது போர் தொடுக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்றவைகளின் உத்தரவுப்படியே மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டு கட்சிகளும், ஊடகங்களும் மூச்சு விடுவது இல்லை. காரணம் கொள்ளையடிக்கும் பணத்தில் ஓட்டுக் கட்சிகளுக்கும், ஊடக முதலாளிகளுக்கும் வாய்கட்டுப் போடுகின்றன பன்னாட்டு கம்பெனிகள்.

தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிப்பது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் உள்நாட்டு முதலாளிகளின் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை மாற்றுவது, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பது, எதிர்த்து போராடும் மக்களை வாழ்விடங்களிலிருந்தே விரட்டியடிப்பது, நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது, இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். வாழ்வுரிமையை இழந்து போராடும் மக்கள், நாடு மறுகாலனியாகிறது  நமது பிரச்சினைகளுக்கு அதுதான் காரணம் எனப் புரிந்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மக்களுக்கு புரிய வைப்பதும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை. ஏனெனில் தனது நலனுக்காக மட்டுமின்றி, பிற வர்க்கங்களின் நலனுக்காகவும் போராடும் மரபை கொண்டது தொழிலாளி வர்க்கம்.

அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து நாட்டையே அடிமையாக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக போலீசு, இராணுவம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. ஆனால் உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கோ, தங்களை போல் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு போராடும் பிற மக்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதும், சிதறி கிடக்கும் தொழிலாளர்களை அமைப்பாக அணிதிரட்டுவதையும் தவிர வேறுவழியில்லை. ஒற்றுமை உணர்வும் ஓங்கிய கைகளும் தோற்றதாக வரலாறு இல்லை. தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!

____________________________________________________________

அறிமுகப் பிரசுரம் மென்நூல் (PDF)

நிகழ்ச்சி நிரல் பிரசுரம் மென்நூல் (PDF)

____________________________________________________________

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி
துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:
முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

__________________________________________________

மே நாள் சூளுரை!

· தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

· போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!

· முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

· போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!

· நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!

· புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!

___________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

______________________________________________________

வாசகர்களும், பதிவர்களும் இந்த மே தின நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறோம். சென்னையில் உள்ள நண்பர்கள் வினவுத் தோழர்களுடன் சேர்ந்து வரலாம். காலை ஒன்பது மணி அளவில் கிளம்பி புதுச்சேரி சென்று, ஊர்வலம், பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் முடிந்த உடன் சென்னை திரும்பலாம். தொழிலாளி வர்க்க தினத்தில் பங்கேற்பதன் மூலம் நமது சமூக வாழ்க்கை தொடங்கட்டும்.

வாருங்கள், நாம் வென்று காட்டுவதற்கு ஒரு உலகம் அழைக்கிறது !
அதை
செய்து காட்டுவதற்கு ஒரு வாழ்க்கையும் இருக்கிறது !!

தொடர்புக்கு: வினவு – 97100 82506

______________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

இலக்கிய அறிமுகம் – 3 லங்ஸ்ட்டன் ஹ்யூஸ் (1902–67)

அமெரிக்க கருப்பின மக்களின் மகாகவி என கருதப்படுகிறவரான ஹ்யூஸின் கவிதைகள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் பண்பாட்டின் செழுமையை அடையாளப்படுத்துவன. இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர். கவிதையின் உள்ளடக்கம் பற்றிய அக்கறையற்றவர்கள் கூட அவரது கவிதையின் அழகியல் பண்புகளை மெச்சுவோராக இருந்துள்ளனர்.

அதே வேளை கவிதை என்பதை சிக்கலானதும், சாதாரண மனிதரின் வாசிப்பிற்கு பிடிபடாததாயும் இருக்க வேண்டுவோருக்கு அவரது கவிதைகள் படு சராசரியானவையாகத் தோன்றின. முதலாளி வர்க்க நவீனத்துவ அளவுகோல்களைப் பற்றிய அக்கறை இல்லாது தனது சமூக அக்கறையை வெளிப்படுத்துகிற நோக்கில் மட்டுமே ஹ்யூஸ் தனது கவிதைகளைப் படைத்தார்.

பத்தொன்பதாவது வயதில் தனது முதல் கவிதையை பிரசுரித்த ஹ்யூஸ் படித்த நடுத்தர வர்க்க கருப்பின பின்னணியில் பிறந்து வளர்ந்தவர். தொடக்க காலத்திலிருந்தே கருப்பு அமெரிக்கர்கட்கு எதிரான கொடுமைகளையும் இனப் பாகுபாட்டையும் அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை வெளிப்படுத்தின. அவருடைய கவிதைகளில் கருப்பின மக்களின் இசையின் செல்வாக்கு பலவாறாகவும் தன்னை வெளிப்படுத்தியது.

1930 க்குப் பின்பு அவர் தன்னை ஒரு இடதுசாரியாக அடையாளப்படுத்துகிறார். 1940 தொட்டு அமெரிக்காவின் FBI (மத்திய அரசின் போலிசு விசாரணை நிறுவனம்) அவர் கம்யூனிஸ்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வந்தது. அவர் என்றுமே கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருக்கவில்லை என்று கூறிவந்த போதும், 1944 முதல் “அமெரிக்கருக்குத் தகாத” (Un-American) செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது பல்வேறு மட்டங்களிலும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

வலதுசாரி அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் இலக்கு வைக்கப்பட்ட ஹ்யூஸ் 1953 ஆம் ஆண்டு அமெரிக்க சனநாயக மறுப்பின் உச்சகட்டமாக விளங்கிய “மக்கார்த்தி” யுகத்தின்போது மக்கார்த்தி குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு சட்டப்படி பணிக்கப்படுகிறார். தான் இடதுசாரி கிளர்ச்சிப் போக்குடைய “தவறுகளைச்” செய்ததாக ஒப்புக்கொள்ளும் ஹ்யூஸ் தன் நண்பர்கள் எவரையும் காட்டிக் கொடுக்க மறுக்கிறார். அவரை மக்கார்த்தி குழு குற்றமற்றவர் என்று விடுவித்தாலும் அவருக்கெதிரான வலதுசாரி தாக்குதல்கள் தொடர்ந்தன.

அதன்பின்பு தன்னை வெளிவெளியாக ஒரு கம்யூனிஸ்டு அனுதாபியாகக் காட்டிக் கொள்வதை ஹ்யூஸ் தவிர்த்தாலும், கருப்பு இனத்தவரின் விடுதலை பற்றியும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் அவருடைய அக்கறை வலுவானதாகவே இருந்து வந்தது. அமெரிக்க கருப்பின மக்களின் சிவில் உரிமை இயக்கத்திற்கு ஆதரவு வழங்கிய ஹ்யூஸ் மிதவாத போக்கை ஆதரித்து வன்முறையை நிராகரிக்கிறார். ஹ்யூஸின் மிதவாத அணுகுமுறையின் விளைவாக அவரை அமெரிக்க அதிகார நிறுவனமும், இலக்கிய மேட்டுக்குடிகளும் ஏற்க முன்வருகின்றனர். எனவே நமக்கு அறிமுகமான ஹ்யூஸின் இடதுசாரி அடையாளம் அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்துவோரது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும் மிகவும் மழுங்கடிக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகிறது.

25,000 வரிகளுக்கு மேல் விரியும் பலவாறான கவிதைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஐந்து புனைகதை தொகுப்புகள், ஒரு நாடகப் பிரதி, மூன்று கருப்பின வரலாற்று நூல்கள், சிறுவர் நூல்கள் என்பன உட்பட 36 நூல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹ்யூஸை ஒரு சில ஆக்கங்களைக் கொண்டு அடையாளப்படுத்த இயலாது. கவிஞர் என்ற வகையிலும் அவருடைய ஆளுமையின் வீச்சு விசாலமானது. எனவே அவருடைய சமூக அக்கறைகளைச் சுட்டிக்காட்டும் கவிதைகட்கும் முக்கியமாக நம்மிடமிருந்து மறைக்கப்பட்டு வரும் வலுவான இடதுசாரி அடையாளத்தைப் புலப்படுத்தும் கவிதைகட்கும் என்னுடைய தெரிவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அவரது கவிதைகள் தொடுகிற விசாலமான பரப்பை இங்கு தரப்பட்டுள்ள சில கவிதைகளால் சரிவர அடையாளப்படுத்த இயலாது என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

_______________________________________________

மாஸ்கோ

விடியலின்
மின்னும் வெள்ளி மகோன்னதத்தில்
அலைகின்ற
செங்கொடிகள் இங்கே-
செத்தொழிந்த கடந்த காலத்திடம்
மன்னிப்புக் கோராத
செங்கொடிகள். (1938)

___________________

மாநகர் (சிறுவர்க்கான கவிதை)

காலையில் மாநகர்
பாடுகின்ற பாறையில்
பாடல் ஒன்று செய்து
தன் சிறகினை விரித்திடும்.

மாலையில் மாநகர்
தன் தலையைச் சூழ்ந்திட
விளக்குகளைத் தொங்க விட்டு
தூங்குவதற்குச் சென்றிடும்.

______________________

ஒடுக்குமுறை

இப்போது
கனவுகள் காண்போருக்கு
கனவுகள் கிடைப்பதில்லை
பாடுவோருக்கு
பாடல்கள் கிடைப்பதில்லை.

சில மண்களில்
இருண்ட இரவும்
குளிர்ந்த எஃகுமே
ஓங்கி நிற்கின்றன
எனினும்
கனவு திரும்ப வரும்
பாடலுந்தான்.
அதன் சிறையை
நொறுக்கி விட்டு. (1947)

_______________________________

சேரிக் கனவுகள்

தண்டுகள் இல்லாததால்
ஊட்டமளிக்க வேர்களின்றி
இளவேனிலின் சிறு கனவுகள்
காற்றினில் அரும்புகின்றன.
உறவின்றி
அப்பாவித்தனமாக
மிக இளையன் போல
காற்றில் மட்டுமே
அவை தொற்றிக் கிடக்கின்றன. (1964)

___________________________________

அகதித் தெருவின் பாடல்

அகதித் தெருவே ! அகதித் தெருவே !
இங்கிருந்து நான் எங்கே போவேன் ?
கால்கள் களைத்திட வீதி கனக்குது !
அச்சம் எந்தன் நெஞ்சை நிறைக்குது !
வெகு தொலைவின் நான் விட்டுப் பிரிந்தவை-
வீடு எங்குமில்லை !
தொல்லையின் இருண்ட காற்று மனத்தோடு முனகும்-
அக்கறை காட்ட எவருமே இல்லை !
கசப்பு மிகுந்ததென் கடந்த காலம் !
நாளை – என்ன இருக்கிறது ?

அகதித் தெருவே அகதித் தெருவே
அகதித் தெருவின் வழியே நடந்து
இங்கிருந்து நான் எங்கே போவேன் ?
பிச்சை கேட்பேனோ ? களவு செய்வேனோ ?
பொய்யுரைப்பேனோ ? மண்டியிடுவேனோ ? அல்லது
போராற் சோர்ந்த செவிட்டு ஆடென
நெடுஞ்சாலை வழி அலைந்து அழுவேனோ ?
உலகந்தான் என் மன்றாடலைக் கேட்குமோ ?

போரின் தேவுகள் முழங்கி உறுமும் சீனத்தினின்று.
சுதந்திரம் ஒழித்த இருண்ட மண்கள் அனைத்தினின்றும்.
ஒளியினதும் மகிழ்வினதும் மாநகரம் வியன்னா –
ஒருகால் வால்ற்ஸ்  நடனக் களிப்பு மிக்கது,
இப்போது சோகத்தின் தலை கவிழ்ந்துள்ளது.
தனது உல்லாசம் பறிக்கப்பட்டு இருண்ட எத்தியோப்பியா
எஃகின் விதைகளை வெடிகுண்டுகள் மண்ணுள் விதைக்கும் ஸ்பெயின்
நாளையை ஒளியூட்டும் சுதந்திரச் சிலையே
பார் ! என் துயரங்கட்காக மனமிரங்கு:
வீடு எங்குமில்லை, அக்கறை காட்ட எவருமில்லை !
கசப்பு மிக்கதென் கடந்த காலம் !
நாளை – என்ன இருக்கிறது ?
அகதித் தெருவே ! அகதித் தெருவே !
அகதித் தெருவின் வழியே நடந்து
இங்கிருந்து நான் எங்கே போவேன் ? (1940)

_______________________________________________

புரட்சியின் பாட்டு

புரட்சியின் பாட்டொன்றை எனக்காக
புரட்சியின் பாட்டொன்றை நீ பாடு

உலகம் முழுவதும் பெருந்தீ போல்
பரவிட விரியும் புரட்சியிது
மண்ணில் இருந்தொரு செங்கொடியை – மக்கள்
கைகளில் விரிந்திடச் செய்திடுமோர்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

முடிந்ததோர் காலம் அமிழ்ந்தழிய
இளமையுஞ் சிரிப்பும் வலிமை தர
ஐயத்தின் சாயல் அறவொழிய
இடியென ஒலி மிகக் கூவியெழும்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

பன்னூற்றாண்டின் போர் அழிவும்
மன்னர்கள் பொய்யர்கள் வஞ்சனையும்
புது நல வாழ்வின் தகையினிடை
முடிவுறப் பேரலையாய் உயரும்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

கரு நிற இனத்தவர் தளை அகல
பிணித்திடும் விலங்குகள் உடைந்து அற
மனிதரைப் பிரிக்கும் மதில்கள் விழ
கொடுமையின் தேவுகள் கதிகலங்க

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

மானுடப் பிறவியின் சிறு வயதோர்
மகிழ்வுடன் முடிவினில் துயில் எழவும்
மருத்துவர் கரத்தினில் அலசினைப் போல்
பயங்களைத் துணிக்கும் தீச்சுடராம்

(புரட்சியின் பாட்டொன்றை .. .. )

________________________________________

–          சி.சிவசேகரம்

பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!

50

vote-012‘‘ஆத்திரந்தான் தாங்க முல்ல(முடியல)….. ஆனா அறிக்கைக்கு மேல் தாண்ட முல்ல,”’’ மக்கள் கலை இலக்கியக் கழகம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் கடந்த கால அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக வெளியிட்ட பாடல் ஒலிப்பேழையின் ஒரு பாடலில் இப்படியான வரிகள் வரும். இன்றைய கருணாநிதியின் ஆட்சியிலும் தமிழ் தேசியவாதிகளின் நிலை இதுதான். இனி எவரேனும் ஈழம் தொடர்பாக ஆவேச அறிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ செய்தால் ஆயுட்காலம் வரை சிறையில் தள்ளுவோம் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரும் என்றால் இவர்கள் அறிக்கை விடுவதையும் நிறுத்தி விடுவார்கள். இதுதான் இன்றைய திராவிட, தமிழ் தேசிய. ஈழ ஆதரவாளர்களின் நிலை.

ஆறு மாத கால மருத்துவ விசா பெற்று சென்னை வந்த பிராபகரனின் தாயார் பார்வதியம்மாளை, தமிழக போலீசின் துணையோடு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். அனுப்பியவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்று கருணாநிதி ஆதரவாளர்களும், “இல்லை இல்லை கருணாநிதிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது” என்று ஈழ ஆதரவாளர்களும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் எண்பது வயது முதிய தாய் இப்போது தற்காலிக விசாவில் மலேசியாவிற்கு விரட்டப்பட்டிருக்கிறார். விரைவில் அவருக்கான விசா காலம் முடியும் போது, அவர் விண்ணப்பித்திருக்கும் கனடா நாட்டிற்கான விசாவும் மறுக்கப்படும் நிலையில் மீண்டும் அவர் கொழும்புவுக்கே திரும்பக் கூடும். அப்படித் திரும்பினால் சிங்கள பாசிச பேரினவாத இலங்கை அரசு அவரை  மீண்டும் முகாம்களுக்குள் முடக்கக் கூடும். அல்லது முகாம்களிலிருக்கும் மக்களின் அவலம் பற்றிய பேச்சு புதிதாக எழாமல் இருக்க அவர் கனடாவுக்கு அனுப்புவதும் நடக்கலாம். இல்லை அவரை வைத்து புலம் பெயர்ந்த மக்களிடம், புலிகள் மீண்டு வரும் பேச்சுக்கள் எழலாம் என்றால் இலங்கையிலேயே முடக்கலாம்.

____________________________________________________

பார்வதியம்மாளை வைத்து நடத்தப்பட்ட ஐ.பி. எல் மேட்ச்:

பார்வதியம்மாளை வைத்து மேலாதிக்க இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான பிழைப்புவாத மாநில அரசும், நெடுமாறன், வைகோ முதலான அட்டைக் கத்தி வீரர்களும் நடத்திக் கொண்டிருக்கும் விளையாட்டின் தொடக்கப்புள்ளி பிரபாகரனது தந்தை வேலுப்பிள்ளையின் சவ அடக்கத்தில் இருந்து துவங்குகிறது. ரகசிய தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இறந்த போது நெடுமாறன், வைகோ, திருமா என எல்லா தமிழின ஆர்வலர்களும் அறிக்கை விட்டனர். ஆனால் போரின் போது ஜெயலலிதா, கருணாநிதி என்று பிரிந்து நின்ற ஈழ ஆதரவாளர்களிடையே யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி இருந்தது.

திருமா அறிக்கை விடுவதை விட அதிக பட்சமாக தனது தி.மு.க ஆதரவு எம்.பி பதவியைப் பயன்படுத்தி வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே பார்வதியம்மாளோடு அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பார்வதியம்மாளை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று அவரது நண்பர்களான இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இங்கே வந்து பார்வதியம்மாளை சந்தித்த அனுபவம் பற்றி பக்கம் பக்கமாக ஜுனியர் விகடனில் உருகி எழுதினார். அதில் “கனடாவில் வந்து பிரபாகரன் தன்னைச் சந்திப்பாரென” பார்வதியம்மாள் சொன்னதாக எழுதினார். திடமான சிந்தனையோடு அவர் இருப்பதாகக் கதைத்தார். பின்னர் அதே தொடரில் அவரிடம் தடுமாற்றம் இருந்ததாகவும் எழுதினார். ஆனால் ராஜபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தும் போது திருமா தடுமாறவில்லை என்பது முக்கியம்.

திருமா போய் பார்வதியம்மாளை சந்தித்து ஸ்கோர் செய்வதை  பொறுக்க முடியாத கலிங்கப்பட்டி சிங்கமோ, “பார்வதியம்மாளை அழைத்து வந்து என் தாய் போல பார்த்துக் கொள்ளப் போவதாக” முழங்கினார். சாதாரண போராளிகளைப் பெற்ற மக்களெல்லாம் முகாமில் என்ன ஏதுமென்றே தெரியாமல் சாகும் போது கூட சிங்கம் தனது கர்ஜனையை விடவில்லை. கடைசியில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தின் முயற்ச்சியில் பார்வதியம்மாள் இலங்கையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். மலேசியா சென்றார்கள். கனடாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்த போது கனடா பார்வதியம்மாவுக்கு விசா மறுத்தது.

பின்னர் இந்தியாவுக்கு விசா கேட்டு முயற்ச்சித்த போது ஆறு மாத மருத்துவ விசா வழங்கியது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம். இது யாரோ ஒரு குமஸ்தாவின் தவறினால் கூட கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். தகவல் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும்  தெரிவிக்கப்பட, அவர்கள் பார்வதியம்மாளை வரவேற்க இரவு பத்து மணிக்கு மேல் இரகசியாமாக சென்னை விமானநிலையத்திற்குச் சென்றார்கள். ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பே விமான நிலையத்தின் வெளிப்பகுதியையும், பார்வையாளர் பகுதியையும், வரவேற்ப்புப் பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை புறநகர் போலீசா கொண்டு வந்திருந்தனர்.

தலைவர்கள் எவரும் பார்வதியம்மாளை நெருங்க விடாமல் தடுத்த போலிசார், பார்வதியம்மாளையும் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். நெடுமாறனும், வைகோவும் அழைக்கச் சென்றது பிரபாகரனின் தாயாரை. இவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை? “பார்வதியம்மாள் வருகிறார், வரவேற்க வாருங்கள்” என்றிருந்தால் கூட சில ஆயிரம் பேர் திரண்டிருப்பார்களே! தனியாகச் சென்று இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் தொடங்கி தமிழக மக்களின் அரசியல் எழுச்சியை எத்தனை முறை காயடித்த இவர்கள் பார்வதியம்மாளுக்கு செய்தது  இறுதிக்கால உதவியா? அல்லது கையாலாகாதத்தனமா?

இந்தியாவில் சில அதிகாரிகள் மற்றும் டெல்லித்தலைவர்களை வைத்து ஈழத்தை நைசாக தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கணக்குப் போட்டவர்களல்லவா! அத்தகைய லாபி வேலைகள் காயடிக்கப்பட்டாலும் அதை ஒத்துக்கொள்ளாத வீரர்கள் எந்தக் காலத்திலும் தமிழக மக்களைச் சார்ந்து போராடியதில்லை. இங்கு கூட பார்வதியம்மாளின் வருகையை வைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அப்படிச்செய்தால் இந்திய அரசு அந்த அம்மாளை திரும்ப அனுப்பிவிடும் என்றே இவர்கள் யோசித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களை மன்றாடி, தாஜா செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்பதுதானே முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்தது?

___________________________________________________

சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்….

காரணம் – 1

2003இல் தமிழகத்தை விட்டு பிரபாகரனின் பெற்றோர் சென்ற போது அவர்கள் திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய புலனாய்வுத்துறைக்கு ஜெயலலிதா எச்சரிக்கைக் கடிதம் எழுதியவுடன் பார்வதியம்மாளின் பெயரையும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்து விட்டது இந்திய அரசு. அதனால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது கருணாநிதியின் வாதம்.

காரணம் – 2

செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணம். அதற்காக விரைவில் அன்னை சோனியாவை சந்திக்கப் போகிறார் அய்யா. இந்த நேரத்தில் அதுவும் நெடுமாறன், வைகோ மூலமாக வரும் பார்வதியம்மாளை இங்கே அனுமதித்து ஏதாவது ஒன்று ஆகிப்போனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத இன்னொரு தலைவலியை சந்திக்க நேரிடும், என்று கருணாநிதியே தமிழகத்தில் சிகிச்சை அளிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இது ஈழ ஆதவரளார்களிடையே சொல்லப்படும் காரணம்.

இந்த இரண்டு காரணங்களுமே உண்மையானவைகளாக இருக்கும் எல்லா சாத்தியங்களோடுதான் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைமைகளும் இயங்குகின்றன. இந்த இரண்டு துரோக, வஞ்சக தலைவர்களின் அடிவருடிகளாக மாறிப் போன ஈழ ஆதரவாளர்களின் நிலையைப் பாருங்கள். முத்துக்குமாரின் மரணத்தின் போது ஜெ-வின் மனம் புணபடக்கூடாது  என்று நினைத்த வைகோ இந்த விஷயத்திலும் கருணாநிதியைத் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். இன்னொரு ஈழ நடிகரான திருமாவோ கருணாநிதிக்கு இதில் தொடர்பில்லை எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு என்று பதறிப்போய் அறிக்கை விடுகிறார். அதையே கி.வீரமணியும் கருணாநிதியின் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீர் ஈழத் தயாக மாறிய ஜெ இப்போது கொடநாட்டில் செட்டிலாகிவிட்டார். கடிதம் எழுதாமல் கூட இவர்களை ஏமாற்றலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணாநிதியோ பார்வதியம்மாள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதை பரிசீலித்து மத்திய அரசுக்கு வழக்கம் போல் கடிதம் எழுதத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

போருக்குப் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் முதியவர்களின் கதை பரிதாபகரமானது. பலரும் நந்திக்கடலில் தங்கள் குடும்பத்தின் முதியவர்களை விட்டு விட்டு வந்த பரிதாபக் கதைகளும் உண்டு. பேரினவாத இலங்கை அரசு தமிழ் மக்களுக்காக அமைத்த வதை முகாம்களில், முதல் மூன்று மாதங்களின் சராசரியாக வாரம் ஒன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று தெரியாத பல முதியவர்கள் இப்போது நல்லூர் கந்தசாமிக் கோவில் வாசலிலிலும், யாழ்பாணத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டூரிஸ்டுகளாக வரும் சிங்களர்களிடம் கையேந்தி நிற்கும் ஈழத் தமிழ் முதியவர்கள் குறித்தோ, போரில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மக்கள் குறித்தோ பேசாத தமிழ் தேசியவாதிகள், பார்வதியம்மாளுக்காக பேசுவது அவர் பிரபாகரனின் தயார் என்பதால்தான். அதனால்தான் பார்வதியம்மாளை அபகரித்து தாங்கள் பேணுவதன் மூலம் தங்கள் மீது விழுந்துள்ள கறைகளைக் கழுவ நினைக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு தாங்களும் ஒரு காரணமென்று அதாவது புலிகளுக்கு தமிழகத் தேர்தலை வைத்து நம்பிக்கையூட்டியவர்கள், பா.ஜ.கவும், ஜெயாவும் வந்தால் கூட அதே முடிவுதான் என்பதைக்கூட ஏற்காத புத்திசாலிகள் இப்போது பிரபாகரனது அம்மாவை வைத்து தங்களது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

_____________________________________

அரசியல் நேர்மையின்மை

பிரபாகரன் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் விரைவில் வெடிக்கும் என்று அவ்வப்போது அறிக்கை விடுவதுதான் நெடுமாறனின் அரசியல் அஜெண்டா. “கடைசி வரைப் போராடி களத்தில் நின்று போராளிகளும் பிரபாகரனும் மடிந்தார்கள்” என்று  எழுதினால்கூட துரோகி என்கிற இவர்களிடம், “பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார்” என்று கேட்டால், “அதற்குத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்” என்று துவக்கத்தில் சொன்னவர்கள், இப்போது “பிரபாகரன் தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்கிறார், அவர் நேதாஜியை நேசித்தார், நேதாஜி போலதான் அவரும்” என்று அடுத்த ஏமாற்று தந்திர அஸ்திரத்தை ஏவுகிறார்கள்.

ஈழ மக்களின் நிராதரவான வாழ்வு பற்றிய மவுனம், பிரபாகரன் வருவார் என்று அவருக்கும் போராளிகளுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக்கூட வழங்காமை என்று புலிகள் ஆதரவுக் கண்ணோட்டத்தின்படியே கூட ஒட்டு மொத்த அரசியல் வீழ்ச்சிக்கே இவர்கள்தான் காரணம். பத்தாம் பசலித்தனமான இவர்களின் நடவடிக்கையைப் புரிந்து கொண்ட இந்திய அரசோ, இவர்களை டீல் செய்வது ஈஸி என்று ஏகத்துக்கும் ஆட்டம் காட்டுகிறது. பாவம் அறிக்கையைத் தாண்டி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தங்கி நிற்கிறார்கள் அறிக்கை நாயகர்கள்.

இந்திய ஆளும் வர்க்கங்களை நம்பித்தான் ஈழத்தின் தலைவிதி இப்படியான துயர நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதில் பாதி பங்கு புலிகளுக்கும், மீதி பங்கு அவர்களின் குத்தகை ஆதரவாளர்களான இந்த அறிக்கை நாயகர்களுக்கும்தான் சேரும். தமிழக மக்களை அரசியல் எழுச்சி மூலம் அணிதிரட்டி டெல்லியைப் பணியவைக்கலாம் என்ற நம்பிக்கை அற்ற புரோக்கர் அரசியல்வாதிகள் பார்வதியம்மாள் என்ற மூதாட்டிக்கு மட்டும் எப்படி சிகிச்சை வழங்க முடியும்? முதலில் எல்லாவகை நோய்களையும் கொண்டு அரசியல் நடத்தும் இந்த அறிக்கை நாயர்களை தமிழக மக்களும், ஈழ மக்களும் கண்டு கொள்ளவேண்டும்.

__________________________________________

டோண்டு ராகவனின் திமிர் பற்றி…….

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய செயலை பதிவுலகில் அனைவரும் கண்டிக்கும் போது அக்மார்க் பார்ப்பனரான டோண்டு மட்டும் அதை ஆதரித்து சோவின் குரலைப் பிரதிபலிக்கிறார். இங்கே டோண்டு ராகவனை பதிவுலகில் பலரும் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களது கண்டிப்பில் கூட அரசியலுக்குப் பதில் ஒரு முதிய மூதாட்டியைக் கூட மனிதாபிமானம் இல்லாமல் டோண்டு வெறுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் டோண்டுவுக்கு மனிதாபிமான ரீதியான வெறுப்பு இப்போதா புதிதாக வந்திருக்கிறது?

அவர் பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இசுரேலைப் புகழ்கிறார். குஜராத்தில் இந்துமத வெறியர்கள் மோடி தலைமையில் முசுலீம் இன மக்களைப் படுகொலை செய்த போது மோடியை ஆதரிக்கிறார். டாக்டர் ருத்ரன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறார் என்பதால் அவரை மனநலமற்ற மருத்துவர் என்று இழிவாகப் பேசுகிறார். ஓட்டல் தொழிலாளிகள் சலிப்பாக வேலை செய்தால் பாய்ந்து பிடுங்குகிறார். நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரிக்கும் போது பெரியார் மணியம்மை திருமணம் பற்றி நரித்தனத்துடன் எழுதுகிறார். இப்படி எல்லா சமூகப் பிரச்சினைகளிலும் மக்கள் விரோத சிந்தனையைக் கொண்டிருக்கும் டோண்டு, பார்வதி அம்மாளின் பிரச்சினையில் அவர் பார்வை படி சரியாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பார்வையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் வெறும் மனிதாபிமான முறையில் அவரைக் கண்டிப்பதனால் டோண்டுகளின் கொழுப்பு குறையப் போவதில்லை.

__________________________________________

நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு – கருணை கோராதே, அரசியலாக்கு…….!!

மிகப் பெரிய மனிதப் படுகொலையை துணை நின்று நடத்தி முடித்து விட்டன, இந்திய இலங்கை அரசுகள். இனிமேலாவாது இந்தியா தமிழ் மக்கள் மீது கருணை காட்ட வேண்டும், காட்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அதனால்தான் இவர்கள் தொடர்ந்து ஈழம் அமைவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்றும். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு ஈழம் என்றும், ஈழத்தை ஒரு அடியாள் தேசமாக கற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் இந்தியா மசியுமா, என்ன?

இந்தியாவின் அடியாளாக ஈழம் இருப்பதை விட, இந்திய முதலாளிகளின் சந்தைக்காக ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்பது என்றோ முடிவாகிவிட்ட விசயம். மற்றபடி பேரினவாதத்தின் பிடியில் சிக்கித் திணறும் ஈழ மக்களின் கண்ணீரெல்லாம் இந்தியாவிடம் செல்லுபடியாகாது. அப்படியான கருணை எதையும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது இந்தியா காட்டாத போது அவர்களின் நிலங்களை குறிவைத்து போரையும் நடத்தி வருகிறது. இப்படியிருக்க நாட்டின் இன்னொரு எல்லையோரச் சமூகமான ஈழத் தமிழ் மக்களிடம் மட்டும் எப்படி இந்தியா கருணை காட்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. இம்மாதிரி சிந்தனைப் போக்கில் இருந்துதான் நளினி மீது சோனியா கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கிறது.

நளினியின் விடுதலை மறுக்கப்படும் ஒவ்வொரு வேளையும் ராஜீவ் கொலையை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஈழத்தில் நரவேட்டையாடிய பாசிச ராஜீவின் கொலை என்பது அதன் எதிர்வினையே என்பதை முகத்திலறைந்து சொல்ல வேண்டும். ராஜிவ் காந்தியை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பசப்பத் தேவையில்லை. ஆம். புலிகள்தான் கொன்றார்கள். ஆனால் அதன் மூலத்தை விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரினால் இறுதியில் ஈழத்திற்கு படை அனுப்பிய ராஜீவும், இந்திய அமைதிப் படை இராணுவத்தின் அதிகாரிகளும்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.

இதை அரசியல் ரீதியாக எழுப்பி, அதற்கு ஆதரவாக தமிழக மக்களை அணிதிரட்டி போராடும் போதே நளினியை மட்டுமல்ல, அநியாயமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மற்ற போராளிகளையும் விடுவிக்க முடியும். மாறாக நளினி இருபது வருடம் சிறையில் இருந்துவிட்டார், ஏதோ கொஞ்சம் பாத்து விடுதலை செய்யுங்கள் என்று மனிதாபிமான முறையில் பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. இதைத்தான் கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ முதல் அரசியலே தெரியாமல் பிதற்றும் உண்மைத்தமிழன் வரை பலரும் பேசுகிறார்கள். இந்த மனிதாபிமான முகமூடிக்குள் ஒளிந்திருப்பது இந்திய அடிமைத்தனம். இந்த அடிமைகளை நம்பி ஈழம் மட்டுமல்ல, நளினியும் விடுதலை அடைய முடியாது.

நளினியை விடுதலை செய்யக் கோரும் குரல்கள் இனி எழக்கூடாது என்பதற்காகத்தான் சிறையில் செல்பேசி சிக்கியதாக ஒரு புதுக்கதையை கிளப்பியிருக்கிறார்கள். இதன்படி நளினிமேல் புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு அவரது நிரந்தர சிறை உறுதி செய்யப்படும். மனிதாபிமான முறையில் குரல் எழுப்பியவர்கள் கூட இந்த சட்டப்படியான தண்டனை நீட்டிப்பை எதிர்க்க முடியாதல்லவா!  அரசியலற்ற குரல்களை அரசியல் சட்டப்படியே முடக்கிவிட்டார்கள்.

எனவே நளினி பிரச்சினையில்அரசியல் நேர்மையோடு  அணுகாமல் சோனியாவிடமும், கருணாநிதியிடமும், மனுக் கொடுப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை. நளினியிடமோ, பார்வதியம்மாளிடமோ இவர்கள் கருணை காட்டப் போவதும் இல்லை. அரசு பயங்கரவாதம் உங்களை மென்மையாக அதட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் அறிக்கைதான் பதிலாக வருகிறது. ஆமாம் அறிக்கைகள்…… அறிக்கைகள்….. அறிக்கைகள்……….ஆமாம் இவர்கள் அறிக்கைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவற்றினைப் புறந்தள்ளி அரசியலைப் பேசுவோம். அநியாயத்தினை வெல்வோம்.

________________________________________________

–    இராவணன்

(தோழர் இராவணன், வினவு தளத்தில் மட்டும்தான் எழுதுகிறார்; மற்ற தளங்களில் எழுதுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)

vote-012மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் மீது போர் என்ற பெயரில் பழங்குடி மக்களை அழித்து மலைக் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் கூட்டணி செயல்படுகிறது. ப.சிதம்பரம் இந்தப் போரில் வெகு ஆர்வமாக இருப்பதன் பின்னணியும், பழங்குடி மக்களை ஆதரிக்கும் அறிவுத் துறையினரைக் கூட நக்சலைட்டுகள் என்று சித்தரிக்கும் போக்கையும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுட்டிக்காட்டுகிறார். மாவோயிஸ்ட்டுகளை ஏற்காதவர்கள் சொல்லும் உண்மையாவது இந்தப் பிரச்சினையின் மையத்தை புரிந்து கொள்ள உதவுமா?

-வினவு

___________________________________________________

தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது, மத்திய அரசு தானாக அறிவித்துக் கொண்ட “ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பகுதி ஆதிக்கத்திற்காக ஆயுதத் தீர்வுக்கு பதில் மனிதாபிமான நிர்வாக போக்கு ஏற்படும் மனநிலை ஏற்படாத வரையில், இந்த நிகழ்வு ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறும் என்பதே நிதர்சனம்.

இதற்கு பதில் நமக்கு கிடைப்பதெல்லாம், கடுமையான பிரகடனங்கள்தான்.  இந்த நிகழ்ச்சியில் எங்கோ “மோசமான தவறு” நடந்துவிட்டது என்று கூறும் மத்திய உள்துறை அமைச்சா திரு சிதம்பரம், இந்த நிகழ்வு குறித்து விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.  ஆனால் உண்மையிலேயே என்ன தவறு நடந்து விட்டது என்று அறிவதற்கு முன்பே, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வான் வழி தாக்குதலை பயன்படுத்த வேண்டும் என்கிறார். “தற்போது விமானத்தையோ, விமானப்படையையோ பயன்படுத்த கட்டளை இல்லை.  இந்த அதிகாரத்தை தேவைப்பட்டால், நாங்கள் மறுபரிசீலிக்க உள்ளோம்” – என்கிறார்.

ஆனால் “எங்களது ஆயுதங்களும், பயிற்சியும் எல்லைக்கு அப்பாலுள்ள எதிரிகளை முற்றாக அழிக்க மட்டுமே பயன்பட உள்ளதேயொழிய, சொந்த மக்களுக்கு எதிராக இல்லை” என்கிறார் விமானப்படை தலைமை தளபதி.  அவர் மேலும் கூறும் போது, நக்சல்பாரிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகாது என்கிறார். மத்திய இராணுவ அமைச்சரோ இராணுவத்தை நேரடியாக பயன்படுத்தும் எண்ணமே இல்லை என்கிறார்.

இவ்வாறு கீழே தள்ளப்பட்டுள்ள திரு சிதம்பரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வருகிறார்.  ஆனால் அது எதிர்பார்த்தபடியே பிரதம மந்திரியால் நிராகரிக்கப்படுகிறது. “தேசத்தின் பாதுகாப்பு சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும், அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்.  “தற்போது ஏற்பட்டுள்ள சூழலை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.  இவர்களது அணியைச் சார்ந்தவரும், பீகார் முதலமைச்சருமான திரு நிதிஷ்குமார் இன்னும் குறிப்பாக கூறுகிறார்.  “சிதம்பரம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும், பேச்சை குறைக்க வேண்டும்.  மேலும், அவரது குரலையும், கடுமையையும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதத்தால் புரட்சிகர வெற்றிக்கு முயற்சிப்பார்களேயானால், தான் தனது யோசனையற்ற வார்த்தை ஜாலங்களால் அவர்களது ஆயுதங்களை மிஞ்சமுடியும் என்கிறார் சிதம்பரம். அவர் கடந்த ஏப்ரல் 4 – லால்காருக்கு பயணம் செய்தபோது, புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எல்லோரும் நம்பினர்.  ஆனால் அவர் பொறுப்பை மாநில அரசின் மீது சுமத்திவிட்டு நழுவிவிட்டார். நற்செய்தியாக அவர் கூறுவது, மாவோயிஸ்ட்டுகள் “கானகத்தில் மறைந்து கொண்டுள்ள கோழைகள் என்றும் அவர்களை அழித்தொழிக்க மூன்றாண்டு கால அவகாசத்தையும்” அவர் அறிவித்தார்.

அவர் அப்படி கூறிய 48 மணி நேரத்தில் பழிவாங்கும் முகமாக இராணுவவீரர்கள் 76 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொன்றொழித்தனர்.  ஆடிப்போன சிதம்பரம் தான் கூறிய வார்த்தைகளால்தான் இந்த இழப்பு ஏற்பட்டதென்பது உணர்ந்து, மாவோயிஸ்ட்டுகள் இந்த நிகழ்வு மூலம் “காட்டுமிராண்டிகள்” என்று காட்டிவிட்டனர் என்றார்.

இந்த படுகொலைகள் முறையான பயிற்சி, தயாரிப்பின்றி இருந்ததால் நடந்திருக்கலாம் என்று நல்ல எண்ணத்துடன் கூறிய இராணுவ முதன்மை தளபதி திரு வி.கே.சிங்கைக் கூட சிதம்பரம் விட்டுவைக்கவில்லை. அதைச் சொல்வதற்கு ஒருவர் சிறந்த போர் வீரராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.  இருப்பினும், அவர் இளம் வயதில் சிறந்த வீரராக இருந்தவர்.  கானகப் போரில் அடிப்படை அறிவு இருக்கும் எவரும் இதைக் கூறலாம்.

இந்தியாவின் நவீன தாராள ஊடகங்களின் கதாநாயகனான அமைதியான, நிதானமான, ஆற்றல் உள்ள இவர், நக்சல்பாரிகள், மாவோயிஸ்ட்டுகள் என்று வரும் போது மட்டும் இவ்வாறு கொதித்துப் போவதேன்?  பட்டவர்த்தனமாக பேசும் அறிவாளிகளையும், கொள்கையாளர்களையும், நக்சல்பாரி தீவிரவாதிகள் என்று ஏன் முத்திரை குத்த வேண்டும்?  இந்த நாட்டில் யாரெல்லாம் எளியவர்களைப்பற்றி பேசுகிறார்களோ, மனித உரிமைப் பிரச்சனைகளை முன்னெடுத்து வைக்கிறார்களோ, அவர்களையெல்லாம், ஏன் நக்சல் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்று சமூக ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பதில், “பச்சை வேட்டை இயக்கம்” (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்ற போரில் ஆதிவாசிகள் உள்ள பகுதியிலிருந்து போராளிகளை வெளியேற்றவும், மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் அந்தப் பகுதிக்குள் நுழைந்திடாமல் தடுக்கவும், இறுதியாக அந்த பகுதி “முன்னேற்றத்திற்காக” என்று அதை சிவில் முனைவர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளது. ஒரு கானகப் போர் புரட்சிகர கொரில்லாக்களை எதிர்த்து துணை இராணுவம் நடத்தும் எதிர்புரட்சி நடவடிக்கைக்கு மாறாக, பகுதியை கைப்பற்றவோ, நிலை நிறுத்தவோ செய்யவேண்டுமென்பது அரசின் திட்டமல்ல.

பின் யாருக்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டது? சுரங்கத் துறையில் ஈடுபட்டுள்ள சர்வதேச கம்பெனிகள் தங்களது தொழில் வளத்தைப் பெருக்கி கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான். லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய சர்வதேச கம்பெனி “வேதாந்தா ரிசோர்ஸ்” ஐ பற்றிய விவரங்களை இது விஷயத்தில் சிறிது ஆய்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் மொத்த அலுமினியத் தாது உற்பத்தியின் 1.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் பங்கு, 85,000 டன்னாகும். இந்த கம்பெனியின் 5,00,000 டன் உருக்கும் திறன் உள்ள ஆலை ஒரிசாவின் ஜார்ஜிமூடாவில் உற்பத்தியை துவக்க உள்ளது. அங்கு இந்த கம்பெனி 1.6 மில்லியன் டன் உருக்கும் திறன் உள்ளதாக விரிவடையும். இது லால்கரில் உள்ள 5 மில்லியன் டன் அலுமினியம் பதப்படுத்தும் தொழிலுடன், 3750 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் பிரிவும் துணை நிற்கும். இதனது துணை நிறுவனமான பால்கோவின் உற்பத்தி திறன்  1மில்லியனாக உயர்த்தப்படும்.

லன்ஜிகார்கில் மட்டும் வேதாந்தா கம்பெனிக்கு 75 மில்லியன் டன் அளவுள்ள பாக்சைட் படிமங்களை உரிமம் கொண்டாடும் அதிகாரம் பெற்றதுடன் அதே அளவுக்கு சமமான படிமங்களை சொந்தம் கொள்ளும் பகுதியையும் கொடுக்க அரசு உறுதியளித்துள்ளது.  50 ஆண்டுகள் வரை பாக்சைட் படிமங்கள் கிடைக்கும் பகுதியில் 5 மில்லியன் டன் உருக்கும் ஆலை நியாயமானதே.  இந்தியாவின் மொத்த அலுமினிய இருப்பு 3.3 மில்லியன் டன்னில் வேதாந்தாவின் அலுமினியத் தொழில் நடக்கும் ஒரிசாவில் மட்டும் 1.7 மில்லியன் டன் உருக்காலை தொழில் உள்ளது. உலகின் மிகப்பரிய உருக்காலை ஒன்றை ஜார்குடாவில் உருவாக்க இந்த பகுதியிலுள்ள படிமங்களை விடுவிக்கும் உரிமை தனக்கு உள்ளதாக வேதாந்தா கூறிவருகிறது.

இந்த வேகத்தில் வேதாந்தா செயல்படுமேயானால் 2013ல் அனைத்து படிமங்களும் தரைக்கு மேலே கொண்டுவரப்பட்டுவிடும். இந்த படிம இருப்புகள் அனைத்தும் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது.  இந்த நிலங்களையெல்லாம் மீட்டெடுக்கும் முழுப்பொறுப்பை சிரமேற்கொண்டு அதற்காக ஒரு யுத்தமே பிரகடனப் படுத்தியிருக்கும் சிதம்பரம் இந்த நிலங்களை மீட்டு வேதாந்தாவிடம் சேர்ப்பாரா என்பதை பொறுத்துள்ளது.

சிதம்பரத்திற்கு வேதாந்தாவுடன் உள்ள நெருக்கமான உறவே தற்போதைய “ஆதிவாசிகள் பயங்கரவாத”த்திற்கெதிரான போரின் நோக்கத்தைப் பற்றிய திட்ட முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.  2003ல் மும்பை ஸ்டெர்லைட் கம்பெனி சுங்கவரி உள்ளிட்ட வரி ஏய்ப்பு புகாரின் மீது, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன் நின்றபோது, சிதம்பரம் அந்த கம்பெனிக்காக வாதாடியவராவார்.  சிறிது காலத்தில் வேதாந்தா குருப் கம்பெனிகளில் ஒரு இயக்குனராகவும் ஆனார். 2004ம் ஆண்டு மே திங்கள் 22ம் நாள் மத்திய நிதியமைச்சர் ஆன பின்னரே அந்த இயக்குனர் பதவியை துறந்தார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

திட்டமிடப்பட்ட நவ-தாராளமய ஊடகங்களின் “முழுப்போர்” பிரகடன வெளியீடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை ஆளுமைக்குள் கொண்டுவர, இந்த யுத்தம் திரும்ப தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை நக்சல்களை எதிர்த்து போராட சிறப்பு பயிற்சி பெற்ற பிரிவு இந்த போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விளைவு? ஆதிவாசிகள் தங்களது பல்லாண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.  இங்கு கேள்வி என்னவென்றால் இந்த அப்பட்டமான மேல்மட்ட நலன் பற்றிய பல்வேறு முரணான விவரங்கள் வெளிவரும் நிலையில், உள்துறை எந்த தர்மநியாய அதிகாரத்தின் அடிப்படையில் “இந்த மாற்றாள் போரை” நடத்த முடியும்?

________________________________________________

–  எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப (ஓய்வு)

(நன்றி-தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ்- ஆங்கில நாளிதழில் ஏப்ரல் 15ம் தேதி வெளியான Blatant effort to wage a proxy war என்ற கட்டுரை)

– தமிழில்: சித்திரகுப்தன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

பொருத்தமில்லாத மனிதர்களோடு
பொருந்திப்போக முடியாமல்
வருத்தத்தோடு நிற்கிறது
இருசக்கர வாகனம் ஒன்று.

மிச்சம் வைக்காமல்
மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
புது மாப்பிள்ளையின்
சுரண்டல் விரல்கள் பட்டவுடனேயே
அவமானத்தால் ஆடிப்போகிறது அதன் கைப்பிடி!

மாமனார் கழுத்தறுத்து மாட்டிக்கொண்ட
மைனர் செயின், பிரேஸ்லெட்டின்
தங்கக் கவுச்சி தாங்காமல்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வண்டிச்சாவி.

ஓசியில் வாங்கியவன்
உட்கார்ந்து ஓட்டப்போவதை நினைத்து
கோபத்தில் பல்லைக் கடிக்கிறது டயர்.

சுயமரியாதை உணர்ச்சியில்லாதவன்
கால்பட்ட அருவருப்பில்
விலகித் துடிக்கிறது கியர்.

சூடு, சுரணையின்றி
வரதட்சணையாக வண்டியைக் கேட்டவனின்
மன வண்டையைத் தாங்காமல்- சூடேறி
குந்தியவனுக்கு எதிராக
குமுறுது என்ஜின்.

வரதட்சணை மாப்பிள்ளைக்கு
சூடுவைக்க முடியாமல்
கேடுகெட்டு போனதாய்
புலம்பும் கார்ப்பரேட்டுக்கு
போய் புத்திசொல்லி
ஆத்திரத்தைக் கிளப்பும் பெட்ரோல்.

அடுத்தவன் காசில்
அனைத்தையும் அடைய நினைப்பவனின்
குரூரம் பார்த்து
குலை நடுங்கி
தன்னை மறைத்துக் கொள்கிறது வண்டிச் செயின்.

இந்த வெட்கம் கெட்ட பயலுக்கு
“எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்’ வேற – என்று
நான்கு கண்களால்
“இன்டிகேட்டர்’ ஜாடை காட்டுது.

அடுத்தவரிடமிருந்து பிடுங்குவதற்கு
ஒரு அளவே இல்லையா?

வரும் கோபத்தில்
அப்படியே! பிடுங்கிக் கொண்டு போய்விடலாமா – என
வால்டியூப்
காற்றோடு கலந்தாலோசிக்கிறது.

தட்டுமுட்டுச் சாமான்களோடு
பெண்ணையும்,
தள்ளிக் கொண்டு போகிறவனின்
தந்திரமறிந்து
நட்டும் போல்ட்டும் கூட
கெட்ட வார்த்தையால் திட்டுது.

உண்மையில்
இவன் வண்டியை மணக்கவே… அதாவது
என்னை மணக்கவே
பெண்ணை மணந்தான் – எனும்
உண்மை புரிந்துவிட,
சகமனிதனை உறிஞ்சி வாழும்..
சகல மனித மாண்பையும் உதிர்த்து வாழும்..
இயந்திர இதயத்தை,
சுமக்க முடியாமல்,
சகிக்க முடியாமல்,
சைலன்சர் வழியாக
காறித்துப்புகிறது வண்டி!

இப்படியொரு வண்டி
உங்களுக்குத் தேவையா?

_____________________________________

–    துரை. சண்முகம்
_____________________________________

பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !

446

vote-012பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.

சமீப ஆண்டுகளில் சேதுக்கால்வாய் விவகாரம், சங்கராச்சாரி கைது, தில்லை போராட்டம் போன்றவை தொடர்பான ம.க.இ.கவின் கூட்டங்களில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

2002லிருந்து அவர் குர்ஆனை ஆய்வு செய்ததாக இப்போது கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக ம.க.இ.க தோழர்களிடம் அவர் ஏதும் உரையாடியதில்லை. பெரியார்தாசன் குறித்து வேறு விதமான விமரிசனங்கள் சிலருக்கு இருந்தாலும் யாரும் அவரது மத எதிர்ப்பு பார்வை மீது ஐயம் கொண்டதில்லை. எனவே அவரது இந்த முடிவு பலருக்கும் விடை தெரியா புதிர்தான்.

தோழர் சாகித் இந்தப் பிரச்சினைக்காக அவரது சொந்த முயற்சியில் பெரியார் தாசன் என்ற அப்துல்லாவிடம் மதம் மாறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்.

–          வினவு

_______________________________________________________

“மக்காவுடைய மண்ணை எடுத்து

சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி

சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை

அது பொம்மை இல்ல பொம்மை இல்லை

மனிதன் என்பது உண்மை.”

களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது. அதுபோல ஏதோ ஒரு காரணத்தால் அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன், கேள்விமேல் கேள்விகளால் உருக்குலைந்து விடாமலிருக்க இசுலாமிய அமைப்புகள் இனி யாராக இருந்தாலும் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பினால்தான் பெரியார்தாசனின் பேட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ஒப்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறிய அடுத்த நாளே எஸ்.எம்.எஸ்.களும் இ.மெயில்களும் என்னை துளைத்துவிட்டன. வீடியோவும் பலரால் அனுப்பப்பட்டது. பார்த்ததும் அதிர்ச்சிதான். இசுலாமியராக மாறியதற்கான வலுவான காரணங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்த்ததில் இசுலாமியர்களின் வழமையான “இறைவன் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன், மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டுண்ணு நம்புகிறேன், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றால், இல்லை என்று சொன்னாலும் இருக்கு என்று சொன்னாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆனாலும் “2002லிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன், நபியின் வாழ்க்கையை படித்தேன், அதனால் இசுலாத்திற்கு வந்தேன்” என்றும் சொல்வதால் அவர் அப்துல்லாவாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறியதற்கான நமது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பேட்டி எடுக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.

ஏதோ ஒரு வெளிநாட்டிலுள்ள ஒருவராக இருந்திருந்தாலும், பலரால் அறியப்படாத, பலருக்கு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யாத ஒரு நபராக இருந்திருந்தாலும் வழமையான ஒன்றாக கருதி சும்மா இருந்துவிடலாம். ஆனால் தர்க்கவியல் படித்தும், பிரச்சாரம் செய்தும் பல ஆயிரக்கணக்கானோரை நாத்திக வழிக்கு கொண்டு வந்த பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லாமலிருக்க முடியாது. புத்தமதத்திற்கு இவர் வி.என்.சித்தார்தாவாக மாறியதும், புத்தருடைய “தம்மம்” என்ற நூலைப்பற்றி டாக்டர் அம்பேத்தார் எழுதிய “புத்தரும் அவருடைய தம்மமும்” என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். புத்தரின் அந்தநூல் சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பே இயற்றட்டப்பட்ட சிறந்த நூலாகும். அப்படிப்பட்ட அவர் தலைவிதி தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான இசுலாத்திற்கு சென்றது ஏன்?

நான் பிரபலமில்லாத ஒருவன் என்பதால் “நாளைவிடியும்” பத்திரிகைக்காக அவரிடம் பேட்டியெடுக்க அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அனுமதியுடன் முயற்சி செய்தேன். அது போல பெரியார்தாசனுக்கு இப்பொழுதுள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் (எஸ்.எம்.எஸ்.ஆல் துளைத்தவர்கள்தான்) பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சித்தேன்.

தற்சமயம் பெரியார்தாசனின் பிரச்சார திட்டங்களை ஒழுங்கமைப்பவர் என்று சென்னை பூந்தமல்லிக்கு அருகில் நூம்பல் என்ற இடத்தில் உள்ள காசிபுல் ஹுதா என்ற அரபிக்கல்லூரியின் பேராசிரியர் திரு ஜலீல் என்பவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் “கேள்வி என்ன? எந்த நோக்கத்திற்காக கேட்கப்படுகிறது என்று முன்கூட்டியே சொன்னால்தான் பேட்டிக்கான நேரம் ஒதுக்கப்படும்” என்று கறாராக கூறிவிட்டார். “முன்கூட்டியே கேள்வியைச் சொன்னால், நீங்கள் பதில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நாங்கள் பதில் பெறுவதாகத்தானே இருக்கும்” என்று கேட்டபோதும் “அப்படியல்ல, இருந்தாலும் அதற்கு மாற்றும் இல்லை என்று கூறிவிட்டார்.

2002-லிருந்து 8 வருடமாக குர்ஆனை ஆய்வு செய்தவருக்கு முன்கூட்டியே என்ன கேள்வி என்று தெரியவேண்டும் எனக் கூறுவது நமக்கு சந்தேகத்தை உருவாக்கியது எனினும் பரவாயில்லை கேள்வியை முன்கூட்டியே கொடுப்பதனால் மட்டும் இவர் அறிவு பூர்வமாக பதில் கூற முடியாது என்பதால் கேள்விகளை தொலைபேசி மூலமாக சொல்லிவிட்டோம். ஆனாலும் இரண்டு நாளாக பதில் ஏதும் கிடைக்காததால் மீண்டும் திரு.ஜலீலை தொடர்புகொண்டதில் பெரியார்தாசன் மறுத்து விட்டதாகவும் மேலும் பெரியார்தாசன் புத்தமதத்திற்கு போனது, மற்றும் குர்ஆன்களை ஆய்வு செய்து அடுக்கி வைத்துள்ளது, போன்றவர்களை எல்லாம் குறிப்பிட்டு, “அவர் அறிவாளிதான் ஆனாலும் விவாதங்களை தவிர்க்க விரும்புகிறார்” என்பதுபோல் பதில் கூறினார். (அதற்கும் என்னிடம் தொலைபேசி உரையாடலின் பதிவு உள்ளது).

இவரிடம் தொடர்பு கொள்வதற்கு முன்தினம் பலமுறை தொலைபேசியில் முயற்சி செய்தும் ஜலீல் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் பெரியார்தாசனிடமே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அது என்னவென்று இந்த ஆடியோவைக் கேளுங்கள். அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளும் இத்துடன் உள்ளது. படித்துக் கொள்ளுங்கள்.

பெரியார்தாசனிடம் உரையாடிய மறுநாள் கோவை குர்ஆன் அறக்கட்டளையின் சார்பாக குர்ஆனின் புதிய பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் என்னுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார்.

“சிலபேர் நம்மிடம் மனிதனை களிமண்ணால் படைத்ததாக குர்ஆன் சொல்கிறதே என்று கேட்கின்றனர். களிமண்ணில் படைத்ததாக குர்ஆன் சொல்லவில்லை. களிமண்ணை சுட்டு படைத்ததாகவும் கேட்கின்றனர். குர்ஆனில் எங்கேயும் சுட்டதாக வரவில்லை. களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தான் என்றுதான் குர்ஆன் கூறுகிறது” என்று உரையாற்றியுள்ளார். இப்பேச்சின் ஆடியோ இன்னும் வெளிவரவில்லை.வந்ததும் வாசகர்களுக்கு வழங்கப்படும். அவர் சொன்னது சரிதானா என்பதை கேள்விகளில் உள்ள குர்ஆன் சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் இவரின் இந்த மதமாற்றத்திற்கு ஏதேனும் வலுவான காரணமில்லாமல் இருக்க முடியாது. ராகுல் சாங்கிருத்தியன் போல் தன்னையும் கருதிக்கொண்டு, புத்தமதத்திற்கு சென்று புத்தமதத்தை நன்கு அறிந்துகொண்டு புத்தரின் நூலை இவர் மொழிபெயர்த்தது போல இசுலாத்திற்கு சென்று இசுலாத்தை நன்கு தெரிந்து கொண்டு இசுலாத்தைப்பற்றிய தமது ஆய்வை எழுதலாம் என்று சென்றிருப்பாரோ?

ஆய்வு செய்தே இசுலாத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் இவர் “நான் புதுசு எனக்கு தெரியாது மௌலவிகளிடம் கேளுங்கள்” என்றெல்லாம் முரண்பாடாக கூறுகிறார். எனவே நாத்திகத்தை வீழ்த்திவிட்டது இசுலாம் என்று இசுலாமியர்கள் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை என்பதற்கு அவரது உரையாடலே சான்றாக உள்ளது.

______________________________________________________

அவரிடம் கேட்க முயற்சிக்கப்பட்ட கேள்விகள்:

பெரியார் தாசனாக இருந்து ஆப்துல்லாவாக மாறியுள்ள தாங்கள் 2002-லிருந்து குர்ஆனை ஆய்வு செய்து இசுலாமிய மதமே  சரியான மதம் என்று முழுவதுமாக நம்புவதாக கூறியுள்ளீர்கள். குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?

  1. அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.

அ)   களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71

ஆ)  களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள்  6;2,  22;5,  23;12,  30;20,  32;7, 33;11,  38;76

இ)   ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம்   37;11

ஈ)   அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள்  15;26,  15;28,  15;33

ஊ)  அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள்  15;29,  38;72

அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

  1. ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.

இதற்கான குர்ஆன் வசனங்கள்  20; 118 மற்றும் 121,  70;20, 22, 27

அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.

இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21

ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

  1. பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.

ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

  1. கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.

இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

  1. “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

_________________________________________________

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

____________________________________________

–   சாகித்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

265

vote-012“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும்.  மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான்.தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம்  பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான  மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை  ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப்  போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது.  ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

121

vote-012“என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற ரொமான்டிக்கான தலைப்பில், சென்னை மாநகரத்தில்  ஒரு கூட்டம் நடக்கப் போகிறதாம். பெயர் வைக்கும் உரிமையை நமக்குக் கொடுத்திருப்பதால் ஒரே ஒரு சொல்லை மட்டும் இந்த தலைப்பில் சேர்க்க விரும்புகிறோம். “என் கவிதைகளுக்கு கம்யூனிசத்தை எதிர்த்தல் என்று பெயர் வை” என்பதே அவர்கள் சொல்லத் தயங்குகின்ற உண்மையான தலைப்பு.

எதற்கு இந்தக் கூட்டம்? உலகின் அழகிய முதல் பெண்ணும், பெண் படைப்பாளிகளின் ஏகப் பிரதிநிதியுமான லீனா மணிமேகலை எனும் பெயர் தாங்கிய சீமாட்டியின் கவிதைகளுக்காக அவர் மீது வழக்கு போடச்சொல்லி இந்து மக்கள் கட்சியின் யாரோ ஒரு தல போலீசில் பெட்டிசன் கொடுத்தானாம். அந்தப் புகார் மீது போலீசு எப்.ஐ.ஆர் கூடப் போடாமல், அந்தக் காகிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

போடாத அந்த வழக்கின் விளைவாக பெண் படைப்பாளிகளுக்கு நேரக்கூடிய ஆபத்து பற்றி மீடியாவில் கவரேஜ். ஏனென்றால் இந்து மக்கள் கட்சி ஸ்ரீமான்கள், கவிதாயினியாகிய ஸ்ரீமாட்டி ஆகிய ரெண்டு தரப்புக்குமே மீடியாவில் ஆள் உண்டு. இப்படியாக கமிசனர் ஆபீஸ் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புகார் வரலாற்று ஆவணமாகிவிட்டது.

பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து இணையம் வரைக்கும் வந்துவிட்டதாம். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒண்டியாக நின்று சமாளிக்கும் கலை தெரியாதவரல்ல சீமாட்டி. அவருக்கு பெரிய்ய்ய இடத்திலெல்லாம் ஆள் இருக்கிறது. என்ற போதிலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 20, 30 அறிஞர்களை பக்கவாத்தியம் வாசிக்க வைத்தால், அப்படியே தானும் ஒரு பாடகியாக (படைப்பாளி) அரங்கேற்றம் பெற்று விடலாம் என்பது சீமாட்டியின் திட்டமாக இருக்கக் கூடும். பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த மேட்டர் புரிந்துதான் போகிறார்களா என்று தெரியவில்லை.

சரி. மெய் உலகில் இந்து மக்கள் கட்சியால் ஆபத்து. மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? சீமாட்டியோ அவரது படைப்பு உரிமைக்கு காவல் நிற்கும் ஸ்ரீமான்களோ அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் அந்த கவித்துவ உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும்.

அந்தச் சொல் வினவு.

லீனா மணிமேகலை – ஷோபாசக்தி – செங்கடல் விவகாரம் குறித்து முதன்முதலில் வினவு தளத்தில்தான் எழுதினோம். தினத்தந்தி கிரைம் நியூஸ் பகுதியின் வாயிலாகத்தான் லீனா என்ற படைப்பாளி எங்களுக்கு அறிமுகமானார். செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின், தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டனர்.  தீபக் என்ற தொழிலாளிதான் (காமெரா அசிஸ்டென்ட்)  இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, மேற்படி படைப்பாளிகள் தீபக்கைத் தாக்கினர். தீபக் போலீசிலும், தனது தொழிற்சங்கத்திலும் புகார் கொடுத்தார். மேலிடத்துத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சிறைக்குப் போகாமல் ஃபைன் மட்டும் கட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்கள் இந்தப் படைப்பாளிகள்.

சம்பள பாக்கியோ வேறு வில்லங்கங்களோ இருந்தால், பாக்கியைக் கொடுக்கும் வரை படச்சுருளை லேப் இலேயே முடக்கி வைப்பது திரையுலகின் விதி. பிரசாத் லேப் முதலாளியாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தொழிலாளியை அடித்த படைப்பாளிகள் அந்த முதலாளியை அடித்திருப்பார்களா?

அம்மையாரின் படைப்புத்திறனால் பாதிக்கப்பட்டவர் தீபக் மட்டுமல்ல, இன்னும் பலர் என்ற விவகாரமும் தெரிய வந்தது.  எழுதினோம். கேஸ் போடுவேன் என்று மிரட்டினார் சீமாட்டி. பணத்தைப் பறிகொடுத்த ஈழத்தமிழர் லீனா செய்த மோசடியை தேசம் நெற் தளத்தில் எழுதி, “தைரியமிருந்தால் கேஸ் போடு” என்றார். அப்புறம் அடிபட்ட தொழிலாளி தீபக்கின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்தது.

லீனாவும் ஷோபாசக்தியும் படவேலை முடிவதற்காக அமைதி காத்தார்கள். “ஆமா அடிச்சேன், 1700 ரூபாய் அபராதம் கட்டினேன். அடிச்சது சரிதான்” என்று தெனாவெட்டாய் திமிருடன் தனது தளத்தில் எழுதினார் ஷோபாசக்தி. அந்தக் கட்டுரையைத் தனது தளத்தில் வெளியிட்டு வன்மத்துடன் ஆமோதித்தார் லீனா.

மீண்டும் வினவுக்கு வருவோம். தீபக்கை அடித்த சம்பவத்தைப் பார்த்த பிறகுதான், ‘தோழர்’ லீனாவும், ‘தோழர்’ ஷோபாசக்தியும் சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் வெறி கொண்ட தொழிலாளி வர்க்க எதிரிகள் என்பது தெளிவானது. அம்மாவின் கவிதையில் வழியும் கொழுப்பும், திமிரும் தீபக்கின் மீது விழுந்த அடியில் வெளிப்பட்ட கொழுப்பும் வேறு வேறல்ல என்பதை அவரது கவுஜையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இவையிரண்டுக்கும் உள்ள உறவை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதைத்தான் தனிப்பட்ட தாக்குதல் என்று கூவுகிறார் சீமாட்டி.

__________________________________________

உக்கிரமான அல்லது உன்மத்தமான நிலையில் வெளிப்படுவதல்லவோ கவிதை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் லீனா குழுவினர் தொழிலாளிகளின் கன்னத்தில் எழுதிய கவிதையையும் (பிளஸ் ஆர் மைனஸ் மொழி) இணையத்தில் எழுதிய கவிதையையும், அதாவது உணர்ச்சி வெளிப்பாட்டின்  இந்த இரு களங்களையும் ஒன்றாக்கி விட்டோம் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.

புஷ் முதல் மார்க்ஸ் வரை அனைவரது வழித்தோன்றல்களும் ஆணாதிக்கப் பொறுக்கிகளே என்பது அவரது கருத்து. சுதந்திரப் பாலுறவு பற்றிய லெனினுடைய கருத்து எள்ளி நகையாடத்தக்கது என்றும் அவர் ஃபிராய்டைப் புணர்ந்து பாலியல் உறவு குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் லெனினுக்கு அவர் வழங்கும் உபதேசம். தனது மாற்றுக் கருத்துகளை அம்மையார் தாராளமாக கருத்தியல் தளத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக கவிதைக்குள் புகுந்து கொள்கிறார். மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம். அல்லது சீமாட்டியின் தரத்துக்குப் பொருத்தமான தந்திரம்.

_____________________________________________

சீமாட்டியின் கவிதையில் வழியும் கொழுப்பை அம்பலப்படுத்தினால் அது தனிப்பட்ட தாக்குதலாம். பிரதிகளை முடிவின்றி கட்டுடைக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா?

தெரியாமல்தான் கேட்கிறோம். லீனாவின் கவிதையை நாங்கள் விமரிசித்திருக்கிறோம். அதற்கு லீனாவும், லீனா ரசிகர் மன்றத்தினரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். மறுபடி நாங்கள் எழுதுவோம். நீயும் எழுது. இதில் எது சரி என்பதை படித்து வாசகன் முடிவுக்கு வரட்டுமே? இதில் படைப்பாளி சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து?

உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.

லீனாவின் மீதான விமரிசனம், பெண் எழுத்தின் மீதான கலாச்சார அடிப்படை வாதிகளின் தாக்குதலாம்! இப்போது குரல் கொடுக்காவிட்டால், இனி பெண்கள் எழுதவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமாம். அடேங்கப்பா, சீமாட்டி இப்போது பெண்குலத்தின் பிரதிநிதியாகிவிட்டார். “பெண்ணென்றும் பாராமல் என்னை… ” என்று டயலாக் பேசி முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றிய அம்மாவின் ஞாபகம்தான் வருகிறது.

படைப்பாளி என்று அழைத்துக்க கொள்ளும் ஒரு பாசிஸ்டு குழு தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, இன்னொரு பாசிஸ்டு கும்பலான இந்து மக்கள் கட்சியை வில்லனாக சித்தரிக்கிறது. லீனா – இந்து மக்கள் கட்சி சண்டை என்பது அசப்பில் ஜெயல்லிதா பாரதிய ஜனதா சண்டை மாதிரியே இருக்கிறது. நல்ல தமாஸ்தான்.

இந்து மக்கள் கட்சி பெரியார் சிலையை உடைத்த போது ம.க.இ.க தோழர்கள் சீரங்கம் கோயில் வாசலில் ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ஓசூரில் மோதி மண்டை உடைந்து சிறை சென்றார்கள். பெரியார் தி.க காரர்கள் என்.எஸ்.ஏ வில் சிறை சென்றார்கள். சிதம்பரத்துல தீட்சிதனுக்கு காவல் நிற்கும் இந்து மக்கள் கட்சியை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் எங்கள் தோழர்கள்.

சீமாட்டி என்ன செய்தார்? ஜீன்ஸ் பேண்டும், சே குவேரா டி ஷர்ட்டும் போட்டு திரியுறதெல்லாம் புரச்சிப் பெண்ணா? அப்படிப்பட்ட புரச்சிதான் நூத்துக்கணக்கில ஸ்பென்சர் பிளாசாலயும், சிட்டி சென்டர்லயும், ஸ்கை வாக்குலையும், மாயஜாலிலும் திரியுதே? அந்த டி சர்ட் புரச்சிக்கும் இந்தக் கவுஜைப் புர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

அயோத்தி கேஸ் முதல் குஜராத் கேஸ் வரை எதிலும் எந்த இந்து பாசிஸ்டும் தண்டிக்கப்படவில்லை. அதைக் கேக்க ஆளைக்காணோம். இல்லாத கேசுக்கு கண்டனக் கூட்டமாம். விற்காத படத்துக்கு புரடியூசரே காசு கொடுத்து பொதுநல வழக்கு போடச்சொல்லி படத்தை புரமோட் செய்யும் கதை மாதிரில்ல தெரியுது?

_________________________________________________

ஒரு விநோதமான பேச்சாளர் கலவை இந்தக் கூட்டத்தில் உரையாற்றப் போகிறது. த.மு.எ.க.ச (மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கிய அமைப்பு) முந்திக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.

இடது தீவிரவாதம் பேசும் ஒரு சிறு குழு இலக்கியவாதிகளை மிரட்டுவதாகவும், லீனாவையும் அப்படி மிரட்டியிருப்பதாகவும் கூறுகிறது அவர்களது கண்டன அறிக்கை. இராக் பற்றி கொச்சையாக எழுதிய ஒரு “படைப்பாளியிடம்” கவிதைக்கு பொருள் கேட்டோம். கவிதைக்கு அர்த்தம் கேட்பது குற்றம் போலும்! லீனாவைப் பற்றி எழுதியதோடு சரி. நேரிலெல்லாம் போகவில்லை. ஜெயலலிதா, லீனா மாதிரியான மாதர்குல மாணிக்கங்களை தனியாக சென்று சந்திக்கும் தைரியம் தீவிரவாதிகளான எங்களுக்கு கிடையாது. லீனாவின் சார்பில் லீனாவின் கவுஜைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் விளக்கம் கூறிவிடுமானால் மகிழ்ச்சியே.

“உபரி என யோனி மயிரை விளித்தாய்..
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்..”

என்பன போன்ற கவித்துவம் வாய்ந்த வரிகளைத் தெரிவு செய்து விளக்கம் சொன்னால் கூடப்போதும்.

கலாச்சார போலீஸ் வேலைக்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தா என்ற பரிதாபத்துக்குரிய 32 வயது இளைஞனின் படுக்கையறை உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தமிழ்ச்செல்வன் என்பது நமக்குத் தெரியும். அந்த பாக்கியம் வரதராசனுக்கும் கிடைக்கவில்லை, பால் சக்கரியாவுக்கும் கிடைக்கவில்லை.

சிங்குர், நந்திக்கிராமில் மக்கள் மீது ஏவப்பட்டது கலாச்சார போலீசு இல்லையே. அது சட்டம் ஒழுங்கு போலீசு. அந்தப் போலீசு மார்க்சிஸ்டுகளின் தோழன்.

கூட்டத்துக்கு ஆதவன் தீட்சண்யா வருகிறார். அவர் சிங்கள பாசிசத்தின் நண்பர். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர். ஷோபா சக்திக்கும் நண்பர். இருந்தாலும் கலாச்சார போலீசை எதிர்க்கும் ஜனநாயகவாதி. எல்லாம் ஓ.கே தான். ஆனால் வரதராசனை கட்சிக்காரனுக கொன்னுட்டாங்கன்னு ஷோபா சக்தி எழுதியிருக்கிறார். ஆதவனுக்கு அதுவும் ஓ.கேயா இருக்கலாம். கட்சிக்கு ஓ.கேயான்னு தெரியவில்லை.

அப்புறம், சி.பி.ஐயின் தேவ. பேரின்பன் வருகிறார். பின் நவீனத்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு முகமூடியைக் கிழித்து எழுதியவர். இந்த கவிதைக்கு அவரிடம்தான் பொருள் விளக்கம் கேட்கவேண்டும்.

காமெடி என்னவென்றால் பெண் கவிஞர்கள் பலரை இந்தப் பட்டியலில் காணவில்லை. அவர்கள் லீனாவை பெண்ணென்று ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது படைப்பாளியென்று ஒத்துக்கொள்ளவில்லையா தெரியவில்லை. இது தொடர்பான உண்மை அ.மார்க்சுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். எனவே அவர் அதை கூட்டத்தில் விளக்குவார் என்று நாம் நம்பலாம்.

சீமாட்டியின் உரிமை நிலைநாட்டு விழாவில் மொத்தம் 54 பேர் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிகையில் கண்டுள்ள பெயர்களைப் பார்க்கும் போது கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்கும் தாய்மாமன் லிஸ்ட்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவுங்கள்லாம் தெரிஞ்சு வாராகளா, இல்ல இதெல்லாம் இந்த சீனுக்கு தேவையான “அட்மாஸ்பியர்”னு முடிவு பண்ணி லிஸ்டை அச்சடிச்சுட்டாங்களா தெரியல. ஆளுக்கு 10 நிமிடம் என்று வைத்தாலும் 540 நிமிடம். அதாவது பத்து மணி நேரம். மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

இருந்தாலும், நாங்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. நாலைந்து பேரைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். “ஏண்டா என்னா ஏதுன்னு மேட்டரே தெரியாம எதுன்னாலும் பத்துப்பேர் கூட்டமா வாரீங்களே, உங்களுக்ககெல்லாம் வேற வேலயே கிடையாதா?” ன்னு வடிவேலு கேக்குற மாதிரி நாம கேக்க முடியாதில்லையா?

_______________________________________

தொழிலாளியை அடிப்பது படைப்பாளியின் உரிமை. 1700 ரூபாய் அபராதம் கட்டினால் போதுமென்பது ஷோபாசக்தி-லீனாவின் வாதம். அப்படி என்றால் அந்தப் படைப்பாளியை தொழிலாளி திருப்பி அடிக்க விரும்பினால், எவ்வளவு அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்பதற்கு அறிவாளிகள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிகளின் உரிமையை விட படைப்பாளிகளின் உரிமை கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே, தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் பெப்சி (தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனம்) தொழிலாளர்கள் 1700 ரூபாய்க்கு மேல் ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக எடுத்து வரவும்.

அடுத்தது கேள்வி பெண் படைப்பாளிகள் படைப்புரிமை பற்றியது. லீனாவின் கவிதையை வாசித்து, வாசிப்பு அனுபவத்தையும் கவிதை வெளிப்படுத்தும் உணர்வையும் செல்மா பிரியதர்சன் போன்ற கவிஞர்கள் நிச்சயமாக விளக்குவார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், ஜிகாதிகளுக்கும், இந்து பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை பெண்ணியப் பார்வையில் லீனாவும் கட்டுடைத்துக் காட்டுவார். கவிதை அறிவோ, ரசனையோ இல்லாத சராசரி உழைக்கும் பெண்கள் இவற்றைக் கேட்டு புதிய தரிசனங்களைப் பெறலாம்.

இறுதியாக, லீனாவின் கவிதையை தமது கொள்கையின் மீதும், தங்கள் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகப் புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு: உபரி மதிப்புக்கும் யோனி மயிருக்கும், உற்பத்தி உறவுக்கும் தொப்புளுக்கும், அந்தரத்தில் தெறிக்கும் விந்துவுக்கும் கார்ல் மார்க்ஸின் பிரகடனத்துக்கும் உள்ள கவித்துவப் பிணைப்பு பற்றி “கம்யூனிசப் பாரம்பரியத்தில் பிறந்த” சீமாட்டி வகுப்பெடுப்பார்.

ஆமாம். தான் கம்யூனிச குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்றுதான் லீனா சொல்லிக் கொள்கிறார். தேவர் மகன் தேவர், கவுண்டர் மகன் கவுண்டர் மாதிரி கம்யூனிஸ்டின் மகனோ, பேத்தியோ கம்யூனிஸ்டு என்று அம்மையார் நினைத்துக் கொண்டிருக்கிறார். போலி கம்யூனிஸ்டுகளும் அதை அங்கீகரித்து சீமாட்டியை தோழர் என்று அரவணைக்கிறார்கள்.

குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

“கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!

vote-012மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்ட தலைநகர் பேருந்து நிலையங்களில் எங்கு சென்றாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் ஒவ்வொரு ஊருக்கும் கடைசி பேருந்து, காலை முதல் பேருந்து என்கிற நேர இடைவெளி இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் 24 மணி நேர சுழற்சியில் எப்பொழுதும் செல்லலாம் என வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.  இது அரசின் செயல்பாட்டை பாராட்டுவதற்காக அல்ல. பேருந்தில் சென்றால் – திரும்பினால்தான் நிச்சயம் என்கிற அபாயத்துடன் உள்ள இன்றைய தரைவழிப் போக்குவரத்தில் அரசு பேருந்து பணியாளர்களின் யதார்த்தத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சாதாரண மனிதர்களுக்கு காலை 5 மணி முதல் 6 மணிக்குள் காலைக் கடன் கழிப்பு, 8லிருந்து 9மணிக்குள் காலை உணவு, மதியம் 1லிருந்து 3 மணிக்குள் மதிய உணவு, இரவு 8லிருந்து 10மணிக்குள் இரவு உணவு என்கிற நடைமுறைப் பழக்கம் உண்டு. ஆனால் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனருக்கு நடு இரவில் பணி துவக்கம் என்றால் அவரின் கழிப்பிட நேரத்திலிருந்து, உணவு அருந்தும் நேரம் வரை எல்லாமே அராஜகமாக இருக்கும்.

நாம் மதுரையில் பேருந்தில் ஏறியிருப்போம். சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பின் வழிநடை உணவகத்தில் (அந்த உணவகங்களின் தரம் என்பது மகா மட்டம் என்பதும், அதில் நிறுத்துகிற கட்டாயத்தில் கூட அரசியல்வாதி, அதிகாரி என அனைவரின் அதிகாரம் அடங்கியிருக்கிறது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை) நின்றவுடன் நம்மில் பலர் அதற்குள் இலவசமாய் சாப்பிட போட்டுட்டானா என புலம்புவோம்.  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அந்தப் பேருந்து கோவையில் நடு இரவில் எடுத்து, 6 மணி நேர பயணத்திற்கு பின் மதுரையில் நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்கி தூத்துக்குடி செல்லும் தடத்தில் மோட்டலில் நின்றிருக்கிறது என்பது.

அதே போல் 20000 பேருந்துகள் இயங்குகின்ற நிலையில் ஏதேனும் சில பராமாரிப்பு பழுதுகள் ஏற்பட்டு அல்லது டயர் பஞ்சர் போன்ற நிகழ்வில் வழித்தடத்தில் இயக்கம் நிற்பது என்பதும் எப்பொழுதாவது தவிர்க்க இயலாத ஒன்று.  உதிரிப் பாகங்களே வாங்கித் தராமல், கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்பு, அலுவலகப் பிரிவில் புதிய நியமனங்களே இல்லாமல், ஓய்வு பெற்றும், இறந்தும் போன தொழிலாளிகளின் பணிச்சுமையையும் சுமந்து பணிபுரிவதால் பல பேருந்துகள் முழுமையான பராமரிப்பு பார்க்காமலேயே வெளியில் வருகிறது என்பது இந்தத் துறைக்குள் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கி விட முடியாது. ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ ஓட்ட வேண்டும் என்கிற நெருக்கடி, மறுபுறம் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் போன்றவற்றின் இயக்கம் எதையும் முறைப்படுத்தாமல் பேருந்து நிலையங்களில் கழக அதிகாரிகளே தனியார் முதலாளிகளுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்படும் நிலையில் வசூல் இலக்கு என தினமும் நடத்துனருக்கு நெருக்கடி. தமிழகத்தில் 365 பணிமனைகள், பணிமனைக்கு ஆளுங்கட்சி அனுசரிப்பு கட்சி பணியாளர்கள் 10 முதல் 20 பேருக்கு பணியே இல்லாமல் வருகைப் பதிவு.  இவர்களின் பணியையும் யாராவது வயிற்றுப்போக்கு, இழவு என விடுப்பு எடுக்கும் பணியாளர்களின் பணியையும், தடத்திற்கு சென்று வந்து இறங்குகிற ஓட்டுனரை தாஜா செய்து மீண்டும் பணிக்கு அனுப்புவது எத்தனை பேருக்கு தெரியும்?

இன்று வரை மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற தேசிய மய வரிகளின் ஆதிக்கத்தால் தனியார் பேருந்தின் தட நீளம் 120 கி.மீ க்கு மேல் இருக்க கூடாது.  ஆனால் அரசுப் பேருந்தின் தட நீளம் என்பது 500 கி.மீக்கு மேல் சென்று விட்டது.  தமிழகத்தில் 5800 தனியார் பேருந்துகளை, 20000 அரசுப் பேருந்துகளோடு ஒப்பிடும் போது 4 பங்கு அதிகமாய் அரசுப் பேருந்துகள் இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றும் ஏற்படுகிற விபத்தில் அரசுப் பேருந்து அதிகம் போல் தோன்றும்.  அதையெல்லாம் படிக்கிற நாம் தனியார் அதிகரிக்கட்டுமே என எண்ணுவது உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கவே செய்யும்.

____________________________________________________

சமீபத்தில் தினமணி நாளிதழில் (எவ்வாறு பல தரப்பு விபரங்களை ஆராயாமல் எழுதினார்கள் என தெரியவில்லை) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் அடுத்த ஆண்டு 250 கோடி செலவில் 3000 பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவித்ததை குறிப்பிட்டு “50 வயதிலும் தாய்ப்பாலா” என தலையங்கம் எழுதினார்கள்.

பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சமூக தேவையை பூர்த்தி செய்யப்படுவதற்காக சுதந்திர இந்தியாவின் பிரதான அடித்தளமாக இருந்தது, இருப்பது தரைவழிப் போக்குவரத்து என்பது அனைவரும் அறிந்த வரலாறே.  தமிழகத்தில் பேருந்து தேசிய மயமும் அத்தகைய ஒரு சமூக முயற்சியின் சிறப்பான முடிவென்று நாட்டின் உச்ச நீதிமன்றமே உச்சி முகர்ந்துள்ளதை வாசகர்கள் கவனத்திற்கு இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

முதலீட்டுக்கு மேல் 5 சதமானம் வருமானத்தை இலக்காக கொண்டுதான் 1971 இல் தனியார் துறை கையகப்படுத்தப்பட்டு நிறுவனமாக பதிவு (கம்பெனி) செய்யப்பட்டு 1972 முதல் கழகமாக செயல்பட்டுவருவதுதான் அரசு போக்குவரத்துக் கழகங்கள்.  இன்று தினம் 2 கோடி பேருக்கு மேல் பயணித்து பலன் பெற வழிவகுத்துள்ளது.

சமூகத் தேவையின் தாக்கம், கிராம பொருளாதாரத்தை, நகர்ப்புற வளர்ச்சியுடன் இணைக்க வேண்டிய சமூகக் கட்டாயம், சாலை வசதி போதிய அளவு இல்லாவிட்டாலும் பேருந்து வசதி செய்ய வேண்டும் என்ற சூழலில் அரசுப் பேருந்துகளின் வழித்தட இயக்கக் கொள்கையும் மாற வேண்டிய கட்டாயம்.

சேவை முன்னுரிமை பெற, வரவு செலவும் சமனாகும் வழித்தடங்களின் விகிதாச்சாரம் கூட குறைந்து தற்போது 96 விழுக்காடுக்கு மேல் செலவினத்தை கூட தொட இயலாத வருமான இழப்பீட்டில் கழகங்கள் உள்ளது. ஒரு பயணியே இருந்தாலும் கூட பேருந்தை இயக்க வேண்டும் என்ற கட்டாயம். விளைவு கி.மீ. க்கு 15 பைசா வருமானம் என்றால் 21 பைசா செலவாகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கி.மீட்டருக்கு 45 பைசா, கர்நாடகாவில் 52 பைசா, கேரளாவில் 38 பைசா என்ற விகிதாச்சாரத்தில் பேருந்து கட்டணம் இருக்கும் போது தமிழகத்தில் 28 பைசாதான்.  வேறு வருமானம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இங்கு பேருந்துக் கட்டணங்கள் ஒரு புறம் தாழ்தள சொகுசு என்றெல்லாம் பெயர் வைத்து மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நமது கருத்து அல்ல – யதார்த்தம் தெரிந்து கொள்ள இந்த விவரம் கொடுக்கப்படுகிறது)

ஆனால் செலவினம் என்று வரும் போது, ஆண்டு வருமானம் தோராயமாக 3950 கோடியிருக்கும் போது,

டீசலுக்கு மட்டும் : 1100 கோடி (கடந்த 10 ஆண்டுகளில் 28முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது)

உதிரி பாகங்கள் :  910 கோடி (ஆண்டிற்கு 10 சதம் விலை உயர்வு)

மோ.வாகன வரி :  115 கோடி

வட்டி, அரசுக்கு செலுத்த வேண்டிய பிற வரி :   50 கோடி

பேருந்து நிலைய கட்டணம் சுங்க சாவடி வரி :  2.5 கோடி

மோட்டார் வாகன வரி கூட தமிழகத்தில்தான் அதிகம் வசூலிக்கப் படுகிறது. இத்தோடு பேருந்திற்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கு 8 சதமானம் விற்பனை வரியும், டயர் உபயோகத்திற்கான திரட் ரப்பருக்கு 12 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது என்பதையும் வாசகர்கள் அறிய வேண்டும்.

தவிர அரசுப் பேருந்தே காரணமாக இல்லாவிட்டாலும், விபத்து நடந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்காக, “நான் லயபிலிட்டி” தொகை என்று ஒவ்வொரு விபத்திற்கும் ரூ 15 ஆயிரம் உடன் வழங்கப்பட வெண்டும்.  ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட ஓட்டுனார் மீது தவறில்லை என்று குற்றவியல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும், இழப்பீடு லட்சங்களில் வழங்கப்படுவதால் கழகங்களுக்கு ரூ 500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருமானத்திற்கு மிஞ்சிய செலவினத்தை தினமணி ஊகித்திருப்பது போல் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் போல் அன்றி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் 6 முதல் 12 சதமானம் வரை வட்டிக்கு கடன் பெற்றுத்தான் கழகத்தின் மூலதனத்தையும் (பேருந்து வாங்குவது) அன்றாட செலவினத்தையும் இன்றுவரை கழகங்கள் சந்தித்து வருகின்றன. அரசிடமிருந்து எந்தவிதமான மானியமோ, ஏன் வட்டியில்லா கடன் கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை. வட்டியே பல நூறு கோடிகள் நிலுவையிலுள்ளது.  அதனால் கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

சிலரது கூற்றுப் பிரகாரம் மக்களின் வரிப்பணம் எதையும் போக்குவரத்துக் கழகங்களுக்கு திருப்பி விடப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.  மாறாக அரசு வழங்கும் பங்கீட்டுத் தொகையில் பாதிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.  ஆனால் மாணவர்கள், தியாகிகள், மாற்றுத்திறன் உள்ளவர்கள் என்று சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச பயணங்களுக்கு அனைவரும் நினைப்பது போலன்றி, 56 சதமானம்தான் ஈடு செய்யப்படுகிறது என்பதுடன் அந்த தொகையும் உடனுக்குடன் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.  (இதுநாள் வரை ரூ 250 கோடி நிலுவையிலுள்ளது).

விளைவு: பணியாளார்களின் ஊதிய விகிதம் மற்ற துறையை ஒப்பிடும் போது மிகக் குறைவு.  பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (ரூ 550 கோடி) அன்றாட செலவிற்கு பயன்படுத்தப்படுகிறது.  ஓய்வூதிய ஒப்படைப்பு, பணிக்கொடை போன்றவை ஆண்டுக்கணக்கில் நிலுவையிலுள்ளது.

இவ்வாறு தங்களது வருமானத்தில்தான் கழகத்தை நடத்திக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கத்தை எந்த வித சமூகப் பங்களிப்பும் இல்லாமல் (இலவச பயணங்களை ஏற்றிச் செல்வதில்லை), தாங்கள் பெற்ற வழித்தடங்களிலேயே கூட (உதாரணமாக மதுரை-திண்டுக்கல் (வழி) சோழவந்தான் என அனுமதி பெற்று மாறாக நேர் வழி வாடிப்பட்டி வழியாக இயக்குவது) பேருந்தை இயக்காமல் நேராகவே இயக்கி லாபம் மட்டுமே நோக்கமாக செயல்படும் தனியார் துறை பேருந்துகள், மினிபேருந்துகள் (இவற்றின் விதி மீறல்கள் பற்றி பத்திரிகைகளில் பலமுறை செய்திகள் வந்துள்ளது) இயக்கத்துடன் ஒப்பிடுவது, சிலரின் பொதுத்துறை மீதுள்ள ஆழமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை உணரமுடிகிறது.  வழங்கப்பட்டுள்ள ரூ 250 கோடியும் நாட்டின் சுற்றுச் சூழலைக் காக்கும் மாற்று எரிபொருளுக்கான அதிக விலையை கழகங்களே ஏற்கிறது என்பதுடன் அரசு ஏற்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.

உலக அளவில்  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பணக்கார நாடுகளில் சமீபகாலமாக திவாலாகி (அமெரிக்காவில் மட்டும் 82 தனியார் வங்கிகள்) மக்கள் பணம் திருப்பி விடப்படுவதும் என்ரான், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி போன்ற தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ஃ நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்று திரும்ப செலுத்தாத மக்கள் பணமே 1 லட்சத்தி 25 ஆயிரம் கோடி என்கிறது புள்ளி விபரம்.  இன்றைய அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்விற்கு தனியாரின் பதுக்கலும், ஆன் லைன் வர்த்தகமுமே காரணம் என்கிற நாளிதழ்களின் உண்மை அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

இந்தியாவின் பொதுத்துறையை சார்ந்திருப்பதால் மட்டுமே வேறூன்றியுள்ள இந்திய தனியார் கம்பெனிகள் உள்ளிட்ட தனியாரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ள பொதுத்துறைக்கு “50 வயதில் தாய்ப்பால் ஊற்றுவதற்கு பதில் காலம் முழுக்க உழைத்து குடும்பத்தை வளர்த்த தந்தைக்கு, தாய்க்கு முதுமைக் கால பராமாரிப்பு என்று ஏன் எடுத்துக் கொள்ள கூடாது?” இந்த முதுமையான துறைதான் இந்தியாவின் இதயமென்றும் சொல்லலாம். பல்வேறு சேவைகள் மக்களுக்கு மலிவாக வழங்குவதும் இந்த துறைதான்.

இப்படிப்பட்ட அரசு போக்குவரத்தில் 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்களை நியமனம் செய் விபத்துக்களை குறை என தொழிலாளர்கள் பேராடியதன் விளைவாக கடந்த 2006 லிருந்து இன்று வரை சுமார் 40,000 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் புதிய நியமனமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தினக்கூலிகளாகவே வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.

__________________________________________________

இந்நிலையில் உலக வங்கியின் கட்டளையை ஏற்று நாளடைவில் ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக இருக்கக் கூடாது என்பதை படிப்படியாக செயலாக்கம் செய்திட கடந்த 2003ல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தியா முழுமையும் அரசு, அரசுத்துறை, பொதுத்துறை என்ற எதிலும் 01-04-2003ற்கு பின்னர் பணியில் சேருபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது கிடையாது மாறாக “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” (புதிய பென்சன் திட்டம்) என்ற பெயரில் அவரவர் சம்பளத்தில் 10சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.  அதற்கு ஈடான தொகை அரசு அல்லது அரசு சார்பு நிறுவனம் போடும்.  இதற்கென்று ஒரு ஒழுங்குமுறை ஆணையம் காலக்கிரமத்தில் நிறுவப்படும்.  அந்த ஆணையம் எவ்வாறு பென்சன் கணக்கிட வேண்டும் என தெரிவிக்கும் என கூறினார்.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட போக்குவரத்து புதிய பணியாளர்களிடம் 10 சதவீத தொகை பிடிக்கப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் இருந்து வந்தது.  இதில் உண்மை என்னவெனில் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கென பங்களிப்பு திட்ட ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை.  அதனால் இந்த ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது யாருக்கும் தெரியாது.  2003ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2020க்கு மேல்தான் ஓய்வு என்பது துவங்கும்.  ஆனால் இதில் பலர் விபத்து காரணமாக இறந்திருக்கிறார்கள்.  இது போல் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு எவ்வாறு ஓய்வுவூயம் கணக்கிடுவது என போக்குவரத்துக் கழகங்கள் அவ்வப்போது அரசிற்கு எழுதி வந்தன.  அரசும் ஒழுங்குமுறை ஆணையம் அமையும் வரை பொறுத்திருக்கவும் என பதில் எழுதிக் கொண்டிருந்தது.

ஆனால் தீடீரென தற்போது ஒரு அரசு உத்திரவு (அரசுக் கடிதம் 15705/D/2009-1 நாள் 25-03-2010) வந்துள்ளதில் புதிதாக பணி நியமனம் பெற்று இறந்த பணியாளர்களைப் பொறுத்தவரை நிதித் துறை 18-10-2004ல் வெளியிட்டுள்ள உத்திரவினைப் பின்பற்றவும் என ஒரு கடிதம் வந்தது.  அந்த நிதித்துறை கடிதத்தில் (29593A/Finance (Pension) Department 2009 நாள் 25-08-09) இறந்தவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை மற்றும் அதற்கு ஈடான அரசுப் பங்கு இவற்றிற்கு 8 சதவீத வட்டி போட்டு வாரிசிடம் கணக்கு முடித்துவிடுங்கள் என மத்திய அரசு நிதி அமைச்சக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் செயல்படவும் என அனைத்து துறைக்கும் எழுதியுள்ளது.

ஏதாவது ஒரு வகையில் தனது ஓய்விற்கு பிறகு அல்லது இறப்பிற்கு பிறகு தனது வாரிசுகளுக்கு ஒரு சொற்ப தொகையாவது பென்சன் என கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வயலை விற்று அரசியல்வாதிக்கு செலுத்தி பணிக்கு வந்து பணிபுரிந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி இது.  ஊருக்கு ஒரு நிதி நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணம் பெருமளவில் வசூலானவுடன் ஓடிப்போவதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமில்லை.

ஆனால் இதை எதிர்த்து ஒன்றுபட வேண்டிய தொழிலாளார் வர்க்கம் ஜெயா அரசும் கருணாநிதி அரசும் போட்டி போட்டு வளர்த்துவிட்ட 28 தொழிற்சங்கங்களால் பிளவுபட்டு நிற்கிறது.  போலி கம்யூனிச தோழர்களோ அவ்வப்போது சம்பிரதாய போராட்டங்களையும், ஒரு நாளில் கைதாகி திருமண மண்டபத்தில் கூத்தடித்துவிட்டு மாலை வீடு திரும்பும் போராட்டங்களையே முன்னெடுப்பதுடன் அது அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கண்ணாயிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புகளிலிருந்து வெளிவந்து ஒன்றுபட்டு போராட்ட இயக்கங்களை முன்னெடுப்பது ஒன்றே இவற்றிற்கெல்லாம் தீர்வாக அமையும். (இந்த துறையில் நடைபெறும் பணி நியமனம் முதல் கூண்டு கட்டுமானம், விபத்து இழப்பீடு வரை உள்ள ஊழல்களின் விபரம் தொடர்ந்து எனது அடுத்த கட்டுரையில்)

_____________________________________________________

– சித்திரகுப்தன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்