privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

-

Suguna-poultry-chicken

விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

1980-களின் நடுவில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுப்படுத்தின. அரசின் கோழிக் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக்  குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை கொண்ட சிறிய பண்ணைகளை உருவாக்கி, தமிழகத்தில் பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் முதலான பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமிருந்து கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கிக்கொண்டனர். இதே காலத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டாப்கோ-TAPCO) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது.

ஆனால் 1990-களில் தனியார்மய-தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்ட பிறகு, அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை என உலகவங்கி உருட்டி மிரட்டத் தொடங்கியதும், உலக வங்கியின் கட்டளைப்படி, நிதி ஒதுக்கீட்டை அரசு நிறுத்தியதால் விவசாயிகளுக்குத் தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. அரசு திட்டமிட்டே, அரசு நிறுவனங்களை ஒழித்தது. இலட்சக்கணக்கில் எந்திர சாதனங்களுக்குச் செலவாகும் என்பதால், கறிக்கோழி குஞ்சுகளை விவசாயிகளால் உற்பத்தி செய்யவும் முடியாது. இதன் விளைவாக, தனியார் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி வியாபாரத்தில் ஈடுபட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கோழிக்குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை விவசாயிகள் முற்றாகச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. மேலும், விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட இயலாத நிலைமையையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.

கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில், ஒப்பந்த விவசாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக் குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோசனைகளையும் கொடுக்கும். கோழிக் குஞ்சு வளர்ப்பிற்கான கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியைக் (உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 முதல் அதிகபட்சமாக 2.50 வரை) கொடுத்துவிட்டு கோழிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தொடக்க காலத்தில் 500, 1000 கோழிகளை வளர்க்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அடுத்ததாக, குறைந்த பட்சமாக 5000 கறிக்கோழிகள் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டும், நிறுவனத்தினர் சொல்லும் விதத்தில் கொட்டகை அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டும் பல லட்சங்கள் முதலீடு செய்ய வாய்ப்பில்லாத சிறு விவசாயிகளை வெளியேற்றின. இன்னொருபக்கம் கறிக் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் வியாபாரிகளுக்குப் பல சலுகைகள் கொடுத்து தன் பிடியில் கொண்டு வந்து ஏகபோகத்தை நிறுவியுள்ளன.

கறிக்கோழி-பிராய்லர்-சிக்கன்-கோழிப்-பண்ணை

மேலும் இந்நிறுவனங்கள், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி (Broiler Co-ordination Committee -BCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழியின் விலையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிவிக்கும் கறிக்கோழிக்கான பண்ணை விலை என்பது விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலை அல்ல; விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கமிட்டி அறிவிக்கும் பண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டுதான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் நுகர்வோருக்கான கறிக்கோழி விலையைத் தீர்மானிக்கின்றனர்.

இப்படிச் செயல்படும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்றுதான், சுகுணா. இது, கோயம்புத்துரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று இந்நிறுவனம் 11 மாநிலங்களில் 8,000 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகளிடம் கறிகோழி ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நேரடியான சில்லறை விற்பனை இறைச்சிக் கடைகளை (சுகுணா டெய்லி ஃபிரஷ்) திறந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் வாரம் ஒன்றுக்கு 80 லட்சம் கறிக்கோழிகளைச் சந்தைக்குக் கொண்டு வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 3200 கோடி ரூபாய்களாகும். ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.,

கோழி உட்கொள்ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40-45 நாட்களுக்குள் 2 கிலோ ஏறினால் அதிகபட்சமாக ரூ 5.00 (கிலோவுக்கு 2.50 ரூ என்ற வீதத்தில் ) கூலியா கொடுக்கப்படுகிறது. ஆனால், கறிக்கோழியின் எடை அதிகரிக்க ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6.00 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.

பொதுவாக கறிக்கோழி உற்பத்தியில் குஞ்சுகளின் தரம், தீவனத்தின் தன்மை மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவைகளே கோழியின் வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கின்றன. இவையனைத்தும் சுகுணா போன்ற ஒப்பந்த விவசாய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயிகளின் கட்டுப்பாட்டில் வெறும் கோழிக் கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களது உழைப்பு மட்டுமே இருக்கிறது. கறிக்கோழி உற்பத்தியில் ஒரு நாள் வயது உள்ள தரமான கோழிக்குஞ்சு 50 கிராம் இருந்தால்தான் சீக்கிரம் எடை கூடும். ஆனால் 38 கிராம் எடை கொண்ட சுகுணா நிறுவனத்தின் குஞ்சுகள் தரமற்றவை. சுகுணா நிறுவனத்தின் தீவனத்தின் தரத்தைப் பொருத்த வரையில், இடுபொருட்களின் விலைக்கு ஏற்பவும், கறியின் விலைக்கு ஏற்பவும் தரம் மாறுபடுகிறது. உதாரணமாக, பறவைக் காச்சல் நோய் பரவி கோழிக்கறி விலை சரிந்தபோது, கோழிகளுக்கு தரம் தாழ்ந்த தீவனத்தை கொடுத்து தன் நட்டத்தை சுகுணா நிறுவனம் குறைத்துக் கொண்டது. கோழிகள் தீவனத்தை தின்றும்கூட எடை ஏறவில்லை. இதன் ஊடாக ஒட்டு மொத்த நட்டத்தையும் விவசாயிகளின் தலையில் அந்நிறுவனம் சுமத்தியது. வேறு காரணங்களால் சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களில், கோழிகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்வதன் மூலமாக இந்நிறுவனம் நட்டத்தை விவசாயிகளின் பக்கம் தள்ளுகிறது.

இன்னொரு பக்கம், சந்தை ஏறுமுகமா இருக்கும் காலகட்டத்தைக் கணக்கில் கொண்டுதான் அதற்கேற்ப இந்நிறுவனம் விவசாயிகளுக்குக் கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறது. குறிப்பாக, கறிக்கோழி வியாபாரம் இறங்குமுகமாக உள்ள புரட்டாசி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் இந்நிறுவனத்தால் கோழி உற்பத்தி திட்டமிட்டு நிறுத்தப்படுகிறது. 5000 கோழிகளுக்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொட்டகையைக் கடன் வாங்கி உருவாக்கிய விவசாயிகள், இப்படி பல மாதங்கள் கோழிகள் இல்லாமலே வெறுமனே கொட்டகை கிடப்பதால் பெருத்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். நட்டம் முழுவதும் விவசாயிக்கு; இலாபம் முழுவதும் சுகுணாவுக்கு. இந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்காமல் இருக்க வெற்று பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி விவசாயிகளை இந்நிறுவனம் அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது. இப்படி விவசாயிகள் நட்டப்பட்டு கறிக்கோழிகளை வளர்த்து சந்தைக்கு வருவதுதான் “சுகுணா சிக்கன்’’! விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி உருவானதுதான் சுகுணாவின் “இளசான, மிருதுவான, தரமான சிக்கன்’’!

நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்த விவசாயிகள், வளர்ப்பு கூலியா உயிருள்ள கறிக்கோழியின் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு குறைந்த பட்சமாக 3.50 ரூபாயும், 50 கிராம் எடை கொண்ட குஞ்சு, தரமான தீவனம், மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் முழுமையாக கொட்டகையைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகக் கறிக்கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கவேண்டும் எனவும்; வெற்றுப் பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி மிரட்டுவதை நிறுத்தக் கோரியும் சுகுணா நிறுவனத்துக்கு எதிராகப் போராடினர். சுகுணா நிறுவனமோ பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது, கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாது என்று திமிராக அலட்சியப்படுத்தியது. அரசோ கண்டும் காணாமலும் இருந்தது. விவசாயிகள் கோழிகளை பட்டினி போட்டு, இறந்த கோழிகளை சுகுணா அலுவலகத்தின் முன் கொட்டிய பிறகுதான், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. சுகுணாவின் அடாவடித்தனத்தை எதிர்க்க வக்கற்ற அரசோ பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடகமாடியது. இறுதியில் சுகுணா நிறுவனம், உயிருள்ள கோழிக்கு எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.3.50 தருவதாக ஒப்பு கொண்டதால் தற்காலிகமாகப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று வரை சுகுணா, பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. போராடுகிற பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குக் கறிக்கோழிக் குஞ்சுகள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளை ஓரணியில் திரள விடாமல் பிரித்தாளும் சதிவேலைகளைச் செய்து வருகிறது.

தனியார்மய-தாராளமயக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழக அரசோ, கால்நடை பராமரிப்புத் துறையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமோ கறிக்கோழி ஒப்பந்த விவசாய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறையும் இல்லை. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை!

கூலி உழைப்பாளிகளை மட்டுமின்றி சிறு உடமையாளர்களையும் சுரண்டிக் கொழுத்து ஏகபோகத்தை நிறுவுவதுதான் முதலாளித்துவம். விவசாயம் நசிந்து போனதால், வேறுவழியின்றி கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட சிறு விவசாயிகளின் நிலம், நீர், உழைப்பைச் சுரண்டி போண்டியாக்கிவிட்டு, அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதான் ஒப்பந்த விவசாயத்தின் நோக்கம் என்பதை சுகுணா நிறுவனத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இந்நிலையில், ஒப்பந்த விவசாயத்துக்கு அரசின் பாதுகாப்பைக் கோரும் போராட்டங்களோடு, தனியார்மய-தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான், ஏகபோக கோழிப்பண்ணை நிறுவனங்களின் இரும்புப் பிடியிலிருந்து கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் விடுபட முடியும்.

___________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
___________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

  1. கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்! | வினவு!…

    ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா…

  2. As a Vet, i fully agree with your comment… Few years back, i was working veterinary consultant in Suguna. Most of the farmers in contract farming are getting loan from Bank. Due to irregular supply of input ingridient and mortality of chicks with in 3-5 percent more than that level the farmer will bear the burden. So most of the farmers fall in the trap of indeptness.

  3. நம்ம விவசாயத்தையும், விவசாயிகளையும் அரசு முதல் ஆட்சியாளர்கள் வரை அனைவரும் கிட்டத்தட்ட கைகழுவிவிட்ட நிலையில் வினவு மட்டும் தொடர்ந்து அவர்களின் குரலாய் ஒலித்து வருவது பாராட்டுக்குரியது.

  4. புரட்சிகர சிந்தனையினை துண்டக்கூடிய பதிவுகளையும் விவாதங்களையும் இட்டு அதில் வெற்றி அடைந்து வரும் வினவு தோழர்களுக்கு,
    வலைப்பதிவு உலகிற்கு அறிமுகம் ஆகும் இந்த இளமாறனின் வாழ்த்துக்கள்.

    //விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது//

    கோழி வளர்ப்பினை மேற்கொள்ளும் விவசாயிகளையும், அவர்களை சுரண்டி கொழுக்கும் சுகுணாவையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஆரம்பத்தில் கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அரசு, உலகமயக்கொள்கை காரணமாக விலகி கொண்டு விட்டதை அறியும் போது இன்று சுகுணா விவகாரத்தில் கலைஞர் அரசு மொன்னையாக பஞ்சாயத்து பேசியதன் யோக்கியதை எதற்காக என தெரிகிறது.

    -இளமாறன்

  5. இப்படியாக ‘உழைப்பால் உயர்ந்து’ கனவுகளை அடைவதைப் பற்றி இவர்கள் வாந்தி எடுப்பதை நம் ஊடகங்களும் பதிப்பகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதி சாமியாடுகின்றன!

    நம் இளைய தலைமுறையினரும் இந்த ‘சாமியாட்டத்தை’ப் பார்த்து உருவேறி ‘உழைப்பால் உயருமாறு’ வேண்டுகிறேன்!!!!

  6. மிகச் சிறந்த பதிவு.

    கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இனியாவது விழிப்படைய வேண்டும். இன்னமும் தங்களின் சாதிச் சங்கமோ, தங்களின் ஓட்டுக்கட்சியோ இதற்கு வழிகாட்டுவார்கள் என்று நம்பிக்கொண்டிராமல் இந்த நிலைக்குக் காரணமான தாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தில் புரட்சிகர சக்திகளோடு தங்களை இணைத்துக் கொள்வதே சாளச் சிறந்தது.

    ஊரான்.

  7. காங்கிரஸ், திமுக கட்சிகளுடன் நான்கு வருடங்கள் முன்பு கூட்டணியில் இருந்த பொழுது கம்ம்யுனிச கட்சிகளின் நிலை இந்த விசயத்தில் என்னவாக இருந்தது.

    நல்லகன்னுவோ, மகேந்திரனோ, , பால்பரதியோ, சிவபுன்னியமோ இது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்களா. இருந்தால் தெரிவிக்கவும்.

    • போலி கம்யுனிஸ்ட்டுகளின் டவுசரை கிழித்து எத்தனை முறை வினவில் எழுதினாலும் இப்படி ஒரு பின்னூட்டமா?
      திரும்ப திரும்ப பேசுர நீ.. திரும்ப திரும்ப பேசுர நீ.. திரும்ப திரும்ப பேசுர நீ…. திரும்ப திரும்ப பேசுர நீ………..

  8. பிரணாப் ம்ய்கர்ஜி சொன்னது போல போன ஆட்சியில், மத்தியஅரசு மூலமாக நல்ல திட்டங்கள் நடந்ததேர்க்கு எல்லாம் இடது சாரிகள் காரணம். குறைபாடுகளுக்கு எல்லாம் காங்கிரஸ் காரணம்

  9. அடுத்து நகர்ப் புறத்தில் நடக்கு௦ ரியல் எஸ்டேட், கைபேசி தனியார் நிறுவன வணிக தந்திரங்கள் என எழுத கொட்டி கிடக்கின்றன உங்களுக்கு

  10. //இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.//
    என்னது பெரு முதலாளித்துவ நிறுவனங்களா? என்ன காமெடி கீமடி பண்ணலையே?
    இதில் பயனியர் திவால் ஆகிவிட்டது,சாந்தி பார்ச்சூன் தொழில் நடத்த முடியாமல் தேங்காய் எண்ணெய் விற்கப் போய்விட்டு பயனியர்(திவால்) தயவால் மீண்டும் சந்தைக்கு திரும்பி இருக்கிறது.மேலும் BCC என்பது பயனியர் – சுகுணா அல்லாத மற்ற நிறுவனங்களால் அமைக்கப் பட்டது சுகுணாவும் பயநியரும் தனியாக விலையை நிர்ணயித்து வந்தார்கள் (இந்த இரண்டும் ஒரே சாதியை சேர்ந்த தெலுங்கு வந்தேறிகளின் நிறுவனங்கள் ஆகவே ஒரே கூட்டணியாக இருந்தார்கள்)
    இதில் பயனியர் துவக்கும் பொழுது அதன் உரிமையாளர் ஒரு சிறு விவசாயியே.தனது தோட்டத்தை விற்றே நிறுவனம் தொடங்கினார்.
    மேலும் இதில் விவசாயிகளின் மீது தவறே இல்லை என்றும் சொல்ல முடியாது.
    *.அவர்கள் கொடுக்கும் தீவனத்தை எடுத்து மாடுகளுக்குப் போடுவது.
    *.ஞாயிற்றுக் கிழமையானால் சரக்கு அடித்துவிட்டு கோழிகளில் ஒன்று இரண்டை அடித்து சாப்பிட்டுவிட்டு பின்னர் கோழி செத்து விட்டது என்று கணக்கு காட்டுவது.
    *.சரியாக பராமரிக்காமல் இருப்பதால் பல கோழிகள் சாவதற்கு காரணமாகவும் இருக்கிறார்கள்.
    *.மேலும் எந்த பெரு நிறுவனமுமே விவசாயிகளை வா வா என்று அழைக்கவில்லை விவசாயிகள் தான் கடன் வாங்கியாவது பண்ணை அமைத்தார்கள் பின்னர் பேராசைப் பட்டு மேலும் கடன் வாங்கி விரிவாக்கம் செய்தார்கள் இப்பொழுது முழிக்கிறார்கள்.
    சென்னையில் உக்காந்துகொண்டு அடிச்சு விடாதீர்கள். நன்றாக விவரங்களை தெரிந்துகொண்டு எழுதுங்கள்.கம்முனிச கண்களுக்கு பார்ப்பதெல்லாம் சிவப்பாகவும் சுரண்டலாகவுமே மட்டும் தெரிகறது போலும்

    • THIS IS RIDICULOUS SIR.LAST WEEK I KNOW ABOUT THIS ARTICLE AND TODAY ITSELF GO THROUGH IT.YOUR COMMENT IS VERY BAD AND IMMATURE.ALL THE INTEGRATING COMPANIES CANVASSING IN A NEW AREA WITH THE HELP OF BANKS IN THAT AREA.(BUT NOWADAYS NO ONE BANK IS NOT READY TO FINANCE THE POULTRY FARMERS-THEY KNOW THAT INCOME FROM POULTRY IS NOT EVEN MEET THE BANK INTEREST).I CAN GIVE YOU THE DETAILS ABOUT THE BETRAYING OF FARMERS BY THE INTEGRATOR S,IF YOU GIVE YOUR MAIL ID .I REQUEST YOU TO CHANGE YOUR IDEA

  11. //கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.//

    மதிப்பு கூட்டப்பட்ட கோழிக்கறி பாகங்களுக்கு, மட்டுமே அத்தகைய விலை கிடைக்கிறது! பண்ணை கொள்முதல் விலை, ரூ40 – 70 வரையிலேயே உள்ளது! ரீடெய்ல் விற்பானையாளர்கள், கோழிக்கு ரூ30 – 50 வரை, சம்பாதிக்கிறார்கள்!

  12. கோழிகளை அரசே வளர்க்காமல், தனியாருக்குத் தாரை வார்த்ததற்கு, தாங்கள் படும் ஆதங்கத்தின், காரணம் – கலைஞரின் கையால், இலவச கோழி வாங்கி சாப்பிடும் வாய்ப்பு, பறிபோனாதே!

  13. சுகுனாவில் டைலி ப்ரெஷ் ல் எது அதிகம் விர்கிரதொ அத சொல்லாம 1 கிலோ விர்க்கு 20 ரூபை விலை அதிகமாக்கி கொள்ள அடிக்கிரது

    this is a latest News

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க