ஆகாஷ் டெலிசன்: கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள், உண்மையையும் சேர்த்து! | கவிதை

கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது எப்படி?

நீதியை மறுத்த கண்ணியமா?
அது எப்படி சாத்தியம்?

செத்துப் போனாலும் உடல்
இன்னும் நூறு நாட்களாக
உயிரோடு இருக்கிறது

உடல் நாறிக் கொண்டிருப்பது பிரச்சனை அல்ல
அந்த உடலோடு சேர்ந்து போலீசும் அரசும் சேந்தல்லவா
நாறிக் கொண்டிருக்கிறது!

எட்டு அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாடு கண்டதுண்டா?
வாய்பிளந்து பேசியவர்களும் வாய்ப்பிளந்து பார்த்தவர்களும்
இப்போதும் வாய் பிளந்தபடியே இருக்கிறார்கள்!

எட்டு அமைச்சர் அல்ல எண்பது அமைச்சர்கள் இருந்தாலும்
ஆகாஷ்களுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை‌

சாதி புத்தி அரசின் உயிர் நாடியில் அல்லவா குடி கொண்டிருக்கிறது!

முதல் தகவல் அறிக்கையிலும் கண்ணியம் இல்லை
விசாரணையிலும் கண்ணியம் இல்லை
நீதிமன்ற உத்தரவுக்கு போலீஸ் கீழ்படியவில்லை
அதை நீதிமன்றம் கேட்கவில்லை
ஆஹா ! கண்ணியம் எப்படி எல்லாம் இருக்கிறது பாருங்கள்

அந்தக் கண்ணியத்தின் ஆதாரத்தூண்கள் உத்தரவிடுகின்றன கண்ணியத்தோடு அடக்கம் செய்யுங்கள்

கொலை செய்யப்பட்டவர்
சற்று நேரத்தில் மண்ணில் புதைந்து விடுவார்
கொலை செய்தவர்கள் மண்மீது நின்று கொண்டிருப்பர்

கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள்
அப்படியே உண்மையையும் சேர்த்து

பொது இடங்களில் குடிநீர் அருந்தவும்
பொது வழிப் பாதையை பயன்படுத்தவும்
கோயிலுக்குள் நுழையவும்
சாதி – மதம் கடந்து காதலிக்கவும்
மணம் முடிக்கவும்
கண்ணியமான உரிமை இல்லை

ஆனாலும் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள் என்கிறது நீதிமன்றம்

எப்போதும் மறந்து விட வேண்டாம் கண்ணியத்திற்கும் சாதி உண்டு

இன்று ஆகாஷை புதைக்கும் போது கண்ணியத்தையும் புதைத்து விடுங்கள் அதுவாவது தப்பித்துப் போகட்டும்!


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க