“மாற்று அரசியல்”, “தூய சக்தி” போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள விஜய்யின் த.வெ.க., முதல் மாதத்திலேயே தனது உண்மை முகத்தை வெளிகாட்டத் தொடங்கிவிட்டது. குதிரைப் பேரம், பல ஆயிரம் கோடி ரூபாய் கனிமவளக் கொள்ளைக்கான ஏற்பாடுகள், கார்ப்பரேட் சேவை, வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் மோடி பாணியிலான “கோயபல்ஸ்” பரப்புரைகள் அனைத்தும் கொடிகட்டிப் பறக்கின்றன.
திரைக்கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு அமைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகள் எப்படிக் கொள்ளைக் கும்பலின் ஆட்சியாக, ஜனநாயக விரோத – மக்கள் விரோத ஆட்சியாக இருந்தனவோ, அதைப் போலவே விஜய்யின் ஆட்சியும் அமைந்திருக்கிறது.
குதிரைப் பேரமும்
த.வெ.க. வாஷிங் மெஷினும்
த.வெ.க. தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ‘மதச்சார்பற்ற’ அரசை அமைக்க விரும்புவதாகவும், தாங்கள் ஆட்சியமைப்பதற்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டுமெனவும் விஜய் வேண்டுகோள் விடுத்தார். ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பா.ஜ.க. சதித்தனமாக தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற காரணத்தைக் கூறி தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த காங்கிரசு, சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு ஆதரவு கொடுத்து ஆட்சியமைக்க உதவின.
ஆனால், விஜய்யும் அவரது கட்சியினரும் துளியும் நேர்மையின்றி, அ.தி.மு.க-வை உடைத்துத் தங்களுக்கு நிலையான ஆதரவை உருவாக்கும் நோக்கில், சி.வி.சண்முகம் – வேலுமணி கும்பல் மூலம் குதிரைப் பேரத்தைத் தொடங்கினர். இக்கும்பல் எடப்பாடியிடமிருந்து பிரிந்து வந்து, 25 எம்.எல்.ஏ-களுடன் சட்டமன்றத்தில் விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது.
விஜய் ஆட்சிக்கு வந்த பத்து நாட்களில், தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத மிகக் கேவலமான குதிரைப் பேரத்தையும் பிழைப்புவாத அரசியலையும் கண்டு மக்கள் விக்கித்து நின்றனர்.
எனினும், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸ் போன்றோர் கடுமையாக முயற்சி செய்தும், அ.தி.மு.க-வில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-களை பிய்த்தெடுக்க முடியவில்லை. அ.தி.மு.க-வை உடைப்பதில் தோல்வியடைந்த சண்முகம் – வேலுமணி கும்பல், கட்சித் தாவல் காரணமாகத் தங்கள் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடுமோ எனப் பீதியடைந்தது. மேலும், சண்முகம் – வேலுமணி தரப்பைச் சேர்ந்த நால்வர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்ததால் இக்கும்பலின் அடித்தளம் சரியத் தொடங்கியது. இதனையடுத்து, இக்கும்பல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்தது.
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநில நிர்வாகி கமலக்கண்ணன் போன்றோரும் த.வெ.க-வில் இணைவது என இந்தக் கேவலமான ‘இணைதல் படலம்’ தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆதவ் அர்ஜுனாவோ, அ.தி.மு.க-வின் அடித்தளத் தொண்டர்கள் த.வெ.க-வையே “உண்மையான அ.தி.மு.க.” என்று பார்க்கிறார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
தேர்தல் மேடையில் அ.தி.மு.க-வை ஊழல் அரசியலின் அடையாளமாகச் சித்தரித்தார் விஜய். ஆனால், இன்று அதே அ.தி.மு.க. பெருச்சாளிகள் த.வெ.க-வுக்குள் வந்தவுடன் “தூய சக்தி”யாக மாறிவிடுகிறார்கள். அகில இந்திய அளவில் பா.ஜ.க-வும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல்வாதி; பா.ஜ.க-வில் சேர்ந்தவுடன் தேசியவாதி. வேறுபாடு என்னவென்றால், அங்கே “காவி வாஷிங் மெஷின்”; இங்கே “விசில் வாஷிங் மெஷின்”.
கொள்ளையாட்சியின் துவக்கம்
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம், ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து த.வெ.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், நிலுவையில் உள்ள 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமங்களை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை முடுக்கிவிட்டு, மருத்துவத்துறை தனியார்மயத்துக்குச் சாமரம் வீசத் தொடங்கிவிட்டது. மருத்துவமனைகள் உரிய ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றிய உடனேயே தற்காலிக உரிமங்கள் வழங்கப்படும் என்றும் ‘விரிவான ஆய்வு’களுக்குப் பிறகு நிரந்தர ஒப்புதல்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக திருட்டு தீவிரமாக நடந்துவருவது அம்பலப்பட்டு நாறியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டின் தனியார்-கார்ப்பரேட் மருத்துவமனைகள் மக்களின் பணத்தையும் உயிரையும் குடித்தன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இணையவழி மூலம் உரிமங்களை வழங்குவது, மருத்துவமனை என்ற பெயரில் உயிர்கொல்லி கூடாரங்களை உருவாக்கவே வழிவகுக்கும். மேலும், உரிமம் வழங்குவது என்ற பெயரில் பல கோடி ரூபாய் லஞ்ச வேட்டை தலைவிரித்தாடும்.
மறுபுறம், பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராடி வருகின்றனர்; அரசு மருத்துவமனைகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளின்றியும், போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமலும் தவித்து வருகின்றன. இவற்றையெல்லாம் சரிசெய்வதைப் பற்றி பேசாமல், தனியார் மருத்துவமனைகளை ஊட்டி வளர்ப்பதென்பது பொது சுகாதாரக் கட்டமைப்பை திட்டமிட்டு சீரழிக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அங்கமாகும்.
இதைப் போலவே கல்குவாரிகளில் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான கல்குவாரிகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமாகவும், அனுமதி காலம் முடிந்தும், விதிகளை மீறியும் இயங்குபவையே. அவற்றின் பின்னால் அரசியல்வாதிகள், அவர்களின் பினாமிகள், அதிகாரிகள், போலீசு செல்வாக்கு, லாரி உரிமையாளர்கள், உள்ளூர் ரவுடிகள் எனப் பெரிய வலைப்பின்னலே இருக்கிறது. இப்போது இவற்றில் திடீரென ஒரே சமயத்தில் “ஆய்வு” என்று அமைச்சர் அறிவித்தால், நமக்கு எழும் கேள்வி இதுதான்: உண்மையில் கொள்ளையை நிறுத்தப் போகிறீர்களா? அல்லது பழைய கமிஷன் முகவரியை மாற்றப் போகிறீர்களா?
தற்போது அரசு 431 கல்குவாரிகளில் நடத்திய சோதனையிலேயே 36 சதவிகிதம் (155) குவாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய புதிய த.வெ.க. அரசு, சில குவாரிகளுக்குத் தற்காலிகத் தடை விதித்தும், லாரிகளைப் பறிமுதல் செய்தும் ‘திடீர் ஆய்வு’ நாடகமாடுகிறது. கனிமவள மாஃபியா கும்பல்களைக் கைது செய்து சிறையிலடைத்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பறிமுதல் செய்யாமல், குவாரிகளை அரசுடைமை ஆக்காமல், அமைச்சர் நடத்தும் எந்த ஆய்வாக இருந்தாலும் அதன் நோக்கம் ஊழல் ஒழிப்பல்ல. மாறாக அது கமிஷனைக் கறாராகக் கறக்கும் ‘வசூல் வேட்டை’க்கான அஸ்திவாரமாகத்தான் இருக்கும்.
வேலூர் மாவட்டத்திலுள்ள கானியம்பாடி பகுதியில் த.வெ.க. நிர்வாகி ஒருவர் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை, தனிப்பட்ட ஒரு நபரின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. இதேபோல, டாஸ்மாக் பார்களில் த.வெ.க. நிர்வாகிகள் கமிஷன் கேட்டு மிரட்டும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அதிகாரத்தின் வாசனையை நுகரத் தொடங்கியதும், கொள்ளையடிக்கத் தொடங்கும் கும்பலின் வெறி!
மக்களை ஏமாற்றும் ஆட்சி
வானத்தையே வில்லாக வளைப்போம் என்ற அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் “கஜானா காலி”, “தி.மு.க. மட்டும் உடனே செய்துவிட்டதா?” என முந்தைய ஆட்சியின் மீது பழி போடும் ஏமாற்று அரசியலை முதல் நாளில் இருந்தே விஜய்யின் அரசு தொடங்கிவிட்டது.
தேர்தல் பரப்புரையில், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ‘முழு பயிர்க்கடன் தள்ளுபடி’ என முழங்கினார் விஜய். ஆட்சிக்கு வந்ததும் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு வெறும் ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி என பல நிபந்தனைகளை விதித்து விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தும்படி 2024-இல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறி தனது துரோகத்தை த.வெ.க. அரசு மூடிமறைக்கிறது. தேர்தலில் வாக்குறுதி அளிக்கும் போது இக்கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது த.வெ.க-விற்கு தெரியாதா?
விவசாயிகளுக்கான மானியங்கள், சலுகைகளை வெட்டிச் சுருக்க வேண்டுமென்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையில்தான் ரிசர்வ் வங்கி இக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த விவசாய விரோத கட்டுப்பாட்டிற்கு எதிராக வாய்திறக்காமலும், கட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்காமலும் மக்களுக்கு துரோகமிழைக்கிறது விஜய் அரசு.
அதைப் போல், 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக த.வெ.க. அரசு அறிவித்தது; ஆனால் எங்கெங்கு கடைகள் மூடப்பட்டன என எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட பல கடைகள் 100 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும், பல இடங்களில் தனியார் பார்கள் திறக்கப்பட்டுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தனியார்மயமாக்குவது குறித்து த.வெ.க. அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. அதாவது, “போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க., ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதையின் பிடியில் சிக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதைப்போலவே “மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்ற வாக்குறுதியும் மோசடி என அம்பலமாகிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே அந்தச் சலுகை பொருந்தும் என வார்த்தை ஜாலம் காட்டி த.வெ.க-வினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.
தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க – அ.தி.மு.க-வுடன் போட்டி போட்டுக்கொண்டு த.வெ.க. வாக்குறுதிகளை வாரி வழங்கியது. எதிர்பாராத வகையில் ஆட்சியில் அமர்ந்ததும், உடனே எதுவும் செய்ய முடியாது என தமிழ்நாட்டின் நிதிநிலையை காரணம் காட்டி, தனது இணைய அடியாட்படை மூலம் ரீல்ஸ் போட்டு மக்களை ஏய்க்கும் கேவலமான உத்தியைக் கையாளுகிறது.
பா.ஜ.க-வுக்கு அடிபணியத் தயாராகிவிட்ட ஆட்சி
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரத் தலையீட்டை எதிர்த்து தமிழ்நாடு தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், “முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை” என்ற உயர்கல்வி அமைச்சரின் பேச்சு, மாநில உரிமையைப் பறிகொடுக்கத் தயார் என்ற மறைமுகச் செய்தியை மோடி அரசுக்கு அனுப்புவதாக இருக்கிறது.
பக்ரீத்துக்கு முந்தைய நாளில், பொது இடங்களில் மாடு, கன்று வெட்டத் தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து விஜய் அரசு வாயே திறக்கவில்லை. அதே சமயத்தில் கச்சத்தீவுப் பிரச்சினை குறித்துக் கேள்வி எழுப்பினால் “நோ கமெண்ட்ஸ்” (கருத்து இல்லை) என நழுவுகின்றனர் த.வெ.க. அமைச்சர்கள். விஜய்யோ பா.ஜ.க-வை “கொள்கை எதிரி” என்று கூறியதுடன் சரி, அதற்குப் பிறகு எந்த மக்கள் பிரச்சினையிலும் பா.ஜ.க-வை விமர்சிப்பதே இல்லை. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவதைக் கண்டிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பது பற்றி மோடியிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு விஜய் மாவீரராக இருக்கிறார்.
பா.ஜ.க. தமிழ்நாட்டில் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாமல் இருக்கலாம். ஆனால், த.வெ.க. ஆட்சியைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக நுழையும் வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படுகின்றன. மாநில உரிமைகளைக் கைகழுவத் துணிதல், கல்விக் கொள்கையில் சமரசம், ஆளுநரின் அதிகாரப் போக்கிற்கு அடிபணிந்து கிடத்தல், சிறுபான்மையினர் மீதான நீதிமன்றத் தாக்குதலில் கள்ளமௌனம், கார்ப்பரேட் திட்டங்களில் வேகம் – இவை அனைத்தும் அந்தக் கொல்லைப்புறக் கதவுகள்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மயிலாப்பூரிலும் ஸ்ரீரங்கத்திலும் இரண்டு பார்ப்பனர்களை நிறுத்தி வெற்றிபெற வைத்து, இருவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அளவைக்கல்லில் தீபமேற்ற வேண்டுமென வெறுப்பைத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட சி.டி.ஆர்.நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தொகுதியிலேயே வெற்றி பெறச்செய்து சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு அடித்தளம் அமைத்து, தமிழ்நாட்டை அடிமைப்படுத்தும் பயணத்தை த.வெ.க. சிறப்பாக தொடங்கியிருக்கிறது.
விஜய், தமிழ்நாட்டின் மோடி!
மோடிக்கு அடிபணிவது மட்டுமல்ல, விஜய் ஆட்சி நடத்தும் பாணியும் அப்பட்டமான மோடி பாணியே! பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், தயாரிக்கப்பட்ட உரைகள், ஐ.டி. விங் பரப்புரைகள் மூலம் போலி சாதனைக் கட்டமைப்பை மோடி உருவாக்குகிறார். நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அரசின் தோல்விக்கும் “முந்தைய ஆட்சிதான் காரணம்” என்று பல்லவி பாடுகிறார்.
விஜய்யும் அதே பாதையில்தான் பயணிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு “முந்தைய ஆட்சிதான் காரணம், கஜானா காலி” என கோயபல்ஸ் பாணியில் கதையளக்கிறார். ஒரு முதல்வராகப் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் ஓடி ஒளிகிறார்.
இதற்கும் மேலாக, மோடியின் ‘விஷ்வகுரு’ பிம்பம் போல, “விஜய் அடுத்த 50 ஆண்டுகளுக்கு உலக அரசியலையே தீர்மானிப்பார்” என அதீத ‘இரட்சகர்’ மற்றும் ‘உலகத் தலைவர்’ பிம்பத்தை ஜோதிடர்கள் மூலம் கட்டமைக்கிறார்கள். ஒரு தலைவரைக் கேள்விக்கு அப்பாற்பட்டவராக வைத்திருக்கும் மோடியின் பாசிச பாணியையே, விஜய் தன் சினிமா பிம்பம் மற்றும் ஐ.டி. விங் பரப்புரை மூலம் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் தொடங்கியுள்ளார்!
கொள்ளையாட்சியா, மக்கள் நலனா?
பழைய கட்சிகளின் ஊழல், மக்கள் விரோத நடவடிக்கைகள், ஜனநாயக விரோதப் போக்கு, கார்ப்பரேட் சேவகம் ஆகியவற்றால் விரக்தியடைந்த மக்களில் ஒரு பகுதியினரின் உணர்வை அறுவடை செய்துகொண்டு த.வெ.க. அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆனால், அதன் ஆட்சியில், ஊழல் பேர்வழிகள் வாஷிங் மெஷினில் சலவை செய்யப்படுகிறார்கள்; குதிரைப்பேரம் கொடிகட்டிப் பறக்கிறது. மோடி பாணியில் விஜய்யின் முதல் மாத ஆட்சி பல்லிளிக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி முதல்வரான விஜய், த.வெ.க. ஆட்சியில் தலைவிரித்தாடும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து வாய்திறக்கவில்லை. கஞ்சா, போதைப்பொருள் விற்பனையை தடுக்கவில்லை. சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட இளைஞர் போதைப்பொருள் கும்பலால் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொல்லப்பட்டுள்ளார். தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களும் மூடிமறைக்கப்படுகின்றன. கொள்ளையடிப்பதை மட்டுமே முழுமுதற் நோக்கமாக த.வெ.க-வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம், பா.ஜ.க. கொல்லைப்புறமாக நுழைவதைத் தடுப்பதற்காக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவளித்ததாகக் கூறிய தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள், முந்தைய ஆட்சியைப் போலவே தற்போதும் த.வெ.க. அரசை விமர்சிக்காமல் வேடிக்கைப் பார்க்கின்றன. விஜய்க்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு அளிக்கின்றன. இன்னொரு பக்கம், “த.வெ.க. ஆர்.எஸ்.எஸ்-இன் பிள்ளை” என விமர்சித்துவந்த வி.சி.க., இன்று அமைச்சரவையில் இடம் கிடைத்ததும், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கும், ஜோதிடர் நியமனம் போன்ற அபத்தங்களுக்கும் வக்காலத்து வாங்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்தப் போக்குகள், இக்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அழிப்பதோடு, அணிகளிடம் சந்தர்ப்பவாதத்தை ஊட்டி வளர்க்கவுமே பயன்படும்.
புதிதாக வந்திருக்கிறார்கள் என ஆறு மாதம் அமைதியாகக் காத்திருக்கச் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. த.வெ.க. ஆட்சியின் தொடக்கமே இவ்வளவு மோசமானதாக இருக்கும்போது, ஜனநாயக சக்திகள் இப்போது பேசவில்லை என்றால், நாளை பேச இடமே இருக்காது. தமிழ்நாட்டின் சமூகநீதி, மொழி உரிமை, பார்ப்பனிய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய அரசியல் பாரம்பரியத்தைத் தக்கவைக்க மறுக்கும் த.வெ.க. கும்பலின் கவர்ச்சிவாத – பிழைப்புவாதப் போக்கை மக்களிடம் உடனுக்குடன் தோலுரிக்க வேண்டிய நேரம் இது.
விஜய் ஆட்சியின் முகமூடியை இப்போது கிழிக்காவிட்டால், அது சாதாரண ஊழல் ஆட்சியாக மட்டும் நிற்காது; கேள்வி கேட்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கக்கூடிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாணியிலான கொள்ளை ஆட்சியாக, பாசிச கும்பலுக்கு வழியமைக்கும் ஆட்சியாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் பாசிச கும்பல் காலூன்ற விடாமல் எதிர்ப்பதும், விஜய் ஆட்சியின் மக்கள்விரோதப் போக்குகளை எதிர்ப்பதும் வேறுவேறானதல்ல… அதற்கான மக்கள் போராட்டம் இன்றிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
![]()
தமிழ்ச்சுடர்
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











