privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

-

தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.

இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:

விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே!
ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்!

விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில்.

ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.

இரண்டு நாட்கள் கழித்து “கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை” ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். “ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?” உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது.

மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் – ரிலையன்ஸ் பிரஷ்.

முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்..

ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.

“முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது? பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்” என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.

மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், “அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது” என்கிறார் ஜெயமோகன்.

இதென்ன, “ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்” என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது.
இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.

“பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா” என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் “அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?” என்று ஒரு பாமரன் கேட்டானாம். “இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்” என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி.
“திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.

தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:

தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.

பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, “முடியாது” என்று கைவிரித்தார்கள்.

இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன்.  தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.

சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று  சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.

இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.

உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! “தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்” என்கிறார் ஜெயமோகன்.

வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய  சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே!
இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு “சுட்டபழம் சுடாத பழம்” ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.

ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது.
வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.

இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.

ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.

மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.

இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.

“எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்” என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)

________________________________

  1. தலை,

    ஜெயமோகன் என்ன எழவும் சொல்லட்டும். நீங்க யாரோ இலக்கியவாதி யோட தத்துவவிசாரம்னு சொன்னீங்களே – அவரு சொன்னத சொல்லுங்க …

    கிலோ நூறு ரூவாய்க்கு விக்கிற நவ்வா பழ கூடைய வச்சுக்கிட்டு அந்த வியாபாரி சுதந்திரமா நடந்து போகமுடியுமா ? யாராவது அந்த ஆள கடத்திட்டு போய்ட மாட்டானுங்க ??

    தமிழ் நாட்டுல இருக்க தொழில் முறை எழுத்தாளர்கள் கொடுத்துவைத்தவர்கள். அவர்கள் எழுதும்முன் எத்தையும் படித்திருக்க தேவை இல்லை.

    அப்புறம், சிறந்த பதிவிற்கு நன்றி

  2. 3 days of wait is not futile…
    It’s rare to find articles with Polemical scope,
    either the debates are too crass or they are shallow.
    What you have presented is not only an informative insight
    but also a Brilliant Presentation of a Satire
    LADIES AND GENTLEMEN
    Presenting Vinavu – The One Place for Polemics
    LET WORDS and VERSES FLOW

  3. ஜெவை பற்றி அரசிலாக நீங்கள் அங்கத நடையில் எழுதிவிட்டதாக நிறைவு கொள்வதை அறியமுடிகிறது.ஆனால் அவர் எப்பொழுதோ நீங்கள் கொண்டாடும் அரசியலை இலக்கிய தளத்திலிருந்து [பார்க்க: நவீன தமிழ் இலக்கிய அறிமுகம். உயிர்மை பதிப்பகம்]அதன் தன்மையையும்,தரத்தையும்,வெளிப்பாட்டு முறையையும் விமர்சித்து விட்டார்.அதுவே உங்களை போன்ற இயக்கவாதிகளுக்கு ஒரு சரியான‌ அரசியல் விமர்சனம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.எனவே முறையாக முதலில் நீங்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும்.பதிலளித்துவிட்டுத்தான் அவருடைய பிற [சொந்த,நாவல் பழம் விசயம் மற்றும் பிற பொது] சமாச்சாரங்கள் குறித்து வினவ முடியும் !

  4. ////////parasu
    11:29 நான் இல் ஜூலை 26, 2008
    ஜெவை பற்றி அரசிலாக நீங்கள் அங்கத நடையில் எழுதிவிட்டதாக நிறைவு கொள்வதை அறியமுடிகிறது.ஆனால் அவர் எப்பொழுதோ நீங்கள் கொண்டாடும் அரசியலை இலக்கிய தளத்திலிருந்து [பார்க்க: நவீன தமிழ் இலக்கிய அறிமுகம். உயிர்மை பதிப்பகம்]அதன் தன்மையையும்,தரத்தையும்,வெளிப்பாட்டு முறையையும் விமர்சித்து விட்டார்.அதுவே உங்களை போன்ற இயக்கவாதிகளுக்கு ஒரு சரியான‌ அரசியல் விமர்சனம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.எனவே முறையாக முதலில் நீங்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும்.பதிலளித்துவிட்டுத்தான் அவருடைய பிற [சொந்த,நாவல் பழம் விசயம் மற்றும் பிற பொது] சமாச்சாரங்கள் குறித்து வினவ முடியும் !///////

    சு.ரா.வின் மரணத்தை வைத்து ‘நினைவின் நதியில்’ எழுதி கொண்டாட்டம் நடத்திய ஜெயமோகனுக்கு ‘நினைவின் குட்டை – கனவு நதி’ என்ற தலைப்பிட்டு புதியகலாச்சாரம் ஏற்கெனவே அந்த இலக்கியவாதிகளின் அற்பத்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. எனக்கு அதுமட்டும் தெரியும்.

    அந்தவகையில் இக்கட்டுரையும் மேற்படி இலக்கியவியாபாரியின் அற்பத்தனத்தை கடுமையாகச் சாடுகிறது. மிகவும் அருமையான கட்டுரையினைப் படைத்த தோழருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்!

    தோழமையுடன்,

    ஏகலைவன்.

  5. அருமையாக இக்கட்டுரையினைப் படைத்த தோழருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

    பதினேழாவது மாடியிலிருந்து குதித்து இருபத்தைந்து ரவுடிகளைப் பந்தாடும் (கற்பனையானாலும்) ரஜினி போன்ற கழிசடைகளை ‘தம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாததை இவராவது செய்கிறாரே’ என்ற பெருமூச்சையடக்கி விசிலாக வெளிப்படுத்தும் ரசிகக் கூட்டங்களைவிட தரத்தில் (அதாவது ரசனையில்) சிறிதும் குறையாத ரசிகர் கூட்டத்தை தன்னைச் சுற்றி உருவாக்கிவைத்துள்ளார் ஜெயமோகன் என்ற அற்ப(இலக்கிய)வாதி.

    ஜெயமோகனை அவரது ரசிக அம்பிகள் ரசிப்பதற்குக் காரணம் அவருடைய ‘கம்யூனிச எதிர்ப்பு’தான். அம்பிகளால் முடியாததை, முதலாளித்துவ ஆதரவு நடுத்தரவர்க்க யுப்பிகளால் முடியாததை ஜெயமோகனாவது செய்கிறாரே என்று! அவர்களின் விசில் சத்தங்களை கேட்கமுடியாது. ஆனால், பார்க்கலாம், படிக்கலாம். அதற்கு நீங்கள் http://www.jeyamohan.in என்ற வலைதளத்திற்குச் செல்லவேண்டும்.

    அங்கே கடிதங்களாக ஜெயமோகன் அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்து ‘கடிதத்திற்கு பதில்’ என்கிற தலைப்பில் எழுதுவார். அது அவரது ரசிகர்களின் பதில்களைவிடக் கீழான தரத்தில் இருக்கும். இப்படியாக தனது இலக்கிய பணியை இணையத்திலும் தொடர்ந்து வந்த ஜெயமோகனுக்கு “‘இந்திய தத்துவவியல்’ பற்றி உங்களுடன் விவாதிக்கவேண்டும்” என்ற வேண்டுகோளை நான் மின்னஞ்சலில் அனுப்பினேன்.

    அந்த மின்னசலினூடாக எனது வலைதளத்தைப் பார்வையிட்டு குலைநடுங்கிப்போன அவர், “உங்களின் எழுத்துக்களின் அதிதீவிர மதநம்பிக்கையை ஒத்த மனநோய்க்கூறான” எதுவோ இருப்பதாகவும் அதனால் என்னுடன் விவாதிக்க முடியாதென்றும் ஒதுங்கிக் கொண்டார். அவரது இப்படிப்பட்ட விமர்சனம் தனிப்பட்ட முறையிலானது அல்ல என்பதையும் அது எமது அரசியலை, கொள்கையை ஏளனம் செய்வதாக இருக்கிறது என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தி கடுமையாகக் கண்டித்தோம். அதற்கு நேர்மையாக பதிலலிக்க இயலாமையை தனது தளத்தில் மூன்று தொடர்கட்டுரைகளின் மூலம் சற்று தனித்துக்கொண்டார்.

    ஒரு கிலோ நவ்வாப்பழத்துக்காக அம்பானியின் தேவையை தமது வாசகர்களுக்கு அவர் உணர்த்த வேண்டிய சூழலை அவருக்கு உருவாக்கியது நான் இங்கே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலும் அதனைத்தொடர்ந்த எமது தோழர்களின் எதிர்வினைகளுமே. நம்மை எதிகொள்ள கையாலாகாத நிலையில், புரட்சியாளர்களை இழிவுபடுத்துவதும் அதற்குமாறாக அம்பானியை உயர்த்திப்பிடித்ததும் வெவ்வேறான செயல்கள் அல்ல. இரண்டும் ஒன்றுதான்.

    இப்படிப்பட்ட இழிநிலை இலக்கியவியாபாரியை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது இந்தக் (வினவு, வினைசெய் தளத்தின்) கட்டுரை.

    தோழமையுடன்

    ஏகலைவன்.

  6. தம் கட்டி ரெண்டு மைல் எய்தி அந்த எலக்கியவாதியான்ட விசாரன பன்றத்துக்கு பதிலா
    அவ்ர முத நாள் நைட்டு நல்லா பிரியாணி துன்ட்டு, சரக்கடிக்காம தூங்கி, மறுநாள் காலீல எய்ந்து கோயம்பேடு மார்கட்டான்ட போயி ‘ரிலைன்ஸ் வாள்க’ன்னு ஒரு அர அவர் கோசம் போட சொல்லுங்க… நவாப் பயம் இன்னா பலாப்பயமே பிரீயா கெடைக்கும்.

  7. ஜெயமோகன் சொல்வது சரி தான்!

    தொலை பேசி துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் தான் பேசுவதற்கான கட்டணங்கள் குறைந்தது,சரி தான் அதை ஏற்றுக்கொள்வோம்.
    அவர் பணிபுரியும் தொலை பேசித்துறையையும் அவரின் விருப்பப்படியே தனியார் முதலாளிகளிடமே அரசு ஒப்படைக்கட்டும்.அதன் பிறகும் இது போல எட்டு மணி நேரம் வேலை செய்து மாத சம்பளம் வாங்கிக்கொண்டு மூவாயிரம் பக்கங்களில் அவரால் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும் ! ஏனெனில் அவருக்குத்தான் கோடம்பாக்கம் இருக்கிறதே பிறகு என்ன‌ கவலை,எனவே கவலை இல்லை எனவே கட்டுரைகளை எழுதுவதிலும்,நாவல் பழம் ருசிப்பதிலும் பிரச்சனை இல்லை என்கிற உறுதியான முடிவுக்கு ஜெயமோகன் வரலாம். ஆனால் அரசு இந்த தனியார்மய நடவடிக்கையை அமல்படுத்தும் வரை அவர் காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை ஏனெனில் நாளையே ஜெ யின் விருப்பத்திற்கு விரோதமாக தொலை பேசித் துறை ஊழியர்கள் அரசை அம்பலப்படுத்தி இவற்றை தடுத்து நிறுத்தக்கூடும் எனவே அரசு தனியார்மயமாக்கும் வரை காத்திருந்து விட்டு பிறகு வெளியேறுவதை விட ஜெ இப்பொழுதே தனது வேலையை ராஜினாமா செய்து விடலாம் என்பது என் வேண்டுகோள்.

  8. Happy to see VINAVU getting More Hits off.
    Good that VINAVU is getting the support it deserves
    Thanks all for visiting and commenting…
    only issue is…the delay in between posts.
    Can’t wait for more

  9. சிறப்பான கட்டுரை தோழர் வாழ்த்துக்கள்!!

    உலகமய பொருளாதாரத்தின் விளைவாக விவசாயம் அடித்து நொறுக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவது இன்று நேற்றல்ல கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது, அப்பொழுதெல்லாம் விவசாயிகளின் மீது ஜெயமோகனுக்கு ஏற்படாத கரிசனம் ரிலையன்ஸ் கடையை விரித்து நவ்வாபழம் விற்க ஆரம்பித்தவுடன் வருகிறது. இப்பொழுது ரிலையன்ஸ் நாடெங்கும் சலூன் கடைகள் திறப்பதில் இறங்கியிருக்கிறான், கூடியவிரைவில் ஜெயமோகன் சிரைத்து கொள்ள சென்ற கதையை வாசகர்கள் இலக்கியமாக படித்து இன்புறலாம்.

    குறிப்பு: இக்கட்டுரையை கீற்று இணையதளத்திற்கு எனது மின்னஞ்சலின் வழியாக அனுப்பியிருந்தேன், அவர்கள் இக்கட்டுரையை முகப்பிலேயே வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் கட்டுரையின் கீழே வினவு தளத்தின் அருகில் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறார்கள், எனவே தாங்கள் அவர்களுக்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கவும்

    நன்றி

    தோழமையுடன்
    ஸ்டாலின்

  10. மிகவும் அருமையான கட்டுரையினைப் படைத்த தோழருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்!

    தோழமையுடன்,
    கதிர்.

  11. Nice article, and I may not buy into all thoughts.

    Do you know the wastage percentage of the individual sellers than the bulk sellers? Do you know organized selling is what EU is harping about? (Sandhaikadai in a single form)

    In Haiti, people are eating mud, mixed with tree fungus as there is no food.

    Anyway you should write on WTO, what Kamalnath achieved (little googling would help) to save 8000000 farmers.

    Saw in a friends blog about how he bought Tomato for 2 Rs/Kg in Hosur, while it costs Rs 8 in Bangalore.

    I grew up in Bengal, listening to Uncle Sam harping on Communism, learn’t more like that.

  12. இனி ஜெயமோகனுக்கு நவ்வாப்பழம் ருசிக்காது.
    சரியான இலக்கில் காத்திரமாக சுடப்பட்ட…
    சுட்ட பழம்..

  13. அன்புள்ள நண்பரே:

    உங்கள் பதிவுகளும், கருத்துகளும் நன்று. இந்தியாவில் உள்ள இடது சாரிகளின் கருத்து மற்றும் செயல் உலகம் குறித்து உலக ஞானமும், சமூக ஓட்டங்களும், விஞ்ஞான அறிவும் மிக்க நண்பர்களிடம் கருத்து பரிமாற்றமும், விவாதமும் கொள்ள விருப்பம்தான்; ஆனால் நான் இருப்பதோ வெகு தொலைவில்; இந்த மாதிரி கருத்துகள் சொல்வதற்கு முன்னரே, ரிவிஷனிஸ்ட், போலி என்றெல்லாம் முத்திரை குத்தபடும் அபாயம் இருப்பதால், மிகவும் யோசிக்க வேண்டியுள்ளது.

    இருப்பினும், இந்த கருத்து பரிமாற்ற முதற்படியாக; பொருளாதாரம், மேலான்மை குறித்த சில ஆய்வு கட்டுரைகளை இங்கு தருகிறேன். இதை எப்படி கொள்வதென்றால், ஒரு ஜனனாயக அமைப்பிறு உட்பட்டு, உழைக்கும் வர்க்கதினர்கான ப்லனையும், அதிகாரத்தையும் அடைவது என்பது பற்றி. இது வேளாண்மை தொழில் / தொழிலாளர் குறித்து அல்ல; உங்கள் கருத்துகளை உங்கள் தளத்திலோ, பதிலாகவோ அனுப்பவும்.

    உதாரணமாக:
    Aktouf, Omar. “Management and Theories Of Organizations In The 1990S: Toward A Critical Radical Humanism.” Academy OF Management Review 17.2 (1992): 407-431.

    Handy, Charles. “The Citizen Corporation.” Harvard Business Review (1997): 26-28.

  14. நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்! | வினவு!…

    இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரச…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க