privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!

மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!

-

“ஜூலை 18”

மாருதி நிறுவனத்துக்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர் போராட்டம்! போராடும் மாருதி தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!

புரட்சிகர அமைப்புகள் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி – ஆர்ப்பாட்டம்

—————

  • ஜூலை 18 மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி நாள்!
  • சங்கம் வைக்கும் உரிமைக்குப் போராடிய மாருதி தொழிலாளர்கள் மீது தொடர்கிறது அடக்குமுறை!
  • 2300 தொழிலாளர்கள் பணிநீக்கம்!
  • நிர்வாகமே சதி செய்து எச்.ஆர் அதிகாரியைக் கொன்றுவிட்டு, 143 தொழிலாளிகள் மீது கொலை வழக்கு!
  • ஓராண்டாக தொழிலாளிகளுக்குச் சிறை – பிணை மறுப்பு!
  • பட்டினியில் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள்!
  • ஜப்பானிய பன்னாட்டு நிறுவனத்தின் அடியாளாக அரசு, போலீசு, நீதிமன்றம்!
  • தொழிலாளி வர்க்கத்தை கொத்தடிமையாக்கும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!

——————-
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாருதி

ஜூலை 18 – மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க கிளர்ச்சி நடைபெற்ற நாள். மாருதி தொழிலாளர் போராட்டம் வேலைவாய்ப்பு, முன்னேற்றம், தொழில்மயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கப்படும் அடக்குமுறையையும் சுரண்டலையும் உலகறியச் செய்தது. எத்தகைய பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்தையும் எதிர்த்து மோத முடியும் என்ற நம்பிக்கையை தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்டியது. ஆளும் வர்க்கத்தையும் அரசையும் நடுங்கச் செய்தது.

மாருதி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக அமைந்த இரக்கமற்ற சுரண்டல், தொழிற்சங்க உரிமை மறுப்பு உள்ளிட்ட ஒடுக்கு முறைகள் பற்றி நாடறியும். இருப்பினும், அவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, அவனிஷ் குமார் தேவ் என்ற எச்.ஆர் அதிகாரி கொல்லப்பட்டதை மட்டும் காட்டி தீவிரவாத பீதியைக் அரசு கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து சுமார் 2,300 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 147 தொழிலாளர்கள் கொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆண்டு காலமாக அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது. நெருங்கிய உறவினர்களின் சாவுக்கு பரோலில் சென்று வருவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் அநாதைகளாய் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக மானேசரில் மாருதி உள்ளிட்ட எந்த ஆலையின் தொழிலாளர்களும் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட போலீசு அனுமதிப்பதில்லை. குற்றவாளிகளைத் தேடுவது என்ற பெயரில் தொழிலாளர் குடும்பங்கள் போலீசால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றன. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிகள் வேறு எங்கும் வேலைக்கு செல்ல இயலவில்லை. எல்லா முதலாளிகளும் ஒரு அணியாய் சேர்ந்து கொண்டு வேலைவாய்ப்பை மறுக்கின்றனர்.

சண்டிகர் உயர்நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு பிணை தர மறுத்து அளித்துள்ள தீர்ப்பில், மாருதி போராட்டம் உலக அரங்கில் இந்தியாவை தலை குனியச்செய்து விட்டதாகவும், தொழிலாளர் கலகம் குறித்த அச்சத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அரசும் போலீசும் நீதிமன்றமும் வெளிப்படையாகவே மாருதிக்கு அடியாள் வேலை செய்கின்றனர்.

“கொல்லப்பட்ட அதிகாரி அவனிஷ் தேவ், தொழிற்சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்தவர்; போராட்டம் நடந்த நாளன்று ஆலையின் உள்ளே இருந்த கண்காணிப்பு காமெராக்கள் திட்டமிட்டே அணைக்கப்பட்டிருந்தன; உள்ளே நூறு அடியாட்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்” – என்பன போன்ற பல விவரங்களைக் கூறி, சுயேச்சையான கிரிமினல் குற்ற விசாரணை வேண்டுமென்று மாருதி தொழிலாளர் சங்கம் கோருகிறது. இக்கோரிக்கை அரசாலும், நீதிமன்றத்தாலும் புறக்கணிக்கப்படுகின்றது. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத்தாக்குதல். மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிற்சங்க உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாய் வாழ்வதற்கு ஒப்புக்கொள் என்று தொழிலாளி வர்க்கத்தை மிரட்டுவதற்கான தாக்குதல். பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள்தான் இந்த அரசமைப்பு என்ற உண்மையை நிரூபிக்கும் தாக்குதல்.

இந்த தாக்குதலுக்கு எதிராக விடாப்பிடியாகவும் உறுதியாகவும் போராடி வருகின்ற மாருதி தொழிலாளர்கள், ஜூலை 18 அன்று “மானேசர் செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். சிறை வைக்கப்பட்டாலும், குடும்பத்தோடு அலை அலையாக சிறை செல்வதென அறிவித்திருக்கின்றனர்.தமது போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்து பட்ட உழைக்கும் மக்களின் ஆதரவைக் கோரியிருக்கின்றனர்.

தமிழகத்தின் தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் சந்திக்கும் சுரண்டலும், அடக்குமுறையும் மாருதி தொழிலாளர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதும் நம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் ஒன்றுதான். தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம்தான் முதலாளி வர்க்கத்தை பணியச் செய்வதற்கான ஆயுதம்.

ஜூலை 18 அன்று நாள் முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், எமது அமைப்புகளின் சார்பில் மாருதி தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சார இயக்கம் மேற்கொள்கிறோம். மாலையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவற்றில் தொழிலாளர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளவேண்டுமென்று கோருகிறோம்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி