privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்

5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்

-

அன்பார்ந்த தொழிலாளர்களே,

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் கருணை வள்ளல்கள் என்று முதலாளிகள் பீற்றிக்கொள்கின்றனர். அவர்களது திறமையால் தான் தொழில்வளமும், லாபமும் பெருகிவருவதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். மறுபுறத்தில், தொழிலாளி வர்க்கம் உழைக்கத் தயங்குவதாகவும், சங்கம் துவக்கி தொழில் அமைதியைக் கெடுப்பதாகவும் அவதூறு பேசித் திரிகின்றனர், முதலாளிகள். வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மானிய விலையில் எதைக் கொடுத்தாலும் மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்று வாய்க்கொழுப்புடன் பேசுகின்றனர், முதலாளிகள்.

சென்ட்ரல் பேங்க்
மும்பையில் உள்ள சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியா கிளை (அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முதலாளிகள் ரூ.5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்).

கருணை உள்ளமும், கடும் உழைப்பும், நேர்மையும் ஒருபோதும் முதலாளிகளுக்கு இருந்தது இல்லை. மக்கள் பணத்தையும், அரசு கஜானாவையும் களவாடுவது, மோசடி செய்வது, பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது, இரட்டை வேடம் போடுவது, பிறரது உழைப்பை அபகரித்துக் கொள்வது ஆகிய அனைத்து ’நற்பண்பு’களுக்கும் சொந்தக்காரர்களே, முதலாளிகள். இதனை தினந்தோறும் நிரூபித்து வருகின்றனர்.

இந்தியாவின் அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முதலாளிகள் ரூ.5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான C.B.I.-யின் இயக்குநர் ரஞ்சித் சின்கா சமீபத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் மட்டும் ரூ.1,17,262 கோடிகள் கடன் மோசடி செய்துள்ளதாகவும், மேற்படி கடன் மோசடிகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்றும் சின்கா கூறியுள்ளார்.

முதலாளிகள் திருடி இருக்கின்ற பணம் அனைத்தும் உழைக்கும் மக்களது வங்கி சேமிப்புப் பணமே. இதனைத் திருப்பிக் கட்ட முடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர். பல்வேறு தொழில்களுக்கு தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகின்றனர். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்தி வருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவனது விமான நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினான். கடன் வாங்கி டிமிக்கி கொடுத்தவர்கள் பட்டியலில் ஜெயலலிதாவும், டி.ஆர்.பாலுவும் அடக்கம்.

வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத நபர்களது கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். சில ஆயிரம் ரூபாய் கடன் பிரச்சினைக்கே தூக்கில் தொக்கிய ஏழை மக்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். மானத்துக்கும், மனசாட்சிக்கும் அஞ்சுகின்ற பண்பாடு உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது. பிறரது உழைப்பைச் சுரண்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பண்பாடே முதலாளிகளின் பண்பாடு. இதனால்தான், ஒரு திருட்டுப் பயலுக்குரிய கூச்சமோ, சொரனையோ இல்லாமல், கோட்டு-சூட்டுடன் உலா வருகின்றனர்.

வங்கிக் கடன் மோசடி மட்டுமன்றி, பல தொழிலாளர்களது கூலியையும் திருடிக்கொள்ளும் ஈனப்பிறவிகளே, முதலாளிகள். சில நாட்களுக்கு முன்பாக சென்னை அண்ணா சாலையில், மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுமானத்தின் 12-வது தளத்திலிருந்து குதிக்க முயன்றார், மணிகண்டன் என்கிற தொழிலாளி. மேற்படி கட்டுமானத்தைச் செய்துவரும் இடிஏ ஸ்டார் குரூப்பில் சப்-காண்டிராக்ட் வேலை செய்த மணிகண்டனுக்கும், ஏனைய சில தொழிலாளர்களுக்கும் பல மாதங்களாக சம்பளமே தரப்படாததால் தற்கொலைப் போராட்டம் நடத்துகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கோவையில் ஏ.ஜி.ஸ்பின்னிங் மில்லில் “சுமங்கலித் திட்டம்” என்கிற கொத்தடிமைத் திட்டத்தில் இரவு-பகல் பாராமல் வேலை செய்த போது சாந்தி என்கிற சிறுமியின் கை துண்டாகிப் போனது. இதன் பிறகு அந்தச் சிறுமியை வேலையை விட்டே துரத்தினான், முதலாளி. பல போராட்டங்களுக்குப் பிறகே, சாந்திக்கு சொற்ப நிவாரணம் கிடைத்தது. ஒசூர் பிரிமியர் மில்லில் கையைப் பறிகொடுத்த மாலதி என்கிற தொழிலாளிக்கு அந்த நிவாரணமும் கிடைக்காமல் போராடி வருகிறார்.

மணிகண்டனும் சாந்தியும் கடலில் ஒரு சில துளிகள் மட்டுமே. இலட்சக் கணக்கான துயரக் கதைகள் வெளி உலகுக்கு வராமலேயே போய் விட்டன. தொழிலாளியைச் சுரண்டாமல் முதலாளி வர்க்கத்தால் வாழமுடியாது. பொதுச் சொத்தைத் திருடாமல் முதலாளிகளால் கொழுக்க முடியாது. அடக்கு முறைகளைச் செய்யாமல் அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்காக எத்தனை பெரிய கொடூரத்தையும் செய்யத் தயங்காத மாபாவிகளே, முதலாளிகள். சட்டத்தில் ஓட்டை போட்டு பதுங்கிக் கொள்கின்றன, முதலாளித்துவ பெருச்சாளிகள்.

சட்டமும், அரசு கெடுபிடிகளும் முதலாளிகளுக்கு எதிரில் மண்டியிட்டு கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேனி மாவட்டம் போடி நகரிலுள்ள அரசு வங்கியான ஸ்டேட் வங்கியானது, சில மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர் போட்டு விளம்பரம் செய்துள்ளது. இந்த மாணவர்கள், சில ஆயிரங்களை கல்விக் கடனாக வங்கியிலிருந்து வாங்கிவிட்டு திருப்பிக் கட்ட முடியாமல் போனவர்கள். சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக போட்டோவைப் போட்டு அவமானப்படுத்திய வங்கிகள், பல இலட்சம் கோடிகளை மோசடி செய்த முதலாளிகள் பட்டியலை வெளியிட்டார்களா? ஒருத்தன் பெயரைக் கூட வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்துள்ளார்கள். ஏழைக்கு ஒரு நீதி! முதலாளிக்கு ஒரு நீதி! இதுதான் முதலாளிகளின் மனுநீதி!

கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து “சோம்பேறிகள்” என்று சொன்னால் செருப்படி கொடுப்போம். தொழிலாளிவர்க்கத்தை அடக்கியும், சுரண்டியும் வருகின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் வன்முறையாளர்கள் என்று அவதூறு செய்வதற்குப் பதிலடி கொடுப்போம். நாட்டையே சூறையாடிக் கொழுத்துத் திரியும் முதலாளித்துவ ஒட்டுண்ணிக் கும்பல்மீது, பார்க்கும் இடத்தில் எல்லாம் காறித்துப்புவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு 9788011784,
ஒசூர்