privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமுதலாளிகளின் 'கருணை': கன்டெய்னர் வீடுகள் !

முதலாளிகளின் ‘கருணை’: கன்டெய்னர் வீடுகள் !

-

‘நாளுக்கு நாள் தொழில் செய்வதே கஷ்டமாகிக் கொண்டு வருகிறது. வேலைக்கு எடுக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என்று அனைத்து செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அப்படி எல்லாம் செய்தால் நமது லாபம் குறைந்து விடும்.” என்று கவலைப்படுகிறார்கள், முதலாளிகள்.

கன்டெய்னர் வீடுகள்இந்த கவலையை தணிப்பதற்காக தொண்டு நிறுவனங்கள் புதுப் புது வழிகளை கண்டு பிடிக்கின்றனர். உழைக்கும் மக்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கான உத்திகளை உருவாக்கிக் கொடுத்து, உயிர் வாழத் தேவையான குறைந்த பட்ச கூலி கூட கொடுக்காமல் வேலை செய்ய உழைக்கும் மக்களை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

லண்டன் மாநகரில் வேலை இழந்தவர்கள் ஒன்று சேர்ந்து, தமது வாழ்வுரிமைக்காக போராடத் தேவையில்லாமல் வேறு வேலை கிடைக்கும் வரையில் தற்காலிக தங்கும் விடுதிகளை நடத்துகின்றன பல தொண்டு நிறுவனங்கள். அதற்குத் தேவையான பணம் பணக்காரர்களின்  நன்கொடை மூலமாகவோ, அரசு மானியங்களின் மூலமாகவோ திரட்டப்படுகிறது.

ஆனால், ஒரு வழியாக வேலை கிடைத்து, மாதா மாதம் கூலி வாங்க ஆரம்பித்து விட்டால், தங்கும் விடுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். சொந்தமாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ வேண்டும். லண்டன் நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள புறநகர் பகுதிகளில் கூட வாடகையாக வாரத்துக்கு 300 பவுண்டுகள் (சுமார் ரூ 30,000) கொடுக்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சக் கூலி வாங்கும் ஒருவரின் வருமானம் முழுவதும் இதற்கே சரியாகப் போய் விடும்.

கன்டெய்னர் வீடுகள்இதை சமாளிக்க பல வழிகளை பின்பற்றலாம். ஒன்று, இதே போன்று வாடகை கொடுக்க முடியாத நான்கு பேரை சேர்த்துக் கொண்டு வீட்டையும், வாடகையையும் பகிர்ந்து கொண்டு நெருக்கியடித்துக் கொண்டு வாழலாம் அல்லது, முதல் வேலையில் கிடைக்கும் சம்பளத்தை வீட்டு வாடகை கொடுக்கவும், கூடுதலாக இன்னொரு வேலை பார்த்து அதில் கிடைக்கும் கூலியில் மற்ற செலவுகளை சமாளித்துக் கொள்ளலாம்.

8 மணி நேரம் வேலைக்கு, வாழ போதுமான சம்பளம் கூட தராத முதலாளியின் சட்டையை பிடித்து உலுக்கி தமது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு இந்த மக்கள் போராட வேண்டும். குறைந்த பட்ச கூலியை சரியான அளவில் நிர்ணயிக்காமல் மோசடி செய்யும் அரசை எதிர்த்து வீழ்த்த வேண்டும். இவைதான் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வுகள்.

கவலைப் பட வேண்டாம்! இந்த பிரச்சனைக்கு புதுமையான தீர்வு ஒன்றை கண்டு பிடித்திருக்கிறது கிழக்கு லண்டனில் உள்ள வால்ட்ஹேம்ஸ்டோவ் என்ற ஒம்சிஏ தங்கும் விடுதியை நடத்தும் தொண்டு நிறுவனம்.

சீனாவிலிருந்து கப்பலில் சரக்கு ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்களை டில்பரி என்ற இடத்திற்கு இறக்குமதி செய்து, அவற்றின் உள்ளே ஒரு சிறு சமையல் பிரிவு, குளியலறை, ஒற்றைப் படுக்கை, தொலைக்காட்சி இவற்றைப் பொருத்தி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் கொண்டு வைத்து விடுவார்கள். ஒரு 20 அடி நீள பெட்டகத்தின் உள் பரப்பு சுமார் 150 சதுர அடியாகவும் 40 அடி நீள பெட்டகத்தின் உள் பரப்பு சுமார் 300 சதுர அடியாகவும் உள்ளது. இத்தகைய பெட்டி வீடுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பல் அடுக்கு வீடுகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு கன்டெயினர் வீட்டுக்கும் சுமார் 20,000 பவுண்டுகள் (சுமார் ரூ 20 லட்சம்) செலவாகிறதாம். லண்டன் மாநகர நிர்வாகத்தின் நிதி உதவியுடன் இது போன்று பல வீடுகளை உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கன்டெய்னர் வீடுகள்இத்தகைய கன்டெய்னர் வீடுகளை mYpad (மைபேட்) என்று அழைக்கிறார்கள். உழைக்கும் மக்கள் வாரத்துக்கு  மட்டும் வாடகை கொடுத்து இவற்றில் தங்கிக் கொள்ளலாம். குறைந்த பட்ச கூலியில் 30% அளவில் சுமார் 75 பவுண்டு (சுமார் ரூ 7,500) மட்டுமே வாடகையாக கொடுத்துக் உழைக்கும் மக்கள் இந்த நவீன, புதுமையான வீட்டில் தங்கிக் கொள்ளலாம். கப்பலின் பெட்டகம் போன்ற இடத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் போது இங்கிலாந்தில் விலை கொடுக்க போதுமான மக்கள் இல்லாததால் காலியாக உள்ள 8 லட்சம் வீடுகளைப் பற்றியோ, தமது பெட்டக வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் 57 அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் மன்னர் குலத்தைச் சேர்ந்த வில்லியம்-கேட் தம்பதியினரை பற்றியோ நினைத்துப் பார்க்காமல் இருந்தால் சமாளித்து விடலாம்.

முதலாளிகளுக்கு மகிழ்ச்சி, குறைந்த பட்ச கூலி கொடுத்தே வேலைக்கு ஆள் கிடைக்கிறார்கள். அரசுக்கு உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இல்லை. அல்லது, காலி இடங்களை ‘ஆக்கிரமித்து’ குடிசை போட்டுக் கொள்ளும் தொல்லையும் இல்லை.

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளிகளின் ‘வளர்ச்சி’க்கான கட்டிட வேலை தொடங்கும் போது, இந்த சமூகத்தின் ‘கசடு’களை தூக்கி எறிவதற்கு மாநகராட்சி கஷ்டப்பட வேண்டியதில்லை. இடத்தை விட்டு வெளியேறுவதற்கு நோட்டிஸ் அனுப்பி, அதை மக்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால், வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் எறிந்து, வீட்டை இடித்துத் தகர்க்க வேண்டிய தேவையில்லை. அதை எதிர்த்துப் போராடும் மக்களை எதிர் கொள்ள வேண்டிய சிரமமில்லை.

தேவைப்படும் போது கன்டெய்னர் வீடுகளை ஒரு கிரேன் வைத்து தூக்கி லாரியில் ஏற்றி விடலாம். ஊருக்கு வெளியே தேவையில்லாத நிலத்தில் கொண்டு போய் வீட்டை வைத்து விடலாம். அந்த இடம் முதலாளிகளுக்கோ மேட்டுக் குடியினருக்கோ தேவைப்படும் வரை வீடுகளுக்கு புதிய அடித்தளம் கிடைத்திருக்கும்.

உள்நாட்டில் இவர்கள் இனிமேலும் தேவையில்லை என்று ஆளும் வர்க்கங்கள் முடிவு செயதால், சரக்குக் கப்பலில் ஏற்றி ஆப்பிரிக்க காடுகளுக்கோ, சகாரா பாலைவனத்துக்கோ கொண்டு போய் கன்டெய்னர் வீட்டை வைத்து விடலாம்.

இவ்வாறாக முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களும், அரசும் புதுப் புது வழிகளில் முதலாளிகளுக்கான சொர்க்கமாக இந்த உலகைப் பாதுகாக்கும் திருப்பணியை தொடர்ந்து செய்து வருகின்றன.

மேலும் படிக்க