Tuesday, September 24, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !

ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !

-

ந்நிய நாட்டு அரசுகளுடனும் அந்நிய நாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடனும் தொழில், வர்த்தகம், இராணுவம், ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான காற்றிலும் நீரிலும் நிலத்திலும் நஞ்சு கலக்கும், நேரிலேயே நச்சுக் கழிவுப் பொருட்களைக் கொட்டும், இயற்கை வளங்களைச் சூறையாடும் இரகசிய ஒப்பந்தங்கள் ஏராளமாகப் போடப்படுகின்றன. அவற்றின் மூலம் நமது மக்களின் வாழ்வுரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன. இவை அந்நிய மற்றும் முக்கியமாக பனியா- பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த உள்நாட்டு, நாடுகடந்த தரகு முதலாளிகளின் கொள்ளைக்காக, வளர்ச்சிக்காகத்தான் செய்யப்படுகின்றன. இதற்காகத்தான் பெரும் அளவிலான இலஞ்ச-ஊழல்களும், அதிகார முறைகேடுகளும், பாசிசக் கிரிமினல் குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், “தேசிய நலன்” “தேசிய வளர்ச்சி” என்ற பெயரில் இவை மூடிமறைக்கப்படுகின்றன.

ஆதலினால் தேசதுரோகம் செய்வீர்இந்த நாட்டின் அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், துணை இராணுவம், நீதிமன்ற – சிறைத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகாரங்களும் அவர்களுக்கான ஊதியங்களும் சலுகைகளும் எண்ணியும் பார்க்க முடியாத அளவுக்குப் பிரமாண்டமானவை. குறிப்பாக, அயலுறவுத்துறை, இராணுவம், துணை இராணுவம், நீதித்துறை ஆகியவற்றுக்குக் கேள்வி கேட்க முடியாதவாறு, தண்டிக்க முடியாதவாறு சிறப்புக் கவசங்களும் உரிமைகளும் தரப்பட்டிருக்கின்றன. அவை போதாதனவாக உள்ளன, இன்னும் பெருக்க வேண்டும் என்றும், எல்லாம் “தேசியப் பாதுகாப்புக்கானவை” தேசிய இறையாண்மையின் பாதுகாப்புக்கானவை” என்றும் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்த அமைப்புகள்தாம் நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பேராபத்தானவையாகவும் எதிரானவையாகவும் உள்ளன.

நாட்டின் ஆளும் வர்க்கங்களோடும் அரசியல்வாதிகளோடும் கைகோர்த்துக்கொண்டு, எல்லா இலஞ்ச-ஊழல்களுக்கும், அதிகார முறைகேடுகளுக்கும், பாசிசக் கிரிமினல் குற்றங்களுக்கும் மேற்படி அரசு உறுப்புகள்தாம் அச்சாணியாக விளங்குகின்றன. ஆனால், நாட்டில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான புதுப்புது சட்டங்களும் புதுப்புது அதிகாரங்களும் புதுப்புது நவீன ஆயுதங்கள்-வசதிகள்-பாதுகாப்புகளும் தமக்கு வேண்டுமெனக் குவித்துக் கொள்கின்றன. இந்த அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய அரசும் (மாநில அரசுகளும்தான்) ஆட்சியாளர்களும் இம்மாதிரியான மக்கள் விரோத, தேச விரோதச் செயல்கள் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இந்த நாட்டுச் சட்டங்களிலேயே அதற்கு இடமுண்டு.

எது தேச பக்தி? எது தேச விரோதம்? – இப்படிப் பிரித்துப் பார்க்க முடியாமல் நமது நாட்டு மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்; இல்லை, குழப்பப்பட்டுள்ளனர். “இந்து=இந்திய தேசியம்=மோடி” என்கிறது ஒரு மதவெறி பாசிச கும்பல். ஓட்டுக்கட்சிக் காரன்களெல்லாம் எங்கும் பிரம்மாண்ட தேசியக் கொடியை அசைக்கிறான்கள். “சாம்சங்”, “சோனி”, “எல்ஜி”, “விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்’கள் கூட இந்திய “தேசிய” அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன. இட்டுக்கட்டப்பட்ட இந்திய தேசத்துக்குச் செயற்கையாகப் பெருமை சேர்க்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகளின் பாடநூல்கள் தொடங்கி அதிகாரபூர்வமாகவும் அரசு விளம்பரங்கள் மூலமும் மக்கள்திரள் ஊடகங்கள் மூலமும் போதனைகளும் பல பொய்த் தோற்றங்களும் பொய்ப் பிரச்சாரங்களும் மட்டுமல்ல, கிரிமினல் குற்றங்களும்கூட, மோசடியான நாடகங்களும்கூட தேசபக்த வேடதாரிகளால் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை நம்பி அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்தாம் தேசபக்தர்கள்; இவற்றை நம்ப மறுப்பவர்கள் மட்டுமல்ல, சந்தேகிப்பவர்கள்கூடத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆதலினால் தேசத் துரோகம் செய்வீர்!

– தலையங்கம்
__________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க