privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி - நேரடி ஆய்வு

தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு

-

குடிநீரில் சாக்கடை ! விஷக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி !
2 மாதமாகியும் உரியநடவடிக்கை இல்லை ! தொடரும் காய்ச்சல் !

குடிநீர் அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் கிராமங்கள் !
தேர்தலில் தீவிரம் காட்டும் ஓட்டுக்களவாணிகள்
ஒட்டுண்ணி அதிகார வர்க்கம் !

ந்திய ஆளும் வர்க்கங்கள் நம் மக்கள் மீது திணித்துவரும் உலக மயமாக்கக் கொள்கை கிராமப்புறங்களை அநாதைகளைப் போலாக்கி விட்டது. பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளை, “விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் ! மாற்றுத் தொழில்களைத் தேடுங்கள்” என்று சொல்லிவிட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து விவசாயமின்றி தரிசாகக் கிடக்கும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருகிறார். கிராமப்புற ஏழை, நடுத்தர விவசாயிகள் கூலி வேலைகளைத் தேடி நகரங்களுக்கு அலைகிறார்கள். ஏதுமற்றவர்கள் நகரங்களின் சந்து பொந்துகள் தெருவோரங்களில் வாழ்வதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட குடிநீர், சாக்கடை, சாலைப் போக்கு வரத்து, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றன. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட சூழலில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஏராளமான கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. நீர்வளம் இருக்கும் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 1000 அடிக்கும் மேல் ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி நீரை உறிஞ்சி அந்த கிராமங்களுக்கே விற்கின்றன. காசுள்ளவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மற்றவர்கள் வேறுவழியில்லாமல் பாதுகாப்பற்ற குடி நீரைக் குடித்து நோய்க்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுகிறது.

மதுரை – திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது சடையம்பட்டி கிராமம். மட்டப்பாறை ஊராட்சியைச் சேர்ந்த இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு. ஆனால் தற்போது இரண்டுமே சுருங்கிவிட்டது. 300 குடும்பங்கள், 1000 பேருக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். இன்று வரை காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இது என்ன வகையான காய்ச்சல்? ஏன் வந்தது? எதனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்து கொள்வதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை கிளையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு சடையம்பட்டி ஊருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அங்கே முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினை சந்தித்துக் கேட்டபோது “குடிதண்ணீரில் சாக்கடை (Fecal Matters) கலந்து இருப்பதனால் தான் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். மேலும்,”இந்த ஊரில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. அதனுடைய கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை. அதுவும் தண்ணீரில் கலந்துள்ளதாகத் தெரிகிறது” என்று கூறியதோடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தண்ணீரை சோதனை செய்து பெறப்பட்ட சான்றிதழைக் காட்டினார்கள். அதில் “குடிப்பதற்கு உகந்த தண்ணீர். ஆனால் கழிவுகள் கலந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. (pH 7.73, Potassium K 30, Fecal Coliform 40 / 100 ml).

மருத்துவர்களிடம் மக்கள் கேட்ட கேள்வி : “ஏராளமான கால்நடைகள் இருந்த காலத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை இப்போது பாதியாக குறைந்துவிட்டபோது மட்டும் எப்படி வரும் ?”

இதற்கு மருத்துவக் குழுவினர் “பதில்சொல்ல முடியாது” என்றனர்.

“என்ன வகையான காய்ச்சல்” என்று கேட்டபோது

“இங்கே 7 வகையான காய்ச்சல் இருக்கிறது” என்று கூறினார் மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் அப்துல்பாரி. “டெங்கு, சிக்குன் குனியா, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) டைபாய்டு, மலேரியா மற்றும் இனம் தெரியாத வைரஸ் காய்ச்சல். பலரிடம் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் ஆய்வு முடிவு வரவில்லை” என்று சொன்னார்.

“என்ன மருந்து கொடுக்கிறீர்கள்?”

“ஆன்டி பயாட்டிக் மற்றும் பாராசிட்டமால் மருந்துகள் தான் கொடுக்கிறோம். காய்ச்சல் அதிகமானால் வாடிப்பட்டி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம்.”

“குடி தண்ணீரில் சாக்கடை கலந்துள்ளதே அதைத் தடுக்க என்ன செய்துள்ளனர்.”

“அது எங்களுடைய வேலை அல்ல. மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லி கழன்று கொண்டனர் மருத்துவர்கள்.

தண்ணீரில் ஏராளமான பிளீச்சிங் (குளோரின்) பவுடரைப் போட்டு எங்குபோனாலும் குளோரின் நாற்றம். பகல் நேரத்தில் கொசுவை விரட்ட புகை அடித்துக் கொண்டிருந்தார்கள். (தீவிர நடவடிக்கையாம் !)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

8.3.14 அன்று காய்ச்சலில் காட்டுராஜா என்ற 32 வயது இளைஞர் இறந்து விட்டார். அவரது உடலை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய அதிகாரிகள் போலீசு துணையுடன் எரித்து விட்டனர். அவருக்கு அளித்த சிகிச்சை பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. இறப்புச் சான்றிதழில் பழைய காசநோய் (old TB) என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்ததாகவும் முகாம் மருத்துவர்கள் கூறினர்.

காட்டுராஜாவின் வீட்டில் போய் விசாரித்த போது, “அவருக்கு எந்த நோயும் இல்லை, காய்ச்சல் தான் இருந்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே நர்ஸ் 2 ஊசி போட்டார். ஊசிபோட்ட கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் பொக்களம் பொக்களாமக ஏற்பட்டது. அவருக்கு அம்மை நோய் வந்து இருப்பதாகக் கூறி வீட்டுக்கு டாக்டர் அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்தபின் மீண்டும் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவன் இறந்து விட்டான்” என்று அவரது அண்ணன் அலெக்சாண்டர் தெரிவித்தார். காட்டுராஜாவுக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாகவம் உள்ளார். இனி அவர்களுக்கு யார் துணை?

காட்டுராஜா
காட்டுராஜா

பென்சிலின் மருந்து முதலில் சிறிதளவு செலுத்தி சோதித்துப் பார்த்து, உடல் ஏற்றுக் கொண்டால்தான் முழுவதும் செலுத்த வேண்டும் என்பது ஆங்கில மருத்துவத்தில் அரிச்சுவடி. அவ்வாறு செய்யாமல் “இரண்டு ஊசி” போட்டதால் அவர் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கிறார். இந்த உண்மையை மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் விரோதக் கூட்டம் ஒரே குரலில் மூடி மறைக்கிறது. ஏழை என்றால் கிள்ளு கீரை அவர்களுக்கு.

திங்கள் கிழமை 10.3.14 அன்று சடையம்பட்டி கிராமமக்கள் 150 பேர் ஆண் பெண் குழந்தைகள் உட்பட 50 கி.மீ. கொதிக்கும் வெயிலில் சரக்கு லாரியில் போய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தை சந்தித்த போது அவர் எடுத்த எடுப்பிலேயே, “100 பேர் கூட சாகுங்க. எனக்கென்ன? என்ன வருதுன்னு அப்புறம் பாப்போம்” என்று திமிராகப் பேசி மிரட்டி விட்டு அப்புறம் அ.தி.முக. கொ.ப.செ மாதிரி “அம்மா அத்தனை கோடி கொடுத்துச்சு ; இத்தனை கோடி கொடுத்துச்சு ; என்ன கேக்குறோமோ அதெல்லாம் கொடுக்குது” என்று சொல்லி, அம்மா புராணம் பாடினார்.

“சடையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஒரு பெண். அவர்தான் இவற்றுக்கெல்லாம் காரணம். நீண்ட காலமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது என்று நாங்கள் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அவர் மீது கொடுத்த புகாரை அரசு அதிகாரிகள் குப்பையில் போட்டு விட்டனர்” என்று மக்கள் சொன்னபோது,

“ஊராட்சி தலைவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. அதற்கெல்லாம் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது” என்று சொன்னார் அந்த அம்மா விசுவாசி ஆட்சித் தலைவர்.

கைபேசியில் யாரிடமோ சொல்லும் போது காட்டுராஜா எலிக்காய்சலில் இறந்து விட்டதாக சொன்னார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் பற்றி சொல்லும் போது அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசினார் அந்த அண்ணா திமுக கலெக்டர். அமைச்சர்களை டம்மியாக்கிவிட்டு அதிகாரவர்க்கத்தை இப்படிதான் ஊட்டி வளர்க்கிறார் அம்மா.

பாண்டியம்மாள்
பாண்டியம்மாள்

அதற்குப் பிறகு 14.3.14 அன்று 60 வயதான பாண்டியம்மாள் என்பவர் இந்தக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை பிணக் கூற்றாய்வு செய்து சாவுக்கு என்ன காரணம் என்பதை சொன்னால் தான் உடலை வாங்குவோம் என்று போராட்டம் நடத்தினோம். இறந்தவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு, தரமான சிகிச்சை, தரமான குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், உடனடியாக காய்சலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கெல்லாம் போஸ்ட் மார்ட்டம் முடித்து விட்டு, உடலை வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுத்தது அதிகார வர்க்கம். மக்கள் விடாப்பிடியாகப் போராடியதால் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் ஆகியோர் வந்தனர்.

“மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி கோட்டாட்சியர் போன்ற பொறுப்பானவர் வந்து பதில் சொல்ல வேண்டும்” என்று போராடினோம்.

“எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது” என்றார் டி.எஸ்.பி. கருப்பையா.

“மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்” என்று கேட்டபின் வருவாய் கோட்டாட்சியர், இறந்த பாண்டியம்மாளின் மகன் ஜெயபாண்டியிடம் செல்போனில் பேசினார். இழப்பீடு உள்பட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறேன் என்று சொன்னதோடு அதிகாரிகளையும் உடன் அனுப்பி பணிகளைத் துரிதப் படுத்துவதாகச் சொன்னார். அதன் பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு சடையம்பட்டியில் எரியூட்டப்பட்டது. அதிகாரவர்க்கம் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்தை சந்திக்கும் போதெல்லாம் கூடியவரை பொய்யான நம்பிக்கைகளை நைச்சியமாக ஏற்படுத்தி போராடுகிறவர்களில் பலவீனமானவர்களைக் குறிவைத்து தனிமைப்படுத்தி அப்போதைக்கு காரியத்தை சாதித்துக் கொள்கிறது. அதற்கு இந்த சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.

இன்னமும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பெண்கள் பெரியவர் என்று 60க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். எந்த நிமிடம் யாருக்கு என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஊர்மக்களின் பெரும்பான்மை ஒன்றிணைந்து போராடியும் பெரியவிளைவுகள் ஏற்படவில்லை. பஞ்சாயத்து தலைவி அதே ஊரில் தான் இருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனையில் யாரையும் வந்து பார்க்கவில்லை. இறந்தவர்களின் வீடுகளில் துக்கமும் விசாரிக்கவில்லை. பகலில் ஊரைவிட்டு வெளியேறுகிறவர் இரவில் ரகசியமாக வருகிறார்.

சடையம்பட்டி ஊரில் காங்கிரஸ்காரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊர் பெரியவர்கள், முன்பு அமைச்சர் கக்கனுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். தற்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஊராட்சி தலைவர் சாந்தா வெற்றி பெற்று பதவியிலுள்ளார். அவர் தான் இத்தனைக்கும் காரணம். அவரைக்கைது செய்யவேண்டும் என்று காவல் துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் அதிமுக மந்திரி நத்தம் விஸ்வநாதனை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டதாக (காட்டுராஜா இறந்த அன்று) மக்கள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை தனித்தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் வேட்பாளர் ராமசாமி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஓட்டுப் போட்டுவிட்டு இன்று செத்துப்பிழைத்துக் கொண்டிருக்கும் தன் மக்களை அவர் இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட எந்த ஓட்டுக்களவாணியும் வரவில்லை. இப்படிபட்டவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இளைஞர்கள் தயாராகின்றனர்.

18 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் வேகமதி என்ற மருந்து கம்பெனி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதித்தது. மக்கள் கடுமையாகப் போராடி அந்த கம்பேனியை விரட்டியடித்தனர். ஊருக்கு அருகாமையிலேயே வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. அதிலிருந்து தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் தரும்படி வெகுகாலமாக மக்கள் கேட்டு வருகின்றனர். அல்லது வைகையாற்றுப் படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கும்படியும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. மக்கள் சாக்கடை நீரை குடிப்பது பற்றி எந்தக் கோமானுக்கும் கவலையில்லை.

பாண்டியம்மாள் உடல் எரியூட்டப்பட்டபோது மயானத்தில் இரங்கல் கூட்டம் நடத்தி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மஉபா மைய மதுரை மாவட்ட செயலாளர் இரங்கல் உரையாற்றிய போது, “கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஒரே வழி மக்கள் ஓட்டுக்கட்சிகளை நம்பாமல் மக்களுக்காகப் போராடும் இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும். போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார். இளைஞர்கள் பலர் மஉபா மையத்தோடு இணைந்து போராட முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக, இழப்பீடு, முறையான சிகிச்சை, அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மாற்று குடிநீர் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட்மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் கிராமத்தில் ஆய்வு செய்து காய்ச்சல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளது.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க