privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

-

1. விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து மத்திய பாதுகாப்பு படை நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும்.
  • மத்திய படை மற்றும் தமிழக போலீசார் தொழிலாளிகள், பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

என்பதை வலியுறுத்தி 19-3-14 அன்று காலை 11-00 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • என்.எல்.சி ராஜா கொலை - போஸ்டர்தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க வைத்திருக்கும் மத்திய பாதுகாப்பு படையை நெய்வேலியிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். அதுவரை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டி தானமாக தாக்குதல் நடத்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
  • தமிழக போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சு, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது, நள்ளிரவில் வீடு புகுந்து அப்பாவி மக்களை கைது செய்தது ஆகிய சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும்.
  • மணல் லாரியில் அடிப்பட்டால் கூட நீதிமன்றம் 20 லட்சத்திற்கு மேல் இழப்பீடு வழங்குகிறது ஆனால் NLC நிர்வாகம் 5 லட்சம் வழங்கி இருப்பது அநீதியானது மத்திய பாதுகாப்பு படை கொடூரமாக சுட்டு கொன்ற சம்பவத்திற்கு 50 லட்சம் அபராதமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் தொழிலாளிகள் தாக்கப்படுகிறார்கள் என்றால், பாதுகாப்பு படை, போலீஸ் அத்துமீறல் என்பதை எதிர்த்து போராடுவதை காட்டிலும் தொழிலாளிகளின் உரிமைக்காக முழுமையாக நிற்காமல், நிர்வாகத்தின் தரப்பினராகவும், தொழிலாளிகளின் பிரதிநிதியாகவும் இருக்கின்றன தொழிற்சங்கங்கள்.

இதை தொழிலாளர்கள் வர்க்கமாக உணர்ந்து தேர்தல் அரசியல் கட்சிகளை புறக்கணித்து சங்கமாக திரளவேண்டும் என வலியுறுத்தியதோடு காவல்துறை, மத்திய பாதுகாப்பு படையின் அத்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பேசினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9360061121

2. சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

nlc-raja-notice-front19.3.2014 அன்று மாலை 4.30 மணியளவில் , சென்னை, ஈ.வே.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள NLC அலுவலகமான ‘நெய்வேலி பவன்’ முன்பாக,

  • நெய்வேலி NLC-யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜா சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்கிற தலைப்பில் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

தொழிலாளி ராஜாவை வம்புக்கிழுத்து, தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொன்றது அரச பயங்கரவாதம் என விளக்கியும், அதைக் கண்டித்துக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், தமிழகக் காவல்துறையினரும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கொடூரமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டித்தும் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • கொலைவெறியன் நூமென்-ஐ கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்யப் போராடுவோம்!
  • கொலையைக் கண்டித்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியைக் கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையைக் கலைக்கப் போராடுவோம்!

என்று தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் போராட அறைகூவல் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கைதுசெய்த போலீசு பின்னர் அவர்களை விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை.

3. ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை!
  • மத்திய பாதுகாப்புப்படையை சேர்ந்த கொலையாளி நோமென்னை கைது செய்து தூக்கிலிடு!
  • கொலைகார மத்திய பாதுகாப்புப்படையை உடனே திரும்பப்பெறு!

டந்த 17.03.2014 அன்று மதியம் 12.30 மணியளவில் நெய்வேலி அனல்மின் நிலைய இரண்டாவது சுரங்க நுழைவுவாயிலில் ராஜ்குமார் என்கின்ற ஒப்பந்த தொழிலாளியை நோமென் என்ற மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவன் துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டதில் மூளைசிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனைக் கேள்விபட்டு அங்கே நீதிக் கேட்டு திரண்டிருந்த தொழிலாளர்கள்மீது மத்திய பாதுகாப்புப்படையினரும், தமிழகப் போலீசும் சேர்ந்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியது.

இதனைக் கண்டித்து ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற புரட்சிகர தொழிலாளர் அமைப்பின் சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ராம்நகர் அண்ணாசிலை அருகே 20.03.2014 மாலை 5.00 மணியளவில் எழுச்சியோடு நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிட் கிளைச் சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் முன்மொழிய மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத் தாங்கி உரையாற்றினார்.

அவரது உரையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்நிலையம் சென்றபோது காவல்நிலைய அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விமேல் கேள்வி கேட்டு அனுமதி மறுப்பதிலேயே குறியாக இருந்த அலட்சியப் போக்கை கண்டித்தும் தொழிலாளி இராஜ்குமார் மீது ஏவிவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதலை கண்டிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

அடுத்து இவ்வமைப்பின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையை தெலுங்கில் பேசினார் அவர் பேசுகையில் தொழிலாளி, “ராஜ்குமார் அதேநிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி. அவரது சகோதரன் பாலகுமார் என்பவரும் ஒப்பந்ததொழிலாளியாக பணியாற்றிவருகிறார். கடந்த 6- மாதத்திற்குமுன் இதே நிறுவனத்தில் பணிபுரிந்த தனது இன்னொரு சகோதரர் சுரேஸ்குமார் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கான இழப்பீடு தொகையை கேட்கதானே அவர் அங்கே சென்றுள்ளார். இதற்கு அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடச் செய்து தனது அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் அதனை பொறுக்காமல் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான் இந்த நேமென் என்ற அடியாள்! இதனைக்கேள்விப்பட்டு திரண்ட தொழிலாளர்கள்மீது தடியடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது தமிழக காவல்துறை. வெள்ளைக்கார காலனியாட்சியில்கூட கொஞ்சம் கூச்சம் இருந்துள்ளது. ஆனால் இங்கே மறுகாலனியாதிக்க காலத்தில் அதுகூட இன்றி நிர்வாணமாக உள்ளது. இது ஜனநாயக நாடு இல்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? மறுகாலனியாக்கத்தை வீழ்த்தி புதிய ஜனநாயக அரசமைப்பதில் வேகமாக செயல்படுவோம்” என்று அறைகூவி அழைத்துப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில், “அடியாள் நோமெனின் துப்பாக்கிக்குண்டு பணக்காரனையோ அல்லது முதலாளியையோ நோக்கி பாயுமா? அங்கே துப்பாக்கி என்பது முதுகு சொறிவதற்கு மட்டுமே பயன்படுத்துவான்! ஏழைகள் அதிலும் தனது உழைப்பை விற்று உயிர் வாழும் தொழிலாளி என்றால் இவன்களுக்கு கிள்ளுக்கீரைகள்தான். நாம் கிள்ளுக்கீரைகள் இல்லை என்பதை நிரூபிக்க முதலாளித்துவ பயங்கரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களை கட்டியமைப்போம்” என்று அறைகூவல் விடுத்துப் பேசினார்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும்  தொடர்ந்துப்போராடவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

இறுதியாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தோழர்களும் தொழிலாளர்களும் திரளாக கலந்துக்கொண்டு எழுச்சிகரமாக தொழிலாளிவர்க்க உணர்வோடு விண்ணதிர முழக்கமிட்டனர். திரளான மக்கள் ஆதரித்துச் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஒசூர்

4. திருச்சி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • நெய்வேலி NLC யில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (CISF) வெறியனால் தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக் கொலை!
  • கண்டித்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி!

என்ற தலைப்பின் கீழ் அம்பலப்படுத்தி

  • கொலைவெறியன் நோமனை கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய போராடுவோம்!
  • கொலையை கண்டித்து தொழிலாளர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்யப் போராடுவோம்!
  • நாடெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கிவரும் CISF படையை கலைக்கப் போராடுவோம்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 19.03.2014 மாலை 6.30 மணிக்கு திருவரம்பூர் நவல்பட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர்.ராமசாமி தலைமை வகித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் கண்டன உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் சிறப்புரையாற்றினார். இவர் பேசுகையில், “தொழிலாளி ராஜ்குமாரின் படுகொலைக்கு காரணமான நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்ய வேண்டும், போராடிய மக்கள் மீது தடியடி நடத்த உத்திரவிட்ட போலீசு அதிகாரியை கைது செய்ய வேண்டும்” எனவும் “இப்படி குருவியைபோல சுட்டுக் கொள்ள நோமனுக்கு எப்படி தைரியம் வந்தது. அதிகாரவர்க்க திமிர்தான் இப்படிப்பட்ட திமிரும், ஆணவமும்தான் தொழிலாளியின் நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து சுடுவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இதனை தடுக்க வேண்டாமா? தனியாக நின்றால் தடுக்க முடியுமா? முடியாது. ஏனெனில் முதலாளித்துவ லாபவெறி நாடுமுழுவதும் தலைவிரித்தாடுகின்றது. அதனால்தான் ஆங்காங்கே படுகொலைகள் நடக்கின்றது. இன்று நாடு முழுவதும் முதலாளிகளின் லாபவெறியால் பணிபாதுகாப்பு எதையும் செய்து கொடுக்காமல் தொழிலாளிகளை படுகொலை செய்யும் பயங்கரவாதத்தையும், படுகொலைக்கு காரணமான எந்த முதலாளியையும் தண்டிக்கப்படுவதில்லை, மாறாக பாதுகாக்கப் படுகின்றனர். பொதுச் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்து தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் அபாயத்தையும், விதவிதமான பெயர்களில் சுரண்டுபவரையும், இப்படி அன்றாடம் நடக்கும் ஆலைச்சாவுகளையும் நீர்வளம், கடல்வளம், மலைவளம் என அனைத்தும் தனியாரிடம் விற்க்கப்படுகிறது. இதற்காக மலைக்காடுகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்களின் வீடுகளை தீக்கிறையாக்கி அகதிகளாக அடைத்து வைப்பது அல்லது நாடோடிகளாக விரட்டிவிடுவதும் நடக்கிறது. இதனை எவரேனும் எதிர்த்தால் அவர்களை நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகின்றது, ஒடுக்குவதற்கு பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவத்தை ஏவிவிடுகின்றனர்.”

மதுரையில் கிரானைட் கொள்ளைக்காக பல மலைக்காடுகளும், பொது கண்மாய்களும், சமுதாயக் கூடங்களும், ஏரிகளும், குட்டைகளும் பொறம்போக்கு நிலங்களும் பட்டாபோட்டு எடுத்துக் கொடுக்கப்பட்டதையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர தாதுமணல்களை கொள்ளையடிக்க வைகுண்டராஜன் போன்ற மாஃபியாக்களின் கையில் வளங்களை ஒப்படைத்து கொள்ளையை பாதுகாப்பதையும் உணர்வுபூர்வமாக விளக்கி பேசினார்.

துவாக்குடி, திருவரம்பூர் பகுதிகளில் நடக்கும் ஆலைச்சாவுகளையும் அதற்கு காரணமான பணிபாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் விளக்கி பேசினார். BHEL-ல் ஆரோக்கியசாமி, பெல்நகரில் உள்ள ஜோதி மாலியபுல்ஸ் கம்பெனியில் S.ஜெதீஸ்வரன், வாழவந்தான் கோட்டை S.குமார் என 3 பேர் கம்பெனியில் பணிபாதுகாப்பற்ற சூழலில் கடந்த 6 மாதங்களில் அதிகாரி மற்றும் முதலாளிகளால் வேலை செய்ய நிர்பந்தப்பட்டதால் வேலை செய்த இடத்திலேயே பலியாகினர்.

BHEL -ல் ஆரோக்கியசாமியின் படுகொலைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தும், பணியிட மாற்றம் செய்ததைக் கண்டும், அடுத்து யார் மீது நடவடிக்கை என பயப்பீதியை நிர்வாகம் கிளப்பிவிட்டபோது பயந்துபோய் V.பரமேஸ்வரன் என்ற தொழிலாளி பணியிடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து நான்கு நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் ஜவுளி மில்லில் வேலை பார்த்த தொழிலாளி சாயக்கழிவை அகற்ற சென்றபோது விசவாயு தாக்கி ஏழு பேர் படுகொலையானதுக்கும் முதலாளித்துவ லாபவெறிதான் காரணம் என்றார்.

இதனை முறியடிக்காமல் உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு இல்லை, இத்தகைய கொடூர கொலைகளை தடுக்க தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை எதிர்த்து போராட வேண்டும் . பெரும்பான்மை உழைக்கும் மக்களை பாதுகாக்க துப்பில்லாத இந்த அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மாற்று அரசமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைய வேண்டும் என தனது உரையை முடித்தார்.

இடை இடையே பாடப்பட்ட ம.க.இ.கவின் மையக் கலைக்குழு தோழர்களின் பாடல் கூடிநின்ற மக்களுக்கு புரட்சிகர உணர்வை ஏற்படுத்தியது. இறுதியாக பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர். சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கம்

நெய்வேலி NLC யில்
நண்பனை பார்க்க சென்ற
காண்ட்ராக்ட் தொழிலாளி ராஜ்குமாரை
CISF படைவெறியன்
குருவியப்போல சுட்டுக்கொன்றான்

கொலைகாரன் நோமனை
கொலைவழக்கில் கைது செய்ய

போராடிய தொழிலாளர்கள் மீது
போலீசின் தடியடி !

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!
படுகொலையான தொழிலாளிக்கு
நியாயம் கேட்ட மக்கள் மீது
தடியடி நடத்த உத்தரவிட்ட
போலீசு அதிகாரியை
கைது செய்ய போராடுவோம்!

கொலைகாரன் நோமன் மீது
கொலை வழக்கு பதிவு செய்ய
கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

தொடருது பார்! தொடருது பார்!
உழைக்கும் வர்க்கம் தொழிலாளர்கள் மீது
உழைப்பை உறிஞ்சும் முதலாளிகளின்
பயங்கரவாதம் தொடருதுபார்!
வேலைக்கு போன தொழிலாளர்கள்
வீடு திரும்ப உத்தரவாதமில்லை

ஈரோடு மாவட்டம்
பெருந்துறை சிப்க்காட்டிலே
ஜவுளி முதலாளி லாபத்தாலே
சாயக்கழிவை அகற்றச் சென்ற
ஏழு இளம் தொழிலாளர்களை
விசவாயு தாக்கியதாலே
படுகொலையான பயங்கரவாதம்!
முதலாளித்துவ பயங்கரவாதம்!

துவாக்குடி பெல் நகரில்
ஜோதிமாலியபுல்ஸ் கம்பெனியில்
மெயிண்டனன்ஸ் வேலைபார்த்த
இளம் தொழிலாளி ஜெகதீஸ்வரன்
எந்திரம் வந்து அடித்ததாலே
இறந்து போன கொடுமை பாரீர்!

வாளவந்தான் கோட்டையிலே
S.குமார் கம்பெனியில்
வேலை செய்த தொழிலாளி மீது
கிரேன் விழுந்து உடல்நசுங்கி
இறந்துபோன கொடுமை பாரீர்!

BHEL தொழிற்சாலையில்
பாதுகாப்பற்ற சூழலில்
வேலை செய்ய நிர்ப்பந்தம்
எலக்ட்ரானிக் பிரசிங் எந்திரத்தில்
வேலைபார்த்த தொழிலாளி மீது
வெட்ஜ் பீஸ் அடித்ததாலே
சிதறி செத்தார் ஆரோக்கியசாமி

பணி பாதுகாப்பற்ற சூழ்நிலையால்
அன்றாடம் ஆலைச்சாவுகள்
முதலாளி கொடுக்கும் நெருக்கடியாலே
நாளும் நடக்குது தற்கொலைகள்.

உயருது பார்! உயருது பார்!!
முதலாளித்துவ லாபவெறியால்
நவீன கால கொத்தடிமைகளின்
எண்ணிக்கை உயருது பார்!

காரணம் யாரு? காரணம் யாரு?
இத்தனைக்கும் காரணம் யாரு?
முதலாளித்துவ லாபவெறிதான்
இதற்கு பின்னே ஒழிஞ்சிருக்கு
தனியார்மயம் – தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
நடக்கும் இந்த படுகொலையை
தடுத்து நிறுத்துவோம்! தடுத்து நிறுத்துவோம்!

முறியடிப்போம் ! முறியடிப்போம்!
மனிதகுலத்துக்கும், விலங்குகளுக்கும்
இயற்கைக்கும் எதிரான
முதலாளித்துவ பயங்கரவாத்ததை
முறியடிப்போம் ! முறியடிப்போம்!

நாடெங்கும் உரிமைக்காகப்
போராடும் மக்களை
ஒடுக்கிவரும் CISF படைகளைக்
கலைக்கப்போராடுவோம்!

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (இணைப்பு)
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
திருச்சி.