privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மே நாளில் மது வழங்கிய முதலாளி - தடுத்த தோழர்கள் கைது

மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது

-

ருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் கெஸ்டாம்ப் சுங்வூ ஹைடெக் என்ற தென் கொரிய நிறுவனம் மே 1 அன்று தொழிலாளர்களை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தைத் தாண்டி அமைந்திருக்கும் கோல்டன் சன் ரிசார்ட்ஸ் என்ற இடத்திற்கு 7 வேன்களில்  அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. தொழிலாளர்கள் போராடினால் போலீசை வரவழைத்து ஒடுக்கும் முதலாளிகள் இன்னொரு புறம் தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெற்று விடக்கூடாது என்பதற்கே இத்தகைய சீரழிவு வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். தொழிலாளர்களின் பொருளாதார  உரிமைகளை தர மறுக்கும் இதே முதலாளிகள் மே தினமன்று காசு செலவழித்து மது வாங்கி கொடுப்பது எதற்காக?

இந்தத் தகவலை தெரிந்து கொண்ட  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் சுங்வூ நிர்வாகத்தின் இந்த செயல் குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தோழர்கள் தட்டிகளுடனும் பதாகையுடனும்  திரண்டு போய் கோல்டன் சன் ரிசார்ட்சை முற்றுகை இட்டனர்.

ரிசார்ட் முற்றுகை

மாவட்ட ஆட்சியர்கள், “மே 1 அன்று டாஸ்மாக் பார்கள் நடத்தக் கூடாது. தொழிலாளர்களை குடிக்க ஊக்குவித்து சீரழிக்கக் கூடாது.” என்ற உத்தரவு பிறப்பித்திருந்தும்  இந்த விஷயத்தில் நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரிசார்ட்டை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது.

காவல்துறை துணை ஆணையர் மோகன், “அனுமதி வாங்காமல் மறியல் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “உலகத் தொழிலாளர்களின் அரசியல் கோரிக்கைக்கான இந்த நாளை கொச்சைப் படுத்தும் முதலாளியை எதிர்த்து போராடுகிறோம்” என்று பதில் சொன்ன புஜதொமு மாநில இணைச் செயலாளர் ஜெயராமனை பிடித்து தள்ளி விட்டிருக்கிறார். தோழர்களும் அதை எதிர்த்து போராடவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏசி, “போடா வாடா” என்று தோழர்களை மரியாதைக் குறைவாக ஆபாசமாக பேசியிருகிறார். தொழிலாளர்கள் புரட்சிகர தொழிற்சங்கங்களில் அணி சேருவதை விட முதலாளிகள் தயவில் குடித்து கும்மாளம் போடுவதை போலீசு வரவேற்கிறது. அதனால்தான் தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர்.

காவல்துறை

தோழர்கள் உறுதியாக நின்று போராடியதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். போலீசார் தாக்குதலிலிருந்து பின்வாங்கி தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளனர். மண்டபத்தில் தோழர்கள் மே தினத்தின் முக்கியத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, இன்றைய அரசியல் கடமை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இது உண்மையான மே தினம்.

மண்டபத்தில் அடைப்பு

முன்னதாக, மே 1 காலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பகத்சிங், வீரா, எழில் உட்பட 4 பு.ஜ.தொ.மு தோழர்கள் வளர்புரம் கிராமத்தின் அருகே மண்ணூர் சிப்காட்டில் உள்ள சுங்வூ ஆலை வாயிலில் மே தின பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்த போது நிர்வாகத்தின் அடிமைகளான கமிட்டி தொழிலாளர்கள்  நான்கு தோழர்களையும் அடித்திருக்கிறார்கள். தோழர் பகத்சிங் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 3-4 தையல் போட்டிருக்கிறார்கள்.

கெஸ்டாம்ப் சுங்வூ ஹைடெக் (ஜி.எஸ்.எச்)   தொழிற்சாலையில் 120 தொழிலாளர்கள் நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஐவர் குழு என்ற கமிட்டியின் கீழ் பணி புரிகின்றனர். இவர்களுக்கு ரூ 30,000 முதல் ரூ 40,000 வரை மாதச் சம்பளம் தரப்படுகிறது. கமிட்டி தொழிலாளர்கள் என்ற அழைக்கப்படும் இவர்களை நிர்வாகம்  சுகபோகமாக பராமரிக்கிறது. சூப்பர் வைசர்கள் போல ஒப்பந்தத் தொழிலாளர்கள் கண்காணிப்பது போன்ற வேலைகள் தரப்படுகின்றன.

நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் சுமார் 98 தொழிலாளர்கள் அசிஸ்டன்ட் எஞ்சினியர், எஞ்சினியர் என்று பதவி பெயர் கொடுத்து 8-10 ஆண்டுகளாக உற்பத்தியில் வேலை செய்தும் ரூ 8,000 முதல் ரூ 10,000 வரை சம்பளம் தந்து சுரண்டுகிறது.

இந்த பிரிவு தொழிலாளர்களை பயிற்சியாளர்களாக சேர்த்துக் கொண்டு, 1 ஆண்டு பயிற்சியை 3 ஆண்டு வரை நீட்டிப்பது, அதன் பிறகு தொழில்நுட்ப உதவியாள் என்ற பெயரில் தகுதி காண் பருவத்தை (புரொபேஷன்) 6 மாதத்தை 1 வருடம் வரை இழுத்தடிப்பது, அதற்கு பிறகு தொழில்நுட்பம் கற்காதவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்குக் கூட அசிஸ்டென்ட் எஞ்சினியர், எஞ்சினியர் என்ற பதவி பெயர் கொடுத்து உற்பத்தியில் ஈடுபடுத்துதல் என்று சுரண்டி வருகிறது.

தொழிலாளர்களை எஞ்சினியர் என்று கையெழுத்து போடச் சொல்வதை எதிர்த்து, “நான் தொழிலாளிதான், எஞ்சினியர் இல்லை”  என்று சொன்னால், “கையெழுத்து மட்டும் போடு” என்று மிரட்டுகின்றர்.  “மேலதிகாரியின் உத்தரவுக்கிணங்க கையெழுத்து போடுகிறேன்” என்று தமிழில் எழுதி கையெழுத்திட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்பவர்களை அவமதிக்கும் விதமாக தரை கிளீன் செய்யச் சொல்வது போன்ற வேலைகளை கொடுக்கின்றனர்.  மேலும்,  டாய்லெட்டில் சிசிடிவி கேமரா வைப்பது, டாய்லெட்டில் இருக்கும் தொழிலாளர்களை எச்ஆர் பாத்ரூம் கதவைத் தட்டி கூப்பிடுவது என ஒடுக்குமுறை தொடர்ந்து வருகிறது.

இது போக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகளை உற்பத்தியில் சட்ட விரோதமாக ஈடுபடுத்துகிறது சுங்வூ.

பு.ஜ.தொ.மு சங்கம் ஆரம்பித்த பிறகு நிர்வாகத்தின் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் தொடரப்பட்டன.

சங்கம் ஆரம்பித்த காரணத்துக்காக பயிற்சியாளராக இருந்த 43 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கச் சொல்லி காஞ்சிபுரம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், “அவர்கள் தொழிலாளிகளே கிடையாது, அதிகாரிகள்தான்” என்று நிர்வாகம் சொல்லியிருந்ததை எதிர்த்து 1947 தொழிற் தகராறு சட்டம் பிரிவு 33-ன் கீழ் புஜதொமு மனு சமர்ப்பித்தது. இவ்வழக்கில் 2 பேரை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக நீதிமன்றம் அறிவித்தது. சிறப்பு பொருளாதார மண்டலத்திலேயே வேறு எந்த தொழிற்சங்கமும் இது வரை சாதிக்க முடியாததை பு.ஜ.தொ.மு சாதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர்களை பண்பாட்டு ரீதியாக சீரழிக்க முயல்வதையும் எதிர்த்த பு.ஜ.தொ.முவின் போராட்டம் தொடர்கிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க