மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !

3
8

hrpc case (7)காலாவதியாகி போன ‘மெட்ரிகுலேசன்’ என்ற அடைமொழியை, தனியார் பள்ளிகள் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஜூன் மாதம்.  பள்ளிகள் துவங்கிவிட்டன. வேட்டைக்கு காத்து நிற்கும் நரி போல,தனியார் பள்ளிகள் பிரமாண்ட விளம்பரங்களை  கடந்த இரண்டு மாதங்களாக தினசரி செய்தித்தாளில்  கொடுத்து வருகின்றனர். வேட்டையில் ஏதும் தெரியாத அப்பாவிகளை சிக்க வைப்பதற்கென்றே, தங்கள் பள்ளிகளின் பெயருக்கு பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் எனப் பெயர் போட்டு, வெளியிடுகிறார்கள். இத்தகைய பெயர்கள் போட்டால் ஏதோ மாபெரும் கல்வி கற்பிக்கப்படுகின்றது, ஆங்கிலம் அருவி போல கொட்டுகிறது, வேலை வாய்ப்பு காத்துக் கொண்டிருப்பதாக உருவாக்கப்பட்ட மாயையில், பெற்றோர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தை , 2010-ம் ஆண்டு திமுக அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவந்தது. எதிர்கட்சியாய் இருந்தவரை சமச்சீர் பாடத்திட்டத்தைப் பற்றி வாய் திறக்காத ஜெயலலிதா, 2011-ல் ஆட்சியில் அமர்ந்ததும், அவசரம் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, சமச்சீர் பாடத்திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகள் மக்களையும், மாணவர்களையும் தமிழகம் தழுவிய அளவில் ஒருங்கிணைத்து, பல நாட்கள் தெருவில் இறங்கி எழுச்சியுடன் போராடியும், உச்சநீதி மன்றம் வரை வழக்காடியும், ஜெயலலிதா ஆட்சியின் முதல் மசோதாவை முறியடித்தனர்.

ஆக, இன்றைக்கு சமச்சீர் பாடத்திட்ட அமலாக்கத்திற்கு பிறகு தமிழகத்தில் நான்குவகை பாடத்திட்டங்கள் கொண்ட பள்ளிகள் இல்லை. அனைவரும் தமிழக கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.  அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரே வகையான சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்ற தவிப்பில் தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு, அனைத்து தனியார் பள்ளிகளும், மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பல பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல், பழைய பாடத்திட்டத்தையே அமல்படுத்தி அரசை ஏமாற்றுகின்றனர் என்பது தனியாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

அரசு நியமித்த கட்டணங்களுக்கான கமிட்டி, தனியார் பள்ளிகளின் தன்மைக்கேற்ப இவ்வளவு தான் வசூலிக்க வேண்டும் என்ற வழிகாட்டலையும் தனியார் பள்ளிகள் மதிப்பதேயில்லை.  கல்வித்துறையின், தனியார் பள்ளிக் கட்டண நிர்ணய கமிட்டியின் உத்தரவுகளை எல்லாம் கழிப்பறை காகிதங்களாகத்தான் மதிக்கின்றனர்.  பெற்றோர்களிடமிருந்து வாங்குகிற பணத்துக்கு பெரும்பாலான பள்ளிகள் முறையான ரசீது தருவதில்லை.

hrpc case (1)இப்படித் தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மாஃபியா கும்பலைப் போல மக்களை பல வகைகளிலும் கொள்ளையடிக்கின்றனர். ஆட்சியில் அமர்ந்ததும், சமச்சீர் பாடத்திட்டத்தை ஒழித்து, தனியார் கல்வி கொள்ளையர்கள் வயிற்றில் பாலை வார்க்க முயற்சி செய்த ‘அவாள்’ ஆட்சியில் இருப்பதால், தைரியமாக சட்டத்தை மீறுகின்றனர்.  ’உள்ளே’ இருக்கவேண்டிய கல்வி மாபியாக்கள் எல்லாம் கல்வித் தந்தைகளாக, கல்வி வள்ளல்களாக வலம் வருகின்றனர்.

தனியார் பள்ளிகள் மக்களை இப்படி கொள்ளையடிப்பதை அரசு வேடிக்கை பார்ப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணம், தனியார் பள்ளிகள் பெருக பெருக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.  இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், மாணவர்கள் வரவில்லை என்ற காரணத்தைக் காட்டியே பள்ளிகளை இழுத்து மூடிவிடலாம். கல்விக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து கழன்றுகொள்ளலாம் என சதித்தனமாக அரசு சிந்திக்கிறது.

இதை முறியடித்து, அரசுப் பள்ளிகளை காக்கவேண்டியதும்.  காசுள்ளவனுக்கே கல்வி என்ற புதிய மனுநீதியை முறியடிப்பதும் நமது கடமை. அதற்காக  பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.  அதில் ஒரு முயற்சியாக, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் துணை அமைப்பான, ’மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்’(PUSER) சார்பில், தனியார் பள்ளிகள் தங்கள் பெயருக்கு பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பெயர்களை நீக்கவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் 29/05/2014 அன்று வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.

இதை உயர்நீதி மன்றம் விசாரனை செய்ய ஏற்று, அரசு பதிலளிக்க மூன்று வார காலம் அவகாசம் தந்து உத்தரவிட்டிருக்கிறது.

மக்கள் அரங்கில் தனியார் பள்ளிகளின் கொள்ளைகளை எதிர்த்து போராடி வரும் நாங்கள் அதற்கு உரம் சேர்க்கும் வகையில் சட்ட முறையிலும் முயற்சி செய்கிறோம்.

வழக்கு குறித்து தினசரிகளில் வெளிவந்த செய்திகள் – பெரிதாகப் பார்க்க படங்கள் மீது சொடுக்கவும்.


______________________________________________________

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
தொடர்புக்கு : 98428 12062

சந்தா