privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கழிப்பறை கட்ட மறுத்தால் கலெக்டர் ஆபிசில் மலம் கொட்டுவோம் !

கழிப்பறை கட்ட மறுத்தால் கலெக்டர் ஆபிசில் மலம் கொட்டுவோம் !

-

திருச்சி அரியமங்கலம் – உக்கடை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிவறை கட்டித்தர மறுக்கும் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம்!

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்கள் சாதாரண உழைக்கும் வர்க்கத்தினரே.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தனிக்கழிவறை கட்ட பொருளாதார வசதி இல்லாததால் மாநகராட்சி கழிப்பறையை நம்பி உள்ளனர்.  20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாமல் சிதிலமடைந்த ஒரு கழிப்பறையும், 8 கழிவறைகள் கொண்ட ஒரு கழிப்பறையும் உள்ளன. இதில் 8 கழிவறைகள் உள்ள கழிப்பறை பெண்களுக்காகவும், ஆண்களுக்கு கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பெண்கள் கழிப்பறையில் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 2 கழிப்பறை என்ற அவலநிலை உள்ளது.

மாநகராட்சி முறையாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராததால் 2 மாதத்திற்கு முன்பு அந்த 2 கழிவறைகளும் செயல்படாமல் இழுத்துப் பூட்டப்பட்டுவிட்டது. இதனால் பெரும்பாலான பெண்கள் எப்போது இரவு நேரம் வரும் என்று எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அவல நிலை குறித்து எத்தனையோ முறை மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மாறி மாறி புகார் மனு கொடுத்தும் அதிகார வர்க்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையை மாற்றி தருவதாக கூறி பல அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கி ஏப்பம் விட்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இதனால் அரசியல் கட்சி, அதிகாரிகள் என எவர் மீதும் நம்பிக்கை இழந்த மக்களின் நிலையை கேள்விப்பட்டு அங்கு சென்ற புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மக்களை கூட்டி பேசினர்.

அதிகார வர்க்கம் என்பது இயல்பிலேயே முதலாளிகளுக்காகவும், ஆளும் வர்க்கத்திற்காகவும் சேவை செய்யக் கூடியது என்றும், அது ஒரு போதும் உழைக்கும் வர்க்கத்திற்காக சேவை செய்யாது என்றும், இதனை மாற்ற நமக்கான ஒரு போராட்டக்கமிட்டி அமைத்து, அரசை எதிர்த்து போராடினால் மட்டுமே நமது கோரிக்கை நிறைவேறும் என்றும் விளக்கினோம். நாம் பேசியதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் மக்கள், நமது அமைப்பும் வழக்கம் போல் வந்து சும்மா பேசி சென்று விடுவார்களோ என்று சந்தேகத்துடனே நம்மை அணுகினர். அதை செயலில் பரிசீலியுங்கள் என்று நம்பிக்கையூட்டி, முதலில் போராட்டக் கமிட்டி கட்டப்பட்டது. பிறகு மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் உக்கடை பகுதி பொதுமக்கள் சார்பில் ,

‘ திருச்சி அரியமங்கலம் – உக்கடை பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிவறை கட்டித்தர மறுக்கும் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம்!

நவீன தீண்டாமை கொடுமைக்கெதிராக மலம் அள்ளிக் கொட்டும் போராட்டம்

இடம் :- மாவட்ட ஆட்சியர் அலுவலம் திருச்சி. ‘

மேற்கண்ட முழக்கத்துடன் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி பிரச்சாரம் செய்யப்ட்டது.

அடுத்த நாள் காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நம்மை தொடர்பு கொண்டு, “ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி உங்களை பார்ப்பதற்கு நேரம் கேட்டார்” என்று பு.மா.இ.மு மாவட்ட செயலாளரிடம் கேட்டனர். அவர் மாலை 5 மணிக்கு பார்ப்பதாக கூறினார். “ஊர்மக்கள் வேலைக்கு சென்று வர இரவு நேரம் ஆகும் என்பதால், காலை 6 மணியளவில் ஊர்மக்களை கூட்டி வைக்கிறோம், வந்து பேசி உத்தரவாதமளியுங்கள்” என்று கூறினோம்.

பிறகு மறுநாள் காலை (11-07-14) அன்று மக்களிடம் இந்த விசயத்தை சொல்லும் போது ‘எவனாவது வருவான், பாத்துட்டு செஞ்சி தரோம்னு சொல்லிட்டு போயிருவான், இதுக்கெதுக்கு தோழர் எல்லாரும் இருக்கணும்’ என்று மக்கள் கேட்டனர். “இன்று ஒருநாள் மட்டும் இருங்கள்” என்று நாம் (பு.மா.இ.மு) சொன்னதும் மக்கள் அனைவரும் இருந்தனர்.

மாநகரசெயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் வந்ததை மக்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அதுவரை அந்தப்பக்கமே எட்டிப்பாக்காத மாமன்ற உறுப்பினர் அன்புலெட்சுமி அவரது சகோதரர்களுடன் ஓடோடி வந்தார்.

இவற்றை எல்லாம் பரிசீலித்து சொல்ல அரை மணி நேரம் ஆகும். நீங்கள் அனைவரும் அருகில் உள்ள வட்ட அலுவலகத்திற்கு வாருங்கள் என அதிகாரிகள் நம்மையும், மக்களையும் அழைத்தனர். மக்களிடம் இதை சொல்லி அப்பகுதி போராட்டக்கமிட்டியுடன் தோழர்கள் சென்றனர்.

ஒவ்வொரு கோரிக்கையாக ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் செய்து தருகிறோம் என்று எழுதி கையெழுத்திட்டு மக்களிடம் கொடுத்தார், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவ ராமன். இதுவரை எழுத்துபூர்வமான உத்திரவாதம் எதுவும் மாநகராட்சி அதிகாரிகள் தந்ததில்லை. முதல் முறை அவர்களே நேரே வந்து நம்மிடம் ஆவணங்களை தருகிறார்கள். அதனால் எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்துள்ளது என்றனர் மக்கள்.

“நாம் அளித்த கோரிக்கைகளை அவர்கள் கொடுத்த கால கெடுவிற்குள் செய்து முடிக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்” என்றும், “அதுவரை தற்காலிகமாக நிறுத்தலாமா?” என்று கேட்டபொழுது, ஊர்மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். “முழுவதுமாக போராட்டத்தை நிறுத்தவில்லை, தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தப்பட்டது” என்று எழுதுமாறு மக்கள் கூறினர். அதனடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலாளர் தோழர். சேக் எழுதி கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

நமது போராட்டம் அதிகாரிகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் போது தான் வேலைகள் நடக்கும் என்றும், அதற்கு சங்கமாகவும், போராட்டக்கமிட்டியாக இணைந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும், சங்கமாக இணைவதன் அவசியத்தை விளக்கியும் மக்களிடம் தோழர்கள் பேசினர்.

அதிகாரிகள் 3 மாதத்திற்குள் கழிவறையை கட்டி தந்து விடுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளனர். அது நடைபெறாதபட்சத்தில் போராட்டம் மீண்டும் தொடரும். அந்த வகையில் மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அங்கு செயல்பட்டு வருகிறது.

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
திருச்சி.
தொடர்புக்கு :- 9943176246