privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்

நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்

-

40,000 முதல் 45,000 குடும்பங்கள், லட்சோப லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை மூழ்கடித்து, ரூ 90,000 கோடி செலவில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டது சர்தார் சரோவர் அணை. இந்தத் திட்டத்தினால் தமது வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்கள் அரசு வழங்க வேண்டிய மறுவாழ்வுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மறுவாழ்வு இப்போதைக்கு இல்லை.

சர்தார் சரோவர் அணை மூலம் வறட்சியால் தொடர்ந்து பாதிக்கப்படும் வட குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டது. மூழ்கடிக்கப்படவிருந்த காடுகளையும், கிராமங்களையும், வளமான விவசாய நிலங்களையும், பாதுகாக்க இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடிய குஜராத், மத்திய பிரதேச, மகாராஷ்டிர பழங்குடி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று பழிக்கப்பட்டார்கள்.

கோக் இந்தியா
தண்ணீரைத் திருடும் கோக்

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு கல்லறை கட்டி விட்டு உருவாக்கிய சர்தார் சரோவர் அணை நீரை அகமதாபாத் அருகில் உள்ள சனாந்த் பகுதி தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது குஜராத் அரசு. சனாந்த் பகுதிக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 90 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. டாடா மோட்டர்ஸ், ஃபோர்ட் மோட்டர்ஸ் போன்ற கார் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பகுதிக்கு ஏற்கனவே ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் நர்மதா தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது, அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் நர்மதா திட்டத்திலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு. ரூ 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கோகோ கோலாவின் குளிர்பான ஆலைக்கு 1.85 லட்சம் சதுரமீட்டர் (சுமார் 45 ஏக்கர்) நிலத்தை மாநில அரசு ஒதுக்கியிருக்கிறது. மோடியின் குஜராத்தில் நர்மதா நீரைக் கொண்டு விவசாயிகளை வாழ வைப்பது என்பதன் பொருள் நிலத்தையும், நீரையும் பன்னாட்டு குளிர்பான கம்பெனி கோக்கோ கோலாவுக்கு தாரை வார்த்து, அந்நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களுக்கு குளிர்பானங்களை விற்று லாபம் ஈட்டுவது என்றுதான் பொருள்.

“நிறுவனம் விண்ணப்பித்த 50 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஒரு மாநில அரசு அதிகாரி. அதாவது, முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகுதான் தண்ணீர் வழங்கப்படும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். கழிவுநீரை முறையாகக் கையாளும் திட்டத்துடன் கூடிய இந்த ஆலைக்கு சட்டபூர்வமாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் இந்தத் தொழிற்சாலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. எனவே, நீதிமன்றங்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள், இந்திய அரசியல் சட்டத்தின் பக்தர்கள் யாருக்கும், இந்திய மக்களின் வாழ்க்கைக்கான தண்ணீரை அமெரிக்க கோக்குக்கு கொடுக்கும் இந்த முடிவில் எதிர்ப்பு இருக்க முடியாது. இதை எதிர்த்து இந்திய மக்கள்தான் போராட வேண்டும்.

மத்திய இந்தியாவின் விவசாயிகளின் வாழ்க்கையை மூழ்கடித்து கொண்டு போன நீரைக் கொண்டு இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கோக்கோ கோலா, ஸ்ப்ரைட், ஃபான்டா, தம்ப்ஸ் அப் போன்ற பானங்கள் இந்தியா முழுவதும் ‘வளர்ச்சி’யை ஆதரிக்கும் வர்க்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே அல்லது மல்டிபிளெக்சில் ஐ படம் பார்த்துக் கொண்டே சிப்புவதற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே, குஜராத்தில் கேடா மாவட்டத்தில் உள்ள கோப்லெஜ் என்ற இடத்தில் கோக்கோ கோலாவின் மிகப்பெரிய குளிர்பான ஆலை உள்ளது. கோக்கோ கோலாவுக்கு இந்தியா முழுவதும் 24 உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்தியா அதற்கு உலக அளவில் 7-வது பெரிய சந்தையாக உள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலக அளவில் தனது முதல் 5 சந்தைகளுக்குள் ஒன்றாக உருவாக்குவது என்ற கோக்கோ கோலா தனது வளர்ச்சிக்கு திட்டமிட்டுள்ளது. தாமிரபரணி முதல் நர்மதா வரை நமக்குச் சொந்தமான நீரை உறிஞ்சி வளர்கிறது கோக்கோ கோலா.

மோடி வாக்களித்த வளர்ச்சியும், அச்சே தின் (நல்ல நாள்)-ம் கோக்கோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தானே தவிர இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அல்ல.

மேலும் படிக்க