privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம் போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

-

த்துணை முறை கையும்களவுமாக மாட்டிக் கொண்டாலும், அம்பலப்பட்டு அவமானப்பட்டாலும் அதையெல்லாம் துடைத்துப்போட்டு விட்டு, திரும்பத் திரும்ப நானாவிதமான குற்றங்களைச் செய்ய போலீசு துணிவது ஏன்? பொதுமக்களை அடக்கி ஒடுக்கிடும் அதிகாரம் அதனிடம் குவிந்திருப்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அக்குற்றங்களை மூடிமறைத்து, நியாயப்படுத்தி, குற்றமிழைத்த கிரிமினல் போலீசைச் சட்டப்படியே தப்பவைக்கும் அயோக்கியத்தனம், போலீசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி நீதிமன்றங்கள் வரையிலான இந்த அமைப்பு முறையிலேயே பொதிந்திருப்பதுதான் இதற்கு அடிப்படையாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டு வக்கிரமான மனித உரிமை மீறல்கள் சமீபத்தில் தமிழகத்தில் நடந்துள்ளன.

போலீஸ் பாலியல் குற்றம்
போலீசாரால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடிப் பெண்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமது குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்து, அப்பகுதியில் அலங்காரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சாமான்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுள் இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் தமது பொருட்களைப் பயணிகளிடம் விற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு சுற்றிக் கொண்டிருந்த போலீசு ஏட்டு வடிவேல், அப்பெண்களையும் சிறுமியையும் மிரட்டிப் பேருந்து நிலையத்திலிருந்த போலீசு கட்டுப்பாட்டு அறைக்கு இழுத்துக் கொண்டு போய், அவர்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தித் துரத்தியடித்து விட்டான்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு ஆதரவாகத் தலையிட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இப்பாலியல் வன்கொடுமை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக் கோரியும் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறது.

இச்சம்பவம் போலீசு கட்டுப்பாட்டு அறையிலேயே நடந்திருப்பதும், இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் பாதிக்கப்பட்டிருப்பதும் நிரூபணமான பின்னும் இக்குற்றத்தில் போலீசு ஏட்டு வடிவேலு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டிருப்பது மோசடியானது. குறிப்பாக, அப்போலீசு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் என்பவருக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கிறது. எனினும், இக்குற்றத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனக் கூறப்பட்டு, நடந்த சம்பவத்தை தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதுதான் அவர் செய்த தவறு என விசாரணை முடிக்கப்பட்டு, அவருக்குப் பணியிட மாறுதல் என்ற ‘தண்டனை’ வழங்கப்பட்டு, குற்ற வழக்கிலிருந்து தப்ப வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஓசூர் சம்பவத்திற்கு இணையான பாலியல் வக்கிரம் சென்னை- மாம்பலம் போலீசு நிலையத்தில் கடந்த மாதம் நடந்திருக்கிறது. இரவு சினிமா காட்சி பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார், பசுபதி, கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் வழிமறித்த போலீசார், அவர்களைச் சட்டவிரோதமாக மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றதோடு, அங்கு அந்த மூன்று அப்பாவிகளையும் – இந்த மூன்று பேரில் சதீஷ்குமார் தவிர மற்ற இருவரும் சிறுவர்கள் – செல்போன் திருடியதாக ஒத்துக்கொண்டு கையெழுத்துப் போடும்படி அடித்துச் சித்திரவதை செய்தனர். மேலும், அந்த மூவருக்கும் யுவராஜ் என்றொரு நெருங்கிய நண்பன் இருப்பதையும் சித்திரவதையினூடாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அன்றிரவே யுவராஜின் வீடு புகுந்து, தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன் பிறகும் அவர்கள் நால்வரும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கவே, அவர்களை நிர்வாணமாக்கி, கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுச் செய்து, அதனை அப்போலீசு நிலையத்தின் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் சீனிவாசன், சேது என்ற இரண்டு போலீசார் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு ரசித்துப் பார்த்தனர். சதீஷ்குமாரின் ஆணுறுப்பிலிருந்து இரத்தம் கொட்டி, அவர் மயங்கிச் சரியும் வரை இந்த வக்கிரமான சித்திரவதை நடந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் மீது செல்போன் திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகளைப் பதிவு செய்து சதீஷ்குமாரை புழல் சிறையிலும், மற்ற மூன்று சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துள்ளனர்.

போலீஸ் வன்முறை

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து, சிறை மருத்துவர் அவரைப் பரிசோதித்தபோதுதான் மாம்பலம் போலீசு நிலையத்தில் அவரும் அவரது நண்பர்களும் கீழ்த்தரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வக்கிரம் அம்பலமானது. சிறை மருத்துவர் இந்த வக்கிரச் சித்திரவதை குறித்து போலீசு கமிசனருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதம் மூலம் புகாராகத் தெரிவித்த பின், இந்தச் சம்பவத்தை இனியும் மூடி மறைத்துவிட முடியாது என்ற நிலையில்தான், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அச்சிறை மருத்துவர் மனிதாபிமான எண்ணத்தோடு கடிதம் எழுதவில்லையென்றால், இப்பாலியல் வக்கிரமும் பொய் வழக்கும் அம்பலத்திற்கே வந்திருக்காது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீசு பிரிவு, இரண்டு போலீசார் மீது மட்டும்தான் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை எனக் கேள்விகள் எழுந்தவுடன், இது குறித்து அவரைத் தனியாக விசாரித்து வருவதாக மழுப்பலான பதிலை அளித்தது. இது உதவி ஆய்வாளரைக் காப்பாற்றி, வழக்கிலிருந்து தப்பவைக்கும் மோசடி தவிர வேறில்லை. மேலும், இச்சம்பவங்கள் இரண்டிலும் பாலியல் வன்முறை குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, போலீசாரின் பிற குற்றங்கள் – சாலையில் நடந்துசென்றவர்களைச் சட்டவிரோதமாக இழுத்துப் போனது, வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனைக் கடத்தி வந்தது, பொய்வழக்கு போட்டது உள்ளிட்டவை கண்டுகொள்ளப்படவில்லை என்பது கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

இவ்விரண்டு சம்பவங்களில் மட்டுமின்றி, தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்து விசாரணைக்கு வந்துள்ள பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளிலும், குற்றங்களைத் தடுப்பதற்காகவே கடமையாற்றி வருவதாகக் கூறப்படும் போலீசே கொடிய குற்றங்களை இழைத்திருப்பதும்; அத்துறைக்கு வெளியே இருப்பவர்களால் இந்தச் சம்பவங்கள் அம்பலமாக்கப்பட்ட பிறகுதான் வழக்கு, விசாரணை தொடங்கியிருப்பதும்; அதிலும்கூட, குற்றமிழைத்த போலீசாரில் ஒன்றிரண்டு பேரின் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, மற்றவர்களைத் தப்பவைப்பது திட்டமிட்ட முறையில் நடந்தேறியிருப்பதும்; நீதிமன்றங்களும் போலீசால் பாதிக்கப்படுவோருக்கு நட்ட ஈடு வழங்க உத்திரவிடுவதைத் தாண்டி, அவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும் போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க மறுப்பதும் ஒரு பொதுப்போக்காக இருப்பதை நாம் காணலாம்.

இவையனைத்துமே போலீசிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற கேள்வியைத்தான் மையமாக எழுப்புகின்றன. போலீசின் ஒவ்வொரு அத்துமீறல்களும் அக்கிரமங்களும், அவ்வமைப்பு பொதுமக்களுக்கு எதிரானது என்பதைத்தான் நிரூபித்து வருவதால், குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிக்கக் கோருவதையும் தாண்டி, அதற்கு வழங்கப்பட்டுள்ள தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்யக் கோருவதும் அவசியமாகிறது. ஆனால், முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இந்த அறிவுபூர்வமான தீர்வுக்கு மாறாக, போலீசு நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தி, போலீசாரின் அத்துமீறல்களைக் குறைத்துவிட முடியும் என்ற நகைக்கத்தக்க தீர்வை முன்வைக்கிறார்கள்.

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
___________________________________

  1. போலிசு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவேண்டும்…
    பாதுகாப்பு என்பது சரியான முறையில்…..மஞ்சல் துண்டு/பச்சை புடவை வீட்டில்
    பாதுகாப்பதுபோல்…எல்லோருக்கும் இருக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க