privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வனம் - மக்களை பாதுகாக்க கோத்தகிரியில் மக்கள் எழுச்சி !

வனம் – மக்களை பாதுகாக்க கோத்தகிரியில் மக்கள் எழுச்சி !

-

கோத்தகிரி வனங்களையும் மக்களையும் பாதுகாக்கும் கூட்டமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திங்கள் கிழமை கோத்தகிரி டானிங்டனிலிருந்து துவங்கி பேரணியாகச் சென்று, கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்று முழு கடையடைப்பு அழைப்பு விடப்பட்டு, வாகனங்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

notice-1பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகள் காட்டேஜாகவும் ரிசார்ட்டாகவும் மாறிக் கொண்டிருக்க, பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளோ கடத்தல் தொழிலில் பிஸியாக இருக்கின்றனர். வனத்தில் வாழ வாய்ப்பில்லாத விலங்குகள் ஊருக்குள் நுழையத் துவங்குகின்றன. தினசரிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறித்த செய்தி வாரம் இரு முறையேனும் தவறாமல் வெளியாகின்றது.

சமீபத்தில், கோத்தகிரியில் கரடி தாக்கி பெண் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. அடிக்கடி நிகழும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழும் மக்கள் எழுச்சிகள் என நீலமலையே ஒரு அசாதாரணமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் வனத்தையும் காக்க துப்பில்லாமல் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் செல்லுமிடமெல்லாம் மக்களிடம் அவமானப்பட்டு நிவாரணம் கொடுத்துவிட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து, பெருகி வரும் வன விலங்குகள் தாக்குதலுக்கெதிராகவும், நீலமலை மக்களின் நிரந்தர பாதுகாப்பின்மைக்கு முடிவு கட்டவும் எடுத்திருக்கும் அவதாரம் வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
பெருகி வரும் வன விலங்குகள் தாக்குதலுக்கெதிராகவும், நீலமலை மக்களின் நிரந்தர பாதுகாப்பின்மைக்கு முடிவு கட்டவும் எடுத்திருக்கும் அவதாரம் வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு.

கடந்த மாதம் 23-ம் தேதி அனைத்து ஜனநாயக சக்திகள் கட்சிகளை இணைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஏப்ரல் 13-ம் தேதி பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு, கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதேன முடிவு செய்து செயலில் இறங்கினோம். சுமார் 15,000 துண்டு பிரசுரங்களுடன் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விரிவான பிரச்சாரத்தை கொண்டு சென்றோம். மலைகளின் அரசி எங்களை வாரி அணைத்துக் கொண்டாள்.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
இந்தப் போராட்டத்தின் வடிவமும் வளர்ச்சியும் மக்கள் என்னும் மகத்தான சக்தியினால் கட்டமைக்கப்பட்டன.

சங்கத்தின் சார்பில் ஊர்த் தலைவர்களுக்கு கொடுத்த அழைப்புக் கடிதத்துக்கு, “எங்கள் ஊர் சார்பில் எப்போதும் உங்களுக்கு ஆதரவு” என பதில் கடிதம் கொடுத்து நிதியும் கொடுத்துதவிய ஆடுபெட்டு கிராம மக்கள் முதல் வீடு வீடாக இந்த போராட்டத்துக்கு வசூல் செய்து கொடுத்த தவிட்டு மேடு, குண்டூர் காலனி, அளக்கரை இவை போக பேருந்து பிரச்சாரத்திலும் பெருவாரியாக நிதியளித்த பொது மக்கள் என இந்தப் போராட்டத்தின் வடிவமும் வளர்ச்சியும் மக்கள் என்னும் மகத்தான சக்தியினால் கட்டமைக்கப்பட்டன. செல்லும் இடமெங்கும் கூட்டமைப்புக்கு ஆதரவு அற்புதமாக இருந்தது.

படுகர், தோடர் இவை போக இன்னும் பல பழங்குடி மக்கள், மலையாளிகள், இலங்கை மலையகத்திலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் என பல பிரிவுகளாக நீலகிரியில் வாழ்கின்றனர்.  மலைகளில் பூத்த முகடான கோத்தகிரியில் இம்மக்களை கோர்த்து நிறுத்தியது தான் போராட்டத்தின் வெற்றி. ஆக கோத்தகிரி எனும் இடம் மலைகளை மட்டுமல்ல மக்களையும் இணைக்கும் சக்தியாக மாறியது.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களை அச்சத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர் காவல் துறையினர்.

கோத்தகிரி டானிங்டன்-ல் ஏற்ற இறக்கத்தை அளக்கும் விதமாக நீண்டிருந்த மக்கள் அணியை உற்சாகமூட்டும் விதமாக பேசி குளிர்காற்றை கிழிக்கும் முழக்கங்களுடன் பேரணிக்கு கூட்டமைப்பின் தலைவர் தோழர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களை அச்சத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர் காவல் துறையினர். தேயிலை தோட்ட குறு விவசாயிகள் பலரும் விடுப்பு கொடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
சக தொழிலாளியுடன் உரிமை மீட்க முழக்கத் தட்டி ஏந்தியவாறு புன்னகையுடன் நடந்து வருவது…

கனவான்களின் சர்க்கரை அளவை சமப்படுத்த கொழுந்துத் தேயிலைகளாய் தேடித் தேடி பறித்த கைகள் இன்று தம் சக தொழிலாளியுடன் உரிமை மீட்க முழக்கத் தட்டி ஏந்தியவாறு புன்னகையுடன் நடந்து வருவது… விவரிக்கவியலா கவிதை.

கூட்டமைப்பைச் சேர்ந்த திரு பூவரசன் பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணி காமராஜர் சதுக்கத்தை அடைந்த போது தன்னைக் காக்க வந்த மக்களுடன் மகிழ்வோடு இணைந்து கொண்டது இயற்கை, மழையின் வடிவில். அதனையும் அழைத்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் இடைவிடாத முழக்கங்களுடன் முன் நகர்ந்தனர். மழைக்காக ஒதுங்கிய கூரையின் கீழ்ப்புறத்தையும் தற்காலிக ஆர்ப்பாட்ட அரங்காய் மாற்றினார்கள் தோழர்கள்.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
தன்னைக் காக்க வந்த மக்களுடன் மகிழ்வோடு இணைந்து கொண்டது இயற்கை, மழையின் வடிவில்.

கோத்தகிரியின் தினசரி சந்தை நிலை கொண்டிருக்கும் குறுகிய சந்துகளினூடேயும் ஆர்ப்பாட்டமாய் சென்ற பேரணி கோத்தகிரி பேருந்து நிலையத்தை தாண்டுகையில் இன்னும் ஆவேசமான முழக்கங்களுடன் முன்னேறியது. கிட்டத்தட்ட முழுச் சாலையையும் விழுங்கி நகர்ந்த பேரணியை கட்டுப்படுத்த முடியாத போலீசார், தோழர் ஆனந்தராஜிடம், “சார்., ரெண்டு ரோடுமே பிளாக் ஆகியிருக்கு; பிளீஸ் சார் ஒத்துழைப்பு கொடுங்க…. இல்ல உங்களுக்கு இஷ்டம்னா பண்ணுங்க….” என கெஞ்சல் தொனிக்கு மாறினர்.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
ஆவேசமான முழக்கங்களுடன் முன்னேறியது, பேரணி.

இறுதியில் ஜீப் திடலுக்கு வந்து சேர்ந்த போது மழை வேகம் பிடித்திருந்தது; புதியதொரு போராட்ட அனுபவத்தை பெற்ற மக்களது உணர்வும்தான். ஆங்காங்கே கிடைத்த பிளக்ஸ் பேனர் குடை தார்பாய்களுடன் மேடையின் முன்னே தயாராயினர்.

neelagiri-hills-protection-28முதலாவதாக கண்டன உரையாற்றிய தோழர் ஆனந்தராஜின் பேச்சு முதலில் கடையடைப்புக்கு ஒத்துக் கொண்டு பின்னர், காவல் துறையின் பேச்சை கேட்டு நயவஞ்சகமாக கடையடைப்பை தடுத்த வணிகர் சங்க தலைவர்களை தோலுரித்தது. இவர்கள் காவல் துறையுடன் கடத்தல் தொழிலில் ஒரு ஒத்திசைவுடன் செயல்படுவதே இதற்கு காரணம். அதைத் தொடர்ந்த அவரது பேச்சு மக்களது உற்சாகத்துக்கு உரம் சேர்ப்பது போல அமைந்திருந்தது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி கூறி தன் உரையை முடித்தார்.

neelagiri-hills-protection-29அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சிவசாமி, இதே பிரச்சினையையொட்டியதொரு போராட்டத்திற்கு தான் சில ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி வந்ததை நினைவு கூர்ந்தார். வனவிலங்கு பிரச்சினை தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பதையும் செயலற்ற அரசுக் கட்டமைப்பையும் போராட்டத்தின் அவசியத்தையும் பேசினார். 70’களில் தமிழக விவசாயிகளை சிலிர்த்தெழச் செய்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி தளபதியாக விளங்கிய டாக்டர் சிவசாமி தனது மருத்துவர் தொழிலை விடுத்து களப்பணியாற்ற மாறியவர். இவரைப் போன்ற மூத்த அனுபவசாலிகளே இன்று அரசையும் அதிகார மட்டங்களையும் புரிந்து கொண்டிருப்பது நல்ல விசயம்.

neelagiri-hills-protection-38அவரையடுத்து பேசிய இரா. பூவரசன், சத்திய சீலன், வழக்கறிஞர் விஜயன் மற்றும் இன்ன பிற தோழர்களது உரைகள் அனைத்தும் மக்களை மழையினின்றும் நகர விடாமல் கட்டிப் போட்டது.

neelagiri-hills-protection-39இறுதியில் திரு.ராஜா நன்றியுரை நல்கினார்.

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
ஜீப் திடலுக்கு வந்து சேர்ந்த போது மழை வேகம் பிடித்திருந்தது;

கோரிக்கைகள்:

தமிழக அரசே

1. பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களையும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்! அவற்றை மீண்டும் வனமாக்கு!

neelagiri-hills-protection-372. நீலகிரி மாவட்டம் முழுவதும் இனி புதிய காட்டேஜ் கட்டவும், உல்லாச பங்களா கட்டவும் அனுமதி வழங்காதே. ஏற்கனவே, அனுமதி இன்றியும், அனுமதிக்கு மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளு!

3. நீலகிரி மாவட்டத்தில் எங்கும் நீண்ட வேலிகள், மின்வேலிகள் அமைக்க தடைச்சட்டம் இயற்று! ஏற்கனவே போடப்பட்ட வேலிகளை உடனே அகற்ற ஆணையிடு!

4. மனிதர்களை தாக்கும் வன விலங்குகளை திருப்பித் தாக்கும் விதத்தில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை மாற்றி அமை!

5. விவசாயத்தை நாசம் செய்யும் விலங்குகளை பிடித்து வனங்களில் விட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!

வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு
ஆங்காங்கே கிடைத்த பிளக்ஸ் பேனர் குடை தார்பாய்களுடன் மேடையின் முன்னே தயாராயினர்.

6. வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து விட்டபடியால் வனத்துறை வாரா வாரம் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்து கூணடு வைப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது போன்ற வேலைகளை செய்!

7. வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் நிவாரணமும், உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ 10 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை, மருத்துவமனையில் உள்ளவாகளுக்கு மருத்துவம், குடும்ப பராமரிப்புக்கு ரூ 3 இலட்சம் வழங்கு!  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!

9. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிப்பு அதிகரிக்கும் அதே வேளையில் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பது போன்ற விசயங்களை மையப்படுத்தி கோத்தகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்து!

10. வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மக்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கு!

  • செய்தி, புகைப்படங்கள்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
    கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க