privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுவிழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் - படங்கள், செய்தி

விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி

-

  • விழுப்புரம் வி.மருதூர்- நரசிங்கபுரம் சாராய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
  • கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 28-07-2015 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் நடத்தப்பட்டது.

vpm-demo-against-tasmac-posterதமிழகம் முழுவதும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை சூறையாடுவதற்கு அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் ஊர்தோறும் கள்ளச்சாராய விற்பனையும் போலிசின் ஆசியோடு படுஜோராக நடந்த கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று வி.மருதூரில் கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த ரவுடி கும்பலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் அப்பகுதி இளைஞர்களை தாக்கியதோடு இதனை தட்டிகேட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களையும் தாக்கினார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தொடர்ந்து தோழர் வீடு மற்றும் பகுதி இளைஞர்களின் வீட்டையும் அடித்து நொறுக்கி எரித்தும் விட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தனர்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்இச்சூழலில் இப்பகுதி மக்களின் பயத்தை போக்குவதற்கும், ரவுடி கும்பலை ஒழித்துக் கட்ட, அவர்களின் அராஜகத்திற்கு முடிவு கட்ட 22-07-2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என திட்டமிட்டு 16-07-2015 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்தோம்.

அப்பொழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணி, “DSP கிட்ட கேட்டு தாங்க சொல்ல முடியும் நீங்க 3 மணிக்கு வாங்க” என்று கூறினார். மீண்டும் 3 மணிக்கு சென்றோம்.

அப்பொழுது காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மட்டும் தான் பணியில் இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “SI சார் இப்ப தான் DSP- யை பார்க்க சென்றிருக்கிறார். உங்களை 5 மணிக்கு வரச் சொன்னார்” என்று கூறினார்.

தோழர்கள் மீண்டும் 5 மணிக்கு சென்றனர். தோழர்களை பார்த்த SI மணி, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.

“ஏன், அதற்கான காரணத்தை ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு

“அதெல்லாம் எழுதி தர முடியாது நீங்கள் ஹையர் ஆபிசரை கூட பார்த்துக்கொள்ளுங்கள்” என்று திமிராக கூறி சென்று விட்டார்.

பிறகு DSP –யிடம் அனுமதி கேட்கலாம் என்று DSP பீமராஜை சந்தித்தோம். அவரோ தனது வண்டியில் இருந்தபடியே, “உங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கிறோம்” என்று கூறினார்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

ஏன் என்று கேட்டதற்கு “இந்து – முஸ்லீம் கலவரம் நடக்கிறது இந்தச் சூழலில் தர முடியாது என்று கலவரத்திற்கும் நமது ஆர்ப்பாட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாத பதிலை கூறினார்.

“அப்படி என்றால் நீங்கள் ரிட்டனாக எழுதி கொடுங்கள்” என்று கேட்டதற்கு

“நான் ஒரு கண்காணிப்பு அதிகாரி மட்டும் தான். நீங்க என்னையே எழுதி தர சொல்லுறிங்களா? அதெல்லாம் தர முடியாது” என்று அதிகார போதையில் பேசிவிட்டு வண்டியை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.

அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று. நகர காவல் நிலையத்திற்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பினோம். 18-ம் தேதி நம்மை அழைத்து DSP மறுப்பு கடிதம் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு போட்டோம். திட்டமிட்ட தேதியில் ஆர்ப்பாட்டம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். சுதாரித்துக் கொண்ட காவல் துறை 22–ம் தேதி நம்மை அழைத்து “ ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருகிறோம் வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.

விழுப்புரம் சாராய ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

நாமும் பரிசீலித்து 28-07-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை திரட்டுவதற்காக அப்பகுதி மக்களிடம் பெருந்திரளான தோழர்கள் 26, 27 –ம் தேதிகளில் வி.மருதூர் மற்றும் நரசிங்கபுரம் ஒட்டியுள்ள அனைத்து பகுதியிலும் செங்கொடி ஏந்தி வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர்.

திட்டமிட்டவாறு 28-07-2015 செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயலர் தோழர் மோகன்ராஜ், “கள்ளச்சாராயத்தால் மாணவ இளைஞர்கள், பெண்கள், குடும்பங்கள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் கள்ளச்சாராயத்தையும், கள்ளச்சாராய ரவுடிகளையும் பாதுகாப்பது காவல்துறை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “கள்ளச்சாராய ரவுடிகள் தாக்கப்பட்டதற்கும் தோழர் செல்வக்குமார் குடும்பத்தினருக்கும் சம்பந்தமே இல்லை. ரவுடிகள் தாக்கப்பட்ட இடத்தில் தோழர் செல்வக்குமார் இல்லவே இல்லை. அப்படி இருக்கும் பொழுது செல்வக்குமார் தான் அடித்தார் என ரவுடிகள் சொல்வதற்கு காரணமென்னவென்றால், காவல்துறைக்கும், கள்ளச்சாராய ரவுடிகளுக்கும் தோழர் மீதுள்ள காழ்ப்புணர்வு வெறி தான் காரணம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர்
விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர்

தொடர்ந்து மாணவர், இளைஞர்களை கல்வி உரிமைக்காகவும், அநீதிக்கெதிராகவும் போராட மாணவர்களை நல்வழிப்படுத்துவது காவல்துறைக்கு பிடிக்கவில்லை. அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விறபனையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தான் தோழர் மீதும், வீட்டின் மீதான கொலைத் வெறித்தாக்குதலுக்கு அடிப்படை. இவ்வாறு தாக்கினால் அமைப்பையும் தோழர்களையும் சிதைத்து விடலாம் என்று கோட்டை கட்டுகின்றனர். அது மட்டும் முடியாது.

1997-ல் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இயக்கம் எடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினோம். நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. வெள்ளையனை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் வாரிசுகள். கீழ்வெண்மணி படுகொலைக்கு காரணமான கோபாலகிருஷ்ணுக்கு தண்டனை வழங்கிய நக்சல்பாரிகளின் வாரிசு நாங்கள்” என்று கூறி முடித்தார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு பேசுகையில், “அம்மா டாஸ்மாக்கிற்கு நிகராக விழுப்புரத்திலே கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு நாளைக்கு 30 கேஸ் நீதிமன்றத்திற்கு வருகிறது. இருப்பினும் கள்ளச்சாராய விற்பனை குறையவில்லை என்றால் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.தோழர் ராஜு

ஒரு கள்ளச்சாராய ரவுடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால், பாதிக்கப்பட்டவர்கள் மீதே, காவல் துறை வழக்கு பதிகிறது. DSP பீமராஜ் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லையில் தான் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது அதனை ஒழிக்க துப்பில்லை. ஆனால் தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்.

இப்பொழுது நேர்மையானவர்கள் காவல் நிலையத்திற்கு தனியாக செல்ல பயப்படுகிறார்கள். ஆனால்,ரவுடி, கிரிமினல் எல்லாம் சர்வ சாதாரணமாக போலிஸ் ஸ்டேசனுக்கு செல்கிறார்கள். ரவுடிகளை பாதுகாக்கக் கூடிய இடமாக மாறிவிட்டது காவல் நிலையம். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட கிரிமினல் DSP யை பாதுகாப்போடு மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றது காவல்துறை.

நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை என அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்து தானே நடக்கிறது. பொதுப்பணித்துறையில் இருந்து அனைத்து துறைகளும் மணல் கொள்ளைக்கு ஆதரவாக தானே செயல்படுகிறார்கள். இதனை தடுக்க முடிந்ததா காவல் துறையால் என்றால் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மறுக்கிறதே யாரை ஏமாற்றுவதற்கு?

வெள்ளாற்றிலே மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை திரட்டி நாங்கள் போராடும் பொழுது நூற்றுக்கணக்கிலே போலிசை குவித்து மக்களை மிரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணி துறையும் சட்டப்படி தான் மணல் அள்ளுகிறார்கள் என்கிறது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் அத்துணை பேரும் துணை போகிறார்கள். இருப்பினும் மக்களின் துணையோடு அந்த மணல் குவாரியை நிரந்தரமாக நாங்கள் மூடினோம். அரசோ,காவல் துறையோ மூடவில்லை.

மத்திய பிரதேசத்திலே “வியாபம்” ஊழல், தமிழகத்திலே 43 DSP நியமனத்தில் ஊழல் என்று அரசு நிர்வாகமே ஊழலில் நாறுகிறது. நீதிபதிகள் முதல் தலையாரிகள் வரை மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்த அரசுக் கட்டமைப்பு எனும் இந்த வீடே சிதைந்து போய் விட்டது. இதனை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும். அதுபோல் நமக்கான அரசை நாமே உருவாக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுக்கட்சியினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், டூ வீலர் பழுது பார்ப்போர் சங்கம் என பலரும் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராயம், டாஸ்மாக் கடைகளை ஒழித்துக் கட்டும் விதமாகவும், மக்களுக்கு உதவாத வெற்று சதைப்பிண்டமான இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறியும் விதமாகவும் மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க