Wednesday, May 12, 2021
முகப்பு அரசியல் ஊடகம் சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

-

சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை: சமூகம் மற்றும் அரசு உறுப்புகளின் அருவருக்கத்தக்க வீழ்ச்சி!

மிழகத்தின் தென்பகுதியிலுள்ள சிறு நகரமான சிவகங்கையைச் சேர்ந்த சுகந்தி, திவ்யா என்றெல்லாம் ஊடகங்களால் அழைக்கப்படும் சிறுமி மீது நடத்தப்பட்டுள்ள தொடர் பாலியல் வன்கொடுமை நமது ஈரக்குலையை நடுங்க வைப்பதாக உள்ளது. இந்தச் சம்பவம் மிகக் கொடூரமான கிரிமினல் குற்றம் என்பதையும் தாண்டி, குடும்பம், சட்டபூர்வ அதிகார அமைப்புகள், அறம் ஆகியவற்றின் அதலபாதாள வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

அந்தச் சிறுமி அவளின் எட்டு வயதிலிருந்தே கட்டாய பாலியல் வல்லுறவில் சிக்கவைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டிருக்கிறாள். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து அநாதரவாக நின்ற அச்சிறுமியைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட தாத்தா, அப்பா, அண்ணன், மாமா ஆகியோர், அதற்கு மாறாக அவளைச் சிறுமி என்றும்கூடப் பாராமல் திரும்பத்திரும்ப பாலியல் பலாத்காரப்படுத்தியதாக அச்சிறுமியே வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவர்களோடு, அவளின் நெருங்கிய உறவினர்களான சுரேஷ்குமார், செந்தில்குமார், அண்ணனின் நண்பன் அரவிந்த், பக்கத்து வீட்டில் வசித்துவந்த நடத்துநர் நமச்சிவாயம் எனப் பல மிருகங்கள் அச்சிறுமியின் அநாதரவான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு சின்னாபின்னபடுத்தியிருக்கிறார்கள்.

பாலியல் குற்றவாளிகள்
சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் (கடிகாரச் சுற்றுப்படி) சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரன் கார்த்திக் மற்றும் அரவிந்த், முத்துராக்கு, சுரேஷ், நமச்சிவாயம், செந்தில், போலீசு துணை ஆய்வாளர் சங்கர்.

தனக்கு நேர்ந்த இந்த சகிக்கமுடியாத கொடுமையைத் தனது அத்தை செல்வியிடம் சொன்னதையடுத்து, அவர் தன்னை சிவகங்கை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசு உதவி ஆய்வாளர் சங்கரிடம் புகார் கொடுக்க வைத்ததாகவும், அவரோ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை மிரட்டியே பலமுறை பாலியல் பலாத்காரப்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார், அச்சிறுமி. போலீசு உதவி ஆய்வாளர் சங்கர் அந்த சிறுமியைப் பலமுறை மதுரைக்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக சாராயத்தைக் குடிக்க வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தியிருப்பதோடு, தனக்கு நெருக்கமான நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், கான்ஸ்டபிள் ராஜாராம் ஆகியோருக்கும் அச்சிறுமியைப் பலியாக்கியிருக்கிறான். இந்த மிருகங்கள் அச்சிறுமியைக் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளன. சிவக்குமார், தான் மட்டுமின்றி, அச்சமயத்தில் தென் மாவட்ட ஐ.ஜி. யாக இருந்த அதிகாரி உள்ளிட்ட மூன்று உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அச்சிறுமியைக் கூட்டிக் கொடுத்து சீரழித்திருக்கிறான். இந்த உண்மைகளை அச்சிறுமி வாக்குமூலமாக அளித்திருக்கிறார் என்பது ஒருபுறமிருக்க, விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே போலீசின் குற்றங்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்துவிட்டன.

அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தன்னைச் சீரழித்த குற்றவாளிகளையும் கடந்த ஜூன் மாதமே காரைக்குடி நகர மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலமாக அளித்துவிட்டார். தன்னைப் பாலியல் பலாத்காரப்படுத்திய சிவக்குமாரை அடையாளம் காட்டியிருப்பதோடு, மற்ற போலீசு அதிகாரிகளின் அடையாளங்களையும் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ஆனாலும், கடந்த செப்டம்பர் வரையிலும் அச்சிறுமியின் தந்தை முத்துபாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த வழக்கு ஒரு அடிகூட நகரவில்லை. சென்னையில் ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ள போலீசு அதிகாரி, மற்றும் உதவி ஆணையர், ஐ.ஜி. பதவிகளில் உள்ள இரு போலீசு அதிகாரிகளின் பெயர்கள் குற்றவாளிகளின் பட்டியலில் இருப்பதனாலேயே, விசாரணை திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டது. சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்ற நீதிமன்றமும் போலீசின் கூட்டுக் களவாணியாகச் செயல்படுகிறது.

இந்த நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் வின்சென்ட் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட எட்டு பேர் அடுத்தடுத்து கைது செயப்பட்டாலும், நுண்ணறிவு ஆய்வாளர் சிவக்குமாரும், அவனோடு கூட்டுச் சேர்ந்து அச்சிறுமியைச் சீரழித்த உயர் போலீசு அதிகாரிகளும் கைது செயப்படவில்லை. இக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயரைக்கூட வெளியிடாமல் அவர்களைக் கம்பி எண்ணுவதிலிருந்து காப்பாற்றத் துடிக்கிறது, தமிழக போலீசு. இவ்வழக்கு விசாரணை ஏதோ உண்மையாகவும் வேகமாகவும் நடைபெறுவது போலக் காட்டுவதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

09-sivagangai-girl-2தமிழக போலீசு காமுகர்களின் கூடாரம் என்பதை சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போக்கில் அதனை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நுண்ணறிவு ஆய்வாளர் சிவக்குமார் தனக்கு ஒதுக்கப்பட்ட “டியூட்டியை”ப் பார்ப்பதைவிட, அப்பாவி பெண்களை வேட்டையாடும் காமுகனாவும், தன்னால் வேட்டையாடப்பட்ட பெண்களைத் தனது மேலதிகாரிகளுக்குக் கூட்டிக் கொடுக்கும் புரோக்கராகவும் செயல்பட்டு வந்திருக்கிறான். குறிப்பாக, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு போலீசு உயர் அதிகாரி தூத்துக்குடி பகுதியில் எஸ்.பி. ஆக இருந்த காலத்திலிருந்தே, இந்த சிவக்குமார்தான் அவருக்கு “வெத்தலைப் பெட்டியாக” இருந்து வந்திருக்கிறான். அந்த அதிகாரிக்கு மதுவும் மாதுவும் சப்ளை செய்வதன் மூலமே தன் மீது எடுக்கப்பட்ட துறை விசாரணைகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறான். அந்த அதிகாரி மதுரையில் ஐ.ஜி.யாக பதவியேற்றுக் கொண்டவுடன், சிவக்குமாரை மதுரைக்கு இடமாற்றம் செய்திருக்கிறார். சிவக்குமார் தன் பங்குக்கு இந்தச் சிறுமி உள்ளிட்டுப் பல பெண்களை அந்த அதிகாரியின் இச்சைக்குப் பலி கொடுத்திருக்கிறான். (தினகரன், 9.10.
2015, பக்.11)

“இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இது முதல் சம்பவம் இல்லை. அவர்கள் எஸ்.பி.யாகப் பணியாற்றிய காலத்தில் இருந்தே பெண்கள் விசயத்தில் படுமோசமாக இருந்துள்ளனர். இப்போது, ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி. என முக்கியப் பொறுப்புகளுக்கு வந்த பிறகும் பெண்கள் விசயத்தில் மோசமாக இருக்கின்றனர். அவர்கள் மீது பல செக்ஸ் குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்து மூடிமறைத்துவிட்டனர்” எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி. இதழ். (25.10.15, பக்.03)

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த சூரியநெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை முப்பதுக்கும் மேற்பட்டோர் நாற்பது நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிச் சீரழித்தனர். ஒருவிதத்தில் அதனைவிடக் கொடூரமானது சிவகங்கை சிறுமியின் கதை. இவள் நான்கு ஆண்டுகளாக 26 பேரால் மாறிமாறி பாலியல் வன்முறைக்கும், கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, சித்திரவதையை அனுபவித்து, தற்கொலைக்கு முயன்று தப்பித்து, நடைப்பிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும், நமது நீதியரசர்கள் அவள் அனுபவித்த சித்திரவதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், மற்றொரு சாதாரண குற்ற வழக்காகவே இதனையும் கருதி விசாரணையை மெத்தனமாக நடத்தி வருகிறார்கள். போராடும் வழக்குரைஞர்களை கிரிமினல்கள் என சாடி, அவர்களின் தொழில் உரிமத்தைப் பறிக்கத் துணிந்த நீதியரசர்களுக்கு, போலீசு அதிகாரிகள் அச்சிறுமிக்கு இழைத்துள்ள குற்றங்கள் பெரிதாகப்படவில்லை. குற்றமிழைத்த போலீசு அதிகாரிகளின் பதவியைப் பறிக்காமலேயே விசாரணை நடைபெறுவதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அச்சிறுமியின் தந்தை, அண்ணன் உள்ளிட்ட சாதாரண நபர்கள், அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டவுடனேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். ஆனால், அதே குற்றத்தைச் செய்த போலீசு அதிகாரிகளின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன; அவர்கள் பணியிடை நீக்கம் செயப்படவில்லை; அவர்கள் கைது செய்யப்படுவதற்கு மாறாக, அவர்களைத் தப்பவைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவமெல்லாம் போலீசுக்காரன்கள் முன் செல்லாக்காசாக நிற்கிறது. சாதாரண நபர்களுக்குக் கிடைக்காத இந்தப் பாதுகாப்புதான், நாலாவிதமான கிரிமினல் குற்றங்களைச் செயும் துணிச்சலையும் திமிரையும் போலீசுக்காரன்களுக்கு அளிக்கிறது.

“பாரதிய குடும்பங்கள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மிகச் சிறந்த அமைப்பு முறை” என ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வக்காலத்து வாங்கி வரும்வேளையில்தான், தான் பாதுகாக்க வேண்டிய ஒரு சிறுமியை குடும்பமே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வக்கிரம் வெளிவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் விதிவிலக்கானது என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்களில் அப்பா, அண்ணன், மாமா உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் “அங்கிள்களும்” கணிசமாக இருப்பதைப் பல புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. ஒருபுறம் ஆணாதிக்க கருத்துக்களும், இன்னொருபுறம் நுகர்வு வெறிப் பண்பாடு பரப்பும் வக்கிரங்களும் இணைந்து பெண்களுக்குத் தெரு மட்டுமல்ல, வீடும்கூட பாதுகாப்பற்றது என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன. கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் இந்தச் சூழ்நிலையை மென்மேலும் மோசமாக்கி, குடும்பத்தைப் பெண்களுக்கு அச்சமூட்டக்கூடிய இடமாக மாற்றியிருக்கிறது.

டெல்லியில் நிர்பயா எனப்பட்ட மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை ஊடகங்கள் மிகப் பெரிய அளவிற்கு விவாதத்திற்கு உள்ளாக்கின. அக்குற்றத்தைச் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரி பெருந்திரளான மக்கள் பங்கேற்ற போராட்டங்கள் டெல்லியில் நடந்தன. ஆனால், தமிழகத்தில்? போலீசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே இந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழ் ஊடகங்கள் ஒதுக்கி வைத்துவிட்டன. ஓரிரு பத்திரிகைகளில் வழியாக இந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியே தெரிந்த பிறகும் அதைக் கண்டித்து எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, கண்டனங்களோ ஓட்டுக்கட்சிகளிடமிருந்தும் வரவில்லை. தமிழக மக்களும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டுகொள்ளவில்லை.

கோவையில் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய குற்றவாளிகளுள் ஒருவனைத் தமிழக போலீசு ‘போலி’ மோதலில் சுட்டுக் கொன்ற சமயத்தில், அதனை வெடிவெடித்துக் கொண்டாடியது தமிழகம். இந்தச் சம்பவத்திலும் ஒரு சிறுமி திரும்ப திரும்ப பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். ‘சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்புமிக்க’ போலீசு அதிகாரிகளுள் சிலர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். கோவை சம்பவத்திற்கு அளிக்கப்பட்ட ‘நீதி’யின்படி பார்த்தால், அந்த காக்கிச்சட்டை குற்றவாளிகளை நடுத்தெருவில் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகளோ இன்னும் அதிகாரமிக்க பதவிகளில் இருந்து வருகிறார்கள். அந்த போலீசு அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கு என்ற குறைந்தபட்ச நியாயத்தைக் கேட்கக்கூடத் திராணியற்று, மௌனம் காக்கிறது, தமிழகம். அந்தளவிற்கு அதிகாரத்தைக் கண்டு பயப்படும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, தமிழகம்.

சூரியநெல்லி வழக்கில் ஒரு அரைகுறையான தீர்ப்பைப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்ட சிறுமியும், பல்வேறு மகளிர் அமைப்புகளும் ஏறத்தாழ 18 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. சிவகங்கை சிறுமி வழக்கிலோ ஆரம்பகட்ட விசாரணையே செல்வாக்கு படைத்த குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ள வழக்குரைஞர் வின்சென்ட் மீது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குற்றமிழைத்த போலீசு அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்க முன்வராத ஜெயா அரசு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்து வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயலுகிறது. இந்த நிலையில் தமிழக மக்கள் தொடர்ச்சியான, துணிச்சலான போராட்டத்தை நடத்தாமல், பாதிக்கப்பட்ட சிவகங்கை சிறுமிக்கு முழுமையான நீதி கிடைக்காது என்பது உறுதி. ஆனால், தமிழகமோ அமைதி காக்கிறது. இந்த அமைதிதான் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைவிட அச்சுறுத்துவதாக உள்ளது.

– குப்பன்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

  1. சிறுமின் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள விலை 3 லட்சம். இவர் பெண் முதல்வர் வேறு. ஆணாதிக்கம், நுகர்வு வெறி ஒருபக்கம் இருந்தாலும் தன் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பில்லாத சூழல் தான் இந்த அரசு கட்டமைப்பில் நிலவுகிறது.பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை அதற்கு எதிராய் செயல்படுகிறது.தமிழக மக்கள் சொரணையற்றவர்களாய் மாறிவருகின்றனர்.சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை வெறும் செய்தியாய் பார்க்காதீர்கள், இன்று இந்த சிறுமிக்கு நேர்ந்தது நாளை உங்கள் மகளுக்கோ, தங்கைக்கோ நேரிடலாம்.

  2. தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக சென்றவருக்கு -செட்டி நாட்டு ” பதார்த்தங்கள் பரிமாறப்படும் …செட்டி நாட்டின் மைய அரசின் விருந்தினர் மாளிகையில் —-போலிஸ் -காவிகளின் -டாபர் மாமா வேலை கன கச்சிதம் ………….> இதுதான் “ஆளும்வர்க்க /அரசியலில் பீ தின்னும் ஆட்களின் “பண்பாடு .
    எத்தனையோ சிறுமிகளின் வாழ்வை சூது கொண்டு -பண்பாடு -சிவன்கங்கை சீமை பண்பாடு ….அதற்க்கு பேரு “ஒப்நிங்காமே ?

  3. அன்று சிவகங்கை சீமையில் உயர் போலீஸ் அதிகாரி(நாய்)கள் இன்று பொள்ளாச்சியில் ஆளும் அண்ணா தி.மு.க.வாரிசுகள் மற்றும் பணக்காரர்களின் வாரிசுகள்….. இந்த தொடர்கதைகள் தொடர்ந்து நடப்பது அரசுகட்டமைப்பு கெட்டு சீரழிந்து நாரிப்புழுத்து பலவருடங்கள் ஆகிவிட்டது என்பதையும், இந்த அரசை வீழ்த்தாமல் பணம் படைத்தவர்களுக்கும் வாழ்வு இனியில்லை….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க