privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !

டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !

-

போர்க்களமாக மாறிய டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் !

மிழ்சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக்கடையை மூடுவதற்கு தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் மக்கள் களத்தில் இறங்கினால் உடனே டாஸ்மாக்கை மூட முடியும். இந்தக் கருத்துடன் டாஸ்மாக்கிற்கெதிராக தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அதன் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட மாபெரும் டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் சென்னையில் 20.04.16 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டாஸ்மாக்கை படிப்படியாக மூடுவதாக அறிவித்திருந்த ஜெயாவின் போலீசோ போராட்டக்காரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கத் துவங்கினர். சிறுவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் ஆண் போலீசார் பெண்களின் ஆடைகளை கிழித்து அடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சென்று கைது செய்தனர்.

 தோழர் வெற்றிவேல் செழியன்
தலைமை தாங்கிய தோழர் வெற்றிவேல் செழியன்

மற்ற தோழர்களை குண்டுக்கட்டாகவும், அடித்து இழுத்தும் சென்று வண்டியில் ஏற்றினர். முன்னதாக தலைமைதாங்கி நடத்திய வெற்றிவேல் செழியன் பேசுகையில்,”டாஸ்மாக்கை மக்களால் மட்டுமே மூடமுடியும். இன்றைக்கு ஓட்டுப் பொறுக்குவதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் டாஸ்மாக்கைப் பற்றி பேசுகின்றன. டாஸ்மாக்கை மூடும் வரை  ஓயமாட்டோம்” என உறுதிபட தெரிவித்தார்.

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த டி.சி. பிரவேஷ் குமார் மற்றும் ஏ.சி.க்களிடம் டாஸ்மாக்கை இழுத்துமூடும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறுதிகாட்டினர். பின்னர் அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீசார் போராடிய ஒவ்வொரு தோழரையும் தாக்கியவாறு கைது செய்யத்துவங்கினர். இடையில் மஃப்டி உடையணிந்த போலிசு பொறுக்கி ஒருவன், கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட தோழர்களை வண்டிக்குள் புகுந்து தாக்கிவிட்டு வெளியேறினான். அவனைப் பிடித்து மற்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் விசாரிக்கையில் போலீசாரே வந்து அவனை விடுவித்தனர். எப்படி உங்கள் காவலில் இருக்கும்போது வெளியாள் வந்து அடிக்கலாம் என அவனை மேலும் விசாரிக்கும் போது பிடி கொடுக்காமல் திருடனை போல் தப்பி ஓடிவிட்டான். இப்படி ரவுடிகளை வைத்து போராடியவர்கள் மீது போலிசார் தாக்குதல் தொடுத்ததைக் கண்டு போராட்டக்குணத்தை மட்டும் ஆயுதமாக கொண்ட தோழர்கள் அஞ்சாமல் போராடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

chennai-tasmac-protest-23போலீசார் தாக்கியதில் மதுரவாயல் அரசுப்பள்ளி மாணவர் மாரிமுத்து, பு.மா.இ.மு.வை சார்ந்த கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மாணவி செஞ்சூரியா ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியை சார்ந்த பெண் தோழர்கள் ரூபா, ஜான்சி, இலக்கியா, உமா, ஜோதி, ரத்னா ஆகியோர் கடுமையாக காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளி மாணவர் மாரிமுத்து, பெண் தோழர்கள் ரூபா மற்றும் ஜான்சி ஆகியோர் ஏற்கனவே பச்சையப்பன் கல்லூரி டாஸ்மாக் உடைப்பு போராட்டத்தில் பங்குக்கொண்டு சிறை சென்றிருந்தவர்கள். பள்ளி மாணவர் மாரிமுத்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருப்பவர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

டாஸ்மாக் போராட்டம்
ஒரேயொரு தோழரைக்கூட பணியவைக்க முடியாமல் ஒட்டுமொத்த போலீசாரும் திணறினர்.

போலீசாரின் இந்த கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் அவர்கள் நின்று போராடியது டாஸ்மாக்கை மூடப்போவதாக அறிவித்திருந்த ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது. ஒரேயொரு தோழரைக்கூட பணியவைக்க முடியாமல் ஒட்டுமொத்த போலீசாரும் திணறியதை கண்டு உறுதியான மக்கள் போராட்டத்தின் முன்பாக போலிசு அட்டைக்கத்தி என்பது நிரூபணமானது. ஹெலிகாப்டரில் பாதுகாப்பாக பறந்து கொண்டு தமிழகத்தை மீண்டும் ஆளலாம், டாஸ்மாக்கில் பணத்தை அள்ளலாம் என்று திமிரோடு பேசி வரும் ஜெயா, அவரது எடுபிடியான தமிழக போலிசு இருவரும் என்னதான் அடக்குமுறையே ஏவினாலும் டாஸ்மாக் முடப்பட்டே தீரும்! மக்கள் அதிகாரம் வென்றே தீரும்!

-வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

தருமபுரி டாஸ்மாக் அலுவலக முற்றுகை

20-04-2016 அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்கை முற்றுகையிடுவதற்காகவும், டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்ப பெறக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்த பேருந்து நிலையம் முழுவதும் டாஸ்மாக்கை பாதுகாக்கும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் உளவுத்துறை குவிந்து இருந்தனர். யாரெல்லாம் டாஸ்மாக்கை மூட வந்திருக்கும் தேசதுரோகிகள் என்று மோப்பம் பிடித்துக்கொண்டும், கணக்கு எடுத்துக்கொண்டும் டாஸ்மாக்கை பாதுகாக்கும் தேசபக்த வேலையை செய்து கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையில் பேரணி திட்டமிட்டவாறு தொடங்கியது. துவங்கிய உடனே உளவுத்துறை தடுப்பு வேலி அமைத்துக் கொண்டு தடுத்து நின்றது. அதனை உடைத்துக்கொண்டு முன்னேறி சென்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். வழிநெடுகிலும் முழக்கமிட்டபடியும், சாலையின் இருபுறமும் பிரசுரம் வினியோகித்துக் கொண்டும் பேரணியாக ஒரு பர்லாங்கு தூரம் வந்தனர்.

தருமபுரி 4 ரோடு சென்றடைந்ததும் காவல்துறை வேனை நிறுத்தியும் வேலி அமைத்துக் கொண்டும் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். நூற்றுக்கணக்கில் மக்கள் போராட்டத்தை கவனித்து கொண்டியிருந்தனர். காவல் துறை அதிகாரிகளோ தோழர்கள் இடத்தில் கெஞ்சியவாறு பேசினர். அதற்கு பணியாமல் தோழர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

முற்றுகை போராட்டம் மறியலாக மாறியது, நான்கு வழி சாலை மறிக்கப்பட்டது. சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. பிறகு தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து குழந்தைகள் பெண்கள் உட்பட 91 பேரை மண்டபத்தில் அடைத்தது, போலீசு.

மண்டபத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம் மற்றும் மக்கள் அதிகாரத்தின் நோக்கம் குறித்தும், அடுத்த கட்டமாக இந்த போராட்டம் தொடரும் அதற்கு அனைவரும் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என்றும் விளக்கினார். இதற்கு பிறகு சிறுவர்கள் டாஸ்மாக் எதிர்ப்பு பாடலை பாடி தோழர்களை உற்சாகப்படுத்தினர். பிறகு அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.

 

இப்போராட்டத்தில் புதியதாக கலந்து கொண்ட பெண்கள் ஆரம்பத்தில் பயப்பட்டனர். கைதுக்கு பிறகு அங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உற்சாகமடைந்து “எப்படியாவது கடைய மூட வேண்டும் அப்போதுதான் குடும்பம் நல்லா இருக்கும்” என்று கூறி அவர்களுடைய பயத்தை மண்டபத்திலேயே தூக்கியெறிந்து அவர்களுடைய போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

பிரச்சாரத்தின் போது கடைவீதியில் ஒருவர், “யாரு வந்தாலும் மூட மாட்டாங்க எல்லாம் தேர்தலுக்குகாக டாஸ்மாக்கை பற்றி பேசறாங்க ; மக்கள்தான் மூடணும்”, என்று மக்கள் அதிகார கருத்தை பிரதிபலித்தார். பெண் ஒருவர், “இதா பாரும்மா எங்க வீட்டுல 4 ஓட்டு இருக்குது நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்” என்று தேர்தல், ஜனநாயகத்தின் மீதான விரக்தியை வெளிப்படுத்தினார்.

இப்படி அழுகிநாறும் இந்த அரசு கட்டமைப்பு குறித்து மக்கள் அன்றாடம் உணர்ந்து வருகின்றனர், இதற்கு மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை , இதனை மக்களிடையே உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி