privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !

இது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !

-

துரவாயல் நொளம்பூர் பகுதி டாஸ்மாக் மூடும் போராட்டம் – போலீஸ் கொலைவெறி தாக்குதல்

க்கள் அதிகாரம் அமைப்பு ஒருவருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, மக்களை அணிதிரட்டி தொடர்ச்சியாக போராடி வருகிறது. அதன்படி கடந்த மே 2-ம் தேதி “மதுரவாயல் பகுதியில், மக்களுக்கு இடையூறாகவும், சட்ட விரோதமாகவும் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை வரும் 5-ம் தேதிக்குள் மூடவேண்டும், இல்லையெனில் நாங்களே மூடுவோம்” என அந்த பகுதி வட்டாட்சியரிடம் மனு கொடுத்து எச்சரிக்கை செய்திருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

shutdown-tasmac-nolambur-siege-04
பறை இசை முழங்க கடையை மூடச் சென்ற மக்கள்

ஆனால் கடையை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஏற்கனவே அறிவித்திருந்தது போல, மக்கள் அதிகாரம் அமைப்பினரும், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினரும் 05-05-2016 காலை டாஸ்மாக்கை மூடும் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.

4-ம் தேதி இரவே டாஸ்மாக் கடை வாயிலில் தடுப்புகள் அமைத்து காவல் காக்க தொடங்கிய போலீசு, காலை 8 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர் கணேசன், பு.மா.இமு-வை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு ஆகிய மூவரை, பகுதிக்குள் புகுந்து அடித்து இழுத்து சென்று மதுரவாயல் காவல்நிலையத்தில் அடைத்து அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

மேலும் டாஸ்மாக்கை சுற்றியுள்ள ஓம்சக்தி நகர், சின்ன நொளம்பூர், மாதாகோவில் நகர் பகுதிகளுக்குள் போலீசு புகுந்து அப்பகுதி மக்களை போராட்டத்திற்கு செல்ல கூடாது என மிரட்டியது.

shutdown-tasmac-nolambur-siege-01
“சரக்கு வாங்கப்போறியா உள்ளே போ!”

டாஸ்மாக் கடையை சுற்றி வளையம் போல் தடுப்புகளை அமைத்து பாரில் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தது போலீசு. இத்தனை ஆண்டுகளாக அந்தவழியாக சென்று கொண்டிருந்த மக்களை இன்று இந்த வழியாக செல்ல கூடாது. என அனைவரையும் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. அதில் ஓர் காமெடி என்னவெனில், இந்த சூழலில் ஒருவர் அந்த வழியில் செல்ல முயன்றார். அவரிடம் “நீ இப்படி போக முடியாது ஊரை சுற்றிப் போ” என்றது போலீசு. அதற்கு அவர் “சார் நான் பாட்டில் வாங்க வந்தேன்” எனக் கூறியதும், சிறிதும் வெட்கம், மானம் இல்லாமல் “சாரி நீ உள்ளே போ!” என கூறியது போலீசு.

ஏற்கனவே அறிவித்தது போல காலை 11.40 மணியளவில் மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தத்தில் பறை இசையுடன் டாஸ்மாக்கை மூடும் போராட்டம் துவங்கியது. தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டே சாலையை கடந்து வந்தனர். பத்திரிகையாளர்கள் எதிரில் போகவே, சாலையில் அனைவரும் நின்றதும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக இயல்பான சாலை மறியலாக மாறியது.

shutdown-tasmac-nolambur-siege-14
மக்களை பாதுகாக்க சங்கிலி அமைத்து நிற்கும் தோழர்கள்,

தோழர்களும், பகுதி மக்களும் முழக்கமிட்டுக் கொண்டு வருவதை பார்த்த போலீசு, டாஸ்மாக் கடைக்கு 10 மீட்டருக்கு முன்பு ஒரு தடுப்பும், 20 மீட்டருக்கு முன்பு ஒருதடுப்பும், சாலையில் இருந்து உள்ளே வரமுடியாத அளவிற்கு ஒரு தடுப்பும் என மூன்று அடுக்கு தடுப்புகள் அமைத்து, மிகவும் ‘சிறப்பான’ முறையில் டாஸ்மாக் கடைக்கு காவல் அமைத்து, தங்களை உண்மையான டாஸ்மாக் காவலர்கள் என்று நிரூபித்துக் கொண்டனர்.

நெடுஞ்சாலையில் போராட்டம் கம்பீரமான முழக்கமும், பறை இசையும் என பகிரங்கமாக நடந்துக் கொண்டிருந்தது. சாலை மறியலாக நடந்துக் கொண்டிருப்பதை பார்த்து போலீசு முதல் தடுப்பை அகற்றி தோழர்களை உள்ளே வரவிட்டது. தோழர்கள், பள்ளி மாணவர்கள், ஊர்மக்கள் என கிட்டத்தட்ட 300-க்கும் மேற்ப்பட்டோர் “மூடு டாஸ்மாக்கை” என போர்க்குணமாக முழக்கமிட்டுக் கொண்டு டாஸ்மாக் கடையை நோக்கி முன்னேறினர். “டாஸ்மாக்கை மூடும் வரை இந்த இடத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம்” என்று முழங்கினர் அப்பகுதி மக்கள்.

இந்தப் போராட்டத்தை அந்த பகுதியை சுற்றி இருக்கும் பொதுமக்கள், கடை வணிகர்கள், சாலையில் செல்பவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை பார்க்கவிட்டால், காவல்துறை டாஸ்மாக்கை காவல் காப்பது அம்பலமாகிவிடும் என அஞ்சி அனைவரையும் மிரட்டி கலைத்துக் கொண்டிருந்தது போலீசு.

shutdown-tasmac-nolambur-siege-03
பள்ளி மாணவர் ஆகாஷ்யை ரோட்டில் போட்டு இரண்டாம் முறை சாலை மறியல்

டாஸ்மாக் எதிர்ப்புக்குழு தோழர்களையும், மக்களையும் கைதுசெய்ய முயற்சித்தது போலீசு. அவர்கள் “டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்” என கூறவே போலீசு தன் கொலைவெறித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தோழர்களையும், மக்களையும் அடிப்பதை அறிந்த மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் அனைவரும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். கொலைவெறி தாக்குதலை நடத்தும் போலீசைப் பார்த்து “அவங்க என்ன சொல்லுறாங்க, எங்க ஊருக்குள்ள டாஸ்மாக் கடை வேணாம் என சொல்லுறாங்க, யோவ்! அவங்கள எதுக்குயா அடிக்கிறீங்க” என மக்கள், போலீசை இடைவிடாமல் திட்டிக் கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.

ஒரு பெண் போலீசு, சத்யா என்ற 50 வயதான தோழரை அடித்து மண்டையை உடைத்தது. அப்பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஆகாஷ் என்பவரை போலீஸ் அடித்ததில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை தூக்கிக்கொண்டு 5 நிமிடங்களாக தோழர்கள் அலைந்தனர். போலீசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. உடனே தோழர்கள் அவரை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் 10 நிமிடம் நீடித்தது. அதன் பின் தான் போலீசு ஆம்புலன்சை வரவழைத்தது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர்கள் பலரை அடித்து, பெண்களின் துணிகளை கிழித்து, மண்டையை உடைத்து மிகவும் வக்கிரமாக நடந்துக் கொண்டது. போலீசு வாகனத்தில் ஏற்றியும், தோழர்களையும் மக்களையும் உள்ளே வைத்து தாக்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.ஐ செல்லதுரை என்ற போலீசு ரவுடி, லட்டியை எடுத்துக்கொண்டு போராட்டத்தில் முக்கியமாக தோழர்களை குறிவைத்து கொலைவெறியுடன் தாக்கினான்.

போலீசை தலைகுனியச் செய்யும் வகையில் கேள்வி கேட்ட மூதாட்டி (வலதுபுறம்)
போலீசை தலைகுனியச் செய்யும் வகையில் கேள்வி கேட்ட மூதாட்டி (வலதுபுறம்)

கணிசமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சி இருந்த அந்தப் பகுதி பெண்கள் 20 பேர் உட்பட மொத்தம் 30 பெண்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பெண்கள் தானே என்று அலட்சியமாக நினைத்தது போலீசு. ஆனால் இவர்களை நெடுஞ்சாலையில் இருந்து 15 நிமிடத்திற்கு, ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இதுதான் பெண்களுக்கே உரிய போர்க்குணம்.

15 நிமிடத்திற்கு பின் கயிற்றை கொண்டுவந்து சுற்றி வளைத்து தான் அவர்களை சாலைவோரமாக கொண்டு வரமுடிந்தது.

“யோவ்! இத்தன பேர அடிச்சியே, உங்க குடும்பம் எப்படி நல்ல வாழும்னு பாரு, நீங்கயெல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்க! டாஸ்மாக்கை பாதுகாக்க நிக்கிறீங்களே உங்களுக்கு சூடு சொரண, மானம் எதுவுமே கிடையாதா” என அங்கிருந்த பெண்கள் பலர் போலீசை கேவலமாக திட்டினர். அதற்கு ஏ.சி புகழேந்தி என்ற பொறுக்கி போலீசு “சரிதான் போடி மயிரு” என்று தகாத வார்த்தையில் வக்கிரமாக திட்டினான்.

அதற்கு மக்கள் “யோவ்! நீங்கலெல்லாம் வாங்குற காசுக்கு மேல கூவுறீங்க” என்று போலீசை அசிங்கப்படுத்தினர். போலீசும் இதை கேட்டு வெட்கமே இல்லாமல் நின்று கொண்டு இருந்தது.

“அடிப்பட்டு போனவங்க உயிருக்கு எதாவது ஆச்சின்ன உங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்” என 70 வயது நிரம்பிய மூதாட்டி போலீசின் முகத்தில் காரி உமிழ்வது போல் கூறினார்.

போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்
போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்

அ.தி.மு.க.-வை சார்ந்த 2 பேர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த பெண்களிடம், “இவங்க எப்படி அராஜகம் பண்ணுறாங்க பாருங்க, இவங்களால எப்படி டாஸ்மாக்கை மூடமுடியும்” என பேசினர். “நீங்க மக்களுக்கு இடையூறாக இருக்குற டாஸ்மாக் கடையை மூடியிருந்தா இவங்க ஏன் போராட போறாங்க!” என அங்கிருந்த பெண் கேட்டார்.

“இல்லமா டாஸ்மாகை மூட அமைதியான வழியில போனா மூடிடலாம்” என்று அ.தி.மு.க கட்சிகாரர் கூறினார்.

“நாங்க பலமுறை மனு கொடுத்திருக்கோம், பலரை சந்தித்து பேசிருக்கோம் யாரும் மூடல, மே 2-ம் தேதி கூட மனு கொடுத்து இருக்காங்க, அப்பவும் அரசாங்கம் மூடலயே, இப்ப கூட கடைய திறந்து சரக்கு விக்குது உங்க ஜெ.அரசு” என கேள்வியெழுப்பினர்,

“டாஸ்மாக்கை மூடினால் பல பேர் செத்துருவாங்கமா” என கூறினார் அ.தி.மு.க உறுப்பினர்.

“இந்தப் பகுதியில ஆத்த கடக்குற பாலம் பாதி உடைஞ்சி போச்சி, அதுல வந்து, போயிட்டு இருக்க நாங்க எப்ப வேணாலும் சாகலாம், அந்த பாலத்த கட்டிதர வக்கில்ல உங்க கட்சிக்கு” என அங்கிருந்த பெண் பேசியதும். எதையும் பேசமுடியாமல் நின்றுவிட்டார் அதிமுக கட்சிகாரர்.

போராட்டத்தில் குழந்தை
போராட்டத்தில் குழந்தை

“ஓட்டு கேட்டு யாரவது ஊருக்குள்ள வாங்க அப்ப பாத்துக்குறேன் உங்கள” என ஒரு மூதாட்டி கூறினார்.

“என் பொண்ணுங்க ரெண்டு பேரும் இப்படிதான் நடந்து போகனும், போகும் போது குடிச்சிட்டு என் பொண்ணுக்கிட்ட தப்ப நடத்துகுறானுங்க, அப்ப என் பொண்ண பாதுகாக்க இந்த போலீசு வருமா? வராது. என் குடும்பத்தையோ இல்ல இந்த ஊரு மக்களையோ காப்பாத்த இந்த போலீசு வராது. டாஸ்மாக் கடைய காப்பாத்த, இவளோ கஷ்ட படுது இந்த போலீசு, ஏனு தெரியுமா, டாஸ்மாக் கடைய மூடிட்டா அவங்களுக்கு மாமூல் பணம் வராது அதனாலதான், இவ்ளோ கஷ்டப்பட்டு டாஸ்மாக்கடைய காவல் காக்குறாங்க!” என ஆவேசமாக போலீசிடம் பேசினார், அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண். இதைக் கேட்டுக்கொண்டு போலீசு சிறிதும் குற்றவுணர்வு கூட இல்லாமல், எருமை மாடுகள் போல, நின்றுக்கொண்டு இருந்தனர். இன்னும் இந்த போராட்டம் 30 நிமிடம் அதிகமாக நீடித்திருந்தால், இந்த டாஸ்மாக்கை மூடும் போராட்டம் ஒட்டுமொத்த மதுரவாயல் மக்கள் போராட்டமாக மாறியிருக்கும்.

தோழர்களையும், மக்களையும் கைது செய்து மதுரவாயல் பாக்கியலட்சுமி மண்டபத்தில் அடைத்தது போலீசு. அங்கு காயம் அடைந்த தோழர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த ஏற்பாடும் செய்யாததால், இங்கு இருந்த 200 பேரும் உண்ணாநிலை போராட்டத்தின் ஈடுபட்டனர். அதன்பின் தோழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மாலை 5 மணியளவில், இந்த பகுதி த.மு.மு.க கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்கள் என 20-க்கும் மேற்பட்டோர், “கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு தாக்கியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என தோழர்களை கைதுசெய்து அடைத்துவைத்திருந்த மதுரவாயல் பாக்கிய லட்சுமி மண்டபத்தின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த இப்போராட்டம், அப்பகுதி மக்களிடையேயும், அப்பகுதி ஜனநாயக சக்திகளிடையும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறும் தருணம் வந்துவிட்டது என்பதை இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் மக்கள், அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது; விரைவில் மக்களே அதிகாரத்தைக் கையில் எடுப்பார்கள்; எதற்கும் பயனற்று எதிர்நிலையாக மாறிப்போய் உள்ள இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பையும் தகர்ப்பார்கள்!…நம்முடைய போராட்டங்கள் தொடரும்…

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

_______________

க்கள் அதிகாரம் சென்னை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன், கணேசன், வாசுதேவன் ஆகிய மூவரும் நேற்று காலை 7.30 மணியளவில் மதுரவாயல் ஓம்சக்தி நகரில் உள்ள பகுதி வாழ் மக்களிடம் போய் அன்று காலை 11 மணி டாஸ்மாக் கடையை மூடக் கோரும் ஆர்பாட்டத்திற்கு வருமாறு அழைத்து கொண்டிருந்தோம்.

shutdown-tasmac-may5-pressmeet-1ஒரு வீட்டில் டீ போட்டு கொடுத்ததை குடித்து விட்டு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ம்துரவாயல் காவல் ஆய்வாளர் சீனிவாசனும், காவலர் ஒருவரும் போலீஸ் வண்டியில் வந்தனர்.

“இங்கு என்ன செய்கிறீர்கள்” எனக் கேட்ட போது

“இன்று நடைபெறவுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரும் போராட்டத்திற்கு மக்களை அழைக்க வந்தோம்” எனக் கூறினோம்.

உடனே காவல் ஆய்வாளர் ”இதை செய்ய நீ யார்; வேணுமின்னா கவர்மண்டுகிட்ட போயி கேளு. மக்களிடம் ஏன் பேசுகிறாய்?” எனக் கூறினார்.

“நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்தவர்கள், மக்களை போராட்டத்திற்கு அழைக்க வந்தோம்” என நாங்கள் பதிலளித்த போது

“நீ எவனா வேணா இரு; நீ யாருடா கடைய மூடுறதுக்கு, நீ என்ன பெரிய கவர்மெண்டா, வண்டியில ஏறு, ஏசி ஏதோ பேசனுமாம்” எனக் கூறி வண்டியில் ஏத்த முயன்றனர்.

நாங்கள் ஏற மறுத்து மக்களிடம் போய் “உங்கள் பிரச்சனைக்காக தான் வந்துள்ளோம், எங்களை அடாவடியாக அரஸ்ட் பண்ண பாக்குறாங்க” எனக் கூறிய போது சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரத் துவங்கினர். இதற்குள் வாக்கி டாக்கியில் போலீசினை அழைக்கவே 40 போலீசார் ஓடி வந்தனர். காவல் ஆய்வாளர் சீனிவாசனுடன் சேர்ந்து அவர்கள் எங்களை அடித்து வண்டியில் எற்றினர். மதுரவாயல் காவல் நிலையம் கொண்டு செல்லும் வரை மாறி மாறி அடித்தனர்.

shutdown-tasmac-may5-pressmeet-2காவல் நிலையம் கொண்டு சென்றவுடன் லாக்கப்-ல் வைத்து மதுரவாயல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை, மப்டியிலிருந்த காவலர் பரத் மற்றும் அடையாளம் காட்டக் கூடிய காவலர்கள் மூவர் என 5 பேர் லத்தி மற்றும் பிவிசி பைப் போன்றவற்றால் அடித்தனர். சட்டையினை கழட்ட சொன்ன போது மறுத்ததால் சட்டையினை பிடித்து கிழித்தனர். பேண்டினை கழட்ட முயற்சித்த போது நாங்கள் அதனை கெட்டியாக பிடித்து கொள்ள உதவி ஆய்வாளர் செல்லத்துரை, மப்டியிலிருந்த காவலர் பரத் மாறி மாறி மூட்டிற்கு கீழ் லத்தியால் அடித்தனர். இதனால் வெற்றி வேல் செழியன் நிலை குலைந்து கீழே விழ அவரது காலில் மப்டியிலிருந்த காவலர் பரத் ஏறி உட்கார்ந்து கொள்ள உதவி ஆய்வாளர் செல்லத்துரை லத்தியால் வெற்றிவேல் செழியன் பாதத்தில் அடித்தார். மற்றுமொரு அடையாளம் காட்டக் கூடிய காவலர் வெற்றிவேல் செழியனை லத்தியால் தோள்பட்டை, கை என அடித்துள்ளார்.

அதே போன்று ஏற்கனவே கணேசன் என்பவருக்கு குடலிரக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதை கூறிய போதும் உதவி ஆய்வாளர் செல்லத்துரை அவரது வயித்திலும் முகத்திலும் மாறி மாறி குத்தியதில் அவர் வாந்தி எடுத்து கீழே விழுந்து விட்டார். இருந்த போதிலும் மப்டியிலிருந்த காவலர் பரத் அவரை பூட்ஸ் காலால் இரு கால்களிலும் ஏறி மிதித்ததோடு லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதே போன்று வாசுதேவனை அடையாளம் காட்டக் கூடிய காவலர் ஒருவர் லத்தியால் கை கால் என உடல் முழுவதும் தாக்கிய்ள்ளார்.

மேற்கூறிய அரை மணி நேரத் தாக்குதலிற்கு பின் காவல் நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அப்போது “இழுத்து மூடுவோம், இழுத்து மூடுவோம்! டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!” என முழக்கமிட்ட போது கழுத்தினை பிடித்து அடித்து கொண்டே தரதர வென இழுத்து வந்து வண்டியில் ஏற்றினர். பின் மாலை வரை பத்து காவலர்களின் காவலில் பல்வேறு இடங்களில் வைத்திருந்தனர். காலை முதல் மாலை வரை உணவு ஏதும் கொடுக்கவில்லை. எங்களை விடுவிக்கக் கோரி டாஸ்மாக் போராட்டத்தில் கைதான தோழர்கள் மண்டபத்தில் போராடியதால் மாலை 6.30 மணியளவில் வானகரத்தில் உள்ள பாக்கியலட்சுமி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மற்றவர்களுடன் காவலில் வைக்கப்பட்டோம். அங்கிருந்து 7.30 மணியளவில் தோழர்களுடன் சேர்ந்து விடுவிக்கப்பட்டோம். அங்கிருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டோம்.

வெற்றிவேல் செழியனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் எலும்பு விரிசல், இடது கால் பாதமுட்டியில் எலும்பு விரிசல், இரு கால்களிலும் லத்தியால் அடித்த காயங்கள், வலது கை மணிக்கட்டிற்கு கீழ் எலும்பு விரிசல், வலது தோள்பட்டைக்கு கீழ் லத்தியால் அடித்த காயம் என ஏற்பட்டதில் இரு கால்களிலும், வலது கையிலும் மாவுகட்டு போடப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணேசனுக்கு இடுப்புக்கு கீழ் பாதம் வரை ஏற்பட்டுள்ள உள்காயங்களினால் கால்களை ஊன்ற இயலாத நிலையில் கடும் தலைவலியும் ஏற்பட்டுள்ளது. வாசுதேவனுக்கு வலது கை ம்ணிக்கட்டிற்கு கீழ் எலும்பு விரிசல், வலது தோள்பட்டைக்கு கீழ் லத்தியால் அடித்த காயம் மற்றும் உடல் முழுவதும் உள்காயங்கள் ஏற்பட்டது. வலது கையில் மாவுகட்டு போடப்பட்டு வலது கையினை அசைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை