privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !

மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !

-

ழைக்கும் மக்களின் தாங்கொணா துயரத்தைச் சித்தரிக்கும் “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்றொரு கவிதை வரி உண்டு. தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கையறு நிலை இந்தத் துன்பியல் கவிதை வரியைத்தான் நினைவுபடுத்துகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததால், நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபாடி இல்லாமல் போனது. தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது” என வாதிட்டு, அந்த நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்டது, மோடி அரசு. அரசு அதிகார அமைப்புகள் துரோகம் செய்துவிட்ட நிலையில், பருவ மழையை நம்பி விதைப்பைத் தொடங்கினார்கள், விவசாயிகள். பருவத்தே பெய்ய வேண்டிய மழை பொய்த்து, டெல்டா விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இப்படி அடிக்கு மேல் அடி விழுந்து கொண்டிருந்த நிலையில், மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை சம்பாவுக்கும், அதனைத் தொடரும் தாளடிக்கும் சேர்த்தே சாவுமணி அடித்து விட்டது.

பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.
பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.

கடந்த 55 ஆண்டுகளில் இப்படியொரு கொடூரமான அவல நிலையை நாங்கள் கண்டதில்லை என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். ஆனால், மோடியோ, “ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், இந்தியா ஜொலிக்கத் தொடங்கிவிடும்” என வாய்ப் பந்தல் போடுகிறார். எந்த இந்தியா, எந்த இந்தியர்கள்? – மோடியிடமும், அவரது துதிபாடிகளிடமும் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். விதைப்பைத் தவறவிட்ட பிறகு, விவசாயிகளால் எதனை அறுவடை செய்ய முடியும்? பஞ்சத்தை, பட்டினியை, தலைக்கு மேல் கத்தியாக நிற்கும் கடனை, தற்கொலையை – இவற்றைத் தவிர விவசாயிகளுக்கு வேறென்ன கிடைத்துவிடும், ஐம்பது நாட்களுக்குப் பிறகு.

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாடெங்குமுள்ள சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மரண அடியாய் இறங்கியிருக்கிறது. இந்திய கிராமங்களை ஒரு பேரழிவின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

நவம்பர் மாதம் இந்திய விவசாயிகளுக்கு முக்கியமானதொரு பயிர்க்காலம். தமிழகத்தில் காரி காலப் பயிர்களும் (தை பட்டம்), வட இந்திய மாநிலங்களில் ராபி பயிர்களும் பயிரிடும் காலம். நெல், கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உருளைக்கிழங்கு, அவரை உள்ளிட்ட உணவுப் பயிர்களும், காய்கறிகளும் இந்தப் பருவத்தில்தான் பயிரிடப்படுகின்றன. மேலும், இதற்கு முந்தைய ஆடிப் பட்டப் (காரிஃப்) பயிர்கள் விளைந்து விற்பனைக்கு வரும் காலமும் இதுதான். இப்படிபட்ட நேரத்தில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு, விளைந்த பயிர்களை விற்கவும் முடியாத, அடுத்த பட்டப் பயிர்களைப் பயிரிடுவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாத கடும் நெருக்கடியில் விவசாயிகளைச் சிக்க வைத்துவிட்டது.

விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.
விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடாது; சேமிப்பு கணக்குகளில் பணம் போடவோ, எடுக்கவோ விவசாயிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசு விதித்த தடையுத்தரவு, விவசாய நடவடிக்கைகள் அனைத்தையுமே முடக்கிப் போட்டு, விவசாயிகளையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் பஞ்சம் பிழைக்கப் போகும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.

நகர்ப்புற பொருளாதாரம் இயங்குவதற்கு வர்த்தக வங்கிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதனைவிடப் பல மடங்கு முக்கியமானது கிராமப் புறங்களில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள். மாநில அரசுகள் அறிவிக்கும் பயிர்க் கடன்கள் மற்றும் வட்டி மானியங்கள் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு அப்பால், விவசாயிகளுக்குத் தேவைப்படும் நகைக் கடன்களை வழங்குவது, பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரிமியம் தொகையை வசூலித்துக் கொள்வது, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடு பொருட்களை விற்பது, விவசாயிகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்து, அவற்றைப் பராமரித்து இயக்குவது எனப் பல வகையான பணிகளைத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன.

இந்த நிதியாண்டில் தமிழக அரசு விவசாயிகளுக்கு 6,000 கோடி ரூபாய் பயிர்க் கடனையும் 200 கோடி ரூபாய்க்கான வட்டி மானியத்தையும் அறிவித்திருக்கிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வர்த்தக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாதென்ற உத்தரவால், 6,000 கோடி ரூபாய் பயிர்க்கடனில் இன்னும் வழங்க வேண்டியுள்ள 4,000 கோடி ரூபாய் பயிர்க் கடனை அளிக்க முடியாமல் அந்தத் திட்டமே முடங்கிப் போய்க் கிடக்கிறது. மற்ற வங்கிகளைப் போல 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தொடக்க வேளாண் கூட்டுறவு பெற்றுக் கொள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையாலும், விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் போடப்பட்டுள்ள தடையாலும், விவசாயிகளால் பயிர்க் கடனைச் செலுத்த முடியவில்லை. உரிய தேதியில் பயிர்க்கடனைச் செலுத்த முடியாத நிலையில் வட்டி மானியத்தைப் பெறுவதும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

farmers-distress-caption-1சிறு, நடுத்தர விவசாயிகள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு விவசாய வேலைகளைத் தொடங்குவதில்லை. பயிர்க் கடன், நகைக் கடன், தானிய ஈட்டுக் கடன் அல்லது தனியாரிடம் பெறும் கந்துவட்டிக் கடன் இவற்றை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை நடத்தி வருகின்றனர். விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கு; நடவுக்கு, நாத்துப் பறிப்பதற்கு, களையெடுப்பதற்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு என விவசாய வேலைகளைச் செய்யும் கூலித் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கு விவசாயிகளுக்கு அன்றாடம் ரொக்கப் பணம் கையில் இருக்க வேண்டும். பணப் புழக்கம் குறைந்துவிட்ட நிலையில், வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில், சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலையில் இந்த விவசாயப் பணிகள் அனைத்துமே முடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாநில அரசின் கடன் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடியை நடத்த வேண்டுமென்றால் கந்துவட்டிக் கும்பலிடமோ குறுநிதி நிறுவனங்களிடமோ கையேந்த வேண்டும். இல்லையென்றால், நிலத்தைத் தரிசாகப் போட வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

அரசு அதிகாரிகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து நேரடி நெல் விதைப்பை நடத்தி முடித்திருக்கும் டெல்டா விவசாயிகள் ஒருபுறம் மழை இல்லாமலும், மறுபுறம் கையில் பணம் இல்லாமலும், நட்ட பயிர்கள் காய்ந்து, சாவியாகிப் போவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரட்டைத் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், வேதனையால் மாரடைத்தும் இறந்து போய்விட்டனர்.

இந்த அகால மரணங்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களையும் விட்டு வைக்கப் போவதில்லை. ஏனென்றால், சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஞ்சள் சந்தையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், 13 நாட்களில் 8,000 கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகமல் தேங்கி நிற்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இந்தத் தேக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விலை வீழ்ச்சியும் மஞ்சள் விவசாயிகளை ஓட்டாண்டி நிலைக்குத் தள்ளக்கூடும். இந்த விற்பனை தேக்கம் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, காங்கேயம் காளைச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை  தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் மாதம்தான் உருளைக் கிழங்கு பயிருடும் பருவம். பயிரிடுவதற்கு ஏற்ற கிழங்குகளை மார்ச் மாதத் தொடக்கத்திலேயே குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைத்து, அதனை நவம்பரில் திரும்ப எடுத்து விதைக்க வேண்டும். ஒருபுறம் சேமிப்புக் கிடங்குகள் 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கின்றன; இன்னொருபுறமோ விவசாயிகளிடம் பணமும் இல்லை, பயிர்க் கடனும் கிடைக்கவில்லை. இதனால், கிடங்குக் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், அதனால் கிழங்குகளைத் திரும்பப் பெற்றுப் பயிரிட முடியாமலும் தவித்துப் போய் நிற்கிறார்கள், விவசாயிகள்.

கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்குகளை நவம்பர் 30-க்குள் திரும்ப எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதனை அழித்துவிடுவார்கள் என்கிறார், ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் மெஹ்ருதீன் என்ற விவசாயி.

உருளைக்கிழங்கு சாகுபடியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலுள்ள மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 3,87,000 ஹெக்டேரில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. அதனைப் பயிரிடுவதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜமால்பூர் பகுதியில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால், அம்மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்ப்பதே அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

.பி. மாநிலத்தில் கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு வகைகளைப் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அம்மாநிலத்தில் கரும்பை வெட்டி ஆலைகளுக்கு எடுத்துப் போக வேண்டிய நேரமிது. ஆனால், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுப்பதற்கும், வெட்டிய கரும்பை எடுத்துச் செல்ல லாரி வாடகையைக் கொடுப்பதற்கும் பணமில்லாததால், கரும்புகள் வயலில் காயத் தொடங்கிவிட்டன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வட்டி வீதம் குறையும் என பா.ஜ.க. கும்பல் வாய்ச்சவடால் அடித்து வருகிறது. ஆனால், 3 வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த கந்து வட்டிக் கும்பல், பணத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு 5 வட்டி, பத்து வட்டி என ஏற்றிவிட்டதாக உ.பி. விவசாயிகள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் வாசி சந்தையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக 14 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு கிலோ பச்சை மிளகாய் அதன் பிறகு மூன்று ரூபாயாகச் சரிந்து விட்டதாகவும், 13 ரூபாய்க்கு விற்ற ஒரு காலிஃபிளவர் இன்று நான்கு ரூபாயாகவும், ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்று வந்த கத்தரிக்காய் 12 ரூபாயாகச் சரிந்துவிட்டதாகவும் பிம்பாலே என்ற விவசாயி வேதனையோடு கூறுகிறார்.

ஆந்திராவுக்குப் போனால் தக்காளியைக் காசில்லாமலேயே அள்ளிவர முடியும் என சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

விளைந்த உருளைக்கிழங்குகளைச் சந்தைக்கு எடுத்துச் செல்லவும் பணமின்றி, அக்கிழங்குளைச் சேமித்து வைக்கவும் வழியின்றித் தவித்து நிற்கும் உ.பி. மாநில விவசாயிகள், அவற்றைத் தெருவில் கொட்டி ஆர்பாட்டங்களை நடத்துகின்றனர்.

மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.
மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்தியாவெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாதென உத்தரவிட்டது மைய அரசு. இந்த உத்தரவால் சுங்கச்சாவடியை எடுத்து நடத்தும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ந்ட்டத்தை ஈடுகட்ட முன்வந்திருக்கும் மோடி அரசு, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்துப் பேச மறுக்கிறது. மாறாக, நாட்டிற்காக இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவர்களுக்கு உபதேசிக்கிறது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தாங்கிக் கொள்ள மறுக்கும் நட்டத்தை, விவசாயிகள் ஏன் மௌனமாகச் சகித்துக் கொள்ள வேண்டும்?

* * *

க்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள், விளைந்த பயிர்களை விற்பதற்குச் சந்தைக்கு வருவார்கள் என்பதையெல்லாம் அறியாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்து, வேளாண் கூட்டுறவு சங்கங்களை மோடி முடக்கிவிட்டார் என்றால், அவரைப் போன்ற முட்டாள்தனமான, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள ஆட்சியாளர் வேறு யாரும் இருக்க முடியாது. இல்லை, இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்றால், அவரைவிட விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியாளர் வேறு ஒருவர் இருக்க முடியாது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கருப்புப் பண பேர்வழிகளின் புகலிடமாக இருப்பதனால்தான், அவற்றுக்குத் தடை போட்டோம் என நியாயப்படுத்துகிறது, பா.ஜ.க. குற்றவாளியே நீதிபதியாகும் அயோக்கியத்தனம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த ஓட்டுக்கட்சிகள் அதிகார பலத்துடன் இருக்கிறதோ, அக்கட்சிகளும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும்தான் வேளாண் கூட்டுறவு சங்கங்களைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் காங்கிரசு, பா.ஜ.க. கும்பலின் குடும்பச் சொத்தாக இருப்பதும், அம்மாநிலத்தில் நடந்துள்ள கூட்டுறவு சங்க ஊழல்கள் அனைத்திலும் பா.ஜ.க.விற்கும் பங்கிருப்பது ஊரறிந்த உண்மை. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்ற கணக்காக, கூட்டுறவு சங்கங்களை முடக்கி விவசாயிகளைத் தண்டிக்கிறது, பா.ஜ.க.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும் முடக்கியிருப்பதன் பின்னேயுள்ள நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல. அதன் பின்னே வேறொரு தீய நோக்கம் மறைந்திருக்கிறது. நாடெங்கும் உள்ள 13,943 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் 2,36,890 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 81,900 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இத்துணை கோடி பணத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடுதான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் வங்கிச் செயல்பாடுகளுக்குத் தடை விதித்திருக்கிறது, மைய அரசு. மேலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மட்டுமே கூட்டுறவு வங்கிகள் எனக் கருதப்படும் என்றொரு அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ள மைய அரசு, இது நவம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாகக் காதும்காதும் வைத்தாற் போல அறிவித்திருக்கிறது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இடத்தைப் பிடிக்கப் போவது யார்? மகளிர் சுய உதவிக் குழுக்களும், குறு நிதி நிறுவனங்களும் கிராமப்புற மக்களுக்குக் கடன் கொடுத்துக் கைதூக்கிவிடும் போர்வையில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் நுழைந்துவிட்டன. கிராமப்புற மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் கடன்கள் 99 சதவீதம் வசூலாகிவிடுவதாலும், அக்கடன்களுக்கான வட்டி, வங்கி வட்டியைவிட அதிகமாக இருப்பதாலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் குறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன. கூட்டிக்கழித்துப் பாருங்கள், மோடி அரசின் நோக்கம் என்னவென்று புரிய வரும். பளிச்சென்று சொல்ல வேண்டுமென்றால், கிராமப்புற விவசாயிகளைக் கந்துவட்டிக் கும்பலைவிட மோசமான குறுநிதி நிறுவனங்களின் பிடிக்குள் முழுமையாகச் சிக்க வைப்பது மோடி அரசின் எதிர்காலத் திட்டம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை அங்கீகரிக்க மறுத்து மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைதான் அதன் தொடக்கம்.

– ரஹீம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க