சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம் !

0
3

ரக்கு மற்றும் சேவை வரியை எதிர்த்து நாடு முழுவதும் சிறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் போராடி வருகின்றனர். தங்கள் உற்பத்திப் பொருளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான வரியை எதிர்ப்பது என்ற வரம்பினைத் தாண்டி, இந்த வரி விதிப்பு முறை, உள்நாட்டு சிறுதொழில்களையும் வணிகத்தையும் அழித்துவிடும் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருக்கின்றனர். மறுபுறம் சர்வதேச நாணய நிதியம் முதல் இந்தியத் தரகு முதலாளிகள் வரையிலான அனைவரும் ஜி.எஸ்.டி.-யைக் குதூகலமாக வரவேற்றிருக்கின்றனர். இந்த வரிவிதிப்பினால் ஆதாயம் பெறுவது யார் என்பதைப் புரிந்து கொள்வதற்கான எளிய சான்று இது.

வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவது என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரிவிதிப்பு முறை, உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி, பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இன்னொரு “ஒற்றைச் சாளர” வசதி. இது, மறுகாலனியாக்க கொள்கைகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்ற பெருமுதலாளிகள் மீதான நேர்முக வரி குறைப்பு, மக்கள் மீதான மறைமுக வரி அதிகரிப்பு என்ற கொள்கையின் தொடர்ச்சி. மறைமுக வரி வலையை அகல விரித்து மக்களிடமிருந்து வரியைக் கசக்கிப் பிழிவதே இந்த வரி விதிப்பு முறையின் நோக்கம். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற எந்த வித்தையினாலும் உயர்த்த முடியாத மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த வரிவிதிப்பு முறை மாற்றத்தின் மூலம் உயர்ந்துவிடும் என்று படம் காட்டுகிறது மோடி அரசு.

நாட்டின் ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வளிக்கின்ற விவசாயம் மற்றும் சிறுதொழில்கள் போன்றவை, அமைப்பு சாராத் தொழில்கள் என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளித்துவ தொழில்களைப் போன்று தேசிய சந்தையைக் குறிவைத்து நடத்தப்படுபவை அல்ல. மாநில,வட்டார அளவிலான தொழில்களை வலுக்கட்டாயமாகத் தேசியச் சட்டகத்துடன் இணைப்பதன் மூலம் சுயேச்சையான சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரியமாக இயங்கி வருகின்ற பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதாரத்தை இது சிதைக்கும். பார்ப்பன, பனியா, மார்வாரி முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடி பொருளாதாரத்தின் மீது இறுகும். படேல் உருவாக்கிய இந்திய ஒருமைப்பாட்டைப் போல, பொருளாதார ஒருமைப்பாட்டை உருவாக்கும் நடவடிக்கை என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிபர் வரவேற்றிருப்பதன் உட்பொருள் இதுவே.

இந்த வரிவிதிப்புமுறை மாநில அரசுகள் அனைத்தையும் வரிவசூல் அதிகாரமில்லாத பில் கலெக்டர்களாக மாற்றுவதன் மூலம் டில்லி மட்டுமே இனி அதிகார மையம் என்று மாற்றுகிறது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளை மட்டுமின்றி, சிவில் நிர்வாகத்தையும் நடத்தி வருகின்ற மாநில அரசுகள், இனி ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வீட்டோ அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் டில்லியிடம் பிச்சையெடுப்பது மட்டுமே வழி. தமது மாநில மக்களின் தொழில்களைக் காப்பாற்றுகின்ற அல்லது தேவையை நிறைவேற்றுகின்ற பெயரளவிலான அருகதையைக்கூட மாநில அரசுகள் இழக்கின்றன. இதன் இன்னொரு பொருள் தாங்கள் தனித்த ஒரு கொள்கை கொண்ட கட்சி என்று கூறிக்கொள்வதற்கான அருகதையையும் கட்சிகள் இழக்கின்றன என்பதுதான்.

“ஒரு தேசம், ஒரு சந்தை, ஒரு வரி” என்ற முழக்கம் “ஒரே தேசம் ஒரே பண்பாடு” என்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் கொள்கையைச் சுமந்து வரும் தேர். பண்பாட்டு பன்முகத்தன்மையும் ஜனநாயக உரிமைகளும் இந்தப் பொருளாதாரத் தேர்ச்சக்கரத்தில் நசுங்கி அழியும். மதச்சார்பற்ற விவகாரங்கள் என்று கூறப்படும் பொருளாதார, அரசியல் விவகாரங்கள் ஒவ்வொன்றிலும் வெகு வேகமாக அதிகாரம் மையப்படுத்தப்பட்டு வருகிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்ற ஆயுதத்தை ஏந்தி நாற்காலியில் அமர்ந்திருக்கிறது இந்துத்துவ பாசிசம்.

– புதிய ஜனநாயகம், ஜூலை 2017.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க