privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி"வளர்ச்சி" தோற்றுவித்த விவசாயிகளின் கலகம் !

“வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம் !

-

றட்சியால் விளைச்சலை இழந்து நட்டமடைந்து போனதால், கடன் தள்ளுபடிக் கேட்டுப் போராடுகிறார்கள் தமிழக விவசாயிகள். அதிகமாக விளைந்து, அதற்குரிய விலை கிடைக்காமல் நட்டமடைந்து நிற்பதால், கடன் தள்ளுபடி கேட்டுப் போராடுகிறார்கள் வடமாநில விவசாயிகள். விசித்திரமான முரண்பாடு!

வறட்சி, நல்ல விளைச்சல் என்ற எதிரும் புதிருமான நிலைமை ஒரு காலவரிசையில் திரும்பத் திரும்ப நிகழ்ந்து விவசாயிகளின் வாழ்க்கையை அலைக்கழித்து வருவதை நாம் பலமுறை பார்த்துவிட்டோம். ஆளுங்கட்சிகளால், அதிகார வர்க்கத்தால் இம்முரண்பாட்டிற்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட யோசனைகள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராக அமைந்து தோற்றுப் போய்விட்டதை, இந்தியாவெங்கும் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அம்பலப்படுத்துகின்றன.

மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசால் ஆறு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பஞ்சாப் மாநிலம், பதிண்டா நகரில் ம.பி. முதல்வர் சிவராஜ் சௌஹானின் கொடும்பாவியை எரித்து பஞ்சாப் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்கள்தான் விவசாயத் துறை வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கடந்த ஐந்தாண்டுகளாக 14 சதவீத விவசாய வளர்ச்சியைச் சாதித்திருப்பதாகவும், மகாராஷ்டிரா 10 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் இந்து மதவெறிக் கும்பல் பீற்றிக் கொள்கிறது. ஆனால், சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சிக்கு இணையாக, அம்மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்திருக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 1,982 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது கடந்த பதினாறு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் நடந்துள்ள மொத்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளில், பத்தில் ஒரு பங்காகும்.  அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசிற்கு எதிராக விவசாயிகளின் கலகம் தொடங்கிய பின்னர் மட்டும் நாற்பது விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 4,291 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் குறிப்பிடுகிறது.

விவசாய வளர்ச்சியில் சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படும் இவ்விரண்டு மாநில விவசாயிகளின் சராசரி மாத வருமானம், தேசிய சராசரியைவிடக் குறைவாக இருப்பதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வளர்ச்சியின் மூலம் நாட்டு மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுவிடப் போவதாக உடுக்கை அடித்து வருகிறார், மோடி. ஆனால், மத்தியப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த விவசாயிகளின் கலகமும்; அசாம், ஆந்திரா, சத்தீஸ்கர், பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தமது விளைபொருட்களை வீதியில் கொட்டி நடத்திய போராட்டங்களும் சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சி, கிராமப்புற வறுமையைத் தீவிரப்படுத்தியிருப்பதை அம்பலப்படுத்திவிட்டன.

-புதிய ஜனநாயகம் – ஜூலை 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க