Friday, May 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று - ஆதாரங்கள் !

இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று – ஆதாரங்கள் !

-

வினவு குறிப்பு: மெர்சல் படத்தில் இந்தியாவில் இலவச மருத்துவம் இல்லையென பொய்யான விவரத்தை சொன்னார்கள் என்று குதிக்கும் பாஜக – பண்டாரங்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இங்கே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுப்பதற்கு அரசே காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன் இலட்சணம் என்ன? அரசு மருத்துவமனை எனும் போது அங்கே எதற்கு காப்பீடு? அந்தக் காப்பீட்டுப்பணம் அரசால் வழங்கப்பட்டாலும், அதை பறித்துக் கொண்டு போவது யார்? தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டு தொகை போக அதிக தொகை கேட்டு வாங்குகிறார்கள். இறுதியில் மக்கள் இலவசம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். அந்தக் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கும், அதை அமல்படுத்துவதற்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்! இதுதான் இலவச மருத்துவத்தின் இலட்சணம்! தொலைக்காட்சிகளின் விவாதங்களை நடத்தும் பத்திரிகையாளர்களும்,கலந்து கொள்ளும் அறிஞர்களும் இந்தக் கட்டுரையின் விவரங்களை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய சுகாதார காப்பீடு திட்டம் இருந்தபோதும் இந்தியாவின் ஏழைகள் ஏன் இன்னமும் செலவு செய்கிறார்கள்?

ருத்துவமனை சேர்க்கைக்கான செலவுகள் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டு இடைவெளியில் 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தாலும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) காப்பீடு திட்டம் என்னவோ மாறாமல் அப்படியே தான் உள்ளது.

ஏழைகளுக்கான சுகாதார நிதிச்சுமையை உலகின் மிகப்பெரிய அரசாங்க சுகாதார காப்பீடு திட்டம் குறைக்கவில்லை என்றும் இந்திய ஏழைகள் தங்களது கைக்காசை போட்டுதான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் சமூக அறிவியல் மருத்துவம் (Social Science Medicine) என்ற சஞ்சிகையில் வெளிவந்த புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் மருத்துவ காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தில் 15 கோடி மக்கள் இணைந்துள்ளனர். நாளொன்றிற்கு நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்கும் கிராமபுரங்களில் 27 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களாக இந்திய அரசு வரையறுக்கிறது. ஆயினும் இத்திட்டம் உள்நோயாளிக்கான மருத்துவம் என்ற அளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உடல்நலன் தொடர்பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உடல்நலத்திற்காக கைச்செலவு செய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய 50 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தை பிடித்திருப்பதாக 2017, மே 8 அன்று வெளியான இண்டியாஸ்பென்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசாங்க காப்பீடு திட்டம் இருந்தபோதிலும் ஏழைகள் ஏன் இன்னும் செலவு செய்கிறார்கள்? குறைந்த அளவிலான சேர்க்கை, பற்றாக்குறையான மருத்துவ காப்பீடு மற்றும் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை RSBY-ல் சேர்க்காதது போன்றவையே காரணங்களாக அந்த ஆய்வு சொல்லுகிறது.

ஒட்டுமொத்தமாக போடும் கைக்காசில் புறநோயாளிகளுக்கான மருத்துவ செலவு மட்டுமே 65.3 விழுக்காடு இருப்பதாக 2016 -ம் ஆண்டு புரூக்கிங்ஸ் அறிக்கை கூறுகிறது. ஆனால் இவை RSBY -ல் சேர்க்கப்படவில்லை.

RSBY -ல் 2010 -ம் ஆண்டுக்கு முன்னர் சேர்ந்தவர்களின் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் 23% வீதத்தில் அதிகரித்ததற்கான அடிப்படையான காரணம் இது தான் என்று கூறிய அந்த ஆய்வு மார்ச் 2012 வரையிலான காப்பீடு திட்டத்தை மதிப்பீடு செய்தது.

மேலும் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டுகளுக்கு இடையே மருத்துவமனை சேர்க்கை செலவினம் 10 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ள போதிலும் RSBY-ன் காப்பீடு திட்டம் மாற்றப்படாமல் அப்படியே தான் உள்ளது.

சுகாதார “பரிசோதனை” முயற்சி :

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏப்ரல் 2008 -ம் ஆண்டு RSBY -ஐ அறிமுகப்படுத்தியது. வலுவான பொது சுகாதார உட்கட்டமைப்பை வழங்குவதில் தோல்வியுற்ற பின்னர் காப்பீடு திட்டங்களுடன் “பரிசோதனை” முயற்சியில் இறங்க அரசு முடிவு செய்தது என்று RSBY வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள நோய்களையும் RSBY உள்ளடக்கியிருக்கிறது மேலும் மருத்துவ செலவினங்களுடன் 100 ரூபாய் போக்குவரத்து செலவையும் சேர்த்தே அது வழங்குகிறது. அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

பதிவீட்டின் போது 30 ரூபாயை பயனாளிகள் செலுத்துகின்றனர். மாநில மற்றும் மத்திய அரசுகளால் மீதமுள்ள காப்பீடு தொகை செலுத்தப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள குடும்பங்கள் மட்டுமே RSBY -ல் பதிவு செய்யப்படலாம்.

இந்தியாவில் உள்ள 707 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 460 மாவட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள 40 விழுக்காட்டினர் இன்னமும் சேர்க்கப்படவில்லை :

தகுதி (காப்பீட்டிற்காக) பெற்ற 5.9 கோடி குடும்பங்களில் 3.63 கோடி (61%) குடும்பங்கள் RSBY –ல் சேர்க்கப்பட்டன. இருப்பினும் இதன் தாக்கம் தெரிய வேண்டுமெனில் பெரும்பகுதியான ஏழை மக்களை இதில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையான இந்திய சுகாதார பொது நிறுவனத்தை (IIPH) சேர்ந்தவரும் ஆய்வாசிரியர்களில் ஒருவரான அனுப் கரண் கூறினார்.

“RSBY திட்டத்தில் அதிக மக்களை சேர்த்துள்ள சத்தீஸ்கர் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஏழைகளுக்கான உள்நோயாளி மருத்துவ செலவில் சில வகையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கரண் கூறினார்.

உடல்நலம் மற்றும் கல்விக்குறியீடுகளில் மோசமாக இருக்கும் அஸ்ஸாம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 50 முதல் 60 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

35 விழுக்காட்டினர் மட்டுமே RSBY-ஐ அறிந்துள்ளனர் :

RSBY -ஐ பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாதது மிகக்குறைவான சேர்க்கைக்கு ஒரு இன்றியமையாத காரணம் என்கிறது அந்த ஆய்வு.

தகுதிவாய்ந்த குடும்பங்களில் 35 விழுக்காட்டினர் இத்திட்டத்தை அறிந்திருக்கவில்லை என்று மும்பையில் இருக்கும் டாடா சமூக அறிவியல் நிறுவனம் 2013 -ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட 15 கோடி பேரில் 1.4 கோடி பேர் (9.94%) கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று மேலும் அது கூறுகிறது.

அதனால் “ஏழைகளுக்கு திட்டத்தின் நலன்களை விளக்கும் தேவை இருக்கிறது” என்று கரண் கூறினார்.

செலவுகள் அதிகரிக்கிறது ஆனால் திட்டம் மாறவில்லை :

ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் காப்பீடு போதாது என்கிறார் கரண்.

மருத்துவமனைக்கான 2014 -ம் ஆண்டு சராசரி செலவு கிராமிய இந்தியாவில் 14,935 ரூபாயாகவும் மற்றும் நகர்ப்புறத்தில் 24,435 ரூபாயாகவும் இருந்ததாக தேசிய மாதிரி மதிப்பாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014 -ம் ஆண்டு முடிவடைந்த பத்தாண்டில் மருத்துவமனையின் செலவு கிராமப்புற பகுதிகளில் 10.1 விழுக்காடும் நகர்ப்புற இந்தியாவில் 10.7 விழுக்காடும் அதிகரித்தது. ஆனால் RSBY -ன் காப்பீடு தொகை ஒன்பது ஆண்டுகளாக அப்படியே உள்ளது.

பொது அறுவை சிகிச்சைக்கான செலவுகள் :

அடிவயிற்று அறுவை சிகிச்சைக்கு 2,469 – 41,087 ரூபாய், கருப்பை நீக்கத்திற்கு 4,124 – 57,622 ரூபாய் மற்றும் குடல்வால் சிகிச்சைக்கு 2,421 – 3,616 ரூபாய் என்று பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் 2013 -ம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.

“திட்டத்தின் பற்றாக்குறையான வரம்பு சில குடும்பங்களை RSBY திட்டத்திற்கு வெளியே மருத்துவமனை சேவைகளை நாடுவதற்கு வழிவகுத்திருக்கலாம்” என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உள்நோயாளி மருத்துவத்திற்காக கைக்காசை செலவு செய்யும் குடும்பங்களில் தோராயமாக 9 விழுக்காட்டினர் சராசரியாக 30,000 ரூபாய் செலவு செய்வதாக கூறுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 75,000 – 80,000 ரூபாய் வரை செலவு பிடிப்பதாக 2012 -ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவு கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழை மக்கள் விரும்புகின்றனர் :

மருத்துவமனை சேர்க்கையற்ற புறநோயாளிக்கான மருத்துவ பராமரிப்புச்செலவை RSBY செலுத்துவதில்லை. இது பொதுவாக மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டு செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

இருப்பினும் சுகாதாரத்திற்கான ஒட்டுமொத்த கைச்செலவினில் 63.5% புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் தொடர்பானதாக இருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதாக சொல்லும் ஒரு திட்டத்தில் தவற விடப்பட்ட ஒரு அடிப்படையான காரணி இதுவாகும்.

அதுமட்டுமல்லாமல் நடைமுறைக் காரணி ஒன்றையும் இது தவற விடுகிறது.

“பொதுவாக புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழைகள் விரும்புகிறார்கள். ஏனெனில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லாததால் ஊதிய இழப்பிற்கு அது வழிவகுக்காது என்பதால் தான்” என்கிறார் கரண்.

ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் மோசமான சிகிச்சை :

மருந்துகளுக்கான பணத்தை மருத்துவமனையில் RSBY செலுத்துகின்ற போதிலும் பல (தனியார்) மருத்துவமனைகள் இந்த சேவைகளை வழங்க மறுக்கின்றன. மேலும், சிலநேரங்களில் (காப்பீட்டிற்கு வெளியே) தேவையற்ற சில சிகிச்சைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. எனவே மருத்துவமனைகளுக்கான ஒழுங்குமுறை அவசியம் என்று கரண் கூறினார்.

ஏழை நோயாளிகளுக்கு நெருக்கமாக (தனியார்) மருத்துவமனைகள் இருப்பதில்லை. இது மருத்துவ உதவியை நாடி ஏழை நோயாளிகள் வருவதைத் தடுக்கின்றன. “பல மருத்துவமனைகள் RSBY -ன் தாமதமான பணமளிப்பு நடவடிக்கை உள்ளிட்ட நிர்வாக கோளாறுகளால் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன” என்று IIPH -ன் ஆய்வு தெரிவிக்கிறது.

பணமில்லா பரிமாற்ற சேவைக்காக RSBY பயனாளிகளுக்கு சூட்டிகை அட்டைகள் வழங்கப்படுகிறது. கைரேகைகள் மூலம் அவை சரிபார்க்கப்படுகின்றன. ஆயினும் இரண்டு காரணங்களுக்காக அந்த அட்டைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒன்று நோயாளிகள் நிராகரிக்கப்படுகிறார்கள் அல்லது அவற்றின் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளால் நிராகரிக்கப்படுகிறது. இரண்டு, மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான பயனாளிகளுக்குத் தெரியவில்லை என்று வெளிநாடு மேம்பாட்டு நிறுவனத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வு கண்டறிந்தது. நோயாளியின் வீட்டிற்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் இடையிலான தொலைவும் பயனாளிகளை மட்டுப்படுத்தும் காரணியாகும்.

திட்டத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?

சேர்க்கையை அதிகரிப்பதும் காப்பீட்டில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு புரிதலை கொடுப்பதும் RSBY -ன் செயலூக்கத்தை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சில பரிந்துரைகளை கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை குறிப்பாக நீடித்த நோய்களுக்கான செலவுகளை காப்பீடு உள்ளடக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வியட்நாம் அரசு நடத்தும் கட்டாய உடல்நல காப்பீடு கொள்கையை கவனியுங்கள். புறநோயாளிக்கான மருத்துவ செலவினங்களையும் உள்ளடக்குவதற்கான சீர்திருத்தம் 2002 -ம் ஆண்டு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் நேரம் செலவாகினும் கைச்செலவை இது குறைத்தது. இது வேலையிழப்பு ஏற்படுவதையும் பள்ளிக்கூட விடுப்பு எடுப்பதையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

கைச்செலவு செய்வதைக் குறைப்பதற்காக சுகாதார வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அண்டை நாடுகளான இலங்கையும் தாய்லாந்தும் தங்களது சுகாதாரப் பாதுகாப்பு முறையை அனைவரையும் உள்ளடக்கும் விதமாக பலப்படுத்தியுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆயினும் சுகாதாரத்தில் வங்கதேசம், நேபாளம், கானா உள்ளிட்ட ஏழை நாடுகளை விட மோசமாகவே இருக்கிறது. சுகாதார குறியீட்டில் 154 -வது இடமே இந்தியாவிற்கு. ஏனைய நாடுகளை ஒப்பிடும் போது சுகாதாரத்திற்காக இந்தியா மிகக்குறைவாகவே செலவிடுகிறது.இந்நிலையில் கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? என்ற கதையாக வல்லரசுக்கனவு வேறு.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க