Sunday, September 19, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை !

மீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை !

-

பத்திரிக்கைச் செய்தி

க்கிப்புயலுக்கு சொந்தங்களை இழந்து, படகு, வலை, மீன்பிடி சொத்துக்களை இழந்து கண்ணீரில் கொந்தளிக்கும் மீனவ மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டிய மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேர் 10-12-2017 அன்று காலை நீரோடை கிராமத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பல முறை பேசிய பின்புதான் தோழர்கள் இருக்கும் இடம் மாலை தெரிந்தது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்

தோழர்கள் கிங்சன், மருது, கணேசன், முகமது அனஸ், ஆதி, மாரிமுத்து, அன்பு ஆகியோர் மீதான குற்றச்சாட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்பது. பிரிவுகள் 151 இ.த.ச மற்றும் 7(1) A கிரிமினல் லா அமெண்ட்மென்ட் ஆக்ட்.

ஒக்கிப்புயல் ஏற்படுத்திய பேரழிவிற்கு சற்றும் குறைவானதில்லை. எடப்பாடி, மோடி அரசின் கண்துடைப்பு மீட்பு நாடகங்கள். மீனவ மக்களின் போராட்டங்கள் உறுதியாக சென்றுவிடக்கூடாது என்ற அச்சம்தான் தமிழக காவல் துறையின் இந்த கைது சிறை நடவடிக்கை. எடப்பாடி அரசுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் முக்கியம் மீனவர்கள் உயிர் இரண்டாம் பட்சம்.

“எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், கடலுக்கு சென்ற எங்கள் மீனவர்களை மீட்டுத்தா…!” என்றும்,  அதிகாரிகளும் அமைச்சர்களும் நாடகமாடுகிறார்கள் என்றும், புயலுக்கு பிறகு உடனே உரிய இடத்தில் ஆழ்கடலுக்கு சென்று தேடியிருந்தால் பல மீனவர்களை உயிருடன் காப்பாற்றி இருக்கலாம் என்றும் மீனவர்கள் கேள்விகளால் ஆட்சியாளர்களை துளைக்கிறார்கள்.

சுரணையற்ற அரசுக்கு கேட்கவில்லை. ஆனால் பிற மக்கள் நெஞ்சம் பதைக்கிறார்கள். மீனவ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள். மீனவ கிராமங்களில் பல அமைப்புகள், கட்சியினர், ஊடகத்துறையினர் தங்கி அவர்கள் போராட்டத்தின் நியாயத்தை, ஆதரித்து பேசி வருகிறார்கள். தமிழகம் தழுவிய அளவில் மீனவர் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் நடத்திவரும் வேலையில் மக்கள் அதிகார தோழர்களை குறி வைத்து ஏதோ தீவிர வாத நடவடிக்கையில் ஈடுபட்டது போல் தமிழக காவல் துறை கைது செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியா அல்லது பாசிஸ்டுகளின் காட்டாட்சியா? காவல் துறையா? கூலிப்படையா?

கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இன்னும் இருக்கிறது என்று எப்படி நம்புவது?

கடலோர மீனவ மக்களை பாதுகாக்க, மேம்படுத்த எந்த விருப்பமும் கொள்கையும் அரசிடம் இல்லை. பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடல்வளங்களை தாரைவார்க்க துடிக்கிறது என்பதை மீனவமக்கள் ஆதாரங்களுடன் அரசை தோலுரிக்கிறார்கள்.

மீனவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் உயிரை பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்கிறார்கள். ஆழ்கடலில் 40 நாட்கள் தங்கி மீன்பிடிப்பது என்பது கரையில் உள்ளவர்களால் புரிந்து கொள்வது சிரமம். தகவல் தொழில் நுட்பம் இல்லை. பேரிடர் முன்னறிவிப்பு, போதிய மீட்பு நடவடிக்கை இல்லை. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி அரசு தவறான தகவலை தருகிறது. ஒக்கிப்புயல் என்பது சுனாமி போன்று பேரிடர். அரசு முனைந்து பொறுப்போடு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள். மீனவர்களின், இத்தகைய பேரழிவிற்கு அரசுதான் பொறுப்பு முதல் குற்றவாளி.

குழித்துறை ரயில் நிலையம், குளச்சல் பேருந்து நிலையம், தொடர் சாலை மறியல் என பெரும் மக்கள் திரள் போராட்டங்கள்தான் தமிழக அரசை, அதிகாரிகளை வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் மீனவர்களை காணவில்லை, நூற்றுக்கனக்கான படகுகள் கரை திரும்பாது என்ற உண்மைகள் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

எப்படி அமைதியாக இருப்பது? மீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிரந்தர தீர்வு காணாமல், போராடுபவர்களை மிரட்டவே இந்த கைது நடவடிக்கை. தமிழக அரசு இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கைவிட வேண்டும்.

மீனவ மக்களுக்கு உதவ சென்ற மக்கள் அதிகார தோழர்களை கைது செய்தது அநீதி ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அரச பயங்கரத்தாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் உலகில் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதுதான் இயற்கை நீதி. இதனைத்தடுக்கும் மிருகதனத்தை ஒருநாளும் ஏற்க இயலாது. அனைவரும் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்போம் ஆதரிப்போம்.

கடைசிச் செய்தி: கைது செய்யப்பட்ட தோழர்கள் குமரி மாவட்ட மண்டைக்காடு காவல் நிலையத்தில்  உடைகளை உருவப்பட்டு போலீசால் கடுமையாக அடிக்கப்பட்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.


 

  1. பாசிசக்கும்பலான பிஜேபி-க்கும் அதன் தமிழகக் கிளையான அதிமுக என்ற அடிமைக்கூட்டத்திற்கும் சேவை செய்வதே போலீசு என்று “அம்மணமாய்” நிற்கும் காவல்துறை என்று பெயர் தரித்துருக்கும் காக்கிக்காவிப்படைதான் தோழர்களின் ஆடைகளை களைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறது.”அம்மணமாய்”நீற்பவர்களுக்கு ஆடைகளை அணிந்தவர்களைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்.அடிபடும்போது தோழர்களின் உடல் வலியால் துடித்திருக்கலாம்.ஆனால் மக்களை சரியான வழியில் தோழர்கள் அரசியல்படுத்தி நேர்மையாக மக்கள் நலன் சார்ந்து கடமையாற்றுகின்றனர் என்பதையே லத்தியின் ஒவ்வொரு அடியும் நிருபிக்கிறது.நாட்டுப்பற்றாளர்களான தோழர்கள் மீது இன்று விழுகின்ற ஒவ்வொரு அடியும் நாளை மக்கள் சக்தி எனும் இடியாய் இறங்கித் தகர்க்கும் என்பதில் மாறுதலே இல்லை.மீனவ சொந்தங்களை காக்கச்சொல்லிப் போராடிய தோழர்களை விடுதலை செய்.உன் “தீரத்தை” கடலில் இறங்கி மீனவ உறவுகளை காப்பாற்றுவதில் காட்டு.

  2. டயர்நக்கி நாய்கள் ஆட்சியில் எலும்பு துண்டுக்கு அலையும் போலீஸின் செயல் கண்டிக்கதக்கது,கள்ளெடுப்போம்…..

  3. என் இன மக்களுக்காகப் போராடிய, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களின் சமூக அக்கறை ஒவ்வொரு குடிமகனையும் I mean Citizen நாட்டில் நடந்துவரும் அரசியல் அநாகரிகங்களை எதிர்த்து கேட்க கிளர்ந்து எழச் செய்யும். வாழ்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க