மோடி அரசின் நாலே முக்கால் ஆண்டு கால ஆட்சியின் சாதனை எதுவாக இருக்கும்?  நிச்சயம் கணக்கில்லா கைதுகளாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக தன்னை விமர்சிப்பவர்களை கைது செய்வதில் மோடிக்கு நிகராக இந்திய வரலாற்றில் இன்னொரு சர்வாதிகாரி வரமுடியாது.

தன்னுடைய ஆட்சி முடியும் தருவாயில் ஓட்டு பிச்சை வாங்குவதற்காக, மற்றுமொரு ஜும்லா அறிவிப்பான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திருந்தார் பிரதமர் மோடி.  அடுத்தடுத்து வந்த இரண்டு புயல்களால் தமிழக மக்கள் நிலைகுலைந்து போயிருந்த சமயத்தில் வராத மோடி, தேர்தலில் ஓட்டு வாங்க மட்டும் வந்திருக்கிறாரே என்கிற கோபம் சாதாரண மக்களுக்கும் இருந்தது.  #GoBackModi என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய கோபத்தை தமிழக மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.

மோடிக்கு எதிரணியில் உள்ள கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மதிமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியது. மதிமுக தொண்டர் ஒருவர் மோடி பிச்சை கேட்பது போன்ற படத்தை தன்னுடைய முகநூலில் பதிவிட்டாராம். தமிழகமும் கேரளமும் மோடியை முட்டி தள்ளுவது போன்ற படங்களையும் சமூக ஊடகங்கள் வைரலாக்கின. ஆனால், மோடியை பிச்சைக்காரர் ஆக்கியதில் மனம் வருந்திய பாஜக, இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதிமுக தொண்டர் சத்யராஜ் பாலு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 504 மற்றும் 505 (பி)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மற்றொரு கைது சம்பவம் அரங்கேறியுள்ளது உத்தர பிரதேசத்தில்.  கைதுக்கான காரணம் பேனர் வைத்தது.  ‘பொய் வாக்குறுதிகளின் பெயர் மோடி Vs இந்துத்துவ பிராண்டின் பெயர் ஆதித்யநாத்’ என சொன்னது அந்த பேனர் வாசகம்.

‘உத்தர பிரதேஷ் நவநிர்மாண் சேனா’என்ற இந்துத்துவ கும்பல் அந்த பேனரை வைத்திருக்கிறது. இதில் விசேசம் என்னவென்றால், இதில் 2019 தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ஆதித்யநாத் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது இந்த பேனர்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழந்தபின், மோடி பிம்பம் அடி வாங்கியிருக்கிறது. இந்த மோடி பிம்பத்துக்கு பதிலாக ஆதித்யநாத் என்ற புதிய பிம்பத்தை முன்னிறுத்துகிறது சங் பரிவாரத்தின் ஒரு பிரிவு.  இதை உள்ளூர வரவேற்று ரசிக்கிறார் காவி சாமியார் ஆதித்யநாத். ஆகவே, பேனருக்கு முழுமுதல் காரணமான இந்த அமைப்பின் தலைவர் அமித் ஜனி கைது செய்யப்படவில்லை. மாறாக, பேனரை அச்சிட்ட நிறுவனத்தின் உரிமையாளரும் பேனரை வைத்த ஊழியர்கள் இருவரும் கைதாகியிருக்கிறார்கள்.

படிக்க:
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

பேனரை வைத்த அமித் ஜனி, ஜேஎன்யு மாணவர் சங்க தலைவராக இருந்த கன்னையா குமாரை கொலை செய்வேன் என மிரட்டி கைதானவர். மாயாவதி சிலையின் தலையை வெட்டிய வழக்கும் இவர் மீது உள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரூபேந்திரா ரானாவை மக்களவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த உள்ளதாக அறிவித்தவர் இவர்.

மேற்கண்ட செய்திகள் சொல்வது இவைதான்… இந்துத்துவ தர்பாரில் விமர்சன குரலை எழுப்புகிற ‘எதிரி’கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். அதேவேளையில் என்னதான் காறிதுப்பினாலும் இந்துத்துவ கும்பலாக இருந்தால் சொந்த எச்சில்தானே என துடைத்துக்கொண்டு போவார்கள். நாலே முக்கால் வருசமும் பாஜக ஆட்சியை தினம்தோறும் காறி துப்பிய சிவசேனாவுடன் மக்களவை தேர்தலுக்காக கைகுலுக்கியதையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.


கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா, யாஹூ நியூஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க