
நாங்குநேரி-பெரும்பத்து
சாதிவெறி, கொலைவெறியாட்டம்
உண்மை அறியும் குழு அறிக்கை
26-03-2026
உறுப்பினர்கள்
தோழர் கின்ஷன், வழக்கறிஞர்,
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை,
கழக வழக்கறிஞர் அணி,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் தாளமுத்து செல்வா,
நெல்லை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் சந்துரு,
மாவட்டப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
வெளியிடுவோர்:
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்கள்.
93853 53605.
***
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட இந்திரா காலனி மற்றும் பெரும்பத்து கிராமம் ஆகியவற்றில் கடந்த மார்ச் 02, 2026 அன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த இந்திரா காலனி பறையர் சாதியைச் சேர்ந்த ஜான் மார்க் (வயது 47) என்பவரையும், அவ்வழியாக வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி திரிநாத் கட்டா (வயது 50) என்பவரையும் வெட்டிக் கொன்றது. மேலும் பெரும்பத்து ஊரில் இயங்கிக் கொண்டிருந்த தேநீர்க் கடையில், தேநீர் அருந்திக் கொண்டிருந்த நாடார் சாதியைச் சேர்ந்தவர்களான இராமசாமி, கணேசன் ஆகியோரையும், தேநீர்க் கடை உரிமையாளர் பிரபாகரன் மற்றும் நெல்சன் ஆகியோரையும் சரமாரியாக வெட்டியது. மேலும் அங்கே நின்றிருந்த பிரபாகரன் மனைவியின் அருகில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல் காட்டு வழியாக சென்று, கோனார் சாதியைச் சேர்ந்த புளியங்குளம் சசிகுமாரை வெட்டிவிட்டு, அவரது பைக்கை வழிப்பறி செய்து கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நெல்சன், கணேசன் இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இராமசாமி, பிரபாகரன், சசிகுமார் ஆகியோருக்கு வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வெறியாட்டத்தால் நாங்குநேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது. நாங்குநேரி நகரம் மற்றும் கிராமங்களில் மாலை 6 மணிக்கு மேல் அச்சத்தின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டும், மக்கள் வெளியே வரமுடியாத சூழலும் நிலவுகிறது.
இது தொடர்பாக உண்மையை அறியும் வகையில் குழு அமைக்கப்பட்டு 12.03.2026, 13.03.2026, 14.03.2026 ஆகிய மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட ஊர்களில் மக்களை சந்தித்தோம். பாதிக்கப்பட்ட நபர்கள், குடும்பங்கள், உறவினர்கள், கொலையாளிகளின் தாய்மார்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தோம். இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உண்மையை அறியத் தொடங்குவோம்.
படுகொலையான இந்திரா காலனி ஜான் மார்க்-இன் உறவினர் டேவிட்
கொலையான ஜானுக்கு வயது 47. அவர் கிறித்தவ பறையர் பிரிவைச் சேர்ந்தவர். சிறிய ஓட்டு வீட்டில்தான் வயதான அவரது அம்மா, வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியான மனைவி கண்ணகி மற்றும் இரண்டு மகள்கள் வாழ்கிறார்கள். சிறு வயதில் போலியோ பாதிப்பால் ஜானின் கால் ஊனமாகி மாற்றுத் திறனாளி ஆனார். ஜான் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு செல்வார். 700 ருபாய் சம்பளத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையிலும் ஜானின் மனைவி அக்கம் பக்கத்தினரின் துணிகளை தைத்துக் கொடுத்து சொற்ப வருமானம் ஈட்டி வந்தார்.
எப்பொழுதும் வேலைக்கு சென்று விட்டு 8 மணிக்கு மேல் வரும் ஜான், சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லவில்லை. இரவு வேளையில் இந்திரா காலனி பிரதான சாலையில் ஊர் இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு தெரு விளக்கு எரியவில்லை. அந்த நேரத்தில் 3 பைக்கில் ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல், ஜான் மற்றும் நண்பர்களின் அருகே வந்துள்ளது. அவர்களது கையில் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததைப் பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட, மாற்றுத் திறனாளியான ஜான் தப்பித்து ஓட முயற்சித்தும், முடியாததால் சுற்றி வளைத்த அந்த கும்பல் ஜானை 53 முறை அரிவாளால் வெட்டியது. இதில் ஜான் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜானின் மனைவிக்கு காது கேட்காது, வாய் பேச முடியாததால் தன் கணவர் இறந்து போய் விட்டார் என்று கூட தெரியாமல், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார். மறுநாள் சின்ன மகள் சைகை மூலமாக சொல்லிதான் ஜான் இறந்தது அவருடைய மனைவிக்கு தெரியும். இதெல்லாம் கொடுமை சார்.
வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும், ஜானின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜானின் உடலை வாங்காமல் இந்திரா காலனி மற்றும் பெரும்பத்து ஊரை சேர்ந்த மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்தினர். ஜான் கிறித்தவ பறையர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் தலித் பிரிவில் சலுகைகள் கிடைக்காது என அரசு தரப்பில் சொல்லி விட்டார்கள். அவரது மனைவிக்கு உரிய படிப்புச் சான்றிதழ் இல்லாததால் அரசு வேலையும் கிடைக்காது எனக் கூறி, சிப்காட்டில் (SPICOT) வேலைக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வீடு கட்டிக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதை ஏற்று கொண்டு போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டு, ஜானின் உடல் பெறப்பட்டது. திருமாவளவன் வந்திருந்தார். ஒரு சில அரசியல் கட்சிகள், நாடார் சங்கம் நிதி அளித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஒடிஷா மாநிலத் தொழிலாளி திரிநாத் கட்டா வேலை செய்த, மலர் டிரேடர்ஸ் உரிமையாளர்
15 பேர் இங்கே வேலை பார்த்தார்கள். இவர்கள் என்னிடம் வேலைக்கு வந்து 3 மாதம் ஆகிறது. இவர்கள் சாமான் வாங்க ஏர்வாடி செல்வார்கள். அவசரத் தேவைக்கு சைக்கிளில் பெரும்பத்து போவார்கள். அப்படி இவர் போகும் போது இந்த கும்பல் வெட்டியுள்ளது. அப்படியே சரிந்துள்ளார். இதுதான் நடந்துள்ளது.
இறந்து போனவருக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். 25, 22, 18, 13 வயதுடையவர்கள். பெண் பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள், ஆண் பிள்ளைகள் இரண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். கவர்மெண்ட் தரப்பிலிருந்து இந்த குடும்பத்திற்கு பணம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு தனியாக அவரது மனைவி இருக்கிறார், சொந்தக்காரர்களை கட்டிப்பிடித்து அழுதால் துக்கம் தீரும். அதனால் ஊருக்கு போக வேண்டும் என்கிறார், பாவமாக இருக்கிறது.. நான் தான் பொறுமையாக இரு, பெண் பிள்ளைகள் இருக்கிறது என்று கூறினேன். பணம் வேண்டாம், நாங்கள் ஊருக்கு போகிறோம் என்கிறார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இறப்புச் சான்றிதழ் இன்னும் வரவில்லை. அது வந்து அதை இவர்கள் ஊருக்கு அனுப்ப வேண்டுமாம், அதன் பின் அங்கிருந்து சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவை வர வேண்டும். அது வந்த பின் எழுதி போட்டு, அதன்பின் நிதி வரும். அது எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் அவரது மனைவி அழுது கொண்டே இருக்கிறார். நான் ஊருக்கு அனுப்பி வைத்தால், அதன் பின் போலீசில் என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது. இன்று ஒரு நாள் போலீஸ் காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள். நானும் சொல்லியிருக்கிறேன்.
விசிக சார்பில் 1,00,000, அமமுக சார்பில் 10,000, தட்சிணமாற நாடார் சங்கம் சார்பாக 25,000, பெரும்பத்து ஊர் மக்கள் சார்பாக 10,000 நிதி கொடுத்துள்ளார்கள்.
பெரும்பத்து இராமசாமி (வயது 72) (பாதிக்கப்பட்டவர்)
என் பெயர் இராமசாமி. அப்பா பெயர் வைகுண்ட நாடார். நான் கூலி வேலைக்கு செல்கிறேன். சம்பவம் நடந்த அன்று நான் பிரபகரனின் காபிக் கடையில் காபி குடித்துக் கொண்டு இருந்தேன். வந்தவர்கள் எல்லாம் இளந்தாரிப் பயல்கள். சம்பவம் நடக்கும் போது மணி 8 இருக்கும். எதிரில் காலனி ரோட்டில் ஜானை வெட்டுகிறார்கள். எதோ சண்டை என நான் நினைத்தேன். அங்கே வெளிச்சம் இல்லை, இருட்டாக இருந்தது. அதன் பின் வடமாநிலத் தொழிலாளியை வெட்டுகிறார்கள். அதன்பின் டீக்கடையில் என்னை வெட்டினார்கள். அதன்பிறகு டீக்கடைக்காரர் பிரபாகரனை வெட்டினார்கள். நெல்சனை வெட்டியது, வடமாநிலத் தொழிலாளியின் அருகில் தான். வீராங்குளம் கணேசன் என்னருகில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அவரையும் வெட்டினார்கள். டீக்கடையில் மட்டும் 3 பேரை வெட்டினார்கள். மஞ்சங்குளத்தை சேர்ந்த மறவர் சாதிக்காரர்கள் கண்ணன், பலவேசம். வானலை ஆகிய மூன்று பேர் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
என்னை ஏன் வெட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒன்றுமே சொல்லாமல் தான் வெட்டினார்கள். என்னை வெட்டும் போது தடுத்த பிரபாகரன் கட்டைக்கம்பு எடுத்து அவர்களை அடித்தார். அவரையும் வெட்டினார்கள். அவர் தப்பித்து ஓடிவிட்டார். முதலில் என்னை நாங்குநேரி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கு இரத்தத்தை துடைத்து மருந்து போட்டார்கள். ஆனால் தையல் போடவில்லை. அங்கே டாக்டர் இல்லை. ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். அதன்பின் நான் வள்ளியூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். தற்போதுவரை செலவு தோராயமாக 50,000 ருபாய் ஆகியிருக்கும். இன்னும் மருந்து கட்ட வேண்டும். ஊரில் இதை கண்டித்து போராடினர். அது தான் எனக்கு தெரியும்.
பெரும்பத்து தேநீர் கடைக்காரர் பிரபாகரன் (பாதிக்கப்பட்டவர்)
எனது டீக்கடைக்கு அனைத்து மக்களும் வருவார்கள். மஞ்சங்குளத்தில் இருந்து மறவர் சாதியினரும் வருவார்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சிரித்து பேசி ஒன்றாக டீ அருந்துவார்கள்.
சம்பவத்தன்றும் மஞ்சங்குளத்தை சேர்ந்த மறவர் சாதியினர் மற்றும் பெரும்பத்து இராமசாமி, வீராங்குளம் கணேசன் உள்ளிட்ட அனைவரும் டீ குடித்துக் கொண்டிருந்தனர். ஜானை வெட்டிய கும்பல் கடையை நோக்கி வந்தது. வந்த வேகத்தில் இராமசாமியை வெட்டியது. அதை பார்த்து தடுக்கும் நோக்கில் கம்பை எடுத்துக்கொண்டு சென்று, கும்பலில் வந்த ஒருவனை தலையில் அடித்தேன். ஆனால் அவன் கீழே விழவில்லை. போதையில் இருந்திருந்தால் கீழே விழுந்திருப்பான். அப்போது இன்னொருவன் என்னை வெட்டிவிட்டான். என்னை வெட்ட வந்தவன் முகத்தை மறைக்கவில்லை. என் மனைவி அருகில் இருந்து சத்தம் போட்ட போது அவள் மீது ஒருவன் பெட்ரோல் குண்டை வீசினான். ஆனால் அது வெடிக்கவில்லை.
அங்கே நின்று கொண்டிருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என உணர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் அந்த கும்பல் அனைவரையும் வெட்டிவிட்டு மண்பாதை வழியாக போய்விட்டது. அதன் பின் அக்கும்பல் வெட்டி சாய்த்த நெல்சன் மச்சான் முகம் முழுவதும் இரத்தம் வழிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை என் முட்டியில் வைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டேன். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், என்னை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றது.
வீராங்குளம் கணேசன் கடுமையாக வெட்டப்பட்டு தூரமாக இருட்டில் கிடந்தார். அவர் அங்கே இருந்ததே தெரியாது. நீண்ட நேரம் கழித்து அவரது முனகல் சத்தம் கேட்டே அவரை கண்டு பிடித்துள்ளனர். தப்பி ஓடியவரை துரத்தி சென்று வெட்டி இருக்கிறார்கள்.
அதன்பின் நான் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளேன். தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு தையல் போட முடியாத வகையில் பிளவுபட்ட காயம். முதுகில், மார்பு பகுதியில், கையில் வெட்டப்பட்ட மற்றும் சிராய்ப்பு காயங்கள் எனக்கு உள்ளன.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பத்து நெல்சனின் மகள்
அப்பா சவுண்ட் சர்வீஸ் நடத்திக் கொண்டு இருந்தார்கள். தற்போது தம்பி தான் அதை பார்த்துக் கொள்கிறான் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா தான் அம்மாவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக்கு மாவு வாங்கப் போனார்கள். அந்த டீக்கடை காம்ப்ளக்ஸை தாண்டிப் வரும்போது பின்னாலிருந்து வந்து வெட்டியிருக்கிறார்கள். மெயின் ஆஃப் பண்ணிவிட்டு வெட்டியிருக்கிறார்கள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஒரு வருடமாக செக்போஸ்டில் போலீஸ் இல்லை.
நேற்று தான் மருத்துவமனையில் அப்பாவை பார்த்து பேசினேன். இடது கை விரல்கள் வெட்டப்பட்டு சர்ஜரி செய்து இணைக்கப்பட்டுள்ளது. வயிறு, தலை என பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது. தலையில் வெட்டப்பட்டதால் இடது கண் பார்வை தெரியவில்லை. தற்போது சுய நினைவு திரும்பி பேசத் தொடங்கியுள்ளார். பேச்சு சரியாக புரியவில்லை. ஏன் வெட்டினர், காரணம் என்ன என்று கூட எங்களுக்கு தெரியாது. மிகவும் வேதனையாக உள்ளது.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி
மடத்திலிருந்து நிலம் குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். 4 பெண்பிள்ளைகள், 1 பையன் உள்ளனர். 2 பெண்களுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது. 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 பையன் தனியார் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளி எனது கணவர். வயலில் நெல் மற்றும் வாழை பயிர் வைத்துள்ளார். வீட்டில் மாடுகள் உள்ளது. கல்லூரி விடுமுறை என்றால் பிள்ளைகள் அனைவரும் மாடுகளை பார்த்துக் கொள்வது உள்ளிட்டு, வயலில் அப்பாவிற்கு துணையாக வேலைகளில் ஈடுபடுவார்கள்.
சம்பவத்தன்று கல்லூரி முடித்து வரும் மகளை அழைத்து செல்வதற்காக பெரும்பத்து டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை வெட்டியுள்ளது. இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது. தற்போது சுயநினைவு வந்துவிட்டது. கண் விழித்த பின் எங்களை ஏன் வெட்டினார்கள் என கேட்டார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை போலிஸ் எந்த தகவலும் எங்களிடம் சொல்லவில்லை. வெட்டப்பட்டதை கேள்விப்பட்டு மும்பையிலிருது வந்த கணேசனின் தங்கை இதுவரை வீட்டிற்கு கூட போகாமல் மருத்துவமனையிலேயே உள்ளார். பிள்ளைகளும் வந்து பார்த்து செல்கிறார்கள். குணமாக எவ்வளவு நாள் ஆகும் என தெரியவில்லை. குணமானாலும் முன்பு போல வேலை செய்ய முடியாது. இவர் ஒருவரின் உழைப்பை நம்பிதான் மொத்த குடும்பமும் உள்ளது. பிள்ளைகள் படிப்பு, கல்விக் கட்டணம் ஆகியவை உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை செவிலியர்
கணேசன், நெல்சன் இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள். தலையில் உள்ள தையலை எடுத்துவிட்டு நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். தற்போது தண்ணீர் ஆகாரம் சாப்பிடுகிறார்கள். நெல்சன் தலையை விட வயிற்றில் அதிகம் தையல் போடப்பட்டுள்ளது. தொற்று ஆகிவிடக் கூடாது என்றுதான் உள்ளே வைத்துள்ளோம். நன்றாக இருக்கிரார்கள். புண் எல்லாம் க்ளீயர் ஆகும்வரைக்கும் ஆண்டிபயாடிக் போடுவார்கள். நெல்சனுக்கு கண்ணில் பார்வை பிரச்சனை உள்ளது. அதில் சர்ஜரிக்கு பிளான் பண்ணியிருக்கிறார்கள். அது ENT-யில்தான் செய்வார்கள். என்றைக்கு என்று தெரியவில்லை. நிறைய தையல் போடப்பட்டுள்ளது. அதை எண்ணிக்கையில் சொல்வது கடினம். மல்டிபில் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் டீப் ஆக போகவில்லை. தலையில் எலும்பு கட் ஆகிவிட்டது. அதை எடுத்து விட்டார்கள். இருவரும் நன்றாக இருக்கிறார்கள்.
புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 25) (பாதிக்கப்பட்டவர்)
நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். அப்பா விவசாயி. சம்பவம் நடந்த அன்று இரவு டிராக்டருக்கு டீசல் வாங்கி கொண்டு காட்டு வழியாக என்னுடைய பிளாட்டினா பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அந்த பைக் வாங்கி ஒரு வருடம் ஆகிறது. அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குறுக்கே மறித்தது. பைக்கை கொடுலே என்று கையில் அரிவாளை வைத்து மிரட்டியது. நான் பைக்கை விட்டு இறங்கி விட்டேன். அதில் ஒருவன் கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு என் தலையில் வெட்டினான். நான் கையை வைத்து தடுத்தேன். இதனால் தலையில் ஆழமாக விழ வேண்டிய வெட்டு தடுக்கப்பட்டது. இருப்பினும் தலையில் வெட்டுக் காயம் உள்ளது. என்னிடமிருந்து பைக்கை அபகரித்துக் கொண்டு சென்ற அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இருட்டாக இருந்ததால் முகத்தை பார்க்க முடியவில்லை. வீட்டிற்கு போன் மூலம் தகவல் சொன்னதும் நாங்குநேரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது வீட்டிலிருந்து சென்று மருத்துவ சிகிச்சை செய்து கொள்கிறேன். பைக் திருடு போனது சம்மந்தமாக போலீசில் புகாரளித்துள்ளேன். இன்னும் எனது பைக் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட புளியங்குளம் சசிகுமாரின் அம்மா
என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இரவில் டிராக்டருக்கு டீசல் வாங்கிக் கொண்டு வந்தான். கடம்போடு வாழ்விற்கு வடக்கே வயல்காட்டின் அருகே சம்பவம் நடந்தது. வெட்டியது எதற்கு என்றே தெரியவில்லை. தலையில் வெட்டியிருக்கிறார்கள். நமக்கு முன்பகை, பின்பகை எதுவும் கிடையாது. என் பையனும் எந்த வம்பு, தும்புக்கும் போக மாட்டான். அந்த இந்திக்காரருக்கும், இவர்களுக்கும் எந்த பகையும் இல்லையே. அவர்கள் பெரும்பத்துவில் சம்பவத்தை முடித்துவிட்டு இந்த வழியாக வந்திருக்கிறார்கள்.
இரண்டு பைக்கில் ஆறு பேர் வந்துள்ளனர். இவனை அரிவாளால் வெட்டிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆறு தையல் போடப்பட்டுள்ளது. வந்தவர்கள் சாதியை கேட்கவில்லை. வண்டியை பிடுங்குவதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. என் மகன் எனக்கு போன் செய்து விசயத்தை சொன்னான். நாங்கள் போவதற்கு முன்னால் தலையில் வெட்டப்பட்ட இடத்தில் கைவைத்தபடி அவனே வீட்டின் அருகே வந்து விட்டான். நாங்கள் நாங்குநேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அதன் பிறகு வள்ளியூர் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். களக்காடு போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறோம்.
இந்த ஊரில் மறவர் சாதியும் இருக்கிறார்கள். ஆனால் எந்த பயமும் கிடையாது. எந்த இரவும் நாங்கள் பயமில்லாமல் போவோம், வருவோம். களவும் இங்கே கிடையாது. ஆனால் இப்படியொரு சம்பவம் நடந்தில்லை.
பெயர் வெளியிட விரும்பாத பெரும்பத்து ஊரைச் சேர்ந்த பெரியவர்
ஊருக்கு அருகில் தீயணைப்பு நிலையம் இருக்கிறது. அதன் அருகிலேயே டாஸ்மாக் இருக்கிறது. பெரும்பத்து, மஞ்சங்குளம், வீராங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு வந்துதான் குடிப்பார்கள். இந்த பிரச்சினை நடந்த பின் தற்காலிகமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. நாங்நேரியில் மூன்று டாஸ்மாக் உள்ளது. பெரும்பத்துவில் முழுக்க நாடார் சாதியும், இந்திரா காலனியில் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களும், மஞ்சங்குளத்தில் மறவர் சாதியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். பெரும்பத்துவிற்கும், மஞ்சங்குளத்திற்கும் அறுபது வருடமாக பகை உள்ளது. ஆனால் கடந்த இருபத்து ஐந்து வருடமாக எந்த பிரச்சனையும் இல்லை. இப்போதுதான் இந்த பிரச்சனை உருவாகி உள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத பெரும்பத்து ஊர்க்காரர்
டீக்கடையில் மஞ்சங்குளத்தை சேர்ந்த இரண்டு மறவர் சாதிக்காரர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை கொலைகாரர்கள் வெட்டவில்லை. ஒரு பிரிவு மட்டும் தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எங்களை கடலில் தள்ளி விட்டுவிடுங்கள். நடப்பதை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. இதுவரை பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மேலும் நயினார் நாகேந்திரன் தான் குற்றவாளிகளை சரண்டர் செய்தார் என நான் கேள்விப்பட்டேன்.
நெடுங்குளத்தைச் சேர்ந்த கொலையாளி வசந்த்-இன் அம்மா மூக்கம்மாள்
நான் சத்துணவில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு கால் ஊனம். அரசாங்கம் எனது நிலையை கருத்தில் கொண்டு எனக்கு வேலையும், மூன்று சக்கர வாகனத்தையும் கொடுத்துள்ளது. என்னை திருமணம் செய்து கொடுத்தது மறுகால்குறிச்சியில். ஆனால் அங்கே என்னால் வாழ முடியவில்லை. அதனால் எனது இரண்டு மகன்களுடன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று அழுதேன். அவர்கள் கொடுத்த இந்த ஷீட் போட்ட வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன். அது எனக்கு சொந்தமானது இல்லை. எனக்கு சம்பளம் 5000 ருபாய் தான். கஷ்டப்பட்டுதான் கஞ்சி குடிக்கிறேன். நாடார் சாதிக்காரர்கள் நன்றாக பழகுவார்கள். நான் அங்கே தான் வேலை பார்த்தேன். ஆனால் தற்போது அங்கு என்னால் போக முடியவில்லை.
மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவத்தில் என்னுடைய இரண்டாவது மகன் செல்லதுரை கிடையாது. ஆனால் அவனை அதில் இழுத்து விட்டு விட்டார்கள். இந்த பெரும்பத்து கேசிலும் அவன் கிடையாது. மூத்தவன் வசந்த் இதில் ஈடுபட்டுள்ளான். ஆனால் முகநூலில் அரிவாளோடு நிற்பது போல் வந்துள்ள புகைப்படம் எனது இரண்டாவது மகன் செல்லதுரையினுடையது. நாங்கள் அனைவரும் ஒருமுறை முள் வெட்டப் போகும்போது எடுத்த புகைப்படம் அது.
எனது இளைய மகன் செல்லதுரை பள்ளிக்கூடம் போய் வந்த பின் ஜூஸ் கடையில் வேலை பார்த்தான். அப்போது சின்னதுரையை வெட்டியவர்கள் இவனுக்கு போன் செய்து டோல்கேட்டில் விடச் சொல்லியிருக்கிறார்கள். இவனும் அது தெரியாமல் அவனுடைய சித்தப்பா வண்டியில் கொண்டு போய் விட்டுள்ளான். சின்னதுரையை வெட்டியது சுபாஷ். செல்வகுமார், இன்னொருவன், அவன் பெயர் மறந்து போய் விட்டது. அவன் விபத்தில் இறந்து போனான். இவர்கள் மூன்று பேரும் வள்ளியூரில் படித்தவர்கள். இவன் களக்காட்டில் படித்தான். பைக்கில் கொண்டு போய் விட்டதை தவிர வேறெந்த குற்றமும் இவன் செய்யவில்லை. பஸ் ஏற்றி விட்டது தவறென்றால், பஸ் ஓட்டிய டிரைவரையும், கண்டக்டரையும் வழக்கில் சேர்க்க வேண்டியது தானே என நீதிபதியே கேட்டார்.
அதன்பின் போலீஸ் வேண்டுமென்றே என் மகன் மேல் கஞ்சா வழக்கு போட்டது. தலைகீழாக தொங்க விட்டு அடித்தது. அதன்பின் நான் வக்கீலை வைத்து வெளியே எடுத்தேன். போலீஸ் என்னை அடித்தே கொன்று விடும் என்று பயந்து ஊரை விட்டே அவன் ஒடி விட்டான். ஊரூக்கே வருவதில்லை. என் மகன் கஞ்சா விற்றான் என பொய் கேஸ் போட்டார்கள். என் இரண்டு பிள்ளைகளையும் மாறி மாறி பிடித்து வழக்கு போட்டதால் நான் முகநூலில் பேசினேன். லோன் வாங்கிதான் வழக்கு நடத்துகிறேன். தற்போது வரை அந்த கடனை அடைத்துக் கொண்டிருக்கிறேன்.
மூத்த மகன் வசந்த் தற்போதைய பெரும்பத்து வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளான். இராணுவத்திற்கு போக வேண்டும் என பயிற்சி எடுத்தான். அவனது சேர்க்கை சரியில்லை. அவனை இப்படி மாற்றி விட்டார்கள். வீட்டில் உள்ள ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு சாப்பாடு, புரோட்டா உள்ளிட்டு வேண்டியதை வாங்கிக் கொடுத்து திட்டமிட்டு அவர்கள் வழிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தூண்டிவிட்டு ஒருமுறை என்னை காதோடு அடித்து விட்டான். தற்போது எல்லாம் கை மீறி போய்விட்டது. என் அம்மாவும் என்னிடம் பேசுவது கிடையாது. ஊரில் எல்லாரும் என்னை ஒதுக்கி வைத்துள்ளார்கள். நான் அவமானப்பட்டுதான் இருக்கிறேன்.
என் மகனால் யாரையும் அரிவாள் பிடித்து வெட்ட முடியாது. அவனது வலது கை நடுவிரல் ஒன்று அம்மை கண்டு மடக்க முடியாமல் உள்ளது. ஆனால் என்னை துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும். என் பிள்ளை செய்தது நியாயம் என்று நான் சொல்ல மாட்டேன். என்னை மாதிரி ஒரு மாற்றுத் திறனாளியை வெட்டியிருக்கிறார்கள். யார் வழி நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இதில் ஈடுபட்ட அனவைரும் சிறு வயது பையன்கள். நல்லவனிடம் போனால் நல்லவனாக இருப்பான். கெட்டவனிடம் போனால் கெட்ட வழியில தான் போவான். ஸ்டேசனில் கையெழுத்துப் போட என்னைக் கூப்பிட்டார்கள். ஆனால் நான் போகவில்லை.
அனைவரும் மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்துள்ளனர். தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். ஆனால் யாரோ விலை உயர்ந்த காரில் கொண்டு வந்து இவர்களை சரண்டர் செய்ததாக கூறினார்கள். வழி நடத்தியவர்கள் பலமாக இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்.
என் பிள்ளையை சிறையில் யாரும் பார்க்கக் கூடாது, வெளியில் எடுக்க முயற்சிக்க கூடாது என பெட்டிசன் போடலாமா என வக்கீலிடம் கேட்டேன். ஆனால் சட்டத்தில் அப்படி இடமில்லை என்று வக்கீல் சொல்கிறார். கைது செய்யப்பட்ட இந்த 7 பேரையும், யாரும் பார்க்கக் கூடாது என 7 தாய்மார்களும் கேட்கிறோம். வழி நடத்துபவர்கள் பணத்தை கட்டி வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் தவறாக வழநடத்திவிடக் கூடாதல்லவா, அதற்காகத்தான் சொல்கிறேன். இதுவரை கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் பார்க்க எந்த தாய்மாரும் போகவில்லை, இனியும் போக மாட்டோம். தண்டனை எவ்வளவு நாளோ அத்தனை நாள் உள்ளே இருந்து அனுபவித்துவிட்டு வரட்டும். அந்த ஆணவக் கொழுப்பு அடங்கி திமிர் குறையட்டும். அகங்காரம் குறையட்டும். தகப்பன் இருக்கும் பிள்ளைகளும் திருந்தாமல் உள்ளே போய்விட்டது. போலிசிடமும், உங்களிடமும் நான் கேட்பது ஒன்றுதான், என் பிள்ளையை நீங்கள் திருத்தி தந்தால் நான் சாகும் போது நிம்மதியாக சாவேன். சாதி பார்த்து நீங்களும் விலகி விடாதீர்கள்.
சுப்பையா என்கிற சுபாஷ் சின்னதுரை கேசில் சிக்கியவன். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் சுபாஷ் தவிர அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். சுபாஷின் அப்பா முருகன். இட்லிக் கடை வைத்திருந்தவர். தற்போது அவர் நாங்குநேரியில் இல்லை. அவமானம் தாங்காமால் ஊரை விட்டு போய் விட்டார். இதற்கு முன் சுபாஷ் காலேஜில் எதோ பிரச்சனை செய்தான் என்று அவமானம் தாங்க முடியாமல் அவர் மருந்தை குடித்து விட்டார். ஆனால் பிழைத்துக் கொண்டார்.
இந்த வழக்கில் சிக்கிய கல்யாணி என்ற பையனின் அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறாள். இதற்கு முந்தைய வழக்கில் பிள்ளையை சிறையில் இருந்து வெளியே எடுத்துவிட்டு 3 நாள் தான் ஆகிறது. மறுபடியும் இந்த வழக்கில் மாட்டிக் கொண்டான்.
இதில் கண்ணா என்பவனுக்கு தாய் கிடையாது. அவரது அப்பா டீக்கடையில் டீ ஆத்திவிட்டு அங்கேயே தெருவில் படுத்துக் கொள்வார். தகப்பன் இல்லாத பிள்ளைகள், வழி நடத்த ஆளில்லாத பிள்ளைகள் ஆகியோரை தேர்ந்தெடுத்து இம்மாதிரி ஈடுபடுத்துகிறார்கள்.
நாங்குநேரியைச் சேர்ந்த கொலையாளி மைக்கேல்-இன் அம்மா
10-ஆம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டான். அதற்கு பிறகு பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று சொல்லி விட்டான். முன்பெல்லாம் யாருக்காவது எதாவது என்றால் ஓடிப் போய் உதவி செய்வான். அப்படிருந்தவன் மாறிவிட்டான். தற்போது அவனுக்கு 18 வயது ஆகிறது. இதற்கு முன்பு ஒருமுறை கல்யாண வீட்டில் அரிவாள் வைத்து ஆடியதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளான். அதற்காக போலீஸ் அவன் மீது கேஸ் போட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தார்கள்.. அதன் பின் 200 ருபாய் வழிப்பறி செய்தான் என்று அவன்மீது பிட்டப் கேஸ் போட்டார்கள். பின்னர் பொய்யாக கஞ்சா கேஸ் போட்டார்கள். ஊருக்குள்ளேயே வரக்கூடாது என் போலீஸ் மறுபடி மறுபடி துரத்தியது.
என் மகனும், சுபாஷும், பம்பாயில் இட்லிக் கடையில் தான் வேலை பார்த்தார்கள். அவன் இங்கே வந்ததே எங்களுக்கு தெரியாது. ஏன் இப்படி மாறிப் போனான் என்றே தெரியவில்லை. அவன் யார் கூட காண்டாக்ட் வைத்திருக்கிறான் என எங்களுக்கு தெரியவில்லை. தற்போது யார் இதை செய்யச் சொன்னார்கள், இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எந்த தாயும் அரிவாள் எடுத்து வெட்டு என்று சொல்ல மாட்டாள். எங்கள் பேச்சை அவன் கேட்கவில்லை. அது இப்போது குடும்பததையே பாதிக்கிறது. எல்லாரும் ஒதுக்கி வைத்த மாதிரி தான் எங்கள் குடும்பம் இருக்கிறது.
இப்போது வரைக்கும் அவன் அங்கு போனானா என்றும் எனக்கு தெரியாது. இதுவரை நான் அவனை பார்க்க போகவில்லை. அவன் செய்த இந்த தப்பை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் காலில் விழ வேண்டும் என நாங்களே நினைத்தோம்.
நாங்கள் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். இதற்கு முன் இவனது வழக்குக்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் மறவர் சாதி என்றுதான் பெயர். ஆனால் இவனது அப்பாவிற்கு நாடார், எஸ். சி ஆட்களோடுதான் பழக்கம் அதிகம். கூலி வேலைதான் செய்கிறார். வேலைக்கும் அவர்களோடுதான் செல்கிறார். இப்போது அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன் என அவமானப்பட்டு வேலைக்கு போகாமல் வீட்டிற்குள்லேயே முடங்கிப் போயிருக்கிறார். நேற்று வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவர் இறந்துவிட்டார் என சொல்லி விட்டார்கள். இதனால் கடைகளை சீக்கிரமே அடைத்து விட்டார்கள். இதன் காரணமாக பயந்து போய் நாங்கள் அவரை ஊரை விட்டு அனுப்பி வைத்து விட்டோம். பெண் பிள்ளை ஒன்று இருக்கிறது. இல்லையென்றால் அன்றைக்கே செத்திருப்போம்.
நாங்குநேரியைச் சேர்ந்த கொலையாளி கல்யாணியின் அம்மா மாரித்தாய்
என் மகன் செய்தது மகா பெரிய தப்பு. வெட்டியதற்கு அப்புறம் தான் எங்களுக்கே தெரியும். அவன் 11-ஆம் வகுப்பு வரை படித்தான். காலாண்டு பரிட்சை மட்டும் எழுதினான். அதன் பிறகு போகவில்லை. தற்போது வயது 19 ஆகிறது. 2 வருடம் முன்னாடியே படிப்பை நிறுத்தி விட்டான். படிப்பு ஏறவில்லை அவனுக்கு. வேலைக்கு போகிறேன் என்றான். சரி போகட்டும் என அனுப்பி வைத்தோம். ஆந்திராவில் போய் ஹார்பரில் வேலை பார்த்தான். திருவிழாவிற்கு மட்டும் தான் ஊருக்கு வருவான்.
சின்னதுரை பிரச்சனையில் அவனை வெட்டியவர்கள் இவனுக்கு நண்பர்கள். அவனை வெட்டிவிட்டு வரும்போது அவர்கள் சாப்பாடு கேட்டார்கள். இவன் சாப்பாடு வாங்கி கொடுத்தான். அதைத் தவிர வேறெந்த குற்றமும் இவன் செய்யவில்லை. வெட்டிய மூவரும் வள்ளியூரில் படித்தார்கள். சின்னதுரையும் வள்ளியூரில் தான் படித்தான். அப்போதே என் மகன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவனுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. நல்லா இருந்த பிள்ளையை போலீஸ் தான் கேஸில் சேர்த்து விட்டார்கள்.
கல்யாண வீட்டிற்கு தான் போனான். பொய்யாக கஞ்சா கேஸ் போட்டார்கள். அதன்பின் பணகுடியில் ஒரு அடிதடி கேசில் சிக்கினான். அதன்பின் ஒரு ராபரி கேசில் மாட்டினான். பொய் சொல்லக் கூடாது, உண்மையத்தான் சொல்ல வேண்டும். பெட்ரோல் பங்கில் பணத்தை ராபரி செய்தான். 4 பேர் இதில் ஈடுபட்டனர், அதில் இவனும் ஒருவன். போலீஸ் இதில் பணத்தை வாங்கிவிட்டு இவன் கையை உடைத்தது. ஆபரேசன் செய்துதான் சரி செய்தேன். இதில் 11 மாதம் உள்ளே இருந்தான். நான் தான் வெளியில் எடுத்தேன். வெளியில் வந்து 3 நாள் தான் ஆகிறது. வீட்டில் கூட தங்கவில்லை. சேலத்திற்கு வேலைக்கு போய்விட்டான். சேலத்தில் இருந்து அவனை கூட்டி வந்து விட்டார்கள். இப்படித்தான் செய்கிறார்கள். என் பிள்ளையை வெளியூரில் இருந்து கூட்டி வந்தவர்கள் யாரென்று என்னால் சொல்ல முடியுமா. அவர்கள் தோரணையாக இருக்கிறவர்கள். நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். கூலி வேலை செய்கிறேன்.
சின்னதுரை வழக்கில் என் மகன் சம்மந்தப்படவில்லை என எஸ்.பி வரைக்கும் புகாரளித்தேன். ஆனால் அது எடுத்துக் கொள்ளப்படவில்லை. சம்பாத்தியமெல்லாம் வழக்குக்கு தான் செலவழித்தேன். 95,000 ரூபாய் 10 பைசா வட்டிக்குத்தான் வாங்கிச் செலவழித்தேன். இன்று வரை அடைத்து கொண்டு இருக்கிறேன். வக்கீலுக்கு போக வர சாப்பட்டிற்கே 1000 ரூபாய் போட்டு விட வேண்டும்.
என் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தேன். என் பிள்ளை வாழ்க்கையே போய்விட்டது. என் பிள்ளை வாழ்க்கையை நாசாமாக்கி விட்டார்கள். உயிருக்கு பயந்து அவனே சரண்டர் ஆகிவிட்டான். செய்த தவறுக்கு உள்ளே இருந்துவிட்டு வரட்டும். ஆனால் அவனது உயிருக்கு உத்தரவாதம் கொடுங்கள். மறுபடி, மறுபடி பிடித்து, பிடித்து உள்ளே போட்டால் அது பற்றிய சிந்தனையே தான் வரும். என் பிள்ளை வாழ்க்கை போனதே போலிசால் தான். தப்பு செய்தால் பிடித்து உள்ளே போடுங்கள், கொன்றே போடுங்கள். அதை தவறு என்று சொல்லவில்லை. போலீஸ் தான் ஊருக்குள்ளேயே வர முடியாமல் செய்து விட்டது. நான் என் பிள்ளையை பத்திரமாக பார்த்திருப்பேன். என் பிள்ளை வாழ்க்கையே போய்விட்டதே. இனி நான் என்ன செய்ய முடியும். அவனுடைய தம்பியை சம்பவம் நடந்ததில் இருந்து நான் பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது.
இன்று தான் ஜெயிலில் இருந்து போன் போட்டான். நான் செய்தது தப்பு தான். என்னை மன்னிச்சுக்கோம்மா என்றான். தப்புன்னு தெரிஞ்சும் ஏன் போனாய் என்று சத்தம் போட்டேன். நான் அவனை ஜெயிலில் பார்க்க போக மாட்டேன். போலிஸ் ஸ்டேசனில் கூப்பிட்டார்கள். நான் போனேன். ஆனால் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை.
பெயர் வெளியிட விரும்பாத பக்கத்து ஊர் மறவர் சாதி இளைஞர்
இது முன்பகையால் செய்யப்பட்டதல்ல. பத்திரிக்கையில் வந்தது போல் முன்பகை என்றால், பெரும்பத்து ஊருக்குள் போய் சம்மந்தப்பட்டவர்களை வெட்டியிருக்கலாம். ஏன் தேவையில்லாமல் ஜானை வெட்ட வேண்டும். மெயின் ரோட்டில் நின்று எல்லோரையும் வெட்ட வேண்டும். அதனால் இது முன்பகையை மையமாக வைத்து செய்யப்பட்டதல்ல.
வெட்டுப்பட்டவர்கள் சும்மா விடமாட்டார்கள் என போலீசில் ஒருவர் கூறுகிறார். போலீஸே இப்படி பேசி மறுபடியும் பிரச்சனையை தூண்டி விடுகிறது.
50 வருடம் முன் பகை இருந்தது. ஆனால் தற்போது அது இல்லை. அந்த டீக்கடைதான் பகையை ஒழித்து நட்பை புதுப்பித்த இடம். டீக்கடை வந்த பிறகுதான் இரண்டு ஊர் மக்களும் டீ குடிக்க ஒன்றாக கலந்தார்கள். அனைவரும் அண்ணன் தம்பியாகத்தான் பழகினார்கள்.
ஆனால் பிரிவினை தூண்டிவிட இன்னும் சில சக்திகள் இருக்கிறது. சம்பவம் நடந்த பின் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ராக்கெட் ராஜா கட்சியில் இருந்து ஒருவன் பேசுகிறான், பெரும்பத்து மக்கள் இங்கே இருக்க முடியவில்லை என்றால் ஆனைக்குடியில் வந்து இருங்கள். அங்கே எவன் வருவான் என்று பார்ப்போம் என்று வெறியை தூண்டி பேசுகிறான். அது ராக்கெட் ராஜா ஊர். நீ நீதி கேட்டு வந்திருக்கிறாய், பிரச்சனையை வேறு பக்கம் திருப்பாமல் பொறுப்பாக பேச வேண்டும் அல்லவா.
இங்கே 90 சதவீதம் விவசாயம் தான் நடக்கிறது. ஆனால் அதில் லாபமில்லை. வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சாரயம், கஞ்சாவை தடை செய்ய வேண்டும்.
நாங்குநேரி காவல் ஆய்வாளர்
மக்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு மாதிரியான பிரச்சனை மக்களுக்குள் இல்லை. சேரன்மகாதேவியும். நாங்குநேரியும் தான் மோசமாக இருக்கிறது. ஆயிரம் பெரியார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது விசயமாக விசாரித்துக் கொண்டுள்ளோம். எங்களுக்கே என்னவென்று தெரிவில்லை. நாங்கள் தான் விசாரித்தோம். தற்பொழுது என்னிடம் இருந்து டி.எஸ்.பி கையில் கேஸ் போய்விட்டது.
நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன்
ஜான் மனைவிக்கு வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரணம் கொடுக்க ஆதிதிராவிட நலத்துறை மூலமாக செக் ரெடி செய்துவிட்டோம். ஆனால் கிறித்தவ பறையர் என்பதால் எஸ்.சி / எஸ்.டி பிரிவில் இவர்கள் வரவில்லை. பிள்ளைகளுக்கும் அப்படியே வாங்கி வைத்துள்ளார்கள். அதனால் கொடுக்க முடியவில்லை. நாங்கள் சட்டப்படிதான் போக முடியும். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஜானின் மனைவிக்கு அவர் படித்த சன்றிதழ் ஏதுமில்லை. அதனால் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியாது. சிப்காட்டில் வேலை வாங்கி தரப்பட்டுள்ளது. தினமும் நான் அந்த வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறேன். மற்றபடி இரண்டு ஊருக்கும் பீஸ் கமிட்டி போட ஏற்பாடு செய்து வருகிறோம். மற்றொரு சிப்காட் கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்தால் இந்த பிரச்சனை குறையும். அதற்கான முயற்சி எடுத்துள்ளோம்.
பிரசிடெண்ட் சகுந்தலா பாபு
ஜானின் மனைவிக்கு அரசு வேலை, நிவாரணம் கேட்டு தான் போராடினோம். அரசு தரப்பில் வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 3.50 லட்சம் கிடைக்கும். ஆனால் அது போதாது. நிறைய பேர் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்து வீடு கட்டிக் கொடுக்க இருக்கிறோம். ஜானின் மனைவிக்கு அவர் இறந்தது கூட தெரியாது. அவள் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக இருக்கிறாள். அவள் மனத்திற்குள் இருக்கும் எண்ணத்தை அவளால் சொல்ல முடியாது. அதை நம்மாலும் புரிந்து கொள்வது கடினம். இது எல்லாவற்றையும் பரிசிலித்து தான் போராட்டத்தை முடித்துக் கொண்டு, விரைவாக உடலை வாங்க முடிவு செய்தோம்.
பெரும்பத்து ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கடைக்காரர்
இந்த பகுதியிலிருந்த இந்திக்காரர்கள் பயந்து கொண்டு ஊருக்கு போய்விட்டார்கள். தற்போது வியாபாரம் குறைந்து போய்விட்டது. நானும் கடையை யாருக்காவது கொடுத்து விடலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மஞ்சங்குளம் ஊர்க்காரர்
எங்கள் ஊருக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்கள் சம்பவம் முடிந்து எங்கள் ஊருக்கு வந்து, நவீன் தேவர் வாழ்க என்று கத்திவிட்டு சென்றார்கள். மற்றபடி எந்த சம்மந்தமும் இல்லை.
பெயர் வெளியிட விரும்பாத நெடுங்குளம் ஊர்க்காரர்
இது தவறான செயல். இதை இந்த ஊரில் உள்ள யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஊருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. நீங்கள் இந்த பிரச்சனையை விசாரித்தால் அது ஊருக்கு பிரச்சனையாகி விடும். இதோடு முடித்துக் கொள்ளுங்கள்.
உண்மை அறியும் குழு வந்தடைந்த முடிவுகள்
நாங்குநேரி – பெரும்பத்து பகுதியில் நடத்தப்பட்ட சாதிவெறி, கொலை வெறியாட்டம் எவ்வித முன்பகையும் இன்றி கூலி, ஏழை உழைக்கும் மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட அனைவரும் மறவர் சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதில் குற்றவாளிகளாக சிறையில் இருந்து வெளியில் வந்து சில நாட்களே ஆனவர்களையும், இப்பகுதியில் இருந்து வெளியூர் சென்றவர்களையும் மீண்டும் அழைத்து வந்து திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போதையின் காரணமாக இதை செய்யவில்லை. தெளிவான மனநிலையிலேயே இதை செய்திருக்கிறார்கள். தாக்கியவர்களில் ஒரு சிலரைத் தவிர, பிறர் தங்களது முகத்தை மறைக்கவில்லை. வெளிப்படையாகவே இக்குற்றத்தை செய்திருக்கிறார்கள். குற்றத்தை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவையெல்லாம் இத்தாக்குதலானது மக்கள் மத்தியில் ஒரு சமூக பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் இதில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட உள்நோக்கத்தோடும், இது செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் இதில் ஈடுபட்டிருக்கும் குற்றவாளிகள் 18லிருந்து 21 வயதுடையவர்கள் என்பதால் இவர்களால் மட்டும் மிகப் பெரிய திட்டத்தோடும், இலக்கோடும் இதில் ஈடுபட்டிருக்க முடியாது. இக்குற்றவாளிகள் விலை உயர்ந்த காரில் அழைத்து வரப்பட்டு சரணடைய வைக்கப்பட்டு உள்ளனர். ஆகையால், இதன் பின்புலத்தில் இருக்கும் சாதிவெறிக் கும்பலையும், இந்த சாதிய, கொலைவெறி தாக்குதலை ஒருங்கிணைத்து இத்தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொடுத்து இதை செய்யத் தூண்டிய, இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சக்திகள் யார் என்றும், விரிவான புலனாய்வு செய்ய வேண்டும்.
உழைக்கும் மக்களை பொறுத்தவரை சாதி என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தியைப் போல செயல்படுகிறது. இதில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களின் குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கத்துப் பின்னணி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏழ்மை, வறுமை, படிப்பறிவின்மை ஆகியவற்றை பயன்படுத்தி இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சாதிரீதியாக அணிதிரட்டப்பட்டு இளம் வயதில் கூலிப்படையினராக மாற்றப்படுகின்றனர். சொந்த சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்களாலேயே இம்மக்கள் தங்கள் பிள்ளைகளை இழந்து பரிதவித்து நிற்கிறார்கள். இதனால் குடும்பத்தில் எஞ்சி இருப்பவர்களின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.
பெரும்பத்து பகுதியில் நடைபெற்ற இந்த சமூக பதற்றத்திற்கு அரசு நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம். கொலைவெறி தாக்குதல் நடந்த பின்னால், குற்றவாளிகளை கைது செய்வது, போலீசை குவிப்பது, நிவாரணம் என மேலோட்டமான செயல்பாடாகவே நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பின்னணியிலிருந்து தூண்டியவர்கள் யார் என்று விசாரித்து இதுவரை அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தங்கள் உறவுகள் ஏன் கொலை செய்யப்பட்டார்கள், தான் ஏன் வெட்டப்பட்டோம், மக்கள் மீது ஏன் இந்த தாக்குதல் நடந்தது என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. கைது, விசாரணை, சிறை என எய்தவனை விட்டுவிட்டு அம்பை மட்டும் பிடிக்கும் போலீசின் நடவடிக்கையால் குற்றங்களை தடுக்க முடியாது. குற்ற சம்பவங்களுக்கு பின்னால் ஓடத்தான் முடியும். இதைத்தான் அரசு நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறது. ஆகையால், இனிமேல் இது போன்று நடக்காது என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் தோன்றவில்லை.
குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை திருத்துவதற்கு நேர்மறையில் எந்த வழிமுறையும் அரசு நிர்வாகத்திடம் இல்லை. இதற்கான நடவடிக்கை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி என்ற பெயரில் போலீசின் கையிலேயே அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ், சாதிவெறியர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இளங்குற்றவாளிகள் மீது, தொடர்ச்சியாக மேலும் பல வழக்குகளை பதிவு செய்து, அவர்களை கூலிப்படையினராக மாறத் தூண்டுகிறது என பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த போலீசே பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்களே இது போன்ற இளங்குற்றவாளிகளை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகித்து, அடுத்தடுத்து குற்றங்கள் நடைபெறுவதற்கும் துணை போகிறார்கள். அரசு நிர்வாக கட்டமைப்பும் இந்த கண்ணோட்டத்துடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.
ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள், உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள், சாதிவெறியர்கள் பற்றி மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். மக்களை இணைத்துக் கொண்டு ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களை தடை செய்யவும், சாதிவெறியர்களை கைது செய்து தண்டிப்பதற்குமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும். சாதிய தாக்குதலுக்கு எதிரான உழைக்கும் மக்களின் ஒற்றுமையான போராட்டத்தின் வழியாக மட்டுமே மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.
பரிந்துரைகள் ;
- படுகொலை செய்யப்பட்ட ஜான் மார்க் மற்றும் திரிநாத் கட்டா ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் அரசு தலா 1 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும்.
- காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் கொடுக்கப்பட வேண்டும்.
- படுகாயமடைந்த கணேசன், நெல்சன் ஆகியவர்களுக்கு முழுவதும் குணமாகும் வரை உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- கிறித்தவ பறையர் என்பதை காரணம் காட்டி ஜானுக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து ஜான் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும், ஜானின் மனைவிக்கு சான்றிதழ் இல்லாததால் அரசு வேலை கொடுக்கப்படாமல் உள்ளது, சான்றிதழ் பெற்றுத் தருவதற்கு அல்லது மாற்று வழியின் மூலம் அவருக்கு அரசு வேலை வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- கூலிப்படையாகவும், சாதி வெறியர்களாகவும் செயல்படும் மறுகால்குறிச்சி சிவா, வான்முத்து, லெஃப்ட் முருகன், நெடுங்குளம் வான்முத்து, உள்ளிட்ட நாங்குநேரி பகுதியில் கலவரங்களை தூண்டிவிடும் சாதி வெறியர்கள் மீதும், கூலிப் படையினர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் சமூக பதற்றத்தை குறைக்க முடியும்.
- திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ச்சியாக சாதி வெறியாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் ஈடுபடும் சாதிவெறி, கூலிப்படை கும்பலான மணக்கரை பாயாசம் என்கிற பேச்சுமுத்து, நாங்குநேரி நவீன், ராக்கெட் ராஜா உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். எஸ்டேட் மணி, குமுளி ராஜ்குமார் உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
- பாஜக தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் குற்றவாளிகளை சரண்டர் செய்ததற்கு பின்புலமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கும் அவருக்குமான தொடர்பை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களையும், கட்சிகளையும், அவற்றில் ஊடுருவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய்ய வேண்டும்.
- நாங்குநேரி பகுதியில் விவசாயத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்கள், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
- திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் சாதி மோதல்களை களையும் நோக்கத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதி சிந்தனையுள்ள ஆசிரியர்களைக் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட வேண்டும். நாங்குநேரி, சேரன்மகாதேவி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் சாதி பிரச்சனைகளை தடுக்கும் வகையில் தனிக்கவனம் கொடுத்து செயல்படுத்த வேண்டும்.
- சாதி பெயர்கள், சாதி அடையாளங்களை அரசு அழித்து வருகிறது. ஆனால் நாங்குநேரி பகுதியில் செயல்படும் சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெயரில் சாதி பெயரை உடனே நீக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சாதிவெறியை தூண்டிவிடுகின்ற சமூக ஊடகப் பக்கங்களை தடை செய்ய வேண்டும்.
- சாதி வெறியர்களாலும், கூலிப்படையினராலும் தூண்டப்பட்டு பலியாகும் மாணவர்கள், இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி கவனம் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
- கஞ்சா, கூலிப் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் நடமாடுவதை தடுக்க வேண்டும். பெரும்பத்து, நாங்குநேரியில் இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும்.
- சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் செயல்படும் அரசு அதிகாரிகள், போலீஸ் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





