நாங்குநேரி பெரும்பத்து: ஒரு தேர்தல் புறக்கணிப்பின் ரத்தமும் கண்ணீரும்!

திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.

நேரடி அனுபவம்:

​நாங்குநேரி பெரும்பத்து கிராமத்திற்கு அரசு அளித்த உத்தரவாதங்கள் வெறும் வாய்ச்சாலத்துடன் நின்றுவிட்டன.

“தெருக்களில் மின்விளக்குகள் எரியும், பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமராக்கள் வரும், சோதனைச் சாவடிகளில் எந்நேரமும் காவலர்கள் இருப்பார்கள்” என அடுக்குமொழியில் வாக்குறுதி அளித்த அரசு நிர்வாகம், உடலை அடக்கம் செய்த பிறகு இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட இல்லை.

​எங்கள் ஊரின் பெயரை ஒரு பெயர்ப் பலகையில் கூட வைக்க விட மறுப்பது எவ்வளவு பெரிய வன்முறை? எங்கள் ஊரில் எங்களுக்குப் பிடித்தமான ஒரு பிளக்ஸ் (Flex) கூட வைக்க முடியாத நிலைமை நீடிக்கிறது.

திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.

​எங்கள் ஊர் மக்கள் வெளியூருக்கு வேலைக்குச் சென்றால், ஊர்ப் பெயரைச் சொல்ல அஞ்சுகிறோம். ஊர்ப் பெயரைச் சொன்னால், வேலை தரும் இடங்களில் எங்களைத் திருடர்களைப் போலப் பக்கத்திலேயே அமர்ந்து கண்காணிப்பார்கள். அந்தப் பார்வைக்குத் தெரியுமா நாங்களும் மனிதர்கள் தானே என்று!

​இந்த ஊரில் இருக்கும் பள்ளியில் நாங்கள் அனுபவித்த அதே சாதிய வலிகளையும் வேதனைகளையும் எங்கள் பிள்ளைகளும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக, 15 கி.மீ தள்ளி இருக்கும் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புகிறோம். அதற்குச் சரியான பேருந்து வசதிகூட இல்லை. வெளியே சொல்ல முடியாத இத்தனை துன்பங்களோடு எத்தனையோ கிராமங்கள் வலியுடன் கிடக்கின்றன.

“கர்ணன்” திரைப்படம் பழைய கதை போலத் தெரிந்தாலும், அதுதான் இன்று எங்கள் ஊரின் நடைமுறையாக இருக்கிறது. இந்த அரசே மக்களைச் சாதியாகப் பிரித்து வைத்திருக்கிறது.

​இந்தப் பகுதியில் வாக்கே இல்லாத, பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரையை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திய இந்த அரசு, மக்களிடையே பிளவை உண்டாக்கவே நினைத்தது.

நாடார் மற்றும் தலித் மக்களிடையே பகையை வளர்க்கப் போட்ட பல சதித் திட்டங்களில் இதுவும் ஒன்று.

பெரும்பத்து ஊரில் வாழாத ஒரு பெண்ணை வைத்து வாக்கு போடச் செய்து, அதன் மூலம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி ஊர்க்காரர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், ஊர் மக்கள் கோயில் மணியை அடித்து ஒன்று திரண்டு போலீசாருடன் விடாப்பிடியாகப் போராடி அந்தச் சதியை முறியடித்தனர்.

​சாதி வெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே சாதிக்குத் துணை போனால், நாங்கள் யாரிடம் நீதி கேட்பது? யாரிடம் பாதுகாப்பு தேடுவது? ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ “இந்த மக்களின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதைப் போலவே வெளிப்படையாகப் பேசுகின்றன.

​எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூடச் சொல்ல முடியாத மாவட்ட ஆட்சியர், ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு. இனிமேல் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்கத் தெருக்களில் கேமரா, மின்விளக்கு மற்றும் பாதுகாப்புக்காகச் சோதனைச் சாவடிகளில் காவலர்கள் என அடிப்படைத் தேவைகளையே கோருகிறோம்.

​தங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அரசு கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகத் தேர்தலைப் புறக்கணித்த மக்கள், கருப்புக் கொடியை ஏந்தி உள்ளனர். ஊர் சார்பாக வைத்த பேனரைக் கிழித்து, “உங்களுக்கு ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்; இந்த ஊரில் அரசு சலுகைகள் கிடைக்காது” என்று மிரட்டி, பத்துக்கும் மேற்பட்ட போலீசு வாகனங்களை ஊருக்குள் நிறுத்தி, அரசு நிர்வாகம் எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துகிறது.

​இதை எல்லாம் முறியடித்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர் இப்பகுதி மக்கள். போராட்டத்தின் மூலமாகவே ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.

​சாதி ஒடுக்குமுறைக்கும், அரசு ஒடுக்குமுறைக்கும் எதிராகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்போம்! களத்தில் இறங்குவோம்!

தோழர் தாளமுத்து செல்வா,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
9597494038

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க