காதலி கண்முன் காதலன்; மகள் கண்முன் தாய் – தொடரும் ஆணவப் படுகொலை பயங்கரங்கள்!

ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை அருகே கரடிகுளம் ஊரைச் சேர்ந்த இளைஞர் சஞ்சய் (வயது 18) சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் பக்கத்து ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த கனகலட்சுமியும் காதலித்து வந்தனர். இருவரும் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இக்காதலுக்கு பெண்ணின் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சஞ்சயின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17.05.2026 அன்று கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் போவதற்கு நண்பர்களுடன் சஞ்சய் தயாராக நின்று கொண்டிருந்தார். அப்போது கனகலட்சுமியிடம் நைச்சியமாகப் பேசிய கனகலட்சுமியின் தந்தை குமார், சிற்றப்பா மாரிமுத்து மற்றும் உறவினர் சங்கரநாராயணன் மூவரும் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்திற்கு கனகலட்சுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, “உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம் வா” என சஞ்சயை அழைத்துள்ளனர். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகப் புரிந்து கொண்டு சஞ்சய் வர மறுத்துள்ளார். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. குமார் தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் கொண்டு கனகலட்சுமி கண்முன்னே காதலன் சஞ்சையை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இதில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் உயிரிழந்துள்ளார். இதில் பெண்ணின் தந்தை குமார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணை சொத்துடைமைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது, ஆண்டபரம்பரை அழுக்கோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் சாதிவெறி, ஆணாதிக்க, பார்ப்பனிய அடிமை புத்தி ஆகியவற்றின் விளைவால் இந்த ஆணவப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கனகலட்சுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு செய்தி வருகிறது. தமிழ்நாடு அரசு கனகலட்சுமிக்கு மனநல ஆலோசனையும், உரிய பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.

அதேபோல், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வங்கியில் பணிபுரிந்த பெண் மேலாளர் முத்துமாலை (வயது 34). இவர் விவாகரத்து பெற்றவர். இவர் தன்னைவிட வயது குறைந்த ஒருவரிடம் பேசிப் பழகி வந்தது குறித்து சுற்றியிருந்த உறவினர்கள் கேலி பேசியதால், முத்துமாலையின் சகோதரர்கள் தன்னுடைய நண்பரை இணைத்துக் கொண்டு முத்துமாலையை அவரது சிறுவயது மகள் முன் வெட்டி சாய்த்தனர்.

அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கும் ஒரு பெண் யாருடன் பழக வேண்டும், தனக்குத் துணையாக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாத ஒரு சமூகச் சூழல் நிலவுகிறது. அவர் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் எந்த பார்ப்பனரும் அரிவாள் தீட்டிக் கொடுக்கவில்லை. எந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கியும் திட்டம் வகுத்துக் கொடுக்கவில்லை. ஆனால் இதன் பின்னே பார்ப்பனியம் – இந்துத்துவம், ஆணாதிக்கம், சாதி வெறி அனைத்தும் கலந்திருக்கிறது. இந்த சிந்தனையைப் பார்ப்பனியம் சமூகத்தில் புகுத்தியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் அதை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது.

ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க