
20.08.2026
புலிகள் காப்பகம் என்ற பெயரில் வருசநாடு சுற்றுவட்டார மக்களை
அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு –
தமிழ்நாடு த.வெ.க. அரசின் துரோகத்தனம்!
பத்திரிகைச் செய்தி
கடந்த 2021 ஆம் ஆண்டு, சிறீவில்லிபுத்தூரில் இருந்து கடமலைக் குண்டு வரை உள்ள மலைப்பகுதியை பாசிச பாஜக ஒன்றிய அரசு புலிகள் காப்பகமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, அங்கு நூறாண்டுகளாக வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு தொடர்புடையதாகும். இந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மே 29, 2026 ”அப்பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும்” என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
ஏனெனில், இந்த உத்தரவு பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும், அம்மக்களை அகதிகளாக மாற்றும் உத்தரவாகும்.
ஆக்கிரமிப்பு என்று கூறி, மக்களை அகற்றுவதற்கான தொடக்கக் கட்ட பணிகளை வனத்துறையும், ஒன்றிய அரசும் தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யக் கோரியும், மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரியும் கடந்த ஜூலை 26 அன்று, வருசநாடு மற்றும் கடமலைக்குண்டு ஒன்றிய பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் கடையடைப்பு மற்றும் வனத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்டு 15 அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு 19 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய தமிழ்நாடு அரசு, மக்களின் சார்பாக நின்று பேசவில்லை என்பது முக்கியமானது. மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும், மேலும் முழுமையாக அகற்றுவதற்கு கூடுதலாக 3 மாத அவகாசம் வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு த.வெ.க. அரசின் வாதம். இது வருசநாடு பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்யும் துரோகமாகும்.
அதேசமயம் உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை (அதாவது மக்களை) உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அதற்காக துணை இராணுவப்படையை அனுப்பத் தயார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதாவது, அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அடித்து நொறுக்கி, வெளியேற்றவும் தயார் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தங்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அம்மக்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆதரவுளிக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு வருசநாடு மக்களின் உணர்வுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நடந்து கொண்ட விதம் அம்மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகமாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் வருசநாடு சுற்றுவட்டார மக்களின் கோரிக்கைகளுக்கு மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து துணை நிற்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வருசநாடு சுற்றுவட்டார மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





