கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகு உலக பொருளாதாரமே நொறுங்கி விட்டதாக தான் முதலாளித்துவ பொருளாதார மேதைகள் கூறுகின்றனர். ஆனால் யாருடைய பொருளாதாரம்? கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்து விட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பல மடங்கு குவிந்துள்ளதே எப்படி?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.
மார்ச் 18-க்கு பிறகு அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 565 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாக வாசிங்டனை சேர்ந்த கொள்கைரீதியான ஆய்வுகள் மற்றும் கிலியர்வாட்டர் (Institute for Policy Studies and Clearwater-IPS) என்ற சிந்தனை குழாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அவர்களது செல்வம் 19 விழுக்காடு பெருகியுள்ளதா அதன் அறிக்கை கூறுகிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிற்கு மார்ச் 18 முன்பை விட 36.2 பில்லியன் டாலர் அதிகம் செல்வம் சேர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தான் 4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காரணமாக புனர்வாழ்விற்காக விண்ணப்பங்களை அளித்திருக்கின்றனர்.
4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்த போதிலும், கொரோனாவின் கோரம் உச்சத்தில் இருந்த போதிலும் நாஸ்டாக் (Nasdaq) குறியீடு என்றுமில்லா அளவில் உச்சத்தை அடைந்தது. அமெரிக்காவில் பணக்காரர்களின் இந்த திடீர் வளர்ச்சி என்பது அமெரிக்க மத்திய வங்கி எடுத்த திடீர் நடவடிக்கையினால் ஏற்பட்ட பங்கு சந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கொரோனாவினால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க வட்டி விகிதத்தை ஜீரோவாக குறைத்தது, ஆபத்தான முதலீடுகளாக இருந்தாலும் வரம்பற்ற அளவிற்கு பத்திரங்களை வாங்கி அதை பங்குகளாக மாற்றியது போன்ற நடவடிக்கைகளை மத்திய வங்கி எடுத்தது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் நேரடி தொடர்பிலிருக்கும் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.
நெருக்கடியின் போது அமேசானின் பங்குகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்துள்ளன. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இறக்கத்திலிருந்தாலும் அதிகபட்ச வருமான சாதனைகளை பேஸ்புக்கும் பதிவு செய்துள்ளது. பெசோஸைப் போலவே, மார்ச் 18 முதல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வத்தின் மதிப்பானது 30 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை IPS அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஃபோர்ப்ஸின் உலகளாவிய பணக்காரர்கள் ஆய்வறிக்கை தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை வந்த நாளும் அமெரிக்காவின் ஊரடங்கும் மார்ச் 18 ஆக இருப்பதால் அந்த தேதியிலிருந்து இந்த ஆய்வு நடந்தேறியிருக்கிறது.
கடந்த 3 மாதங்களில் டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லேரி பேஜ், முன்னால் மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்து மதிப்பானது 15 பில்லியனுக்கும் அதிகமாக ஏறியிருக்கிறது. ஜூம்(Zoom) நிறுவன தலைமை அதிகாரியான எரிக் யுவான் சொத்து மதிப்பும் 2.8 பில்லியன் அதிகரித்திருக்கிறது. வால்மார்டின் பங்குதாரர்களான வாட்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பும் சுமார் 3 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் தான் கிட்டதட்ட 2.85 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 2008 நெருக்கடியின் போது ஏற்பட்டதை விட இது அதிகம். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவில் வேலையிழப்பு 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு, வேலையிழப்பு, பட்டினி, உயிரிழப்புகள் உள்ளிட்ட நெருக்கடிகள் எளிய மக்களுக்கு தான் இவர்களுக்கல்ல.
ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டிருக்கும் கொரொனா உலக முதலாளிகளில் ஒருபகுதியினரையும் விட்டு வைக்கவில்லை. இதுவரையில்லாத அளவிற்கு 1,062 பணக்காரர்கள் சொத்து மதிப்பை இழந்துள்ளனர். அவர்களின் 267 பேர் பில்லியனர் தகுதியை இழந்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2019 -ல் 8.9 டிரில்லியனிலிருந்து 2020 -ல் 8 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொற்றுநோய் தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்டதால், உலகளாவிய பங்குச் சந்தைகள் வெடித்துச் சிதறின. எஞ்சியிருக்கும் பில்லியனர்களில், 51 சதவீதம் பேர் கடந்த ஆண்டை விட சற்று சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
கொரோனா நெருக்கடியில் குறைந்த விலை பொருள்களை விற்பனை செய்யும் சீன நிறுவனம் பிண்டுவோடுவின் நிறுவனரான கொலின் ஹுவாங் ஜெங் (Colin Huang Zheng) கடந்த இரண்டு மாதங்களில் அதிக சொத்து ஈட்டியவர்களில் ஒருவர். ஸ்பெயின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஜாராவின் முதலாளியும் இண்டிடெக்ஸ் இணை நிறுவனருமான அமன்சியோ ஒர்டேகா சற்றே இறக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.
அதே நேரத்தில் பெர்க்சயர் ஹாத்வே தலைமை நிர்வாக் அதிகாரி வாரன் ப்ஃபெட், உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மெக்சிகன் தொலைதொடர்பு வாணிபத் துறையில் பெருஞ்செல்வரான கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ஆகியோர் இந்த நான்கு மாத காலப்பகுதியில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தவர்கள்.
இந்திய நிலைமை :
ஏழை எளிய உழைக்கும் இந்திய மக்களை கொரொனா பாடாய்ப்படுத்தினாலும் இந்தியரான முகேஷ் அம்பானி உலகில் 8வது உலகப்பெருஞ்செல்வராகி இந்தியர்களுக்கு சற்றே பெருமையைத் தேடித்தந்துள்ளார்(!). அதாவது, கொரோனாவிற்கு முன்பு 9-வது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். ஏப்ரல் 22 முதல் பல்வேறு ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனெரல் அட்லாண்டிக் உள்ளிட்ட பெரும் உலகளாவிய முதலீட்டாளர்கள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்-ல் முதலீடு செய்துள்ளனர்.
உலகிலேயே தடுப்பூசி தயாரிப்பதில் முதலிடத்திலிருக்கும் சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உலகிலேயே அதிவேக வளர்ச்சி விகிதத்தில் 5-வது இடம் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 57 இடங்கள் முன்னேறி 86 வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தால் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தை 100 கோடி எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் விளைவுகள் என்ன?
உழைப்பில் ஈடுபடும் ஆகப்பெரும்பான்மையான மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் தவிக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சொத்துக்கள் மென்மேலும் சேர்வதென்பது சமூகப் பதட்டத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவதைக் கண்டு பொதுவில் அனைவரும் குறிப்பாக முதலாளித்துவ அறிஞர் பெருமக்களே கவலைப்படுகின்றனர். அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் நடந்த போரட்டங்கள் சமீபத்திய எடுத்துக்காட்டு. “உலகளாவிய தொற்றுநோய்களின் போது பெரும்பணக்கரர்களிடம் மென்மேலும் செல்வம் சேர்வது சமத்துவமற்ற தியாகத்தின் கோரமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான சக் காலின்ஸ் கூறுகிறார்.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மந்தநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் பாரதூரமான வீழ்ச்சி இந்தியப் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு இடையூறாகத் தெரியவில்லை. அதே சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்ட இந்திய உழைக்கும் வர்க்கம் ஆயிரக்கணக்கான மைல்கள் குறுக்கும் நெடுக்குமாக கால்கடுக்க நடந்து உள்ளங்கால் வெடித்து; வயிறு காய்ந்து மடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நேரடி உழைப்புச் சார்ந்த தொழில்கள் மண்ணோடு மண்ணாக, வெறும் ஊக வணிகத்தில் ஈடுபடும் சிலரிடம் மென்மேலும் செல்வத்தை சேர்த்தது தான் நவீன முதலாளித்துவத்தின் சாதனை.
நெய்வேலி என்.எல்.சி.யின் இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5 வது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு செல்லவிடாமல் என்.எல்.சி. நிர்வாகம் தங்களைத் தடுத்துவருவதாகவும், மின்உற்பத்தி நிலையத்திற்குள்ளேயே இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருக்கும் வாய்ப்பிருப்பதாகவும் குமுறுகிறார்கள், சக தொழிலாளர்கள்.
”பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுப் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது, கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது.” என்று பச்சையாக புளுகுகிறது, என்.எல்.சி. நிர்வாகம். காலாவதியாகிப்போன மின் நிலைய பாய்லர்களைப் புதுப்பிக்காமலேயே தொடர்ந்து இயக்கிவருவதே இந்த விபத்திற்கான காரணம் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், என்.எல்.சி. தொழிலாளர்கள்.
”வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் பாய்லர்கள் வெடித்ததாக நிர்வாகம் கூறுவது கேலிக்கூத்தாகும். வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்குவது தான் பாய்லரின் பணியாகும். அதைச் செய்ய இயலாத அளவுக்கு பாய்லர் பலவீனம் அடைந்த பின்பும், தொடர்ந்து இயக்கி விபத்தை ஏற்படுத்தியதற்கும், தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்ததற்கும், என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியமே முழுவதும் காரணமாகும்.” எனக் கண்டித்திருக்கிறது, ஏஐடியூசி தொழிற்சங்கம்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட விபத்து அல்ல; நிர்வாகத்தின் கவனக்குறைவு மட்டுமே காரணமும் அல்ல. என்.எல்.சி. நிர்வாகம் நடத்திய படுகொலை என்று சொல்வதற்குரிய எல்லாவிதமான முகாந்திரங்களும் இருக்கவே செய்கின்றன.
கடந்த இரண்டு மாதத்தில் நடைபெற்றுள்ள மூன்றாவது விபத்து இது. இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் கடந்த மே-7 அன்று நடைபெற்ற விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டுநாள் இடைவெளியில் மே- 9 அன்று நடைபெற்ற விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழக்க மற்றொரு தொழிலாளி ஒருவரின் கண் பார்வை பறிபோயிருக்கிறது. இந்த மூன்று விபத்துக்களும் இரண்டாவது அனமில்மின் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கிறது என்பதிலிருந்தே, தொழிலாளர்களின் உயிர் பறிபோவது குறித்த கவலை என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கடுகளவும் இல்லையென்பதை உணர்த்துகின்றன.
இவ்வளவுக்குப் பின்னரும், இதனை தனிநபரின் அலட்சியத்தால் நேர்ந்துவிட்ட விபத்து என்பதைப்போல, அமுக்கப் பார்க்கிறது என்.எல்.சி. நிர்வாகம். விபத்து நடைபெற்ற இரண்டாவது அனல்மின் நிலையத்தின் முதன்மை மேலாளர் கோதண்டம் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, ஓய்வுபெற்ற தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது என்.எல்.சி. நிர்வாகம்.
”இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்” என்ற ஆணவமும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
முப்பது ஆண்டுகள் பழமையான தொழில்நுட்ப ரீதியிலும் காலாவதியாகிப்போன அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க அனுமதித்ததும்; ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகளை முறையாகச் செய்யமால் புறக்கணித்ததுமே இவ்விபத்திற்கான பிரதான காரணம் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், தொழிலாளர்கள்.
அதிலும் குறிப்பாக, உலகிற்கே பாய்லர்களை சப்ளை செய்துவரும் பாய்லர் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை ஒப்படைக்காமல், போதிய அனுபவமே இல்லாத தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.
அனல்மின்நிலையத்தின் நேரடி உற்பத்தி சார்ந்த பல்வேறு பணிகளும்கூட ஒப்பந்த அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களோ, போதிய பயிற்சியும் முன் அனுபவமும் இல்லாத தொழிலாளர்களை குறிப்பாக வடமாநிலத் தொழிலாளர்களை போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், அபாயம் மிகுந்த வேலைகளில் அவர்களை ஈடுபட கட்டாயப்படப்படுத்துகின்றன.
இவையெல்லாம், கவனக்குறைவோ, ஒப்பந்தங்களை முடிவெடுக்கும் அதிகாரங்களை கொண்ட உயரதிகாரிகளின் ஊழல் சம்பந்தபட்ட பிரச்சினையோ மட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்ட சூழலிலும், காலாவதியான அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க உத்தரவிட்ட என்.எல்.சி.யின் உயர்மட்ட அதிகாரிகள்; இதனைக் கண்காணித்து முறைபடுத்தத் தவறிய சம்பந்தபட்ட அரசுத்துறை அதிகாரிகள்; தொழிலாளர்களை பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தத்தவறிய – ஒப்பந்தத்தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யே மீறி செயல்படுவதற்குத் துணைபோன தொழிலாளர்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரையும் இப்படுகொலையில் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும்.
இவைபோன்று, என்.எல்.சி.யில் என்னவெல்லாம் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதையும் இதுவரை தனியார் நிறுவனங்களுடன் என்.எல்.சி. போட்டுக்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இவை உள்ளிட்டு, தொடர்விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து ஆராய, சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக, இந்த விபத்தில் உயிரிழந்துள்ள தொழிலாளர்கள் 6 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். என்.எல்.சி.யில் பணியாற்றும் தொழிலாளர்களுள் சரிபாதிக்கும் மேலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். பணிநிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடிவரும் இவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்.எல்.சி. நிர்வாகம். ஒப்பந்தத்தொழிலாளர்களை பிரதான உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டவரையறைகளையெல்லாம் மீறி அவர்களை அப்பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அபாயம் நிறைந்த பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆகப்பெரும்பான்மையோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான்.
ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட, கூடுதலாக சில உரிமைகளையும், கூடுதலான சம்பளமும் பெற்றிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி நிரந்தரத் தொழிலாளர்களின் நிலையும் சற்றேறக்குறைய ஒன்றுதான். சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக்கூட பல ஆண்டுகளாக போடாமல் அடாவடி செய்வது உள்ளிட்டு நிரந்தரத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறது என்.எல்.சி. நிர்வாகம்.
கொள்ளைவிலை அடிப்படையில் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை அரசுக்கு விற்றுவரும் நிலையில், அவற்றோடு ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமான விலையில் மின்உற்பத்தியை நடத்திவரும் நிறுவனம் என்.எல்.சி. ஆண்டிற்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டித்தரும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று என்.எல்.சி. இந்தப் பெருமைகளுக்குப் பின்னே, எவ்வித உரிமைகளுமற்ற அத்துக்கூலிகளைப்போல மாடாய் உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உதிரம் சிந்தா உழைப்புச் சுரண்டலும், உதிரம் சிந்தும் உயிரிழப்புகளும்தான் அடிநாதமாய் அமைந்திருக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருபவர்கள் என்பது மட்டுமல்ல; இவர்களுள் பெரும்பாலோனார் என்.எல்.சி. சுரங்கத்திற்காக தங்களது விவசாய நிலங்களையும் வீடு உடமைகளையும் பறிகொடுத்தவர்கள். வயிற்றுப்பாட்டுக்காக எஞ்சிய உயிரையும் பறிகொடுக்கத் துணிந்த துர்பாக்கியசாலிகளும்கூட.
”அரசின் பொதுத்துறை நிறுவனத்திலேயே, தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பும் இல்லை; உயிருக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை” என்பதுதான் சமூக யதார்த்தம் என்றிருக்கும் இச்சூழலில், குறிப்பாக கொரோனா ஊரடங்கு நிலையைக்காட்டி தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் மோடி அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல அவர்களின் உயிரையும் காவு வாங்கக்கூடியது என்பதற்கு என்.எல்.சி.யே இரத்த சாட்சி.
உலக அளவில் கண்டனத்திற்கு உள்ளான சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலையில் இது நாள்வரை கொலைகார போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு SI கைது.
இந்த சாத்தான்குளம் இரட்டை படுகொலையில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் பொறுப்பற்ற, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.
பொதுவாக குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் அடைக்க போலீசார் தாக்கல் செய்யும் விண்ணப்பத்தை, மாஜிஸ்டிரேட்கள், நீதிபதிக்கான பொறுப்பை உணர்ந்து தகுந்த விசாரணை செய்யாமல் இயந்திரத்தனமாகவும்,
தொடை நடுங்கித்தனமாகவும் சிறையில் அடைக்க உத்தரவிடுகின்றனர்.
அநீதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அநீதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து முன் நிறுத்தும்போது கூட மாஜிஸ்திரேட்டுகள் போலீசிடம் ஏன், எதற்கு என்று கூட கேட்பதில்லை.
(டாஸ்மாக் கடைக்கு எதிரான, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான, கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான, …….போராட்டங்கள்)
மேலும் ஒரு பொய் வழக்கு அல்லது சட்ட விரோத கைது நடக்கும்போது போலீசு, அரசு மருத்துவர், மாஜிஸ்டிரேட், சிறை அதிகாரிகள் ஆகியோர் போலீசுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர், இதை ஒரு அயோக்கியதனமான கூட்டணி என்றே கூற வேண்டும்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் இந்த அயோக்கியத்தனமான கூட்டணி எத்தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அம்பலமாக்கியிருக்கிறது.
மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசு துறை, நீதித்திறை மக்கள் விரோத இயந்திரமாக மாறிப்போயிருக்கின்றது. குற்றவியல் நீதிமன்றத்தை பொறுத்தவரை
போலீசு – குற்றம் சாட்டப்பட்டவர்(accused), இருவருமே நீதிமன்றத்திற்கு இரு தரப்பினர். போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கினை முழுமையாக விசாரணை செய்து நீதி வழங்கும் பொறுப்பு நீதிபதியுடையது.
நீதிபதி இரு தரப்பினர்களிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நீதிபதிகள் போலீசை நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக நினைத்து கொள்கின்றனர், தங்கள் சொந்த தேவைக்கு போலீசை பயன்படுத்தி கொள்கின்றனர், இது முறை கேடு இல்லையா?
நீதிபதிகள் தங்கள் சொந்த (personal) வேலையாக செல்லும் இடங்களுக்கு, செல்லும் முன்பே போலீசு மூலம் தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்வது, தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தங்கள் உறவினர்களுக்கு தேவையானவற்றை போலீசு மூலம் செய்து கொடுப்பது, தங்களுக்கான சின்ன சின்ன தேவைகளுக்கு கூட (சினிமா தியேட்டர் டிக்கெட், கடைகளில் விலை குறைத்து பொருள் வாங்குவதற்கு…), எந்தெந்த ஊரில் எந்தெந்த பொருள் special என்பதை போலீஸ் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டு அதை அவர்கள் மூலம் வாங்கி வர செய்வது, ( பணம் கொடுத்தே வாங்கினாலும்)
பண்டிகை நாட்களில் போலீசார் கொடுக்கும் பரிசுப்பொருட்களை கூச்சமின்றி பெற்றுக்கொள்வது, இவை அனைத்துமே போலீசு நீதிபதிக்கு கொடுக்கும் இலஞ்சம் இல்லையா, இவற்றை நீதிபதி பெற்றுக்கொள்வது இலஞ்சம், முறைகேடு இல்லையா? நேரடியாக வழக்கிற்காக பணம் பெற்றுக்கொள்வது மட்டும் தான் இலஞ்சமா?
போலீசு, நீதிபதிகளுக்கு ஏன் இவற்றை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்? தங்களுடைய முறைகேடுகளையும், அராஜகங்களையும் நீதிபதி கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காத்தானே! ( குறிப்பாக காவல் நிலையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு செய்யும் அதிகாரம் உள்பட மாஜிஸ்திரேட்டிக்கு உண்டு)
இதன் விளைவுதான் சட்ட விரோத சாத்தான்குளம் ரிமாண்ட், ஜெயராஜ், பென்னிக்ஸ் ரிமாண்ட் முறையாக விசாரிக்கப்பட்டு செய்யப்பட்டிருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் பிழைத்திருப்பார்கள்.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி ரிமாண்ட் செய்ய வேண்டிய நிலை மாஜிஸ்ட்திரேட்டுக்கு ஏற்பட காரணம், இப்படி இவர்கள் போலீசிடம் பெற்றுக்கொள்ளும் இலஞ்சத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இப்படி தங்களிடம் இலஞ்சம் வாங்கும் நீதிபதிகளை பார்த்து பழகிய போலீசு, தனது பணியை முறையாக செய்யும் ஒரு நீதிபதியை பார்த்து “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா…” என்று கூறியதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
தன்னுடைய செயலுக்கு எதிராக இருக்கும் எவர் ஒருவரையும் சமயம் பார்த்து பழி தீர்ப்பது போலீசின் இயல்பு, இந்த விதிக்கு நீதிபதிகள் விதிவிலக்கா என்ன? போலீசை தன் சொந்த நலனுக்கு பயன்படுத்தாத, நேர்மையான நீதிபதிகள் எதிர்கொள்வார்கள்! நேர்மையற்ற நீதிபதிகள் போலீசின் கூட்டாளியாவார்கள்!
மேலும் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதிகள் திரு. ஹரிபரந்தாமன் மற்றும் திரு. சந்துரு ஆகியோர் கூறியுள்ள நிலையில் இந்த இரட்டை படுகொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர் நீதிமன்றம் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டை பற்றி வாய் திறக்கவில்லை. (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலஞ்சம் வாங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க போராடிய மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழக வக்கீல்கள் மீது சிஸ்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு தொழில் தடை விதிக்கப்பட்டது)
இருவரின் கொலைக்கும் துணை போன சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அதற்கான தண்டனையை பெற வேண்டாமா? அதை பொதுமக்கள் அறிய வேண்டாமா?
சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் மீது வெளிப்படையாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
நீதிபதிகளின் நடவடிக்கைகள் பொதுமக்களால் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டும்! விமர்சிப்பதை தடுக்க நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டகூடாது!
நீதிபதிகள் பொது மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்!
போலீசு மூலம் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நீதிபதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!
சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட சட்டமியற்ற வேண்டும்!
இதற்காக வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து குரலெழுப்புவோம்! போராடுவோம்.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன எல்லைப் படையினருக்கு இடையே நடந்த மோதலை ஒட்டி, சீனாவை மையமாகக் கொண்ட டிக்டொக் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு. இது சீனாவுக்கு எதிரான இந்திய எச்சரிக்கை என்றும் சீனா எதிர்பார்க்காத விதத்தில் இந்தியா நடத்திய தாக்குதல் என்றும் ‘தேசபக்தர்கள்’ விதந்தோதுகின்றனர். பல ஊடகங்கள், இந்தியா சீனா போர் வந்தால், இந்தியாவுடன் அமெரிக்கா நிற்கும் என்றும் வரைபடத்தோடு விளக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய இந்திய சீன எல்லைத் தகராறின் பின்னணி என்ன என்பதை வரலாற்றுரீதியில் பார்க்கலாம்.
கடந்த ஜூன் 15 அன்று லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மோதலில் சீன இராணுவத் தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவருகின்றன. ஆனாலும் இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
சீன இராணுவத்தினர் மூன்று இடங்களில் எல்லையை தாண்டி வந்ததாகவும், அங்கு கூடாரங்களையும், பாதுகாப்புச் சாவடிகளையும் அமைத்ததாகவும் வெளியேறும்படி பலமுறை கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும், அதனால்தான் கற்கள் மற்றும் கைகளால் தாக்குவது என்ற வகையில் மோதல் ஏற்பட்டது என்று இந்திய அரசு கூறுகிறது.
இது குறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சுவார்த்தைக்காக அந்தப் பகுதியில் இருந்த சீன இராணுவத்தினர் மீது எல்லை விவகாரத்தில் இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி இந்திய இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியதே இந்த மோதலுக்கான காரணம் என்று தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான அனுராக் ஸ்ரீவத்சவா பேசுகையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு குறித்த சீனத் தரப்பின் வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார். மேலும் இந்தியத் துருப்புகள் “உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை” (LAC) தாண்டவில்லை என்றும் அந்தப் பகுதியில் அதிக நேரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார். மேலும் இந்தியாவின் வழக்கமான பாரம்பரிய ரோந்து வழிமுறையை சீனா தடுத்ததன் காரணமாகவே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மோசமான இந்த மோதல் சம்பவம் நடந்த பின்னர் பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைக்குரிய பகுதியிலிருந்து இருதரப்பினரும் படைவிலக்கம் செய்வது என்று இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டது.
அமைச்சகம் மற்றும் தூதரக அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது கடந்த 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ நமது எல்லைக்குள் யாரும் ஊடுறுவவும் இல்லை, தற்போது அங்கு வேறு யாரும் இருக்கவோ நமது நிலைகளைக் கைப்பற்றவோ இல்லை” என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களை முன் வைத்து கடந்த 15 நாட்களாக, வட இந்திய ஊடகங்கள், இந்திய – சீன மோதல் குறித்த விவாதங்கள், நேர்காணல்கள், கருத்துரைகள் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த மோதலின் பின்னணி என்ன என்பது குறித்தும் சீனா இந்திய நிலப்பரப்புகளை ஆக்கிரமித்ததா இல்லையா என்பது குறித்தும் முன்னாள் இராணுவ அதிகாரிகள், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் உள்ளிட்டு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட இரண்டு அரசுகளும் நேர்மையாக செய்தி வெளியிட்டால் மட்டுமே இந்திய – சீன எல்லையில் உண்மையில் நடந்ததென்ன என்பது தெரியவரும்.
இந்த சம்பவம் குறித்து ப்ளாணட் லேப்ஸ் (Planet Labs) மற்றும் மாக்சார் (Maxar) ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செயற்கைக் கோள் படங்கள், தற்போது மோதல் நடந்த பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பே சீனக் கட்டுமானங்கள் மற்றும் வாகனங்களின் இருப்பை உறுதி செய்கின்றன. எனில் அந்த இடத்தை சில மாதங்களுக்கு முன்னரே சீனா கைப்பற்றியிருக்க வேண்டும் அல்லது “நமது எல்லைக்குள் சீனா நுழையவில்லை” என்ற மோடியின் கூற்றுப்படி பார்த்தால் சீனக் கட்டுமானங்கள் இருக்குமிடம் சீனாவினுடையதாக இருக்க வேண்டும்.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே சில பல மோதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக மே இரண்டாம் வாரத்தில் கிட்டத்தட்ட 150 சீன – இந்திய இராணுவத்தினர் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.
சீன இராணுவத்தின் எல்லை அத்துமீறல்கள் இந்த மோதல் சம்பவத்தில் மட்டும் நடைபெற்ற விசயம் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி 2020-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 170 முறை சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. இதில் லடாக் பகுதியில் மட்டும் சுமார் 130 முறை அத்துமீறி நுழைந்துள்ளது. மோடி ஜிங்பிங்-ஐ மாமல்லபுரத்தில் சந்தித்த 2019-ம் ஆண்டிலும் இதே போன்ற அத்துமீறல்கள் லடாக் பகுதியில் அதிகரித்துள்ளன. அதாவது, 2018-ம் ஆண்டில் 284-ஆக இருந்த அத்துமீறல்கலின் எண்ணிக்கை, 2019-ல் 497-ஆக அதிகரித்துள்ளது (75% அதிகரிப்பு). அப்போதும் மோடி அரசு சீனாவுடன் நல்லுறவையே பேணி வந்துள்ளது. மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை வரவழைத்து மோடி விருந்து வைத்தார்.
இங்கு இந்திய தரப்பில் ‘சீன அத்துமீறல்’ எனப்படுவது, இந்தியா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் (LAC) தாண்டி சீன இராணுவத்தினர் வருவதையே குறிப்பிடுகிறது. இந்தியா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை சீனாவும், சீனா குறிப்பிடும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதில்லை.
அதனால்தான் இந்தியப் படையினருக்கும் சீனப் படையினருக்கும் இந்த எல்லைகளில் தொடர்ச்சியான அத்துமீறல்களும் மோதல்களும் நடக்கின்றன. இதுவே இந்தியா பாகிஸ்தானைப் பொருத்தவரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா இந்தியா மத்தியில் இதுவரை இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்பது எதுவும் வரையறுக்கப்படவில்லை.
இந்திய சீன எல்லைத் தகராறின் வரலாறு :
இப்படி தெளிவான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சீன – இந்திய எல்லையில் வரையறுக்கப்படாததற்கான காரணம் வரலாற்றுரீதியானது. இதன் அடிப்படை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய ஆளும்வர்க்கத்திற்கு 1947-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அதிகார மாற்றத்திலிருந்தே ( ‘சுதந்திரத்திலிருந்தே’ ) தொடங்குகிறது. அதிகார மாற்றம் நடந்த பின்னர், இந்திய தரகு முதலாளிகளின் கனவுகளைப் பிரதிபலிக்கும் முகமாகவே நேரு இருந்தார்.
அகண்ட பாரதம் என்பது வெறுமனே ஆர்.எஸ்.எஸ்.-ன் கனவு மட்டுமல்ல. காங்கிரசின் கனவாகவும் இருந்தது. குறிப்பாக 1947 அதிகார மாற்றம் நடந்த சமயத்தில் இந்தியாவிற்கு அருகாமை நாடுகளான நேபாளம், காஷ்மீர், பூட்டான், தற்போதைய வடகிழக்கு மாநிலங்கள், மியான்மர், வங்கதேசம், திபெத் ஆகியவற்றை ‘இந்தியாவாக்க’ பெரும் அவா கொண்டிருந்தது இந்திய ஆளும்வர்க்கம்.
அதன் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட இந்திய வரைபடத்தின் எல்லைகளை தன்னிச்சையாக மாற்றியமைத்தது முதல், சீனாவுடனான எல்லைக் கோடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் நேரு தவிர்த்தது, திபெத்தில் சீனாவுக்கு எதிராக கலகம் உண்டாக்க அமெரிக்காவிற்குத் துணைபுரிந்தது, சீனாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு போரில் ஈடுபட்டது, அதில் படுதோல்வியைத் தழுவியது என ஒரு பெரும் வரலாறு நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.
1962 போருக்குப் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்கள் மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் நலன்களும் குடி கொண்டிருந்தன. அவையே அந்தப் போரை பின் நின்று இயக்கின.
பனிப்போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, ரசிய நாடுகளுக்கு இடையிலான அந்தப் பொதுவான ‘நலன்’ குறித்தும், இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன் குறித்தும் போரில் அவை ஆற்றிய பங்கு குறித்தும் தமது “இமாலய சாகசம்”எனும் நூலில் ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார் தோழர் சுனிதி குமார் கோஷ். நாடுகளுக்கு இடையே அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்ட கடிதங்கள், நேரு, படேல் உள்ளிட்டோர் எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் படிப்பது வரலாற்றிரீதியாக இந்திய சீன எல்லைப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள உதவும். (“இமாலய சாகசம்” மின்னூலை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்)
1962-ம் ஆண்டு இருந்த நிலைமைகள் வேறு; 2020-ல் தற்போது இருக்கும் நிலைமைகள் வேறு. அன்று இருந்தது மாவோவின் கம்யூனிச சீனா. ஆனால் இன்று இருப்பதோ இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனது விரிவாக்கக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சீனா. ஒரு ஏகாதிபத்தியமாக வளர்வதற்கான முயற்சியில் அது இருக்கிறது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு 1990-களில் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் மூலம் தனது வல்லாதிக்கத்தை இராணுவரீதியாகவும், ஐ.எம்.எஃப், உலகவங்கி ஆகியவற்றின் மூலம் பொருளாதாரரீதியாகவும் தக்க வைத்துக் கொண்டது அமெரிக்கா.
மாவோவிற்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவப் பாதையை நோக்கிச் சரிந்த சீனா, அங்கிருந்த சோசலிசக் கட்டமைப்பையும், சீன மக்களின் அயராத உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு படுவேகமாக பொருளாதாரத்திலும், இராணுவரீதியிலும் வளர்ந்தது.
பெருவீத உற்பத்திக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்ட அதன் உட்கட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உற்பத்திப் பின்னிலமாக சீனாவை உருவாக்கியது. மிகக் குறைந்த விலையில் அங்கு கிடைக்கப்பெறும் உழைப்புச் சக்தி, அமெரிக்க முதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்யும் அட்சய பாத்திரமாக விளங்கியது. இதன் காரணமாக உலகளாவிய உற்பத்திச் சங்கிலியில், சீனா ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்தது.
சீனாவை முடக்க இந்தியாவை பகடைக்காயாக்கும் அமெரிக்கா :
சீனாவின் இந்த வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் தனது அடியாளாக இந்தியாவை நிலைநிறுத்துவத்ற்கு இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களைப் போட்டது அமெரிக்கா.
குறிப்பாக, அமெரிக்காவுடன் 2015-ம் ஆண்டு போடப்பட்ட டில்லி நட்புறவு அறைகூவல் ஒப்பந்தம், மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்களையும் ஆதிக்கத்தையும் அங்கீகரித்து அவர்களுடன் இணைந்து செயல்படும் ஒப்பந்தங்களாகிய LEMOA – 2016, CCSA-2018 ஆகியவை கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் இறையாண்மையை அழித்து இந்தியாவை வெளியுறவுரீதியில் அமெரிக்காவின் தொங்குசதையாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டவைகளாகும்.
அடுத்ததாக BECA (Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial Cooperation) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தயாராக உள்ளது. இது குடிமக்களையும், இராணுவரீதியில் முக்கியமுள்ள இடங்களையும் விண்வெளி, செயற்கைக் கோள் மூலம் துல்லியமாகக் கண்காணிப்பது மற்றும் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமாகும்.
சீனாவின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் தமது அடியாட்களை வைத்து தென் சீனக் கடலிலும் – இந்தோ – பசிபிக் கடல் பகுதியிலும் சீனாவை முடக்கும் வகையில், க்வாட் (QUAD) எனும் நான்கு நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இந்த நான்கு நாடுகளும் கூட்டாக இராணுவப் பயிற்சி மேற்கொள்வது – தென் சீனக் கடற்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவதற்கான திட்டமாகும்.
தற்போது நடந்த இந்த எல்லை மோதலை கையில் எடுத்துக் கொண்டு அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி விடும் வேலையைத் துவக்கியிருக்கிறது.
அமெரிக்க அரசுச் செயலர் மைக் பாம்பியோ நேரடியாக சீனாவைக் குற்றம் சாட்டியுள்ளார். கோப்பன்ஹெகன் ஜனநாயக மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசுகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஹாங்காங், சிங்ஜியாங், திபெத் ஆகிய பகுதிகளில் செய்து வந்த ஒடுக்குமுறையை இந்தியாவிலும் செய்திருப்பதாகக் கூறீயுள்ளார். மேலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன இராணுவமும் அருகாமை நாடுகளுடன் ரவுடித்தனமாக நடந்து கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜூன் 25 அன்று ப்ரூசெல்ஸ் மாநாட்டில் பேசுகையில் ஐரோப்பாவில் இருந்து 25,000 துருப்புகளை ஆசியாவுக்கு நகர்த்த இந்த வாய்ப்பை தாம் பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அதாவது, இந்தியா போர் தொடுத்தால் (தொடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்) அமெரிக்கா ஆதரவளிப்பதாக சூக்குமமாகத் தெரிவித்துள்ளார். தனது உடனடியான அரசியல் இலக்குகளுக்கான பகடைக்காயாக இந்தியாவைப் பயன்படுத்த நினைக்கிறது அமெரிக்கா. அதன் மூலம் சீனா மீதான தமது பிடி இறுகியிருப்பதை அமெரிக்க மக்களிடம் காட்டி சரிந்த தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள நினைக்கிறது அமெரிக்க அரசு.
***
ஆசியாவில் அதிகரிக்கும் சீன மேலாதிக்கமும் இந்தியாவின் நிலையும் :
அமெரிக்காவுடனான தனது வர்த்தகப் போட்டியில், தனது பொருளாதார மற்றும் அரசியல்ரீதீயிலான மேலாதிக்கத்தை ஆசியாவில் நிலைநாட்டிக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்துவருகிறது சீன அரசு. அதன் ஒரு பகுதியாகவே, தனது வர்த்தகரீதியான கனவுத் திட்டமான “மண்டல மற்றும் சாலை முனைப்புத் திட்டத்தை” (Belt and Road Intiative) தொடங்கியிருக்கிறது. இந்த சாலைப் போக்குவரத்துத் திட்டம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஷ்மீர் பகுதியான அக்ஷாய் சின் வழியாகவே கடக்கிறது.
இந்நிலையில் காஷ்மீரின் பிரிவு 370 சிறப்புத் தகுதியை நீக்கிவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரையும் (POK), சீன ஆக்கிரமிப்பு அக்ஷாய்சின்னையும் மீட்போம் என நாடாளுமன்றத்தில் அமித்ஷா சவடால் விட்டது சீனாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அச்சமயத்தில் தூதரகரீதியாக கண்டித்துள்ளது சீனா.
முந்தைய ஆண்டுகளைக்காட்டிலும் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில், லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதை வைத்துப் பார்க்கையில், சீனா அக்ஷாய் சின் பற்றிய அமித்ஷாவின் சவடாலையும், இந்தியாவின் அமெரிக்கச் சாய்வையும் தனது வர்த்தகப் போக்குவரத்துத் திட்டமான “மண்டல மற்றும் சாலை முனைப்புத் திட்டத்திற்கான” அச்சுறுத்தலாகக் கருதுவதாகவே அனுமானிக்க முடிகிறது. அதனால்தான் மோதலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளின்படி படைகளைப் பின்வாங்கிய பிறகும் கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது சீனா.
ஆனால் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சீன இராணுவம் வந்திருப்பதாக செயற்கைக்கோள் ஆதாரங்களும், இந்திய அமைச்சகங்களுமே கூறினாலும், நமது 56 இன்ச் பிரதமர் நரேந்திர மோடியும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பாஜக அமைச்சருமான வி.கே.சிங், “யாரும் நம் இடத்திற்குள் ஊடுறுவவில்லை” என்று பேசியிருக்கிறார்கள். இதுதான் மோடி அரசின் நிலை.
மோடி – அமித்ஷாவின் கவலை எல்லாம், பீகார் தேர்தல் வரவிருக்கும் சூழலில் எல்லையில் ஏற்பட்ட இந்த மோதலையும் உயிரிழப்புகளையும் தமக்கு எப்படிச் சாதகமாக்கிக் கொள்வது என்பதுதான். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கவலையும் அதுதான்.
ஒருபுறத்தில், மோடி அரசு 59 சீனச் செயலிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டதன் மூலம் சீனாவிற்குத் தனது சந்தையின் மதிப்பை உணர்த்தியுள்ளதாகவும் இது சீனாவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றும் அனைத்து ‘தேசிய’ ஊடகங்களும் பஜனை பாடுகின்றன.
மறுபுறத்தில் மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டதாகக் கூறி, எல்லையில் பெரும்பகுதியை சீனாவிடம் மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் எல்லையை முறையாகக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
இதற்குப் பதிலடியாக, சீன தூதரகத்திலிருந்து 3,00,000 அமெரிக்க டாலர் பணத்தை ராஜீவ்காந்தி ட்ரஸ்ட் மூலம் காங்கிரஸ் பெற்றதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா. காங்கிரஸ் ஆட்சியில் சீனாவுக்கான அனுமதிக்கப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவை 33 முறை காங்கிரஸ் உயர்த்தியதாக குற்றம்சாட்டுகிறார் பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
இராணுவத்தினரின் உயிரிழப்பைப் பயன்படுத்தி தேசிய வெறியைத் தூண்டி அதை தமக்குச் சாதகமான வகையில் வாக்குகளாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவும் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினார்களே தவிர, எல்லையில் ‘அத்துமீறிய’ சீனாவின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இருதரப்பும் வாய் திறக்கவில்லை.
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிய சங்க பரிவாரத்தினர், வீட்டில் உள்ள பழைய சீனப் பொருட்களையும் போன்களையும் உடைப்பதில் மும்முரம் காட்டினரே தவிர சீனாவிலிருந்து இறக்குமதியை தடை செய்யக் கூறி மோடியிடம் மனு கூட கொடுக்கவில்லை.
“பொதுவாகவே பாகிஸ்தான் எல்லையில் சிறு அசம்பாவிதம் நடந்தாலும், ’சவுண்டு’ விடும் மோடி, இப்போது ஏன் அமைதி காக்கிறார். போர் கூட நடத்த வேண்டாம். ஒரு பொருளாதாரத் தடையாவது விதிக்கலாமே?” என்பதுதான் தற்போது அப்பாவி ‘தேசபக்தர்களின்’ மனதை உறுத்திக் கொண்டிருக்கும் புதிர்.
அமெரிக்கா தன்னைவிட இளைத்த நாடுகளை தனது இராணுவ பலத்தின் மூலம் அடித்துப் பிடுங்கி தனது முதலாளிகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பிராந்திய ரீதியில் தனக்கு அடியாளாக வேலை செய்வதற்கு என பல்வேறு நாடுகளை உருவாக்கி, ஒவ்வொரு பிராந்தியத்தையும் போர் அச்சுறுத்தலில் இருத்தி வைத்திருக்கிறது. இதன் மூலமாக ஆயுத விற்பனையிலும் பெரும் ஆதாயம் ஈட்டு வருகிறது. எனவே அமெரிக்க முதலாளிகளுக்கு போர் அவசியமாக இருக்கிறது.
இந்தியத் தரகு முதலாளிகளோ மலிவான விலையில் கிடைக்கும் மூலப் பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் சீனாவை பெருமளவில் சார்ந்து நிற்கிறார்கள். எனவே இன்றைய சூழலில் இந்திய முதலாளிகளுக்கு போர் அபாயகரமானது.
தற்போது எல்லையில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து, சில இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்துள்ளன. இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் சீனப் பொருட்களை சுங்கச்சாவடியில் சோதனை முடித்து வெளியேற்றுவதை தாமதப்படுத்தியிருக்கின்றனர் சுங்கத் துறையினர் . இதற்குப் பதிலடியாக சீனாவும் தங்கள் நாட்டுக்கு உள்ளே வரும் இந்தியப் பொருட்களுக்கு சுங்கச் சாவடியில் கெடுபிடிகளை துவங்கியிருக்கிறது. டிக்டொக் உள்ளிட்ட செயலிகளுக்கு அனுமதி மறுப்பதை மட்டும் நேரடியாக செய்துவிட்டு, இது போன்ற வேலைகளையும் அனுமதித்துள்ளது மோடி அரசு
இந்திய சுங்கச்சாவடிகளில் சீனப் பொருட்கள் முடக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே, தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் சுங்கச் சாவடிகளில் உள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என்று இந்திய முதலாளிகள் கோரிக்கை வைக்கத் துவங்கிவிட்டனர். இதுதான் இந்தியாவின் நிலைமை.
“சீனாவுடன் போருக்குப் போகலாம், வா” என ஆயுதங்களோடு அமெரிக்காவே வாசலில் வந்து தாம்பூலம் வைத்து அழைத்தாலும் இந்திய அரசு போரில் இறங்குவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனெனில் இன்றைய சூழலில் சீனாவுடன் ஒரு போர் தொடங்கினால், அதில் விழும் முதல் குண்டு இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தகத்தின் மீதானதாகத்தான் இருக்கும்.
குறைந்தபட்சம் பாலக்கோட்டின் பைன் மரங்களின் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ஒன்றை நடத்தி தனது ‘வீரத்தைக்’ காட்டி ‘தேசபக்தர்களை’ திருப்திப்படுத்துவதற்கு சீனா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது மோடி அரசு. அதனால்தான் டிக்டொக் உள்ளிட்ட 59 ஆண்ட்ராய்ட் செயலிகளின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதோடு திருப்தியடைந்து கொண்டார் நமது 56 இன்ச்.
நிலவும் முதலாளித்துவ சமூக அமைப்பில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போர் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுவதாக இருந்தாலும் சரி, அவசியமற்ற நிலைமைகளில் போர்கள் நடந்தப்பட்டாலும் சரி, அவற்றின் பின்னணியில் மூலதனத்தின் நலன்தான் ஒளிந்திருக்கிறதே தவிர உழைக்கும் மக்களின் நலன் அல்ல.
கடை திறப்பதும் போலீசைக் கேள்வி கேட்பதும் கிரிமினல் குற்றமாம் ! போலீசு வழங்கும் நீதி – மரண தண்டனை !
• கொட்டடிக்கொலையில் ஈடுபட்ட அத்தனை கிரிமினல் போலீசையும் கைது செய்து சிறையில்அடை!
• துணை போன மருத்துவர், சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோரை உடன் குற்றவாளிகளாக சேர்த்து கைது செய்! பணி நீக்கம் செய்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 03. 07.2020 வெள்ளிகிழமை காலை 11 மணி, இடம் : திருச்சி மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில்.
***
அன்பார்ந்த வழக்கறிஞர்களே, மனித உரிமை ஆர்வலர்களே,
போலீசு சட்டபூர்வ கிரிமினல் கும்பல் என்று அரைநூற்றாண்டுக்கு முன்பே அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் நரேன்முல்லா கூறினார்.
AnandNarainMulla, a justice of Allahabad High Court, had once famously observed, “I say with all sense of responsibility that there is not a single lawless group in the whole country whose record of crime is anywhere near the record of that organized units which is known as the Indian Police Force.”
அனைத்து போலீசையும் எப்படி அவ்வாறு கூறமுடியும்? என பத்திரிக்கையாளர்கள் மேலும் கேட்டதற்கு, “ஒரு கூடை அழுகிய மீன்களில் ஒரு நல்ல மீனைத் தேடும் முட்டாளல்ல நான்” என்று பதிலளித்தார்.
காவல் கொட்டகைக் கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசனிடம், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று கீழ்நிலைக் காவலர் மகாராஜன் பேசியதும் DSP, ASP வரை அங்கிருந்த அத்தனை காவல்துறையினரும் திமிராக நடந்துகொண்டதும் மேற்கூறிய நீதிபதியின் கூற்றை நிரூபிக்கிறது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இன்று வரை காவல்துறை ஜனநாயகப்படுத்தப்படாமல் காலனியகால மனநிலையிலேயே இருப்பதைத்தான் உறுதி செய்கிறது. கடையை கால்மணிநேரம் கூடுதலாகத் திறந்த ‘குற்றத்துக்காக’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் இருவரையும் கொடூரமாகக் கொன்றுவிட்டு காவல்துறையால் இவ்வளவு திமிராக நடக்கமுடிகிறது என்றால் நமது ஜனநாயக உரிமையின் கதிஎன்ன?
சாத்தான்குளம் காவல்துறையினர் நிகழ்த்திய ஜெயராஜ் – பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலைக்கு சிபிஐ விசாரணை என தமிழக அரசு அறிவித்திருப்பது, குற்ற விசாரணையை தாமதித்து, குற்ற ஆவணங்களை அழித்து, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் தமிழக அரசின் அறிவிப்பு மோசடியானது, மக்களை ஏமாற்றுவது, அடித்துக் கொன்ற காவல்துறையினரை பாதுகாப்பதற்கானது,
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் – நீதிபதிகள் மீதான தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை, ஸ்டெர்லைட் படுகொலை என சிபிஐ எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் முறையான விசாரணையோ, குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையோ இல்லை.
குவிநச பிரிவு 174 – சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்துக் கொன்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபின், கொலை வழக்கு உடனே பதிவு செய்தாக வேண்டும்.
காவல்துறை நேரடியாக புலன் விசாரணை செய்யக் கூடிய வழக்குகளில், புகார் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 2013-ஆம் ஆண்டு LalitaKumari vs Govt.Of U.P.&Orsஎன்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய், பாப்டே ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு. “Registration of FIR is mandatory under Section 154 of the Code, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation”எனத் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், சாத்தான்குளம் சம்பவத்தில் உரிய புகார், நேரடி சாட்சிகள், அடித்ததற்கான மருத்துவ சிகிச்சை ஆதாரங்கள் மிக வலுவாக இருக்கிறது. இதன் பிறகும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தடுப்பது யார்? கைது செய்யாமல் காப்பாற்றுவது எந்த சக்தி? என்ற கேள்விக்கு விடை வேண்டும்.
அமைச்சர் கடம்பூர் ராஜீ நடந்தது “லாக்-அப் டெத் அல்ல” என்று பேசுவதும், முதல்வர் பழனிச்சாமி “உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்” என்று கூறியதும் பிரச்சனையை நீதிமன்றத்தின் பக்கம் தள்ளி விடுவதாகும்.
கொலை வழக்கு பதிவு செய்வதையோ சாத்தான்குளம் போலீசாரை கைது செய்வதையோ நீதிமன்றம் தடுத்ததா? மற்ற கொலை வழக்குகளில் உடனே வழக்கு, கைது, ஒப்புதல் வாக்குமூலம், அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் என்பதே வழக்கமான சட்ட நடைமுறை.
கொலை வழக்கில் உடனடி விசாரணை மிக முக்கியமானது. காவல்துறைக்கு இது பொருந்தாதா? காவல்துறையினர் சட்டத்திற்கு மேலானவர்களா? காவல்துறையினருக்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளதா? இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பன தண்டனை அல்ல! வேலை செய்யாமலே சம்பளம் வாங்குவதற்கான ஏற்பாடு.
மேலும் இவ்வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன? முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பை மீறியுள்ளார். அர்னேஷ் குமார் வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பிரிவுகளின் கீழான வழக்குகளில் தேவையின்றி ரிமாண்ட் செய்யக் கூடாது; அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நக்கீரன் கோபால் மற்றும் ஜீவானந்தம் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் “தேவையற்ற கைது கூடாது” – பிரிவு 188-ன் கீழ் காவல்துறை வழக்கே பதியக்கூடாது என உத்தரவிட்ட பின்பும் – சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கவில்லை. கொரானா பேரிடர் காலத்தில் தேவையற்ற கைது கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர்களில் 80% பேர் காவல்துறையின் எந்தக் கைதையும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.
காவல்துறையில் கீழிருந்து மேல்மட்டம்வரை லஞ்சம்-ஊழல் மலிந்துள்ளது; கீழ்நிலைப் போலீசார்தான் வசூல் செய்து கொடுப்பவர்கள் என்பதோடு, தாங்கள் கோடி, கோடியாய் கொள்ளையடிப்பதற்கு காவல்துறையின் உதவி தேவை. வாரம் இத்தனை கேஸ் பிடித்துக்கொடுத்து தண்டம் வசூலிக்கவும், ஆயுத பூஜைக்கு பொரி வாங்கித் தருவது முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கறி வாங்கித் தருவது வரை எல்லா வேலைகளையும் செய்து தர நீதிபதிகளுக்கும் காவல் துறையின் தயவு தேவைப் படுகிறது. காவல் உயர் அதிகாரிகளும், நீதிபதிகளும், தமிழக அரசும் சாத்தான்குளம் போலீசாரைக் காப்பதற்கு இது தான் அடிப்படை. விதிவிலக்காக சில நீதித்துறை நடுவர்கள் போலீசை கேள்வி கேட்டால், அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது காவல்துறை.
குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.
கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்தி காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் கொடுப்பது அரசியல் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். அரசியல் சட்டத்தின் அனைத்து உறுப்புகளும் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்குள் நிற்பதே சரி. ஆனால் காவல்துறை மட்டும் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. காரணம், தங்களை அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கைதான்.இந்த நிலையை நீடிக்கவிட்டால் காவல் கொட்டடிக் கொலைகளில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்திலும், இந்திய அளிவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருப்பதை மாற்ற முடியாது.
அரசியல் அமைப்பு சட்ட அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், ஒன்றின் தவறை மற்றது முறைப்படுத்தும் என்பதாக பேசுகிறோம். ஆனால், காவல் துறையின் தவறை நீதித்துறையும், சிறைத்துறையும் சுகாதாரத் துறையும் மட்டுமல்ல, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் உடந்தையாக இருந்து பாதுகாக்கவே செய்கின்றனர். சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவை கேலிக்கூத்தாக்கப்பட்டு போலிசு ஆட்சிதான் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சீழ் பிடித்த இந்த நிலைக்கு அறுவை சிகிச்சைதான் அவசர தேவையாக உள்ளது.
“போலீஸ் துறையை கலைத்து விடு” என்ற கலகம்தான், அமெரிக்க போலீஸ் அதிகாரிகளை மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கோரும் நிலையை உருவாக்கியது. உலகமே கண்டித்த சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறை மீது உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், வேறு எந்த வழக்கிலும் நீதி கிட்டாது! கண்ணெதிரே நடந்த கொடுமையை கண்டுகொள்ளாமல் விட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது! நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம்!
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி கிளை. தொடர்புக்கு : 9444253030
கடந்த மே மாதம் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது கொதிகலன் வெடித்து ஐந்து தொழிலாளர்களின் உயிரைக் காவு வாங்கியது என்.எல்.சி. இப்போது ஒரு மாதம் கூட ஆகவில்லை தற்போது அதே இரண்டாம் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து சம்பவ இடத்திலேயே எட்டுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்து போய் உள்ளார்கள்.
இறந்தவர்களும் உயிருக்கு போராடுபவர்களும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள். மேலும் எட்டு பேருக்கும் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமற்ற வட இந்திய அதிகாரிகளை பணியில் அமர்த்தி அவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதே இந்த கொடூர கொலை.
மொத்தத்தில் ஒரு பொதுத்துறையை தனியார்மயத்திற்கு ஆதரவாக மாற்றும் நிகழ்ச்சிப் போக்கில்தான் இப்படுகொலை நடந்திருக்கிறது.
“சென்னையில் கொரோனோ பரிசோதனைகளை தெருத்தெருவாக செய்து கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல குடும்பத்தையே நாங்கள் சோதனை செய்கிறோம், தனிமை படுத்துகிறோம். ஃபீவர் கேம்ப் நடத்துகிறோம்.”
இப்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் பல்வேறு அறிவிப்புகளை தினமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இத்தனை அறிவிப்புகளும் எல்லா மக்களையும் சென்று அடைந்ததா என்றால் இல்லை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கோதாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி. இப்பகுதி நிலைமை என்ன? என்பது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சைதாப்பேட்டை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பூர்ணிமா விளக்குகிறார்.
“எங்கள் பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது எங்களுக்கு தெரிந்த வரை 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டு சிலர் வந்திருக்கிறார்கள்.
பிரச்சனை அதுவல்ல அவ்வாறு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் வழக்கம்போல தங்களுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொள்கிறார்கள். தண்ணீர் பிடிக்கிறார்கள், காய்கறி வாங்குகிறார்கள் மக்களோடு சகஜமாகவே இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு நபரை மட்டுமே பரிசோதனை செய்து அவரின் குடும்பங்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் வீட்டிலேயே தனிமையாய் இருங்கள் என்று சொல்வதன் மூலம் மட்டுமே ஒரு நோயை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
அனைவரையும் சோதிக்க வேண்டும். குறிப்பாக யாருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதோ அவரோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அவ்வாறு எந்த பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எந்த பொருளாதார உதவியும் செய்யாமல் வீட்டிலேயே இருங்கள் என்று சொன்னால் அவர்களால் எப்படி இருக்க முடியும் ? அவர்கள் தங்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வார்கள் ?
ஆக தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதை அரசு மேற்கொள்ளாமல் ஒரு போதும் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.
சைதாப்பேட்டையில் ஒரு அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த கொரோனா பிரச்சினைக்கு பிறகு அவசர சிகிச்சை என்றால் மட்டுமே மருத்துவம் பார்க்கப்படுகிறது. காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுவது கிடையாது. வயது முதிர்ந்தவர்கள் குறிப்பாக அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்படிப்பட்ட பரிசோதனைகள் கடந்த நான்கு மாதங்களாக செய்யப்படவில்லை.
சுகர், பி.பிக்கான மாத்திரைகள் ஜூன் மாதம் முழுக்க கொடுக்கவே இல்லை. தேவைப்பட்டால் மாத்திரையை நீங்கள் ராயப்பேட்டையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.”
இதையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுவை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு கொடுக்கச் சென்றால் அதை வாங்குவதற்கு ‘ஒரு நாதியும் இல்லை’. “போய் மண்டல அலுவலகத்துக்கு கொடுங்கள்…” என்கிறார்கள்.
“பொது முடக்கம் அறிவித்துவிட்டார்கள் வண்டியில் போக முடியாது என்றால் சைதாப்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு எப்படி போக முடியும் ?
சுகாதாரத்துறை செயலாளர் மாநகராட்சி ஆணையருக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
28.06.2020 ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியம் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் .அவர் மாத்திரைகளை வழங்குவதற்கும், கிருமிநாசினி தெளிப்பதற்கும், Fever camp போடுவதற்கும் ஏற்பாடுகளை செய்வதாக கூறினார் .
அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கான சுகர், பிபி மாத்திரைகள் கொடுக்கிறார்கள் .
இதுபோன்று குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தா விட்டால் மோசமான தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
என்ன பண்றது… இந்த நாட்டில் மனு கொடுத்தா தான் மாத்திரையை கிடைக்குது…” என தனதுபோராட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா.
சாத்தான்குளம் காவல்துறையினர் நிகழ்த்திய ஜெயராஜ் – பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை என தமிழக அரசு அறிவித்திருப்பது, அடித்துக் கொன்ற காவல்துறையினரைக் காப்பது, குற்ற விசாரணையை தாமதித்து, குற்ற ஆவணங்களை அழித்து, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் தமிழக அரசின் அறிவிப்பு மோசடியானது, மக்களை ஏமாற்றுவது.
பரமக்குடி துப்பாக்கிச் சுடு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் – நீதிபதிகள் மீதான தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை, ஸ்டெர்லைட் படுகொலை என சிபிஐ எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் முறையான விசாரணையோ, குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையோ இல்லை. குற்ற வழக்கு விசாரணையில் சிபிஐ-யைவிட தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் அனுபவம் மிக்கவர்கள். நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக சி.பி.சி.ஐ.டி சிறப்புக் குழு விசாரணையே போதுமானது.
எந்த விசாரணை என்றாலும் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் கொலை வழக்கும், கைதும் மிக அவசியம். குவிநச பிரிவு 174 – சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்துக் கொன்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபின், கொலை வழக்கு உடனே பதிவு செய்தாக வேண்டும்.
காவல்துறை நேரடியாக புலன் விசாரணை செய்யக் கூடிய வழக்குகளில், புகார் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 2013-ஆம் ஆண்டு Lalita Kumari vs Govt.Of U.P.& Ors என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் P Sathasivam, B.S. Chauhan, Ranjana Prakash Desai, Ranjan Gogoi, S.A. Bobde ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு
“Registration of FIR is mandatory under Section 154 of the Code, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation” எனத் தீர்ப்பளித்துள்ளது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சாத்தான்குளம் சம்பவத்தில் உரிய புகார், நேரடி சாட்சிகள், அடித்ததற்கான மருத்துவ சிகிச்சை ஆதாரங்கள் மிக வலுவாகக் கிடைத்த பின்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தடுப்பது யார்? கைது செய்யாமல் காப்பாற்றுவது எந்த சக்தி? என்ற கேள்விக்கு விடை வேண்டும்.
அமைச்சர் கடம்பூர் ராஜீ நடந்தது “லாக்-அப் டெத் அல்ல” அன்று பேசுவதும், முதல்வர் பழனிச்சாமி “உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்” என்பதும் பிரச்சனையை நீதிமன்றம் பக்கம் தள்ளி விடுவதாகும்.
கொலை வழக்கு பதிவு செய்வதை, சாத்தான்குளம் போலீசாரை கைது செய்வதை நீதிமன்றம் தடுத்ததா? மற்ற கொலை வழக்குகளில் உடனே வழக்கு, கைது, ஒப்புதல் வாக்குமூலம், அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் என்பதே வழக்கமான சட்ட நடைமுறை.
கொலை வழக்கில் உடனடி விசாரணை மிக முக்கியமானது. காவல்துறைக்கு இது பொருந்தாதா? காவல்துறையினர் சட்டத்திற்கு மேலானவர்களா? காவல்துறையினருக்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளதா? இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பது தண்டனை அல்ல! வேலை செய்யாமலே சம்பளம் வாங்குவதற்கான ஏற்பாடு.
காவல்துறையில் கீழிருந்து மேல்மட்டம்வரை லஞ்சம்-ஊழல் மலிந்துள்ளது; கீழ்நிலைப் போலீசார்தான் வசூல் செய்து கொடுப்பவர்கள் என்பதோடு, தாங்கள் கோடி, கோடியாய் கொள்ளையடிப்பதற்கு காவல்துறையின் உதவி தேவை என்பதே காவல் உயர் அதிகாரிகளும்-தமிழக அரசும் சாத்தான்குளம் போலீசாரைக் காப்பதற்கான அடிப்படை.
மேலும் இவ்வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன? என்பதற்கும் பதில் இல்லை. முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பை மீறியுள்ளார்.அர்னேஷ் குமார் வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பிரிவுகளின் கீழான வழக்குகளில் தேவையின்றி ரிமாண்ட் கூடாது – அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நக்கீரன் கோபால் மற்றும் ஜீவானந்தம் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் “தேவையற்ற கைது கூடாது” – பிரிவு 188-ன் கீழ் காவல்துறை வழக்கே பதியக்கூடாது என உத்தரவிட்ட பின்பும் – சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கடை பிடிக்கவில்லை. கொரானா பேரிடர் காலத்தில் தேவையற்ற கைது கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர்களில் 80% பேர் காவல்துறையின் எந்தக் கைதையும் கேள்விக்குட்படுத்துவதில்லை.
சில நீதித்துறை நடுவர்கள் போலீசை கேள்வி கேட்டால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது காவல்துறை நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே – வானம் வீழினும் நீதி நிலவுக” என்ற மரபு கொண்ட தமிழகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.
கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்தி காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் கொடுப்பது அரசியல் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். அரசியல் சட்டத்தின் அனைத்து உறுப்புகளும் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்தில் நிற்பதே சரி. ஆனால் காவல்துறை மட்டும் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. காரணம் தங்களை அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கைதான். உலகமே கண்டித்த சாத்தான்குளம் சம்பவத்திற்கு காவல்துறை மீது உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் வேறு எந்த வழக்கிலும் நீதி கிட்டாது! நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம்.
சாத்தான்குளம் போலீஸ் நடத்திய இரட்டைக் கொலைகள் நாடு முழுவதும் மக்களின் பெருங் கோபத்திற்கு ஆளாகியுள்ளன.
தொடர்புடைய காவலர்கள் மட்டுமின்றி இக்கொலைக்கு துணைபோன மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கொலை செய்த காவலர்கள், காவலர் நண்பர்கள் ஆகியோர் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
ஆனால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்து கொலையாளிகள் கைது செய்யப்படாமல் இருக்க சூழ்ச்சி செய்துள்ளது.
சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்குள் சாத்தான்குளம் போலீசு சாட்சிகளைக் கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது, பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது ஆகிய எல்லா கிரிமினல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எடப்பாடி அரசும், காவல்துறையும் ஏற்பாடு செய்திருக்கும் சதித்திட்டமே சிபிஐ விசாரணைஅறிவிப்பு. ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் பொது வெளியில் வந்த பிறகும் கைது செய்யாமல் கொலையாளிகளைப் பாதுகாக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. நீதித் துறைக்கு காவல்துறை கட்டுப்பட மறுப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பதே. இதனை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியருக்கு பொறுப்பளித்திருக்கிறது.
குற்றவாளிகளை அரசு பாதுகாக்கும் என்ற உறுதி தான் நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தைரியத்தை சாத்தான்குளம் போலீசுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தாங்களே வழிமுறைகளை உருவாக்கி கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதையே நிலைமைகள் உணர்த்துகின்றன.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவை கேலிக்கூத்தாக்கப்பட்டு போலிசு ஆட்சிதான் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மக்கள் போராட்டங்களால் மட்டுமே காவல் துரையின் அத்துமீரலைக் கட்டுப்படுத்தமுடியும். எனவே காவல்துறையினர் சட்ட விதிகளை மீறினால் அவர்கள் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
தேனியில் ஒரு பெண் காவலர் வேலைக்கு சேரும் முன் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்பதால் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படியானால் போலீசின் எல்லா குற்றங்களுக்கும் இதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு போலீசார் லத்தி, கழி போன்றவற்றைப் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும். தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு நீதிபதிகள் பொறுப்பாக்கப்பட வேண்டும். இவை உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும்.
தோழமையுடன் தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு காரணமாக மத்திய மாநில அரசுகள் நான்கு முறையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து, குடும்பம் நடத்த முடியாமலும், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
அந்த வகையில் மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நிறுவனங்கள் குழுக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தள்ளி வைப்பதாக அறிவித்து. ஆனால் கரூர் சுற்றியுள்ள பகுதியில் கிராம விடியல், எல்.என்.டி, மதுரா, ஆசிர்வாதம், மகளிர் சுய உதவிக்குழு, நுண் கடன் நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ், அரசு சாரா நிதி நிறுவனங்கள், கடந்த மே மாதம் முதல் கடனையும் வட்டியையும் கட்ட சொல்லி பொதுமக்களை டார்ச்சர் செய்து வருகின்றனர்.
கடந்த 22.6.2020 திங்களன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம், மே 17, தந்தை பெரியார் திராவிட கழகம், சாமானிய மக்கள் நல கட்சி மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட குழுக்களுடன் ஆகஸ்ட் 31 வரை கடனை தள்ளி வைக்கக் கோரியும், மேலும் கடனை வசூல் செய்யும் நபர்களையும் வங்கி மேலாளர் களையும் கிரிமினல் குற்றவாளி என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனடிப்படையில் மனு கொடுக்கப்பட்டது.
அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண்கள் மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்தது, மாறாக அவருடைய பி.ஏ மனுவை பெற்றுக்கொண்டு, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் மேலும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கலெக்டர் ஆகஸ்ட் 31 வரை கடனையும், கடனுக்கான வட்டியையும் தள்ளி வைக்க உத்தரவு போட்டுள்ளனர்.
ஆனால் கரூர் கலெக்டர் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததான் மர்மம் என்ன? மக்கள் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை என்ன? இதனால் கரூர் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் குறிப்பாக கரூர் உப்பிடமங்கலம் சேர்ந்த பகுதியில் “கடனை ஒழுங்காக கட்டு இல்லைனா செத்துப்போ… எனக்கு காசு வரணும்” என்று எல்என்டி -இன் புலியூர் கிளையை சேர்ந்த வங்கி மேலாளர் தனபால் பொதுமக்களை ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசி அவமானப்படுத்துவது துன்புறுத்துவது இதுபோன்ற நடவடிக்கையில் கொண்டிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் ஏராளமான மக்களும் இதுபோன்ற கொரோனா
பாதிப்பால் வேலை இழந்து தவித்து வரும் சூழலில் அரசு உத்தரவை மீறி கடனை வசூல் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது! மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் அதை பத்திரிகை, தொலைக்காட்சி, வலைதளங்கள் என அனைத்திலும் தெரியும்படி மக்களிடம் இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவோம்!
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களின் செய்தித் தொகுப்பு.
***
திருச்சி:
சாத்தான்குளம் தந்தை மகனை அடித்துக்கொன்ற போலீசை கொலை வழக்கில் கைது செய்! சிறையிலடை!
பரிசோதிக்காமல் போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறைத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்! நடவடிக்கை எடு!
27.06.2020 அன்று காலை 11 மணி அளவில் மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெற்றது. போலீசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை அட்டைகளாக பிடித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்வதும், மருத்துவர், நீதிபதி, சிறைத் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும் வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி மிகு முழக்கமிட்டனர்.
மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். கொலை வழக்கில் போலீசாரை கைது செய்ய வேண்டும். போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை ரத்து செய்து, மக்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். மனவுளைச்சல், பணிச்சுமை காரணமாக சில காவலர்கள் இது போன்ற தவறுகள் செய்வதாக கொலைக்கு நியாயம் பேசுகிறார்கள். இது மிக அயோக்கியத்தனமான கருத்து. வியாபாரிகள், தொழிலாளர்கள் பல்வேறு மக்கள் பிரிவினரும்தான் கொரானா ஊரடங்கின் பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் என்ன கொலையா செய்கிறார்கள்? அப்படி கொலை செய்தால் இந்த அரசு ஏற்றுக் கொள்ளுமா?
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
போலீசை மக்கள் கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும். அதற்கு காவல்நிலையத்தில் லாக்கப் மற்றும் பிற இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து அதன் ஒளிபரப்பை மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளான எம். எல். ஏ, எம். பி ஆகியோர் பார்க்கும்படி வைக்க வேண்டும்.
பொதுமக்களும் காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை வீடியோவில் பார்த்து கண்காணிக்கும் வகையில் இருக்க வேண்டும். போலீசாரை கொலை வழக்கில் கைது செய்யும் வரை எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா அமெரிக்காவில் கருப்பின மக்களில் ஒருவரை போலீசால் கழுத்தை நெரித்து கொல்லும் செயலுக்கு அங்கு நடந்த மக்களின் போராட்டம் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிர்ந்தது, பதுங்கு குழிக்குள் சென்று டிரம்ப் ஒளிந்து கொண்டார். போலீசை மண்டியிட வைத்தனர். அதுபோன்ற போராட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட வேண்டும் நாம் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று பேசினார்.
அடுத்து அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரன் பேசுகையில், காவல்துறையை கொலைவழக்கில் கைது செய்ய வேண்டும். நீதி விசாரணைக்கு உட்படுத்தி இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் தண்டிக்க வேண்டும் எனபேசினார்.
அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சம்சுதீன் கொரோனா ஊரடங்கால் மக்கள் பல பாதிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில் வியாபாரிகளை போலீஸ் அடித்துக் கொன்றது, மனித நேயமற்ற செயல். கொலை குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவேண்டும். மருத்துவர்கள், நீதிபதிகள், சிறை அதிகாரிகள் என உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்யவேண்டும் எனப்பேசினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் வழக்கறிஞர் தோழர் சந்துரு ஆகியோரும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
சமூகநீதிப் பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் இந்த போலீஸ் மக்களைக் காக்க அல்ல. மாறாக மக்களை மிரட்டி, அடித்து சித்திரவதை செய்து பணம் வசூல் செய்கிறது. போலீஸ் தன்னுடைய அண்ணன், தம்பி, அக்கா- தங்கச்சியை அடித்துக் கொலை செய்யுமா? எனக் கேள்வி கேட்டு போலீசுக்கு வந்தா ரத்தம், மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா எனக்கேள்வியெழுப்பினார். போலீசின் அராஜகத்துக்கு முடிவு கட்டவும் நியாயம் கிடைக்கவும் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் பஷீர், இந்த அராஜகமான காவல்துறையைப் பணிய வைக்க மக்கள் புரட்சி தேவை அப்படிப் பட்ட போராட்டங்களை நாம் தொடுப்போம் எனப்பேசினார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐயா ம. ப. சின்னதுரை, மக்களுக்கு பணியாற்ற என்று வந்த போலீசு, மக்களை எப்படி அடித்துக் கொள்ளலாம்? சட்டமும் ஜனநாயகம் இதைத்தான் கூறுகிறதா? அராஜகத்தில் ஈடுபட்ட காவலர்களை கொலை வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். உடந்தையாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார்.
இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் ராஜா, இந்தக் காவல்துறை மக்களுக்கானதல்ல, இது ஒரு சமூக விரோத ரவுடிக்கும்பல். மக்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட அடியாள் படை. அதை நீதிபதிகளே பேசியுள்ளனர். மேலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் மக்களைத் தாக்குவதும், பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவதும், கொலை செய்வதும் நீடிக்கிறது. இந்த கட்டமைப்பு தோற்றுப்போய் மக்களுக்கு விரோதமாகப் போய் விட்டது என்பதற்கு போலீசின் கொலையும் அதைத்தடுக்காமல் துணை போன நீதித்துறை நடுவர், மருத்துவர், சிறை அதிகாரி போன்றோரின் வக்கிரமான நடவடிக்கையே உதாரணமாக உள்ளது. அமெரிக்கா போல மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அந்த எழுச்சியை இங்கே நாம் நடத்த வேண்டும். நீதி, நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும், போலீசை மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியைச் சுற்றி இருந்த கடை வியாபாரிகளிடம் நமது முழக்கங்கள் நகலெடுத்து பிரசுரமாக கொடுக்கப்பட்டது. இது ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவும் அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக முழக்கமிட்டு, நன்றி கூறி முடிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராத நிலையில் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் எந்தவிதத் தொல்லையும் தர முடியாமல் அமைதி காத்தனர்.
தகவல் : மக்கள் அதிகாரம், திருச்சி. தொடர்புக்கு : 94454 75157
***
புதுச்சேரி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகன் இருவரையும் சித்திரவதை செய்து படுகொலை செய்த போலிசை கண்டித்தும், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் 26.6.20 அன்று காலை 10 மணி அளவில் நெல்லித்தோப்பு சிக்னல் சுப்பையா சிலை அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நூகர்வோர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திரவிட விடுதலை கழகம், தமிழர் கலம், இந்திய ஜனநாயக கட்சி, CPI (ML) ஆகிய கட்சிகள் அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.
***
மணப்பாறை:
சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் போலீசால் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மக்கள் அதிகாரம் சார்பாக மணப்பாறையில் 27.6.2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரம் மணப்பாறை ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி இதற்கு தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தோழர் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், மணப்பாறை.
***
கரூர்:
சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து, 25.06.2020 அன்று காலை 10 மணி அளவில் கரூரில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாத்தான்குளம் தந்தை மகனை அடித்துக்கொன்ற போலீசை கொலை வழக்கில் கைது செய்! சிறையிலடை!
பரிசோதிக்காமல் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவர், நீதித்துறை நடுவர்,சிறைத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்! நடவடிக்கை எடு!
என மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தவகல் : மக்கள் அதிகாரம் கரூர்.
***
விருத்தாசலம்:
விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக, சாத்தான்குளம் லாக்கப் படுகொலையைக் கண்டித்து பாலக்கரையில் அனைத்து கட்சியும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கம்மாபுரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் ஆரம்பி கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல் ஸ்டீபன், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தோழர் ராமர் அவர்களும், மாவட்ட செயலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வில்வநாதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர் புஷ்ப தேவன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணியரசு மற்றும் மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் மாற்று கட்சி நிர்வாகிகள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டனர்.
போலீசின் நெருக்கடி காரணமாக மேற்கூறிய கட்சிகள் சார்பாக, 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று போலீஸ் சொன்னதால், ஒவ்வொரு கட்சியும் 5 நபர்களை கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும், கைது செய்யவேண்டும். மருத்துவம் பார்க்காத நீதிமன்ற நடுவர், மருத்துவர் சிறைத்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வரம்பு மீறிய போலீஸ் அதிகாரத்தை மக்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.
***
கோவை:
கோவை பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக காலை 11 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி சாத்தான்குளத்தில் போலீசால் நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், நாட்டில் நடந்துவரும் போலீசு ராஜ்ஜியத்தை எதிர்த்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 15 தோழர்கள் கலந்துகொண்டனர். உணர்வுபூர்வமான முழக்கங்களுடனும், பதாகைகளுடனும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோழர் மூர்த்தி, இந்த கொரோனா ஊரடங்கில் போலீசின் அடக்குமுறை வெறியாட்டத்தையும், சாதாரண மக்களை எப்படி நடத்துகிறார்கள், சாதிவெறி கொலையாளிகளிடமும், கிரிமினல்களிடமும், ஊழல்வாதிகளிடமும், அரசியல் செல்வாக்குள்ள பாலியல் குற்றவாளிகளிடமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் விளக்கிப் பேசினார்.
அரசு கட்டமைப்பின் தோல்வி குறித்தும், அதன் அனைத்துத் துறைகளும் மக்களுக்கு எதிரானாதாக மாறிவிட்டதையும், இனி மக்களே அதிகாரத்தைக் கைபற்றுவதுதான் ஒரே தீர்வு என்றும் விளக்கினார். குறிப்பாக தோழர் அன்பு வரைந்திருந்த கருத்துப்படம் அனைவரின் கவனத்தைக் கவரும் விதத்தில் இருந்ததால் போலீசார் அந்தப்படத்தைக் காட்ட வேண்டாம் என்றனர். ஆனால் அதை மீறி ஆர்ப்பாட்டத்தில் அப்படம் காட்டப்பட்டது. மொத்தத்தில் இன்றைய ஆர்ப்பாட்டம் போலீசு ராஜ்ஜியத்தின் கொடுமைகளை மக்களிடம் சென்று சேர்ப்பதாகவும், அதை முறியடிக்க மக்கள் அமைப்பாகத் திரளக் கோருவதாகவும் இருந்தது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
கோவை.
***
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸின் கொட்டடிப் படுகொலைக்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்கில் பதிவு செய்து கைது செய்!
படுகொலைக்குத் துணைபோன மருத்துவர், நீதிபதி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கு!
என்கிற முழக்கத்தை முன் வைத்தும்.
கோவையில் இட்லிகடை நடத்திய பெண் மற்றும் அவருடைய மகன் மீது தாக்குதல் நடத்தியது; குழுக்கடனைக் கட்டுவதற்கு அவகாசம் வழங்கப் போராடிய ஒத்தக்கடை பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது.
மேலும் விசாரணைக்காக யா. ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமைப்புத் தோழரைத் தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, தனித் தமிழர் இயக்கம், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று (29/06/2020) காலை 10.30 மணிக்கு யா.ஒத்தக்கடையில் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டம் தோழர்.பா. காளிதாஸ் (இ.க.க) தலைமையிலும் தோழர்.கலைச்செல்வம் (இ.க.க-மா), தோழர்.சரவணன் (ம.அ), தோழர். விஜயகுமார்(த.பு.க), தோழர்.எழிலரசு (த.த.இ), தோழர்.பிலால் (ம.ம.க) ஆகியோரின் முன்னிலையிலும் நடந்தது.
தோழர் பா. காளிதாஸ் பேசிய 15 நிமிட உரையில் சுற்றியிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது. இறுதியாக தோழர். சரவணன் (ம.அ) நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், மதுரைப் பகுதி. தொடர்புக்கு : 63832 43495.
எல்லையில் இந்திய சீனப் படைகளுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சங்க பரிவாரத்தினரும் அவர்களது தொடர் தேசபக்த கூச்சல்களுக்குப் பலியானவர்களும் “சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்தியாவால் சீனப் பொருட்களை புறக்கணிக்க முடியுமா ? அது இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்திய சீனப் படைகளுக்கு இடையிலான மோதலைத் தொடர்ந்து இந்தியாவின் சில பகுதிகளில் சீனப் பொருட்களை உடைத்து சிலர் எதிர்ப்பை தெரிவித்தனர். ஓரிரு இடங்களில் சீன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதே காலகட்டத்தில்தான், ஒன் ப்ளஸ் எனும் சீன நிறுவனம் இந்தியாவில் “ஒன் ப்ளஸ் 8 – ப்ரோ” (One Plus 8 Pro) எனும் தனது புதிய திறன்பேசியை (Smart Phone) கடந்த ஜூன் 15 அன்று விற்பனைக்குக் கொண்டு வந்தது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்த இரண்டு நிமிடத்திற்குள்ளாக அனைத்து திறன்பேசிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் திறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களின் மீதான மோகமும், அதற்கான சந்தையும் மிகப் பெருமளவில் இருக்கிறது. பல்வேறு வசதிகளையும் ஒப்பீட்டளவில் குறைந்த அல்லது நடுத்தர வர்க்கத்தினர் செலவழிக்கத் தக்க விலையில் சீன நிறுவனங்கள் தயாரிக்கும் திறன்பேசிகள், இந்திய திறன்பேசி சந்தையை கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 75% அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதிக் காலாண்டில் இந்தியா இறக்குமதி செய்த சுமார் 3.25 கோடி திறன்பேசிகளில் சுமார் 76% திறன்பேசிகள் விவோ, சியோமி, ரியல்மி, ஓப்போ ஆகிய சீன நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும். இதற்கு அடுத்தபடியாக தென்கொரிய நிறுவனமான சாம்சங், 15.6% சந்தையை பிடித்துள்ளது.
சீனாவின் திறன்பேசிகளுக்கு இந்தியாதான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகும். கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் சுமார் 15.25 கோடி திறன்பேசிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்கிறது பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம்.
வெறுமனே திறன்பேசி சந்தையில் மட்டுமல்ல, இந்தியாவிற்கு திறன் தொலைக்காட்சிகளை (Smart TV) அதிக அளவில் வழங்குவதிலும் சீனா முதலிடத்தில் இருக்கிறது. திறன் தொலைக்காட்சி சந்தையில் சுமார் 27%-த்தை சீனாவின் சியோமி நிறுவனம் தன் கையில் வைத்துள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 17% சீனாவில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 2018- 19-ம் நிதியாண்டில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே ஆகும்.
அடிப்படை மூலப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனாவிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையே இறக்குமதி செய்கிறது.
சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வதில், மின்சார இயந்திரங்கள் சுமார் 34%-மும், அணுசக்தி தொடர்பான இயந்திரங்கள் 18%-மும், அடிப்படை இரசாயனங்கள் 10%-மும், நகை மற்றும் ஆபரண கற்கள் 6%-மும் , இரும்பு மற்றும் எஃகு ஆகியவை 4%-மும் பங்களிப்பு செலுத்துகின்றன.
சீனப்பொருட்களை தவிர்ப்பது சாத்தியமா?
இந்தியாவிலிருக்கும் மின் நிலையங்களில் நான்கில் மூன்று நிலையங்கள் சீன உபகரணங்களையே பயன்படுத்துவதாக ‘ப்ரூக்கிங்ஸ்’ (Brookings) எனும் அமெரிக்க சிந்தனைக் குழாம் (Think Tank) தெரிவிக்கிறது.
தொழில்நுட்பப் பொருட்களில் மட்டும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும்பட்சத்தில் கூட அதனை தடை செய்வது பற்றி ஓரளவு சிந்திக்கலாம். ஆனால் கிராமப்புற விவசாயத் தேவைகளுக்கான பல்வேறு பொருட்களுக்கும் சீனாவையே சார்ந்து நிற்கும் நிலை இருக்கிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்களில் முக்கிய உரமாகிய டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் (Di Amonium Phosphate) தேவையில் சுமார் 45% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் யூரியா உரத் தேவையில் 13% சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் தடங்கல்கள் ஏற்படுமானால் அவை உடனடியாக விவசாயத்தைப் பாதிப்பதோடு, விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும்.
மருந்துத்துறை மொத்த வர்த்தகத்தில் சுமார் 69% பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளில் (Antibiotics) 90% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒருவேளை சீனா இந்த மருந்துகள் வழங்கலை நிறுத்தினால், மருத்துவத் துறையில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும் என்று கூறுகிறார், ஜெய்ப்பூரில் இருக்கும் மருந்தக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான சந்தீப் நருலா.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுவதும் வர்த்தகம் மட்டுமல்லாமல், நிதியாதிக்கத்திலும் சீனா மேலோங்கி வருகிறது. இந்தியாவிலும் சீனாவின் நிதியாதிக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவிற்குள் வரத்து வங்கிய சீன முதலீடுகளின் வளர்ச்சி இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகப் பரிமாற்ற உறவின் தன்மையையே மாற்றியிருக்கிறது என்கிறது ‘ப்ரூக்கிங்ஸ்’ நிறுவனம். மேலும், மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சீனா செய்துள்ள மற்றும் திட்டமிட்டுள்ள முதலீட்டின் மொத்த மதிப்பு சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது இந்நிறுவனம்.
இந்த முதலீட்டில் பெரும்பான்மையானவை நிறுவனங்களை இணைத்துக் கொள்வதன் (Acquisation) மூலம் நடைபெற்றுள்ளது. சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. திறன்பேசி இணைய பரிவர்த்தனை செயலி நிறுவனமான பே-டி-எம்-இன் (Pay-TM) தாய் நிறுவனமான ஒன்-97 (One97) நிறுவனத்தின் 40% பங்குகளை அலிபாபா நிறுவனம் வைத்திருக்கிறது.
தொழில் ஆராய்ச்சி நிறுவனமான ‘க்ரிசில்’ (Crisil) நடத்திய ஆய்வில் , சீனாவுடனான வர்த்தகம் தடை செய்யப்படுமானால் இந்தியாவின் உற்பத்தித் துறை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பயன்படுத்தப்படும் சுமார் 67% மின்னணுவியல் உட்பொருட்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு டொக்லாம் பகுதியில் இந்திய சீன இராணுவத்துக்கு இடையிலான மோதலாக இருக்கட்டும், காஷ்மீர் பகுதியில் பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்த தருணமாக இருக்கட்டும், இத்தகைய நிலைமைகள் சீனப் பொருட்களின் இறக்குமதியை பாதித்ததில்லை.
உலகளாவிய வழங்கல் சங்கிலியில் சீனா முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் இந்தியா அப்படிப்பட்ட அளவிலான உற்பத்தியில் ஈடுபடவில்லை. மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சுருங்கியிருக்கிறது என்பதை உலகளாவிய வர்த்தகத் தரவுகள் தெரிவிக்கின்றன. வியட்நாம், வங்காளதேசம் போன்ற நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பை எடுத்துக் கொண்டுள்ளன.
சீனா, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 1949-ல் புரட்சியை நடத்தி முடித்து பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் யாரையும் சார்ந்து நில்லாமல், சுயேட்சையாக தனது பொருளாதாரத்தைக் கட்டமைத்திருக்கிறது. தோழர் மாவோ கட்டியமைத்த சோசலிச சீனாவிலிருந்து இன்று முதலாளித்துவ சீனாவாக அது சீரழிந்து போயிருந்தாலும், சோசலிசம் ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படைக் கட்டமைப்பையும், இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் வளத்தையும் கொண்டு இன்று ஒப்பீட்டளவில் யாருடைய நெருக்குதலுக்கும் அடிபணிய வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது.
இந்தியா 1947-ல் போலி சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சுயசார்பு என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. தனது தேவைகளுக்கான பொருட்களுக்காகவும், தொழில்நுட்பத்திற்காகவும் பிற ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. இதன் விளைவாகத் தான் இன்று “சீனப் பொருட்களை புறக்கணிப்போம்” என்ற முழக்கம் மோடியின் பக்தர்களால் வெற்று வார்த்தைகளாக முணுமுணுக்கப்படுகிறது.
“மருந்து மாத்திரை தேவையில்லை; ஓம் நமோ நாராயணாய நமோ என்று 108 முறை சொல்லுங்கோ, கொரோனா தானாக ஓடிடும்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜீயர் சடகோபன்.
இவர் சொன்ன மறுகணமே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நிரூபணமாகியிருக்கிறது. 108 தடவை தங்கள் மந்திரத்தை உச்சரித்தார்களோ இல்லையோ, 108 ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.
இவர்கள்தான் வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள்; சிலர் குடிக்கவும் செய்து, பரலோகமும் சென்றுவிட்டார்கள்.
மந்திரத்தின் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று சொன்ன சடகோபனுக்கு என்ன தண்டனை?
கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த சில நாடுகளின் தலைவர்கள், மக்களின் கோபம் தங்கள் மீது பாய்ந்து விடுமோ என அஞ்சுகின்றனர். மக்களின் கோபத்தை மடைமாற்ற பல்வேறு சாகச நடவடிக்கைகளில் ஈடு படுகின்றனர். நிறவெறி இன வெறியை தூண்டுகின்றனர். அண்டை நாடுகளுடன் மோதல்களை உருவாக்குகின்றனர். வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர்.
டிரம்பின் அடாவடித்தனம்
இத்தகைய முயற்சிகளை அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்டு டிரம்பு கடைபிடிக்கிறார். கொரோனா பரவலை தடுப்பதில் அலட்சியம் காட்டிய அவர், அது நாடு முழுவதும் பரவிய உடன், மக்களை திசை திருப்ப, சீனா மீதும், உலக நல நிறுவனம் மீதும் வெறுப்பு உணர்வை தூண்டிவிடுகிறார். ஆனால், அமெரிக்க மக்கள் டிரம்பின் மோசடிவார்த்தைகளால், ஏமாந்துவிடவில்லை. டிரம்ப் அரசுக்கு எதிராக அமெரிக்க மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் மாபெரும் கண்டனப் பேரணி உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மக்களை ஏமாற்ற, ஹைட்ராக்ஸி குளோரோக் குயின், கொரோனாவை தடுக்கும் மாபெரும் அருமருந்து என்றார் டிரம்ப். கடவுள் கொடுத்த அன்பளிப்பு என்றார். திடீரென பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் மேற்கொண்டது, மருத்துவ உலகத்தில், கடும் கண்டனத்திற்குள்ளானது.
அடுத்து, கிருமிநாசினிகளை ஊசி மூலம் செலுத்தினால், கொரோனாவை குணப்படுத்த முடியும் என்ற அபாயகரமான கருத்தை வெளியிட்டார். டிரம்பின், முட்டாள்தனமான இந்த அறிவிப்பை நம்பிய சிலர், கிருமிநாசினிகளை இரத்தக் குழாய்களில் மருந்தாக செலுத்திக் கொண்டு, பரிதாபமாக இறந்து போனார்கள்.
மோடியின் திசை திருப்பும் முயற்சிகள்
டிரம்பைப் போலவே, கொரோனா தடுப்பில் தோல்வி அடைந்த மோடி அரசு பல்வேறு போலி அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. தவறான அறிவியல் கருத்துக்களை பரப்புகின்றது. இது தவிர, பல்வேறு திசை திருப்பும் முயற்சிகளையும் மோடி அரசு மேற்கொள்கிறது.
“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக நாம் திகழ்கிறோம். இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு. உலகமே நம்மை பாராட்டுகிறது. யோகாவைப் பற்றியும், ஆயுர்வேதா பற்றியும் உலகத் தலைவர்கள் என்னிடம் கேட்கின்றனர்” என்றெல்லாம் அளந்து விடுகிறார், நமது பிரதமர் மோடி. அப்படி யாரெல்லாம் கேட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை!
ஆனால் அதே சமயம், ஆயுஷ் அமைச்சரகம், “ஆயுஷ் மருந்துவ முறை மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும், என , ஊடகங்களில் யாரும் உரிமை கொண்டாடவோ, விளம்பரம் செய்யவோ, தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு செய்வதை மாநில அரசுகள் தடுத்திட வேண்டும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எல்லா மாநில அரசுகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா கொரோனாவை தடுக்குமா?
யோகாவை, ஒரு உடற் பயிற்சி என்றளவில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர,யோகா செய்வதால் கொரோனா பரவலை தடுக்க இயலாது. யோகாவை தனது இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு தொடர்ந்து சங் பரிவாரங்கள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில்,கொரோனா மக்கள் மனங்களில் உருவாக்கியுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி, யோகாவை திணிக்கும் முயற்சியை மோடி மேற்கொள்கிறார்.
உண்மையில்,யோகா என்பது சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றிய ஒன்று என்பதை வசதியாக மறைத்துவிட்டு,அதை இந்துத்துவப் பார்ப்பனிய கருத்தியலுக்கு,சங் பரிவாரங்கள் பயன் படுத்துகின்றன.
ஆரியர்களின் வருகைக்கு முன்பே யோகா இந்தியாவில் இருந்துள்ளது என்பதை வரலாற்று ரீதியாக அறிய முடிகிறது. யோகாவை இந்து மதத்திற்குள் அடைக்கும் முயற்சிகள் உள்நோக்கம் கொண்டது.
ஆயுர்வேதா கொரோனாவை தடுக்குமா?
அடுத்து, ஆயுர்வேதா குறித்தும் மோடி பேசுகிறார். ஆயுர்வேதா பண்டைய இந்திய மருத்துவ முறை.அன்றைய காலத்தின் அறிவியல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், கொரோனாவிற்கு ஆயுர்வேதாவில் தீர்விருக்கிறது. கொரோனா வராமல் தடுக்க அது உதவுகிறது என மோடி போதிய, ஆய்வுகளிலின்றி கூறுவது சரியல்ல.
மோடி அரசு, இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தை மேற்கத்திய மருத்துவமாகவும், ஆங்கில மருத்துவமாகவும், கிறிஸ்தவ மருத்துவ முறையாகவும் பார்க்கிறது.
ஆயுர்வேதாவை, இந்திய மருத்துவ முறை என்பதைத் தாண்டி, அது ஒரு இந்து மருத்துவ முறை எனக் கருதுகிறது. அதை இந்து மருத்துவ முறையாக மாற்றிட முயல்கிறது. உண்மையில் ஆயுர்வேதா என்பது ஒரு இந்து மருத்துவ முறை அல்ல.
பஞ்ச கவ்யம் கொரோனா மருந்தாகிறது
தற்பொழுது, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், ஆயுர்வேதா முறையில் பசு மாட்டு சாணம், பால், சிறு நீர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவை அடங்கிய பஞ்ச கவ்யத்திலிருந்து கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, “ராஷ்ட்ரிய காமதேனு அயோக்” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில், அது நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
கோமியம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நீரில் கொரோனாவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என ஆராய்ச்சி செய்யுமாறு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக கழகத்திடம் வற்புறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு, தடுப்பூசிகளை தயாரிக்கின்றன. ஆனால், இந்தியாவிலோ, பசு மாட்டுச் சாணிக்குள் இந்திய மருத்துவ அறிவியலை, இந்துத்துவா சக்திகள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.
நவீன அறிவியல் மருத்துவத்தின் இருண்டகாலம் மோடி அரசின் ஆட்சிக் காலம் எனக் கூறும் அளவிற்கு, நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
“விளக்கேற்றல் மூலம்”, கொரோனா என்ற இருளை அகற்ற முடியும் என மோடி அரசு பரப்புரை செய்தது. மக்களை விளக்கேற்ற வைத்தது. அதற்கு குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில் தவறான விளக்கங்கள், வழங்கப்பட்டன.
தமிழக முதல்வரோ, “கொரோனா எப்பொழுது கட்டுப் படும்?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “கடவுளுக்குத்தான் தெரியும்” எனக் கூறிவிட்டார். “மூன்று நாளில் கட்டுப்படும்” என ஏப்ரல் மாதம் கூறிய அவர், இப்பொழுது கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு, நழுவிக் கொண்டார்!
தமிழக அரசின் தவறான அணுகுமுறை
இந்நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகளில் சிலரும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள சிலரும், கொரோனாவை தடுக்க, ‘திரள் காப்பை’ ( Herd Immunity) உருவாக்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு ஆபத்தான கருத்தாகும்.
சமூக காப்பு என்றால் என்ன?
ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் பொழுது, நமது உடலின் காப்பு அமைப்பு , அந்த வைரஸிற்கு எதிராக, எதிர்ப்பொருட்களை உருவாக்குகிறது. அந்த எதிர் பொருட்களால் மீண்டும் அந்த வைரஸ் நமது உடலில் தொற்ற இயலாது. இது போன்ற நிலை மக்கள் தொகையில் ஒரு கணிசமான பகுதியினருக்கு ஏற்பட்டுவிட்டால், மற்றவர்களுக்கு அந்த வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. இதைத்தான் திரள் காப்பு என்கிறோம் ( திரள் காப்பு என்பதை விட, சமூகக் காப்பு என்பதே சரியான சொல்லாடல்).
இந்த சமூகக் காப்பை, தடுப்பூசிகள் மூலமும் வெற்றிகரமாக பெற முடியும். அதுதான் நல்லது.
மக்கள் தொகையில் 60 விழுக்காடு நபர்களுக்கு, கொரோனா பரவல் ஏற்பட்டு விட்டால், அது மூலம் சமூகக் காப்பு ஏற்பட்டு விடும். அதன் மூலம் மீதமுள்ள 40 விழுக்காட்டினருக்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்பது அரசு அதிகாரிகளால் முன் வைக்கப்படும் கருத்து.
சமூகக் காப்பு பெறுவது எளிதா?
வைரஸை தொற்ற விட்டு, சமூகக் காப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல. சமூகக் காப்பு ஏற்பட நீண்ட காலம் ஆகலாம். அதற்குள் கொரோனா போன்ற தொற்றில், லட்சக் கணக்கான மக்கள் இறக்க நேரிடலாம்.
அடுத்து, கொரானாவிற்கு, சமூகக் காப்பு ஏற்படுமா என்பதும் உறுதியாகவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வேர்டு தொற்றியல் நிபுணர் மார்க் லிப்ஸ்டிச் “இந்த வைரஸ் தொற்றுக்குப் பிறகு நோய் எதிர்ப்பொருள் உருவாகும். அது ஓரளவு பாதுக்காப்பை குறுகிய காலத்திற்கு தரக்கூடும். அதன் பின் அந்த பாதுக்காப்பு குறைந்துவிடும் ’’ எனக் கூறியுள்ளார். அதை தற்பொழுது சில ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இந்த வைரஸ் திடீர் மாற்றத்திற்கு உள்ளானால், ஏற்கனவே உருவான சமூகக் காப்பாலும் கூட, நமக்கு பயன் கிட்டாமல் போகலாம்.
சமூகக் காப்பு ஏற்பட, கொரோனா தொற்றால், போதுமான அளவிற்கு எதிர்பொருள் உருவாகுமா? அது மறு தொற்றை தடுக்கும் அளவிற்கு ஆற்றலுடன் இருக்குமா? என்பது குறித்து நடந்துவரும் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இங்கிலாந்தும், ஸ்வீடனும் சமூகக் காப்பை உருவாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த நினைத்தன. அதானல் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகின.
சீனாவின், வூஹான் நகர மக்களுக்கே இன்னும் சமூகக் காப்பு உருவாகவில்லை. எனவே, எந்த வித அடிப்படை ஆதாரங்களோ, தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி, சமூகக் காப்பை உருவாக்க முயல்வது மிகப்பெரிய ஆபத்துக்கு வழி வகுக்கும்.
சமூகக் காப்பும் மற்ற நோய்களும்
சீனாவில் 2002 -04 ஆம் ஆண்டுகளில் பரவிய “சார்ஸ்க்கு” உருவான எதிர்ப்பொருள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வில்லை. சார்ஸ், எபோலா காய்ச்சல், நிபா வைரஸ் நோய், மெர்ஸ் போன்றவற்றை சமூககக் காப்பை உருவாக்கியதின் மூலம் கட்டுப் படுத்தவில்லை.
ஆபத்தான வழிமுறை
இந்த சமூகக் காப்பை பெற, எளிதாக, கடுமையான பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதியினரை தொற்றிலிருந்து பாதுக்காக்க வேண்டும். அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய, கோடிக்கணக்கான சர்க்கரை, மிகை இரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக நோயாளிகளை பாதுக்காப்பது எளிதானதல்ல.
முதியோர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாத்திட கோடிக்கணக்கான வீடுகளில் தனி கழிப்பறைகளுடன் கூடிய தனி அறைகள் இல்லை. இந்நிலையில் சமூகக் காப்பை பற்றி பேசுவது அபத்தமானது.
மாறாக, துரித நடவடிக்கை, நோயாளிகளை கண்டறிதல், தனிமைப் படுத்தல், சிகிச்சை வழங்கல், அவர்களுடன் தொடர்புடையோரை கண்டறிதல், தனிமைப் படுத்தல் போன்றவற்றின் மூலம் தான் கட்டுப்படுத்த முடிந்தது. உலக நல நிறுவனமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
தடுப்பூசிகள் தான் சரியான தீர்வு
கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற தடுப்பூசிகள் தான் சரியான தீர்வாக அமையும். பெரியம்மையை தடுப்பூசி மூலம்தான் ஒழித்தோம். போலியோ, கக்குவான், தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, சின்னம்மை , மஞ்சட்காமாலை பி போன்ற பல நோய்களையும் தடுப்பு மருத்துகள் மூலமே கட்டுப் படுத்தியுள்ளோம்.
எனவே தடுப்பு மருந்துகள் (Vaccine) மூலம் கிடைக்கும் சமூகக் காப்புதான் பாதுக்காப்பானதாக இருக்கும்.
தடுப்பூசிகளின் வருகைக்காக உலகம் காத்திருக்கிறது!
(நன்றி: ஜன சக்தி )
குறிப்பு : செழுமை படுத்தப்பட்டது.