Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 249

சாத்தான்குளம் படுகொலை – மதுரை, நெல்லை, விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் படுகொலைக்கு காரணமான போலீசு – நீதித்துறை – சிறை நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை, நெல்லை மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்.

***

  • சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை லாக்-அப் படுகொலை செய்த குற்றவாளி போலிசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்! சிறையிலடை!
  • குற்றவாளிகளைப் பாதுகாக்க பொய் அறிக்கை விட்ட எடப்பாடியே பதவி விலகு!

என்கிற முழக்கத்தை முன்வைத்து 26/06/2020 அன்று மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பொது முடக்கம் அமலில் உள்ள இந்தத் தருணத்தில் திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் அப்பகுதியைச் சுற்றியிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரைப் பகுதி
தொடர்புக்கு : 6383243495

***

நெல்லையில் இன்று (26.06.2020) மக்கள் அதிகாரம் தோழர்கள் கண்டன முழக்கம் எழுப்பி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்த காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை.

***

சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை! கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !

மருத்துவ சிகிச்சை அளிக்காத நீதித்துறை நடுவர், அரசு மருத்துவர், சிறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடு!

வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்!

போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்! வெள்ளிக்கிழமை 26.06.2020 அன்று காலை 11:30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! PRPC மனு நீதிமன்றத்தில் விசாரணை !

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் எடுக்கக் கோரியும், தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் சிகிச்சையை நோயாளிகள் தலையில் கட்டுகின்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய சென்னைக்கிளை செயலாளர் வழக்கறிஞர் திரு. ஜிம்ராஜ் மில்டன் இரண்டு பொதுநல வழக்குகளை (WP.7414/2020 & WP.7456/2020) தாக்கல் செய்திருந்தார்.

இதில் முதல் வழக்கில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பதில் மனு தாக்கல் செய்யாமல் மத்திய அரசும் தமிழக அரசும் இழுத்தடித்து வருகின்றன. மேலும் மருத்துவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்கக் கோரிய கோரிக்கையில் தமிழக அரசை status report தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு போதிய விவரங்கள் இன்றி status report தாக்கல் செய்ததால் நீதிமன்றம் கண்டித்திருந்தது.

அதற்கு பின்னர் Additional Status Report தாக்கல் செய்திருந்தது. அதிலும் போதிய விவரங்கள் இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டி நமது தரப்பில் Objections தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் திரு.ரவீந்திரநாத் அவர்களும் இவ்வழக்கில் நமது நிலைப்பாட்டை ஆதரித்து Supporting Affidavit தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தமிழக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் திருமதி. பீலா ராஜேஷ் அவர்கள், நாம் தாக்கல் செய்த objectionக்கு பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் WP.7456/2020 வழக்கில் மத்திய அரசும், தமிழக அரசின் சார்பில் தற்போதை சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் எதிர்மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் சுப்பையா & கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக 23.06.2020 அன்று விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தாக்கல் செய்த எதிர்மனுக்களுக்கு நமது தரப்பில் பதிலுரை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூடுதல் ஆவணங்களும் (5வது தொகுப்பு) தாக்கல் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஏற்கனவே 17.06.2020 அன்றைய விசாரணையின் போது, இதே போன்ற வழக்கினை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுவும் அது போன்ற வழக்கு என்று கூடுதல் அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.S.R.ராஜகோபால் வாதிட்டார். அதற்கு பதிலளித்து வாதிட்ட நமது தரப்பு வழக்கறிஞர் திரு.பாலன் ஹரிதாஸ் அவர்கள் “ஏதாவது வழக்கினை சொல்லி எங்கள் வழக்கினை திசைதிருப்பக்கூடாது, முதலில் வழக்கில் எங்களது வாதத்தை விரிவாக கேளுங்கள். அதன்பின் வழக்கில் முகாந்திரம் இல்லையெனில், தள்ளுபடி செய்யுங்கள். ஏற்கனவே இதே உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் 5 முறை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். நீதிபதிகள் அதனை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தனர்.

வழக்கு விசாரணை 19.06.2020 மற்றும் 23.06.2020 ஆகிய இரு தேதிகளிலும் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் 07.07.2020 அன்று விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

படிக்க:
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மார்ச் 27 ம் தேதியிலிருந்து இன்று வரை நமது வழக்கில் 5 உத்திரவுகளை நீதிமன்றம் வழங்கி உள்ளது. பேரிடர் காலத்தை அரசு எதிர் கொள்வதில் உள்ள பிரச்சனைகளை முன்கூட்டியே எடுத்து சொல்வது, அவ்வப்பொழுது நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும் கடும் உழைப்பை செலுத்தி உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பித்து சமூக கடமையை ஆற்றுவதே நமது நோக்கம். அந்த வகையில் ஆதாரங்களை பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் இது வரை 5 தொகுப்புகளாக சமர்பித்து உள்ளோம். ஆனால் அரசோ தங்களுக்கு உதவும் வாய்ப்பாக இதனை பார்க்காமல், எதிர்நிலை எடுத்து வழக்கை முடித்து விடவேண்டும் என வினையாற்றுவது ஆபத்தான சூழலில் வதைபடும் மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்பதே நமது பார்வை.

நாம் போராடுவது, உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காகவும், கொரானாவிலிருந்து மக்கள் உயிரை காக்கும் மருத்துவத்திற்கும் தான் என்பதால் இடையூறுகளை கடந்து போக வேண்டும் என்பதை உணர்ந்து உள்ளோம். அதனால் இதனை உணர்ந்த மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் ஆதரவோவோடு பயணிப்போம்.

***

கொரோனா சிகிச்சையும் ! கட்டணம் வசூலும் ! என்ற தலைப்பில் ஜூன் 23, 2020 அன்று சத்தியம் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மில்டன் பங்கேற்றார் !

கரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களையும், மருத்துவ‌த்துறை சார்ந்த அத்தனை ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி, இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என நமது பொதுநல வழக்கில் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை வழக்கறிஞர் மில்டன் முன்வைக்கிறார்.
பாருங்கள்! பகிருங்கள்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக்கிளை.

பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !

2

காஷ்மீரிலிருந்து இரண்டு பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் பாதுகாப்பாக டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.
கடந்த 2019 ஜனவரி 11-ம் தேதியன்று தெற்குக் காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஜம்மு காஷ்மீர் – டில்லி இணைப்புச் சாலையில் விரைந்து வந்த ஒரு காரை மிர் பஜார் சோதனைச் சாவடியில் தடுத்து விசாரித்தது போலீசு. காரில் இருந்த டி.எஸ்.பி தேவேந்திர சிங்-கிடம் விசாரித்து காரை சோதனையிட்ட போலீசிடம் இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள் சிக்கியதைத் தொடர்ந்து, தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

தேவேந்தர் சிங்குடன் அந்தக் காரில் பயணம் செய்த லஷ்கர் – ஈ – தொய்பாவின் முக்கியத் தளபதியான நவீது பாபா மற்றும் ஹிஸ்புல் – முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த அட்லஃப் மற்றும் இர்ஃபான் மிர் என்ற வழக்கறிஞர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தேவேந்தர் சிங்கின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இரண்டு கைத்துப்பாகிகளும் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் வாக்குமூலங்களின்படி, ஸ்ரீநகர் மற்றும் தெற்குக் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக பல தேடுதல்கள் நடத்தி, பல இடங்களிலிருந்து வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

தேசபக்தியை குத்தகைக்கு எடுத்து விவாதங்களை நடத்தும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் இந்த விவகாரத்தை சாதாரண செய்தியாகக் கடந்து சென்றன.

இந்தக் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காஷ்மீர் டிஜிபி விஜயகுமார், பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில், இது மோசமான குற்றம் என்றும், தேவேந்தர் சிங்கை ஒரு பயங்கரவாதியை விசாரிப்பது போலவே விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறிய ஒரே வாரத்தில் இந்த வழக்கை காஷ்மீர் போலீசிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அவசர அவசரமாக மாற்றியது மோடி அரசு.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14, 19 ஆகிய தேதிகளில் தேவேந்தர் சிங் மீதும், இர்ஃபான் மிர் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்த டில்லி போலீசின் சிறப்புப் பிரிவு ஜம்முவின் ஹிரா நகர் போலீசு நிலையத்தில் இருந்து டில்லிக்கு அழைத்து வந்தது.
தேவேந்திர சிங், டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட இணையதளத்தின் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் பேசியதாக போலீசு நீதிமன்றத்தில் கூறியது.

இந்திய தண்டனைச் சட்டம் 120B-யின் (கிரிமினல் சதி) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இவர்கள் இருவரையும் காவலில் எடுத்தது டில்லி போலீசு. காவலில் எடுத்து 90 நாட்கள் ஆன நிலையில், டில்லியைத் தாக்க பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் கொண்டு வந்து கையும் களவுமாக மாட்டிய இருவர் மீது டில்லி போலீசு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் தேவேந்தர் சிங் மற்றும் இர்ஃபான் மிர் ஆகிய இருவருக்கும் பிணை கோரி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் டில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பிணை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் சொந்தப் பிணை ரூ. 1 லட்சம் மற்றும் வெளிநபர் பிணையாக இரண்டு பேரிடம் தலா ரூ. 1 லட்சம் பிணை பெற்று அவர்களை வெளியே விட உத்தரவிட்டுள்ளது. எனினும் இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பதிவு செய்த வேறு ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் இவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது என்.ஐ.ஏ.

படிக்க:
சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
♦ சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்

கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய புலனாய்வு முகமை மோடி – அமித்ஷாவின் வளர்ப்புப் பிராணியாகவே மாறியிருப்பதற்கு ‘முன்னாள்’ பயங்கரவாதியும் இந்நாள் போபால் தொகுதி எம்.பியுமான பிரக்யா சிங்கே சாட்சி. இந்த வழக்கிலும் தேசிய புலனாய்வு முகமை தனது எஜமானரது உத்தரவுக்கு ஏற்பவே நடந்து கொள்ளும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

கைது நடந்த மூன்றாம் நாளிலேயே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான சுவராஜ்யா, பண ஆசைக்காகவே தேவேந்தர் சிங் இந்தப் பாதகச் செயலை செய்ததாக உளவுத்துறை விசாரணையை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறது. ஐ.பி, ரா உள்ளிட்ட உளவு அமைப்புகளின் விசாரணையின் முடிவில், ரூ. 12 லட்சம் பணத்துக்காக இந்தக் காரியத்தை செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக தேவேந்தர் சிங் கூறியதாகக் கூறியிருக்கிறது.

அதாவது வெறுமனே பணத்துக்காகத் தான் தேவேந்தர் சிங் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பதோடு இந்த விசாரணை NIA-வால் சுருக்கமாக முடிக்கப்பட்டு விடலாம் என்பதை மட்டுமே நம்மால் இப்போதைக்கு அனுமானிக்க முடிகிறது.

காஷ்மீரில் பிரிவு-370 நீக்கத்துக்குப் பிறகு பார்வையிடவந்த, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி-க்களுடன் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்த தேவேந்தர் சிங்.

தேவேந்தர் சிங் அழைத்துச் சென்ற பயங்கரவாதி நவீது பாபாவின் தலைக்கு ஜம்மு காஷ்மீர் போலீசால் நிர்ணயிக்கப்பட்ட விலையே ரூ. 20 லட்சம் எனும் போது தேவேந்திர சிங்கிற்கு வெறும் ரூ. 12 லட்சத்துக்காக தனது வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தேவேந்தர் சிங் வெறுமனே பணத்திற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதையும், அதன் பின்னால் வேறு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார், ‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

கடந்த 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங்கின் வரலாறு மிகவும் முக்கியமானது. அப்பாவி காஷ்மீரிகளை கைது செய்து சித்திரவதை செய்வதிலும், பேரம் பேசிக் காசு பறிப்பதிலும் பெரும் கில்லாடி. இதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர்.

கடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘பாராளுமன்றத் தாக்குதலில்’, “தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக” தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு எழுதிய கடிதம் ஒன்றை அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் வெளியிட்டார். அக்கடிதத்தில் தேவேந்தர் சிங் பற்றி அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு தேவேந்தர் சிங் முகம்மது (பாராளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி) என்பவரை தம்மிடம் அறிமுகப்படுத்தி, அவரை டில்லிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வீடு பார்த்துக் கொடுத்து உதவி செய்யும்படி தன்னை பணித்ததாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். அதன் படி முகம்மதுவை தன்னோடு டில்லி அழைத்துவந்த அப்சல் குரு, முகம்மதுக்கு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பின்னர் ஒருநாள் முகம்மது கேட்டுக்கொண்டதற்கிணங்க கார் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், டில்லியில் பலரையும் சந்திக்க அழைத்துச் சென்றதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னிடமும் முகம்மதுவிடமும் தேவேந்தர் சிங் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் வெளியான பின்னும் கூட தேவேந்தர் சிங்கின் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே அப்சல் குரு சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த விவகாரங்களை சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் தேவேந்தர் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்ததாக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் சமயத்திலும் தேவேந்தர் சிங் புல்வாமா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த பகுதியும் படைகளின் நகர்வுக்காக முழுப் பாதுகாப்போடு பேணப்பட்டு வந்த சூழலில், 300 கிலோ வெடிமருந்து கார் எப்படி உள்ளே வந்தது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கூற மறுக்கிறது இந்திய அரசு.

இறுதியில், கடந்த ஜனவரியில் டில்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆயுதங்கள், தீவிரவாதிகள் சகிதமாக டில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் போலீசு தேவேந்தர் சிங்கை கைது செய்திருக்கிறது.

மேற்சொன்ன மூன்று சம்பவங்களிலும் பொருட்களையும் ஆட்களையும் பத்திரமாக வழியனுப்பி வைக்கும் வேலையை தேவேந்தர் செய்திருக்கிறார் என்பதை அனுமானிக்க முடிகிறது. தனது போலீசு பதவியின் காரணமாக யாரும் தமது வாகனத்தை சோதனையிட மாட்டார்கள் என்ற கணக்கில் ‘ஒரு திட்டத்தை’ நிறைவேற்ற முன் வந்திருக்கிறார்.

ஒருவேளை தேவேந்தர் சிங் சிக்காமல் தப்பியிருந்திருந்தால், டில்லி தேர்தலில் வேறு முடிவு வந்திருக்கலாம். ‘துரதிர்ஸ்டவசமாக’ சிக்கிவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்கலாம் என்பதற்கு தற்போது டில்லி போலீசு, டில்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் ‘தவறிய’ நிகழ்வே ஒரு சான்று.

சொராபுதீன், இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா, நாட்டின் நலனுக்காகவே தான் தனது பணியைச் செய்ததாகவும், தன்னால் ‘பலனடைந்தவர்கள்’ வெளியே நன்றாக இருப்பதாகவும் கூறினார். அதன் பிறகு அவர் வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு சிபிஐ-யால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். தேவேந்தர் சிங்கும் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விரைவில் ‘தேசபக்தராக’ வெளியே வரலாம் ! அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, த வயர். 

சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

PP Letter headபத்திரிக்கைச்செய்தி

25.06.2020

சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை!
கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கிரிமினல் போலீசு செல்போன் கடை நடத்திய தந்தை ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். எதிர்த்து பேசியதால் பெனிக்ஸின் ஆசனவாயில் பகுதியில் லத்தியால் தாக்கியுள்ளனர்.

இருவரும் போலீசிடம் தகராறு செய்து கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கொரோனா பரப்ப முயன்று அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சாலையில் விழுந்து புரண்டதால் காயம் ஏற்பட்டதாகவும் பொய் வழக்கினை போலிசு போட்டுள்ளது.

இரத்தப்போக்குடன் கடுமையான காயங்களுடன் நீதிபதி அவர்களை ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார். அரசு மருத்துவர் எந்த காயமும் இல்லை என சான்றளித்துள்ளார். சிறையிலும் காயங்களுடன் மருத்துவ சிகிச்சையின்றி அடைக்கப்பட்டுள்ளனர். போலீசை பகைத்து கொண்டு யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைதான் இப்படுகொலை காட்டுகிறது.

“சாதாரண மனிதன் இரண்டு பேரை அடித்து கொன்றால் என்ன தண்டனையோ அது கொலைகார போலீசுக்கு வழங்கப்பட வேண்டும்..” என இறந்தவர் சகோதரி கதறுகிறார். ஒரே நேரத்தில் மகனையும், கனவனையும் இழந்து குடும்பமே நிராதரவாக உள்ளது. போலீசாரின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் அலறல் சத்தம் வீதியில் கேட்டது என அருகாமையில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

முதல் நாள் இரவே இறந்தவர்களின் உறவினர் போலீசு நிலையம் சென்று அவர்களை விட்டு விடுங்கள் நாங்கள் தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து கொள்கிறோம் என கெஞ்சி கேட்டுள்ளார். போலீசார் காவல் நிலைய கேட்டை பூட்டி அவரை வெளியே துரத்தி விட்டனர்.

இப்படுகொலையை கண்டித்து இரண்டு நாட்களாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். எம்.எல்.ஏ, எம்பிக்கள் போராட்ட வரிசையில் நிற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் (புதன்) மொபைல் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு நடத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தி உள்ளனர்.

படிக்க:
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !

மதுரை உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு ஏற்று மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. தமிழக அரசு இரண்டு துணை ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்தும் மற்றவர்களை பணியிடமாற்றமும் செய்துள்ளது. அரசு வேலை, 20 இலட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சாத்தான் குளத்தில் மட்டுமல்ல கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசார் வரம்பற்ற அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கேட்பாரில்லாமல் மக்களை அடித்து துன்புறுத்துகின்றனர். பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கின்றனர். நீதிமன்றம் தனது இருகண்களை கட்டி கொண்டு போலீசாரின் அத்தனை ரவுடித்தனத்திற்கும் துணை போகிறது.

இதனை விடக்கூடாது. எதிர்கால பாசிச நடவடிக்கையின், போலிசு ராஜ்யத்தின் அறிகுறிகள் இவை. இவற்றுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் அழைக்கிறது .

  • சாத்தான்குளம் – தந்தை மகன் போலீசால் அடித்து கொலை!
  • கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் !
  • மருத்துவ சிகிச்சை அளிக்காத நீதிதுறை நடுவர், அரசு மருத்துவர், சிறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடு!
  • வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்!
  • போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 26.06.2020 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.இராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 99623 66321.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

கடன் வசூல் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் ! விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !

த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி ஆகஸ்டு 31 வரை தவணை மற்றும் வட்டியை வசூலிக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை மீறி பஜாஜ், மகேந்திரா, உஜ்ஜிவன், கிராம விடியல், கிராம சக்தி உள்ளிட்ட மைக்ரோ பைனான்ஸ் நுண்கடன் நிறுவனங்களும் வாகன கடன் நிறுவனங்களும் பொது மக்களிடம் கட்டாய வசூல் செய்தும் அவமானப்படுத்தியும் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்து வந்தனர்.

விருதாச்சலம் வட்டார மக்கள் அதிகாரம் சார்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் 23.06.2020 அன்று மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின், வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் தோழர் செந்தாமரைக்கண்ணன், கம்மாபுரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள், விஜயமாநகரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தனசேகரன் பூவனூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக சார் ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்

வினவு குறிப்பு: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயத்திருக்கும் கட்டணத்தை தாண்டி (அதுவே அதிகம்) எப்படி அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதை திரு. சரவணனது கீழ்க்கண்ட அனுபவம் காட்டுகிறது. ஒரு தொலைபேசி அழைப்புக்கே இப்படி அதிரடியாக கொள்ளைக் கட்டணத்தை சொல்லும் மருத்துவமனைகள் நேரில் சென்றால் எப்படி நடத்தும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு எந்த கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே கொரோனா பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளை முழுமையாகவோ, பகுதியளவிலோ அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தை கீழ்க்கண்ட அனுபவம் பளிச்சென சொல்கிறது.

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை கடந்த ஜூன் 6-ம் தேதியன்று வெளியிட்டது.

Grade- A1 மற்றும் A2ல் (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.7,500 ரூபாய் என்றும்…

Grade – A3 மற்றும் A4 அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade- A1 மற்றும் A2, Grade – A3 மற்றும் A4ல் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகப்பட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது…” என்றும் எச்சரித்தது தமிழக அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆனால் இப்போது சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தொகையையா வசூலிக்கிறார்கள்..?

ஒருவேளை அந்த பாழாய்ப் போன வைரஸ் எனக்கு வந்து தொலைந்துவிட்டால் எந்த ஆஸ்பத்திரிக்கு போய் படுப்பது என்று யோசித்துப் பார்த்தேன்.

வருடத்திற்கு 7000 ரூபாய்க்கு மெடிக்கல் பாலிஸி போட்டிருக்கிறேன். அதையும் வீணாக்கக் கூடாது. இந்தக் கொரோனா காலத்திலாவது அதனைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.

இதனால் முன்கூட்டியே ஒவ்வொரு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டணத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ளுவோம் என்றெண்ணி சென்னை மாநகரின் சில முக்கிய மருத்துவமனைகளுக்கு டயல் செய்து விசாரித்தேன்.

அதில் கிடைத்தத் தகவல்கள் இங்கே :

1. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நோயாளியின் நோயின் தீவிரத்தைப் பொறுத்துதான் சொல்ல முடியும். ஆனால் துவக்க நிலை தினமும் 10,000 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றார்கள்.

2. வடபழனி சூர்யா மருத்துவமனையில் ஒரு நாள் வாடகை 30,000 ரூபாய், ஐ.சி.யூ,வில் இருந்தால் 50,000 ரூபாய் என்று அடித்துச் சொன்னார் ஒருவர். “அரசு ஒரு தொகையை நிர்ணயம் செய்துள்ளதே ஸார்…?” என்று கேட்டேன். “அது எவ்வளவுன்னு எனக்குத் தெரியாது. நீங்கதான் சொல்லணும்…” என்றார்.

3. வடபழனி விஜயா மருத்துவமனையிலும் இதே அளவு தொகையைத்தான் சொன்னார்கள். 30,000 ரூபாயில் 50,000 ரூபாய்வரையிலும் ஆகும் என்றார்கள். “அரசு சொன்ன தொகை” என்றவுடன்.. “அதெல்லாம் இங்க இல்லை ஸார்…” என்று சொல்லி பட்டென்று போனை வைத்துவிட்டார்கள்.

4. வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஒரு நாள் வாடகையாக 40,000 ரூபாய்தான் குறைந்தபட்சமாம். ஐ.சி.யூ.வில் இருந்தால் 50000 ரூபாயாம்.

5. தி.நகர் பாரதிராஜா மருத்துவமனையில் கேட்டபோது “நோயாளியைப் பார்த்த பின்புதான் ஸார் சொல்ல முடியும். இப்போதைக்கு போனில் பீஸையெல்லாம் சொல்வதற்கில்லை…” என்றார்கள்.

6. மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கேட்டபோது அரசு நிர்ணயித்த அதே தொகையைத்தான் வசூலிப்பதாகச் சொன்னார்கள். துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு 7500 ரூபாய்தானாம். ஐ.சி.யூ.வில் இருப்பவர்களுக்கு 15,000 ரூபாய்தானாம்..

7. செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேட்டபோதும் “அரசு நிர்ணயித்துள்ள அதே தொகையைத்தான் ஸார் வசூல் பண்றோம்….” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொண்டார் ஒருவர்.

8. மயிலாப்பூர் சி.எஸ்.ஐ.கல்யாணி மருத்துவமனையில் 7,500 மற்றும் 20,000 ரூபாய் வசூலிப்பதாகச் சொன்னார்கள்.

8. அடையாறு மலர் மருத்துவமனையில் 5,800 ரூபாயில் இருந்து பல்வேறு பேக்கேஜ்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகும், “நோயாளியைப் பார்த்த பின்புதான் அது பற்றி சொல்ல முடியும்” என்றார்கள்.

9. நந்தனம் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் பல பேக்கேஜ்கள் இருப்பதால் “நோயாளியைப் பார்த்த பின்புதான் சொல்ல முடியும்…” என்றார்கள்.

10. சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெறும் 4,000 ரூபாய்தான் வசூலிப்பதாக காத்து வாக்கில் செய்தி காதில் வந்து விழுந்தது. பல முறை போனில் தொடர்பு கொண்டும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை..!

ஆக, மொத்தம் நாம் விசாரித்தவரையில் இரண்டே இரண்டு மருத்துவமனைகள்தான் அரசு நிர்ணயித்த அதே தொகையை வசூலிப்பதாக சொல்கின்றன.

படிக்க:
கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !
♦ சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

மீதியுள்ள மருத்துவமனைகள் வைரஸ் சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்கள் போக்கில்தான் வசூலிக்கிறார்கள்..!

நான் வைத்திருக்கும் HDFC ERGO Policy எல்லா இடங்களிலும் ஏற்கப்படுகின்றன என்றாலும் “கூடுதலாக கொஞ்சம் தொகையை நீங்க கைக்காசாகக் கொடுத்தாக வேண்டும்…” என்கிறார்கள்.

தி.நகர் பாரதிராஜா மருத்துவமனையில் “எந்த மெடிக்கல் பாலிஸியையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ரெடி கேஷ்தான் ஸார். நீங்க அதுக்கப்புறம் பாலிஸிக்கு அப்ளை செஞ்சு அவங்ககிட்ட வாங்கிக்குங்க…” என்று வித்தியாசமான ஒரு விஷயத்தைச் சொன்னார். இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

இந்தத் தொல்லையே வேண்டாம்டா சாமி.. பேசாமல் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் படுத்துக் கொள்ளலாம். அல்லது அரசு வைத்திருக்கும் முகாம்களில் ஐக்கியமாகிவிடுவோம் என்று நினைப்பவர்கள் அதையே செய்யலாம்.

ஏனெனில் வரக் கூடிய காலங்களில் சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே வெட்டியாக காசை செலவழிக்காமல் காசை சேமித்து வைக்கப் பழகுங்கள் தோழர்களே..!

பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அள்ளிக் கொடுக்கலாம்..

இல்லாதவர்களுக்கு இப்போதைக்கு அரசு மருத்துவமனைகள்தான் கண் கண்ட தெய்வங்கள்..!

நன்றி : ஃபேஸ்புக்கில் Saravanan Savadamuthu 

பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !

மிழ் அச்சு ஊடகத்துறையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்த இந்து-தமிழ் நாளிதழ், அச்சு ஊடகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடாகவும் பொய்ச்செய்திகளின் புகலிடமாகவும் பாஜக அரசின் அடிவருடியாகவும் மொத்தமாக மாறியுள்ளது.

ஆண்டின் சில வாரங்கள் நீங்கலாக, மொத்தமும் தமிழகத்துக்கு வெளியே குப்பை கொட்டி வந்ததாலும்; இத்தனை நாளாக, இணையத்தில் இவர்களது நடுப்பக்கக் கட்டுரைகளை மட்டுமே படித்து வந்ததாலும் இந்த உண்மை எனக்கு உறைக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டுக்கு வந்து முழுச் செய்தித்தாளாகப் படிக்கும்போதுதான், தனது தாய் நாளேடான ஆங்கில இந்து கடைபிடிக்கும் அடிப்படையான ஊடக அறங்கள் நெறிமுறைகள் எவற்றையும் பேணாது மாநகராட்சிக் குப்பைக்கிடங்கைவிட மோசமாகத் தமிழ் இந்து பேணப்படுகிறது என்கிற உண்மை உறைத்தது.

கொரோனாவுக்கான மருந்துக்காக ஆயிரமும் இலட்சமுமாகக் கோடிகளை வாரியிறைத்து உலகின் வல்லரசு நாடுகளெல்லாம் முடிவேதுமின்றிப் போராடிக் கொண்டிருக்க, இந்தியாவில் ஒரு டுபாக்கூர் நிறுவனம் அதற்கான மருந்தைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக எந்த அரசுத்துறை ஒப்புதலும் இன்றியே அறிவிக்கிறது. அவர்களது செய்திக்குறிப்பை PTI வாயிலாகப் பெறும் இந்து தமிழ் நாளேடு அப்படியே விளம்பரதாரர் பகுதி போல அதனைச் செய்தியாக வெளியிடுகிறது. மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு செய்தியில் பிற பார்வைகளையும் கோணங்களையும் மாற்றுக்கருத்தினையும் இறுதியில் இணைத்து வெளியிட வேண்டுமென்ற அடிப்படையான ஊடக நெறிமுறையைக் கூடப் பின்பற்ற முடியாத அளவுக்குப் பொறுப்பற்ற அசட்டைத்தனம்.

இந்தியாவின் தற்போதைய அரசைத் தலைமையேற்று நடத்துபவர் எப்படிப்பட்ட முட்டாள் என்றால், பண்டைக்காலத்திலேயே பாரதத்தில் சோதனைக்குழாய்க் குழந்தை, மரபணு அறிவியல், உறுப்புமாற்று அறுவை மருத்துவம் என அனைத்தும் இருந்ததாகவும் கர்ணனும் விநாயகரும் இவற்றுக்குச் சான்றுகள் எனவும் அறிவியல் மாநாட்டுக்கே சென்று பறைசாற்றும் அளவுக்கு வடிகட்டிய முட்டாள். ஆனால் இப்படியான முட்டாள் அரசின் ஆயுஷ் (இழவெடுத்த பெயர்) அமைச்சகமே பதறியடித்துக்கொண்டு பதஞ்சலி தன் மருந்தை (!?) விளம்பரம் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !
♦ ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை

ஆனாலும் பதஞ்சலி தயாரிப்பைப் பற்றி, கால் பக்கத்துக்கு அழகாக, வண்ணமயமான படத்துடன் அவர்கள் சொன்னதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பொறுப்புணர்வும் இன்றி ஒரு நாளிதழ் வெளியிடுகிறது என்றால் அதன் தரத்தை நீங்களே எடைபோட்டுக் கொள்ளலாம். ஆயுஷ் துறையின் எச்சரிக்கையைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் ஆறாம் தேதி சிறையிலடைக்கப்பட்ட ஆனந்த் டெல்டும்டே பற்றி இன்று வரை அவர் பெயரையே குறிப்பிடாமல் வெற்றிகரமாக மறைத்து வருவதும் தமிழ் இந்துதான். கருவுற்றிருந்த நிலையிலும் சான்றுகள் ஏதுமின்றியும் சிறையிலடைக்கப்பட்ட மாணவி சபூரா சர்கார் இரு மாதங்களுக்கு மேலாகச் சிறையில் வாடி நேற்று ஒருவழியாகப் பிணையில் வெளியாகியும் விட்டார். அதைப் பற்றியும் ஒரே வரி கூட ஒதுக்க தமிழ் இந்துவுக்கு மனம் இல்லை.

பாகிஸ்தான் வாழ்க என்று கத்திய ஒரே செயலுக்காக தேசத்துரோகப் பிரிவில் 19 வயதே ஆன சிறுமியான அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்கா வாழ்க, இலங்கை வாழ்க, வங்கதேசம் வாழ்க, பிரான்சு வாழ்க என்று கத்தினால் எப்படித் தேசதுரோகம் ஆகாதோ அதுபோலத்தான் இதையும் சட்டப்படிக் கருதவேண்டிவரும். ஏனெனில் சட்டப்படி பாகஸ்தான் வாழ்க என்பதை எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிரானது என்று வரையறுக்க இயலாது. பாகிஸ்தான் எதிரி நாடு என்று இந்தியாவின் எந்தச் சட்டமும் கூறவில்லை. எனினும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் பல மாதங்கள் அந்தச் சிறுமி கொடுமைக்குள்ளானார். பிணைக்காக விண்ணப்பித்தபோது, தப்பிச்சென்றுவிடக்கூடும் என்று மகா அபத்தமான ஒரு காரணத்தைக் காட்டி ஒரு ‘நீதியரசர்’ மறுத்தார். எப்படியோ பிறகு அச்சிறுமியும் வெளியே வந்தார். இந்த அமுல்யா தொடர்பான வழக்கிலும் தமிழ் இந்து கப்சிப்தான்.

இவை சில சோற்றுப் பதங்கள். இவர்களில் யாருக்கும் ஆதரவாக நடுப்பக்கக் கட்டுரைகள் கூட வேண்டாம், இவ்வாறு நடக்கிறது என்று செய்தியாகக் கூடத் தமிழ் இந்து வெளியிடாமல் புறக்கணித்து பாஜக அரசுக்கு வாலாட்டி வருகிறது. ஆனால் தேவையற்ற குப்பைகளை மலை மலையாகக் கொட்டுவதற்கு மட்டும் தயங்கவே தயங்காது.

தமிழ் வாசகப் பரப்பில் ஆங்கிலத்துக்கு நெருக்கமான அறிவார்ந்த உரையாடலை இந்துவின் தமிழ்ப் பதிப்பு உருவாக்கப் போகிறது என்று நினைத்த யாரும், அதற்கு முற்றிலும் நேரெதிராகத் திரும்பி, அது பதஞ்சலிக்குச் சொம்படிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பி.கு : மேலும் விரிவாக, தமிழ் இந்துவின் ஊடகச் சீர்கேட்டைப் பற்றியும், மிக அடிப்படையான ஊடக நெறிகளைக் கூட பின்பற்றாத தன்மை
பற்றியும் எழுதப் பலவற்றைச் சேகரித்து வைத்துள்ளேன். ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைகொண்டதுபோலத் தெரியாததால் எழுதுவதற்கு நாட்டம் ஏற்படுவதில்லை.

நன்றி : ஃபேஸ்புக்கில் Arunkumar Cheyyaru 

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

0

டுமலை சங்கர் படுகொலை வழக்கில், முதன்மைக் குற்றவளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்தியாவையே உலுக்கிய இந்த சாதி ஆணவப் படுகொலையில் ஏற்கெனவே திருப்பூர் செசன்ஸ் நீதிமன்ற வழங்கியிருந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலையில், சங்கர் என்ற தலித் இளைஞரையும் அவரது மனைவி கவுசல்யாவையை பட்டப்பகலில் கடைவீதியில் வைத்து கூலிப்படை கிரிமினல்கள் அரிவாளால் வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. பதிவு, தொலைகாட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யாவும், தலித் பின்னணியைச் சேர்ந்த சங்கரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் திருமணத்தை சங்கரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்ட போதிலும் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து கவுசல்யாவை சங்கரிடமிருந்து பிரிக்க கவுசல்யா குடும்பத்தினர் பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்து இருக்கின்றனர். இவை எதுவும் பயன்கொடுக்காத நிலையில் மேற்கூறிய படுகொலை நடந்துள்ளது.
இந்த சாதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கை திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதி ஆணவக் கொலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு. மேலும் இந்தப் படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலா தமிழ்வாணன், மதன் ஆகிய ஐவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதன் பின்னர் குற்றவாளிகள் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 22.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது.

கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு சிறைவாசலில் சால்வை போர்த்தும் சாதி வெறியர்கள்.

இந்தப் படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்தும், படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட கூலிப்படைக் கும்பலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டு கடுங்காவல் ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு..

தமது தீர்ப்பில், சின்னசாமிக்கும் இந்தக் கொலைக்குமிடையிலான தொடர்பு போதுமான ஆதாரங்களோடு நிரூபிக்கப்படவில்லை என்பதையே சின்னசாமியை விடுதலை செய்வதற்கான காரணமாகக் கூறியுள்ளது. மேலும் போலீசு தரப்பில் ஆதாரமாக இருந்த சி.சி.டி.வி-யின் வீடியோவை பரிசீலித்தவர் முறையான நிபுணர் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தையும் ஏற்றுக் கொண்டு, கொலை செய்த ஐந்து கூலிப்படையினருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் சின்னச்சாமி தரப்பிலிருந்தும் சாதிவெறியர்கள் தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட மிரட்டல்களை பொருட்படுத்தாமல், திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேரடி சாட்சியம் கொடுத்தவர் கவுசல்யா. தன்னையும், கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரையும் தனது தந்தை சின்னசாமி, தாய் அன்னலெட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோர் கொலை செய்யப் போவதாக தொடர்ந்து மிரட்டியதை நீதிபதி முன்னர் சாட்சியமளித்திருந்தார் கவுசல்யா. மேலும் இந்தக் கொலை நடத்தப்படுவதற்கு முன்னரே, பல்வேறு வழிமுறைகளில் சங்கரையும் கவுசல்யாவையும் பிரிக்க தனது குடும்பத்தார் முயற்சித்ததையும் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார் கவுசல்யா.

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

கவுசல்யா பாசமாக இருக்கும் அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரை வைத்து நைச்சியமாகப் பேசி அவரை மட்டும் தங்களது ஊருக்கு அழைத்து வந்து அவரை அங்கேயே முடக்க முயற்சித்தனர் சின்னச்சாமி குடும்பத்தினர். இதனை உணர்ந்த கவுசல்யா அங்கிருந்து ஒருவழியாகத் தப்பி வந்தார். அதன் பின்னர் சங்கரிடம் 10 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி கவுசல்யாவைக் கைவிட வற்புறுத்தினர். சங்கர் மறுத்திருக்கிறார். இவை அனைத்தையும் கவுசல்யா நேரடியாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இப்படி தாம் மேற்கொண்ட சாம, பேத, தான முயற்சிகள் எல்லாம் தோல்வியைத் தழுவிய நிலையில் கடைசியாக படுகொலையைக் கையில் எடுத்திருக்கிறது சாதிவெறி பிடித்த சின்னசாமி கும்பல்.

சின்னசாமியும் அவரது நெருங்கிய நண்பனான ஜெகதீசனும் இணைந்து சங்கரைக் கொலை செய்வது என்றும், தடுக்க வந்தால் கவுசல்யாவையும் கொலை செய்வது என்றும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜெகதீசன் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூலிப் படைக்கு முதல்கட்டமாக ரூ. 50,000-ஐ வங்கியில் இருந்து எடுத்துக் கொடுத்துள்ளார் சின்னச்சாமி. இந்தக் கொலை குறித்து திட்டம் தீட்ட பழனியில் ஒரு விடுதியில் அறையை எடுத்திருக்கிறார் சின்னசாமி. அங்கு சின்னசாமி உட்பட கொலைகாரர்கள் அனைவரும் கூடி கொலையை திட்டமிட்டுள்ளனர்.
சின்னசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.50,000 பணத்தின் வரிசை எண்களும் கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்களும் ஒரே எண்கள்தான் என்பதையும் ஆதாரப்பூர்வமாக போலீசு நீதிமன்றத்தில் முன் வைத்திருந்தது. மேலும் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் சின்னசாமி தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான். சின்னசாமியின் தொலைபேசிக்கு கூலிப்படையினர் ஐவரும் பேசியிருக்கின்றனர். அந்த ஆதாரத்தையும் போலீசு முன் வைத்திருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செசன்ஸ் நீதிபதி அலமேலு அவர்கள் சின்னச்சாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தார்.

எடுத்த பணத்தை எந்த இடத்தில் வைத்து சின்னசாமி குற்றவாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் கொடுக்கவில்லை என்றும் சின்னசாமி வீட்டு செலவுக்கு ரூ.50,000 எடுத்ததாக முன்வைத்த வாதத்தினை கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை முன்வைத்தது. இந்த வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.
தற்போது ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட கூலிப்படையினர் ஐந்து பேருக்கும் கொலை செய்யப்பட்ட சங்கருக்கும் எவ்வித முன் விரோதமோ, முன்பின் பழக்கமோ கிடையாது. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சங்கரிடம் வன்மம் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அதே சமயம் சின்னச்சாமி அந்த ஐந்து பேருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் வங்கியில் எடுத்த அதே பணம், கூலிப்படையினரிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இது தவிர கூலிப்படையினருடன் சின்னசாமி இருந்ததைப் பார்த்த சாட்சிகளும் இருக்கின்றனர்.

சின்னசாமி ஏற்கெனவே கவுசல்யாவையும் சங்கரையும் பிரிக்க முயற்சித்து இருக்கிறார். சங்கரையும் கவுசல்யாவையும் கொலை செய்துவிடுவதாக கவுசல்யாவிடமே கூறியிருக்கிறார். தம்மை தனது குடும்பத்தார் கடத்தியதாக கவுசல்யாவும், தமது மனைவியை மீட்டுத் தருமாறு சங்கரும் ஏற்கெனவே போலீசு நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கின்றனர்.

இத்தகைய சாட்சியங்கள், சங்கர் கொலையில் சின்னசாமிதான் சூத்திரதாரி என்பதை நிறுவுவதைக் கண்டுகொள்ளாமல், சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். சின்னசாமியை விடுதலை செய்ததோடு, அவரிடமிருந்து ஏதேனும் தண்டனைத் தொகை வசூலித்திருந்தால் அதனையும் திருப்பிச் செலுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சங்கர் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விவேகானந்தன் இந்த வழக்கைப் பற்றிக் கூறுகையில் “சின்னசாமியும் அவரது குடும்பத்தினரும் சங்கர் குடும்பத்தினரை பலமுறை மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் இக்கொலையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

தற்போது உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது ! சாதி ஆணவப் படுகொலைகளுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் இது !


– நந்தன்
செய்தி ஆதாரம்: த நியூஸ் மினிட். 

கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !

ரசு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவித்து, மக்களை முற்றிலும் வீட்டில் முடக்கியுள்ளதால், ரேசன் கார்டுக்கு ரூ. 1000 வீடு வீடாக தருவதாக ஊடகங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் அறிவித்து உள்ளனர்.

ஆனால், நடைமுறையில் கொரோனாவை பரப்புவது போல மக்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து பல பகுதிகளில் விநியோகித்து வருகிறார்கள்.

சென்னை வேளச்சேரி – ‍பள்ளிக்கரணை பகுதியில் பணத்தை விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர் ஒருவர் மட்டும் வந்துள்ளார். கோவிலில் உட்கார்ந்து கொண்டு மக்களை கூட்டமாக வரவழைத்து, அதிமுக நபருடன் சேர்ந்து பணத்தை விநியோகம் செய்துள்ளார். பகுதியில் வசிக்கும் நம்முடைய தோழர்கள் வெண்ணிலா, தெய்வீகன் இருவரும் போய் “பகுதியில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. வீடு வீடாக பாதுகாப்பாக கொடுக்காமல், இப்படி ஒரே இடத்தில் அனைவரையும் வரவழைப்பது சரியா?” என‌ கேட்டுள்ளனர். தான் வைத்திருக்கும் கருவியில் சார்ஜ் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏன் எற்கனவே போட்டு வரவில்லை? என்று கேட்டதற்கு முறையாக பதில் சொல்லவில்லை. மீண்டும் வேறு ஒரு வீட்டில் இருந்து கொண்டு வேலைகளை செய்துள்ளனர். பிறகு தோழர்கள், 100 -க்கு போன் செய்து, போலீசு வந்த பிறகு வீடு வீடாக பணம் விநியோகித்துள்ளனர்.

தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படும் ரேஷன் நிர்வாகம் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இன்று முகப்பேர் மேற்கு பகுதியிலும், சைதாப்பேட்டை பகுதியிலும் வீடு வீடாக பணம் விநியோகம் செய்யாமல். தெருவிற்கு ஓரிடத்திற்கு மொத்தமாக வரவழைக்கின்றனர். தோழர்கள் போய் கேள்வி எழுப்பினால், “எங்களுக்கு கொரோனா பரவிவிடும்” என்கின்றனர். மக்களுக்கு பரவினால், பிரச்சனை இல்லை போல! இதையெல்லாம் அதிமுக நபர்களை கூட வைத்து கொண்டு, இந்த வேலையை செய்கின்றனர்.

படிக்க:
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதின்றத்தின் அநீதியான தீர்ப்பு !
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !

கொரோனா இப்போதைக்கு முடிகிற பிரச்சனையில்லை. இன்னும் சில மாதங்களாவது நீடிக்க கூடிய பிரச்சனை. மக்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவனத்துடன் இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்கமுடியும். ஆகையால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கோருகிறோம். இப்படி கொரோனாவை பரப்புகிற செயல்பாடுகள் இருந்தால், உடனே எங்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

அமிர்தா,
மக்கள் அதிகாரம்,
ஒருங்கிணைப்பாளர்,
சென்னை மண்டலம்.
9176801656

படங்கள் : சென்னை முகப்பேர் மேற்கு பகுதி, சைதாப்பேட்டை

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! கொலைக்கான காரணத்தை சாதி ஆணவத்தில் இருந்து விடுதலை செய்தது அநீதி !

பத்திரிக்கை செய்தி

நாள் : 24.06.2020

“எனது பெற்றோர் தண்டனைக்குரியவர் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைபட்டிருக்காது. என் பெற்றோர்களான அன்னலட்சுமி, சின்னசாமி தண்டனை பெற்றால்தான் சங்கருக்கான நீதி கிடைத்தாக அமையும். சங்கர் கொலைக்கு நேரடி பொறுப்பானவர்கள் விடுதலை செய்ய பட்டவர்களா? சிறை தண்டனை பெற்றவர்களா?. “ – உயிர்பிழைத்த கௌசல்யாவின் கேள்விகளுக்கு நீதிமன்றத்தை நம்புவர்கள் பதில் சொல்லட்டும்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கின் மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் முதன்மைக்குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்ததுடன், சாதி ஆணவத்தினை நிலைநாட்டும் சதிக் குற்றத்தை இரத்து செய்து மற்றவர்களின் தண்டனையையும் குறைத்திருக்கிறது. விடுதலையான கவுசல்யாவின் தந்தை உள்ளிட்டோரை ஆதிக்க சாதிவெறியர்கள் சிறைவாசலில் பொன்னாடை போர்த்தி வரவேற்கின்றனர்.

ஆணவக்கொலை செய்யும் கூலிப்படையினர் இனி சாதி ஆதிக்கத்தை காக்கும் தியாகிகளாக கருதப்படுவார்கள். சாதியத்தை பேணிக்காக்கும் உடுப்புப் போடாத கலாச்சாரப் போலீசாக போற்றப்படுவார்கள்.

கண்முன்னே கொலை செய்யப்பட்ட சங்கரின் கொலைக்கு கவுசல்யாவின் நேரடி சாட்சியம் இருந்தும் அவர் அடையாளம் காட்டிய கொலையாளிக்கும் கவுசல்யாவின் தந்தைக்கும் கொலைக்கு முன்பு தொடர்ச்சியாக தொலைப்பேசி தொடர்பு இருந்த போதிலும் முக்கிய முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். சதிக் குற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதை வைத்து தண்டிக்கப்பட்டோரும் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலை ஆக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழகமே சாதி ஆணவப் படுகொலையாகப் பார்த்த உடுமலை சங்கர் வழக்கை சாதாரண கொலை வழக்காக மாற்றி கொலைக்கு காரணமான சாதி ஆணவக்காரர்களை விடுதலை செய்துள்ளது உயர்நீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்பு.

சாதித் தீண்டாமை ஏற்றத்தாழ்வு என்பது சட்டப்படியான பாதுகாப்பில் உள்ள இந்திய சாதிய சமூகத்தில் இதுவரை உள்ள வன்கொடுமை தடுப்புசட்டங்கள், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் செயல் படுவதற்கு தடையாக இருக்கக்கூடிய சாதீய மனநிலை, ஆதிக்க சாதி மத வெறிக் கட்டமைப்பு என்பது ஆணவப்படுகொலைக்கு புதிய சட்டம், சிறப்பு சட்டம் போன்றவற்றுக்கும் தடைகளாகவே இருக்கும்.

ஆணவப் படுகொலைகளுக்கும் சாதீயப்படுகொலைகளுக்கும் எதிராக வழக்கு போடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடைசியாக தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து களப் போராட்டம், சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.
கண்ணகி – முருகேசன் போன்ற எண்ணற்ற வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான எல்லா செயல்களையும் அரசும் நீதிமன்றமும் சேர்ந்தே செய்கின்றன. இதையெல்லாம் மீறி ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தண்டனை வாங்கித்தர முடியுமா? கீழ்வெண்மணியில் 44 உயிர்களை எரித்துக்கொன்றவனை விடுதலை செய்த இந்தக் கட்டமைப்பில் நீதி தானாக கிடைக்குமா?

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

பெரும் போராட்டங்களுக்குப் பின் தண்டனை பெற்ற மேலவளவு குற்றவாளிகள் எல்லாம் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றால் சாதீயப்படுகொலைகளுக்கு அரசே லைசென்ஸ் கொடுத்துவிட்டது போலாகின்றது. இருக்கின்ற அரசு கட்டமைப்பில் குற்றவாளிகள் தண்டிப்பது இருக்கட்டும். நாம் இனி எத்தனை சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் முருகேசன்களை இழக்க முடியும்?
பெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே நீதிமான்களுக்கு நீதியின் அரிச்சுவட்டினை பார்க்கும் வகையில் கண்களை திறக்க வைக்க முடியும் போல.

சாதியத்தை பாதுகாக்கும் அசரமைப்புச்சட்டத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்து தந்தை பெரியாரின் தலைமையில் அதனை தீயிட்டு ஆயிரக்கணக்கானோர் சிறைசென்றனர் – பலர் சிறையிலேயே இன்னுயிர் ஈந்தனர். அரசியல், கலாச்சார தளங்களில் சாதியத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் இயக்கங்கள் உருவாக வேண்டும். ஆணவப்படுகொலைக்கு மட்டுமல்ல திருமண உறவுகளில்
பெண்களின் சுதந்திர உரிமைக்காவும், சாதி ஆதிக்க வெறுப்புணர்வை தூண்டும் நாசகார செயல்களுக்கு எதிராகவும் சமத்துவமாகவும், அமைதியாகவும் வாழ விரும்பும் அனைவரும் களத்தில் நின்று போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி. இராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

பத்திரிக்கை செய்தி

22.06.2020

திருச்சியின் அரைவட்ட சுற்றுச்சாலை NH-67 ஜீயபுரம் தொடங்கி துவாக்குடி வரை செல்கிறது. இந்த சுற்றுச் சாலைக்காக கடந்த பத்தாண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைப்பதில் கிட்டத்தட்ட பத்து ஏரிகள் குளங்கள் குறுக்கே வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வரும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறையும் நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகமும், ஏரி குளங்களில் மண்ணை கொட்டி விடுகின்றனர், அழிக்கின்றனர்.

இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம், மற்றும் சாலை செல்லும் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக ஏரி குளங்களை மண் கொட்டி அழிக்கக்கூடாது, என தீக்குளிப்பு போராட்டம் வரை நடத்தியிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஏரி குளங்களில் மண்ணைக் கொட்டி அழித்து சாலை அமைத்ததைக் கண்டித்தும், ஏரி குளங்களுக்கு மேல், மேல் மட்ட பாலம் வழியாக சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு அதிகாரிகள் ஏரி குளங்களில் போட்ட மண்ணை அள்ளி குளங்களுக்கு மேல் நீர் மட்ட பாலம் ஜீயபுரம் முதல் மணிகண்டம் யூனியன் வரை கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் சார்பாக பணிகளை மேற்கொண்டார்.

தற்போது அந்த உத்தரவை அமல்படுத்தாமல் மணிகண்டம் முதல் குண்டூர், சூரியூர், துவாக்குடி வரை உள்ள குளங்களில் ஏரிகளில் மண்ணை கொட்டி அதிகாரிகள் அழித்துள்ளனர். இதனை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயா ம.ப சின்னத்துரை அவர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஆற்று நீர் பாசன வாய்க்கால் பொதுப்பணித்துறை அலுவலகம் வாயிலில் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார். இதை கண்ட அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மணிகண்டம் முதல் துவாக்குடி வரை ஏரிகளை அழித்து மண் கொட்டியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், கரூர் மற்றும் காரைக்குடி திட்ட இயக்குனர் அவர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும் கூடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விரைவில் ஏற்பாடு செய்வதாக, போராட்டம் செய்த சின்னத்துரை ஐயாவிடம் அதிகாரிகள் எழுத்து மூலமாக கடிதம் எழுதிக் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அன்று உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த செய்தி ஊடகங்களில், தினசரி பத்திரிகைகள் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து திருச்சியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும், மக்கள் அதிகாரம், தமிழக விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மக்கள் உரிமை கூட்டணி, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் இயக்கம், சமூக நீதிப் பேரவை, மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்டத்தின் உயிராதாரமான ஏரிகளை குளங்களை சாலை போடுவதாக கூறி மண்ணை கொட்டி குளங்களை ஆக்கிரமித்து மூடியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், ஏரி குளங்களில் மேல்மட்ட சாலை போட்டு ஏரி குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் மணிகண்டன் முதல் குண்டூர், சூரியூர், துவாக்குடி வரை மண்ணைக் கொட்டி அழித்த ஏரி குளங்களை பொதுநல அமைப்புகள் சென்று ஆய்வு செய்ய பார்வையிடுவது என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 21 அன்று காலை 9 மணி அளவில் பொது நல அமைப்பினர் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என சுமார் 20 பேர் சென்று ஏரி குளங்களை ஆய்வு செய்தோம். அப்போது சாத்தனூர் கணக்கன் குளத்தில் புல்டோசர் லாரிகள் மூலம் மண்ணை கொட்டி ஏரிகளை சாலை போடுவதற்காக மூடி கொண்டிருந்தனர்; அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் பணிகள் எதுவும் நடைபெறாது என்று எழுத்துப்பூர்வமாக எங்களிடம் கொடுத்துள்ளார் என சின்னத்துரை ஐயா அவர்கள் கேட்டார்.

அதற்கு எங்களுக்கு இதுபோன்ற செய்தி ஏதும் தெரியாது என ஒப்பந்ததாரர்கள் கூறினர். பின்பு காரைக்குடி திட்ட இயக்குனரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணிகள் நடைபெறாது என கடிதம் கொடுத்தும் இங்கு ஏரியை மூடும் பணிகள் நடைபெறுகிறது என புகார் தெரிவித்தோம். அரை மணி நேரம் சென்றும் வேலை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். வேலையை நிறுத்தவில்லை. ஆகையால் பொதுநல அமைப்பினர் சின்னத்துரை ஐயா தலைமையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் திட்ட பணிகளை செய்வதை கண்டித்து முழக்கமிட்டும் உடனே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை நிறுத்தினர்.

பின்பு குண்டூர் சூரியூர் துவாக்குடி பழங்குடி போன்ற பகுதியில் உள்ள ஏரி குளங்கள் மண்ணைப் போட்டு அழித்த பகுதிகளை சென்று பார்வையிட்டோம். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏரி குளங்களை அழித்து சாலை போட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரைவாக நடத்த வேண்டுமென பொதுநல அமைப்பினர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

பேச்சுவார்த்தை நடத்தாத பட்சத்தில் இது சம்பந்தமான சட்ட போராட்டமும்; மக்களை திரட்டி களப் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழக விவசாயகள் சங்கம்
ம.ப. சின்னதுரை
மற்றும்
பொதுநல அமைப்புகள்.
திருச்சி .

தொடர்புக்கு : 90422 36905, 94454 75157.

சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தனது அதிகாரத்தைக் கேள்வி கேட்ட தந்தை – மகன் இருவரை சட்டவிரோதமாகக் கடத்தி அடித்து, போலீசு படுகொலை செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிகேட்டு பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை ஒட்டி, சம்பந்தப்பட்ட போலீசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது போலீசு. கொரோனா ஊரடங்கில் போலீசின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வணிகர்கள்தான். அந்த பாதிப்பு இங்கே இரண்டு பேரின் கொலையாக முடிந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். ஜெயராஜும் அவரது மகன் மகன் பென்னிக்சும் அந்தப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 19-ம் தேதி கடை மூடுவது தொடர்பாக கடையில் இருந்த ஜெயராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் போலீசு உதவி ஆய்வாளர் ரகுகணேஷ். இதனை ஒட்டி மறுநாள் 20-ம் தேதி ஜெயராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.

பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்.

வழக்கம் போல என்ன வழக்கிற்காக கைது செய்கிறோம் என்பது போன்ற எந்த விவரத்தையும் சொல்லாமல், அவரது மனைவி செல்வராணிக்கும் எழுத்துரீதியான குறிப்புகள்  எதையும் கொடுக்காமல் இழுத்துச் சென்றிருக்கிறது போலீசு. இதனையொட்டி, ஜெயராஜை சந்திக்க போலீசு நிலையத்திற்கு அவரது மகன் பென்னிக்ஸ் சென்றுள்ளார். அங்கு 60 வயதான ஜெயராஜை பென்னிக்சின் கண் முன்னேயே உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் நிலையத்தைச் சேர்ந்த பிற போலீசும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை பென்னிக்ஸ் தட்டிக் கேட்டுள்ளார்.

தனது நிலையத்திற்குள் தனது அதிகாரத்தையே கேள்விகேட்ட பென்னிக்சை அங்கேயே வைத்துக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது போலீசு. பல மணிநேரம் கட்டி வைத்து அடித்ததோடு அல்லாமல், அவரது ஆசனவாய் உள்ளே லத்தியால் குத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் ஜெயராஜ், பென்னிக்சின் மீது வழக்கம் போல ஒரு பொய் வழக்கைப் பதிவு செய்து, அதனடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கான ஆவணங்களைத் தயாரித்துள்ளது போலீசு. பின்னர் அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது போலீசு. இருவருக்கும் ரிமாண்டு பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் 21-ம் தேதி அடைத்துள்ளது கிரிமினல் போலீசு.

சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு அருகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், துணைச் சிறைச்சாலையும், பேரூரணி மாவட்ட சிறைச்சாலையும் இருக்கையில், 90 கிமிட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச்சிறையில் அவர்கள் இருவரையும் கொண்டு போய் அடைத்துள்ளது. கடுமையாக அடித்துத் துன்புறுத்தி அவர்களை அரை உயிரோடு கொண்டு போய் எவ்வித கேள்வியும் இல்லாமல் தமது சட்டவிரோத தாக்குதல்களை மறைக்கத் தகுந்த இடமாக அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறது போலீசு.

சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்சை அவரது நண்பர்கள் சந்தித்துள்ளனர். அப்போது போலீசு லத்தியால் குத்தியதைத் தொடர்ந்து தமது ஆசனவாயில் இரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார். சிறையில் 22-ம் தேதி இரவு 7:30 மணியளவில் நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் மயங்கி விழுந்தார் என்று கூறி பென்னிக்ஸை கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளது போலீசு. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பென்னீக்ஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் அதே நாளில் இறந்து போயிருக்கிறார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொது மக்கள் வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து இதற்குக் காரணமான போலீசு அதிகாரிகளை கொலை வழக்கின் கீழ் கைதுச் செய்து சிறையிலடைக்குமாறு போராடி வருகின்றனர். வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் வீதிக்கு வந்ததையொட்டி அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

படிக்க:
தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

அத்துமீறி மிருகத்தனமாக நடந்து கொள்ளும் போலீசை அமர்ந்து தின்று கொழுக்கும் விதமாக வளர்ப்பதற்காகவே வழக்கமாக வழங்கப்படும் ‘தண்டனையான’ ஆயுதப்ப்படைக்கு மாற்றல் என்று கண்கட்டி நாடகம் காட்டியது போலீசு. விடாப்பிடியான மக்கள் போராட்டம், தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழியின் தலையீடு ஆகியவற்றை ஒட்டி, படுகொலை செய்த போலீசு துணை ஆய்வாளர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது போலீசு. ஆனால் இந்த பணியிடை நீக்கம் ஒரு தண்டனையா? இதே போன்று பொதுமக்கள் இரண்டு பேர்களைக் கொன்றால் கொலை செய்தவர்களுக்கு ஊர் மாற்றம் என்பதை மட்டும் தண்டனையாக கொடுப்பார்களா?

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலையானது, அதிகாரவர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்ட பொய் வழக்குக்கான முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பெற முடியவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர். கே. பாலக்கிருஸ்ணன்.

போலீசின் பொய் வழக்குகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் கூட்டுக் களவானியாய் நீதித்துறை.

ரிமாண்ட் செய்யும் போது கைது செய்யப்பட்டவரின் உடலில் உள்ள காயங்கள் குறித்துக் கேட்டு அவர்களை சிறைக்கு அனுப்புவதா, மருத்துவமனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யவேண்டிய குற்றவியல் நீதிபதி அதையும் கேட்கவில்லை. தன் மீது பதியப்பட்ட வழக்குக் குறித்த விவரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என்பதையும் கேட்டுப் பதிவு செய்யவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் போலீசு காட்டிய இடத்தில் நீதிபதி கையெழுத்து போட்டிருக்கிறார் என்றே தெரிகிறது. இந்த நீதிபதி குற்றவாளி இல்லையா ?

கிரிமினல் போலீசு கோவில்பட்டி கிளை சிறையை தேர்ந்தெடுத்ததன் நோக்கத்தை கிளைச் சிறை அதிகாரிகளும் நிரூபித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்கும் முன்னர், அவர்களுக்கு காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து பரிசோதித்து மருத்துவமனையில் சேர்த்திருக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசுக்கு ஆதரவாக நடந்திருக்கிறது கோவில்பட்டி சிறை நிர்வாகம்.

பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது. கொரோனா ஊரடங்கை மீறி வீதிக்கு வந்த மக்கள் போராட்டத்தால் மட்டுமே இந்தப் படுகொலைகளுக்கு முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிரிமினல் போலீசு கும்பலின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கூட்டுக் களவாணியாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள், நீதிபதி என அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதை நடைமுறைப்படுத்த ஃப்ளாய்டு கொலைக்கு எதிராக மொத்த அமெரிக்காவும் திரண்டெழுந்ததைப் போல தமிழகமே கொதித்தெழ வேண்டும். ஆனால் இங்கே அப்படி ஒரு பாவனை கூட இல்லை. அந்த  அளவுக்கு நமது சமூகம் அடிமைத்தனத்தில் ஊறிப்போயிருக்கிறதா? போலீசாரோடு வாதம் நடத்தியதற்காக இரண்டு வணிகர்கள் போலிசால் கொலை செய்யப்பட்டது உலகில் எங்காவது நடக்குமா?

இந்தப் பிரச்சினையை தானே முன்வந்து ஒரு வழக்காக மதுரை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருந்தாலும், கொலை செய்த போலீசார் தண்டிக்கப்படுவார்களா? அப்படி ஒரு தண்டனை வேண்டுமென்றால் அமெரிக்கா போல மக்கள் வீதிக்கு வராமல் சாத்தியமில்லை.


– எழில்

மேலும் படிக்க:சாத்தான்குளம் மர்ம மரணம்: தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்!

தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்

தமிழக ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் முறை மாற்றம் தொடர்பான அரசாணையினதும், அதன் மீளப் பெறுகையினதும் பின்னனி : வி..குகநாதன்

மிழ்நாடு அரசானது தமிழக ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது (எழுத்து + ஒலிப்பு) என்பது தொடர்பாக,  1018 ஊர்களின் ஆங்கிலத்திலான பெயர்களை மாற்றி ஒரு அரசாணையினை வெளியிட்டிருந்தது.  இது தொடர்பாகப் பல வாதங்கள் சார்பாகவும், எதிராகவும் முன் வைக்கப்பட்டுமிருந்தன.

இதில் சிலர் தமிழிற்கேற்பவே ஆங்கிலத்திலும் ஊர்களின் பெயர்கள் இருப்பதுதானே முறை. எழும்பூரினை ஆங்கிலத்தில் ‘எக்மோர்’ (EGMORE)  என எழுதியமையால், பின்னர், தமிழிலேயே ‘எக்மோர்’ என்ற பயன்பாடுதானே நிலைத்து விட்டது எனச் சொல்கின்றார்கள். எனவே ஆங்கிலத்திலும் எழும்பூர் (EZHUMBOOR) என எழுதுவதே முறை என்கின்றார்கள். இது சரியான வாதம்தான்.

இன்னொரு சாரார் ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கேற்பவே ஒலிக்கும், எனவே இந்த மாற்றம் ஒரு தேவையற்ற செயல் என்கின்றார்கள். அவர்களின் வாதத்திற்கேற்ப அரசும் சில தேவையற்ற மிகைத் திருத்தங்களையும் செய்துள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

எடுத்துக்காட்டாக, ‘ஊர்’ என்று முடியும் பல ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் ‘ur’ என இதுகாறும் பயன்படுத்துப்பட்டு வந்தவை இப்போது ‘oor’ என எழுதப்பட வேண்டும் என மாற்றியமையினைக்  கூறலாம். அதே போன்று மதுரையின் ஆங்கில வடிவத்தினை (Madurai > Mathurai ) மாற்றும் போது, அது உலகளாவிய ‘மதுரை’ பற்றிய ஆங்கில வழியிலான ஆய்வுகள், தேடல்கள் என்பனவற்றில் ஏற்படுத்தப் போகும்  தாக்கங்கள் பற்றிய கேள்வியினையும் எழுப்புகின்றது.

அதே போன்று சில தமிழ் ஒலிப்புகளை ஆங்கிலத்தில் தமிழிற்கேற்ப மாற்றும் போது ஒரே வழிமுறையினைப் பின்பற்றவில்லை என்ற குறைபாடும் உள்ளது. இவையெல்லாவற்றையும் விட ஆங்கிலத்தில் எழுதும் முறையினை மாற்றுவதற்கு முன்னர் தமிழிலேயே ஊர்ப் பெயர்களில் காணப்படும் இரு முதன்மையான குறைகளையல்லவா அகற்ற வேண்டும்; எனவே அவற்றினை முதலில் பார்ப்போம்.

சமற்கிரத மயமாக்கப்பட்ட தமிழக ஊர்களின் பெயர்கள் :

ஈழத்தில் போர் மூலமும், திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் எண்ணற்ற தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களமாக்கப்பட்டமை தெரிந்ததே (எ.கா- மணலாறு> வெலிஒயா).  தமிழ் நாட்டிலோ எந்த வித போர்களுமின்றிப் பல ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் சமற்கிரத மயமாக்கப்பட்டமை, பலரிற்குத் தெரிந்திருக்காது. அவ்வாறு தமிழ்ப் பெயரினைத் தொலைத்த ஊர்கள் சிலவற்றின் ஒரு பட்டியலினைப் பார்ப்போம்.

தமிழ்  >>> சமற்கிரதம்

புளியங்காடு >> திண்டிவனம்
மயிலாடுதுறை >>  மாயவரம்
குரங்காடுதுறை >> கபிஸ்தலம்
முகவை >> ராமநாதபுரம்
முது குன்றம் >> விருத்தாச்சலம்
அழிவிலி >> அவினாசி (அ-வினாசி)
வில்முனை (விற்கோடி)  >>  தனுஷ்கோடி
சிற்றம்பலம் >> சிதம்பரம்
மரைக்காடு >> வேதாரண்யம்.

மேலுள்ள பட்டியல் நீண்டு செல்லும். இங்குள்ள தமிழ்ப் பெயர்களைப் பாருங்கள். அவை இயற்கையுடன் இயைந்து, அப் பகுதிகளில் காணப்பட்ட விலங்குகள், மரங்கள் என்பவற்றின் பெயரோடு காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அந்த ஊரின் பழைய வரலாற்றினைக் குறிப்பன. இவற்றினை வட மொழியாக்கி, அவற்றின் தொன்மையும் கெடுக்கப்படுகின்றன. இந்தச் சிதைப்பு நுட்பமாகவே நடைபெற்றது.

எடுத்துக் காட்டாக ‘மரைக்காடு’ என்ற ஊரினைப் பார்ப்போம். மரை விலங்குகள் நிறைந்திருந்த முல்லை (திணை) நிலமாகக் காணப்பட்ட ஊர் என்பதால் அப் பெயர் பெற்றிருந்தது.  அதில் ‘மரை’ என்ற சொல்லினை ‘மறை’ என முதலில் சிதைத்தார்கள் (மறைக்காடு). பின்பு ‘மறை’ என்றால் ‘வேதம்’ எனவே ‘வேதாரண்யம்’ என மாற்றி விட்டார்கள்.  ஆங்கிலத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்னர் இவ்வாறு எமது மொழியிலேயே காணப்படும் பிழைகளையல்லவா முதலில் திருத்த வேண்டும்.

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ சர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்

சமற்கிரதமாக்கப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படும் போது எல்லாம், ஒரு சாரார் அது தமது சமய நம்பிக்கைகளில் கை வைப்பதாகக் கதை விடுவார்கள். அவர்களின் வாதம் சரியா என ஒரு முறை பார்த்து விடுவோம்.  இப் பட்டியலிலுள்ள சிதம்பரமாக்கப்பட்ட ‘சிற்றம்பலம்’ என்ற ஊர்ப் பெயரினையே எடுத்துக் கொள்வோம். சிதம்பரத்தைச் ‘சிற்றம்பலம்’ என அழைத்தால், சமய நம்பிக்கை குடி மூழ்கி விடுமா எனவும் பார்ப்போம். பின்வரும் இரு தேவாரப் பாடல் வசனங்களைப் பாருங்கள்.

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி“.

அன்னம் பாலிக்கும்தில்லைச் சிற்றம்பலம்‘.

பார்த்தீர்களா! தேவாரத்திலேயே ‘சிற்றம்பலம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் காட்டும் ‘சமயப் பூச்சாண்டி’ எல்லாம் வெறும் ஏமாற்று வேலை. எனவே இவ்வாறு வட மொழியாக்கப் பட்டுள்ள ஊர்ப் பெயர்களை மீட்டெடுக்க வேண்டும். அரசாணைகளிற்காகப் போராடுவது ஒரு முறை, நாமே எமது நாளாந்தப் பயன்பாட்டிற்கு அத் தமிழ்ப் பெயர்களைக் கொண்டு வருவது இன்னொரு முறையாகும்.

தமிழ் ஊர்ப் பெயர்களின் சிதைப்பு/ திரிபு :

ஒரு தொகுதி ஊர்களின் பெயர்கள் வட மொழியாக்கப்பட்டது ஒரு புறம் என்றால், இன்னொரு தொகுதி ஊர்களின் பெயர்கள் சிதைக்கப்பட்டது அல்லது  திரிபடைந்தது மறுபுறம்.  அவ்வாறான சில மாற்றங்களைப் பார்ப்போம்.

பொழிலாட்சி >> பொள்ளாச்சி
வானவன் மதுரை >> மானாமதுரை
செவ்வேங்கை >> சிவ கங்கை
இடைப்பாடி >> எடப்பாடி
ஆர்க்காடு >> ஆற்காடு

இப் பட்டியலும் இவ்வாறு நீண்டு செல்லும்.  பெயர் தானே, திரிந்த நிலையிலிருந்தால் என்ன எனக் கேட்கலாம். இங்குள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னேயும் தொல் வரலாறு இருக்கின்றது . ஐந் திணைகளை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் தொல் தமிழ் மரபு இருக்கின்றது. இவற்றினை நாம் இழத்தலாகாது.  ஆர்க்காடு என்ற பெயரினையே எடுத்துக் கொள்வோம்.  தொல் காப்பியமே குறிப்பிடும் பெயர் இது.

போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” (தொல்காப்பியம் 3-63)

தொல் காப்பியம் மட்டுமா? இதோ ஒரு சங்க இலக்கியப் பாடல்.

படுமணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்!”

{ நற்.227}

சங்க காலப் பாடல் மட்டுமல்லாமல் , ஆர்க்காடு என்ற பெயரினைத் தாங்கிய ஒரு சங்க காலப் புலவரேயுண்டு –  ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் .  ’ஆர்’ மரங்கள் நிரம்பிய காடு என்ற வகையில் பெயர் பெற்ற ஆர்க்காடு எனும் பெயரினை ‘ஆற்காடு’ எனச் சிதைய விடலாமா? அவ்வாறு சிதைய விட்டால், பின்பு அது ‘ஷடாரண்யம்’ என்ற வடமொழிப் பெயரில்தான் போய் முடியும்.

அது போன்றே ‘இடைப்பாடி’ என்ற ஊர்ப் பெயரே மருவி ‘எடப்பாடி’ ஆயிற்று.  பழந் தமிழ் மரபில் ‘பாடி’ என்ற விகுதியினைக் கொண்டு முல்லை நிலத்திலுள்ள ஊர்களிற்குப் பெயரிடல் மரபாகும்.

புறவம் புறம்பணை புறவணி முல்லை, அந்நிலத்து ஊர்ப் பெயர் பாடி யென்ப”  -பிங்கல நிகண்டு. 43

மலைக்கும் பள்ளத்திற்குமிடையே இருந்தமையால்  இடைப்பாடி/ இடையர் பாடி என அழைக்கப்பட்டது. அதுவே மருவி எடப்பாடி ஆயிற்று. படத்தில் 1962 ம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் காமராயர் திறந்து வைத்த கல்வெட்டிலேயே ‘இடைப்பாடி’ என எழுதப்பட்டிருப்பதனைக் காணலாம். எனவே இப் பெயரினை மாற்றும் போது; தமிழக முதல்வரின் பெயரினையும் மாற்ற வேண்டிவரும், ஏனெனில் இந்த ஊரின் பெயரே முதல்வரின் பெயரின் முன்னொட்டுமாகும்.

மேலே பார்த்தவாறு தமிழிலுள்ள வடமொழிப் பெயர்களை நீக்கிய பின்பும், சிதைந்துள்ள தமிழ்ப் பெயர்களைச் சரிப்படுத்திய பின்னருமே; அவற்றினை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதுவது என மாற்ற வேண்டும். ‘DHARUMAPURI’ இனை ‘THARUMAPURI’  என மாற்றுவதைக் காட்டிலும் ‘தருமபுரி’ என்பதனை ‘தகடூர்’ என மாற்றுவதே முதன்மையானதாகும்.

அரசாணையின் பின்னனி :

மேற் கூறிய காரணங்களாலேயே அரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மேலும் வடமொழியினை விடுத்து ஆங்கிலத்தில் மாற்றங்கள் செய்வது, அதுவும் தேவையற்ற சில மிகைத் திருத்தங்களைச் செய்வது, ஏற்கனவே வட இந்தியாவில் இந்துத்துவா வாதிகளால் கட்டமைக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி மீதான ஒரு வெறுப்புணர்வின் நீட்சியோ என்றும் எண்ண வைக்கின்றது.

படிக்க:
பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

அரசாணை மீளப் பெறுகையின் பின்னனி :

இவ்வாறான பின்புலத்தில் வாதங்கள் சென்று கொண்டிருந்த போதே, தமிழக அரசு குறித்த அரசாணையினைத் திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து அமைச்சர் மாபா பின்வருமாறு கூறியுள்ளார். “தமிழில் இருந்து ஆங்கிலத்தில் ஒலிமாற்றம் செய்வது குறித்த நிபுணர்களின் கருத்துகளை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு, மூன்று நாட்களில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம். தமிழ்ப் பெயர்களுக்கான ஆங்கில பெயர்களைத் தொகுத்தளித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு விட்டது. எல்லோருடைய கருத்துகளையும் பெற்று புதிய அரசாணை வெளியிடப்படும்”.   இந்தப் பின்வாங்குதலும், ஒன்றில் இப்போது மக்களின் கவனத்தை மீண்டுமொரு முறை திசை திருப்பும் முயற்சியாகவிருக்கலாம்; அல்லது இன்னொரு காரணமும் இருக்கலாம்.

அதாவது அரசின் பெயர் மாற்ற நடைமுறையின் போது அமைச்சரின் கவனத்தைப் பெறாமலேயே , இரு ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றம் பெற்றுள்ளன. சிறீரங்கம்  என ஆங்கிலத்தில் இதுவரை இருந்து வந்த முறை , திருவரங்கம் என மாறியுள்ளது.

SRIRANGAM >>  THIRUVARANGAM    {784th change}

அதே போன்று `சிறீவைகுண்டம்` என்ற பெயரும் திருவைகுண்டம் என மாற்றப்பட்டிருந்தது.

SRIVAIKUNDAM >> THIRUVAIKUNDAM  {379TH change}.

இவ்விரு பெயர்களும்  (மாறறப்பட்ட திருவரங்கம், திருவைகுண்டம்) சரியானதே.  இங்கு சிக்கல் என்னவென்றால், அமைச்ரிற்குத்  தமிழ் மொழி மீதான பற்றினை விட சமற்கிரதப் பற்றே அதிகமாகும். அவரே சொல்லியுள்ளார் ‘சமற்கிரதப் பெயர்கள் எதுவும் மாற்றப்படாது’ என.  இவரின் கவனத்தினைப் பெறாமலேயே இவ்விரு மாற்றப் பரிந்துரைகளும் மாவட்ட ஆட்சியாளர்களால்  முன் வைக்கப்பட்டுவிட்டன. இதனையே அமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தகைய காரணங்களாலேயே இந்தப் பின்வாங்கல். புதிய அரசாணை வரும்போது, இவ்விரு ஊர்ப் பெயர்களையும் பார்க்கும் போது,  உண்மை தெரிய வரும்.

வி.இ.  குகநாதன்

disclaimer

பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்

ருணையே கடவுள் – இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் பெரும்பரப்பில் குறுக்கும் நெடுக்குமான நெடுஞ்சாலைகளில் நடையாய் நடந்தவர்களின் கைகளில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களே காருண்யம். அதற்கு விலை இல்லை, பட்டினி கூட்டத்தின் ஒரு வேளை சோற்றுக்கு காட்டப்படும் கருணைதான் உலகம் மதிப்பிட முடியாத பேரன்பு. அன்புக்கு காலந்தோறும் அழிவில்லை. இந்தியா பல கால கட்டங்களில் அதை மெய்ப்பித்திருக்கிறது.

ஆனால் அதற்கு அடையாளம் இருக்கிறது. காயசண்டிகையின் அட்சயபாத்திரமே என்றாலும், ஏழைகளுக்காகவும், ஏதிலிகளுக்காகவும் சுரக்கும் அன்புக்கு அடையாளம் இருக்கிறது. லெமன் சாதம் ஊறுகாய் போல, சப்பாத்தி வெங்காயம் போல, ஊழிகால பிஸ்கெட் பாக்கெட்டுகளில் பொறிக்கப்பட்ட அடையாளம் பார்லே ஜி.

சமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.

அப்பேர்ப்பட்ட ஏழைகளின் ஒரு விற்பனை பண்டம், சாதனை படைக்கிறது என்றால், எப்பேர்ப்பட்ட பெருமை. எப்பேர்ப்பட்ட வறுமை. விற்பனையில் சாதனையா ? வறுமையின் பெருமையா? என்பதுதான் என் குழப்பம்.

ஏழைகளின் கையில் பணம் இல்லாத நிலையிலும், பார்லே ஜி சந்தை எழுந்து நிற்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிஸ்கெட் என்கிற பெருமையை பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் 80 ஆண்டுகால பிஸ்கெட் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத விற்பனை இந்த ஊரடங்கு காலத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி மாயங்க் ஷா ஒரு நேர்காணலில் கூறுகையில், ஏற்கெனவே 40 சதவீத பிஸ்கெட் சந்தையை வைத்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மேலும் 5 சதவீத சந்தையை கைப்பற்றி உள்ளதாக குறிப்பிடுகிறார். 5 ரூபாய் மதிப்புள்ள பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டுகள் மட்டும் 90 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

குறிப்பிட்ட 3 மாதங்களில், ஒரு பிஸ்கெட் பிராண்ட் 90 சதவீதம் விற்பனை உயர்ந்திருப்பது சாதாரணமானதல்ல, அபூர்வமான நிகழ்வு. அதனால்தான் சாதனை என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை என்கிற உண்மையை உணர பார்லே ஜி பிஸ்கெட்டின் உண்மையாக நுகர்வோராக நாம் இருக்கவேண்டும்.

மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், 80 ஆண்டுகளாக ஒரு பிஸ்கெட் பிராண்ட் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதாக பலரும் பெருமை கொள்கின்றனர். அவர்களில் பலரும் தங்களின், பால்ய நாள் பார்லே ஜி நினைவுகளை மடிக்கணினியில் ஏற்றி மகிழ்ச்சி பொங்கல் வைக்கிறார்கள். அந்த நினைவுகளை அசைபோடும் நேரத்தில் எடுத்துக்கொண்ட நொறுக்கு தீனி எதுவென சொல்வதில் இருக்கிறது, அவர்கள் மீண்டும் ஏழையாக விரும்பாத ஒரு கடந்த காலம்.

உண்மையில், அது ஒரு திராபையான பிஸ்கெட் என்பது என் அனுபவம். எந்தவிதமான தனித்தன்மை சுவையும் கொண்டதல்ல. எனர்ஜி கிடைப்பதாக நிரூபணம் இல்லை. ஒரு கிலோ ரஸ்க் தயாரிக்கவே 150 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில், கிலோ 100 ரூபாய்க்கு கீழே விற்பனையாகும் பிஸ்கெட்டுக்கு என்ன சத்தான மூலப்பொருள் சேர்த்து விடமுடியும்? இந்த வர்க்க முரண்பாட்டை மறைக்கும் சூட்சுமத்தைத்தான் 80 ஆண்டுகால மயக்கம் என்கிறார்கள்.

90 களில் குழந்தைகளாக இருந்தவர்களுக்கு, குறைந்த விலையில் வேறு பிஸ்கெட்டுகள் இல்லை என்பதால் பார்லே ஜி அதிகம் விற்பனையானது. இன்னொரு காரணம், இது மட்டும்தான் சிறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் குறைந்த விலையில் பாக்கெட்டாக கிடைத்தது. இதற்கு அடுத்து உதிரி பிஸ்கெட்டுகள்தான் கிடைக்கும்.

1929ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மும்பையின் சவுகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்ட ‘பார்லே புராடக்ட்ஸ்’ என்கிற இந்த நிறுவனம், அடுத்து 10 ஆண்டுகளில் பிஸ்கெட் உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஆனாலும், 1990 க்கு பின்னரே அதன் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் வரத் தொடங்கிய பின்னர், குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை, பார்லே பிஸ்கெட் விற்பனையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது.

படிக்க:
ரவுடிகளின் கூடாரமாகும் பெரம்பலூர் ! மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு !
♦ பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் ! 

அந்த நிறுவனத்துக்கு கிராக் ஜாக், மொனாக்கோ என வேறு பல பிஸ்கெட் பிராண்டுகள் இருந்தாலும் பெரிய அளவில் சந்தையை பிடிக்க முடியவில்லை. புதிய தலைமுறை நுகர்வோருக்கான ஹைட் அண்ட் சீக் போன்ற பிராண்டுகளும் சந்தையை கொண்டிருக்கவில்லை. பார்லே ஜி தான் அதன் மதிப்பு மிக்க பிராண்ட். நுகர்வு தேர்வுகள் சாத்தியமில்லாத அந்த நாட்களில் ஏழை குழந்தைகளின் மாபெரும் மகிழ்ச்சி பார்லே ஜி பிஸ்கெட். அதாவது 80 கிட்ஸ்களின் பிஸ்கெட்.

அதன்பின்னர், இந்தி நடிகர் முகேஷ் கண்ணாவை வைத்து சக்திமான என்ற தொலைகாட்சி தொடரை அந்த நிறுவனம் தயாரித்து, தூர்தர்ஷனில் வெளியிட்டது. அதன் பிறகுதான் பார்லே ஜி பிஸ்கெட் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

இரண்டாயிரத்துக்கு பின்னரான கிட்ஸ்களிடம் கேளுங்கள்.., அவர்களின் பிஸ்கெட் தேவைகளில் பார்லே ஜி க்கு பெரிய இடமில்லை. அதனால்தான், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது 90 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சந்தையின் இன்னொரு முகம்

இந்திய பிஸ்கெட் சந்தையின் மதிப்பு சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், அதில் பார்லே ஜி பிஸ்கெட் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையை வைத்துள்ளது. பிஸ்கெட் சந்தையில் இப்படி ஏகபோகமாக மாறியதற்கு பின்னால், அதன் விலை, விளம்பரம் மற்றும் விநியோக கட்டமைப்பு மட்டும் காரணமல்ல, அதற்கு இன்னொரு முகம் உள்ளது.

எப்போதெல்லாம் இந்தியாவில் பேரழிவுகள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அந்த பிஸ்கெட் விற்பனை தாறுமாறாக எகிறுகிறது. குஜராத்தில் பூகம்பம், கடற்புரத்தில் சுனாமி, ஒடிசாவில் புயல், சென்னையில் பெருவெள்ளம் என எந்த பேரிடரின் போதும் அதன் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்து விடும். இப்போதும் அது நிகழ்ந்துள்ளது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பண்டல் பண்டலாக வாங்கிய காரணத்தால் இதுவரை இல்லாத விற்பனை சாதனையை எட்டியுள்ளது.

மயங்க் ஷா.

மயங்க் ஷா பேட்டியில் அதை உறுதி செய்கிறார். பல மாநில அரசுகளிடம் இருந்து பிஸ்கெட் கேட்டு கோரிக்கைகள் வந்தன. மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் எங்களுடன் தொடர்பில் இருந்தனர். கையிருப்பு விவரங்களுக்கு ஏற்ப ஆர்டர்களை அளித்தாக கூறியுள்ளார். தன்னார்வ அமைப்புகளும் பார்லே ஜி பிஸ்கெட்டை பண்டல் பண்டலாக வாங்கி விநியோகம் செய்து வருகின்றன.

உண்மைதான்; புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு பார்லே ஜி பிஸ்கெட் மட்டுமே ஆறுதலான உணவாக இருந்தது. சமைத்த உணவோ, பிரெட்டோ கிடைக்காத மக்களுக்கு பார்லே ஜி கிடைத்தது. அல்லது அவர்கள் வைத்திருந்த ஒரே உணவாக இருந்தது. இப்படித்தான்; சாதாரண மனிதனின் பிஸ்கெட், பசித்த மானுடத்தின் சாதனை பிஸ்கெட்டாக மாறியது.

விலை உயர்ந்த பிஸ்கெட்டை வாங்க இடம்கொடுக்காத வறுமைதான் பார்லே ஜி விற்பனையின் பலம் என்றால், எதுவுமற்ற நிலையில் நிற்கும் மக்களுக்கு காட்டப்படும் அன்பிலும் பார்லே ஜி முந்தி நிற்பதுதான் இந்திய வர்க்கமூலத்தில் ‘கருணை’ கொண்டுள்ள இடம்.

கையில் இருக்கும் காசை கொண்டு, எதை வாங்கித் திங்க முடியும் என்பது ஏழைகளுக்கு தெரியும். யாருக்கான சந்தையில் நிற்கிறோம் என்பது பார்லே நிறுவனத்துக்கும் தெரியும்… ஆனால், ஏழைகளுக்கு அளிக்க உகந்தது இதுதான் என்பதை, கருணை உள்ளங்களுக்கு கற்றுக் கொடுத்தது எது?

கருணையை சந்தேகிப்பது சரியாக இருக்காது. பாலைவன தாகத்துக்கு சிறிய சுனையில் கிடக்கும் நீர். எதுவுமற்றவர்களுக்கு கிடைத்த ஏதோ ஒன்று. அதுவும் இல்லையென்றால் நெடுஞ்சாலைகளில் கொத்து கொத்தாக நம் தேசம் செத்து கிடந்திருக்கும். ஆனால்… யாருக்கான உதவி என்பதை தீர்மானித்த பின்னர், கருணையின் அகலம் விரிவதே நம் அவலமாக உள்ளதையும் மறைக்க முடியாது. நெடுஞ்சாலைகளில் தேசியப் பண்டமாக பார்லே ஜி கையளிக்கப்பட்டதில் கண்டதே உண்மை.

அதாவது ஏழ்மையின் மீது எழுந்து நிற்கும் கருணை. வறுமையே பெருமையான சரித்திரம். 80 ஆண்டுகளாக ஏழைகளை மட்டுமே வாடிக்கையாளர்களாக கொண்ட ஒரு பிராண்ட் விற்பனையில் சாதனை படைக்கிறது என்றால், முதல் கசப்பான உண்மை 80 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டாவது உண்மை, ஏழைகள் விகிதாச்சாரம் மேலும் அதிகரிக்கிறது. மற்றும் ஒரு கசப்பான உண்மை, ஏழைகள் மீது காட்டப்படும் கருணையில் நீடிக்கும் வறுமை.

-நீரை மகேந்திரன்.
நன்றி: உயிர்மை

disclaimer

ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

எமதர்மன் போல விரட்டி விரட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ன்புடையீர் வணக்கம்,

கடந்த நான்கு மாத காலமாக கொரோனாவால் தமிழகத்தில் வேலையும் இன்றி, கையில் காசும் இன்றி அன்றாட சோற்றுக்கே குடும்பங்கள் பரிதவிக்கும் நிலை அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது.

இந்நிலையில் எக்விடாஸ், கிராம விடியல், உஜ்ஜிவன், போன்ற நுண்கடன் நிறுவனங்களும் மகேந்திரா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், காவிரி பைனான்ஸ் போன்ற வாகனக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன், ஆகிய கடன் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களான பொதுமக்களை வட்டிக்கு மேல் வட்டி போட்டு வழிப்பறி செய்து வசூலித்து வருகிறது.

இதனை கண்டித்து ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 31 வரையில் வசூல் செய்யக் கூடாது, வட்டி வசூலிக்கக் கூடாது என்று எச்சரித்தது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இதனை மீறி இந்நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மேற்கண்ட ரிசர்வ் வங்கியின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் நிதி நிறுவனங்கள் பல இடங்களில் பொதுமக்களிடம் கட்டாய வசூல் செய்து அடாவடித்தனம் செய்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை கண்டிக்கும் முகமாக 22.06.2020 அன்று காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பிலும் கண்டனம் தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மனுவை நேரில் வந்து பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியர் திரு பரிமளம் அவர்களிடம் தஞ்சை, திருச்சி போல கடலூரில் உத்தரவு போட வேண்டுமென்றும், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழைகள் வாங்கிய சுய உதவி குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

படிக்க:
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்
♦ யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்

இந்நிகழ்வில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி. குமார், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ரவி ராமலிங்கம், தனியார் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குரு ராமலிங்கம், பாபு, ஷேர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் குமரன், பேருந்து நிலைய உட்புற சிறு வியாபாரிகள் சங்க தலைவர் திரு சுகுமார், உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மற்றும் கடலூர் மாவட்ட திருவள்ளுவர் அச்சக உரிமையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் திரு கார்த்திகேயன் கஜேந்திரன், அம்ஜத் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்ட தலைவர் சுப்புராயன், சமூக நீதிப் பேரவை தலைவர் சாய்ராம், தமிழர் கழகத்தின் மாவட்டத்தலைவர் கு.பருதி வாணன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரவை பொறுப்பாளர்கள் தர்மராஜன் கணேசன் பாலசுப்பிரமணியன், குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி மன்சூர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சிராஜ்தீன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பா கிருஷ்ணகுமார், திராவிடர் கழகத்தின் மாதவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல் :
அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு
மற்றும் மக்கள் அதிகாரம், கடலூர்.