Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 250

அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!

வேலை நிமித்தமாக கடந்த 09.01.2021 அன்று கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக காலை காலை 8.15 மணிக்கு பூந்தமல்லி செல்ல உரிய பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் பெரும்பாலும் வேலைக்கு செல்வோரும் வெளியூரில் இருந்து வந்தவர்களுமாக நிரம்பியிருந்தனர்.

பேருந்து ரோகிணி திரையரங்கைக் கடக்கையிலேயே, “அ.இ.அ.தி.மு.க. வின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில செயற்குழு – பொதுக்குழுவிற்கு வருகைத்தரும் ……………….. அவர்களே வருக ! வருக !” என வானகரம் வரை சுவரொட்டிகளும் பேனர்களும் சாலை நெடுகிலும் குத்தாட்டமும் நிரம்பி வழிந்தது தெரிந்தது. முதல்வர் பதவியை அடைவது ஒன்றுதான் சாதனை என்பதால் அடிமைகளுக்கு மேற்படி கூட்டம் வரலாறாக தெரிகின்றது.

சாலையின் சென்டர் மிடியத்தில் வாழைக் கன்னு, கரும்பு, கட்சி கொடிகளும் திருவிழா கோலமாக கட்டப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் – விசுவாசிகள் பலர் இருந்தாலும் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சரின் (பா.பென்ஜமின்) பாத்திரம்தான் முதன்மையானது என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

படிக்க:
♦ வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !
♦ பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

ஏற்கெனவே சொன்னது போல சாலை நெடுகிலும் குத்தாட்டம் – கோஷம் போட கூட்டமும் நிறைந்திருந்ததானது, பொதுப் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையுறாக இருந்தது அதிகார வர்க்கத்திற்கு தவறாக தெரியவில்லை. விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அவசியமான போராட்டம் என அனுமதி கோரினால் ஆயிரத்தட்டு நொட்டம் சொல்லி மறுப்பதையே சட்டம் என்பார்கள்.

இவர்களின் சட்டம் அதிகாரம் எல்லாம் கார்ப்ரேட்டுகளின் காலை நக்குவதையும் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதையும் இலக்காக கொண்டிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் நாம் காணும் உண்மையாகும்.

வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டால் விரயமாகும் நேரம், அதன் விளைவாக திட்டமிட்ட வேலைகள் தாமதம் ஆவது அல்லது நடக்காமல் போவதால் ஏற்படும் மன உளைச்சலை விளக்க வார்த்தைகள் போதாது. ஏனெனில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்போதுதான் மெல்ல மெல்ல வேலைக்குச் செல்லும் நிலையில் இது போன்ற நிகழ்வால் மக்களின் அன்றைய நாள் பிழைப்பு நாசமாகிறது.

சிறிது தூரம் போவது பின்னர் நிற்பது என்ற நிலை மாறி பேருந்து ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. பயனிகளிடையே முனுமுனுப்பு துவங்கியதோடு, சிலர் தங்களது வேலை நிலைமையைச் சொல்லி எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேருந்து மதுரவாயல் பாலம் அருகே சென்றதும் போலீஸ்காரர் ஒருவர் ஒடி வந்து பேருந்தை நிறுத்தி ஒட்டுநரிடம் போரூர் இராமச்சந்திரா வழியாக செல்லுமாறு கூறினார்.

இதற்கு ஒட்டுநர் மறுத்து காலை நேரம் எல்லோரும் வேலைக்கு செல்கின்றனர், இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மறுப்பை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உயர் அதிகாரி போன்ற தோற்றத்தில் இருந்தவர் தனது புருவத்தை உயர்த்தி ஒட்டுநரை பார்த்து “யோவ் நான் DC சொல்றேன் பஸ்ஸை திருப்புய்யா.. என்னய்யா பேசிக்கிட்டு இருக்க” என சொன்னதுடன் தனது கைகளால் (ஒட்டுநர் பக்கம் இருக்கும்) கதவை அடித்து மீண்டும் அதட்டும் குரலில் பேசினார்.

போலீசுக்கும் ஒட்டுநருக்குமான பிரச்சினை, மக்களுக்கும் போலீசுக்குமான பிரச்சினையாக மாறியதும், எதிர்ப்பு பலமாக வந்தது. பத்துக்கும் மேற்ப்பட்டோர் மேற்படி உயர் அதிகாரியை சூழ்ந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மறுபுறம் பேருந்தின் ஜன்னல்களின் வழியாக வசவுகளும் கண்டனங்களும் இலக்கு நோக்கி பாயும் தோட்டா போல பாய்ந்தவண்ணம் இருந்தன.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அதிகாரிகள் வழக்கமான வழியிலே செல்லலாம் என்றனர். இதற்கிடையில் பேருந்து இடது பக்கம் (அதாவது புறநகர் பேருந்துகள் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திரும்பும் இணைப்பு சாலையில்) திரும்பி விட்டபடியால் பேருந்தை முழுவதமாக பின்பக்கமாக எடுத்துதான் திரும்ப வேண்டும். அதற்குகேற்ப தயாரான ஒட்டுநரிடம் மேற்படி அதிகாரி ரிவர்ஸ் வராமாலே முன் பக்கம் இருக்கும் வழியை காட்டி அதில் வண்டியை திருப்புமாறு கூறினார்.

2-3 நாட்கள் தொடர் மழையால் சேறும் சகதியமாக இருந்ததால் ஒட்டுநர் அந்த வழியில் செல்ல தயங்கியவர் கன நேர யோசனைக்கு பிறகு ஒட்டுநர் அந்த சேறும் – சகதியுமான வழித்தடத்தில் பேருந்தை இயக்கினார் பேருந்தும் நகர துவங்கியது.

இதைப் பார்த்த மேற்படி அதிகாரி ஒட்டுநர் தயங்கியபடி பேருந்தை எடுத்ததை ஏதோ மாபெரும் குற்றமாக சித்தரித்து, “தே***யா பசங்களா! பஸ்தான் திரும்பதே இதை ஏன்ட கேக்கமாட்டிங்களா?” என்றும் ஒட்டுநரையும் – நடத்துனரையும் வாய் கூசிப் போகும் அளவு பேசினார். இவர்தான் சென்னை மாநகர் “காவல்”துறையின் துணை ஆணையர் தேன் தமிழ்வாணன்.

இது குறித்து நடத்துனரிடம் பேசுகையில், “எங்கள் இருவரையும் (ஓட்டுநர், நடத்துநர்) செல்போனில் பேட்டோ எடுத்துக் கொண்டனர். பொய்யாக புகார் அளித்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கவும் செய்யலாம்” என்றார்.

இப்போது பிரச்சனையை சற்று ஆழமாக பார்க்கலாம். அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட சட்டப்படி அவசியமாக இருந்தாலும், ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?

படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மக்கள் என்றால் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பவர்கள் டாஸ்மார்க் கடைக்கு செல்பவர்கள் வெள்ளத்திற்கு இரையாகிப்போன பயிர்களுக்கு நிவாரணம் கேட்பவர்கள் கூலி உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்கள், இவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது; அவர்கள் மந்தைகள் என்பதுதான் அவர்களின் சட்டவியல் மற்றும் நிர்வாக இயலில் மக்கள் என்போருக்கான விளக்கம்.

சில தினங்களுக்கு முன்பு ஆவடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில் காவலர் பயிற்சி பெறும் இளைஞரொருவர் வந்தார். அவரிடம் பணி நிலைமைகள் மற்றும் ஊதியம் குறித்து பேசிக் கொண்டே துத்துக்குடி துப்பாக்கி சுடு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? என்றபோது, “அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது” என்றார். ஏன் என்றபோது, “அது அப்படித்தான்.. அதிகாரி சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும்” என்றார்.

பகுத்தறிவுக்கு பொருந்தாத இவர்களது அதிகாரமும், அதற்கு கட்டுப்பட வேண்டும் என தனது துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மக்களும் கீழ்படிய வேண்டும் என நிர்பந்திப்பது, அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்த்துகிறது. இதன் விளைவுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த படுகொலை முதல் அன்றாடம் நடந்தேறும் அடக்குமுறைகள் வரை அனைத்தும். மொத்தத்தில் தனது மேல் அதிகாரிக்கு விசுவாசமாக நடந்து கொள்வதே அதிகாரப் பிரிவினரின்  நேர்மைக்கான இலக்கணமாக போதிக்கப்படுகின்றது.

நடந்த இந்த சிறு நிகழ்வில் மக்கள் பக்கம் நின்றவர்கள் யார் ? ஓட்டுநரும் நடத்துநரும் தானே அன்றி தேன் தமிழ்வாணன் போன்ற அதிகார வர்க்கத்தினர் அல்ல. அதிகார வர்க்கம் என்றுமே ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே சேவை செய்யும் என்பதோடு, மக்களுகு எதிரானது என்பதையும் இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பின் குறிப்பு : பேருந்தின் வழித்தடம் 153A  – CMBT TO திருவள்ளுர்; வண்டி எண் TN 01 AN 2972; புறநகர் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட நேரம் சரியாக 8.15 AM

ஆ. கா. சிவா
காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி

பெரம்பலூர் : மரபு வழி பிரசவ மரணம் – அறிவியலை நம்புவோம் !

ரு நாட்டின் முன்னேற்றத்தை அளவீடு செய்வதற்கு அந்நாட்டில் கர்ப்ப காலத்தில் / பிரசவம் ஏற்படும்போது தாய்மார்கள் மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? பிறந்த பின் ஒரு வருடத்திற்குள் சிசு மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? என்பதைத்தான் முதலில் பார்க்கப்படும்.

இதில் கர்ப்ப காலத்தின் போது பிரசவத்தின் போது பிரசவத்திற்குப் பின் ஆறு வாரங்களுக்குள் ஏற்படும் தாய் மரணங்களை கர்ப்ப கால தாய் இறப்பு விகிதம்” MATERNAL MORTALITY RATE என்று அழைக்கிறோம்

ஏன், இந்த MMR எனும் Maternal Mortality Rate க்கு இத்தனை வெய்ட்டேஜ் (முக்கியத்துவம்) என்றால் கர்ப்பம் மற்றும் பிரசவம் / குழந்தை பிறப்பு ஆகியவை மனிதனின் வாழ்க்கை சங்கிலியில் இன்றியமையாதவை. மேலும் இயற்கை இயல்புடனேயே நடைபெறுபவை. இதை Physiological Process என்று வழங்குவோம்.

படிக்க :
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

மாறாக பிரவசம் என்பதோ கர்ப்பம் என்பதோ நோய்க்குறி அன்று. Pathological process அன்று. ஆயினும் ஒரு பெண் கர்ப்பமடைந்ததில் இருந்து அவள் ஒரு கருவை தன்னகத்தே வளர்த்து பிரசவிக்கும் வரை அவளது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறாள்.

ரத்த கொதிப்பு ஏற்படுதல் (Pregnancy Induce Hypertension)
கர்ப்பம் சார்ந்த நீரிழிவு நோய் ( Gestational Diabetes)
ரத்த சோகை ( Gestational Anemia)
உயரம் குறைவாக இருந்தாலோ இடுப்பெலும்பு குறுகலாக இருந்தாலோ குழந்தையின் கபால விட்டம் பெரிதாக இருந்தாலோ பிரசவத்தின் போது குழந்தை இறங்காமல் மேலேய நின்று கீழிறிங்குவது தடை படும் ( Cephalo pelvic Disproportion)
ஏற்கனவே தாய்க்கு இதய நோய் / வலிப்பு நோய் இருப்பின் பிரசவத்தின் போது அதன் தீவிரம் கூடி பிரச்சனை தரும் (Heart disease)
பிரசவத்தின் போது ஏற்படும் வலிப்பு நோய்
தாய்க்கு பனிக்குடம் முன்கூட்டியே உடைந்து அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்ப்பபைக்குள்ளேயே மலம் கழித்து அதை சிசு உண்டு மரணிக்கும் தன்மை (Pre mature rupture of membrane / Meconium Aspiration syndrome)
குழந்தை பிரசவிக்கப்பட்டாலும் நஞ்சுக்கொடி முறையாக வெளியே வராமல் போகலாம்.
குழந்தையும் நஞ்சுக்கொடியும் வெளியே வந்ததும் கர்ப்பப்பை இயல்பாக சுருங்கிவிட வேண்டும். ஆனால் சில நேரங்களில் அவ்வாறு நேராமல் அதீத உதிரப்போக்கு நேரும் தன்மை வரும். இதனால் தாய் கண்ணுக்கு முன்னே மரணமடையும் நிலை வரும். இதை Post partum Hemorrhage என்போம்

மேற்சொன்னவையன்றி இன்னும் ஏனைய முறைகளில் பல சவால்களை முன்னிறுத்தியது கர்ப்ப காலமும் பிரசவமும். இதனால் தான் இதற்கான பிரத்யேக படிப்பாக இரண்டு வருடம் பயிலும் DGO ( Diploma in obstetrics and gynaecology) மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பான MD( OG) இருக்கிறது.

இன்னும் எம்பிபிஎஸ் பயிலும் மருத்துவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பில் மூன்று மாதங்கள் கட்டாயமாக மகப்பேறு மருத்துவப்பிரிவில் பாடம் கற்பார்கள். மேலும் தங்களது பயிற்சி மருத்துவ காலத்தில் இன்னும் மூன்று மாதங்கள் மகப்பேறு துறையில் கட்டாயப் பணி செய்வார்கள்.

இத்தனை கடினமான பயிற்சிகளைப் பெற்ற நிபுணர்களும், பிரசவம் பார்க்கத் தேவையான சிறப்பு பயிற்சிகளை கற்றுச்தேர்ந்த செவிலியர்களும், நடுநிலை சுகாதார செவலியர்களும் சேர்ந்து 1980களில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் பிறப்பிற்கு 500+ தாய் மரணங்கள் நடந்து வந்த நம் நாட்டின் நிலையில் இருந்து தற்போது 2019-ம் ஆண்டு 113 என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த MMR கடந்த 2019-2020-ம் ஆண்டு 53.3 தான்; அதாவது தமிழகத்தில் ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு 53.3 தாய்மார்கள் இறக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 99% சதவிகிதம் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கின்றன.

மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடக்கும் போதும் ஒரு லட்சத்துக்கு 53 மரணங்கள் நிகழ்கின்றனவே என்ற கேள்வி வருவதை அறிய முடிகின்றது. அதற்கான காரணம் அரசு பல முயற்சிகளை செய்து தாய்மார்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து கர்ப்ப கால சிகிச்சைகளை வழங்கி பிரவசத்தை எளிமையாக்கினாலும் பல கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதும் இன்னும் பலர் இத்தகைய சிறப்பான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களது கர்ப்பகால சந்திப்புகளை உதாசீனம் செய்வதாலும் ஆபத்து காலங்களில் விரைவில் மருத்துவமனைகளை எட்டாமல் தாமதிப்பதும் தாய் மரணங்களுக்கு இன்றவளவும் காரணங்களாக இருக்கின்றன.

எனினும் கர்ப்பகால தாய் மரணங்களைக் குறைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. அவற்றை இங்கு சுருக்கமாக விளக்குகிறேன்

1. ஜனனி சுரக்ஷா யோஜனா
சுருக்கமாக JSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2005ஆம் ஆண்டில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. இந்த திட்டம் மூலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் பிரசவம் நிகழுமாயின் கிராமமாக இருப்பின் தாய்க்கு ரூபாய் 700 நகரமாக இருப்பின் ரூபாய் 600 உடனடியாக கிடைக்கும். இது பிரசவ கால செலவினங்களுக்கு உதவும் ஊக்கத்தொகையாகும்.

2. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ராம்
சுருக்கமாக JSSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த திட்டம் மூலம் கர்ப்பகால கவனிப்புகள் அரசாங்க நிலையங்களில் நடக்கும் பிரசவங்கள் அனைத்தும் இலவசம். மேலும் சுகப்பிரவசங்களுக்கு மூன்று நாட்கள் மூன்று வேளை உணவு ( தாயோடு சேர்த்து கூட தங்கும் ஒருவருக்கும் வழங்கப்படுகின்றது) சிசேரியன் என்றால் ஏழுநாட்கள் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

பிரசவத்திற்கு தாய் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதையும் நல்லமுறையில் குழந்தை பெற்று மீண்டும் தாயையும் சேயையும் நலமுடன் வீட்டுக்கு சென்று விடுவதையும் இந்த திட்டம் இலவசமாக்கியது. மேலும் பிறந்த குழந்தைக்கு ஒருவருடம் வரை எந்த நோய் ஏற்பட்டாலும் இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டது.

3. லக்ஷயா (LaQshya)
இந்த திட்டம் 2017 முதல் இயங்கி வருகின்றது. இதன் மூலம் அரசு சுகாதாரத்துறைக்கு கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பிரசவம் பார்க்கும் அறைகள், சிசேரியன் அறுவை சிகிச்சை நடக்கும் அரங்கங்களின் தரத்தை உறுதி செய்வது.

மகப்பேறு சிகிச்சை வழங்கும் நிபுணர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் சரியான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்வது, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது, அவர்களது அறிவை அப்டேட் செய்வதை உறுதி செய்வது, மகப்பேறு மற்றும் பிரசவ கால அவசர சிகிச்சைத்துறையை மேம்படுத்துவது என்று இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

4. பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரித்வ அபியான்

சுருக்கமாக PMSMA திட்டம். இது 2016-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் ஒன்பதாவது நாள் நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் மகப்பேறு நிபுணர்களின் நேரடி பங்கெடுப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத நிலையில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு செக்அப் நடைபெறுவதை இந்த திட்டம் உறுதி செய்கின்றது.

இதன் மூலம் அதிக கவனம் தேவைப்படும் HIGH RISK தாய்மார்கள் அடையாளம் கண்டறியப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். பிரசவம் சார்ந்த அவர்களது மரணமடையும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படுகின்றது.

5. சுமன் திட்டம் ( சுரக்ஷித் மட்ரிவ்த ஆஷ்வாசன்)

இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் சிகிச்சை அளிக்க யாரும் மறுக்கக்கூடாது. மீறி மறுத்தால் அது அலட்சியமாகப் பார்க்கப்பட்டு தண்டனை நிச்சயம் எனும் நிலையை இந்த திட்டம் பிரகடணப்படுத்துகின்றது. கர்ப்ப கால தாய் மரணங்களை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும். மேலும் அவற்றை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்திட வேண்டும் என்பதை இந்த திட்டம் வலியுறுத்துகின்றது.

ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் ஆறு முறை மருத்துவரை சந்தித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்தத் திட்டம் விதிக்கின்றது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமையை பிரத்யேகமாக கர்ப்ப கால தாய்மார்களை கவனிக்கும் நாளாக ANTENATAL CARE DAY என்று அறிவித்து அவர்களுக்கு நாடு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த நாளில் சத்தான மதிய உணவு தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

படிக்க :
♦ பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?
♦ பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?

நடுவண் அரசு கொண்டு வந்து தமிழக மருத்துவமனைகளில் அமல்படுத்திடும் மேற்சொன்ன திட்டங்களன்றி நமது தமிழகத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை
தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் பதிந்து முறையாக கர்ப்ப கால பரிசோதனைகளை செய்து கொண்டு அரசாங்க மருத்துவமனையில் பிரசவம் பார்த்து முறையாக குழந்தைக்கு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் தாய்க்கு ரூபாய் 18000 ( ஊட்டச்சத்து பெட்டகம் அடக்கமாக) வழங்கப்படுகின்றது. இது நாட்டிலேயே முன்னோடி திட்டமாகும். ஊட்டச்சத்து பெட்டகத்தில் புரதச்சத்து பிஸ்கட்கள், பேரீச்சம் பழங்கள், சத்துமாவு, நெய், துண்டு என்று தாய்வீட்டில் கவனிப்பது போன்று அரசு கவனிக்கிறது.

2. பிறந்த குழந்தைக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்படுகின்றது
குழந்தைகள் நலப்பெட்டகத்தில் கொசு வலை , நகவெட்டி, குழந்தைகளுக்கான பிரத்யேக சோப், பவுடர் என்று சிறப்பான திட்டமாகும். இவையன்றி நாடுமுழுவதும் கர்ப்பமுற்ற தாய்மார்களை முறையாக பதிவு செய்து அவர்களது கர்ப்பகாலம் முழுவதும் சேவை வழங்கி அவர்கள் பிரசமுற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது வரை அத்தனையும் PREGNANCY INFANT COHORT MONITORING AND EVALUATION என்ற பிரத்யேக மென்பொருள் திட்டம் மூலம் பதிந்து கண்காணிக்கப்படுகின்றது.

இத்தகைய திட்டத்தை வளர்ந்த நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் நமது நாட்டில் இந்த திட்டம் கடந்த பத்து வருடங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மேற்சொன்ன அத்தனையும் செய்து பிரசவங்களை இலவசமாக்கி இலகுவாக்கி தரமானதாக்கி தாய் மரணங்களை குறைக்க எண்ணினால், ”நான் மரபு வழிப்படி வீட்டில் பிரசவம் செய்து கொண்டு மரணத்தை தேடிக்கொள்வேன்” என்று தாய்மார்கள் நினைப்பது வேதனை அளிக்கின்றது.

உண்மையில் அரசின் இந்த சேவைகளை பாரம்பரிய வாழ்க்கையில் இருக்கும் மலைவாழ் மக்கள் கூட தேடித்தேடி வந்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் படிப்பறிவில் சிறந்து விளங்கும் மேட்டுக்குடி மக்களே அறிவியலை புறந்தள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அழைக்கின்றனர். அவர்களது அறைகூவலை ஏற்றால் மீண்டும் தற்போது நடக்கும் தாய் மரணங்களை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும் நிலை ஏற்படும்.

சுகாதாரத்துறை சார்பாக பலமுறை கெஞ்சி கூத்தாடி அழைக்கப்பட்டும், காவல் துறை மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டும் கூட பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே முறையான பயிற்சி பெறாதவர்கள் மூலம் பிரசவம் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்எஸ்சி நர்சிங் பயின்ற சகோதரி முடிவு செய்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமும் அவலமும்.

குழந்தையின் தலை இடுப்பெலும்பில் சிக்கி மரணிக்க அது அழுகிப்போக தாய்க்கு HELLP எனும் கல்லீரல் கோளாறு மற்றும் ரத்த தட்டணுக்கள் குறைந்து போகும் தன்மை ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார். இது நிச்சயம் பலருக்கும் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு.

அரசாங்கமும் சரி, அறிவியலும் சரி எவ்வளவு முயற்சி செய்தாலும் தன் உயிரையும் உடலையும் காத்துக்கொள்ளும் தன்னலன் பேணாதவர்களை காத்திட இயலாது. அறிவியல் பாதையில் செல்வோம்! வெல்வோம் !

தற்போதும் கூட மருத்துவ வசதிகள் முழுமையாக சென்று சேராத தமிழகம் அளவு மருத்துவ வசதியை கண்டிராத அசாம் மாநிலத்தில் MATERNAL MORTALITY RATE 213 என்ற அளவில் அதிகமாக உள்ளது. தமிழகத்திலோ இந்த அளவை 53 என்று குறைத்துள்ளோம்.

நாம் வளர்ந்த நாடுகளின் அளவை எட்டிட அறிவியல் கூறும் பாதைக்கு அனைவரும் வருவதே சிறப்பானது என்று கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

0

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தியுள்ள பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் இழுபறியில் முடிந்துள்ளது. தங்களது உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை மேலும் மேலும் சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாக்கும் வேலையை மத்திய மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மத்திய அரசு கடந்த செப்டெம்பர் மாதம் அவசர அவசரமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 47 நாட்களாக தொடர்ந்து டெல்லியின் ஐந்து எல்லைப் பகுதிகளிலும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் அறைகூவல் விடுத்த டெல்லி சலோ பேரணிக்கு செவி சாய்த்து கிளம்பிய பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், .பி, .பி மாநில விவசாயிகளை அந்தந்த மாநில எல்லைகளில் வைத்து முடக்க நினைத்தது மத்திய அரசு.

பாஜக ஆளும் மாநிலங்களான, அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் அரசுகள் ஏவிய ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து விட்டு டெல்லி நோக்கித் திரண்டனர் விவசாயிகள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் அனைத்து வகையான வஞ்சக சமரசங்களையும் ஏற்க மறுத்து கடந்த 47 நாட்களாக கடுங்குளிரிலும், மழையிலும் விடாமல் நின்று போராடி வருகிறார்கள் விவசாயிகள்.

இந்நிலையில் இதுவரை விவசாயிகளிடம் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றது என்பதையே திரும்பத் திரும்ப ஒரே புராணமாகப் பாடி வருகிறது.

ஜியோவை புறக்கணிக்கும் விவசாயிகள்

சமீபத்தில் நடந்த எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்பவாங்க முடியாது என்றும், நீதிமன்றத்தின் வசம் இந்த விவகாரத்தை விடுவதுதான் சிறந்தது என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக விவசாயி சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய சங்கத் தலைவரான ஹன்னன் மொல்லா இது குறித்துக் கூறுகையில், இதற்காக மரணம் வரை சண்டையிடத் தயாராக உள்ளோம். நீதிமன்றத்திற்குச் செல்வது ஒரு வழிமுறையல்ல என்றார். அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் ஜனவரி 11 –ல் (இன்று) முடிவெடுக்கும் என்றும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதன் மூலமும், விவாயிகளைப் போராட்டத்தில் இருந்து தடுப்பதன் மூலமும், விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்கச் சொல்கிறது” என்கிறார் அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் (AIKSCC) கவிதா குருகந்தி.

உச்சநீதிமன்றத்திற்கு செல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கவிதா குருகந்தி, ”உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விவசாயிகளை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றுவது பற்றி குறிப்பிடுகையில், போராடுவது விவசாயிகளின் ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேளாண் சட்டங்களின் அரசியல் சாசன செல்லுபடித்தன்மை அதாவது, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்பது மற்றொரு விவகாரம். இவ்விவகாரத்தில் செல்லுபடியாகும் என்றோ, செல்லுபடியாகாது என்றோ எந்தப் பதிலை நீதிமன்றம் அளித்தாலும், அது இப்பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை.

ஏனெனில் விவசாயிகள் இச்சட்டங்களின் அரசியல் சாசனத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. இந்த வகையான கொள்கைத் திசைவழி மற்றும் சட்டம் குறித்துத்தான் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்விவகாரம், கொள்கை அடிப்படையிலானதாகப் பார்க்கப் படவேண்டியதே தவிர, அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டியது அல்ல. உச்சநீதிமன்றம் என்ன சொன்னாலும், இச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை விவசாய சங்கங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் இதுகுறித்துக் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளின் பலத்தை சோதித்துப் பார்க்கிறது. நாங்கள் பணியப் போவது இல்லை. நாங்கள் லோஹ்ரி (ஜனவரி 13) திருவிழாவையும், பைசாகி (ஏப்ரல் 14) திருவிழாவையும் இங்குதான் கொண்டாடுவோம் போலத் தெரிகிறது” என்று குறிப்பிடுகிறார்.

இப்படி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் நீடித்திருக்கும் சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைய இருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஜோகிந்தர் சிங் கூறுகையில், “ ஜனவரி 26-ம் நாள் அன்று அனைத்து தடுப்பரண்களையும் தகர்த்தெறிந்துவிட்டு டெல்லிக்குள் நுழைவோம் என இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எங்கள் மீது அவர்கள் தடியடி நடத்தலாம். துப்பாக்கிச்சூடு நடத்தலாம். நாங்கள் அது குறித்து கவலைப்படப் போவதில்லை. எங்களது இறுதி ஆட்டத்தை அவர்களோடு ஆடப் போகிறோம். ஜனவரி 26-ம் தேதி என்ன நடந்தாலும் அது அர்சாங்கத்தின் பொறுப்பு, அவர்கள்தான் அதற்குப் பழிகூறப்பட வேண்டும். ” என்றார்.

படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

போராடும் விவசாயிகள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனத் தயாராகிவிட்டனர். பாசிச மோடி அரசோ, இதனைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து திமிரெடுத்துப் பேசுவது குறையவில்லை.

வெவ்வேறு வழிமுறைகளில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க சதி வேலைகளைச் செய்ய முனைகிறது மோடி அரசு. சட்டரீதியான போராட்டமாக இதனை மாற்றி நீர்த்துப் போகச் செய்ய முனைகிறது. கைமீறிச் செல்லும்போது இப்போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கவும் தயாராக உள்ளது.

குஜராத்தில் ஜனநாயகத்தை மலமள்ளும் காகிதமாக மதித்து 2002 கலவரத்தை நடத்தி முடித்த மோடி இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்திருக்கும் மோடி அமெரிக்காவில் தம்மையொத்த வலதுசாரி வெறியர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அதகளம் செய்ததை சமீபத்தில் கண்டித்து அறிக்கைவிட்டார் மோடி.

சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முறையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான். சட்டவிரோதமாக கலவரம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்தான் இந்த மோடி. டிரம்பும் மோடியின் உயிர் நண்பர்தான். ஹிட்லர் முசோலினியைப் போல, மோடி டிரம்ப் என்பது எடுப்பான ஜோடிதான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லியை அலறச் செய்யும் விவசாயிகள் !

ஆனாலும் மோடி “ஜனநாயகத்திற்காகக்” குரல் கொடுக்கிறார்; டிரம்பின் ஆதரவாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றால் அதற்குக் காரணமில்லாமல் இல்லை. விவசாயிகளின் உறுதியைக் கண்டுணர்ந்துள்ள மோடி தலைமையிலான பாசிசக் கும்பல், விவசாயிகளை வில்லன்களாகக் காட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் செய்யத் துவங்கும். அதற்கான சமிக்ஞைதான் அமெரிக்க வன்முறை குறித்த மோடியின் கருத்து.

இதனை முறியடிக்க வேண்டுமெனில், நெருப்பை அணைக்க அடிக்கொள்ளியை பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேளாண் சட்டத்தை எந்த கார்ப்பரேட்டுகளின் ஏவலுக்குப் பணிந்து அவசர அவசரமாக நிறைவேற்றி அதற்காக சொந்த நாட்டு விவசாயிகளைக் கொல்வதற்கும் தயாராக இருக்கிறதோ, அந்தக் கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைத்தால்தான் அவர்களது ஏவலாளியாகச் செயல்படும் மோடி அரசை இறங்கிவரச் செய்ய முடியும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைக்கமுடியும்.

இதற்கு நல்ல ஒரு உதாரணத்தையும் நமக்கு இந்த விவசாயிகள் போராட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. வேளாண் பொருட்கள் சந்தையில் நுழைந்துள்ள அதானி , அம்பானியின் பொருட்களைப் புறக்கணிப்போம் என விவசாயிகள் கொடுத்த அறைகூவல் முகேஷ் அம்பானியை பொறிகலங்கச் செய்ததை சமீபத்தில் கண்டோம்.

ஜியோ தொலைபேசி இணைப்பைக் கைவிடுமாறும், ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணிக்குமாறும் விவசாயிகள் அறைகூவல் விடுத்தனர். பஞ்சாபில் பல ரிலையன்ஸ் டவர்கள் சேதமாக்கப்பட்டன. அரண்டு போன முகேஷ் அம்பானி அவசர அவசரமாக, தனக்கு எதிராக ஏர்டெல், வி.. உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் சதி செய்வதாகக் கூறினார். மேலும் தாம் வேளாண் சந்தையில் எவ்வித முதலீடும் செய்யவில்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்ததோடு, கோர்ட்டிலும் இதனைத் தெரிவித்தார்.

வேளாண் சந்தையில், குளிரூட்டப்பட்ட சேமிப்புக்கலன்கள் தொடங்கி, ஆண்ட்ராய்ட் செயலிகள் வரை முதலீடு செய்துள்ள யோக்கியர்’ முகேஷ் அம்பானி, இப்படி ஒரு பொய்யைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உருவாக்கியது, அம்பானியின் உயிராதாரமான உள்நாட்டுச் சந்தையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லி கார்ப்பரேட்கள் தான். அந்த அடிக்கொல்லியை அகற்றுவது என்பது விவசாயிகள் மட்டுமே செய்யக் கூடிய காரியம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யக் கூடிய காரியம் அது. வேளாண் சட்டத்தின் பின் நிற்கும் கார்ப்பரேட் கும்பலின் சந்தையின் மீதான தாக்குதல்தான் அவர்களை அதிரச் செய்யும் ஒரே வழி. கார்ப்பரேட் அடிக்கொல்லியை பிடுங்கிவிட்டால், வேளாண் சட்டங்கள் தானாக அணைந்துவிடும் !


சரண்

நன்றி : The Wire

டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட, ஜனவரி 7-ம் தேதி வியாழக்கிழமையன்று பஞ்சாப் கெட் மஸ்தூர் (PKMU) யூனியன் அமைப்பை சேர்ந்த 2000 கூலி விவசாய தொழிலாளர்கள் பஞ்சாப், டப்வாலியிலிருந்து அரியானாவுக்கும் டெல்லிக்கும் இடையில் உள்ள  திக்ரி எல்லைக்கு புறப்பட்டுள்ளனர். இது புதியதொரு வரலாற்றைப் படைத்திருக்கிறது.

இதை புதிய வரலாறு என நாம் குறிப்பிடக் காரணம், தற்போது போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திக்ரி எல்லை நோக்கி படையெடுத்திருக்கும் இந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் அனைவரும், இதற்கு முன்னர் பொதுநிலத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  மூன்றில் ஒரு பங்கு தங்களுக்குக் கிடைக்கப்பெறாதது குறித்த எழுந்த முரண்பாட்டில் பிற சமூகத்தினரோடு முரண்பட்ட கிராமங்களில் இருந்து வந்துள்ளனர் என்பதுதான்.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

நாடு முழுவதும் உள்ள 472-க்கும் மேலான விவசாய சங்கங்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில்  டெல்லி எல்லையில் விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக இன்றுவரை போராடி வருகின்றனர். இந்த போராட்டமானது பஞ்சாப் விவசாயிகளால் தலைமை தாங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் எல்லா சாதியினரும் நிலம் வைத்திருக்கின்றனர். ஆனால், மாநில மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள  ஜாட் சாதியினர்தான் அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடியவர்கள். அதே நேரத்தில் மாநில மக்கள் தொகையில்  32 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்  வெறும் 2.3 சதவீத விவசாய நிலம் மட்டுமே வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்த புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கக் கூடியவர்களுக்கு இந்த போராட்டம், ஜாட் சாதியினர் சம்மந்தபட்டது என்று முத்திரை குத்த எளிதாகி விடுகிறது. குறிப்பாக தலித் சமூகம் ஜாட் சாதியினருடன் பஞ்சாப்பின் சில பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நிலப்பிரச்சினையை ஒட்டி ஏற்பட்ட மோதலை கருத்தில் கொண்டு இப்போராட்டம் குறித்து இத்தகைய கருத்தாக்கத்தை எளிமையாக ஏற்படுத்திவிட முடிகிறது.

உதாரணமாக, 2014-ம் ஆண்டில் சங்க்ருர் மாவட்டத்தின் பால்டு காலன் என்ற கிராமத்தில் உள்ள தலித் மக்கள் அக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை குத்தகைக்காக கோரிக்கை வைத்து கேட்ட பொழுது, அவர்கள் போலீசின் தாக்குதலையும், நீதிமன்ற வழக்குகளையும் சிறையையும் கூட எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் உறுதியாக நின்று, அந்தப் பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமையை பெற்றனர்.

பால்டு காலன் கிராமத்தை சேர்ந்த நிலமற்ற கூலி தொழிலாளியான ஹர்பால் சிங்கிற்கு  கிராம பொது நிலத்தில் 0.2 ஏக்கர்  மட்டுமே கிடைக்கப்பெற்ற போதிலும், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகளுடன் சேர்ந்து கலந்து கொண்டார். ஊருக்கு திரும்பியுள்ள ஹர்பல், “புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு  வேலை கிடைக்காது. விவசாயிகளுடன் ஒன்றுபடுவது எங்களின் கடமை. நாங்கள் விவசாயிகளுடன் நட்புறவு வைத்துள்ளோம்” என்று கூறுகிறார்.

2016-ல் சங்க்ருர் மாவட்டம், ஜாலூர் கிராமத்தில் கிராம பொது நிலம் சம்மந்தமாக ஜாட் மற்றும் தலித் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குர்தேவ் கவுர் என்ற பெண்மணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். ஆனால், நிலமற்ற கூலி தொழிலாளியான குர்தாஸ் சிங்கும்,  ஜாலூரிலிருந்து வந்து  டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட  பல தலித் மக்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது ஊருக்கு திரும்பியுள்ள குர்தாஸ் , “எங்களுக்கு நிலம் கிடையாது. ஆனால், இந்த சட்டம் எங்களுக்கும் ஆபத்து தரக்கூடியதாக உள்ளது. பொது கிராம நிலம் மீது எங்களுக்கும் நில உடமையாளர்களுக்கும் சண்டை இருந்தது, ஆனால், எங்களுக்குள் தனிப்பட்ட பகை உணர்வு இல்லை.” என்கிறார்.

மேலிருந்து கீழ்நோக்கி வரும் பாதிப்பு :

மேலோட்டமாக பார்த்தால், இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிப்பதாக தோன்றுகிறது. ஆனால், ஜமீன் பிரபாதி சங்கர்ஷ் கமிட்டி என்கிற தலித் நில உரிமைக்காகப் போராடும் அமைப்பின் தலைவர் முகேஷ் மலாடு, விவசாய கூலி தொழிலாளிகளும் இந்த சட்டங்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். “அரசாங்கம் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியை (APMCs),  கலைத்தால் லட்சக்கணக்கான தலித் கூலி தொழலிளாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.,” என்று தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

“டெல்லி எல்லையில் போராட வந்திருக்கும் தலித் மக்களில் பெரும்பாலானோர் உயர் அறிவு பெற்றவர்கள். அவர்கள் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்கள் தலித் மக்களை இங்கே கொண்டுவர அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, இது அறிவுஜீவிகளை சிறையில் அடைத்திருக்கின்ற, காஷ்மீரிகளை கொடூர தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற, தொழிலாளர் சட்டங்களை திருத்தியிருக்கின்ற, என்ஆர்சி சட்டங்களை கொண்டுவந்திருக்கின்ற பாசிச அரசாங்கத்திற்கு எதிரானதோர் போராட்டம்” என்கிறார் முகேஷ் மலாடு

“ தலித் மக்கள் இந்த போராட்டத்தில் நுழைய வேண்டியதன் அவசியம், ஆளும் பாஜக அரசாங்கத்தின் பிரித்தாலும் சூழ்ச்சியை முறியடிப்பதில் முக்கியமானது” என்கிறார் அவர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய உடனே, பாஜக தானாக முன்வந்து தலித் மக்களின் உரிமைக்காக போராடும் தலைவனைப் போல காட்ட முயற்சித்தது. இவ்வாறாக இந்த தேசியப் போராட்டத்தை நில உடமையாளர்களின் உரிமை பற்றிய பிரச்சினையாக சித்தரித்தது. பிஜேபி ஆளும் உத்திர பிரதேசம் மாநிலம், ஹத்ராசில் ஒரு தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை மறைக்கும் வகையில் அவருடைய உடல் போலிசால் நள்ளிரவில் எரியூட்டப்பட்டது.

சட்ட விரோத முறையில் பஞ்சாப்பில் உள்ள தலித் அமைப்புகளை கட்டுபடுத்த பாஜக விரும்புவதாக குற்றம் சாட்டுகிறார், முகேஷ் மலாடு. “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதமாதத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரு நபர் உட்பட  வெவ்வேறு இடங்களிலிருந்தும் அனேக நபர்கள் எங்கள் அமைப்புக்கு நிதி கொடுக்க அணுகினர்” என்கிறார் மலாடு.

“பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘ஜாட் சாதியினர் தொடர்ந்து தலித் மக்களை ஒடுக்குகிற போது, ஏன் உங்கள் அமைப்பு அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது? பஞ்சாப்பில் பாஜக ஆட்சி அமைத்தால் அது ஜாட்டுகளுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிக்க தலித்துகளுக்கு உதவி புரியும்.’ என்றார். தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் எங்களை தொடர்பு கொண்டு உதவ ஆர்வம் தெரிவித்திருப்பது, இதுதான் முதல்முறை. இது பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இது பாஜக-வின் விளையாட்டாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்” என்றார் அவர்.

படிக்க :
♦ விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

உணவுக்கு எதிராக லாபம் :

மலாடு அல்லாத பி.கே.எம்.யூ (PKMU) தலைமை உட்பட கூலித் தொழிலாளர் மற்றும் தலித் அமைப்புகளின் பிற தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பி.கே.எம்.யூ-வின் மாநில தலைவர் ஜோரா சிங் நஸ்ரலி கூறுகையில், தமது அமைப்பைச் சேர்ந்தவரான 75 வயது தேஜா சிங் என்பவர் பஞ்சாப்பில் உள்ள பத்திந்தாவில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது நவம்பர் 11 அன்று,  இறந்ததாக குறிப்பிட்டார். தேஜா சிங் நிலமற்ற ஒரு தலித் தொழிலாளி. அவர் பி.கே.எம்.யூ-வில் 20 ஆண்டுகாலமாக சிறந்த செயல்வீரராக இருந்து வந்தார். 900 பி.கே.எம்.யூ-வின் தலைவர்கள் மற்றும் மற்ற அதன் செயல்பாட்டாளர்கள் திக்ரி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில், பி.கே.எம்.யூ-வின் அனேக உறுப்பினர்கள் பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

டிசம்பர் 12 மற்றும் 20 தேதிகளுக்கு இடையில் “விழிப்புணர்வு மற்றும் எழுச்சிகொள்ளுதல்” என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை பி.கே.எம்.யூ பஞ்சாப்பில் மேற்கொண்டது. அது 90 கிராமங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு அச்சட்டத்தின் பாதிப்புகளை தெரிவிக்கும் விதமாக விளக்கி பிரச்சாரம் செய்தது. இரண்டாவது கட்ட பிரச்சாரம் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 வரை நடத்தப்பட்டது. இதில் பி.கே.எம்.யூ-வின் தலைமை 200 கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஜனவரி 7 அன்று திக்ரி எல்லையை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.

நஸ்ரலி கூற்றுப்படி விவசாயிகள் தங்களின் குறைந்தபட்ச ஆதார விலையையும் நிலத்தையும் இழந்தால், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்,  விவசாயிகள் பாதிக்கப்படுவதை போலவே பாதிக்கப்படுவார்கள்.

“வர்த்தக கழகங்கள் பெரிய அளவில் விவசாயம் செய்ய தொடங்கினால், அவர்கள் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை பயன்படுத்துவார்கள். அவை விவசாய  கூலி தொழிலாளர்களை வேலை அற்றவர்களாக மாற்றும். அரசாங்கம் அத்தியாசிய பொருட்கள் திருத்த சட்டத்தின்படி இருப்பு வைக்கும்  அளவில் கட்டுபாடுகளை  முடிவுக்கு கொண்டுவந்தால், கார்ப்பரேட் கம்பெனிகள் நுகர்வோரை கொள்ளை அடிக்க தொடங்குவார்கள்” என தி வயர் இணையதளத்திடம் நஸ்ரலி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: “மக்களுக்கு என்ன தேவையோ அதை கார்ப்பரேட்டுகள் பயிரிட அனுமதிக்க மாட்டார்கள். நாட்டின் மக்கள் தொகைக்கு  போதிய உணவு உற்பத்தி என்பதை விட எது லாபம் தருகிற பயிரோ அதையே பயிரிட கவனம் செலுத்துவார்கள்.  விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயிகளுடன் இணைந்து இந்த சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்கு இவையே முக்கியக் காரணங்கள் ஆகும்.”

“கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நெற்பயிர் காலத்தில் சில பஞ்சாயத்துக்கள் விவசாய கூலி தொழிலாளர்களுக்கான கூலியை குறிப்பிட்ட வரம்பிற்குள் நிர்ணயிக்க தீர்மானம் நிறைவேற்றியதும், இதற்கு எதிராக தலித் மக்கள் போராடினால் சமூக புறக்கணிப்பு செய்யப் போவதாக மிரட்டயதுமான நினைவுகள் நினைவுக்கு வந்தாலும் கூட, உண்மையிலேயே இவை எதுவும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெறுவதிலிருந்து எதுவொன்றும் எங்களை தடுக்காது” என்றார் நஸ்ரலி.

‘நம் எல்லோருக்குமான ஒரு போராட்டம்’ :

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலமற்ற கூலி தொழிலாளார்கள் மட்டுமே தலித்துக்கள் அல்ல. பஞ்சாப், சண்டிகரில் உள்ள அம்பேத்கர் மாணவர் சங்கம்(ASA) சிங்கு எல்லையில் உள்ள போராட்டக்களத்தில் இலவச நூல் நிலையத்தை அமைத்துள்ளது.

மாணவர்கள் அமைத்த இலவச நூலகம்ASA-வின் உறுப்பினரும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான குர்தீப் சிங், “போராடுவதற்கு  நீங்கள் நிலம் வைத்திருப்பவராகவோ அல்லது நிலம் அற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இங்கே சமூகத்தின் உறுப்பினர்களாக பங்கேற்க வந்தோம். குறிப்பிட்ட சாதியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தின் உறுப்பினர்களாகவும் வந்துள்ளோம். எங்கள் போராட்டக்கார்கள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இங்கே அமைத்துள்ள நூலகம் பல்வேறு தரப்பு சாதி, வர்க்கம் சார்ந்த மக்களை கவர்ந்து வருகிறது. தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் உயர்வான நம்பிக்கை வைத்துள்ளேன்.” என தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு குர்தீப் கூறும் அதே காரணம்தான் 28 வயதான கபடி வீரரும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவருமான குஷ்-ஷிடமும் வெளிப்பட்டது. அவர் சிங்கு எல்லை முகாமில் போராட்டத்தில் இருக்கிறார். குஷ், ஹோசிப்பூரில் உள்ள சந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு என நிலம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு போராட்டக்காரர்  விவசாயியாக இருக்கலாம் அல்லது விவசாயி அல்லாதவராகவும் இருக்கலாம். அது ஒரு பிரச்சினையே அல்ல என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“நாம் நமது எல்லோருக்காகவும் போராடவேண்டிய தேவை உள்ளது. என் நண்பர்களில் சிலர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை சார்ந்து உள்ளது. எங்களின் வாழ்வாதாரம் அவர்களை சார்ந்து உள்ளது. அவர்கள் தங்களின் நிலத்தை இழந்தால் நாம் எப்படி மக்களுக்கு உணவு அளிக்க முடியும்?” ” என்கிறார் குஷ்.

“நம்மையெல்லாம் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்த பிஜேபி விரும்புகிறது. ஆனால், நாம் அனைவரும் ஒருவரே. இந்த போராட்டங்களில்  சாதி ஒரு பிரச்சினையாக இருக்கவே முடியாது. இங்கே, ஒவ்வொருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாம்  இங்கே ஒன்றாக தங்கியிருக்கிறோம். ஒரே தட்டில் உணவு உண்கிறோம்.” என்கிறார் குஷ்

இந்த வலிமையான ஒற்றுமை உணர்வுதான், “இன்னும் பல்வேறு தலித் மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்” என்று பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முன்ஜித் சிங் கூறுவதற்கு காரணமாக உள்ளது.

“தலித்துக்கள் இப்போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். ஆனால், அதிக எண்ணிக்கையில் இல்லை. ஜாட் உள்ளிட்ட தலித் அல்லாதோர் அனைவரும் இருகரம் விரித்து தலித்துகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும். தலித்துக்களை பயன்படுத்தி பிஜேபி வெற்றிபெற்றால் அதற்கு தலித் அல்லாதோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார் முன்ஜித் சிங்.


மொழியாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire

 

 

வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 42 நாட்களுக்கும் மேலாக பல லட்சம் விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்டாகக் கொள்ளாமல் தலைநகரை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். டெல்லியின் கடுங்குளிருக்கு பல விவசாயிகள் இறந்துள்ளனர். ஏழு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் விவசாயச் சட்டத்தினை திரும்பப்பெற முடியாது திருத்தங்கள் செய்கிறோம் என்கிறது மோடி அரசு.

ஆனால் விவசாயிகளோ சட்டத்தினை திரும்பப் பெறுகின்றவரை போராட்டம் தொடரும் என்று உறுதியாகப் போராடிவருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறுவணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

இச்சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகள் தனியாருடன் ஒப்பந்தம் செய்து லாபமடையலாம், விவசாயத்துறையில் போட்டி ஏற்படும், விவசாயிகள் சுதந்திரமாக தங்களது விலை பொருட்களை சந்தையில் விற்க முடியும், இடைத்தரகர்களை ஒழிக்கும், விவசாயத்தில் அந்நிய முதலீடுகள் குவியும் என்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஞ்சாபின் சிரோன்மணி அகாலிதள கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். BJP உடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்து விட்டது. BJP கூட்டணியில் உள்ள அரியானா மாநில துணை முதல்வரோ விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பதவி விலகப் போவதாகக் கூறியுள்ளார். BJP கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்தினை எதிர்த்து வரும் நிலையில் எடப்பாடியோ BJP காரனைவிட ஒருபடி மேலே சென்று இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசிவருகிறார்.

விவசாயிகளின் போராட்டத்தினால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மோடிஅமித்ஷா கூட்டணி இச்சட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக மொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டுள்ளது. உதாரணமாக இந்திய ரயில்வே IRCTC-ல் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்களுக்கு விவசாயச் சட்டங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 74 விவசாயப் பல்கலைக் கழகத்தை சார்ந்த 15000 மாணவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தது என பட்டியல் நீள்கிறது. கூடவே, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்புகளின் (FICCI) தலைவர் உதய் ஷங்கர் “வேளாண் சட்டங்கள் புதிய சீர்திருத்தங்களையும், தேசிய நலனையும் உள்ளடக்கியதாக இருப்பதால் பங்குதாரர்கள் அனைவரும் சட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

விவசாயிகளோ இது எங்களை பலியிட்டு கார்பரேட்டுகளை கொழுக்க வைப்பதற்கானச் சட்டம் என்கிறார்கள். விலை உத்திரவாதம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) 2020 சட்டத்.தின்படி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் விவசாயியின் நிலத்தில் எந்த விதை விதைக்க வேண்டும், எந்த உரம், எந்த பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும், எந்த இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், என்பவை அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை ஒப்பந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளே பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

punjab farmers protest for kashmirகுறிப்பாக ஒப்பந்தச் சட்டம் அத்தியாயம் 4 பிரிவு 19 ன் படி ஒரு விவசாயியுடன் கார்ப்பரேட் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தை மீறி நடக்கும்போது அதை எதிர்த்து அப்பெருநிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க விவசாயிக்கு இருக்கக்கூடிய சட்டரீதியிலான உரிமையையும் வேளாண் சட்டங்கள் பறிக்கிறது. பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் அளவிலான மட்டத்திலேயே பேசி பஞ்சாயத்து செய்துகொள்ளச் சொல்கிறது.

இதன்படி ஒரு விவசாயியிடம் கார்ப்பரேட்டு நிறுவனம் ஒரு குறிப்பட்ட பயிரை உற்பத்தி செய்ய கூறி ஒப்பந்தம் போடுகிறது எனில், அறுவடை சமயத்தில் அப்பயிர் சந்தையில் விலை மலிவாகிறது எனும்போது அல்லது உற்பத்தி செய்த பொருளின் தரத்தில், அளவில் மாறுபட்டிருந்தால் ஒப்பந்தத்தில் போட்டபடி இல்லையெனக் கூறி ஒப்பந்த நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை என்றால் அல்லது ஒப்பந்த விலையைவிட குறைவாகத்தான் தர முடியுமென்றால் அந்த விவசாயியின் நிலையை சற்றே யோசித்துப்பாருங்கள்

அரசிடம் இழப்பீடு கேட்கும் உரிமையைகூட இழந்து நிற்கும் அவனுக்கு கந்துவட்டிக் கொடுமையையும், வங்கிகடன் தொல்லையையும் எதிர்கொள்வதைவிடபூச்சிக்கொல்லி மருந்தை குடும்பத்தோடு தின்றுவிட்டு சாவதுதான் எளிய தீர்வாக இருக்க முடியும். ஒரு சிறு விவசாயியால் பலமிக்க கார்ப்பரேட்டை எதிர்த்து நீதிமன்றத்தின் படியேற முடியாதென்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால், முதலாளித்துவ சமூகம் கொடுத்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை கூட இந்தச் சட்டம் மறுக்கிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி வேளாண் சட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடவில்லை. 23 விவசாய விளைப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதாரவிலை மத்திய அரசு கொடுத்துவருகிறது. சந்தை விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை காப்பதே இந்த MSP தான். குறைந்தபட்சம் விளைபொருட்களுக்கான உள்ளீட்டு செலவையாவது விவசாயிகள் திரும்ப பெறமுடியும்.

அதிகப்படியான விவசாயப்பொருள்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் (APMC மூலமாக) விவசாயிகளை காப்பாற்ற இருக்கக்கூடிய குறைந்தபட்சத் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP யும் APMC யும் இனி இல்லை என்கிறது. விவசாயப் பொருட்களை கார்பரேட்டிடம் விற்கச் சொல்கிறது. எனவே தான் விவசாய விலைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உத்தரவாதப்படுத்த அதனை சட்டமாக்க வேண்டும் என்பதை விவசாயிகள் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அரசோ சட்ட அங்கீகாரம் தர மறுக்கிறது.

MSP குறித்து விவசாயத்துறை அமைச்சர் தோமரும் பிரதமர் மோடியும் கூறும் வாய்மொழி உத்திரவாதத்தை விவசாயிகள் நம்பத்தயாராக இல்லை. 04-01-2021 அன்று இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘‘பிரச்சனையின் மூலக் காரணமே மிதமிஞ்சிய தானிய உற்பத்தியும் சந்தை விலையை விட விவசாயப் பொருட்களுக்கான MSP அதிகமாக இருப்பது தான்‘’ என்கிறார். MSP ஐ நீக்க வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. இதைத் தான் கட்காரியும் மோடியும் தோமரும் வேறு வேறு விதமாக கூறுகின்றனர்.

BJP ஆதரவு பத்திரிக்கையான ஸ்வராஜ்ய (Swarajya) பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த தி ரோட் டு ஆத்மா நிர்பார் பாரத் என்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் “இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது.” என்று விவசாயிகள் போராட்டத்தை ஒட்டிப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

இச்சட்டங்கள் குறித்து நாடாளுமன்றங்களிலும் போதிய விவாதங்களை மோடி அரசு நடத்தவில்லை. மக்களவையில் தனது பெரும்பான்மை பலத்தைக்கொண்டு விவசாயச் சட்டத்தை நிறைவேற்றிய பாஜக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும் கடும் அமலிக்கு இடையே வாய்வழி ஓட்டெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்துவிட்டார். மேலும், தேர்வுக் குழுவிற்கு விவசாயச் சட்டத்தினை அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மறுத்த விவசாயத்துறை அமைச்சர் இச்சட்டத்தினை உடனே நிறைவேற்ற வேண்டும்.. இது மேலிட உத்தரவு என்று கூறியதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகிறார்.

இந்தியாவின் உயர் அதிகாரம் படைத்தது மத்திய அமைச்சரவை. இந்திய ஜனநாயகத்தின் மையம் நாடாளுமன்றம் என்கிறார்கள். இவர்களுக்கே உத்தரவிட அதிகாரம் கொண்ட அந்த மேலிடம் யார்? நிதிமூலதன கும்பல்கள் தான். கடந்த ஒன்பது மாதங்களாக (கொரோனா காலகட்டத்தில்) பல மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது, கார்பரேட்டுகள் வங்கிகள் தொடங்க அனுமதி, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல், தொழிளாலர் சட்ட திருத்தங்கள் அதன் தொடர்ச்சியிலே தற்போது விவசாயச் சட்டமும் உள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாமல் போவதற்கு விவசாய சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்றும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாகவும் தோமர் கூப்பாடு போடுகிறார். விவசாயிகளின் கோரிக்கையான MSP-க்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு மற்றும் விவசாயச் சட்டத்தினை திரும்பப் பெறுவது என்ற இரு கோரிக்கைகளையும் மோடி அரசு ஏற்காததே இழுபறிக்கு காரணம்.

அதே சமயம் விவசாயிகளை படியவைக்கவும் விவசாயப் போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொச்சைப்படுத்தவும் பல கீழ்தரமான வேலைகளை மோடி அரசு செய்துவருகிறது. பாஜக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தோ லட்சக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகளை பார்த்து ஒரு சிறு கும்பல்(thukde thukde gang) என்றார். உத்திர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் மிகவும் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டவிருப்பதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்என்கிறார். பியூஸ் கோயலோ மாவோய்ஸ்ட் பின்னிருந்து போராட்டத்தை வழிநடத்துகிறார்கள் என்கிறார்.

BJP-RSS வானரக் கூட்டங்களோ போராடும் விவசாயிகளை தேச விரோதிகள், தீவிரவாதிகள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், சீனாவிற்கு ஆதரவானவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். சமூக வலைதளங்களில் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் தவறான தகவல்களை பாஜக சங்கப்பரிவாரங்கள் பரப்பிவரும் வேலையில், அதற்கு ஆதரவாக BJP-RSS உடன் கள்ளக்கூட்டும், அம்பானியோடு நேரடி வர்த்தக உடன்படிக்கையும் வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், விவசாயிகள் போராட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட கிசான் ஏக்தா மோர்ச்சா எனும் முகநூல் பக்கத்தை முடக்கியது. பிறகு எதிர்ப்புகள் எழவே வேறு வழியின்றி முகநூல் பக்கத்தை மீண்டும் விடுவித்தது.

ஒருபக்கம் கூலி விவசாயிகள், சிறுவணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள் அதற்கு நேர் எதிராக அரசும் ஆளும் வர்க்கங்களும் இந்த சட்டத்தை எப்படியும் நடைமுறைப்படுத்திவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டிருகிறது. கடந்த முப்பது வருடகால மறுகாலனியாக்க கொள்கைகளால் சிறிது சிறிதாக நஞ்சூட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இந்திய விவசாயத்தின் கடைசி மூச்சையும் நிறுத்தவே இச்சட்டங்கள் வழிசெய்யும். இச்சட்டங்களுக்கு எதிரான வாழ்வா..? சாவா..? போராட்டத்தில் விவசாயிகளுடன் கைகோர்த்து எதிர்த்து நிற்பதென்பது நமது கடமையாகும்.


பாலன்

காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை

டந்த அக்டோபர் மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தனது மகளுக்கு டிசம்பரில் அஞ்சலி செலுத்தியது நூரின் குடும்பம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அப்பெண் கிட்டத்தட்ட ஒருமாத காலம் மருத்துவமனையில் உயிருக்காக போராடினார்.

கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த நூரின் மகள், அக்டோபர் மாதம் தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று, வீடு திரும்புகையில் இரண்டு நபர்களால் கடத்தப்பட்டார். “அவர்கள் அவளைக் கடத்தி அடர்த்தியான தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். அங்கு அவளை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கினார்கள்” என்று அப்பெண்ணின் உறவினர்களில் ஒருவர் சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.

அப்பெண் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். SKIMS மருத்துவமனையின் மருத்தவ கண்காணிப்பாளர் டாக்டர் ஃபரூக் ஜன் கூறுகையில், “அந்த பெண் மோசமான நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். ஒரு மாத காலமாக ICU-வில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தவர் நவம்பர் 27 அன்று உயிரிழந்தார்” என்றார்.

படிக்க :
♦ வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் என்கிறார்கள் குடும்பத்தினர். “அவளுக்கு நடந்த கொடூரத்தை நான் மனிதர்களிடமிருந்து சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. மிருகத்தனமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டாள். அவள் அணிந்திருந்த தாயத்து கயிற்றை வைத்தே அவள் கழுத்தை நெறித்து கொல்லப்பார்த்திருக்கிறார்கள்; நாக்கை பிளந்திருக்கிறார்கள். அவள் அனுபவித்த வலியை என்னால் கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாது” என்று நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு உறவினர், “இருவரும் அப்பெண்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், சில உள்ளூர் மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை :

‘பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்கள் வழக்குகளை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுகையில் எதிர்கொள்கின்ற மோசமான சூழ்நிலை’யை ஸ்ரீநகர் குற்றப்பிரிவின் அதிகாரப்பூர்வ தரவுகள் விவரிக்கின்றன.

ஜம்மு–காஷ்மீரில் தற்போது 1,046 பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணையில் உள்ளன என்பதை ஆறு ஆண்டுகளில் (மார்ச் 2019 வரை) கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில், 831 வழக்குகள் 2014 முதல் நிலுவையில் உள்ளன. இதில் 820 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குழந்தைகள்.

2019-ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 64 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 33 குழந்தைகளும் அடக்கம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைந்திருக்கிறது என்று தகவல் கூறுகிறது.

ஜம்மு–காஷ்மீர் நிர்வாகம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 16 பாலியல் வல்லுறுவு வழக்குகளும், 64 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நடந்துள்ளன என்று பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு வழக்கமாக மாறியுள்ளன என்பதை இத்தரவுகள் அம்பலப்படுத்துகிறது.

2014-ம் ஆண்டில், 352 வழக்குகளில், 265 மைனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தரவு கூறுகிறது. 2015-ல்  312 (251 மைனர்) வழக்குகளும், 2016-ல் 263 (204 மைனர்) வழக்குகளும், 2017-ல் 314 (213 மைனர்) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 359, இதில் மைனர் சம்பந்தப்பட்ட வழக்குகள் 273.

ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதன் பின்னரும், ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் காஷ்மீரில் தொடர்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர் மக்கள் உடனடியாக போராட்டம் நடத்தினார்கள் எனினும் இச்சம்பவம் யூனியன் பிரதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை.

“ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அமைதிக்கான எந்த விளக்கமும் இல்லை. இந்த குரூரத்தை கண்டு கொள்ளாத சமூகமாக மாறிவிட்டோமா? இந்த பள்ளத்தாக்கு நேர்மையான நாகரிகத்துக்கு சொந்தமானது. ஆனால் இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை” என்று யூனியன் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி.

”இந்த அமைதி, வன்முறையை அதிகரிக்கவே செய்யும்” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் எசாபீக் அலி. “ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவத்தைப் பற்றி உள்ளூர் செய்தி நிறுவனங்கள் எதுவும் பின் தொடரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நம்மில் ஒருவர் என்பதால் மக்கள் மத்தியில் எந்தவிதமான கூச்சலும் அழுகையும் இல்லை. இதுவே வெளிநாட்டவராக இருந்தால், அதைப் பற்றி பேசியிருப்பார்கள்” என்று வருத்தப்படுகிறார் அலி.

வன்முறை சம்பவங்களில் சமூகத்தின் இத்தகைய அலட்சிய போக்கு என்பது சமூகத்தில் பெண்களுக்கான இடங்களை சுருக்கிவிடும் என்கிறார் அலி. அவர், “இது நிச்சயமாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். பெண்களை எங்கும் தனியாக செல்ல அனுமதிக்க மாட்டார்கள்” என்று விளக்குகிறார்.

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை பரவல் :

21 வயது மாணவி இறந்த சில நாட்களுக்குள், குல்கம் மாவட்டம் தேவ்சரில் 17 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். சிறுமியை வல்லுறவு செய்த காட்சியை குற்றவாளிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். போலீஸ் அவர்களை உடனடியாகக் கைது செய்தது.

படிக்க:
♦ புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான நயீமா மெஹூர், “ஆரம்பத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மரியாதைக் குறைவாகவும் கடுமையாகவும் நடத்தப்பட்டனர். இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கச் செய்திருக்கிறது. முழு பள்ளத்தாக்கையும் உலுக்கிய சில சம்பவங்களும் இருக்கின்றன. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்த பிரச்சினைக்குரிய பகுதிகளில், பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.” என்கிறார்.

பெண்கள் மத்தியில் பரவும் அச்சம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கிராமப்புற பெண்களை அதிர்ச்சியில் உறையவைத்தது மட்டுமல்ல அவர்களின் சுதந்திரத்தையும் பறித்துள்ளது.

“இந்த சம்பவத்திற்கு பிறகு வயல்வெளிக்கு போகக்கூட பயமாக இருக்கிறது. வெளியே செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால், நாங்கள் கூட்டமாகவோ அல்லது எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களில் ஒருவரை அழைத்துக் கொண்டுதான் செல்வோம்” என்று கிராமத்து பெண்களில் ஒருவர் கூறுகிறார்.

“நான் குல்கம் மாவட்டத்திலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் எனது கல்லூரிக்குக் கூட போகக்கூடாது என்று எனது பெற்றோர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். என் பெற்றோருக்கு எல்லாவற்றையும் விட என் வாழ்க்கைதான் முக்கியம்” என்று பாதிக்கப்பட்டவரின் மற்றொரு உறவினர் ஒருவர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயதான அடில் அகமது தர் மற்றும் 24 வயதான வசீம் அகமது தர். இருவரும் குல்கம் மாவட்டத்திலுள்ள அஸ்முஜி கிராமத்தில் வசிப்பவர்கள். “குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அனாதைகள். வசீம் பஸ் டிரைவர். இந்த இருவருக்கும் நீண்ட காலமாக போதை பழக்கம் இருக்கிறது” என்று உள்ளூரில் வசிக்கும் ஒருவர் கூறினார்.

“சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவள் இறந்து ஐந்து நாட்கள் (இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது) ஆகிவிட்டது. எனது சகோதரி கல்லறையில் இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களோ போலீஸ் காவலில் பாதுகாப்பாக உள்ளனர்” என்று ஆதங்கப்படுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி. தங்களது இறந்த மகளுக்கு நீதியை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினர் கேட்கின்றனர்.

கட்டுரையாளர் : பிஸ்மா பட்
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

 

நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

மதர்ம லட்சியத்திற்காக தன் வாழ்க்கையை அர்பணித்த ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கைப் பயணம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல் சிறப்பாக இந்நூலில் விவரித்து சொல்லப்பட்டிருக்கிறது.

போர்க் குணமிக்க போராட்ட நடைமுறை, வீரசாகசங்கள், உயிர்தியாகம் ஆகியவற்றின் ஊடாக மாமனிதர்கள் மக்களின் மனங்களில் நீங்காத நினைவுகளாக நிலைபெற்று விடுகின்றனர். போராட்ட வரலாற்றில் தனிமுத்திரை பதித்த போராளிகளில் ஒருவர்தான் சாம்பவான் ஓடை சிவராமன்.

மாவீரன் சிவராமன் , 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சாம்பவான் ஓடை கிராமத்தில், திருமேனி – சிவபாக்கியத்தம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்.

“என்னா சிவராமா ஓரேடியாக யோசனையில் முழுகிட்ட..”

“ஓ…….ஒன்னுமில்லே அண்ணே; நாம சேரி மக்களை எவ்வளவு மிருகத்தனமாக கொ….. கொடுமைப்படுத்துகிறோம்”

“தீண்டாமைங்கிறத வச்சுக்கிட்டு நாமபடுத்துறது ஒருபக்கம்……… அடிமைங்கிறத வச்சுக்கிட்டு பண்ணையாருங்க படுத்துறது ஒருபக்கம். உலகத்திலே, நம்ம நாட்டிலே சேரி மக்கள் படுகின்ற துன்பம் மாதிரி வேறுயாரும் பட்டு இருப்பாங்களாங்கிறது சந்தேகமாக இருக்கு”

17 வயதில் சிவராமனுக்கு ஏற்பட்ட சமத்துவ உணர்வின் வெளிப்பாடே இந்த உரையாடல். தஞ்சை தரணியில் கோலோச்சிய பண்ணை பயங்கரத்திற்கு முடிவுகட்ட புயற்பறவையாய் தோழர் சீனிவாசராவ் வந்தார். அவரது போர்க்குரல் கீழ் தஞ்சை முழுவதும் எதிரொலித்தது.

“உங்களை தாக்கினால் திரும்பி தாக்குங்கள் – சங்கமாய் ஒன்றுசேர் – சளைக்காமல் போராடு!” என்ற மந்திர சொற்கள், பண்ணை அடிமைகளின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை காட்டியது.

“இன்னைக்கு அடிவிழாமல் இருந்தால் விடிஞ்ச பொழுது நல்ல பொழுது” என்று எண்ணிக் கொள்வார்களே தவிர எதிர்த்து நிற்கவேண்டும் என்ற நினைப்பு பண்ணை அடிமைகளின் கனவிலும் வராது. தோழர் சீனிவாசராவ் ஆற்றிய உரைகள் பண்ணை அடிமைகளின் ரத்த நாளங்களின் புது ரத்தம் பாய்ச்சியது. அடங்கி கிடந்தவர்கள் அமைப்பாக திரளத் துவங்கினர்.

படிக்க :
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

1942-ல் பொது உடைமை இயக்கத்தின் மீதான தடையை காலனிய ஆட்சியாளர்கள் நீக்கினார்கள். சீனிவாசராவ் – ஏ.கே.கோபாலன் – நெடுங்காடி ராமசந்திரன் போன்ற தலைவர்கள், கிராமங்கள் தோறும் அரசியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, எண்ணற்ற செயல் வீரர்களை உருவாக்கினார்கள்.

தலைமறைவாய் கட்சி பணியாற்றுவது மிகவும் கடினமான பணியாகும். பண்ணையார்களின் கையாட்களாக செயல்பட்ட கருங்காலிகள், காவல்துறைக்கு தகவல் சொல்லும் ஒற்றர்கள், போலீசு உளவுப்பிரிவு என மக்கள் விரோதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு களப்பணி ஆற்ற வேண்டும்.

டீக்கடை – தையற்கடை – சலவைக்கடை – பெட்டிக்கடை போன்ற நம்பகமான ஆதரவாளர்கள் உள்ள இடங்கள், கட்சியின் தகவல் தொடர்பு மையங்களாக செயல்பட்டன. இத்தகைய தலைமறைவு வாழ்க்கை பற்றிய விவரங்கள் இப்புதினத்தில் இடம் பெற்றுள்ளன.

ஊரில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் ‘வெட்டிமை’ தொழில் செய்யும் சேரி மக்கள் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. குடிவேலை செய்வது, மாடு செத்தால் தூக்குவது – இறப்பு செய்தியை சொல்வது, தப்பு கொட்டுவது, பிணம் எரிப்பது என எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

பண்ணையார்கள் – ஆதிக்கசாதியினர் தங்கள் மீது நடத்தும் அட்டூழியங்களை – அடக்குமுறைகளை எதிர்த்து பேசவோ, தடுத்து நிறுத்தவோ சேரி மக்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

இறந்து போனவர் நல்லவரா – கெட்டவரா என்பதை இடுகாட்டில் பேசுவதை வைத்தே எடை போடலாம்.

“பாவி இவன் எப்பந்தொலைஞ்சு போவான்னு ஊரே எதிர்பாத்துச்சி, ஊரை அடித்து உலையில் போட்டான் – தொலைஞ்சான் – “முண்டுனா கோடாலியால போடுங்கடா”

“இந்தா மாப்புளே முண்டுறாறு நம்பள பார்த்தா இவன் வாயில நல்ல வார்த்தை வராதே. எத்தனை பெண்களை கெடுத்து இருப்பான். கண்டந் துண்டமா வெட்டுங்கடா”

“பாவம் இந்த ஆயா, மகராசி மொகத்தை பார்த்தே பசியால இருக்கான்னு கஞ்சி ஊத்தும்”

வன்கொடுமை புரிந்த ஆதிக்க சாதிவெறி கொடுங்கோலர்களை எதிர்த்து நிற்க முடியாமல் அடங்கி கிடந்த சேரிமக்கள், சாதிவெறியர்களின் பிணத்தின் மீது காட்டும் ஆற்றாமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இப்புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லா ஊர்களிலும் சேரிகள் ஊருக்கு வெளியே இருந்தன. “இரண்டு பக்கமும் பண்ணை நிலங்கள் சேரிக்கு செல்லும் உழங்கையை ஒற்றையடிப் பாதையாகவே மாற்றி இருந்தன. இரண்டு பக்கங்களிலும் மலங்கழித்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள்”

சிவராமனின் மனைவி இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்ள பெற்ற தாயும் சுற்றத்தாரும் வற்புறுத்துகிறார்கள்.  “எனக்கு புள்ளையும் வேணாம். கு………….. குட்டியும் வேணாம் எ……….. என் பேரை சேரி சொல்லும் நா…… செத்தா சேரிகளே அழும்” என்று கூறி தன் வாழ்வையே உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அர்ப்பணித்த தியாக உள்ளத்தை எண்ணி நம் நெஞ்சம் விம்முகிறது.

பொதுக்குளத்தில் தண்ணீர் அள்ளி குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு முதியவரை ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கி விடுகின்றனர். அந்த கிழவனை அடித்த இளைஞர்களை தேடிப்பிடித்து சிவராமன் நியாயம் கேட்கிறான். தாங்கள் செய்தது நியாயம் தான், தீட்டு என்பது எங்கு உள்ளது என்று கூறிய இளைஞர்களிடம் “ஏர் உழுது, நாற்றுநட்டு, களத்து மேட்டில் நெல்லை குவிப்பவர்கள் சேரிமக்கள், அதில் நாம் தீட்டு பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீட்டை பயன்படுத்தி கொள்கிறோம்.” என்றார். இளைஞர்கள் செய்தது எவ்வளவு மனிதத்தன்மை அற்ற செயல் என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்தார் சிவராமன்.

சிவராமன் ஆதரவாக அவர்களின் தோளில் மீது கை வைத்தான். மூவரும் சேரிக்கு போனார்கள் கிழவனை அழைத்துக் கொண்டு அதே குளத்திற்கு போனார்கள். சேரி கிழவனை குளத்து நீரைக் குடிக்க வைத்தனர்.

“அண்ணே இனிமே ஒங்களோட சேர்ந்து சேரி மக்களுக்கு நாங்களும் பாடுபடுகிறோம்” என்று மூன்று இளைஞர்களும் சிவராமனோடு கரம் சேர்க்கின்றனர்.

சிவராமன் தன்னுடைய பொது சேவையை ஒரு கண்ணாகவும், நேர்மை – ஒழுக்கத்தை இன்னொரு கண்ணாகவும் பார்த்தான். தோழர்களும், சேரிமக்களும் சிவராமன் மீது அளவில்லாத பாசத்தை பொழிந்தார்கள்.

தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை விற்று ஒரு பகுதியை உடன்பிறந்த சகோதரிகளுக்கும், பாதியை சல்லிகாசு கூட தொடாமல், கட்சி செலவிற்காக பணம் முழுவதையும் மறவக்காடு கிருஷ்ணனிடம் கொடுத்து விடுகிறார்.

தோழர் எம்.வி.சுந்தரத்தின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டு நண்பர் ஒரு கை துப்பாக்கியை அவருக்கு கொடுத்தார். சிவராமனின் துடிப்பான செயல்பாட்டை பார்த்த தோழர் எம்.வி.சுந்தரம் அந்த கைதுப்பாக்கியை சிவராமனிடம் கொடுத்து விடுகிறார். ஆனால் எப்போதும் அதை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணியதே இல்லை

படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டும், அடக்குமுறையும், கொடுமைகளும், காவல்துறையின் காட்டுமிரான்டித்தனமும் எள்ளளவும் குறையவில்லை. நெடும்பலம் பண்ணையாரின் அட்டகாசம் உச்ச நிலையை அடைந்து சிறுகளத்தூரில் தீரத்தான், வெங்கடாசலம் ஆகிய தோழர்களின் குடிசைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மே 1ம் தேதி மலேயா கணபதி, வீரசேனன் வெள்ளை அரசாங்கத்தால் கொல்லப்பட்டார்கள். இரண்டு பொதுவுடமை புரட்சி தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. அதே நாளில் நெடும்பலம் பண்ணைக்கு பாடம் புகட்ட தக்க தருணத்தை எதிர்பார்த்த சிவராமன், “கிளம்புங்கள் நெடும்பலத்தை நோக்கி” என்று உணர்ச்சி மேலிட உரத்து முழங்கினான்.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் நெடும்பலத்தை நோக்கி அணிவகுத்தனர்.
நெடும்பலத்தை நோக்கி பண்ணைத் தொழிலாளர்கள் படை வருவது போலீசுக்கு தெரிந்துவிட்டது. கூட்டத்தின் எண்ணிக்கை கேட்டு போலீசு பிரமித்து போய் நின்றுவிட்டது.

பண்ணை மாளிகையின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டது. நாலாயிரம் கலம் நெல்லும், பத்தாயிரம் பேர்களால் பங்கு போடப்பட்டது நாலாப்பக்கமும் கூட்டம் நெல் மூட்டைகளுடன் போய் கொண்டிருந்தது.

பண்ணை கொடுமைக்கு பாடம் புகட்டிய இந்த வீரசாகசம் சிவராமன் தலைமையில் வெற்றிகரமாக நடந்தப்பட்டது. கம்யூனிஸ்ட்களை காட்டி கொடுக்கும் கருங்காலித்தனத்தை முழுநேரப்பணியாக செய்து கொண்டிருந்த நிலப்பிரபு பாலசுப்ரமணியன் என்பவனை பழி தீர்க்க திட்டமிட்டான் சிவராமன்.

அஞ்சா நெஞ்சன் இரணியனுடன் இணைந்து அவனை தாக்க முற்படும் போது, மயிரிழையில் உயிர்தப்பி பாலசுப்ரமணியன் ஓடிவிட்டான். புரட்சிகர வீரசாகத்தை அடுத்தடுத்து அரங்கேற்றிய ஒரு பொதுவுடமை வீரனின் உணர்ச்சிமிகுந்த வரலாறு, உயிர்துடிப்போடு இப்புதினத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் சிவராமனை பார்த்து தங்களிடம் இருந்த பயத்தை ஒழித்தார்கள். மனிதனாய் தலைநிமிர்ந்து வாழ கற்றுக் கொண்டார்கள்.

எலிக்கூட்டம் பூனையை பாய்ந்து தாக்கியதைப்போல் நெடும்பலம் பண்ணையை தாக்கினார்கள்.

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் வெறியோடு ஆதிக்க சாதி இளைஞர் இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிய சிவராமன் அந்த காமூகர்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.

சிவராமனை கைது செய்யவோ, அல்லது சுட்டுக் கொல்லவோ வேட்டை நாயைப் போல் காவல்துறை கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். தங்குமிடம் தெரிந்து காவல்துறை சுற்றி வளைக்கும் போது சிவராமன் தப்பி விட்டார். ஆனால் காலில் கண்ணாடி குத்தி காயமாகிவிட்டது.

இரணியன் மறைந்து இருக்கும் இடத்திற்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்று எண்ணியபடியே ஒரு தோப்பில் அயர்ந்து தூங்கிவிட்டார்.

திடுக்கிட்டு விழித்த சிவராமன் எழுந்து உட்கார்ந்தார். இரண்டு பெண்கள் சற்று தூரத்தில் பயந்தபடியே நின்றார்கள். சிவராமனை பார்த்த ஒரு பெண் “சாமி நீங்களா? காலுல என்னகட்டு” ஓடிவந்து கால்களை தூக்கி மடியில் வைத்து கொண்டாள். கால் யானைக்கால் போல் வீங்கி இருந்தது. அந்த பெண் காலில் உள்ள கட்டையை அவிழத்து, சுடுதண்ணீரில் நனைத்து துடைத்து மருந்தை வைத்து கட்டினாள்.

“நீ ?”

“நானே தான்! அந்த பாவிப் பயலுவளுக்கிட்ட இருந்து காப்பாத்துனியளே! அண்ணைக்கு நீங்க இல்லாட்டி இந்நேரம் என்னை பொதச்ச எடத்தில் பில்லு மண்டி போயிருக்கும்.”

சிவராமனுக்கு உடனே அந்த பெண்ணை அடையாளம் தெரியவில்லை. அந்த இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றியது பின்னர் நினைவுக்கு வந்தது.

சிவராமனால் காப்பாற்றப்பட்ட அந்த பெண் நன்றி உணர்ச்சி மேலாட தன் கணவனை அறிமுகப்படுத்தினாள். குழந்தையைக் காட்டினாள்.

“உன் குழந்தைக்கு நான் பேர் வைக்கவா?” என்றான் சிவராமன்.

“என்னா பேரு?”

“மா……மார்க்ஸ்….., லெ………லெனின் ஏதாச்சும் ஒண்ணு.”

“அதெல்லாம் எங்களுக்கு புரியாத பேரு… நாங்கபேரு வச்சுட்டோம்.”

“எ………என்ன பேரு”

“ஒங்க பேரு!”

“ஏ……..ஏம்பேரா? எங்க சொல்லுங்க பார்ப்போம்.”

“ஒங்களுக்கு நேரா சொல்லமாட்டோம்.”

“புள்ளை பேர சொல்லு கா….காதால கேக்கனும்”

“மாட்டேன்…   இந்தாச் சொல்றேன் சாமி, சிவராமன்”

“கூ…..கூப்பிடு ”

“சிவராமா”

சிவராமனுக்கு மனம் நிறைந்தது, வானத்தில் பறப்பது போல் இருந்தது. தன்னுடைய பெயரை வைத்ததற்காக அப்படி பரவசப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – தனக்கும் மக்கள் மனங்களில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணிப் பார்த்தான். தான் பிறந்த பயனை அடைத்து விட்டதாக எண்ணினான்.

நூற்றுக்கணக்கான போலீசு தேடுதல் வேட்டையில் கிராமங்களின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். அந்த பகுதியில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கை கால்களை அடித்து பல தோழர்களை ஊனமாக்கியது போலீசு.

சிவராமன் உறவினர்களை துன்புறுத்தியது நாட்டுச்சாலை என்ற இடத்தில். டீ கடையில் சிவராமனை பார்த்த மஞ்சுவேளார் என்ற கருங்காலி போலீசின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டு சிவராமனை காட்டிக் கொடுத்தான். 1950-ம் ஆண்டு மே 3 ந்தேதி போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

“முதுகில் சுடாதே.. நெஞ்சில் சுடு..” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் சிவராமன்.

மூன்று குண்டுகள் சிவராமனின் மார்பை துளைத்தன.

வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் மே 5-ம்தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மாவீரன் சிவராமன் , வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய மூவரும் ஒன்றாகவே சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

“எவர் அச்சமின்றி இறந்தனரோ அவர்கள் தாம் நாங்கள் – எவர் அச்சமின்றி மரணத்தை நோக்குகிறார்களோ அவர்கள்தாம் நாங்கள்” என்றான் ஒரு கவிஞன்.

கடந்தகால வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் எதிர்கால வரலாற்றை உருவாக்க முடியாது. ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தம்மை முழுவதுமாக தியாகம் செய்ய தயாராக இருந்த நெஞ்சுரமிக்க போராளிகள், தன்னிகரற்ற தனி நபர்களின் துணிச்சல் தியாகங்களால் மக்கள் எழுச்சி பெறுகிறார்கள். தூக்கு மரங்களுக்கும், துப்பாக்கி ரவைகளுக்கும், கொலை வாளுக்கும் அஞ்சாமல் எதிர்கொண்ட விதம்தான் மக்களுக்கு உத்வேகம் ஊட்டியது.

சிறைத்தண்டனை, சித்ரவதை, மரணம் போன்றவற்றை சந்திக்கும்போது அவர்கள் காட்டிய வீரஞ்செறிந்த துணிச்சல் ஆகியவையே நமக்கு உத்வேகம் ஊட்டும் முன்மாதிரிகள். தனிநபர் வீரத்தியாகம் இன்றி சமூக மாற்றத்திற்கான புரட்சியோ, வெற்றியோ கிடையாது. தன்னிகரற்ற மாமனிதர்களின் தியாக வாழ்வே நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகள்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக இந்த போராட்ட வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவுடைமை லட்சியத்திற்கான இந்த புகழ்மிக்க போராட்ட வரலாற்றை புதிய தலைமுறையினர் படித்துப் பயன்பெற வேண்டும். போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய காலகட்டத்தின் தேவையும் அவசியமும் ஆகும்.

நூல் : சாம்பவான் ஓடை சிவராமன்
நூல் ஆசிரியர் : ச.சுபாஷ் சந்திரபோஸ்
வெளியீடு : பாக்கியம் பதிப்பகம்
விலை : ரூ.250.00
கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம்,
22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு,
தஞ்சை – 1
தொடர்புக்கு : 99405 58934

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்

கொலை செய்யப்பட்ட அனீஷ்

மிழகத்தில் நாடகக்காதல் என்ற பெயரில் சாதிவெறி ஆணவக்கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவிலும் கூட ஆணவக்கொலைகளா என்று நம்மில் சிலர் அதிர்ச்சி அடையலாம். ஆனால் கேரளாவின் இரண்டாண்டுகளில் அடுத்தடுத்த நடந்த இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அம்மாநிலத்தில் புரையோடியிருக்கும் சாதிவெறி முடைநாற்றத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

கெவின் ஜோசப் என்ற தலித் கிருத்துவ இளைஞர் 2018 ஆம் ஆண்டில் அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் (லத்தீன் கிருத்துவம்) ஆணவப்படுகொலை செய்யப்பட்ட போது அது கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 27 வயது இளைஞரான அனீஷ் அதே போல ஆதிக்கச் சாதிவெறியர்களால படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சாதியிலும், பொருளாதாரத்திலும் தன்னை விட ஆதிக்க சக்தியாக இருக்கும் பிள்ளை சாதியைச் சேர்ந்த ஹரிதாவை அனீஷ் காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த சாதியப்படுகொலை நடந்த பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பேஸ்புக்கில் வந்த பல்வேறு கருத்துக்கள் கொலையாளிகளான ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் இருவருக்கும் ஆதரவாக இருப்பதை காணலாம். ‘தந்தையின் பாச உணர்ச்சியால்’ நடந்தது என்றும், “ஒரு அப்பா தன்னுடைய மகளை வளர்த்த பாசத்தால் பைத்தியமாகிவிட்டார்” என்றும் பலரும் குற்றவாளிகளை நியாயப்படுத்தி மன்னித்து விடுகிறார்கள்.

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

தெலுங்கானா, நல்கொண்டா மாவட்டத்தில் செப்டம்பர் 14, 2018 அன்று நடந்த பிரணய் சாதி ஆணவப்படுகொலை குறித்தும் கூட இதே போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரணய், பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியைச் (கோமதி) சேர்ந்த அம்ருதாவை காதலித்து மணந்தார். தனது மனைவி மற்றும் தாயின் முன்னால், பகல் நேரத்தில், ஒரு பொது இடத்தில் வைத்து பிரணய் கொல்லப்பட்டார். பிரணயை கொலை செய்ய 1 கோடி ரூபாய் கொலையாளிகளுக்கு கொடுத்தாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கைது செய்யப்பட்டார்.

கொலையான அனீஷின் மனைவி ஹரிதா

ஆதிக்கச்சாதிகளை சேர்ந்த சாதிவெறியர்கள் பலரும் தெலுங்கு ஊடகங்கள் மற்றும்சமூக வலைதளங்களில் நெஞ்சை பதறச்செய்யும் இந்த படுகொலையை ஆதரித்து கருத்திட்டனர். இந்த கொலையை, மகள் மீதான ”தந்தையின் பாசம்” என்று கூறியதுடன், அம்ருதாவை ஒரு “ஒழுக்கக்கேடான பெண்” என்றும், பெற்றோர் மீதும் அவர்களுடைய மானம், மரியாதை குறித்தும் அவருக்கு துளியும் அக்கறை இல்லை என்றும் வசைபாடினார்கள்.

அனீஷின் படுகொலைக் குறித்தும் அதே மாதிரியான கருத்துக்கள் தான் சமூக வலைதளங்களில் காணக்கிடக்கின்றன. பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

  • “பெண்ணின் அப்பாவைக் குறித்து நான் வருத்தப்படுகிறேன். அவரது அன்பு மகள் ஒரு வெறும் பயலுடன் வாழ்கிறாள் என்பதை அறிந்து அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்” என்று அனீஷ் கொலை குறித்த வெளியான செய்திக் கட்டுரைக்கு கீழே ஒருவர் பின்னூட்டம் செய்துள்ளார்.
  • “ஒரு மகளை பாசத்தோடு வளர்த்த ஒரு தந்தையால் இந்த செயலை செய்ய முடியும்” என்று ஒருவர் பேஸ்புக்கில் கொலையை நியாயப்படுத்தினார். “ஏமாற்றப்பட்டு தோற்கும் ஒரு தந்தை இப்படி பைத்தியம் ஆவது உண்டு” என்று மற்றொருவர் கூறுகிறார்.
  • “இங்கே கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒரு பெண்ணையோ காதலிக்க மாட்டார்கள். மதம் மாறியவர்கள் இதில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், காதலித்து எப்படி மதம் மாற்றப்படுகிறாகள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உங்கள் சொந்த சமுதாயத்தில் உள்ள பாகுபாட்டையும் வேறுபாடுகளையும் முதலில் சரி செய்யுங்கள்” என்று மற்றொரு நபர் எழுதுகிறார். இப்படியாக பல கருத்துகள் பகிரப்படுகின்றன.

பெண்ணின் அப்பா மற்றும் மாமா செய்த இந்த கொலையை நியாயப்படுத்தவில்லை என்று கூறும் பலரும் கொலையாளிகள் மீது வருத்தப்படுவதாக கூறுவது தான் முரண்நகை. இவர்கள் நடுநிலை அவதாரம் எடுத்து சாதிவெறியை நாசூக்காக கக்குகிறார்கள்.

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

கொலையாளிகளுக்காக வரிந்துகட்டுவது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட ஹரிதாவையும் குற்றம் சாட்டுவதற்காக பலரும் கதைகளை கட்டமைக்கிறார்கள். “இந்த பெண்ணால் தான் ஒரு இளைஞன் உயிரை இழந்திருக்கிறான், மேலும், இருவர் சிறையில் இருக்கிறார்கள்” என்று அனீஷின் கொலைக்கு வருந்துவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, கொலையாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதுகிறார்கள்.

  • “அந்தப் பெண் முன்கூட்டியே இதுக்குறித்து சிந்தித்திருக்க வேண்டும். தன்னுடைய வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்த அவள், அந்த பையன் அந்த வசதிகளையெல்லாம் கொடுக்க முடியாமல் போனவுடன் மனம் உடைந்து போவாள். பின்னர் திருமண உறவு கசந்து, உடைந்து போயிருக்கும் … இன்னும் சொல்லலாம்” என்று மற்றொருவர் இறுதித்தீர்ப்பே எழுதி விட்டார்.
  • “காதல் என்பது வேடிக்கையான ஒன்று. இந்த காதல் திருமணங்களில் பெரும்பாலானவை வேடிக்கை முடிந்த பின் மணமுறிவில் முடிவடைகின்றன….. திருமணத்திற்குப் பிறகு, எதார்த்தம் சில வாரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது” என்று மற்றொரு நபர் எழுதினார்.

“தன்னுடைய குடும்பத்தை அழித்ததற்காக” அந்த பையனுக்கு பதிலாக ஹரிதா கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

  • “வேறொருவரின் மகனுக்கு பதிலாக அவர்கள் ஏன் தங்கள் சொந்த மகளை கொல்ல கூடாது. அவளுடைய செயலால் அவர்கள் வேதனை அடைந்தால், அவள் தான் கொல்லப்பட வேண்டும்” என்று ஒருவர் கூறுகிறார்.
  • “அவள் தண்டிக்கப்பட வேண்டும், அவளது தந்தையை அவள் தான் ஏமாற்றினாள். அவள் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டாள். அவளுடைய தந்தையின் வலியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று மற்றொரு நபர் எழுதுகிறார்.

பாலக்காட்டில் உள்ள தென்குரிசியைச் சேர்ந்த ஓவியரான அனீஷ், டிசம்பர் 25 அன்று ஹரிதாவின் தந்தை மற்றும் மாமாவால் படுகொலை செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், ஹரிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சாதி ஆணவப் படுகொலையாளிகள் குறித்தான சமூக ஊடகங்களின் தீர்ப்பு, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் புதியதல்ல. ஒருபுறம் நீதித்துறையின் தாமதம் மறுபுறம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவுசல்யா போன்றவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளை எதிர்த்து இன்னும் இடைவிடாமல் போராடுகிறார்கள். கவுசல்யாவின் கணவரான சங்கர், ஒரு தலித் இளைஞர். மார்ச் 2016 இல் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ​​ சமூக வலைதளங்களில் பலரும் கொலையாளிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது மட்டுமல்ல, இது போல கலப்பு மணம் புரிபவர்களுக்கு துணிச்சலாக சமூக வலைதளங்களில் மிரட்டல்களையும் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆறுமுகம்
நன்றி :  The news minute

சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு இளைஞரின் புகைப்படம் அதிக கவனத்தைப் பெற்றது. ‘இரத்தத்தை உறையவைக்கும் கடுங்குளிரில், மேலாடையின்றி, ஒருவர், தனது முதுகில் புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்களையும், வந்தே மாதரம் என்றும் பச்சை குத்தியிருந்த’ புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த படத்தினை சமூக ஆர்வலர் ஜாகிர் தியாகி (Zakir Tyagi) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நான் (அலிஷன் ஜாஃப்ரி) பார்த்த ஒரு கோரமான காணொலியை இந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. ஆனால், இந்த படத்தில் உள்ள நபரின் முகம் தெரியாததால் நான் ஜாகிரை அணுகினேன். இதை அவர் Lallantop-லிருந்து எடுத்ததாக தெரிவித்தார். பின்னர் இந்த படத்தை எடுத்தது பி.டி.ஐ.யின் புகைப்பட பத்திரிகையாளர் ரவி சவுத்ரி என்று தெரிந்ததும் அவரை நான் தொடர்புகொண்டேன். அப்போதுதான் இந்த படத்தில் உள்ள நபர் விஜய் இந்துஸ்தானி என்பது உறுதியானது.

படிக்க :
♦ இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

விஜய் தனது முகநூல் பக்கத்தில், ஏபிபி நியூஸ், ஆஜ் தக், ஜீ நியூஸ், நியூஸ் 24 ஆகியவற்றின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த சேனல்களில் விவசாயி தலைவர் ராகேஷ் டிக்காய்ட்டுடன் பேசுவதை நாம் காணமுடியும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசாங்கத்திற்கு தனது இரத்தத்திலேயே கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். தனது மார்பில் “நாங்கள் CAA, NRCயை ஆதரிக்கிறோம்” என்ற வாசகத்தை பச்சை குத்தியுள்ள விஜய், இப்போது அதனை வெளிகாட்ட விரும்பவில்லை. அதனால், அவ்வாசகம் பொறித்திருந்த இடத்தில் “நான் விவசாயிகளை நேசிக்கிறேன்” என்ற வாசகத்தை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதை காணமுடியும்.

2020-ம் ஆண்டு தொடக்கத்திலும், விஜய் இந்துஸ்தானியுடைய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஷாகின் பாக்கில் CAA-விற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் போராட்ட களத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவ்வாறு வெளியேறாவிட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் விஜய்.

CAA-க்கு எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தபோது வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலும் கும்பல் வன்முறையும் அதிகரித்தது. கலவரத்தின் மையப்பகுதியான மாஜ்பூரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் விஜய் இந்துஸ்தானி முஸ்லீம்களை அச்சுறுத்தி வந்ததை நாம் காணமுடியும். அதில் அவர், “பாகிஸ்தானை சேர்ந்த நீங்கள் டெல்லியை விட்டு ஓடிவிடுங்கள் இல்லையேல், மோடிஜி மற்றும் விஜய் இந்துஸ்தானி உங்களை வெளியேற்றிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று முஸ்லீம்கள் மீதான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார் விஜய் இந்துஸ்தானி.

அவரது முகநூல் பக்கத்தில் கடந்த டிசம்பர்-பிப்ரவரி மாதம் வரை பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியிருக்கிறார். ஆனால் பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில், “யாராவது இந்தியாவில் வாழ விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குங்கள்” என்று விஜய் கூறும் வீடியோ ஒன்றை நாம் காணலாம்.

விஜய் ஹிந்துஸ்தானி

விஜய் இந்துஸ்தானின் சமூக ஊடக Profile-ஐ மேலோட்டமாக பார்த்தாலே, அவரது பல தவறான தகவல்களையும், இஸ்லாமிய வெறுப்பு பதிவுகளையும் நாம் காணமுடியும். மேலும், அவர் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துள்ளார். CAA-க்கு ஆதரவளித்து விஜய் பதிவிட்டிருந்த பதிவுகளை தீவிர வலதுசாரி தீபக் ஷர்மா பகிர்ந்திருக்கிறார். இப்படி இந்துத்துவா பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டிருந்த விஜய் அண்மையில், போராடும் விவசாயிகளுக்கு எதிராக பதிவிட்டிருந்த தீபக்கின் ட்விட்டினை கண்டித்து விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை பல இந்துத்துவா கும்பல் அச்சுறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவ சித்தாந்தவாதியான ராகிணி திவாரி, “மீண்டுமொரு ஜஃப்ராபாத் பார்க்க நேரிடும், CAAக்கு எதிராக போராடியவர்களுக்கு நடந்தது போன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டு வருபவர்களுக்கும் நடக்கும்” என்று எச்சரித்தார்.

திவாரியின் வெறுப்பு பேச்சு, வடகிழக்கு டெல்லி கலவரத்தின்போது போராடுபவர்கள் மீது அவர் கற்களை வீசும் வீடியோக்கள், அவர் விடுத்த கொலைமிரட்டல்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்துவரும் வலதுசாரி செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி என்ற விஜய் குமார், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் நிற்பது என்பது நம்பமுடியாத ஒன்று.

மோடி அரசாங்கத்தின் மீதான விஜய்யின் அதிருப்தியும், அவரின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள நீங்கள், எப்படி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: நான் அந்த அமைப்பில் இருந்தேன். ஆனால் விவசாயிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று அவர்கள் கூறியபிறகு அவர்களுடன் தொடர்புகொள்ள என்ன இருக்கிறது? நாடு முழுவதும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது நமக்கு உணவு வழங்கியவர்கள்மீது இன்று அவதூறு பரப்புகிறார்கள். நான் விவசாயி மகன். என் அப்பாவும், தாத்தாவும் விவசாயிகள். அதனால்தான் இப்போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை உங்கள் முதுகில் பச்சை குத்திக் கொள்ள உங்களை தூண்டியது எது?

விஜய்: புல்வாமாவில் பயங்கரமான தாக்குதல் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். நம்மை பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான இதயங்களுக்கான எனது அஞ்சலிதான் இது. இந்தியர்கள் அனைவரையும் நான் எனது குடும்பமாக கருதுகிறேன். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு இருந்தபோதிலும் இதுபோன்ற தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பாஜக தேசியவாத கட்சி என்றும், நீங்கள் தேசியவாதி என்றும் கூறிக்கொள்கிறீர்கள். பாஜகவின் ஆதரவாளராகவும் குரல் கொடுத்துவந்தீர்கள். பிறகு உங்களிடம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?

விஜய்: பிஜேபி கட்சியின் ஆதரவு என்பது விவசாயிகளுக்கோ, இராணுவ வீரர்களுக்கோ அல்ல, பெரிய கார்ப்பரேட்டுகளுக்குதான். மோடிஜி எங்களை காந்தி வழியை பின்பற்றுங்கள் என்கிறார். ஆனால் அவரது அமைச்சர்களோ கோட்சேவை ஆதரிக்கிறார்கள். இது என்ன தேசியவாதம்?

காசுக்கு வேலைசெய்யும் பிஜேபியின் ஐடி செல், புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் ஆதரிப்பதாக சமூக ஊடகத்தில் பொய் பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டு வருகிறது. சமூக ஊடகத் தாக்கம் தலைத்தூக்கியுள்ள இந்த காலத்தில் பொய் செய்திகளை அதிகமாக பரப்பமுடியும். இங்குள்ள விவசாயிகள் யாரும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் எனது குடும்பத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

படிக்க :
♦ வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

பாஜக அரசு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. ஆனால் 2013-லிருந்து விவசாயிகளுக்கு கரும்பு விலை உயர்த்தப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் இச்சட்டத்தை எதிர்ப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.

ஷாகின்பாக்கில் நடந்த சாலை மறியலை எதிர்த்தீர்கள். இங்கு மட்டும் எப்படி ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என்பதால் அன்று எனது எதிர்ப்பினை தெரிவித்தேன். இப்போது இந்து, முஸ்லீம் என அனைத்து அகதிகளும் பாகுபாடின்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அந்த மசோதாவில் அப்படி எதுவும் இல்லை. அதை நீங்கள் படித்தீர்களா? இதற்கு மேல் CAA எதிர்ப்புப் போராட்டம் பற்றி சொல்ல விரும்பவில்லை. நான் இப்போது அவர்களின் (பாஜக) எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை.

CAA சார்பு ஆர்ப்பாட்டங்களில் அவர் கண்ட காட்சி மற்றும் பங்கேற்றது குறித்து சொல்ல விஜய் மிகவும் தயக்கம் காட்டினாலும், இந்த விவசாயப் போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் நாட்டின் பிரதான ஊடகங்கள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். விவசாயிகளின் அமைதியான போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் ஆர் பாரத், ஆஜ் தக் மற்றும் ஜீ போன்ற செய்தி சேனல்களை குறிப்பிட்டார். ஒருவேளை அந்த சேனல்களை நம்பியதனால் CAA மற்றும் சிறுபான்மையினர் குறித்த தனது கருத்தை அவர் உருவாக்கியிருக்கலாம்.


கட்டுரையாளர் : அலிஷன் ஜாஃப்ரி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !

ட்டவிரோத மதமாற்றுத் தடை அவசரச் சட்டம்  (Prohibition of Unlawful Conversion of Religion Ordinance ) 2020 என்ற சட்டத்தை பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம் சமீபத்தில் நிறைவேற்றியது.  அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலமும் இச்சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடந்த ஓரு மாதத்தில் மட்டும் சுமார் 14 வழக்குகளில் 51 பேரைக் கைது செய்துள்ளது உ.பி. அரசு. அதில் இன்னுமும் 49 பேர் சிறையில் உள்ளனர்.

மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்ற பெயரில்  உ.பி-யில் ஆளு பாஜக அரசால் அறிவிப்க்கபட்டிருந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், ஜெர்மனியில் யூத மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களைப்போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்தன்மை கொண்டது இச்சட்டம். சிறுபான்மை மக்களை ஒடுக்கி அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதோடு, மத நல்லிணக்கம் பேணும் பெரும்பான்மை மதத்தினரையும் அச்சுறுத்துகிறது இச்சட்டம்.

கட்டாய சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்று சொல்லப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் இது அழைக்கப்படும் பெயர் லவ்-ஜிகாத் தடுப்புச் சட்டம்தான்.

லவ் ஜிகாத்

லவ் ஜிகாத் என்று சொல்லப்படுவது இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் காதலிப்பது போல் நடித்து அவர்களை திருமணம் செய்து மதம் மாற்றம் செய்வதுதான் என்கின்றன சங்க பரிவார அமைப்புகள். மேலும், இத்தகைய மதமாற்றத்தைத் தடுத்து இந்து பெண்களின் நலன் காக்கவே உத்திரபிரதேச அரசு லவ் ஜிகாத்க்கு  எதிரான  லவ் ஜிகாத் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்று இச்சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 18 வயதுக்கு மேலான ஆணும், பெண்ணும் அவரவரது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. மத நடவடிக்கைகளுக்கான சுதந்திரத்துக்கும் (Freedom of Religious acts), கண்ணியம் மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்புக் கொள்கைகளுக்கும் விரோதமாக இருக்கிறது.

தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனைவருக்குமான உரிமையை அரசியல்சாசன சட்டம் வழங்கியிருந்தாலும், இந்த புதிய லவ் ஜிகாத் எதிர்ப்பு அவசரச் சட்டத்தின் படி ஓரு இந்துப் பெண் முஸ்லிம் ஆணை திருமண செய்ய வேண்டுமானால் ஓரு மாதத்திற்கு முன்பே ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிப் பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லை எனில் அது சட்டவிரோத திருமணமாகக் கருதப்படும். இதை மீறி திருமணம் செய்யும் ஆணுக்கு 5 வருட சிறைத் தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் செலுத்த வேண்டும்.

உண்மையில் இந்தச் சட்டம் கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்பதை இச்சட்டம் உத்தரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண் – முஸ்லீம் ஆண் தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்யச் சென்ற போது அங்கு வந்த இந்து அமைப்பால் தாக்கப்பட்டு, முசுலீம் கணவரும் அவரது சகோதரரும்  இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் வைத்து தொல்லை கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண்ணின் கரு கலைந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே, உத்தரப் பிரதேசத்தில் இச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைதுகள் அனைத்தும் இத்தகைய பின்னணியைக் கொண்டவையே.

சட்டமும் சமூகநீதியும்

நம் நாட்டில் சாதி, மத மறுப்புத் திருமணங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. இத்தகைய மதமாற்றத் தடைச் சட்டங்கள் இத்தகைய திருமணங்களையும் தடுத்து நிறுத்தும் வேலையையே செய்யும். மேலும் சிறுபான்மைச் சமூகத்தினரை அடக்கி ஒடுக்கவும் இது வழிவகை செய்கிறது. மேலும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறும் சூழலிலும் கூட அவர்களது வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.  இதனை நோக்கமாகக் கொண்டே சங்க பரிவார அமைப்புகள் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன.

கூடுதலாக, உத்தரப் பிரதேச போலீசு இச்சட்டத்தை அமல்படுத்துவதில் குண்டர்களைப் போலவே நடந்து கொள்கிறது. 1961-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த நரேன் முல்லா, இந்திய காவல் துறையை ஓரு “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கும்பல்” போல் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

உ. பி அரசாங்கம் அத்தகைய அவதானிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் உயர்நீதிமன்றத்தின் கருத்து காவல்துறையின் செயல்திறனைக் குறைத்து மதிப்பிடக்கூடும் என்ற அடிப்படையில் நீதிபதி ஆனந்த நரேன் முல்லாவின் கருத்தை நீதிமன்றம் நீக்கியது.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

ஆனால் எதார்த்தத்தில் நீதிபதி ஆனந்த நரேனின் கருத்துக்களை உண்மை என்றே போலீசு நிரூபிக்கிறது. அதற்கு லவ் ஜிகாத் தடுப்புச் சட்டங்களை செயல்படுத்தும் போலீசின் செயல்முறைகள் நல்ல சான்றாக அமைகின்றன.

இச்சட்டமானது எந்தவித ஜனநாயக கொள்கையுடனும் உடன்படாமல் மதத்தின் பெயரால் பாகுபாட்டை வளர்க்கவும் முசுலீம் மதம்சார்ந்த மக்களை தவறானவர்களாக சித்தரிக்கவும் முயல்கிறது. இந்த சட்டமானது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இச்சட்டம் இருக்கிறது. இந்திய அரமைப்பில் இது போன்ற சட்டங்கள் சமூகத்தை பின்னுக்கு தள்ளுவதோடு மட்டுமில்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கும் தன்மையைக் கொண்டது.

உ.பி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான அரியானா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதியையும், அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டுமெனில், இத்தகைய சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியமாகும்.

நன்றி : National Herald , Article-14

சிந்துஜா
சமூக ஆர்வலர்

disclaimer

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

டிசம்பர் 25 : கீழ்வெண்மணி தியாகியர் நினைவு தினம்

கீழ்வெண்மணி

ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு !

வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

கருத்துப்படம் : மு. துரை

கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!

நாள்:24.12.2020

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களின் ஏக்கம் தீரும் நாள் எந்நாளோ அன்றே பெரியாரின் ஏக்கமும் தீரும்! தீரும்!

தந்தை பெரியாரின் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2020

பத்திரிகை செய்தி

ன் வாழ்நாளின் இறுதி தருணம் வரை பார்ப்பனல்லாதோரின் இழிவை நீக்க தனியொரு இயக்கமாக சுழன்றவர் தான் பெரியார். கருவறையில் நிலவும் தீண்டாமை இழிவை போக்க இயலாத நிலையில் நம்மை விட்டு பிரிந்தார்.

அர்ச்சகர் வாரிசுரிமை ஒழிப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் ஆகியவை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. இருந்த போதிலும் ஆகமம், ஐதீகம், பாராம்பரியம் என அரசியலமைப்பு சட்டம் வளைக்கப்பட்டு பார்ப்பனர் அல்லோதோரின் பூசை செய்யும் சட்ட உரிமைகள் நெறிக்கப்பட்டன. அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் பார்ப்பன அர்ச்சகர்களின் எடுபிடிகளாகவோ, பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட கோயில்களின் அர்ச்சகராகவோ இருந்து வாழ்க்கையை நடத்தும் அவலமே பல்லாண்டுகளாக தொடர்கின்றது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்

கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப்படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 207 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கோயில்களின் கருவறைகளை பக்தர்களை போல நாங்களும் பெரும் வலியுடன் வேடிக்கையே பார்க்க இயலும். ஆகம பயிற்சி பெற்றும் நாங்கள் நுழைந்து பூசை செய்வதை எது தடுக்கிறது? எங்களுடைய பிறப்பிலான சாதி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எங்களை அர்ச்சகர்களாக அரசால் நியமிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் தீர்ப்பு வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.

தமிழ்நாட்டில் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்டனர் மீதமுள்ள 205 மாணவர்களில் 2 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

படிக்க :
♦ வாடிவாசல் திறந்தோம் – கருவறையும் திறப்போம் !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி !

மதுரை பாடசாலையில் படித்த மாரிச்சாமி என்கின்ற மாணவருக்கு தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அடுத்தது நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் தியாகராஜன் என்கின்ற மாணவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

சமுக நீதி கோலோச்சிய தமிழகத்தில் 203 மாணவர்களுக்கு இன்னமும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் அருங்காட்சியப் பொருளாய் நாங்கள் ஆகிவிடும் நிலையே உள்ளது.

இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
128, கோகுலம் இல்லம், அரச மரத் தெரு, திருவண்ணாமலை
தொடர்புக்கு : 90474 00485.

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்

23/12/2020

ன்பார்ந்த புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு,

செவ்வணக்கம்!

புதிய ஜனநாயகம்டிசம்பர் 2020 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. தனிப் பிரதி வேண்டுவோர், இதழின் விலை ரூ.20.00 + அஞ்சல் செலவு ரூ.5.00 சேர்த்து மொத்தம் ரூ. 25.00-ஐ எமது G-pay account (G Pay-94446 32561)-க்குச் செலுத்தி, அத்தகவலை, அஞ்சல் குறியீட்டு எண்ணை உள்ளடக்கிய முழுமையான முகவரியுடன் எமது வாட்ஸ்-அப் எண்ணுக்கு (94446 32561) அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

♠ தலையங்கம் : கார்ப்பரேட் நிர்பர்
♠ 7.5% இட ஒதுக்கீடு: புண்ணுக்கு புனுகாகிவிடக் கூடாது!
♠ “எனது பாவ்லோஸ் தனி ஒருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!”
♠ பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு: நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல்!
♠ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♠ குவாட் கூட்டணி: சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு!
♠ எது அபாயகரமானது ? கரோனாவா? ஆர்.எஸ்.எஸ்.-ன் அவதூறா?
♠ குற்றவியல் சட்டத்திருத்தம் : மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு!
♠ போராட்டங்களின் நோக்கம்
♠ யார் தேசவிரோதி?
♠ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்

“இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒரு உரை” (குருசேவின் இரகசிய உரையை இப்படித்தான் பிரிட்டனின் “டெலிகிராப்” நாளிதழ் அன்று அழைத்தது) முழுக்க முழுக்க பொய்யும் புரட்டுமானதா?

குருசேவின் அந்த “புகழ்பெற்ற” உரைக்குப் பின்னர், “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா – ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்று நாங்கள் சொன்னபோதெல்லாம் மறுத்தீர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்றெல்லாம்  இடதுசாரிகளை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தனர் முதலாளித்துவவாதிகளும், “நடுநிலைவாதிகளும்”.

ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு 1956-ம் ஆண்டு ஃபிப்ரவரி 25-ல் ஒரு இரகசிய உரையில் ஸ்டாலின் பற்றி குருசேவ் அடுக்கடுக்கான அவதூறுகளைக் கூறினார் குருசேவ். ஸ்டாலினுடைய வாழ்நாளிலேயே முதலாளித்துவ நாடுகள் பல்வேறு அவதூறுகளை பரப்புரை செய்தாலும், நடைமுறையில் அப்படியான அவதூறுகளுக்கு ஸ்டாலினும் அவர் தலைமையில் இரசிய மக்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனால் அடுத்தடுத்த காலங்களின் மக்கி மண்ணாகி இருக்க வேண்டிய முதலாளித்துவவாதிகளின் பொய்ப் பரப்புரைகளுக்கு, ஸ்டாலினுடன் இருந்த குருசேவின் பொய்கள் தாங்கி நிற்கும் ஆதாரமாய் மாறி நின்றன. இதனைப் பயன்படுத்தி தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம், சோசலிச வெறுப்புணர்வையும் வளர்த்து பரப்புரையும் செய்தார்கள்.

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்தும், கடிதப் போக்குவரத்துகளில் இருந்தும் தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர். இந்நூலை தமிழில் செ.நடேசன் அவர்கள் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார்.

படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்த நூலில் இருந்து, ”ஸ்டாலின் ட்ராட்ஸ்கியர்கள் குறித்து தவறான நிலைப்பாடு எடுத்ததாக” குருசேவ் சொல்லும் குற்றச்சாட்டை குரோவர் அம்பலப்படுத்தும் பகுதியை மட்டும் இங்கு வழங்குகிறோம்.

000

டிராட்ஸ்கியர்கள்

குருச்சேவ் :

நாம் டிராட்ஸ்கியர்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மிக நீண்ட வரலாற்றுக் காலத்துக்குப் பின்பான இப்போது டிராட்ஸ்கீயர்களுடனான சண்டைப்பற்றி முழு அமைதியோடு உணர்ச்சிவசப்படாமல், போதுமான குறிக்கோளோடு இந்த விஷயத்தை பேசி ஆய்வு செய்யலாம்.  இவ்வளவு காலத்திற்குப் பிறகும் டிராஸ்கியைச் சுற்றியிருந்தவர்கள் எந்தவகையிலும் முதலாளித்துவ சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை . அவர்களில் ஒருபகுதியினர் கட்சி சிந்தனையாளர்கள்; மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி தொழிலாளர்களிடமிருந்து பணியமர்த்தப்பட்டவர்கள். புரட்சிக்குப்பின் டிராட்ஸ்கியர்களோடு சேர்ந்த பல தனிநபர்களின் பெயர்களை கூறலாம். ஆனாலும், அதே தனிநபர்கள் புரட்சிக்கு முன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும் இந்த மாபெரும் புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைத்தபோதும் அவர்கள் டிராட்ஸ்கியசத்திலிருந்து வெளியேறி லெனினிய நிலைகளுக்குத் திரும்பியவர்கள். தொழிலாளர் இயக்கங்களில் பாடுபட்டவர்கள். இத்தகையவர்களை நிர்மூலம் செய்தது தேவைதானா?

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக்குழு பிளீனத்தில் டிராட்ஸ்கியர்களைப் பற்றி ஸ்டாலின் – மார்ச் 3

  1. “அந்நியப் புலனாய்வுத்துறைகளுக்காக, அவர்களின் பிரதிநிதிகளாக, திசைத்திருப்புபவர்களாக, அழிவுவேலைகளில் ஈபடுபவர்களாக, உளவாளிகளாகத் தீவிரமாகச் செயல்படும் டிராஸ்கியர்கள் ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்களைப் பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் என்ற நிலையை இழந்துவிட்டார்கள். தொழிலாளிவர்க்க நலன்களுக்கான சிந்தனைகளை தருபவர்கள் என்ற நிலையையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். அவர்கள் அழிவுசக்திகளாக, இசைதிருப்புபவர்களாக, உளவாளிகளாக, கொலைகாரர்களாக எந்தவிதமான கொள்கையோ, சிந்தனையோ இன்றி அந்நிய உளவுத்துறை நிறுவனங்களுக்குப் பணியாற்றிவருகிறார்கள். இது நமது கட்சித் தோழர்களுக்கு கட்டாயம் விளக்கப்படவேண்டும்.”இப்போதைய டிராட்ஸ்கியர்களுக்கு எதிரான போராட்டங்களில் விவாதங்கள் என்ற பழைய முறைகளைப் பயன்படுத்தப் படக்கூடாது. அவர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறியவேண்டிய புதியமுறைகளில் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் விளக்கப்படவேண்டும்J.V.Stalin, Mastering Bolshevism. NY: Workers Library Publishers,1937, pp.26-7;
    cited from’ http://www.marx2mao/stalinMB37

மார்ச் 5-இல் பிளீனத்தின் நிறைவுரையில் ஸ்டாலின்:

“ஆனால், இங்கே ஒருகேள்வி எழுகிறது. ஜெர்மனிய, ஜப்பானிய ஏஜண்டுகளான டிராட்ஸ்கியர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறிகின்ற நடைமுறைப் பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது? இதன்பொருள் உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்லாமல், டிராட்ஸ்கியர்களை நோக்கி சிலநேரங்களில் ஊசலாடியவர்களையுமா? அதன்பின் நீண்டநாட்களுக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகி வந்தவர்களையுமா? முன்னொரு காலத்தில் நீண்டதெருக்களில் டிராட்ஸ்கிய ஏஜண்டுகளாக அழிவுவேலைகளில் ஈடுபட்டு, அதன்பின் டிராட்ஸ்கியர்களைவிட்டு நீங்கியவர்களையும் கூடவா? அத்தகைய குரல்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்தப் பிளீனத்தில் கேட்டன. அத்தகைய பொருள்விளக்கத்தை நாம் தீர்மானத்தில் பரிசீலிக்கவேண்டுமா? இல்லை. நாம் அதை சரியானது என்று கருதமுடியாது.

இந்தப் பிரச்சனையில், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஒரு தனிப்பட்ட, மாறுபட்டதான அணுகுமுறை இருந்தாக வேண்டும். நீங்கள் எல்லோரையும் ஒரே அளவுகோலில் அளந்து விடக் கூடாது. அத்தகைய துல்லியமற்ற பொதுப்படையான அணுகுமுறை உண்மையான டிராட்ஸ்கிய அழிவுசக்திகளுக்கும், உளவாளிகளுக்கும் எதிரான நமது போராட்டங்களுக்குத் தீங்குகளை மட்டுமே விளைவிக்கும்.

நமது பொறுப்பு மிக்க தோழர்களிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் உள்ளார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகியதோடு, டிராட்ஸ்கியத்தை எதிர்த்து இப்போது போராடுகிறார்கள். டிராட்ஸ்கியத்தை நோக்கி ஒருபோதும் அலைபாயாத நமது மதிப்புக்குரிய சில தோழர்களைவிட சிறப்பாக அதைவிட நல்லமுறையில் போராடிவருகிறார்கள். இப்படியான தோழர்களை இப்போது இழிவாகப் பேசுவது முட்டாள்தனமானது.

நமது தோழர்கள் தத்துவார்த்தரீதியாக எப்போதும் டிராட்ஸ்கியத்தை எதிர்த்து வருபவர்களாக இருந்தாலும், தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடன் சொந்தத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட, தங்கள் கிராமங்களில் டிராட்ஸ்கியர்கள் இருப்பது தெரிய வந்தபோது அதை ஒழிக்க அவர்கள் தாமதித்ததில்லை. இருந்தாலும் டிராட்ஸ்கியர்களுடனான தனிப்பட்ட தங்களது நட்புறவுகளை அவர்கள் இன்னமும் துண்டித்துக் கொள்ளாமலிருப்பது நல்லதல்ல. ஆனால், இத்தகைய தோழர்களை – டிராட்ஸ்கியத்துடன் ஒட்டுமொத்தமாக சேர்ப்பது சிறு சிறுபிள்ளைத்தனமானது”

– Ibid, pp.43-4

1937 பிப்ரவரி – மார்ச் பிளீனத்தில் ஸ்டாலின் முன்வைத்ததை குருச்சேவ் தன் சொந்த வார்த்தைகளால் எப்படி வெளிபடுத்தினார் என்பதை மிகச்சரியாக நினைவு கூர்வோம்:

எல்லாவற்றுக்கும் அப்பால், டிராட்ஸ்கியைச் சுற்றியிருந்த மக்களின் பாரம்பரியம் எந்தவகையிலும் முதலாளித்துவ சமூகம் என்று எந்தவழியிலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களில் ஒருப்பகுதியினர் கட்சியின் அறிவுத்துறை சார்ந்தவர்கள். குறிப்பிட்ட பகுதியினர் தொழிலாளர்களிடமிருந்து நியமிக்கப்பட்டவர்கள். நாம் பல தனிமனிதர்களை அவர்கள் காலத்தில் டிராட்ஸ்கியர்களுடன் சேர்ந்தவர்கள் என்று பெயர் குறிப்பிடலாம். ஆனால், அதே தனிமனிதர்கள் புரட்சிக்குமுன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும், இந்த மாபெரும் புரட்சியின் வெற்றிகளை ஒருங்கிணைத்தபோதும் தொழிலாளர் இயக்கங்களில் தங்களை தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் பலர் டிராட்ஸ்கியத்துடன் முறித்துக்கொண்டு லெனினிய நிலைக்குத் திரும்பினார்கள்’ (மேலே பார்க்க)

1930-களில், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் டிராட்ஸ்கியர்கள் என்ற பிரச்சனை திரும்பவந்தது என்பதை இங்கு பரிசீலிப்பது வசதியாக இருக்கும் என்று ‘இரகசிய உரையின் ஒருபகுதியில் குருச்சேவ்:

1927-ல் 15-ஆவது கட்சிக் காங்கிரஸ் நிகழ்வில் வெறும் 4,000 வாக்குகள்தான் எதிர்த்தரப்பான டிராட்ஸ்கிய- ஜியானோவீவியர்களுக்குக் கிடைத்தது. அப்போது 7,24,000 பேர் கட்சி தரப்பு நிலைபாட்டில் இருந்தனர் என்பதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். 15-ஆவது கட்சி காங்கிரஸுக்கும், பிப்ரவரி – மார்ச் கட்சி பிளீனத்துக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளில் டிராட்ஸ்கியர்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர். பல முன்னாள் டிராட்ஸ்கியர்கள் தங்கள் சிந்தனைகளை, தங்கள் முந்தைய பார்வைகளை மாற்றிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் சோசலிச கட்டுமானத்துக்கு வேலை செய்தார்கள். சோசலிச வெற்றியின் சூழல் நிலவும் நாட்டில் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்க அடிப்படை இல்லை என்பது தெளிவாகிறது”

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக் குழு பிளீனத்தில் ஸ்டாலின் :

1927-இல் நமது கட்சியில் டிராட்ஸ்கியர்கள் பற்றி நடைபெற்ற விவாதங்களை மனதில் நினைவுகூருங்கள். அந்த நேரத்தில் இருந்த 8,54,000 கட்சி உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்களித்தார்கள் . அவர்களில் 7,24,000 பேர் போல்ஷ்விக்குகளுக்கு ஆதரவாக , டிராட்ஸ்கியத்துக்கு எதிராக வாக்களித்தனர். 4,000 கட்சி உறுப்பினர்கள் அல்லது ஒரு சதவீதத்தில் பாதியினர் டிராட்ஸ்கியர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றனர். இந்த எண்ணிக்கையிலும் பலர் இப்போது டிராட்ஸ்கியத்தின்மீது அவநம்பிக்கை கொண்டு அதைவிட்டு விலகிவிட்டனர்: மேலும் டிராட்ஸ்கிய சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற கருத்துக்கு நீங்கள் வந்தீர்கள் என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

J.V. Stalin, Mattering Bolshevism. NY; Workers Library Publishers. 1937, pp. 59-60. At http://www.marx2mao.com/Stalin/MB37.html (Emphasis added in both cases-GF)

ஸ்டாலினுடைய இந்தப் பேச்சிலிருந்து குருச்சேவ் மிக நன்றாக நகலெடுத்திருக்கிறார்!

டிராட்ஸ்கியர்களின் குற்ற உணர்வு பற்றி சுலோப்டலோல்:

டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் 1930-களில் வெளிநாடுகளில் அரசியலோடு இணைந்த நடவடிக்கைகளில் பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அனால் அது அவ்வாறு இல்லை. டிராட்ஸ்கியர்கள் வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்கள். ஜெர்மன் இராணுவ புலனாய்வுத்துறையான (The Abwehr)’அப்வெஹ்ர்’ உடன் தொடர்புகொண்டிருந்த நபர்களைப் பயன்படுத்தி அவர்கள் 1937-ல் பார்சிலோனா குடியரசுக்கு எதிரான வன்முறை கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். பிரான்சு, ஜெர்மனி சிறப்புப் புலனாய்வு சேவையில் இருந்த டிராட்ஸ்கிய வட்டங்கள், அந்த நாடுகளில் உள்ள சோவியத் யூனியனை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிக்கொடுக்கும் செய்திகள் வந்தன. 1937-ல் பார்சிலோனா வன்முறைக் கிளர்ச்சியில் டிராட்ஸ்கியத் தலைவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் நமக்கு ஸ்சுல்ஸே – பாய்ஸன் மூலம் தெரிவிக்கப்பட்டது …. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தகவலை நமக்கு தந்தார் என அவர் மீது கெஸ்டாபோ குற்றம் சாட்டினார். இது ஹிட்லரின் நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுத்தந்தது.

மற்ற எடுத்துக்காட்டுக்கள்:

1941-இல் பாரிஸில் தமது வசிப்பிடங்களில் மறைந்திருந்த நமது பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை டிராட்ஸ்கியர்கள் தங்கள் அப்வெஹ்ர்’ உறவுகளைப் பயன்படுத்தி தேடினார்கள். இதை வஸிலெவ்ஸ்கி நமக்கு தெரிவித்தார். அவர் 1940 இல் கோமிண்டர்னின் செயற்குழுவில் கலந்து கொள்ளும் உரிமை கொண்ட பதவியில் நியமிக்கப்பட்டவர்.

English translation from Gen. Sudplatov, The Intelligence Service and the Kremlin, Moscow 1996.p 58:

சுடப்லடோவ் கருத்தை சரிபார்க்கும் நாஜி இராணுவ நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட பத்தி : ஆங்கில மொழியாக்கம்:

குற்றம்சாட்டப்பட்டவர் 1938-களின் துவக்கத்தில் ஸ்பானிஷ்  உள்நாட்டுப் போரின் போது, பார்ஸிலோனாவின் எல்லையில் அலுவலகப்பொறுப்பில் இருந்தார். அவர் சிவப்பு அரசுக்கு எதிரான உள்ளூர் கலகக்காரர் என்பதை உணர்ந்து ஜெர்மனியின் இரகசிய சேவையில்  ஒத்துழைக்க தயாரானர். இந்தச் செய்தி போலினிட்ஸ் தகவலுடன் அவரால் பாரிஸிலுள்ள சோவியத் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

(இந்த போலினிட்ஸ் என்பவர் ஜி செல்லாவான் போலினிட்ஸ். அண்மையில் ‘சிவப்பு இசைக்குழுவில் -Rote wanelle- நாஜிகளுக்கு எதிரான சோவியத் உளவுவேலையில் நியமிக்கப்பட்டவர். அவர் யுனைடெட் பிரஸ்ஸுக்காக வேலை செய்தார். அவர் இந்த அறிக்கையை சோவியத் தூதரக அஞ்சல் பையில் திணித்தார்” Shareen Blair Brysac, Resistung Hitler. Mildred Harnack and the Red Orchestra. Oxford University Press, 2000,p.237)

 

நூல் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்
ஆசிரியர் : குரோவர் ஃபர்
தமிழாக்கம் : செ.நடேசன்
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை : ரூ.500
தொடர்பு : 94866 41586

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

வேளாண் சட்ட திருத்தங்களை மத்திய அரசு கைவிட கோரி டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம் என்கிற தலைப்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (20/12/2020) மாலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் போராடிவரும் பஞ்சாப் அரியானா விவசாயிகளின் போராட்ட குணத்தையும் அதில் உயிர் நீத்த தியாகிகளின் தீரத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் முதலில் அவர்களுக்கு “வீர வணக்கம்” நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது.

படிக்க :
♦ பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி, தனது தலைமை உரையுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார். இந்த வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் அரியானா விவசாயிகள் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் சாரை சாரையாக ஊர்வலமாக வந்து எப்படி இவ்வளவு தீரத்துடன் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர் என்பதை பார்க்கும் போது ஒரே வியப்பாக உள்ளது. இது போன்ற போராட்டங்கள் தான் நாடு முழுவதும் நடக்க வேண்டும். அதற்கு பஞ்சாப் அரியானா விவசாயிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தலைமையுரையில் கூறினார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது, இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; ஏனென்றால் மன்னர்கள் காலத்தில் தன் படைகளை எல்லாம் எல்லையில் குவித்து வைத்து தன்னுடைய பலத்தை காட்டி மக்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வார்கள். அதுபோலத்தான் இந்த கார்ப்பரேட் காவி மோடி அரசு டெல்லி எல்லைப்பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்திவைத்து அங்கு போராடி வரும் விவசாயிகளை மிரட்டும் விதமாக நடந்து கொண்டது ஆனால் அங்கு விவசாயிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறினர். இந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் இப்போராட்டம் ஒன்று வெல்லும் இல்லையேல் இங்கே மடிந்து சாவோம் என உறுதியுடன் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பல கலைஞர்கள் இந்த மத்திய அரசிடம் வாங்கிய சக்ரா, சாகித்திய அகடாமி போன்ற விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர் இது பெரும் அவலம் என்பதை புரிந்து கொண்ட சாகித்திய அகடாமி விருதை திரும்ப பெற எங்களுக்கு உரிமை இல்லை என கூறி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்காக தன்னுடைய சிறைத்துறை டிஜிபி பதவியை துறந்த லக்மிந்தர் சிங் ஜாகர் முதல் பிஎச்டி பட்டம் படித்த இளைஞர்கள் வரை அவர்கள் கூறுவது ஒன்றுதான்; ”முதலில் நாங்கள் விவசாயிகள் விவசாயிகளின் பிள்ளைகள் பின்புதான் காவலர்கள் அதிகாரிகள்” என வர்க்கப் பார்வையுடன் பதாகைகளை ஏந்திக் கொண்டு இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆர் எஸ் எஸ் சங்கிகளுக்கும் ஊடகங்களுக்கும் மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பஞ்சாப் அரியானா விவசாயிகள் போன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், ஒரே வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் இந்த கார்ப்பரேட் காவி அரசை நாம் வீழ்த்த முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை