Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 27

மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்

மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா?
| திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொசோவா எண்ணெய் கிணறுகளுக்காக அல்பேனிய சிறுபான்மை மக்களை பலியிட்டு நடக்கும் போர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலீசு அராஜகத்துக்கு “தீவிரவாத” சாக்கு
  • சாதி – தீண்டாமை எதிர்ப்பில் சி.பி.எம்.-இன் இரட்டை வேடம்
  • பஞ்சாலை நெருக்கடி: கோவையில் வெடிக்கக் காத்திருக்கும் குண்டு
  • மூன்றாவது அணியைத் தேடி… மண்குதிரை மீதேறி ‘இடது’களின் புரட்சிப் பயணம்
  • நீதி – மாண்பு பற்றிப் பேச சட்டமன்றம் – நீதிமன்றத்திற்கு அருகதையுண்டா?
  • இந்து மதவெறி அமைப்புகளின் வரி ஏய்ப்பு மோசடிகள்
  • நாட்டை அடகுவைப்பதில் பா.ஜ.க. கூட்டணி அரசின் நாலுகால் பாய்ச்சல்
  • ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோதல் நிழலா? நிஜமா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி

மூன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுக் குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த மாதத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் அடாவடியாக போர் தொடுத்து மூன்றாவது போர்முனையை திறந்தது, உலக அமைதியை விரும்புவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, “ஈரான் இன்னும் சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கப் போகிறது” என்ற பொய் குற்றச்சாட்டை சுமத்தி, ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. “ஆபரேஷன் ரைசிங் லையன்” (Operation Rising Lion) எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிகழ்த்தி ஈரானின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்தது.

ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள், ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், மக்கள் குடியிருப்புகளைப் போர் விமானங்கள் மூலம் தாக்கிய இஸ்ரேல், மறுபுறம், இஸ்ரேலின் மொசாத் (Mossad) உளவுப் பிரிவின் மூலம் ஈரானின் “இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை”-இன் முக்கியத் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளை ட்ரோன்களால் குறிவைத்துக் கொன்றது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் கார் குண்டுகள் (Car bombs) மூலம் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. போர் என்ற பெயரில் அப்பட்டமான பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. மேற்கத்திய ஊடகங்களோ துளியும் கூச்சமின்றி இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற இத்தாக்குதலை “தற்காப்பு தாக்குதல்” என்று குறிப்பிட்டன.

இதனையடுத்து, ஜூன் 15 அன்று இரவு “ட்ரூ ப்ராமிஸ் 3” (True Promise 3) என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் தொடுத்தது.

இதற்கிடையே, ஜூன் 22 அன்று இரவு “மிட்-நைட் ஹாம்மர்” (Midnight Hammer) என்ற பெயரில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது உலக மக்களை ஆத்திரங்கொள்ளச் செய்தது. அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்பது குறித்து துளியும் கவலைப்படாமல் மேலாதிக்க வெறிப்பிடித்து அமெரிக்கா இத்தாக்குதலை தொடுத்தது.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கான இறுதி சடங்கில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள்.

இந்நிலையில், ஜூன் 23 அன்று ஈரான்-இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலாவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து இரு நாடுகளும் அதனை உறுதிப்படுத்தின. அமெரிக்க மேலாதிக்க நலனிற்காக 12 நாட்களாக தொடர்ந்த இப்போரில் நூற்றுக்கணக்கான மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, இனவெறி இஸ்ரேல் அரசு காசாவை போலவே ஈரான் மக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீதும் குழந்தைகள், பெண்களை குறிவைத்தும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 627 ஈரான் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உலக அமைதி அல்ல, மேலாதிக்கவெறியே காரணம்

ஈரான் இன்னும் சிறுது காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க உள்ளதாகவும் அதனை தடுப்பதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்ததாகவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் நாடகமாடுகின்றன. ஆனால், “ஈரான் அணு ஆயுதங்களை பெற்றிருக்கவில்லை. இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதங்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும்” என்று அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்டே அம்பலப்படுத்தியிருந்தார் (இவர் ட்ரம்ப் அரசால் மிரட்டப்பட்டு தற்போது மாற்றிப் பேசியுள்ளது தனிக்கதை).

அதேபோல், தங்கள் நாட்டின் எரிசக்தி உற்பத்திக்காகவே யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக ஈரானும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. மேலும், அணு ஆயுதங்களை உருவாக்கவோ பெறவோ கூடாது; அதிக செறிவூட்டப்பட்ட துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது நாசவேலை எனக் கருதப்படும் போன்ற நிபந்தனைகளை கொண்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT – Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) ஈரான் கையெழுத்திட்டுள்ளது. ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA – International Atomic Energy Agency) ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதற்கும் ஒத்துழைத்து வருகிறது.

அதேசமயம், ஈரான் மீது அபாண்டமாக பொய் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமின்றி, தற்போதைய சூழலில் இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது; மேலும் 187 முதல் 277 வரையிலான அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு போதுமான புளூட்டோனியத்தையும் வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளிப்படையாகக்கூட அறிவிக்காத இஸ்ரேல், “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்” என்ற அடாவடியான கொள்கையை கொண்டுள்ளது. அதேபோல், வரலாற்றில் இருமுறை அணு ஆயுதங்களை பயன்படுத்திய இழிபுகழ் கொண்ட அமெரிக்கா, 5,550 அணு ஆயுதங்களைக் கொண்டு உலகை மிரட்டி வருகிறது. இதுதான் இவ்விரு நாடுகளின் யோக்கியதை. இந்நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது அயோக்கியத்தனமாகும்.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கான இறுதி சடங்கில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள்.

உண்மையில், மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம். இதற்காக அமெரிக்கா பல ஆண்டுகளாக பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், “செயலுக்கான ஒட்டுமொத்தத் திட்டம்” (JCPOA – Joint Comprehensive Plan of Action) என்ற ஒப்பந்தம் ஈரானுடன் போடப்பட்டது. பதிலுக்கு, ஈரான் மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2018-இல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஆனால், இத்தடைகள் ஈரானின் அணு ஆற்றலை கட்டுப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் அக்டோபர் 2025-இல் முடிவடைவதால், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும் இதற்கு இணங்காவிட்டால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மீது குண்டு வீசப்படும், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அபாயம் எழுந்தது. எனவே, ஈரான் மீது அமெரிக்கா எவ்விதமான இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது என்ற நிபந்தனையுடனும், தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நோக்கத்துடனும், ஓமனின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முன்வந்தது.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், கடுமையான கண்காணிப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவிற்கு ஈரான் யுரேனியத்தை செறிவூட்டிக் கொள்ளலாம் என்று வாதங்களை முன்வைத்த அமெரிக்கா, பின்னர் ஈரான் யுரேனிய செறிவூட்டலையே கைவிட வேண்டும் என்று அநியாயமான வாதத்தை முன்வைத்தது. ஒருபக்கம் 60 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்று ட்ரம்ப் காலக்கெடு விதித்துவிட்டு, இன்னொருபுறம் பூஜ்ஜிய செறிவூட்டல் (Zero Enrichment) என்று நிபந்தனை விதிப்பது பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்கான முயற்சி எனக் கண்டனங்கள் எழுந்தன.

உண்மையில், கடுமையான உள்நாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவால், அதனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க முடியாது. இதன் காரணமாகவே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபக்கத்தில் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வந்தது. இப்பேச்சுவார்த்தை நடப்பதையே விரும்பாத இஸ்ரேலும் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. எனவே, ஈரான் மீதான போரானது ஈரானின் அணு ஆற்றலை முடக்கி மேற்காசியப் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்வதற்கான போரே ஆகும். தவிர, ‘உலக அமைதி’-க்காக நடத்தப்படும் போர் என்று அமெரிக்கா கூறும் கதைக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை.

இஸ்ரேல்-அமெரிக்காவின் படுதோல்வி

ஈரான் மீதான போர் தொடங்கிய சமயத்தில், “அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடியில் ஈரான் உள்ளது. அதனிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. அதனால் ஈரானால் இப்போரில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றே பலரும் பேசி வந்தனர். ஆனால், அக்கருத்துகளையெல்லாம் சுக்குநூறாக்கி அமெரிக்கா-இஸ்ரேலை இப்போரில் பின்வாங்கி ஓடச்செய்துள்ளது ஈரான்.

குறிப்பாக, இஸ்ரேலிடம் ஐயன் டோம் (Iron Dome), டேவிட்’ஸ் ஸ்லிங் (David’s Sling) மற்றும் ஆர்ரோ 3 (Arrow 3) ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதால் அந்நாடு இரும்புக்கோட்டை உள்ளது, அதன் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற பிம்பம் ஊதிப்பெருக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போரில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. மேலும், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் பதுங்குக் குழிகளும் சேதமடைந்தன. இதனையடுத்து போர் தொடங்கிய சில நாட்களிலேயே தன்னால் இனி தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இஸ்ரேல் அமெரிக்காவை போருக்குள் இழுத்து தனது தோல்வியை பகிரங்கப்படுத்தியது.

இந்நிலையில், ஃபோர்டோவ் (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, “ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டன. அதனால், ஈரானால் யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி” என்றெல்லாம் ட்ரம்ப் பெருமை பீற்றி வந்தார். ஆனால், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாக்குதலுக்கு முன்னரே ஈரான் அப்புறப்படுத்திவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், “அணுசக்தி தளங்கள் இருந்த இடத்தில் கதிர்வீச்சுகள் இல்லை” என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தெரிவித்தது. இது ட்ரம்புக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, “இஸ்ரேலின் தாக்குதலின் விளைவாக ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்”, “ஈரான் மக்கள் சுதந்திர நாளை எதிர்நோக்கியுள்ளனர்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார். இது இப்போரின் ஊடாக ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்தையும் அமெரிக்கா-இஸ்ரேல் கொண்டிருப்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. அதன்படி, ஈரானின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் இராணுவத் தலைவர்களைக் கொல்வதன் மூலமும், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குவதன் மூலமும் ஈரான் அரசுக்கு எதிராக மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கனவு கண்டன. ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமெனியை கொல்வதற்கான சதி நடந்ததாக செய்திகள் வெளியானதும் இத்திட்டத்தின் அங்கமே ஆகும். ஆனால், இவையெல்லாம் நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தின.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். “எங்களுக்கான ஜனநாயகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உள்ளே வர வேண்டாம்” என்று உரக்க முழங்கினர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரசை நிர்பந்தித்தனர். ஈரான் மட்டுமின்றி மேற்காசிய நாடுகள் முழுவதிலும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர்வெறிக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. இதனால், இஸ்ரேல்-அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டம் படுதோல்வியடைந்தது.

மறுபுறம், இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகளில் அரசியல் நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. இஸ்ரேல் இப்போரை தொடங்குவதற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலிருந்து நெதன்யாகு அரசு நூலிழையில் தப்பித்திருந்தது. காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டில் தீவிரமடைந்திருந்தது. இந்த எதிர்ப்பை மடைமாற்றுவதற்கு நெதன்யாகு இப்போரை பயன்படுத்திக்கொள்ள எத்தனித்த நிலையில், இஸ்ரேலை போர் சூழலுக்குள் தள்ளிய நெதன்யாகு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

அதேபோல், அமெரிக்காவிலும் ஈரான் மீதான போருக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன. மேலும், அமெரிக்காவின் காங்கிரசில் அனுமதி பெறாமலேயே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததை எதிர்க்கட்சிகளும் ஆளும் பிரிவில் ஒரு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். மேலும், உலகம் முழுவதும் போருக்கு எதிரான உணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீதான போருக்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கின. இதன் விளைவாகவே ட்ரம்ப் வேறு வழியின்றி போர் நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனை ஊடகங்கள் ஊதிப்பெருக்கி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்று பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “அமெரிக்கா கெஞ்சியதால்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம்” என்று ஈரான் கூறியது ட்ரம்பின் மூக்கை உடைத்தது.

மேலும், அமெரிக்க-இஸ்ரேலின் போரை சுட்டிக்காட்டி, அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை நிறைவேற்றப் போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதற்கு அப்பட்டமாக துணைபோன சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான மசோதாவிற்கும் ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு முன்னர் நடந்துவந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் விலகியுள்ள நிலையில், ஈரானுக்கு சில சலுகைகளை அளித்து அதனை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சி

இப்போர் சமயத்தில் ஈரானின் மக்கள் விரோத போக்கையும் அது பிராந்திய மேலாதிக்க வல்லரசாக வளர விரும்புவதையும் காரணம் காட்டி இப்போரில் ஈரானை ஆதரிக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஈரான் மீதான இப்போர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போராகும். அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சியடைந்துவரும் சூழலில் பல்துருவ உலக மேலாதிக்கத்திற்கான போக்கு வளர்ந்து வருகிறது. இதில் மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அடியாளான இஸ்ரேலுக்கு போட்டியாக ஈரான் வளர்ந்து வருகிறது.

மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஈரானின் நெருக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அணுசக்தி திட்டங்களில் தங்களது நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் வெளிப்படையாக அறிவிக்க தீர்மானித்துள்ளன. இதற்கான முதல் சுற்று கூட்டத்தையும் மார்ச் 14 அன்று சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தியுள்ளன.

மேலும், மேற்காசிய நாடான சிரியாவில் ரஷ்ய ஆதரவு பஷர் அல்-அசாத் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதையடுத்து ரஷ்யா ஈரானுடன் அதிக நெருக்கம் பாராட்டத் தொடங்கியுள்ளது. அதேபோல், முன்பு ஷாங்காய் கூட்டுறவில் பங்குதாரராக இருந்த ஈரான் தற்போது அதில் உறுப்பினராகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் உறுப்பினராகியுள்ளது.பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா-ஈரானுக்கு இடையில் சீனாவின் முயற்சியில் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டதும் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது.

இதன் காரணமாகவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, அதனுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகளை மிரட்டுவது என பல்வேறு வழிகளில் ஈரானை அடக்கி ஒடுக்குவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலின் இப்போரை பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இப்போரில் தனது சுயாதிபத்தியத்தை பாதுகாத்துகொள்வதற்காக போராடிய ஈரானை ஆதரிக்காதது அமெரிக்க அடிமைத்தனமும் துரோகமும் ஆகும்.

அதேசமயம், ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்திருப்பது நிரந்தரமானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போர் வெடிக்கலாம் என்பதே எதார்த்த நிலை. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள உலகின் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்கா தனது போர் முனையை உருவாக்கி அதன் சுமையை உலக மக்களின் தலையில் சுமத்தும்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 7-8. | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வாஜ்பாய் – நவாஸ் செரீப் சந்திப்பு: உள்நாட்டில் தேசிய வெறியூட்டி ஆதாயம் உலக அரங்கில் நட்புறவு மாய்மாலம்
  • பா.ம.க.: சமூக விரோதிகளின் கூடாரமா?
  • ஜெயா ஊழல் வழக்கு: திருடனே நீதிபதி
  • “ரேஷன் கடைகளை மூடு” உலக வங்கி உத்தரவுக்கு குரங்காக ஆடும் பா.ஜ.க
  • பீகார்: மேல்சாதி நிலப்பிரபுக்களின் கொலைவெறி பா.ஜ.க.வின் பதவி வெறி
  • வாழ்க்கையைப் பறித்தது தமிழக அரசு உயிரைப் பறித்தது கள்ளச் சாராயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அகமலை கிராம மக்கள் வனத்துறையின் கொத்தடிமைகளா?
  • முசுலீம் மதவெறியர்களின் காட்டு தர்பார்
  • திருமானூர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: த.மா.கா.வினரின் சாதி வெறியாட்டம் துணைபோகும் தமிழக போலீசு
  • ஜெயா வழியில் கேரள முதல்வர் நாயனார் நடத்திய ‘புரட்சி’ திருமணம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்

கீழடி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பாசிச மோடி அரசால் தொடர்ந்து வேட்டையாடப்படும் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடி அகழாய்வு தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதிக்கரை நாகரிகத்தை உலகறியச் செய்த வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஆய்வு தமிழர்களின் எழுத்தறிவு, நகர அமைப்பு, நீர்மேலாண்மை மற்றும் வணிகத் தொடர்புகளை அறிவியல்பூர்வமாக நிறுவியது. ஆனால், இந்த அறிவியல் உண்மைகள், “வேத காலம் = இந்தியாவின் தோற்றம்” என்ற பார்ப்பனியப் பொய்ப் பரப்புரைக்கு எதிராக இருப்பதால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இவற்றை மறைக்கவும், தடுக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது. தற்போது, இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுப்பது, அதில் “அறிவியல்பூர்வ” திருத்தங்களைக் கோருவது என்னும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகிறது.

கீழடி அகழாய்வு: அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில்

தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் 2014-2016 வரையில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகள், கி.மு.6-ஆம் நூற்றாண்டு குடியிருப்புகள், தமிழ்-பிராமி எழுத்து, உறைக் கிணறுகள் மற்றும் சாயத் தொழில் உலைகள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தன. கார்பன் டேட்டிங் மூலம் இவை கி.மு.580 முதல் கி.மு.800 வரையிலானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை 2017 முதல் நடத்தி வரும் ஆய்வுகளில், 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை (பானை ஓடுகள், செங்கல் சுவர்கள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், செம்பு மற்றும் தந்தப் பொருட்கள்) கண்டறிந்துள்ளது. இவற்றில் 18,000 பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்-பிராமி எழுத்து கொண்ட 120-க்கும் மேற்பட்ட பானை ஓடுகள், எளிய மக்களின் எழுத்தறிவை உறுதிப்படுத்துவதோடு, தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்ட, “புழங்கு பொருட்களில் பெயர் எழுதும்” பண்டைய மரபை நிறுவுகின்றன. மேலும், 1,001 கிராஃபிட்டி குறியீடுகள், சிந்து சமவெளி எழுத்துகளுடன் ஒற்றுமை கொண்டிருப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தமிழ்-பிராமி எழுத்தின் தொன்மையை கி.மு.7-ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்கிறது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள், திறந்தவெளி வாய்கால்கள் மற்றும் சிறு நீர்தேக்கங்கள் ஆகியவை பண்டைய தமிழர்களின் மேம்பட்ட நகர அமைப்பு மற்றும் நீர்மேலாண்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக 2024-இல், 10-ஆம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மேம்பட்ட நீர்மேலாண்மையை உறுதிப்படுத்தின. இவை, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழர் நாகரிகத்தை நிறுவுகின்றன.

அருகிலுள்ள கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட 24 உருளைக் கலன்கள் மற்றும் குழந்தை எலும்புக்கூடு ஆகியவை இப்பகுதி இறுதிச் சடங்கு தளமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இதுவரையிலான கீழடி ஆய்வுகளில் சாதி – மத அடிப்படையிலான இறைவழிபாடுகளோ, வாழ்வியல் முறைகளோ இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் வெளிப்படவில்லை.

இதன்மூலம், கீழடியின் தொல்லியல் சான்றுகள் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை சங்க இலக்கியங்களில் வெளிப்படும் சமத்துவ வாழ்வியலுடன் இணைக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், கீழடி அகழாய்வு தமிழர்களின் மதச்சார்பற்ற, சமத்துவ நாகரிகத்தை அறிவியல்பூர்வமாக நிறுவி வருகிறது. எனவேதான், சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.

இந்துத்துவ சித்தாந்தமும், கீழடியை மறுத்தலும்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தம், “ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே பண்பாடு- ஒரே மொழி” என்னும் ஒற்றைமயப்படுத்தும் பார்ப்பன – பாசிச திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது. இது ஏற்கெனவே, நிலவிவரும் பல்வேறு மொழி-பண்பாடு-தேசிய இன அடிப்படை கொண்ட இந்திய மக்களின் பன்முகத்தன்மையை மறுக்கிறது. வேத காலமே இந்திய நாகரித்தின் துவக்கம்-அடிப்படை என்னும் பார்ப்பன மேலாதிக்கக் கொள்கையை பாடத்திட்டங்களிலும், வரலாற்று ஆய்வுகளிலும் திணித்து, திரித்துப் புரட்டுவதைச் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், பண்டைய இலக்கியங்களும் அவற்றை நிரூபிக்கும் வகையிலான தொல்லியல் ஆய்வுகளும் பார்ப்பனப் புரட்டுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது தமிழர் நாகரிகம் என்பதை அறிவியல் பார்வை கொண்டோர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். 1939-இல் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த கே.என்.தீக்‌ஷித் என்பவர், “வைகை மற்றும் தாமிரபரணி நதிக்கரைகளில் அகழாய்வு செய்தால், சிந்து சமவெளிக்கு இணையான நாகரிகம் கிடைக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீழடியில் கிடைத்த முத்துகள், கார்னிலியன் மணிகள், எழுத்துகள் மற்றும் குறியீடுகள் கொண்ட பானையோடுகள் ஆகியவை தமிழர்களின் தொழில்நுட்ப அறிவு, கடல் வணிகம் மற்றும் சிந்து சமவெளியுடனான உறவு ஆகியவற்றைப் புலப்படுத்துகின்றன. அதன் மூலம், பார்ப்பனியத்தின் “ஆரியர் சாதனை” என்னும் கற்பனைக் கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

இந்தப் பின்புலத்திலிருந்தே, கீழடியில் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா 2023-இல் சமர்ப்பித்த 982 பக்க அறிக்கையை வெளியிடாமல், ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்ய முயல்வதைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த அறிக்கையை விரைந்து வெளியிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு,  அறிக்கையை ஒன்பது மாதங்களுக்குள் வெளியிட வேண்டுமென 2024 பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒன்றிய அரசோ இந்த உத்தரவைத் துளியும்  மதிக்கவில்லை.

மாறாக, 2025 மே 23-இல், இந்திய தொல்லியல் ஆய்வு மையம், “போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை” எனக் கூறி, அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் அறிக்கையைத் திருத்தக் கோரியது. “போதிய தரவுகள் – அறிவியல் ஆதாரங்களுடன்தான் அறிக்கை உள்ளது. எனவே திருத்த வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறி ஒன்றிய அரசு விரும்பும் ‘திருத்தங்களைச்’ செய்ய மறுத்து விட்டார் அமர்நாத்.

ஒன்றிய அரசின் இந்த கயமைத்தனமான போக்கு பொதுவெளியில் அம்பலப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான பிறகும் கூட, ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றை மாற்ற முடியாது” என்றும், இத்தகைய அறிக்கைகள் பிராந்தியவாதப் போக்குகளுக்கு பயன்படுகிறது என்றும் திமிர்த்தனமாகக் கூறி வருகிறார். கீழடி பிரச்சினையை அரசியலாக்க வேண்டாமென ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாட்டு பா.ஜ.க. நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இவர்கள் செய்யும் தமிழின விரோத அரசியல் எத்தனை கயமைத்தனம் நிறைந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அயோத்தி – ராமர் பாலம்: பார்ப்பனியத்தின் அறிவியல் விரோத முகம்

அயோத்தியில் “கோயில் இருந்ததற்கு ஆதாரமில்லை” என 2003-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையைப் புறக்கணித்து, மத நம்பிக்கைகளை முன்னிறுத்தியே ராமன் கோயில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. கடவுளை வேண்டிக்கொண்டு தீர்ப்பை எழுதியதாகக் கூறியதன் மூலம் அந்த நம்பிக்கை எத்தகையது என்பதை பின்னாளில் நீதிபதி சந்திரசூட் அம்பலப்படுத்திக் கொண்டார். ஆனால், இத்தீர்ப்பு அறிவியல் அடிப்படையில் வழங்கப்படவில்லை என எந்த ஒன்றிய அமைச்சரும் பா.ஜ.க. நிர்வாகியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்துராஷ்டிரத்திற்கான பாதையில் ஒரு மைல்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல, ராமர் பாலம் விவகாரத்தில் நாசாவின் புவியியல் ஆய்வுகள் பாலம் இயற்கையாக உருவான பவளப்பாறை அமைப்பு என உறுதிப்படுத்தின. ஆனால், பார்ப்பன பாசிச கும்பலோ இதை ராமாயணத்துடன் இணைத்தும் இந்துக்களின் நம்பிக்கை என்றும் கூறி அறிவியல் ஆய்வுகளை ஏற்க மறுத்தனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் எனப் பெயர் சூட்டுவது, வரலாற்றிலேயே இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைப் பற்றிய ஆய்வுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய அறிவியலை ஏற்க மறுக்கிற முட்டாள் பாசிஸ்டுகள்தான், இப்போது கீழடி ஆய்வில் கார்பன் டேட்டிங் மற்றும் தொல்லியல் ஆதாரங்களை மறுக்கின்றனர். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் போதாது என்கின்றனர். தமது சித்தாந்தம் – பொய்ப்பரப்புரைக்குப் பயன்படும் என்றால் அறிவியலை மறுப்பதும், தமிழர் பண்பாட்டு வரலாறு என்றால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பேசும் இரட்டைநாக்கே இவர்களின் இயல்பு.

கீழடி அடையாளம் காட்டும் துரோகிகள்

கீழடி ஆய்வறிக்கையை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அ.தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு எட்டப்பன் வேலை பார்க்கின்றன.

தமிழின – தமிழர் விரோதத் தன்மையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வுடன் கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்திருப்பதோடு, அவர்களின் அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறது அடிமை அ.தி.மு.க.. கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி கள்ள மௌனம் சாதித்து வருகிறார்.

“கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது” என்றும், “மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத்தான் இருக்கும்.” என்று தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகியைப் போல ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, “மதுரை முருக பக்தர் மாநாட்டில் அரசியல் பேசமாட்டார்கள் என நினைத்துத்தான் கலந்து கொண்டோம்”,  “கொள்கை வேறு கூட்டணி வேறு”, “அண்ணாவை ஒருநொடி கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று பேசுவதெல்லாம் இவர்கள் எத்தகைய துரோகிகள் என்பதை நாள்தோறும் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கீழடியில் தோண்டத் தோண்ட தமிழரின் தொன்மை நாகரிகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் அதைக் குழிதோண்டிப் புதைக்கும் ஈனச்செயலில் இத்தகைய துரோகிகள், தமிழின விரோதிகளுக்குத் துணை நிற்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இந்தியாவின் பல்தேசிய இனங்களின் அடையாளங்களை முற்றாக ஒழித்து விட, முன்னெப்போதையும் விட தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல். அவற்றின் குறுக்கே, பன்மைத்துவத்தின் அடையாளமாய், தமிழ் மரபின் கேடயமாய் சீன மதிலைப் போல உயர்ந்து எழுந்து வருகிறது கீழடி. கீழடியை மூடி மறைப்பது என்பது தமிழரின் பழம்பெரும் பாரம்பரியத்தை மூடி மறைப்பதற்குச் சமம். கீழடியைக் காப்பது என்பது பழைய செங்கற்களையோ, மட்பாண்டங்களையோ காப்பதல்ல. அவை வெளிக்கொண்டு வந்துள்ள தமிழரின் வரலாற்று உண்மையைக் காப்பது! இது, பார்ப்பனியப் போலி வரலாறுகளின் கொடுமையிலிருந்து நமது மூதாதையரின் பெருமையைக் காப்பது!


தமிழ்ச்சுடர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈரோ நாணயம்: உலக மேலாதிக்கக் கொள்ளைக்கு புதிய ஆயுதம்
  • இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டி: சிவசேனாவின் தேசியவெறியும் பா.ஜ.க.வின் பசப்பலும்
  • இந்து அதவெறியாட்டத்தை இனியும் பொறுப்பதா?
  • ஈராக் மீதான தாக்குதல்: ஒடுக்கப்படும் நாடுகளுக்கு அமெரிக்காவின் மிரட்டல்
  • இலவச வேட்டி – சேலை
    மக்களின் அவலமு அதிகார முறைகேடுகளும்
  • தமிழ்நாடு. மேல்சாதி வெறியர்களின் சொர்க்க பூமியா?
  • அபலைப் பெண் அஞ்சனாவும் காமவெறி அரசு எந்திரமும்
  • கிரிமினல் மாஃபியாவின் கோரப் பிடியில் மும்பய்
  • நாய்ச் சண்டையில் இராணுவம்… நாட்டைக் காக்குமா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!

ஜூன் மாத தொடக்கத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 2025 ஐ.பி.எல். போட்டியில் ஆர்.சி.பி. அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர்.

பெரும்பாலும் இதுபோன்ற கூட்டநெரிசல் விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தாண்டி, விபத்துக்கு காரணமானவர்களைத் தண்டிப்பது அரிதினும் அரிதாகவே நடக்கும்.

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திலும் கூட கர்நாடக காங்கிரசு அரசு, போலீசு, கர்நாடக  மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான “டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்”, ஆர்.சி.பி. அணி என அனைவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இந்த விபத்திற்கான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதே உண்மை.

ஐ.பி.எல். எனும் கார்ப்பரேட் சூதாட்டப் போட்டியில், ஆர்.சி.பி. எனும் ஒரு கார்ப்பரேட் அணி வெற்றிப் பெற்றதற்கு அரசு ஏன் விழா எடுக்க வேண்டும்? கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விமான நிலையத்திற்கே சென்று ஏன் வீரர்களை வரவேற்க வேண்டும்? என்ற கேள்விகளை நாம் எழுப்பினால்,  இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசுதான் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஐ.பி.எல். போட்டியின்போது தனது குறுகிய லாபவெறிக்காக, திட்டமிட்டு கன்னட, தமிழ் மக்களின் தேசிய இன உணர்வைத் தூண்டிவிடுகிறது கார்ப்பரேட் கும்பல். மக்களும் கார்ப்பரேட்டுகளின் இந்த நுகர்வு வெறிக்கும், தேசிய இனவெறிக்கும் பலியாகி மாறிமாறி அடித்துக் கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நடந்துக்கொண்டிருந்த சண்டை தற்போது வீதிகளுக்கு வந்துவிட்டது. 11 பேர் விபத்தில் உயிரிழந்த பிறகும், ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என வன்மத்தை கக்கும் அளவிற்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கார்ப்பரேட்டுகளால் தூண்டிவிடப்படும் இந்த தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொள்வதற்காகவே, கர்நாடக அரசு ஆர்.சி.பி. அணியின் வெற்றியை கன்னடர்களின் வெற்றியாக கர்நாடகாவின் வெற்றியாக சித்தரிக்க முயன்றது. எனவே, இத்தகைய கோரமான விபத்து நிகழ்ந்துள்ளதற்கு ஆர்.சி.பி. அணியின் வெற்றியைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் குறுகிய நோக்கமும், விளம்பரவெறியுமே அடிப்படை காரணம்.

கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.

கார்ப்பரேட்-அரசு லாபவெறிக்கு பலியிடப்படும் மக்கள்

2023-இல் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலருக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. 25,000 பேர் மட்டும் பங்கேற்க முடியும் என்பது தெரிந்தும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் 50,000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், இந்நிகழ்ச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. தற்போது, பெங்களூருவில் ஏற்பட்ட விபத்திலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நுகர்வு வெறிக்கு பலியாகி அதிகளவு மக்கள் கூடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது பொதுத்தன்மையாக உள்ளது.

அதேபோல், 2024-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 92-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். 240 பேர் மயக்கம் அடைந்தனர். விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால், இவ்வளவு மக்களை கையாளும் வகையிலான குடிநீர், மருத்துவ வசதி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றில் “புஷ்பா-2” திரைப்படத்தைப் பார்ப்பதற்கு வந்த ரேவதி (39 வயது) என்ற பெண்ணும் அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி அல்லு அர்ஜூன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப்பதிவு செய்தது தெலுங்கானா அரசு. ஆனால், இதுபோன்று விபத்துகள் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும் தெலுங்கானா அரசு இத்திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கியதே இவ்விபத்திற்கு அடிப்படையான காரணமாக உள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு கூட்ட நெரிசல் விபத்துகளும் தடுத்து நிறுத்தக்கூடியதாக இருந்தாலும் அரசும் சரி கார்ப்பரேட்டுகளும் அதை வேண்டுமென்றே அனுமதிக்கின்றன. கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழக்கும்போது அவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கும் முயற்சிக்கின்றன.

அதேசமயம், ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து எப்படியாவது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் காட்டும் ஆர்வம் கார்ப்பரேட்டுகளின் நுகர்வு கலாச்சாரத்தின் வீரியத்தைக் காட்டுகிறது. குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைக் கூட பொருட்படுத்தாமல், ஐ.பி.எல். டிக்கெட் வாங்கியதை ஒரு தந்தை பெருமையாகப் பேசுகிறார் என்றால், எந்தளவிற்கு மக்கள் நுகர்வு வெறிக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

அதுவும், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்கள் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என்ற பெயரில் புதிய கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்சர்கள் என்ற பெயரில் உலாவுபவர்களில் பெரும்பான்மையானோர், நுகர்வு மட்டுமே வாழ்க்கை என்பதை மக்களிடம் திணித்து வருகின்றனர். உணவு, சுற்றுலாத்தலம் தொடங்கி அன்றாடம் பயன்படுத்தும் பொருள் வரை எதுவாயினும், இவர்கள் மூலம் விளம்பரப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களால் எளிமையாக மக்களிடம் திணித்து விட முடிகிறது.

மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்

ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் மக்ககளிடையே நுகர்வு வெறியைத் தூண்டிவரும் நிலையில், மறுபுறம் ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி அரசு தீவிரமான மதவெறியைத் தூண்டிவருகிறது. இந்தியாவில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசல் விபத்துகளில் அதிகளவிலான விபத்துகள் மத நிகழ்ச்சிகளில்தான் நடைபெறுகிறது.

இந்தாண்டு நடந்த கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தே இதற்கு போதுமான சான்றாகும். ஜனவரி 29-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலியாகியிருப்பதாக யோகி அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் “பி.பி.சி.” செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் குறைந்தது 82 பேர் உயிரிழந்திருப்பதாக அம்பலப்படுத்தியது. மேலும், பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்குச் செல்வதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஆனால், இதே கும்பமேளா நிகழ்விற்கு அம்பானி குடும்பம் தொடங்கி நாட்டிலிருக்கும் பல கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள், அரசு அதிகாரிகள், எம்.பி-க்கள் பாதுகாப்பாக வந்து சென்றபோது உழைக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாசிஸ்டுகளை பொறுத்தவரை இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதவெறியைத் தூண்ட வேண்டும் என்பதே நோக்கம். அதற்காக மக்களை கொன்றொழிப்பதற்கும் தயங்க மாட்டார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்த காலத்தில் மருத்துவர்கள் எச்சரிக்கையும் மீறி உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளாவை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொரோனாவிற்கு பலியிட்டது பாசிச கும்பல்.

அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2 அன்று போலே பாபா எனும் போலி சாமியாரின் மத நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை.

இவ்வாறு, மத நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிற்போக்குத்தனமாக மூட நம்பிக்கைகளை விதைப்பதுடன், எந்தவித முறையான பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மதவெறியைத் தூண்டுவதற்காக பிரம்மாண்டமான மத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் உயிரையும் பறித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் லாபவெறிக்காக தூண்டப்படும் நுகர்வு வெறி, மறுபுறம் பாசிஸ்டுகளால் தூண்டப்படும் இந்து மதவெறி ஆகிய இரண்டுக்கும் திட்டமிட்டே மக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பாசிச அபாயம் படர்ந்துவரும் சூழலில் மக்கள் இவ்வாறான நுகர்வு வெறி, இந்து மதவெறிகளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பது அபாயமிக்கதாகும்.


மதி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 1-31 1998, ஜனவரி 1-15 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 2-4 | டிசம்பர் 1-31 1998, ஜனவரி 1-15 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வடமாநிலத் தேர்தல் முடிவுகளும் போலி கம்யூனிஸ்டுகளின் பசப்பல்களும்
  • நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • ஈராக் மீதான தாக்குதல்: ஒடுக்கப்படும் நாடுகளுக்கு அமெரிக்காவின் மிரட்டல்
  • சட்டன் என் கையில்! நீதி என் பையில்!! ஜெயாவின் ஊழல் கொள்ளைக்கு பா.ஜ.க.வின் வக்காலத்து
  • விபச்சாரத்திற்கு பெண்கள் ஏலம் நாட்டிற்கே அவமானம்
  • விவசாயத்தை நாசமாக்க அமெரிக்காவின் புதிய சதி
  • புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பும்
  • திவாலான ஏழைநாட்டில் ஏகாதிபத்திய சூறையாடல்
  • பாலியல் குற்ற வழக்குகள்: ‘நீதி’ மன்றங்களின் ஆணாதிக்க கழிசடைத்தனம்
  • “அனுபவ் நிலங்களைப் பறிமுதல் செய்வோம்!”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

மிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் தோத்தாபுரி மாம்பழங்களை ஆந்திர அரசு தடை செய்துள்ளது. ஆந்திர மாம்பழ விவசாயிகளுக்குரிய விலை கிடைப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.

ஆந்திர அரசின் இந்நடவடிக்கையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாம்பழ விவசாயிகள் மாம்பழங்களை சாலைகளில் கொட்டித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில், ஆந்திர அரசின் தடையை நீக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஆதாரவிலையாக டன் ஒன்றுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன் 11 அன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆந்திர அரசின் மாம்பழத் தடை என்பது திடீரென்று எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், இது கர்நாடகாவில் தோத்தாபுரி மாம்பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவசாயிகள் நீண்டகாலமாக ஆந்திராவின் சித்தூரில் உள்ள கூழ் பிரித்தெடுத்தல் தொழிலுடன் வலுவான இணைப்புகளைக் கொண்டிருக்கின்றனர்; இத்தடையால் ஆயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.

மாநில அரசுகளுக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது எனவும் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

அதேசமயம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

கர்நாடக அரசிடமோ, தமிழ்நாடு அரசிடமோ எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்தவித பொறுப்புணர்ச்சியுமின்றி ஆந்திர அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கை தான்தோன்றித்தனமானதும், சட்டவிரோதமானதுமாகும். சொல்லிக்கொள்ளப்படும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கே எதிரானதாகும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால், உடனே அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூப்பாடு போடும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

அதேசமயம், ஆந்திர அரசின் இந்நடவடிக்கை அம்மாநில மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கருத முடியாது. ஏனெனில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மாங்கூழுக்காக தோத்தாபுரி மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்ட நிர்வாகம் டன்னுக்கு ரூ.30,000 விலை நிர்ணயித்திருந்த நிலையில், இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.12,000 மட்டுமே நிர்ணயித்துள்ளது. ஆந்திர அரசு, விவசாயிகளின் மீது அக்கறைக் கொண்டிருந்தால், கூடுதல் விலை நிர்ணயித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், விவசாயிகளின் பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் கார்ப்பரேட்மய கொள்கைகளைப் பற்றிய விடயத்தை திசைதிருப்புவதற்காக இத்தடையை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம், நமது நாட்டில் கூட்டாட்சிக் கோட்பாடு என்ற அம்சம் அரசியல் உள்நோக்கத்தோடும், சந்தர்ப்பவாத நோக்கிலும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகிறது. அதாவது இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத்தான் இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளாகியும் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், அது தேசிய இன முரண்பாடாக வெடிக்கிறது.

உண்மையான விவசாயிகள் நலன், தேசிய இனங்களுக்கிடையேயான அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஒற்றுமை ஆகியவற்றை இந்தக் கட்டமைப்பில் சாத்தியப்படுத்த முடியாது என்பதையும், இப்பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமடையும் வகையில்தான் இப்போலி ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது என்பதையும் இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மாநில அரசுகளின் சமரச, சந்தர்ப்பவாத அணுகுமுறைகளால் ஒருபோதும் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதே யதார்த்தம். விவசாயிகள் நலனை முதன்மைப்படுத்துகின்ற, தேசிய இன முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலான மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பது ஒன்றே இதற்கான தீர்வாகும்.


அய்யனார்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 24, ஆண்டு 14, இதழ் 01 | நவம்பர் 01-30, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழக ‘அமைதி’க்கு தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பலியிடுவதா?
  • கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
  • நாற்காலிக்கு தேசியம் மேடைக்கு திராவிடம்
  • டாலருக்கு பஞ்சு ஏற்றுமதி! தமிழகப் பஞ்சாலைகளுக்குச் சாவுமணி!!
  • நாகபூஷண் பட்நாயக் மறைவு: துரோகிகளின் புரட்சி வேடமும் மறைந்தது
  • வை.கோ., இராமதாசு: பார்ப்பன பாசிச பல்லக்குத் தூக்கிகள்
  • கருணாநிதியின் விசாரணை நாடகம்! ஜெயாவின் முதலைக் கண்ணீர்!!
  • இன்று வீழும் முதலாளித்துவம் உலகை வெல்லும் கம்யூனிசம்
  • தமிழ் வழியில் உயர் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தானா?
  • ’மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: சேற்றிலிருந்து புதை குழியை நோக்கி…
  • நகர்ப்புற குட்டி முதலாளிகள் கூடாரமாக போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்
  • நோபல் பரிசும் ஏகாதிபத்திய நலனும்
  • பா.ஜ.க.: சாதியவாதிகள் – கிரிமினல்களின் கூடாரம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!

ந்தாண்டு தொடக்கத்தில், காவி-கார்ப்பரேட் கும்பலின் நலனிற்காக உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மகா கும்பமேளாவில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உத்தரப்பிரதேச யோகி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் பி.பி.சி. செய்தி நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வில், 82 அப்பாவி மக்கள் இறந்தது தெரியவந்துள்ளது‌. ஆனால், இது குறித்த உண்மை தகவலை தராமல், 37 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று மூடிமறைத்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை தராமலும் நிர்கதியாக்கியுள்ளது பா.ஜ.க. கும்பல்.

2021-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சம் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகி இருந்த “சிவில் பதிவு முறை” என்ற அரசின் அறிக்கையில் 2021-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1.02 கோடி பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மரணங்களை விட சுமார் 20 லட்சம் மரணங்கள் அதிகமாக 2021-இல் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, 2021-ஆம் ஆண்டில் உண்மையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, பாசிச மோடி அரசு கூறியதை விட உண்மையான பலி எண்ணிக்கை சுமார் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலக்கட்டத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 2021-இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை என்று பாசிச மோடி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலானது நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் அவற்றிற்கு வாய்திறக்காத மோடி கும்பல், பதிலடி தருகிறோம் என்ற பெயரில் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இந்திய இராணுவத்தின் தாக்குதல்களால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களையும் இழப்புகளையும் ஊடகங்களில் ஊதிப்பெருக்கிக் காட்டிய பாசிச கும்பல் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பேச மறுத்தது‌. பாகிஸ்தான் குறித்து பல பொய் தகவல்களை வெளியிட்டு தேசவெறி-மதவெறிப் பிரச்சாரம் செய்யும் அதே சமயத்தில் தனது தோல்விமுகத்தை மூடிமறைப்பதற்காக, ரபேல் விமானம் தாக்கப்பட்டது உள்ளிட்டு உண்மையான பல தரவுகளைத் திட்டமிட்டே வெளியிடாமல் மறுத்துவருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் மற்றும் இராணுவத்தின் செயல்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மோதலின் போது இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளும் அடங்கும்.

இறுதியாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் அரங்கேறிய “ஏர் இந்தியா” விமான விபத்தானது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது குறித்த கேள்விக்கு, “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை” என்று திமிர்த்தனமாக அமித்ஷா பதிலளித்தது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. “விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை என்றால் எதற்காக அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன?” என்று கேள்வியெழுப்பினார் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா. விமானப் போக்குவரத்து துறையின் கடந்த சில ஆண்டறிக்கைகள் மற்றும் தரவுத்தொகுப்புகளை (Datasets) பாசிச மோடி அரசு வெளியிடாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்திற்கும், மோடி அரசு தரவுகளை வெளியிடாமல் இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று கூறினால் நம்ப முடிகிறதா?

இதை புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் தரவுகள் மற்றும் அதை வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு துறை வெளியிடும் தரவுத்தொகுப்பானது, அந்த குறிப்பிட்ட துறை அல்லது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நமக்கு அளிப்பதுடன், அந்த குறிப்பிட்ட துறை சாதித்த கள எதார்த்த நிலைமைகளை நமக்கு காட்டுகின்றன. அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திட்டமிடுதல், கொள்கை வரைவு தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற திட்டமிடல் பணிகளுக்கு உறுதுணையாகவும் அடிப்படையாகவும் இத்தரவுகள் அமைகின்றன. அதுமட்டுமின்றி, அத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பிற்குரியவர்களாக ஆக்குவதன் மூலம், அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த தரவுகளை பரிசீலித்து தவறுகளை உணர்ந்து, எதிர்காலத்தில் தவறுகள் ஏற்படாத வகையில் திருத்திக் கொள்ளவும் தரவுகள் உதவுகின்றன. கல்வி, சுகாதாரம், இரயில்வே, விமானப் போக்குவரத்து, இராணுவம் போன்ற பல துறைகளில் நம்மிடம் உள்ள குறைபாடுகளை கண்டறியாமல், அந்தந்த துறைகளை நம்மால் எவ்வாறு மேம்படுத்த முடியும்? மோடி ஆட்சியில் ஒடிசா ரயில் விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து போன்ற கோர நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“2024-ஆம் ஆண்டின் இறுதியில், கல்வி, சுகாதாரம், சாலை விபத்துகள், தற்கொலை சம்பவங்கள், மருத்துவம் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 16 விசயங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவுத் தொகுப்புகளை வெளியிடவில்லை. மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக ஆயுஷ், சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, இரயில்வே உள்ளிட்ட ஒன்பது ஒன்றிய அமைச்சகங்கள் தங்களின் ஆண்டறிக்கைகளை வெளியிடவில்லை” என்ற அதிர்ச்சிகரத் தகவலை “இந்தியா ஸ்பெண்ட்” (IndiaSpend) என்ற பத்திரிகை உரிய ஆதாரங்களுடன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமான காலம், சட்ட மற்றும் நீதித்துறையில் (2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு) எந்த ஒரு தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பொய்யான, மோசடியான தரவுகளை வெளியிடுவதும் அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தங்களுடைய முகத்திரையை கிழிக்கும் வகையிலான உண்மை தரவுகள் வெளியிடப்படுவதை தீவிரமாக ஒடுக்கும் வேலையிலும் மோடி அரசு ஈடுபடுகிறது.

இந்தியாவில் இயங்கிவரும் “சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின்” இயக்குநராக கே.என்.ஜேம்ஸ் இருந்தபோது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உள்ளிட்ட பல கணக்கெடுப்புகளின் தரவுத்தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இவை, மோடி அரசு முன்வைத்த பல கூற்றுகளை தகர்க்கும் வகையில் அமைந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஜேம்ஸின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.ஏ.ஜி. அறிக்கைகளை வெளியிட்ட இயக்குநர்கள் முதல் ஆர்.டி.ஐ-க்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி வரை அனைவருக்கும் இதே நிலைதான்.

அதேசமயம், பசி, பட்டினி, வறுமை, கல்வி, ஊடக சுதந்திரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின் உலகளாவிய தரவரிசை பட்டியல் அவ்வப்போது வெளியாகி மோடி அரசின் உண்மை முகம் அம்பலமாகிறது. ஆனால், தன்னுடைய ஆட்சியின் அவலநிலையை உலகிற்கு திரையிட்டுக் காட்டுவதை பாசிச மோடி அரசு விரும்பவில்லை. எனவே, இதுபோன்ற உலகளாவிய தரவரிசை பட்டியல்களை கண்காணிக்கும் பணியில் 19 ஒன்றிய அமைச்சகங்களை ஈடுபடுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் ஐ.டி. விங்கை போல செயல்படும் இந்த அமைச்சகங்களின் ஒரு பிரிவினர், பாசிச ஆட்சியின் கோரமுகத்தை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவரும் உலக தரவரிசை பட்டியல்களை தொடர்ச்சியாக கவனித்து, அதை வெளியிட்ட பதிப்பாளர்களை இந்திய தூதரகத்தின் மூலம் மிரட்டி, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தரவரிசை பட்டியலை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.

மொத்தத்தில், கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் விரோத பாசிச ஆட்சியை நடத்திவரும் மோடி கும்பலானது, அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச பொறுப்பைக்கூட துறந்துவிட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய உண்மைகளை மூடிமறைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தான் கட்டமைக்கும் கதைகளை உண்மை என்று பரப்புவதற்கான பிரச்சாரத்தையும் ஊடகங்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான தரவுகள், வெளியானால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி, நடந்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்ற காரணத்தினால், இயன்ற அனைத்து வழிகளிலும் உண்மை தரவுகள் வெளியாவதை தடுத்து வருகிறது. மோடி கும்பலின் இந்த செயலானது தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கையின் ஓர் அங்கமாகும். மோடி அரசின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள், பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது.


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 21-23 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பீகார் ஆட்சிக் கலைப்பு விவகாரம்: பா.ஜ.க.வின் பதவி வெறிக் கூத்தும்! லல்லுவின் ‘தியாகி’ நாடகமும்!!
  • பிள்ளையார் ஊர்வலம் – இராவண லீலா
    இந்து வெறியர்களின் இரட்டை நாக்கு
  • இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிப்போம்!
  • சுதேசி மோசடியும் பொருளாதாரப் பேரிடியும்
  • சுதேசி: ஆர்.எஸ்.எஸ்-இன் தேர்தல் ஆயுதம்
  • தேவர் சாதிவெறியும் குளிர்காயும் ஜெயா கும்பலும்
  • “கம்ப்யூட்டர்” யுகமா? காட்டுமிராண்டி யுகமா?
  • தெலுங்கானா போராட்டம்: அண்டப்புளுகண் அத்வானியின் வரலாற்று மோசடி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

ந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் பாசிச மோடி அரசு சமீப மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. “ஆபரேஷன் புஷ் பேக்” (Operation Push Back) என்ற பெயரில் இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்நடவடிக்கையின் மூலம் 2,000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அகதிகளை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருப்பதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகளை குறிவைத்தே ஆபரேஷன் புஷ் பேக்-ஐ மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வங்கதேச அகதிகளே ஆவர்.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, அசாம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் புஷ் பேக், மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்புகள், அகதிகள் முகாம்களில் சோதனையிடப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கைது நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

கைது செய்யப்படுபவர்களின் பயோமெட்ரிக் (Biometric) தகவல்களை சேகரித்துக் கொண்டு, துப்பாக்கி முனையில் மிரட்டி விலங்குகளைப் போல இழிவான முறையில் அண்டை நாட்டு எல்லைக்குள் விரட்டியடிக்கிறது பாசிச மோடி அரசு. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையும் ஈவிரக்கமின்றி நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது. இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்கதியாக வயல்வெளியில் நிற்கும் காணொளிகளும் புகைப்படங்களும் நெஞ்சை உலுக்குகின்றன.

குறிப்பாக, மே 12-ஆம் தேதி அன்று தென்கிழக்கு மியான்மர் கடற்கரைக்கு அருகில் இந்திய அதிகாரிகள், 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை படுகொலை செய்யும் விதமாக கப்பலில் இருந்து கடலில் தள்ளிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனிதத் தன்மையற்ற இக்கொடூர செயலுக்குப் பிறகுதான், ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இஸ்லாமிய அகதிகளை பாசிச மோடி அரசு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற்றி வருவது கவனம் பெறத் தொடங்கியது.

ஆபரேஷன் புஷ் பேக்:
தூண்டப்படும் இந்துமதவெறி-தேசவெறி

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கவெறி காரணமாக நடைபெறும் போர்கள், கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற இயற்கைவளச் சுரண்டல், உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் உலகம் முழுவதும், தங்களுடைய நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்படுவதும், பிழைப்புத்தேடி மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்வதும் ஒரு போக்காக உள்ளது.

இவ்வாறு புலம்பெயர்ந்துவரும் மக்கள் மிகக் குறைவான கூலிக்கு கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி சிறைபட்டுக் கிடக்கின்றனர். இராணுவத்தாலும், போலீசாலும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கப்படுவது; வழக்குகளை முடிக்க குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது என வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகள் வளர்ந்துவரும் சூழலில், புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள் மீதான வெறுப்புணர்வு திட்டமிட்டு தூண்டப்படுகிறது. மதவெறி, தேசவெறி, இனவெறி என பல்வேறு வகைகளில் மக்களை அணித்திரட்ட முயற்சிக்கும் பாசிஸ்டுகள், நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி, தேசவெறியை தூண்டுவது உலகம் முழுவதும் ஒரு போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பெயரில் பலரை வெளியேற்றிவருவது இதனுடன் இணைந்ததுதான்.

இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்.

இவ்வாறே, இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி கும்பலும் இஸ்லாமிய அகதிகளை காரணம் காட்டி இந்துமதவெறி-தேசவெறியூட்டி வருகிறது. “இந்துக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள், வேலைகளை பறிக்கிறார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள், இவர்களால் நாட்டிற்கு ஆபத்து” என பல்வேறு நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளின் சட்டப்பூர்வமான வடிவமே ஆபரேஷன் புஷ் பேக். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்றுக் கூறி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட விதிகளை எல்லாம் தூரவீசிவிட்டு, துளியும் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனமாக தன்னுடைய இந்துராஷ்டிரக் கொள்கையிலிருந்து இப்பாசிச நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

சான்றாக, இந்தியாவிற்குள் முறையான ஆவணங்களின்றி புலம்பெயர்ந்துள்ள அகதிகளை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், அந்நாடுகளின் ஒப்புதலுடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று “வெளிநாட்டினர் சட்டம், 1946” கூறுகிறது. மேலும், சர்வதேச சட்டங்களின்படி, அகதிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய ஓர் நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. ஐ.நா-வில் உறுப்பினராக உள்ள நாடு இவ்விதியை பின்பற்ற வேண்டும். ஆனால், மோடி அரசு இவ்விதிகளை ஓர் பொருட்டாகக்கூட மதிக்காமல் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் நடந்துகொள்கிறது.

குறிப்பாக, அசாம் மாநிலத்தின் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசானது வெளிநாட்டினர் என்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும், 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களையும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றி வருகிறது. அசாம் மாநிலத்திற்காக சிறப்பாக இயற்றப்பட்ட “குடியேறிகள் (அசாமில் இருந்து வெளியேற்றம்) சட்டம், 1950” மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்நடவடிக்கைகளில் அசாம் அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், கடந்த ஜூன் 10-ஆம் தேதி, “அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளவர்களையும், நாங்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று உறுதிசெய்தால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று அசாம் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்திருக்கிறார். அதாவது, தாங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றுவோம் என்பதையே வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

அதுமட்டுமின்றி, ஆபரேஷன் சிந்தூர் போன்று ஆபரேஷன் புஷ் பேக்கையும் தங்களுடைய தேர்தல் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க. கும்பல் விரும்புகிறது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, ஆபரேஷன் புஷ் பேக்கை பயன்படுத்தி தீவிரமான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மோடி அரசின் ஆபரேஷன் புஷ் பேக் எனும் இப்பாசிச நடவடிக்கைக்கு உறுதுணையாகவே உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அகதிகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாளும் முறையே இதனை தெளிவுப்படுத்துகிறது.

நாடுமுழுவதும் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம், ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறியது.

அதேபோல், இந்திய அதிகாரிகளால் 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் கடலில் தள்ளப்பட்ட கொடூரச் சம்பவத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.

இதன் உச்சமாக, இந்தியாவில் வசிக்க அனுமதிக் கோரி இலங்கை நாட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, “உலகம் முழுவதுமிருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது” என துளியும் மனிதாபிமானமின்றி பேசினார்.

மொத்தத்தில், ஆபரேஷன் புஷ் பேக் எனும் பாசிச திட்டத்திற்கு ஆதரவாக பாசிஸ்டுகளின் ஊதுகுழலாகவே மாறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களை
எதிர்நோக்கியுள்ள பேரபாயம்

ஆபரேஷன் புஷ் பேக் என்ற பாசிச திட்டமானது வங்கதேசம், மியான்மர் நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய மக்களுக்கும் எதிரானதாகும்.

சான்றாக, இந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் பணிபுரிந்துவந்த மூன்று மேற்குவங்கத் தொழிலாளர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) நாடு கடத்தப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால் அத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட மூன்று தொழிலாளர்களும் காணொளி வாயிலாக தங்களின் உறவினர்கள் மற்றும் மேற்குவங்க அரசிடம் தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்ததையடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

அதாவது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்று கூறி இடிப்பதைப்போல, இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டமும் ஆபரேஷன் புஷ் பேக்-இன் பின்னணியில் உள்ளது.

ஏற்கெனவே, இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய பாசிச சட்டங்களை கொண்டுவந்துள்ள மோடி அரசு, மக்கள் எதிர்ப்பினால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது, ஆபரேஷன் புஷ் பேக் மூலம் மறைமுகமாக இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும், ஆபரேஷன் புஷ் பேக் பாசிசத் திட்டத்தால் தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் அபாயமும் உள்ளது.

கூடுதலாக, ஆபரேஷன் புஷ்பேக் மூலம் தன்னுடைய பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் முகமது யூனிஸ் தலைமையிலான வங்கதேசத்தின் இடைக்கால அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அதானி குழுமமானது, வங்கதேச அரசு மின்சார விநியோகத்திற்கான 800 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. அதேபோல், பாசிச மோடி அரசு வங்கதேசத்தின் சரக்குகளை இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள் மூலம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது; ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் தொடர்ச்சியாகவே வங்கதேச இஸ்லாமிய அகதிகளை வெளியேற்றுவதில் தீவிரம்காட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி, தன்னுடைய அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகளை சகல வசதிகளுடன் பராமரித்துவரும் மோடி அரசானது, இஸ்லாமிய அகதிகளை இந்தியாவை விட்டு அடாவடித்தனமாக வெளியேற்றி வருவதற்கு அதனுடைய பிராந்திய மேலாதிக்க நலனும் முக்கிய காரணமாகும்.

பாசிச கும்பலின் இத்தகைய பாசிச நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள், எந்தவித கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்யாமலிருக்கின்றன. இது, இஸ்லாமிய அகதிகள் பிரச்சினையை தங்களுடைய அரசியல் நலனுக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர, அவர்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, இந்தியாவில் வசித்துவரும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய, ஈழத் தமிழ் அகதிகளையும், இந்திய இஸ்லாமியர்களையும் சூழ்ந்துள்ள இப்பேரபாயத்திலிருந்து அவர்களை காப்பது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிசத்திற்கு எதிராக போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, செப்டம்பர் 1-15, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 17-20 | ஜூலை 16-31, செப்டம்பர் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயின், சிறீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைகள்: பாரதீய ஜனதாவின் பழிவாங்கும் வெறியும் பாசிசத் திமிரும்
  • ஏ.வி.டி.: வாலறுந்த நரியின் ஊளை
  • மரண ஓலத்தில் ஈழம் மௌனத்தில் தமிழகம்
  • காவிரி: மீண்டும் வஞ்சனை
  • பெண்கள் இட ஒதுக்கீடு: ஓநாய்களிடம் நீதி கிடைக்குமா?
  • கண்டதேவி கோயில் தேர் விவகாரம்: மனுதர்மமே கருணாநிதியின் சமூகநீதி!
  • சுயநிதிக் கல்லூரிகள்: கட்டுப்பாடற்றக் கொள்ளைக்கு நீதிமன்ற அங்கீகாரம்
  • புதிய மாநிலங்கள் உருவாக்கம்: ஜனரஞ்சகத் திட்டமா? நயவஞ்சக மோசடியா?
  • இந்துவெறியர்கள் ஆட்சியில் தொழிலாளர் மீதான தாக்குதல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!

பிற்போக்குப் பார்ப்பனிய சாதிய படிநிலை அமைப்பைக் கொண்ட இந்திய சமூகத்தில், படிநிலைச் சாதிய அமைப்பிற்கேற்பவே மக்கள் சமூகப்-பொருளாதார நிலையைப் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற சில மாநிலங்களில் சமூக சீர்திருத்தத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றளவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை சாதிகள்-உட்சாதிகள் உள்ளன? சாதி ரீதியாக மக்கள்தொகை எண்ணிக்கை என்ன? தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிட அரசிடமோ அல்லது மாநில அரசுகளிடமோ இல்லை. பிரிட்டீஷ் ஆட்சியில் 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதுவரை இந்தியாவில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் மக்களிடம் சாதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் குறித்த தகவல்கள் மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. சான்றாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் இவ்வாறான கேள்வியை எழுப்பியுள்ளது என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி.

இந்தப் பின்னணியில்தான், இந்தியாவில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுப்பப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய வினையாற்றியது. ராகுல்காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஆயுதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னெடுத்தார். இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஜனதா தளம் போன்ற கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன. தெலுங்கானாவிலும், பீகாரிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இவை பிற மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தின.

எனினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு அப்போது வெளியிடவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருபவர்களை “நகர்ப்புற நக்சல் மனநிலை கொண்டவர்கள்” என்றும், “இந்தியாவை பிளவுபடுத்துபவர்கள்” என்றும் ஏப்ரல் 28, 2024 அன்று பத்திரிகையாளார் சந்திப்பின்போது வெறுப்பைக் கக்கினார் மோடி. 23 செப்டம்பர், 2021-இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, ஒன்றிய அரசு.

ஆனால், திடீரென்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து “அந்தர் பல்டி” அடித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சாதிவாரிக் கணக்கெடுப்புடனான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஜம்மு காஷ்மீர், உத்தராக்கண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகிற அக்டோபர் 2026-லிருந்தும், இதர மாநிலங்களில் மார்ச் 1, 2027-லிருந்தும் தொடங்கப்படும் என்று ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் இப்பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் செயற்பாட்டாளார்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

யூ-டர்னா?” செயலுத்தியா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. பெரும்பாலான முதலாளித்துவ ஊடகங்கள் ஒன்றிய அரசின் இந்த முடிவை “யூ-டர்ன்” என்று அழைக்கின்றன. பீகாரில் அடுத்த ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதாலேயே மோடி அரசு யூ-டர்ன் அடித்திருப்பதாக கருத்து தெரிவிக்கின்றன.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பானது பீகார் தேர்தலுக்கானது என்பது ஒரு பகுதி உண்மை மட்டுமே. வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கு முதுகெலும்பாக இருந்த நிலவுடைமை சாதிகள் தற்போது இப்பாசிச கும்பலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், பாசிச கும்பலின் சமூக அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த மோடி அரசு எடுத்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், ஜாட் சாதியினரை அரசியல் ரீதியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திருப்பியது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஜாட் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியது. தங்களது சாதிய அடித்தளம் பறிபோய்விடும், சாதிய-சனாதனக் கட்டமைப்பு உடைக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது.

அதேபோல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மோடி அரசின் சதியால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது போன்றவை ஜாட் சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மேலும் அதிகரித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டோம் என காப் பஞ்சாயத்தில் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களில் வாழும் இச்சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8.25 கோடியாகும். இதன் எதிரொலியாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.க. 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு விழுந்த மிகப்பெரும் அடியும் சரிவுமாகும்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளில் தீவிரமாக மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக இந்திய விவசாயத்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், விவசாயத்தை நம்பியிருந்த நிலவுடைமை சாதிகள் அரசு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, அரசு வேலைகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான போராட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.

மகாராஷ்டிராவில் 2016-ஆம் ஆண்டிலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் மராத்தியர்களை குன்பி சாதியாக வகைப்படுத்தி ஓ.பி.சி. பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனோஜ் ஜாரங்கே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டத்திற்கு அடிபணிந்த பா.ஜ.க. தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 72,000 பணியிடங்களை நிரப்புவதாகவும், 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தது.

மராத்தியர்கள் மட்டுமின்றி, குஜராத்தில் பட்டிதார்கள் (படேல்கள்), ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் மற்றும் ஹரியானாவில் ஜாட்டுகள் போன்ற சாதியினரும் இத்தகைய இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில், 1981 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டபோது அதனை எதிர்த்து படேல் சமூகத்தினர் குஜராத் மாநிலத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அதே படேல் சமூகத்தினர் 2015-க்கு பிறகு தங்களையும் ஓ.பி.சி. பிரிவின்கீழ் சேர்க்க வேண்டும், தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இச்சாதிகள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களாக இருந்தாலும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பார்ப்பனியர்களுக்குப் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, வடமாநிலக் கட்சிகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற குமுறலும் இவர்களிடையே இருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இவர்களிடம் உள்ள இடஒதுக்கீட்டு மனநிலை ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.விற்கு எதிராக வெடிக்கும் அபாயம் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்திருக்கிறது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் இதர மாநிலக் கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான நிர்பந்தமும், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பீகாரில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியிருப்பதும், இடஒதுக்கீடுக் கோரி போராடும் சாதிகளிடமும், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடமும் தாக்கம் செலுத்துகின்றன.

எனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது வரலாற்று நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். மாற்றியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பானது பின்தங்கிய மக்களின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-இன் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள்தொகையில் சிறு கும்பலான குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ‘இந்து ஒற்றுமை’ என்று பேசிவருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல். ஆட்சி-அரசின் உயர் பதவிகளையும், சமூகத்தின் சொத்துகளில் 40 சதவிகிதத்தையும் அனுபவிக்கிற, இச்சிறு கும்பலுக்குப் பாதகம் ஏற்படும் என்பதாலே இவ்வளவு காலம் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் இடஒதுக்கீட்டையும் எதிர்த்து வருகிறது காவி கும்பல்.

தற்போது, தனது குஜராத்தி-மார்வாரி-பார்ப்பனிய-பனியா மேலாதிக்கத்திற்குப் பக்கபலமாக இருந்த ஜாட், படேல் மற்றும் மராத்தியர்கள் போன்ற சாதியினரிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வு உருவாகிவருவதால் வேறுவழியின்றி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

சாதிய முனைவாக்கத்திற்கான கருவி

சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறினாலும், உண்மையில் தங்களது சமூக அடித்தளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கருவியாக சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம்.

மக்களிடம் சாதி இல்லை, ‘இந்து’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் மக்களைத் திரட்டுவதாக ஆர்.எஸ்.எஸ். கூறினாலும்,  சாதிய அமைப்புகளில் ஊடுருவி தங்களுக்கான ஜந்தாம் படைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்திலும், தென்மாவட்டங்களிலும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அப்பகுதிகளில் சாதியத் தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறித்து “புதிய ஜனநாயகம்” தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் 2024-இல் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, தாழ்த்தப்பட்ட மக்களைப் பல்வேறு துணைப் பிரிவுகளாகப் பிரித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சிதைத்து, இறுதியில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அபாயம் கொண்டது என்று 2024 செப்டம்பர் மாத புதிய ஜனநாயக இதழில் வெளியான “உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம், ஓட்டுக் கட்சிகள் இவ்வதிகாரத்தை தனது வாக்குவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தி மக்களைக் கூறுபோடும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மோடி அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்திருப்பதை இவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தி, தனது சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி ரீதியாக அணிதிரட்டுவதற்கு ஏதுவாக, அவர்களை பல்வேறு துணைப் பிரிவுகளாக கூறுபோடும் அபாயம் உள்ளது.  மக்களை பல்வேறு சாதிக் குழுக்களாகப் பிரித்து, ஒருவருக்கொருவரை எதிராக நிறுத்தி, சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். அதன் மூலம், தங்களது, குஜராத்தி-மார்வாரி-பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சதித்திட்டமே பாசிச கும்பலின் இந்த திடீர் பல்டிக்கு பின்னாலிருக்கிறது.

அதுமட்டுமின்றி, தற்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடத்தப்படுவதால் புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் அபாயமும் சேர்ந்திருக்கிறது. அவ்வாறு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என மத அடிப்படையில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சாதிகள் அடிப்படையிலும் காவி கும்பல் இந்தியாவைக் கூறுபோடும்.

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தங்களது இந்துராஷ்டிரத்திற்கான பாதையை செப்பனிட்டுக் கொள்வதற்கான கருவியாகவே மக்கள்தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பை பயன்படுத்தப் போகிறது.

மேலும், மோடி அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பினால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகள் பா.ஜ.க-வுடன் நெருக்கமாவதற்கும், பா.ஜ.க. கூட்டணி வலுப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று பேசி வருகிற மாநிலக் கட்சிகளின் அடித்தளத்தை அரித்து, அவற்றை பா.ஜ.க-வின் படைவரிசையில் சேர்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக சாதிவாரிக் கணக்கெடுப்பு இருந்தது. மோடி அரசின் பத்தாண்டுகால ஆட்சி மீதான வெறுப்பு ஒருபுறம் இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முக்கியமான ஆயுதமாக இருந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பறித்துவிட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் நிராயுதபாணியாக நிற்கின்றனர்.

ஆனால், இதை உணராத எதிர்க்கட்சிகளோ தங்களின் கோரிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பணிந்துவிட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைகின்றனர். ஒன்றிய அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை ஆதரிக்கின்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதோடு, கணக்கெடுப்பிற்கு கால நிர்ணயம் செய்யாமல் இருப்பது குறித்து விமர்சித்துள்ளார்.

ஆனால், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் திடீரென அடித்த அந்தர் பல்டிக்கு பின்னால் இந்தியாவையே கூறுபோடும் அபாயமிக்க சதித்திட்டம் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. பாசிசத்திற்கு எதிரான  செயல்திட்டமின்றி இருப்பதும், மாற்று அரசியல்-பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் இருப்பதுமே எதிர்க்கட்சிகளின் இந்த அரசியலற்றப் போக்கிற்கும், பாசிச சக்திகளை ஜனநாயகப் பூர்வமாக அணுகுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. எனவேதான், பா.ஜ.க. முன்னெடுக்கும் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரிக் கணக்கெடுப்பு என அனைத்தையும் ஆதரிப்பதோடு மக்களையும் அதற்கு பலி கொடுக்கின்றனர்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram