Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 42

நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது | கோலின் கொன்சால்வே

நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது
– உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோலின் கொன்சால்வே

ன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நவம்பர் 17 அன்று நடைபெற்றது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

புதிய ஜனநாயகம் | மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு

உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாள்

40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் ரசியப் புரட்சி தினத்தன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புதிய ஜனநாயகம் முதல் இதழ் வெளியானது. அன்று முதல் இன்றுவரை, 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து வெளிவரும் ஒரே அரசியல் இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றளவும் தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்கத்தின் போர்வாளாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது.

இந்த வெற்றிகள் பெருமைகளுக்குப் பின்னே பலநூறு தோழர்களின் அயராத உழைப்பு பொதிந்துள்ளது. மார்க்சிய லெனினிய இயக்கத் தோழர்கள் மற்றும் திராவிட, தலித்திய, தமிழின அமைப்புகளின் தோழர்கள், விவசாய சங்க தொழிற்சங்கத் தோழர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் ஆதரவோடுதான் இந்த வரலாற்றுப் பணியை இதுகாறும் தொடர்ந்து வருகிறோம். உங்களின் ஆதரவில்லாமல் இது சாத்தியமில்லை.

இந்த நாற்பது ஆண்டுகளில் நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேலும் மேலும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளது. இந்த எல்லா காலங்களிலும் புதிய ஜனநாயகம் உழைக்கும் மக்கள் பக்கம் நின்று, சமரசமின்றி குரல் கொடுத்து வந்துள்ளது. மக்களின் துன்ப துயரங்களுக்கான தீர்வு இந்த போலி ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்கு வெளியே இருப்பதைத் தொடர்ந்து உணர்த்தி வந்துள்ளது.

இன்று பாசிச அபாயம் மேலோங்கி வரும் காலகட்டம், பாசிச பா.ஜ.க கும்பலுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள்தான், பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஆயுதம் என்பதை புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு, நாடு முழுவதும் நடக்கும் உழைக்கும் மக்களின் எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு கரங்களை நீட்டி வருகிறது, வழிகாட்டி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் இணைக்கிறது.

அதன்மூலம் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. இன்றைய காலகட்டம் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் விதமாக இந்த மாற்றை விரிவாக்கியும் வருகிறது.

இச்சூழலில், ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக பாசிசத் தாக்குதல்களை தொடுத்துவரும் பாசிசக் கும்பல் கடந்தாண்டு “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தை” நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், பத்திரிகைகளுக்கு நிர்வாக ரீதியாக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இத்துடன், 1990-களிலிருந்து தனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர், அச்சு ஊடகங்கள் குறிப்பாக, புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் சிறு பத்திரிகைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அச்சுத்தாள் உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றால் பல வார இதழ்கள், மாத இதழ்கள் தமது விற்பனைப் படிகளைப் பெருமளவு குறைத்துவிட்டன. இதற்கு புதிய ஜனநாயகம் இதழும் விதிவிலக்கல்ல.

புதிய ஜனநாயகம் இதழை முறையாக மாதந்தோறும் உரிய தேதியில் வெளியிடுவதோடு, இன்றைய காலகட்டத்தின் தேவைக்கேற்ப புதுப்பொலிவுடனும் கொண்டுவர வேண்டியுள்ளது. இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களிடம் புதிய ஜனநாயகம் இதழின் புரட்சிகர அரசியலை பரப்ப வேண்டியுள்ளது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் எமக்கு இவை இமாலயப் பணிகளாகும்.

இத்தனை ஆண்டுக் காலமும் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையை பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து எம்மால் நடத்திவர முடிகிறதென்று சொன்னால், அதற்கு வாசகத் தோழர்களின் பேராதரவுதான் முதன்மையான காரணமாகும். அந்த நம்பிக்கையில் எமது பணிகளைத் தொடர்கிறோம். நிதி நெருக்கடியை ஈடுசெய்ய சந்தா மற்றும் நன்கொடை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

  • உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாளான புதிய ஜனநாயகம் இதழின் சந்தா மற்றும் நன்கொடை திரட்டும் பணி வெற்றியடைய தோள் கொடுங்கள்!
  • சந்தா செலுத்தி இதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
  • தங்களது நண்பர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்!
  • புதிய ஜனநாயகம் இதழுக்கு நன்கொடை அளித்து ஆதரியுங்கள்!

புரட்சிகர வாழ்த்துகள்!

தோழமையுடன்,
இரா.சண்முகராசு
(ஆசிரியர்)

***

ஆண்டுச் சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டுச் சந்தா, ஈராண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.

ஆண்டுச் சந்தா: ரூ.360

இரண்டாண்டுச் சந்தா: ரூ.720

ஐந்தாண்டுச் சந்தா: ரூ.1,800

அச்சிதழ் ஒரு படி: ரூ.35 (சந்தா இல்லாமல் ஒரு இதழை அஞ்சல் மூலம் பெறுவதற்கான தொகை)

மின்னிதழ் ஒரு படி: ரூ.30 (ஒரு இதழைப் பெறுவதற்கான தொகை)

G-Pay மூலம் பணம் கட்ட: 94446 32561

குறிப்பு: ஜி-பே (G-Pay) முறையில் பணம் செலுத்துபவர்கள், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் சாட்) முகவரியையும் சேர்த்து எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

வங்கி கணக்கு விவரம்:

Account No: 10710430715
IFS Code: SBIN0001444
Account Name: PUTHIYA JANANAYAGAM
Bank: SBI
Branch: Kodambakkam

தொடர்பு விவரங்கள்:

தொலைபேசி / வாட்ஸ்-அப்: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

வினவு தளத்தில் மின்னிதழ் கிடைக்கும்: www.vinavu.com

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்”

மோடியின் 3.0 ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகளாக ரூ.15 லட்சம் கோடிக்கான உள்கட்டுமானத் திட்டங்கள், 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான ஆயுள் காப்பீடு போன்றவற்றை பட்டியலிட்டு “விக்சித் பாரதத்திற்கான பாதையை வகுத்தல்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என 100 நாள் ஆட்சியை சாதனை எனக் கொக்கரிக்கிறது பாசிசக் கும்பல்.

ஆனால், மோடியின் முதல் 100 நாள் ஆட்சி “யூ-டர்ன்” (U-turn) அடிக்கிறது என முதலாளித்துவ ஊடகங்களே பாசிசக் கும்பலை எள்ளி நகையாடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் ‘உடைக்க முடியாத’ பிம்பமாக சித்தரிக்கப்பட்ட மோடி பிம்பம் சரியத் தொடங்கியிருப்பதாகவும், மோடியின் 3.0 ஆட்சி திசையற்றுப் பயணிப்பதாகவும் முதலாளித்துவப் பத்திரிகைகள் பலவாறு கருத்து தெரிவிக்கின்றன.

உண்மையில், கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் என இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களை தடாலடியாக அமல்படுத்தி வந்த பாசிசக் கும்பலுக்கு தற்போது மோடியின் 3.0 ஆட்சியில் சில திட்டங்களை பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிப்பெறுவோம் என்று கூச்சலிட்டு வந்த பாசிசக் கும்பலால் தனிப்பெரும்பான்மையை கூட பெறமுடியாத அளவிற்கு மக்கள் அத்தேர்தலில் அடி கொடுத்தனர். தனது மக்கள் அடித்தளம் சரிந்துவருவதை உணர்ந்துக்கொண்ட பாசிசக் கும்பல் அதனை சமாளித்துக்கொள்ள அடுத்தடுத்து சில பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று இறுமாந்திருந்து அதனை செய்துமுடித்த பா.ஜ.க., தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்துடன் சில சலுகைகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது; ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கொள்ளைப்புற வழியாக அரசுத் துறைகளில் நுழைக்கின்ற “லேட்டரல் என்ட்ரி” (Lateral entry) அறிவிப்பை அறிவித்த அடுத்த நாளிலேயே திரும்பப்பெற்றது; இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட வஃக்ப் வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது; ஒன்றிய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து மோடி பேசியது; சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவளித்திருப்பது; சித்தாந்த ரீதியாக இடஒதுக்கீட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு “கிரிமீலேயர் முறையை” அமல்படுத்தமாட்டோம் என்று கூறியிருப்பது; யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை வரைவு மசோதாவை எதிர்ப்பினால் திரும்பப்பெற்றது என அடுத்தடுத்து பல விடயங்களில் பாசிசக் கும்பல் பின்வாங்கிக்கொண்டும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டும் இருக்கிறது.

மோடி அரசின் இத்தகைய பின்வாங்கல்களைத்தான் யூ-டர்ன் என முதலாளித்துவ ஊடகங்களும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றன. கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதும் வலிமையான எதிர்க்கட்சி இருப்பதும்தான் மோடியின் இத்தகைய பின்வாங்கல்களுக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும் சில முதலாளிய ஊடகங்களும் முன்வைக்கின்றனர். ஆனால், பாசிசக் கும்பலின் இந்த பின்வாங்கல்களுக்கு பாசிஸ்டுகளின் வாழ்வையும் இருப்பையும் உத்திரவாதப்படுத்துகிற, பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பாக உள்ள மக்கள் அடித்தளம் சரிந்துவருவதே முக்கிய காரணம்.

அதேபோல், பாசிசக் கும்பல் ஆளும் மாநிலங்களிலும், தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களிலும் காவி – கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கப்படுத்துகிறது.

குறிப்பாக, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்கள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் போன்றவை பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளின. இதன்விளைவாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு பலத்த அடி விழுந்தது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறை அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டாலும், மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே நீட் தேர்வு மோசடிகள் அம்பலமாகி, அதற்கு எதிராக வட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தமிழ்நாட்டில் இருந்த நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நாடுமுழுவதும் பற்றி பரவத் தொடங்கியது. அதற்கடுத்து பாசிசக் கும்பல் கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நடந்த வழக்குரைஞர்கள் போராட்டம், லடாக் மக்களின் மாநில உரிமைக்கான போராட்டம், பில் பழங்குடி மக்களின் பில் பிரதேச தனிமாநிலக் கோரிக்கை போராட்டம், மணிப்பூர் காடுகளில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்க்கும் குக்கி பழங்குடி மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களும் பாசிசக் கும்பலை பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தது.

மோடி கும்பல் மூன்றாவது முறை ஆட்சி அமைப்பதற்கு முன்னரே, நீட் மோசடிகளுக்கு எதிராக வெடித்த மாணவர்கள் போராட்டம்

ஆகவே, பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போராட்டங்களும்தான் பாசிசக் கும்பலின் பின்வாங்கல்களுக்கு காரணமாக உள்ளது. ஆனால், இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தற்போதுவரை கூட்டணி சார்பாக பா.ஜ.க-விற்கு எதிரான பொதுக் கொள்கையையும் திட்டத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள், மோடியின் பின்வாங்கல்களுக்கு தாங்கள்தான் காரணம் என தம்பட்டம் அடிக்கின்றன. மேலும், பாசிசக் கும்பலின் மக்கள் அடித்தளத்தை சரிப்பதற்கு சிறு துரும்பையும் நகர்த்தாத காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், இந்தத் தற்காலிக பின்வாங்கலை பாசிச அபாயம் நீங்கிவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

பாசிசக் கும்பல் வேறுவழியின்றி சில பின்வாங்கும் நடவடிக்கைகளை கொண்ட தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டாலும் அது தற்காலிகமானதும் நயவஞ்சகமானதுமாகும். ஏனெனில், ஒருபுறம் பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மற்றொருபுறத்தில் இந்துராஷ்டிரத்தின் தொடக்கமாக, ஓர் கும்பலாட்சியை நிறுவதற்கான ஆயத்த வேலைகளை பாசிசக் கும்பல் செய்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, இந்தியாவில் காவி-போலீசு கும்பலாட்சியை நிறுவும் வகையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வழக்குரைஞர்களின் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தியுள்ளது. மேலும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டங்களாக சுருக்கி, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகள்-காண்ட்ராக்ட் முதலாளிகள்-போலீசு கும்பலாட்சியின் கீழ் தொழிலாளர்களை தங்களது தொழிற்சாலைகளிலேயே கொத்தடிமைகளாக்கத் துடிக்கிறது.

அதேபோல், பாசிசக் கும்பல் ஆளும் மாநிலங்களிலும், தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களிலும் காவி – கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கப்படுத்துகிறது. பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் உச்சநீதிமன்றத் தடைக்குப் பிறகும் ‘ஆக்கிரமிப்பு’ என்று இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது; வங்கதேச எழுச்சியின்போது, அங்கு இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டு அசாமிலும் திரிபுராவிலும் இஸ்லாமிய சிறுபான்மையினர் மீது திட்டமிட்டத் தாக்குதலை அரங்கேற்றியது; உத்தரப்பிரதேசத்தில் கன்வர் யாத்திரையை முன்னிட்டு கடைகளின் பெயர்ப்பலகையில் உரிமையாளர்-பணியாளர்கள் பெயர் எழுதுவதைக் கட்டாயமாக்கியது; உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரமான “தூக் (துப்புதல்) ஜிஹாத்” என்பதை அடிப்படையாக வைத்து புது வழிக்காட்டுதல்களை பிறப்பித்துள்ளது; ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இஸ்லாமியர்களை சுட்டுக் கொல்வது; தாழ்த்தப்பட்ட பெண்களை ஆதிக்கச் சாதி இந்துவெறியர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்வது அதிகரிப்பது என இந்துத்துவத் திட்டங்களும் அட்டூழியங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதேபோல், 2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பதே கல்வியிலும் விவசாயத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான திட்டமாகவே உள்ளது. மேலும், நிதிநிலை அறிக்கையில் பல்கலைக்கழக மானியக் குழு, அங்கன்வாடி, சுகாதாரம், எரிவாயு மானியம், உர மானியம், பயிர் வளார்ப்பு என உழைக்கும் மக்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்கியுள்ள ஒன்றிய அரசு, ரூ.10,000 கோடி மக்கள் வரிப்பணத்தை வேலைவாய்ப்பை உருவாக்குவது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. சொந்த நாட்டு மக்களை ஜி.எஸ்.டி. மூலம் சுரண்டுகிற மோடி அரசு வெளிநாட்டுக் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 40 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கின்ற வருமானத்திற்கு விதிக்கக்கூடிய ஏஞ்சல் வரி 31 சதவிகிதத்தை நீக்கியிருக்கிறது; மருத்துவ கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காகவே, 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தக்குடிமக்கள் ஆறு கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கார்ப்பரேட் சேவையையே தங்களது நூறுநாள் ‘சாதனை’களாக பீற்றிக் கொள்கிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபுறத்தில், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. எனவே, இதனை பாசிச அபாயம் நீங்கிவிட்டது என்பதுபோல எதிர்க்கட்சிகள் மக்களிடம் சித்தரித்து பாசிச அபாயத்திலிருந்து மக்களைத் திசைதிருப்புவதானது நிராயுதபாணியான மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதிலேயே சென்று முடியும். அது மீண்டும் பாசிஸ்டுகள் வெற்றி பெறுவதற்கே வழிவகுக்கும்.

ஆகையால், பாசிசக் கும்பலின் பின்வாங்கும் நடவடிக்கைகளை கொண்ட தற்காப்பு நிலையை எதார்த்தமாக பரிசீலித்து அதற்கான மாற்று திட்டங்களை முன்வைப்பதே பாசிசத்தை நேரடியாக எதிர்ப்பதற்கு வழிவகுக்கும். குறிப்பாக, உயர் நடுத்தர வர்க்கத்தினர், பழங்குடியின மக்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், பாசிஸ்டுகளின் அடித்தளமாக இருந்துவந்த ஒரு பிரிவினர் என இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் பாசிசக் கும்பலுக்கு எதிரான எதிர்ப்பு மேலோங்கியுள்ளது. இதனை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தற்போது தற்காப்பு நிலையிலுள்ள பாசிசக் கும்பலை பின்வாங்கி ஓடச் செய்ய முடியும். அவ்வாறு மக்களை ஒன்றிணைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து செயல்படுவதை நோக்கி இந்தியாவிலுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் பாசிச எதிர்ப்பாளர்களும் முன்வருவதே தற்போதைய எதார்த்தத் தேவையாக உள்ளது.


அப்பு

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



COP26: முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்! | மீள்பதிவு

ஜர்பைஜான் தலைநகர் பாகுவில் (Baku) பருவநிலை மாற்றம் தொடர்பான உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 நவம்பர் 11 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது நவம்பர் 22 வரை பாகு மைதானத்தில் நடைபெறும். இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப்போவதாக வெற்றுச் சவடால் அடிக்கும் COP மாநாடுகளை முதலாளித்துவ அறிஞர்களே கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதில் நடைபெறும் கேலிக்கூத்துகள் ஏராளம். சான்றாக, உலக அளவில் அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான கோக்கோ கோலா 2022 ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP27-க்கு ஸ்பான்சர் செய்ததைக் கூறலாம்.

COP என்பது ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலாளிகளின் அரட்டை மடமாகவே இருந்து வருகிறது. COP எனும் இந்த ஏமாற்று நாடகத்தை அம்பலப்படுத்தி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத “புதிய ஜனநாயகம்” இதழில் வெளிவந்த கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

***

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26):
முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

‘‘புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிருமுறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிகழும்’’ – என எச்சரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது. இவ்வறிக்கையும் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக நடந்துவரும் பேரிடர்களும் இப்புவிக்கோளத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடிய அக்கறையுணர்வை மக்கள் மனதில் தூவியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜுலை மாதங்களிலும்கூட பருவநிலை மாற்றத்தின் கோரமான, மிகச் சமீபத்திய விளைவுகளை உலக நாடுகள் சந்தித்திருக்கின்றன. மேற்கு கனடா மற்றும் வடமேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை கொடூரமான வெப்ப அலைகள் தாக்கின. ஒரு மதிப்பீட்டின்படி, இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. சீனாவின் ஹுனான் பகுதியில் அம்மாகாணத்தின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் நான்கு நாட்களில் பெய்து வெள்ளக்காடாக்கியது. தெற்கு ஐரோப்பா பெரும் காட்டுத்தீயுடன் போராடியது. கிரீன்லாந்தில் முதல் முறையாக பனிப்பொழிவுக்கு மாறாக மழை பெய்தது. இந்தியாவிலும் கேரளா, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில்தான், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான 26-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு (COP26) உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் புவியின் மீது அக்கறையுள்ள இளம் தலைமுறையினரால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இரண்டு வாரங்களுக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் 200 நாடுகளில் இருந்து 30,000 பிரதிநிதிகள், 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

‘சூழலியல் அக்கறை’, முதலாளித்துவ அரசுகளுக்கு முதல்முறை வருவதல்ல!

COP26 மாநாடு, 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ‘காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கை’-இன் (UNFCCC) கீழ் நடைபெறும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகக்கூடிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ்-ஆக்சைடு உள்ளிட்டவை) இந்த நூற்றாண்டின் பாதிக்குள் உலகளாவிய அளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருதல்; அதன் மூலம் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், உமிழ்வுகளை குறைப்பதற்கும் ஏழை நாடுகளுக்கு, பணக்கார – வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்ற 2009-ம் ஆண்டு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடு இம்மாநாடு நடைபெற்றது.

இந்த ‘குறிக்கோள்கள்’ ஒன்றும் புதியவையுமல்ல. இவற்றை அடைவதற்காக நடத்துவதாகச் சொல்லப்படும் இதுபோன்ற மாநாடுகளும் புதியவையல்ல. இது ஐ.நா.வின் 26-ஆவது மாநாடாகும் (COP26). வரன்முறையற்ற கனிமவளச் சுரண்டல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, சுற்றுசூழலை நாசம் செய்யும் நாசகர தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் கழிவுகள் என பருவநிலை மாற்றத்திற்கு மூலக்காரணமே சூழலியலைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தயாரில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையும் இலாபவெறியும்தான்.

முதலாளிகளின் நலனைக் கட்டிக் காக்கும் அரசுகளின் பிரதிநிதிகளோ தாங்கள் சூழலியல் சிதைவைப் பற்றி பெரிதும் ‘கவலைப்படுவதாகவும்’ அதனை சரிசெய்வதற்காக ‘பெருமுயற்சியெடுத்து’ வருவதாகவும் ஒவ்வொரு முறையும் உலக மக்களை ஏய்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதில் கூடிப் பேசி கலைவதும் வழக்கம். இதுவரை போடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இலட்சணத்தைப் பற்றி பரிசீலித்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

1997-ல் முதன்முதலாக, கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) போடப்பட்டது. இந்த உடன்படிக்கை, ‘‘தொழில்துறையில் வளர்ந்த‌ ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 37 நாடுகளே வரலாற்றுரீதியாக புவி வெப்பமயமாதலுக்கு காரணம். எனவே அவை உடனடியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்’’ என்று கூறியது. பெரும்பாலான நாடுகள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தன. ஆனால், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டதால் ஓராண்டில் இவ்வொப்பந்தம் தன்னியல்பாக காற்றில் கரைந்தது.

அதன்பிறகு, 2015-ல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 192 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமானது, ‘‘பூமியின் வெப்ப அதிகரிப்பை 2 டிகிரிக்குள் வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்திற்கான நிதியாக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறியது. இது இரண்டுமே தற்போது நடைபெற்ற COP26 மாநாடுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், தற்போது நடந்துள்ள COP26 மாநாட்டின் முடிவுகளையும் உள்ளபடியே இவர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடத்தான் போகிறார்கள் என்பதற்கு இவர்களது கடந்தகால மாநாடுகளே சான்று. எனினும் தற்போது மாநாடு நடந்த விதம் அதில் தலைவர்கள் ஆற்றிய உரை, நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்த மாநாட்டு முடிவுகள் எவ்வாறு வெறும் பகட்டு ஆரவாரங்களாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.

ஒப்பந்தங்களல்ல.. கழிப்பறை காகிதங்கள்!

இந்த மாநாட்டில் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கனடா, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தோனேசிய அரசு அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தோனேசிய அமைச்சர் சிடி நுர்பயா பாகர், ‘‘எங்களால் செய்யமுடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது. இந்தோனிசியாவிற்கு ‘வளர்ச்சி’தான் பிரதானமானது’’ என போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாகவே பேசியுள்ளார்.

உலகத்தின் நுரையீரலான அமேசான் காடுகளை அதே ‘வளர்ச்சிப் பணிகளுக்காக’ அழித்து வரும் பிரேசிலும் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் பொல்சனாரோ ஆட்சியில், கடந்த ஆண்டில் மட்டும் இலண்டன் நகரை விட ஏழு மடங்கு பெரிய அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும், தற்போதுள்ள அரசும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான எந்த அக்கறை கொள்ளவில்லை என்பதும், இத்தீர்மானங்கள் – ஒப்பந்தங்கள் நடைமுறைக்குப் போவதன் மீது நமக்கு கேள்வியை எழுப்புகின்றன.

ஏற்கெனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், இதே போல் 2030-க்குள் காடழிப்பை நிறுத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் 41 சதவிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டிற்குள்ளான பத்து ஆண்டுகளில், சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.5 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் 2015-லிருந்து 2020 வரையான ஐந்தாண்டுகளில் – அதாவது பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு – சுமார் 1 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை முதலாளித்துவ நாடுகள் வெறும் கழிப்பறைக் காகிதமாகத்தான் கருதுகிறார்கள் என்பதற்கு இவையே சான்று.

000

கிளாஸ்கோவில் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட COP26 பருவநிலை மாநாடு.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே, வாக்குறுதி கொடுக்கத் தயங்கி தங்களது இலக்குகளைத் தெளிவாக முன்வைக்காமல் இருந்தபோது, நமது ‘56 இன்ஞ்’ மோடி அரசோ, தைரியமாக ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பது உலகநாடுகளால் பாராட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. அத்திட்டத்திற்குப் ‘பஞ்சாமிர்தம்’ (ஐந்து அம்ச திட்டம்) என பெயர்சூட்டியது இந்திய அரசு. ‘‘2070-ம் ஆண்டு இந்தியா பூஜ்ஜிய உமிழ்வை அடையும்; 2030-ம் ஆண்டிற்குள் தனது ஆற்றலின் 50 சதவிதத்தை புதுப்பிக்கத்தக்க வளத்திலிருந்து பெறும், புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தியின் திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம்; 2030-ம் ஆண்டு முடிவுக்குள் ஒரு பில்லியன் டன் அளவுக்கு  கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்போம்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2005-உடன் ஒப்பிடும்போது கார்பன் தீவிரத்தை 45% குறைப்போம்’’ – என ஐந்து வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.

இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தித் திறன் 388 ஜிகா வாட்டாகத்தான் உள்ளது. ஆனால், மோடியோ 2030-ம் ஆண்டிற்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து  மட்டும் 500 ஜிகா வாட் திறனை பெறப்போவதாக கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 50 சதவிகிதம் புதைபடிம எரிபொருளல்லாத மின் உற்பத்தியின் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், 2030−ஆம் ஆண்டுக்குள் 1000 ஜிகா வாட்-டுக்கும் அதிகமான மின்னுற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துவிடுமா என்ன?

அது சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இருந்தால் தானே இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும். மோடியின் வரலாற்றிலேயே அந்தப் பழக்கம் கிடையாதே. ஆக, இதுவும் ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ கட்டியெழுப்பப்பட்ட கதைதான்.

சூழல் அழிப்பு குற்றவாளிகளுடன், சூழலியல் ‘நீதி விசாரணை’

ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது , COP26-ல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கெடுத்தது தெரியவந்ததுள்ளது. உலக அளவில் 71 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு, வெறும் 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் காரணமாகின்றன. யார் இந்த சுற்றுசூழல் சீர்குலைவுக்கு முக்கியமான காரண கர்த்தாக்களோ அவர்களோடு ஆலோசனை நடத்தித்தான் ‘பூமியை பாதுகாப்பது’ பற்றி திட்டம் வகுத்திருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியா, சீனா உள்ளிட்டு அதீத நிலக்கரி பயன்பாட்டாளர்களின் அழுத்தத்தால், மாநாட்டின் வரைவறிக்கையில் நிலக்கரி பயன்பாட்டை ‘‘படிப்படியாக நிறுத்த வேண்டும்’’ என்ற சொல்லுக்கு பதிலாக  ‘‘படிப்படியாக குறைக்க வேண்டும்’’ என்று மாற்றப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்களே கடுமையாக விமர்சித்தன. மொத்தத்தில், இம்மாநாடு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்பட்ட ஒரு கபட நாடகமே என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளே!

கண்துடைப்புக்கான வாய்ச் சவடால் இலக்குகள்

புதைபடிம எரிசக்தியைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ (NDC-Nationally determined contributions) COP26-இன் குறிக்கோளாகச் சொல்லப்பட்ட 1.5 டிகிரி வெப்பநிலையில் புவியை பராமரிப்பது என்ற திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாதித்து மாற்றியமைக்கும் வழக்கம் இருந்துவந்தது. இந்த மாநாட்டில்  ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ புதியதாக தீர்மானிக்கப்பட்டன. ஆனால் அந்தந்த நாடுகள் தமது பங்களிப்பை  முழுமையாக நிறைவேற்றினாலும் கூட 2.4 டிகிரிக்கு மேலாக வெப்பநிலை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த 2.4 டிகிரி வெப்பநிலை உயர்வினால் உலகில் பேரழிவுகள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலகின் வெப்பநிலை வெறும் 2 டிகிரி உயர்ந்தாலே ஒரு பில்லியன் மக்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையே NDC-க்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற வழமையான முறையை மாற்றி 2022-ல் 27-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் இதனை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

புவியைக் காக்க, முதலாளித்துவத்தின் கழுத்தை நெறி!

COP26 மாநாட்டை எதிர்த்து கிளாஸ்கோவில் மக்கள் பேரணியாக செல்கிறார்கள்.

COP26 மாநாடு ஒரு ஏமாற்று நாடகம் என்று உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் களச் செயல்பாட்டாளர்கள் மாநாடு துவங்கும் முன்னரே கூறிவந்தனர். இத்தகைய மாநாடுகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் கழிவறைக் காகிதமாகவே அனைத்து நாடுகளின் அரசுகளால் கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியே இவ்வாறு கூறுகின்றனர். முதலாளித்துவ நாடுகள் தங்கள் இலாப வெறியையே முதன்மையாகக் கருதி சூழலியலின் மேல் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்களின் நோக்கமெல்லாம் தங்களது முதலாளிகளின் இலாபத்தை உறுதிப்படுத்துவது மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.

உலகின் பலநாடுகளையும் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஒரு இலட்சம் பேர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டை அம்பலப்படுத்தி அந்நகரின் வீதிகளில் திரண்டு மிகப்பெரிய பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீதிகளில் இறங்கினர். தங்களது கண்டனக் கூட்டத்தில் COP26 மாநாட்டில் கூடியிருந்த அரசு பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் COP26 மாநாடு ஒரு “தோல்வி”, ‘‘தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் தீவிரமாக ஓட்டைகளை உருவாக்கி, தங்களுக்கு நன்மை பயக்கும் கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் இந்த அழிவுகரமான அமைப்பில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்’’ என்று சாடினார். ‘‘எங்களுக்கு ‘2030க்குள்.. 2070க்குள்’ போன்ற வாக்குறுதிகள் தேவையில்லை.. நாங்கள் இப்போதே, இன்றே மாற்றத்தை எதிர்ப்பார்கிறோம்’’ என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முழங்கினர்.

புவிப் பரப்பே நிலைத்திருக்குமா? என்று மனிதகுலமே கவலையோடு பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து திடீரென புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. முதலாளிகளின் நலனைக் காக்கவே உருவாக்கப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பார்கள்?

ஆகவே, இதுபோன்ற மிகப் பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகள் நடத்துவதும் அதில் வெற்று ஒப்பந்தங்களையும், பொய் வாக்குறுதிகளையும் கொடுப்பதெல்லாம், சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் கொதித்தெழும் மக்களின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் முதலாளித்துவ அரசுகள் நடத்தும் நாடகமே.

இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடித்தளமே இலாப வெறியாக இருக்கும்போது, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது போன்ற தமது இலாபத்தைப் பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் முதலாளிகள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட்டின், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுத்து நிறுத்தவே 15 பேர் படுகொலையையும், பலநூறு பேர் மீதான வழக்கையும் கடந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறது. எனில் இந்தப் புவியின் மீதான ஒட்டுமொத்த கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, எவ்வளவு வீச்சான மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சூழலியல் போராட்டங்கள் முன்னேறி வளர்ந்துவருவதை நாம் ஆதரிக்கும் அதேவேளையில், முதலாளிகளின் இலாபவெறியே போட்டி போட்டுக் கொண்டு சுற்றுச் சூழலை சீரழித்து வருகிறது என்பதை உணரவேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய, உழைக்கும் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான சமூகக் கட்டமைப்பை − சோசலிசத்தை − மாற்றாக முன்வைக்கும் அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து இந்த உலகைக் காப்பதற்கான ஒரே வழி!


மதி

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை

டந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மகாராஷ்டிராவில், தன்னுடைய சொந்த ஊரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “பாபர் மசூதி வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. அதில் தீர்வு காண்பது கடினம். அந்த வழக்கு மூன்று மாதங்களாக என் முன்னே இருந்தபோது, நான் கடவுளின் முன் அமர்ந்து இந்த வழக்கில் ஒரு தீர்வு வர வேண்டும் என வேண்டினேன். அதன் பிறகே அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது” என்று கூறியிருந்தார்.

சந்திரசூட்டின் இந்த பேச்சுக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவருகிறது. இந்தியாவில் பாசிசத்தை அமல்படுத்திவரும் மோடி கும்பலுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சந்திரசூட் கடிவாளமிடுவார் என்று லிபரல் மற்றும் குட்டி முதலாளித்தவ பிரிவினர் பேசிவந்த நிலையில் சந்திரசூட்டின் இவ்வுரை அவர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது.

ஆனால், இங்கு நாம் சந்திரசூட் குறித்து விவாதிக்கப்போவதில்லை. இந்த கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை தகரும்போது, நாட்டில் ஜனநாயகம் நிலவுவது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குவதற்காக ஆளும் வர்க்கத்தால் முன்தள்ளப்படும் நபர்களில் ஒருவரே சந்திரசூட் என்பதை கடந்து அங்கு விவாதிக்க ஏதுமில்லை. இங்கு பரிசீலிக்க வேண்டிய முக்கியமான அம்சம் சந்திரசூட்டின் வார்த்தைகளின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதுதான்.

2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கிய அப்போதைய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது சட்டவிரோதமானது; பாபர் மசூதியை இடித்து இஸ்லாமியக் கட்டமைப்பை அழித்தது சட்டத்தின் விதியை மீறிய செயல்; ஆனால், பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே சொந்தம், அங்கே ராமனுக்கு கோவில் கட்டிக்கொள்ளலாம் என்ற அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பு குறித்து 2019 டிசம்பர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!” என்ற தலைப்பிலான கட்டுரையில், “தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும் கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்திரசூட் தற்போது உதிர்த்துள்ள வார்த்தைகள் இதனையே நிரூபித்துள்ளது.

2019-இல் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எஸ். அப்துல் நசீர்.

சொல்லபோனால், காவி பாசிஸ்டுகளின் மொழியில் சொல்வதெனில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை “தீர்ப்பு” என்று குறிப்பிடுவதே அபத்தமானது, ‘நீதி’ என்று சொல்வதே சரியானது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான ‘நீதி’.

ஆம், இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடித்துக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பல், அதற்கான ஏற்பாடாக ஓர் கும்பலாட்சியை நிறுவுவதற்கான பணியில் மூர்க்கமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி, புதிய கல்வி கொள்கை என ஒவ்வொரு துறைகளிலும் ஆதிக்க கும்பல்களின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக காவி-போலீசு கும்பலாட்சிக்கான சட்ட-ஒழுங்கை உருவாக்குவதற்காக மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்துவிட்டு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமித்ஷா, “இந்த (பழைய) மூன்று ஆங்கிலேய கால சட்டங்களும், ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக, பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டவை. அதன் நோக்கம் தண்டனைகள் வழங்குவது மட்டுமே, நீதி வழங்குவதல்ல. தற்போது கொண்டுவரப்பட்ட மூன்று புதிய மசோதாக்கள் காலனித்துவச் சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியர்களுக்கான இந்தியர்களால் வழங்கப்படும் சட்டங்களாக இருக்கும்” என்றார்.  அமித்ஷா குறிப்பிடும் நீதி ஆதிக்க கும்பல்களுக்கான ‘நீதி’யே, இதனை இந்தியா முழுவதும் நிலைநாட்டுவதே காவி கும்பலின் பாசிச நோக்கம். அதற்கான முன்னோட்டமாகவே 2019 பாபர் மசூதி நில இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், இந்த தயாரிப்புக்கான சாட்சியாகவே, “சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் கூடிய புதிய ‘நீதி’ தேவதை சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் சந்திரசூட்டால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் கண்கள் திறக்கப்பட்டும் இடதுகையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கொண்டும் தலையில் கீரிடத்துடன் நெற்றியில் திலகமிட்டும் சேலை ஆபரணங்கள் அணிந்தும் சங்கப் பரிவார கும்பல் முன்னிறுத்தும் ‘பாரத மாதா’வைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலனித்துவ பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுதல், சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை வலியுறுத்தும் விதமாக நீதி தேவதையின் சிலை மாற்றப்பட்டுள்ளதாக பாசிசக் கும்பல் கூறுகிறது. ஆனால், இந்த புதிய சிலையானது உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்தின் வரைவு அட்டைப்படத்தில் உள்ள ‘நீதி’ தேவதையின் சிலையை ஒத்துள்ளது. இச்சம்வங்களானது இனி நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்துராஷ்டிர ‘நீதியின்’ அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்க பாசிசக் கும்பல் தயாராகி வருவதையே காட்டுகிறது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



நிர்மலா சீதாராமனும் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சனும் இணையும் புள்ளி!

ன் இந்தியா தமிழ் (One India Tamil) என்ற யூடியூப் சேனலுக்கு பொருளாதார ஆய்வாளரும், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்த கருத்துகள் கண்டனத்துக்குரியவையாக உள்ளன. அதைப் பற்றிய விமர்சனமே இக்கட்டுரை.

அந்தப் பேட்டியில் ஜெயரஞ்சன் வைக்கின்ற வாதங்கள் தீவிரமாக கார்ப்பரேட்மயத்தை ஆதரிக்கக் கூடியதாகவும், அதைத் தீவிரமாக அமல்படுத்துவதுதான் வளர்ச்சி என்பதாகவும், உழைக்கும் மக்களின் நலனை பலிகொடுப்பது சரிதான் என்ற கோணத்திலும் இருக்கின்றன.

அந்தப் பேட்டியில் ஜெயரஞ்சன் பேசுகின்ற பல்வேறு விசயங்கள் விமர்சனத்துக்குரியவையாக உள்ளன. அதில் ஒரு சில விசயங்களை மட்டும் தற்போது பேசுவோம்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று கூறுகிறார், ஜெயரஞ்சன். அதற்காக நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். வேலையிழப்பு ஏற்பட்டாலும், அதன் பிறகு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறுகிறார்.


படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்


உண்மையில், தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கணினி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. அப்போதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே கூறி வந்தனர். ஆனால் இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் உருவான அளவை விட பறிக்கப்பட்ட அளவே மிக அதிகம். விவசாயம் அழிக்கப்பட்டு நாடு முழுக்க கோடிக்கணக்கான விவசாயிகள் போண்டியாக்கப்பட்டுள்ளனர். தொழில்துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட அதனால் பறிக்கப்பட்ட வேலைவாய்ப்பே அதிகம். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைதான் செங்குத்தாக வளர்ந்தது. இதனால் மீண்டும் கிராமப்புறங்களுக்கே செல்லும் அவலநிலை இந்தியாவில் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக AI தொழில்நுட்பம் அமலுக்கு வந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.

AI தொழில்நுட்பத்தின் காரணமாக கூகுள், அமேசான், யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை “லேஆஃப்ஸ்” இணையதளம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1190 தொழில்நுட்ப நிறுவனங்களில் 2,62,595 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையை நெருக்கமாகக் கண்காணிக்கும் பிரபல தொழில்நுட்பவியலாளர் ரே வாங், இந்நிலைமை 2027 இல் இந்தியாவில் AI மற்றும் ஆட்டோமேஷன் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்.

மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமல்ல, AI அனைத்துத் துறைகளிலும் வேலையிழப்பைத் தீவிரப்படுத்தும் என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ”கிரேட் லேர்னிங்” நடத்திய சமீபத்திய ஆய்வில் 67.5% பொறியாளர்கள் AI தொழில்நுட்பத்தினால் வேலையிழப்பு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம், எழுத்துத்துறை, குறியீட்டு முறை, வாடிக்கையாளர் சேவை, டிரைவர்கள், சட்டம், சந்தைப்படுத்துதல், உற்பத்தி, ஆசிரியர்கள், பயணம் மற்றும் சுற்றுலா, மொழிபெயர்ப்பாளர்கள், நிதி, வரைகலை வடிவமைப்பாளர்கள், பொறியியல், மனித வளங்கள், சில்லறை விற்பனை, விநியோகச் சங்கிலி ஆகிய துறைகள் AI யால் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடிய துறைகளாகக் கூறப்படுகிறது.


படிக்க: செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துகளை எப்படி பார்ப்பது?


சமீபத்தில் ஹாலிவுட் எழுத்தாளர்களும், கலைஞர்களும் “திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய அளவில் போராடியது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், அரசுத்துறைகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தற்பொழுதே, அரசுப் பணியிடங்களுக்கான தேர்வில் சில நூறு பணியிடங்களுக்குப் பல லட்சக்கணக்கான பேர் தேர்வு எழுதும் அவலநிலையைப் பார்த்து வருகிறோம். எந்தத் துறையிலும் காலியாக இருக்கும் பணிக்கே ஆள் எடுப்பது கிடையாது. AI நுழைந்தால் என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்?

மேலும் ஜெயரஞ்சன் கூறும்போது, AI க்கு ஏற்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். AI சார்ந்து திறனை வளர்த்துக் கொள்ள உண்மையில் இங்கு யாருக்கு வாய்ப்புள்ளது. ஓரளவு வசதி வாய்ப்புள்ள, எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களுக்குத் தான் அதற்கான வாய்ப்புள்ளது. இதுதான் கணினி தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்திலும் நடந்தது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பிரிவிலிருந்து வருபவர்கள் AI சார்ந்து திறன் வளர்த்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம்? இது அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டு வராது. குறிப்பிட்ட தரப்பினருக்குத்தான் வளர்ச்சியைக் கொண்டு வரும். மற்றவர்களை ஏற்கனவே உள்ள நிலைமையை விட மோசமான நிலையில் அத்துக்கூலிகளாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்.

இது மட்டுமல்லாமல், அந்தப் பேட்டியில் வேறு பல விசயங்களையும் கூறுகிறார், ஜெயரஞ்சன். கார்ப்பரேட் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவது சரிதான் என்ற கோணத்தில் வாதங்களை முன்வைக்கிறார். தமிழ்நாட்டில் அதற்கு நிறைய தடை இருக்கிறது, சுதந்திரமாக நிலங்களைக் கைப்பற்ற முடியவில்லை என்று வருத்தப்படுகிறார். டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சிக்காக (கார்ப்பரேட்) நிலங்களைக் கையகப்படுத்த முடியவில்லை என வருத்தப்படுகிறார். “நிலம்தான் சாமி” என்று ஒரு கோஷ்டி சுற்றுவதாகவும், நிலங்களைக் கைப்பற்றத் தடையாக இருப்பதாகவும் நிலத்தைக் காப்பதற்காகப் போராடும் மக்களையும், இயக்கங்களையும் கிண்டலடிக்கும் தொனியில் பேசுகிறார்.

அப்படியென்றால் திமுக அரசு டெல்டாவை “வேளாண் பாதுகாப்பு மண்டலம்” என்று அறிவித்ததை திட்டக் குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஏற்கவில்லையா? இதுபற்றி திமுக-வின் கருத்து என்ன?

ஜெயரஞ்சன் கூறும் வாதங்கள் அனைத்தும் ’அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி’ என்ற பெயரில் அப்பட்டமாக கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. இதை உழைக்கும் மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று கூறுவது.


படிக்க: செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!


கடந்த காலங்களில் சமூகநீதி, பி.ஜே.பி எதிர்ப்பு, சமூக நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் தனது உரைகள், எழுத்துக்கள் மூலமாகப் பிரபலமாக அறியப்பட்டவர்தான் ஜெயரஞ்சன். அன்று பி.ஜே.பி-யின் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். இன்றோ, திமுக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு அப்பட்டமாக கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். கார்ப்பரேட் சுரண்டலால் பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுக்க போராடி வரும் மக்களுக்கு இது துரோகம் செய்வதாகாதா?

தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கும் யாரும் கடைசியாக இணையும் புள்ளி இதுதான். அதனால்தான் AI யால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தோடு ஜெயரஞ்சனின் கருத்து ஒன்றுபடுகிறது. தனியார்மயத்திற்கென்று மனித முகமெல்லாம் இல்லை. மிருக முகம்தான். தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பது மக்களை ஏமாற்றுவதாகும். இதுகுறித்து CPM, CPI மற்றும் திமுக-வை ஆதரிக்கும் பிற ஜனநாயக சக்திகள் தங்களது கருத்தைக் கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

உண்மையில் திமுக அரசு கார்ப்பரேட் திட்டங்களை ஆதரித்துக் கொண்டே, மூர்க்கமாகச் செயல்படுத்திக் கொண்டே ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. அது பாசிசத்திற்குத் துணைபுரிவதாகத்தான் சென்று முடியும்.

உண்மையில் ஜனநாயகம் வேண்டுமென்றால், உழைக்கும் மக்களுக்கெதிரான கார்ப்பரேட் திட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்திய மாற்றுக் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சி என்பது தனியாக வளர்ச்சியைக் கொண்டு வந்துவிடாது. அது யாருடைய நலனுக்கானதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. அறிவியல் வளர்ச்சி மக்கள் நலனோடு இணைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட உண்மையான ஜனநாயகத்தைத்தான் மக்கள் வேண்டுகிறார்கள்.

அந்த வகையில் மக்கள் நலனின் அடிப்படையில் மாற்றுச் செயல்திட்டத்தை முன்வைத்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியுள்ளது. மேற்சொன்ன உள்ளடக்கத்திலிருந்து “வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கம், மக்களை நேசிக்கும் அனைவரது முழக்கமாக மாறவேண்டும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



🔴LIVE: JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு

🔴LIVE: JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!

14.11.2024

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்!
சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!

பத்திரிகை செய்தி

கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் விக்னேஷ் என்பவரின் தாய் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இவரது உடல்நிலை சரியாகாத காரணத்தினால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் “அவருக்கு இதற்கு முன்பு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை இதனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விக்னேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர் வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி, தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “சம்பந்தபட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என மருத்துவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. இத்தாக்குதல், மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதன் வெளிப்பாடாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சிவபாலன் மற்றும் இளங்கோவன், தமிழ்நாடு மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்த சம்பவத்தை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து துறைகளிலும் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த மாதம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மருத்துவக் கட்டமைப்பு எவ்வாறு கிரிமினல்மயமாகி உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதோடு, மருத்துவத்துறையில் உள்ள போதாமையையும், அன்றாடம் உடை மாற்றுவதற்கு கூட வசதியில்லாமல் மருத்துவர்கள் இருப்பதையும், மருத்துவத்துறையில் மேல்நிலைப் படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளின் வேலை சுமையையும் இணைத்தே அம்பலப்படுத்தியது.

மேலும், நேற்று இரவு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லாமல் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளில் உள்ள அவலநிலைக்கு மற்றொரு சான்றாகும்.

எனவே, சேவைத் துறையான மருத்துவத்துறையை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து கார்ப்பரேட்மயமாக்கும் அரசின் நடவடிக்கையே, பாலாஜி போன்ற மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, இது போன்ற தாக்குதல்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போலீஸ் பூத் அமைப்பதெல்லாம் தீர்வல்ல, மருத்துவத்துறையில் கர்ப்பரேட்மயத்தை தடுத்து நிறுத்தி சீரழிந்திருக்கும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தீர்வாக இருக்கும்.

தமிழ்நாடு அரசே, ஒன்றிய அரசே,

  • அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!
  • அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
  • அரசு மருத்துவத்துறையில் கார்ப்பரேட் பங்களிப்பை உடனடியாக கைவிட வேண்டும்!
  • மருத்துவ சேவையை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்!


மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காஷ்மீர் மீது கல்லெறியும் கமல் – மக்கள் அதிகாரம் மருது உடைத்த ரகசியங்கள்

காஷ்மீர் மீது வீம்புக்கு கல்லெறியும் கமல்
மக்கள் அதிகாரம் மருது உடைத்த ரகசியங்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு

நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்:
மக்கள் அதிகாரம் கள ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்கிற 17 வயது மாணவர் பாலிடெக்னிக் படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி வீட்டின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது மோதுவது போல் சென்ற வாகனத்தில் இருந்தவர்களை பார்த்து ‘ஓரமா போங்க’ எனக் கூறியுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் “இப்ப என்னல செய்யணும் உனக்கு” என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்களை ஊர்க்காரர்கள் தடுத்துள்ளனர். இதனையடுத்து “இரண்டு மணி நேரத்தில் உன்னை வெட்டுறேன் பார்” என்று சொல்லிவிட்டு காரில் வந்த கும்பல் கிளம்பி சென்றுள்ளது.

சொன்னது போல் இரண்டு மணி நேரம் கழித்து மாலை சுமார் 5 மணியளவில் 9 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் மூன்று பைக்குகளில் வந்துள்ளது. வந்த வேகத்தில் மனோஜ் வீட்டின் தகரக் கதவை அரிவாளால் வெட்டி உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தனியாக இருந்த மனோஜின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளது. அரிவாளால் இரண்டு கால்களிலும் வெட்டியுள்ளது. கத்தியை வைத்து தலையில் கொத்தியுள்ளது. இதில் கீழே விழுந்த மனோஜை இறந்துவிட்டார் என கருதி வெளியில் வந்து கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளது.

மனோஜின் கதறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர் மனோஜை தன் வீட்டுக்கு அழைத்து வரும்போது, அதை பார்த்த அந்த வெறிபிடித்த கும்பல் மீண்டும் வந்து பக்கத்து வீட்டிலும் புகுந்து மனோஜை வெட்டிக் கொல்ல முயற்சித்திருக்கிறது.  இதனால் பக்கத்து வீட்டு கதவும் ஜன்னலும் அரிவாளால் வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் மனோஜை காப்பாற்றவில்லை என்றால் மனோஜை இந்த கஞ்சா போதை, சாதிவெறி கும்பல் வெட்டி சாய்த்திருக்கும். இன்று அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்பதே உண்மை.

ஏன் இந்த கொடூரமான கொலைவெறி?

மனோஜ் தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சேர்ந்தவர். மனோஜை வெட்டிய ஒன்பது பேரும் தேவர் சாதி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பக்கத்து ஊரான திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது பேருமே 17 வயதிலிருந்து 20 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதில் ஒருவர் மாணவர். இவர்கள் அனைவருமே கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி இந்த சாதிவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைடுத்து, நடந்த சம்பவம் குறித்து மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கள ஆய்வு மேற்கொண்டோம். முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜை சென்று சந்தித்தோம். இரண்டு கால்களிலும் கட்டுப் போடப்பட்டு தலையில் தையலுடன் மனோஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாம் கேட்டபோது தலை இன்னும் வலித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அவரால் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியவில்லை. இப்படி அமர்ந்திருந்தால் தலையில் வலி கூடுதலாக ஏற்படுவதாக கூறினார். தனக்கு நேர்ந்த இந்த கொடூரத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

அதன்பின் சம்பவம் நடந்த மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள மனோஜின் வீட்டிற்கு சென்றோம். மனோஜின் அப்பா கொத்தனார் வேலைக்கு செல்பவராகவும் அம்மா ஓட்டலில் பாத்திரம் தேய்ப்பவராகவும் உள்ளனர். இரண்டு பேரும் அதில் வரும் கூலியை கொண்டுதான் குடும்பத்தை நடத்துகின்றனர். சாதாரண ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். வேறு எந்த பின்புலமும் இவர்களுக்கு இல்லை.

மேலும், தேவேந்திரகுல வேளாளர், தேவர், நாடார் ஆகிய மூன்று பிரிவுகளையும் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டம் திருநெல்வேலி. இதேபோல்தான் மேலப்பாட்டம் மற்றும் திருமலை கொழுந்துபுரம் கிராமமும் இந்த சாதிகளை பெரும்பான்மையாக உள்ளடக்கியதாகவே உள்ளது.

ஊருக்கு அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இந்த குற்றங்களை தடுக்க முடியவில்லை. மேலும் மனோஜ் வெட்டப்பட்டு பல மணி நேரங்கள் கழித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லை. இதனால் மேலப்பாட்டம் கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் செய்த பின்பு எஸ்.பி. நேரடியாக வந்து சமாதானம் பேசி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகளில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று பேரை தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதே ஆதிக்கச் சாதியினரை தலித் மக்களில் யாரேனும் ஒருவர் வெட்டியிருந்தால் ஊரில் ஒருவர்கூட இருந்திருக்க முடியாது. ஆண்கள் அனைவரையும் போலீஸ் பிடித்துச் சென்றிருக்கும் என ஊர் மக்கள் நம்மிடம் கூறினர்.

இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?

இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க என்று சொல்பவர்களுக்கு கள ஆய்வு சேகரிக்க சென்றபோது கிடைத்த சில அனுபவங்களே சான்று.

திருமலைகொழுந்துபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டிற்கு செல்ல ஊர் முனையிலிருந்த ஊர்க்காரர் ஒருவரிடம் வழி கேட்டபோது, இது தேவர் தெரு அடுத்ததாக நாடார் தெரு அடுத்ததாக எஸ்.சி. தெரு இருப்பதாக ‘விளக்கமாக’ நமக்கு வழி சொன்னார். மேலும் ஊரில் இருந்த மற்றொரு பெரியவரிடம் சம்பவத்தைப் பற்றி விசாரித்தபோது, “எஸ்.சி. பயலுகதான் சேட்டை செய்றாங்க. இப்ப நீங்க வண்டியில போறீங்க, உங்கள ஏதாச்சும் பேசினா உங்களுக்கு கோவம் வரும் இல்ல. அதே மாதிரி அவனும் பேசி இருக்கான். இந்தப் பயலுக அருவாள எடுத்து வெட்டிருக்காங்க” என்று இயல்பாக சாதிவெறி ஊறிய வார்த்தைகளில் நமக்கு பதில் கூறினார்.

இதற்கு முன்பு மேலப்பாட்டம் வரை சென்று கொண்டிருந்த பேருந்து தற்போது அதையும் தாண்டி திருமலைகொழுந்துபுரம் வரை சென்று முதலில் அங்குள்ளவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. இதில் அங்கேயே இருக்கைகள் முழுவதும் நிரம்பிய பின் மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் ஏறும்போது உட்கார இடமில்லாமல் நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி நின்று கொண்டிருக்கும் போது மேலே கைபடுகிறது, கால்படுகிறது, மேலே உரசுகிறது பின்னால் போ என்று சாதி தீண்டாமையை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தும் இடமாக, அன்றாடம் ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமையை அனுபவிக்கும் இடமாக இந்த பேருந்து பயணம் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். ஓரமா போங்க என்று சொன்னாலே வெட்டுவேன் என்றால் சமத்துவம் குறித்து பேசினால் தடம் தெரியாமல் அழித்துவிடுவோம் என்பதுதான் மனோஜ் மீதான கொலைவெறி தாக்குதலில்  இவர்கள் சொல்ல வரும் செய்தி.

அனைவரும் சாதிவெறியர்களா?

ஆனால் இரு பிரிவு உழைக்கும் மக்களுமே சாதிய வேறுபாடுகளை துறந்து தங்களுக்குள் இணக்கமாக வாழ்வதற்கே முயற்சி செய்கிறார்கள். நிலத்தில் இரு பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்றாக இணைந்து விவசாய வேலைகள் செய்வதை நாம் களத்திற்கு சென்றபோது நேரடியாகவே பார்க்க முடிந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு பிரிவினரும் மாறி மாறி வெட்டிக் கொண்ட சம்பவத்திற்குப் பின் இரு ஊர் பெரியவர்களும் இணைந்து சமாதானம் பேசி இரண்டு ஊரையும் அமைதிபடுத்தியுள்ளனர். சாதி சங்கங்களுக்கு, சாதி தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் தங்களுக்குள்ளேயே இந்த சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தேவர் சாதியை சேர்ந்த திருமலை கொழுந்துபுரம் கிராமத்தில் நாம் சென்று பேசியபோது, “பெரியவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை‌ இந்த கிராமத்துக்கும் அந்த கிராமத்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இது போன்ற ஒரு சில பேரால்தான் இந்தப் பிரச்சினை வருகிறது” என்று இரு ஊர் மக்களும் கூறினார்கள்.

அதே சமயம் பாதிக்கப்பட்ட மனோஜ் ஊரை சேர்ந்த இளைஞர்கள் யாரும் சம்பவத்தை காரணமாக வைத்து வேறு எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என மனோஜின் பகுதியை சேர்ந்த பெரியவர்கள் இளைஞர்களை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இரு ஊரைச் சேர்ந்த ஊர் மக்களுக்கும் ஒரு சமாதான கூட்டம் நடத்தவும் ஊர்ப் பெரியவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தேவர் சாதியைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் சம்பவம் குறித்து பேசினோம். இத்தாக்குதலுக்கு சாதிவெறிதான் முதன்மையான காரணம் என்று தாங்கள் சாந்திருக்கும் சாதியையே விமர்சனம் செய்தனர். திருவிழாவில் சாதி தலைவர்களின் படங்களை போட்டு பேனர் வைப்பது, குருபூஜை கொண்டாடுவது போன்றவைகள் இளம் பருவ வயதினரின் மனதில் சாதி வெறியை விதைக்கிறது என்பதை அந்த இளைஞர்கள் ஆழமாக கூறினர்.

மேலும், வெட்டுப்பட்ட மனோஜை பற்றி கூறும்போது, “அந்தப் பையன் மிகவும் நல்ல பையன்‌, அமைதியானவன், எங்கள் ஊரில் அவனுக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவான், எங்களுக்கும் அவன் நண்பன்தான். படிப்பை பாதியில் நிறுத்தியபோதும் கூட தானே முன்வந்து தன் சொந்த முயற்சியுடன் படிப்பை தொடர்கிறான்” என்று சாதி கடந்து ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு பக்கபலமாக ஆதிக்கச் சாதி என்று சொல்லக்கூடிய தேவர் சாதி இளைஞர்கள் பேசினர்.

இதுதான் இந்த சமூகம் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான பாதை. இம்மண்ணில் சாதியை ஒழிப்பதற்கான நம்பிக்கை அளிக்கக் கூடிய பாதையை இந்த இளைஞர்கள் இதன் வழியாக நமக்கு காட்டுகிறார்கள். ஊருக்குள் சாதி தலைவர்களின் போஸ்டர்களை காண முடிந்தது.‌ மேலும் தேர்தல் நேரத்தில் வரைந்த பா.ஜ.க. சின்னமான தாமரையையும் காண முடிந்தது. இந்த இரண்டும் கைகோர்த்துக் கொண்டு இந்த பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும், இளைஞர்கள் சாராயம் பற்றிச் சொல்லும் போது எப்போதுமே டாஸ்மாக்கில் பிளாக்கில் காசு கொடுத்து தடையில்லாமல் சரக்கு வாங்கிக் கொள்ளலாம்‌. மேலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே கஞ்சா சரளமாக புழங்குகிறது. சில மாணவர்கள் அந்த கஞ்சாவை பெரியவர்களுக்கும் கைமாற்றுகின்றனர் என்று கூறினர்.

தீர்வு என்ன?

ஊருக்கு அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. ஆனால் குற்றங்களை தடுக்க முடியவில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழங்குகிறது. டாஸ்மாக்கில் மது ஆறாக ஓடுகிறது. அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் சாதி தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. இவை எதையும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. ஆதிக்கச் சாதி தலைவர்களுடனும் சங்கங்களுடனும் கைகோர்த்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவா கும்பல் சாதி வெறியை இம்மண்ணில் தூண்டி விடுகிறது. களத்தில் இந்த சாதி வெறியை நிகழ்த்துவதற்கு கஞ்சா, மது போதைகள் உந்துதலாக இருக்கிறது.

எனவே, கஞ்சா, மது போதையை தடுக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும், ஆதிக்கச் சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவாகும்பல்களை இம்மண்ணிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்.‌ இந்த பாதையில் ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து பயணித்தால் மட்டுமே சாதி ரீதியான தாக்குதல்கள், படுகொலைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் அல்ல, இந்த கொடூர செயல்களுக்கு கருவியாக பலியாகிக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலை கொண்ட இளைஞர்களையும் நாம் பாதுகாக்க முடியும்.


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்று கட்டமைப்பை நோக்கி முன்னேறுவோம்!

ங்கதேசத்தின் அரசு வேலைவாய்ப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள்விரோதமான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வங்கதேச மாணவர்களின் போராட்டம், மாணவர் எழுச்சியாக உருவெடுத்து அந்நாட்டு பிரதமரும் சர்வாதிகாரியுமான ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டே விரட்டியடித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பிந்தங்கிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமாக உள்ளது. பணவீக்கம் 10 சதவிகிதமாக உள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள 17 கோடி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2 கோடி இளைஞர்கள் வேலையிலும் கல்வியும் இல்லாமல் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஊழல், மனித உரிமை மீறல்கள், ஜனநாயகமற்ற தேர்தல், எதேச்சதிகார ஆட்சி போன்றவை வங்கதேச மக்களை ஷேக் ஹசீனா அரசிற்கு எதிராக திருப்பியிருந்தது. இந்நிலையில்தான், மக்கள்விரோதமான இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களை வீதிக்கு அழைத்து வந்தது.

சர்வாதிகாரி ஹசீனாவை விரட்டியடித்த
மாணவர் எழுச்சி

வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலையில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறை 2018-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 5 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினரையும் அவரது அவாமி லீக் கட்சியினரையும் மட்டுமே அரசுத்துறை முழுவதும் நிரப்புவதற்கான திட்டமிட்ட ஏற்பாடு என்பதை அம்பலப்படுத்தி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கெனவே, தனியார்த்துறை வேலைவாய்ப்பு தேக்கத்தாலும் வேலையின்மையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச இளைஞர்களை இத்தீர்ப்பு கொந்தளிக்க வைத்தது. இதனையடுத்து, பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை தவிர பிற அனைத்து இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வேண்டுமென வங்கதேசத்தில் உள்ள ஆறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். சில நாட்களில் வங்கதேசம் முழுவதுமுள்ள அனைத்து பல்கலைக்கழக-கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்தனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடுமுழுவதும் மிகப்பெரிய சாலை மற்றும் ரயில் மறியல்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை இழுத்து மூடியது ஷேக் ஹசீனா அரசு. அமைதி வழியில் போராடிய மணவர்கள் மீது அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு என்ற பெயரிலான ‘‘சத்ரா லீக்’‘ உள்ளிட்ட குண்டர் படைகளை ஏவியது. இக்குண்டர் படைகள் போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதில் நூறுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்து ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான நாடுதழுவிய போராட்டமாக வளர்ந்தது.

குறிப்பாக, ஜென் சி (Gen Z – Generation Zoomer) என்று அழைக்கப்படும் வங்கதேசத்தின் 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர். ஜென் சி போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஷேக் ஹசீனா அரசு நாடு முழுவதும் இணையத்தை முடக்கியது, சமூக வலைதளைங்களை தடை செய்தது. வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு கொண்டுவந்து போராட்டக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவு பிறப்பித்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டியது.

போலீசு, விரைவு அதிரடி படை, வங்கதேச எல்லை காவல் படை உள்ளிட்ட பல்வேறு ஆயுதப்படைகள் மூலம் மாணவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இதனால் 32 குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 11,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். உண்மையான எண்ணிக்கையை மூடிமறைக்க தகவல்களைப் பகிரக்கூடாது என மருத்துவமனைகள் தடுக்கப்பட்டன. மருத்துவமனை சி.சி.டி.வி. காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிச்சூட்டால் கொல்லப்பட்ட பலர் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டனர்.

ஆனால், இவையெல்லாம் மாணவர்களை முடக்கிவிடவில்லை. மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் மக்களும் போராட்டத்தில் இறங்க, மாணவர்கள் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதன் காரணமாக, ஜூலை 21 அன்று விடுதலை போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் வகுப்புகளுக்கு திரும்புமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டது. ஆனால், மாணவர்கள் மீது செலுத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு பொறுப்பேற்று ஷேக் ஹசீனா அரசின் அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் பிரதமர் ஹசீனாவும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஷேக் ஹசீனா நயவஞ்சக நாடகமாடினார். ஆனால், ‘‘துப்பாக்கி குண்டுகளுடனும் பயங்கரவாதத்துடனும் எந்த பேச்சுவார்த்தையும்’‘ இல்லை எனக் கூறி மாணவர்கள் உறுதியாக நின்றனர். ஆகஸ்ட் 4 அன்று ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டுமென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஷாபாக் சந்திப்பில் கூடினர். அன்றைய நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஹசீனாவின் சர்வாதிகார அரசால் கொல்லப்பட்டனர்.

அடுத்தநாளில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி ஷேக் ஹசீனா பதவிவிலக வலியுறுத்தி ‘‘டாக்காவை நோக்கி நீண்ட பேரணியை’‘ அறிவித்தது. எழுச்சிகரமான போராட்டத்தின் ஊடாக ஹசீனாவின் பிரதமர் அலுவலகத்தை மாணவர்கள் கைப்பற்றினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்துகொண்ட ஆளும் வர்க்கங்கள் ராணுவத்தின் மூலம் ஷேக் ஹசீனா பதவிவிலக கெடு விதித்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடினார் ஷேக் ஹசீனா.


படிக்க: வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!


ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வங்கதேசத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹசீனா விரட்டியடிக்கப்பட்டதை மாணவர்களும் மக்களும் கொண்டாடி தீர்த்தனர். 2022-ஆம் ஆண்டு இலங்கை உழைக்கும் மக்கள் இனவெறி பாசிஸ்ட் ராஜபக்சேவை விரட்டியடித்த நிலையில் தற்போது வங்கதேச மாணவர் எழுச்சி மேலெழுந்தது, உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளாலும் பாசிஸ்டுகளாலும் ஒடுக்கப்பட்டுவரும் மக்களுக்கும், புரட்சிகர சக்திகளுக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. அதேசமயத்தில், பாசிச மோடி கும்பல் உட்பட பல ஆளும் வர்க்க கும்பல்களுக்கு இவ்வெழுச்சி கிளியூட்டியுள்ளது.

அமெரிக்க பொம்மை
முகமது யூனுஸ் அரசு

வங்கதேசத்திலிருந்து சர்வாதிகாரி ஹசீனா தப்பியோடிதையடுத்து, ராணுவத்தின் துணையுடன் நோபல் பரிசு வென்றவரும் அமெரிக்க கைகூலியுமான முகமது யூனுஸ் தலைமையில் ஆலோசனைக் குழு என்ற பெயரிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று பொறுப்பேற்று கொண்ட இக்குழுவில் மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இரு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினரே இடைக்கால அரசில் பெரும்பான்மையாக உள்ளனர். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் ஆதர்வாளர்களும் இக்குழுவிற்கு இடம்பெறாத வகையில் களையெடுக்கப்பட்டுள்ளனர்.

முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அரசானது அமெரிக்க பின்புலம் கொண்டது என்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. அதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வங்கதேசத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை வரவேற்றும் புகழ்ந்தும் பேசினார். உண்மையில், அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆதரவு எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியும் தற்போதைய சூழலை வங்கதேசத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளயடிப்பதற்குமான மறுவாய்ப்பாகவே கருதுகின்றன.

ஏனெனில், கடந்த பதினைந்து ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சியானது அமெரிக்காவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தலைவலி மிகுந்த காலமாகவே அமைந்தது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடிபணியாமல் ஷேக் ஹசீனா சீன-சார்பு நிலையெடுத்தது அமெரிக்காவை ஆத்திரமூட்டினார்.

இதன் காரணமாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு பதிலாக கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்று அமெரிக்கா விரும்பியது. ஆனால், ஷேக் ஹசீனாவோ கலிதா ஜியாவை வீட்டு சிறையிலடைத்து, அவரது மகனை நாடுகடத்தி, எதிர்க்கட்சியினரை சிறையிலடைத்து, கொன்று, காணாமலாக்கி என நரவேட்டையாடி பட்டவர்த்தனமான எதேச்சதிகார தேர்தலை நடத்தினார். எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான வெளியே ஒழித்துகட்டப்பட்டு ஒரு கட்சி சர்வாதிகாரம் நிறுவப்பட்ட அத்தேர்தலில் போட்டியிடுவது வீண் என தேசிய மக்கள் கட்சி தேர்தலை புறக்கணித்தது. முகமது யூனுஸை வைத்து ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்கும் அமெரிக்கா முயற்சித்தபோதும் முகமது யூனுஸ் மீது பல்வேறு வழக்குகளை பதிவுசெய்து அவரை ஹசீனா சிறையிலடைத்தார்.

இவையெல்லாம் அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளை ஆத்திரமடையச் செய்தது. இதன் காரணமாகவே ‘‘வங்கதேச தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை’‘ என அந்நாடுகள் கூப்பாடு போட்டன. இன்னொருபுறம், தெற்காசிய பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்திற்கு போட்டியாக அமெரிக்காவின் பிராந்திய அடியாளான இந்தியாவும் அமெரிக்க நிலைப்பாட்டை எடுக்காமல், தன் நாட்டு ஆளும் வர்க்க கும்பல்களின் நலனை பிரிதிநிதித்துவப்படுத்தி ஷேக் ஹசீனாவுடன் நெருக்கம் பாராட்டியது. இது அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது.

இந்நிலையில்தான், வங்கதேசத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் அமெரிக்காவும் வங்கதேச எதிர்க்கட்சிகளும் தலையிட்டு ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டியடிப்பதில் வினையாற்றின. வங்கதேச தேசிய கட்சியும் ஜமாத்-இ-இஸ்லாமியும் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் தலையிட்டு அதனை கலவரமாக மாற்றின. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் நெருக்கமான ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர்-குண்டர் படையான இஸ்லாமிய சத்ரா ஷிபிர் பிரிவு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் வேலை செய்ததாகவும் வங்கதேச தேசிய கட்சியின் செயல் தலைவரும் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்ததாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. மேலும் இவ்விரு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அமெரிக்க உயரதிகாரிகளை சந்தித்து பேசியதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இக்கட்சிகள்தான் இப்போராட்டத்தின்போது ‘‘இந்தியாவே வெளியேறு’‘ பிரச்சாரத்தையும் முன்னெடுத்தன.

இந்த பின்னணியில் இருந்துதான் இவ்விரு எதிர்க்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க பொம்மை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கங்கள் மற்றும் கட்டமைப்பின் மீதான மக்கள் கோவம் தனிவதற்காகவே அறிவாளி, மக்கள் சேவகர் என்றெல்லாம் பார்க்கப்படும் முகமது யூனுசை ஆளும் வர்க்கங்கள் முன்னிறுத்தியுள்ளன.

மாற்று கொள்கையின் இன்றியமையாமை

ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

அதன் அங்கமாக, 17 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் கட்சி தலைவர் கலிதா ஜியா விடுதலையாகியுள்ளார். 17 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த அக்கட்சியின் வங்கி கணக்கும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் நாடு கத்தப்பட்டிருந்த கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளும் வேகமான நடந்தேறி வருகின்றன. அதேபோல், பயங்கரவாத தொடர்பு குற்றஞ்சாட்டி தடை செய்யப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள், இதுநாள் வரை அவாமி லீக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி கொள்ளையடித்து வந்த தொழிற்சங்கங்கள், சந்தைகள், மணல் அகழ்வுத் தொழில்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்னொருபுறம், ஷேக் ஹசீனாவும் அவாமி லீக் கட்சியினரும் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நாட்டை விட்டு தப்பியோடியதிலிருந்து ஹசீனா மீது 70 கொலை வழக்குகள் உட்பட 84 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவாமி லீக் கட்சியை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் அக்கட்சியினர் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத அளவிற்கு அவரது அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் அக்கட்சி எம்.பி-க்களின் கடவுச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


படிக்க: அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு


அதேபோல், ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கு ஏற்ப சிதைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம், நீதித்துறை, போலீசு, ராணுவம் போன்ற அரசுக்கட்டமைப்பை தங்களுக்கு ஏற்ப மறு ஒழுங்கமைப்பு செய்யவும் இக்கட்சிகள் முயல்கின்றன. அவாமி லீக் ஆதரவு நீதிபதிகள், அறிஞர்கள் மீது வழக்குகள் பதியப்படுவது, கைது செய்யப்படுவது, கட்டமைப்பிலிருந்து களையெடுக்கப்படுவது போன்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ராணுவம் உள்ளிட்டு வங்கதேச அரசு கட்டமைப்பின் ஆசிப்பெற்றுள்ள ஹசீனா மீண்டும் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதில் எதிர் முகாம் தீவிரமாக உள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு விரைந்து தேர்தலை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

மொத்ததில், வங்கதேசத்தில் முற்றிலுமாக சிதைந்துபோயுள்ள சட்ட-ஒழுங்கை சரிசெய்து, ஷேக் ஹசீனாவால் தனக்கு தகுந்தாற்போல் சிதைக்கப்பட்டுள்ள அரசு கட்டமைப்பை மறுஒழுங்கமைப்பு செய்து ஆட்சியை கைப்பற்ற ஆளும் வர்க்கத்தின் மற்றொரு சர்வாதிகார பிரிவான வங்கதேச தேசிய கட்சி-ஜமாத்-இ-இஸ்லாமி கும்பல் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே, சீர்த்திருத்தங்ளை மெற்கொள்வதுதான் இடைக்கால அரசின் முதன்மை நோக்கம் என்று தனது பதவியேற்பில் முகமது யூனுஸ் பேசியிருந்தார். அந்த அடிப்படையிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புதிய ஆளும் வர்க்க கும்பலின் மீட்சியால் அமெரிக்க-சீன ஏகாதிபத்திங்களுக்கு இடையிலான மேலாதிக்க போட்டாபோட்டியும், இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சியும் தீவிரமடைவதன் விளைவாக, வங்கதேச மக்களை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவை தீவிரமடையுமே ஒழிய தீராது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களிடம் எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை முகமது யூனுஸ் கோரியிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாக வருங்காலங்களில் வங்கதேச மக்கள் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாக்க தாக்குதல்கள் தீவிரமடையும்.

மேலும், பாசிசத் தன்மையை தன்னகத்தே கொண்ட வங்கதேச தேசிய கட்சி-ஜமாத்-இ-இஸ்லாமி கும்பல் இஸ்லாமிய மதவெறியையும் கட்டவிழ்த்துவிடும். அண்மைகாலமாக, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து மக்கள் மீது இஸ்லாமிய மதவெறி கும்பல் தாக்குதல் நடத்திவருவதே அதற்கு சான்று. எனவே, ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர்-இளைஞர்களும் மக்களும் இந்த ஆளும் வர்க்க கும்பலையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை, சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுவரும் சதிகளையும் முறியடித்து இந்த ஆளும் வர்க்க கும்பலையும் வங்கதேசத்திலிருந்து விரட்டியடிப்பர்.

எனவே, இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி வங்கதேச புரட்சிகர சக்திகள் மக்கள் மாற்று கட்டமைப்பிற்கான கொள்கையை முன்வைத்து மக்களை அணித்திரட்ட வேண்டும், அதற்கு முன்நிபந்தனையாக உள்ள மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சியையும் கட்டியமைக்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!

ட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் சுமார் 1400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அதாவது 80% தொழிலாளர்கள்) நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும் அதன் அவசியத்தையும் இந்திய தொழிலாளர் வர்க்கத்துக்கு எடுத்துரைத்தது.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் போராட்டத்தை விரும்பாத  கம்யூனிச வெறுப்பு கொண்ட சாம்சங் நிறுவனம் இட்டக் கட்டளையை தி.மு.க. அரசு சிரமேற்கொண்டு செய்திருக்கிறது. இரவோடு இரவாக போராட்டப் பந்தல் பிரிப்பு, நள்ளிரவில் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது, தனியார் இடத்தில் போராடிய தொழிலாளர்களை பலவந்தமாகக் கைது செய்தது, தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்துவது, எங்கு கண்ணில் பட்டாலும் கைது செய்வோம் என்று குடும்பத்தினரை மிரட்டுவது  என போலீசு அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, “இதுபோன்று போராட்டங்களை நடத்தினால், முதலமைச்சரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட அந்நிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிடும்” என்றும், “தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு கம்யூனிஸ்டுகள் வேட்டு வைத்துவிட்டனர்” என்றும் “சி.ஐ.டி.யூ. ஒரு ஆலைக்குள் நுழைந்து விட்டாலே அந்த ஆலை நல்லபடியாக இயங்காது” என்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக  தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கானப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினர், தி.மு.க. இணைய குண்டர் படையினர். தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவான மனநிலையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறப்போவதாக ஊடகங்களில் பொய் செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

போராடிய தொழிலாளர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதாகும். சாம்சங் ஆலை நிர்வாகமோ, சி.ஐ.டி.யூ-வின் தலைமையின் கீழ் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்ததோடு, தனது கைப்பாவையாக உள்ள தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் இணைந்து கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறது.

மேலும், தனது கையாளான மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் கமலக்கண்ணன் மூலம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை அங்கீகரித்து பதிவு எண் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மீறி சங்கத்தை கலைக்கும் நோக்கத்தில் நிர்வாக ரீதியாக ஒரு ஆட்சேபனை மனு ஒன்றை கொடுத்து தாமதப்படுத்தியுள்ளது. வேறு வழியில்லாத நிலையில் 86-வது நாள்தான் சங்கம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த நிலையில்தான், தொழிலாளர்கள் தங்களது சங்கத்தை ஏற்க வைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் தொடங்கியதிலிருந்தே போராட்டத்தை பல்வேறு முனைகளில் ஒடுக்கியது தி.மு.க. அரசு. போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்ற தொழிலாளர்களை அராஜகமான முறையில் கைது செய்தது போலீசு. சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டத்தை முடித்துவைப்பதற்காக அமைச்சர்களைக் கொண்டு ஆறுகட்டப்  பேச்சுவார்த்தைகளை நடத்தியது தி.மு.க. அரசு.

அக்டோபர் ஏழாம் தேதி தி.மு.க-வின்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு தொழிற்சங்கத் தலைமையிடமும் சாம்சங் நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.


படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்


அத்துடன் நில்லாமல், சாம்சங் நிறுவனத்தின் பிழைப்புவாத கருங்காலி தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உருவாக்கிய தொழிலாளர் கமிட்டியிடமும் தனியே பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொழிலாளர்களின் எல்லா கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையில் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினார். ஊடகங்களிலும் போராட்டம் முடிவடைந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் போராடும் தொழிலாளர்களோ இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்பிறகு அக்டோபர் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் தலைமையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சாம்சங் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையிலும் சாம்சங் நிறுவனம் இறங்கி வரவில்லை என்பதே உண்மை. “நிர்வாகம் தரப்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.  தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமான பதில் உரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்” என்ற அம்சங்களை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை திரும்பப் பெற்றிருக்கிறது சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம்.

தொழிற்சங்க அங்கீகாரத்திற்காகவும், ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் என தொடங்கப்பட்ட போராட்டம் எந்தக் கோரிக்கைகளையும் சாதிக்காமல், தி.மு.க. அரசிற்கும் சி.ஐ.டி.யூ. நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட சமரசத்தால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த சமரசத்தை, சந்தர்ப்பவாதமாக மூடி மறைக்க மார்க்சிய முலாம் பூசப்பட்ட வார்த்தைகள் மூலம் ‘போராட்டம் வெற்றி, வெற்றி’ என்று தொழிலாளர்களை திசைத்திருப்புகிறது சி.ஐ.டி.யூ.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கப் பதிவு குறித்து கடந்த அக்டோபர் 22-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சங்கப்பதிவிற்கு தமிழ்நாடு அரசு மூன்று வார கால அவகாசம் கேட்டிருக்கிறது. இதற்கு காரணமாக, தொழிற்சங்கத்துக்கும், சாம்சங் நிர்வாகத்திற்குமான கோரிக்கை மனுவின்  மீதான சமரச பேச்சுவார்த்தை நவம்பர் ஏழாம் தேதி நடைபெறவிருக்கிறது என்கிறது. மேலும், இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் ஒரு வாதியாக தன்னை சேர்த்துக்கொள்ள முன்வைத்ததை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் அமைத்துக் கொள்ளலாம், 45 நாட்களுக்குள் தொழிலாளர் நலத்துறை சங்கத்தைப்  பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகளை நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் காலில் போட்டு மிதித்திருக்கின்றன. இதிலிருந்து கார்ப்பரேட் என்று வந்தால், அரசியலமைப்புச் சட்டமே காகிதமாகிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமையைக் காலில் போட்டு மிதிக்கிற தி.மு.க. அரசு, சாம்சங் நிறுவனத்தின் 100 பில்லியன் டாலர் (8,40,747 கோடி ரூபாய்) வருமானத்தில் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற வர்க்கப்பாசத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.


படிக்க:அந்நிய மூலதன நலனைப் பாதுகாக்க சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்கும் திமுக அரசு!


மேலும், தொழிலாளர்கள் மீது நிர்வாக ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பது பேச்சுவார்த்தையின் ஒரு முடிவாகும், உண்மை நிலைமையோ அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படவில்லை,  பல சிறு குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்படும், அந்தப் பயிற்சி எப்பொழுது என்பதை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது நிர்வாகம். இது தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் இனி தொடரும் என்பதற்கான முன்னறிவிப்புமாகும். இவ்வாறு  தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவது குறித்து வாய் திறக்காமல் தி.மு.க. அரசும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்களும் கல்லுளிமங்கன்களாக இருக்கின்றனர்.

12 மணி நேர வேலைச் சட்டம், பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது என தி.மு.க-வின் தொழிலாளர் விரோதப் போக்கில் புதியதாக சாம்சங் தொழிலாளர் போராட்டம்  இணைந்திருக்கிறது. தி.மு.க-வின் பாசிச எதிர்ப்பும், ஜனநாயக உரிமையும்  உழைக்கும் மக்களான தொழிலாளர்களுக்கு இல்லை என்பதை இப்போராட்டம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

எனவே, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த வேலை நிறுத்தப்போராட்டம் என்பது வரவேற்புக்குரியது. ஆனால், அதை தி.மு.க. அரசும் சாம்சங் நிர்வாகமும் கூட்டுசேர்ந்து சதித்தனமாக முடித்துவைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி, இப்போராட்டத்தில் கிடைத்த படிப்பினைகளை எடுத்துக்கொண்டு தொழிலாளார்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்டப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அதைத்தான் தற்போது, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கப் பதிவு குறித்து நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், சாம்சங் நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசின் அணுகுமுறைகள் எடுத்துக்காட்டுகிறது.


ஆதி

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அமரனை ஆதரிக்கும் சீமான்! வெட்கமா இல்லையா? RSS கொண்டாடுது! ஸ்டாலினும் அழுகிறார்! | தோழர். வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக் காரணம்!

ல்லை தாண்டினார்கள்’ என்ற காரணத்தைச் சொல்லி இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வது, சுட்டுக் கொல்வது, விசைப்படகுகளை சிறைப்பிடிப்பது-நாட்டுடைமையாக்குவது ஒருபக்கம்; தமது உயிருக்கும், பறிக்கப்படும் படகுகள் – வலைகள், வாழ்வாதாரங்களுக்கு நீதிக் கோரி தமிழ்நாட்டு மீனவர்களின் போராட்டங்கள் மறுபக்கம்; தமிழ்நாட்டு மீனவர்களால் தமது மீன்பிடி வலைகள், மீன்வளம், கடல்வளம் அழிக்கப்படுவதாக சமீபகாலங்களில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் நடத்தும் போராட்டங்கள் இன்னொரு பக்கம் என சுமார் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பது ஏன்? தாங்களே ஏற்றுக்கொண்ட தீர்வுகளை தமிழ்நாட்டு மீனவர்கள் ஏன் நடைமுறைப்படுத்துவதில்லை? தீர்க்க முயற்சி எடுக்காத இந்திய – இலங்கை அரசுகளின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டிய நேரமிது.

தொடரும் தாக்குதல்கள்:

இவ்வாண்டில் பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வதையும் தாக்குதல் நடத்துவதையும் இலங்கைக் கடற்படை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 324 மீனவர்களைக் கைது செய்திருக்கிறது இலங்கைக் கடற்படை. நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் உட்பட 44 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. ‘‘கடந்த 2018 முதல் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு படகு கூட விடுவிக்கப்படவில்லை.  சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள் இலங்கை அரசால் நாட்டுடமையாக்கப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 125 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’‘ என்கின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.

கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி 19 மீனவர்களைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை. இதில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜான்சன் என்ற ஓட்டுநருக்கு ஆறு மாத சிறைதண்டனை விதித்திருக்கிறது இலங்கை நீதிமன்றம். ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்றும், மீண்டும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதால் ஆறு மாத சிறைதண்டனை விதித்திருப்பதாகவும் கூறுகிறது இலங்கை நீதிமன்றம். முதல்முறை கைது செய்யப்பட்டால் பிணையில் விடலாம் என்றும், அடுத்தடுத்த முறைகளில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற சட்டத்தை 2018-ஆம் ஆண்டில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது.

தங்கள் மீதான இவ்வன்முறைக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர். இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்புக் கொடி கட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும், இலங்கை ரோந்துக் கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதிக் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் மீனவ மக்கள். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு  ரூ.10 லட்சத்தை இழப்பீடு நிதியும், ஒன்றிய அரசுக்குக் கடிதமும் எழுதிவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டது தி.மு.க. அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு என்று பேசுகின்றன தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் இருந்த தி.மு.க-அ.தி.மு.க-வும் சரி, காங்கிரஸ்-பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள இதர கட்சிகளும் தங்களது அரசியல் லாபத்திற்காகவே மீனவர் பிரச்சினைகளைப் பேசுகின்றன. 40 ஆண்டுகளாக நம் மீனவர்கள் அனுபவிக்கும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு, கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதையும் இவர்கள் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்போதுகூட பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள பா.ம.க, கூட்டணிக்கு பங்கம் வராமல் இப்பிரச்சினைக் குறித்து அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறது.

விசைப்படகு – நாட்டுப்படகு பிரச்சினை:

பாம்பன் – மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியா-இலங்கைக்கிடையேயான கடல் எல்லையின் தூரம் வெறும் 12 கடல்மைல் மட்டுமே. இந்தப் பகுதியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டும் பிரச்சினை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. குறிப்பாக, விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களே பெரும்பாலும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதோடு, கடல் வளத்தை அழிக்கும் இழுவை வலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் குற்றச்சாட்டாகும்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

இந்திய – இலங்கை மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே நாட்டுப்படகு – விசைப்படகு மீனவர்கள் இடையிலான மோதல்கள் இருந்து வருகின்றன. கரையிலிருந்து ஐந்து கடல்மைல் தொலைவுவரை விசைப்படகுகள் மீன் பிடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. விசைப்படகுகள் இதை மீறும் நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்படைகின்றனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கடற்பரப்பில் இரண்டுவகைப் படகுகளும் ஒரே சமயத்தில் மீன்பிடித்தாலும் கூட, அதிகத்திறன் கொண்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தீர்மானிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே மீன்பிடித்துத் திரும்புவதால், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளில் மோதி அறுத்துவிடுகின்றன என்ற பிரச்சினை தொடர்ச்சியாக உள்ளது. மேலும், ஐந்து கடல்மைலுக்கு உட்பட்ட கரைக்கடல் பகுதிகளிலும் விசைப்படகுகள் மீன்பிடிப்பதும், அவர்களில் சிலர் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதும் மோதலுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளன.

பாம்பன், இராமேஸ்வரம் பகுதியிலும் கூட இத்தகைய பிரச்சினைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. வாரத்தில் நான்கு நாட்கள் நாட்டுப்படகுகளும், மூன்று நாட்கள் விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டுமென முறைப்படுத்திய பிறகு இப்பிரச்சினை குறைந்துள்ளது என்கின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.

விசைப்படகுகளும், எல்லைத் தாண்டுதலும்:

1960-களில் இந்திய அரசு, நார்வே நாட்டு உதவியுடன் இழுவை விசைப்படகுகளை அறிமுகம் செய்தது. அதுவரை பாரம்பரியமாகவும், உள்நாட்டுத் தேவைக்காகவும் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சந்தைக்காக மீன்பிடிப்பதை நோக்கித் தள்ளியது ஒன்றிய அரசு. இதற்காக மானியங்களும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மீனவர்களிடையே விசைப்படகு முதலாளிகள், தொழிலாளர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் என்ற வர்க்க அடிப்படையிலான வேறுபாடு உருவாகியுள்ளது.

இழுவை விசைப்படகுகள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் கடல் உணவுக்கான சந்தை மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறால் வகைகள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, பிரிட்டன், மத்திய ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒன்றிய அரசு செய்திக்குறிப்பின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ. 60,523.89 கோடி மதிப்புள்ள 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவு  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக வருவாய் ஈட்டக்கூடியது பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியே. 40 சதவிகித இறால் ஏற்றுமதியின் மூலம் 60 சதவிகிதம் வருமானம் ஈட்டப்படுகிறது.

மேலும், இந்திய அளவில் கடல் உணவு ஏற்றுமதியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறால்கள் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட 12 கடல்மைல் பரப்பில் அதிகம் கிடைப்பதில்லை. இவை கச்சத்தீவை அடுத்த இலங்கைக் கடற்பரப்பில்தான் பெருமளவில் உள்ளன. எனவே கச்சத்தீவைத் தாண்டாமல் இவற்றைப் பிடிக்க முடியாது. அதேவேளையில், இந்த மிகப்பெரும் மீன்சந்தையை ஒன்றிய அரசும், ஏற்றுமதி நிறுவனங்களும், விசைப்படகு முதலாளிகளும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இவர்களின் நலனுக்காகவே, அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் தமிழின விரோத இலங்கை அரசின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்திய ஒன்றிய அரசின் துரோகம்

தமிழ்நாட்டு மீனவர்களை காக்கை குருவிகள் போல இலங்கை அரசு சுட்டுக்கொல்வது என்பது  தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததிலிருந்தே தொடங்குகிறது. இலங்கையை தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே 1974-இல் இந்திராகாந்தி- ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு ஒன்றிய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.

நிறைவேற்றப்பட்ட இவ்வொப்பந்தத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையுண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு 1976-இல், இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே கச்சத்தீவு குறித்து மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் கடல் எல்லைகளை வரையறுத்ததோடு, இவ்விரு நாடுகளும் தத்தம் கடற்பகுதியில் இறையாண்மை உள்ளவர்கள் என்று குறிப்பிட்டது. இவ்வொப்பந்தத்தில் யாத்ரீகர்கள் மற்றும் மீனவர்கள் உரிமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதன் மூலம், 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட பல சலுகைகள், குறிப்பாக கச்சத்தீவில் மீன்பிடிப்பது போன்றவை மறைமுகமாகப் பறிக்கப்பட்டன. கச்சத்தீவின் மீதான தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை முற்றாகப் பறித்த இந்த ஒப்பந்தத்தை இரகசியமாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.

இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு காங்கிரசும்-தி.மு.க-வும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான் காரணம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டு மக்களிடம் ஓட்டுவாங்குவதற்காக  பா.ஜ.க. காவி கும்பல் போட்ட நாடகத்தை தமிழ்நாடே பார்த்தது. தனது பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், இலங்கையில் கப்பல் கட்டுவது மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை தனது எஜமானன் அதானிக்குப் பெற்றுத் தருவதிலேயே குறியாக இருந்தது மோடி அரசு. ஆனால், அதே பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க  மோடி அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் என்ன? இதே காலகட்டத்தில், இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான, அதிகாரிகள் மட்ட அளவிலான இந்திய-இலங்கைக் கூட்டுப் பணிக்குழுக்கூட்டம் 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. இக்கூட்டங்களில், கச்சத்தீவின் மீதான தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை  நிலைநாட்டுவதற்குரிய எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தாமல் தனது பங்கிற்கு தமிழ்நாட்டு மீனவர்களின் முதுகில் குத்தியது மோடி அரசு.

2022-இல் நடைபெற்ற கூட்டத்தில் இருநாட்டு கப்பற்படையும் தத்தம் பகுதிகளில் ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, கடல்பாசி வளர்ப்பு, கடல் சார் உயிரின வளர்ப்பு, பல்வேறு மீன் வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தல் போன்ற மாற்று வாழ்வாதாரக் கட்டமைப்புகள் உருவாக்குதல் ஆகியவைகளே தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டுவதைத் தடுக்க இந்திய அரசு மேற்கொண்ட ‘முயற்சிகளாகும்’. இவை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிமையுள்ள, பாரம்பரிய கடல்பகுதிகளிலிருந்து விரட்டுகிற நோக்கத்திலானவையாகும்.  2016 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு கூட்டங்களிலும் கடல்சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளைத் தடைசெய்வது-குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இவை எதுவும் நடைமுறைக்குச் செல்லவில்லை. இதிலிருந்தே தமிழ்நாட்டு மீனவர்களின் மீதான மோடி அரசின்  ‘அக்கறை’யைப் புரிந்துக்கொள்ள முடியும்.

சுமார் இருபதாண்டுகளாக, விசைப்படகுகள் – இழுவை வலைகளைக் கைவிட கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே தவிர, மாற்றம் ஏதுமில்லை என்பதே இலங்கை தமிழ் மீனவர்களின் கோபத்திற்கும் காரணமாக உள்ளது.

தற்போதைய மூன்றாவது ஆட்சிக்காலத்தில்கூட இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையையும் தாமாக முன்னெடுக்கவில்லை மோடி அரசு. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும், அதற்காகக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து இருநாட்டு மீனவர் தரப்பிலிருந்தும், தமிழ்நாட்டுக் கட்சிகள் சார்பிலிருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன்பிறகே, இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பறிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதார உரிமை:

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் சிங்கள இனவெறி அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தப் பிறகு, இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மீனவர்கள் மீன்பிடித்தலுக்குத் திரும்பினர். இவர்கள் பாரம்பரிய செவுள் வலை கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். இதிலிருந்தே இலங்கையின் நாட்டுப்படகு மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர்களுக்குமான முரண்பாடு ஏற்படுகிறது.

இருநாட்டு மீனவர்களும் மிகக்குறுகிய மன்னார் வளைகுடா பகுதியில்தான் மீன்பிடிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, தமிழ்நாட்டு மீனவர்களின் விசைப்படகுகளால் இலங்கைத் தமிழ் மீனவர்களது வலை அறுத்தெறியப்படுவதும், மீன் குஞ்சுகள், முட்டைகள், பவளப்பாறைகள் என அனைத்தும் அரித்தெடுக்கப்படுவதால் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாவது என்ற பிரச்சினையும் முன்னுக்கு வந்தது. இழுவை விசைப்படகுகளின் மூலம் மீன்பிடிப்பதால் ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மீன்கள் கிடைப்பதில்லை என்கின்றனர் இலங்கைத் தமிழ் மீனவர்கள். எனவே, விசைப்படகுகளைக் கொண்டு இப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மற்றபடி நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை அவர்கள் ஒரு  பிரச்சினையாகக் கருதவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று யாழ்ப்பாண மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், விசைப்படகுகள் மூலம் மன்னார் வளைகுடாப் பகுதியில் 80 அடி ஆழம் வரை – கடல் தரையை ஒட்டி –  மீன்பிடிக்கப்படுகிறது. இதனால் கடலின் தரைப்பகுதியில் உராய்வு ஏற்பட்டு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறுகிறது. இதனால் மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்வு கேள்விக்குள்ளாகிறது. உலகெங்கிலும் விசைப்படகுகளின் மூலமாக ஆண்டிற்கு 370 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இது தவிர்க்க முடியாத அளவிற்கு மிகப் பெரியது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 1996-2020 வரை 8.5-9.2 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டுள்ளது என்கிறது ஒரு ஆய்வு. மேலும், விசைப்படகுகள் பயன்படுத்துவதை  ‘‘கடல் காடழிப்பு’‘ (Marine deforestation) என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது சரிசெய்யப்பட முடியாத அளவிற்கான தீங்கை கடல்வாழ் உயிரினங்களுக்கும், பருவகாலத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே புவி வெப்பமடைவதால் பருவகால மாற்றங்களும், பெருமழை- அதீத வெப்பம்-வெப்ப அலை வீசுவது என பேரிடர்களே இயல்புநிலையாக மாறியிருக்கிற இந்த சூழலில்,  மேலும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது புவிக்கோளத்தின் இருப்பிற்கே ஆபத்தானதாகும். எனவே, கடல் சூழலியலுக்கும், தமிழ்நாட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளைப் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பது காலத்தின் அவசியமாகும்.

மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதும்,  தமிழ்நாட்டு மீனவர்களின் விசைப்படகுகளால் கடல் சூழலியலும், இலங்கைத்  தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுமே இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான பிரச்சினையின் மையமாகும். இப்பிரச்சினையை இருநாட்டு மீனவர்களும் தங்களுக்கிடையே பேசித் தீர்ப்பதன் மூலமே சரிசெய்ய முடியும். கச்சத்தீவில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏற்ப கச்சத்தீவு பகுதியில், தமிழ்நாட்டு-இலங்கை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிப்பது என்ற வகையில் இருநாட்டு மீனவர்களும் ஓர் ஒப்பந்தத்திற்கு வர முடியும். கடல் சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளை கச்சத்தீவு பகுதியில் தடை விதிக்க வேண்டும். அதேவேளை, விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்திய எல்லைக்குட்பட்ட இதர கடல்பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமையை இந்திய அரசு வழங்க வேண்டும். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை மீனவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுக்கு வருவதே பொருத்தமாக இருக்கும்.

கடலை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்தியங்கள் – எதிரிகளாக்கப்படும் மீனவர்கள்:

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான கடல்பகுதியானது பல்வேறு வளங்களைக் கொண்டதாகும். புவிசார் அரசியல்ரீதியாக ஏகாதிபத்திய-பிராந்திய மேலாதிக்க நலனுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். எனவேதான், இலங்கையில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்கள் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டாபோட்டியின் விளைவே இலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களாகும்.

அந்த வகையில், கடல்வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும், மேலாதிக்க நலனிலிருந்தும் பல்வேறு திட்டங்களை இந்திய-இலங்கை அரசுகள் திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளன. இந்திய அரசு நிறைவேற்றியுள்ள கடல்வள மசோதா-2021, சாகர்மாலா திட்டம், கடலுக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்றவை கடல்வளங்களை கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதற்கானவையே. இந்த நோக்கத்திலிருந்துதான் தமிழ்நாட்டு மீனவர்களைக் கடலிருந்து விரட்டத் துடிக்கிறது இந்திய அரசு. இதற்கு ஒரு கருவியாக இலங்கை அரசையும் பயன்படுத்திக் கொள்கிறது. எனவேதான், இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொன்றாலும், சிறையிலடைத்தாலும் இந்திய அரசு கண்டுகொள்வதில்லை. கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டது குறித்தும் மறுபரிசீலனை செய்வதுமில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, தமிழ் மீனவர்கள் அதிகமுள்ள வடமாகாணத்தில் புத்தாளம்-மன்னார் பகுதிகளுக்கிடையேயான மாவட்டங்களில்  5,000 ஏக்கர் கடற்பரப்பில் கடல் அட்டை (Sea cucumber) பண்ணை அமைத்து வளர்ப்பதற்கு குயி லான் என்ற சீன நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இந்த கடல் அட்டைப் பண்ணையானது இயல்பான மீன்களின் மறு உற்பத்தியைப் பாதிக்கக்கூடியதாகும். கடல்வளத்தை நாசமாக்கக்கூடிய இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 2022-இல் இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும், இந்த கடல் அட்டை வளர்ப்பானது சீனா கட்டமைக்கவுள்ள கடல்வழியிலான பட்டுப்பாதைத் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இருநாட்டு மீனவர்களது கடல் உரிமையைப் பறிப்பதாகும்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க-சீன பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கடல்வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே இலங்கை-தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கப்படுகின்றனர். இந்த கார்ப்பரேட் சூறையாடலிருந்து கடலை மீட்க, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராக இந்திய-இலங்கை மீனவர்கள் ஒன்றுபட்டு போராடுவதே ஒரே தீர்வு.


அப்பு

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ரசியப் புரட்சி நாள்: சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!

ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்!

சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!

கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது.
நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை!

வ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல் உழைப்பவர்கள் அரசாக உதயமானது. இதனைப் பார்த்த உலக முதலாளிகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அவரவர் நாட்டு மக்களை திருப்திப்படுத்த புதிய சட்டங்கள், போலித்தனமான சீர்திருத்தங்கள், சலுகைகள் காட்டினார்கள்!

  • ரசிய மக்கள் சந்தித்த வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஜார் மன்னன் – முதலாளிகளின் சுரண்டல் – சொத்துக்குவிப்பு, அடக்குமுறைகள் மொத்தமாக ஒழிக்கப்பட்டது!
  • நிலப்பகிர்வு – கூட்டு விவசாயம், மின்சாரமயம், தொழில்துறை வளர்ச்சி மூலம் உண்டான உபரியை பொதுவுடைமை என்றதோடு நில்லாமல் ஏழை நாடுகளுக்கும் பகிர்ந்து தந்தனர்!
  • 20 வயது வரை கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – வீடு, மருத்துவம், சுகாதாரம், ரேசன் மூலம் தரமான உணவு வினியோகம் என அனைத்தையும் லெனின் தலைமையிலான சோசலிச அரசு பொறுப்பு ஏற்றுச் சாதித்தது!
  • சோசலிசக் கொள்கை நடைமுறையால் போட்டி – பொறாமை, திருட்டு – பதுக்கல், கொலை – கொள்ளை சமூக குற்றங்கள் ஒழிந்தும் அவசியமின்றியும் சிறைச்சாலைகள் காலியாகின!
  • தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 36 மணி நேர வேலை எனத் தீர்மானிக்கப்பட்டது. கூலிக்காக உழைப்பது என்றில்லாமல் நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைத்ததன் மூலம் ஐந்தாண்டு திட்டங்களை மூன்றாண்டுகளில் நிறைவேற்றிச் சாதித்தனர்!
  • உலகில் முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமையும், பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையும், அரசியல் உரிமைகள், பேறுகால விடுமுறைகள் வழங்கி பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது!
  • பொதுசமையல் முறை திட்டம் நடைமுறைப்படுத்தி அடுப்படியிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளித்தது சோசலிச அரசு.
  • சோசலிச கொள்கையால் உற்பத்தி பெருகியது. – தனிச்சொத்துடமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் திருட்டு – பதுக்கலுக்கு அவசியமில்லை என மக்கள் பண்பில் மாற்றம் ஏற்பட்டது.
  • விலைவாசி உயர்வு தடுக்கப்பட்டது. மொத்தத்தில் வறுமை ஒழிந்து கல்வி – அறிவியல் ஆராய்ச்சி வளர்ந்து மேலும் தொழிற்துறை – உற்பத்தி, வளர்ச்சி விண்ணைத் தொட்டது!
  • உலகின் பல நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்தது சோசலிச அரசு!
  • சோசலிச ஆட்சியின் சாதனைகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் எதிரொலியாக பகத்சிங் போன்ற இளைஞர்களை விடுதலை போராட்டக் களம் ஈர்த்தது!

நேற்று … இன்று… நாளை?

மறைக்கப்படும் வரலாற்றை அறிவோம்!
சார்பியல் விதிகளைப் புரிந்து கொள்வோம்!
360 கோணங்களில் சிந்திப்போம்!
சுரண்டலையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

  • 1931: உலக சுற்றுப் பயணம் சென்று வந்த பெரியார், கலைவாணர் NS கிருஷ்ணன் (பயணம் 1951) தொடங்கி காமராஜர் (பயணம்1966), கண்ணதாசன் வரை இப்புவிப்பரப்பில் சொர்க்கம் ஒன்றை ரசிய தொழிலாளர்கள் உருவாக்கிவிட்டதாக கூறினார்கள்!
  • 1917-ல் மற்றொரு பக்கம் ரஷ்ய சோசலிச புரட்சியின் விளைவாக உலகெங்கும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலை போராட்டம் தீவிரமானது!
  • 1919-ல் ரசியப் புரட்சி எதிரொலியாக, குறிப்பாக இந்தியாவில் மான்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மூலம் இரட்டை ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டது. அரசு கட்டமைப்பில் (நாடாளுமன்றத்தில்) மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு என மாற்றங்களைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர் அரசு! (இன்றோ அந்த போலி ஜனநாயக கட்டமைப்பின் யோக்கியதை அம்பலப்பட்டுப் போய் சந்தி சிரிக்கிறது)
    1923 – தொழிலாளர் இழப்பீடு சட்டம்,
    1926 – தொழிற்சங்க சட்டம்,
    1936 – சம்பளம் வழங்கல் சட்டம்
    என சில சட்ட உரிமைகள் வழங்கி தொழிலாளர்களை கம்யூனிச புரட்சிகர சிந்தனைகளிலிருந்து திசைதிருப்பியது ஆங்கிலேயர் அரசு.
  • 1930 – ல் முதலாளித்துவ கொள்கையைப் பின்பற்றிய அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலால் நெருக்கடிகள் சூழ்ந்தது. அவற்றின் காலனி நாடுகளில் பஞ்சம், பசி, பட்டினியால் பல லட்சம் மக்கள் இறந்து போனார்கள். ரஷ்யாவில் முதலாளிகளின் சுரண்டல் தடை செய்யப்பட்டதால் துளியும் பாதிப்பு இல்லாமல் ரஷ்ய மக்கள் நிமிர்ந்து நின்றார்கள்!
  • 1939-ல் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் முதலாளிகளின் அரசுகளால் சந்தை பிடிக்கும் போட்டியில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது!
  • 1945 – ல் ஹிட்லர் முசோலினி பாசிச கும்பலை ஒழித்துக் கட்டி, உலகை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான செம்படை!!
  • 1947 – ல் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் காலனி ஆட்சிகள் முடிவுக்கு வந்து சுதந்திரம் என அறிவிக்கப்பட்டது, பெயரளவிலான, அரைகுறை முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.
  • 1949 – ல் சீன பொதுவுடைமை கட்சி மாவோ தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் மக்கள் சீனம் உதயமானது. பொதுவுடைமை கொள்கை – தன்னிறைவு பொருளாதாரம் விதைக்கப்பட்டது. இன்று பொருளாதார வல்லரசாக அடிப்படையாக உள்ளது!
  • 1953-ல் தோழர் ஸ்டாலின் மறைவு,
    1975-ல் தோழர் மாவோ மறைவு.
    மாபெரும் இரு தலைவர்களின் மறைவுக்குப் பின் அந்நாட்டு அரசுகளின் இயல்புகள் மாறியது!
  • 1991-ல் சோவியத் கூட்டமைப்பு பிரியாதவரை தொழிலாளர்கள், உழைக்கும் பிரிவினரின் உரிமைக்குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. சட்ட உரிமைகள் கிடைத்தது. USSR உடைந்த பிறகு உலக அரங்கில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியது!
  • 1995-ல் அமெரிக்கா தலைமையிலான W.T.O மூலம் GATT ஒப்பந்தம் இந்தியாவில் போடப்பட்டு மீண்டும் பொருளாதார காலனி ஆக்கும் சதித்திட்டங்கள் அரங்கேறியது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற பெயரில் கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டல் அனுமதிக்கப்பட்டது. மெல்ல, மெல்லச் சட்ட உரிமைகள் கூட மறுக்கப்பட்டது.
  • 2014-ல் இந்தியாவில் பிற்போக்கு, சுரண்டல் சொத்துடைமை வகுப்பினரின் RSS-BJP தலைமையில் பாசிச ஆட்சி அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 44 தொழிலாளர் சட்டங்கள் உட்பட நூற்றுக்கணக்கான சட்டங்கள் திருத்தப்பட்டு, தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு – குறு தொழில் முனைவோர் பொதுமக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது!
    கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில்துறை, வங்கி, தொலைப்பேசி, எரிபொருள், இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், ஜவுளி, சிறு – குறுந்தொழில் என எல்லாம் கார்ப்பரேட் கொள்ளைக்குத் திறக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்று பொய் பேசுகின்றனர்!கார்ப்பரேட் சுரண்டல் கொள்கையால் விலைவாசி உயர்வு, வேலை நிரந்தரமின்மை, கல்வி – உழைப்புக்கேற்ற கூலியின்மை, நாடோடிமயமான வாழ்க்கை, பெண்கள் பாதுகாப்பின்மை, கட்டற்ற போதை – ஆபாசம் – சீரழிவு என நாட்டு மக்களைச் சுற்றிவளைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையே மக்களைப் பிரிக்க ஜாதி – மத வெறுப்பு அரசியலைத் தீவிரப்படுத்துகின்றனர்!

உழைக்கும் மக்களைப் பாதுகாக்க
இயற்கை வளங்களைப் பாதுகாக்க
மீண்டும் தேவை, தொழிலாளர் தலைமையிலான சோசலிசப் புரட்சி!


தொழிலாளர் சிந்தனைகள்
07.11.2024

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram