Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 481

தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !

3

“ஜீ” யின் கதை

ந்தப்பதிவு தற்போது பரவலான விளிப்புச்சொல்லான “ஜீ” பற்றிய புள்ளிவிபரமும் துள்ளிய விவரணைகளும் கொண்டதில்லைதான், ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் தர்க்கரீதியான இந்த உண்மைகளை நிராகரிக்க முடியாது.

அது 90 -களின் தொடக்கம் பள்ளி முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பள்ளிப்பையுடன் பஜாரில் முக்கிய சந்திப்பிலுள்ள எங்கள் சற்றே பெரிய பெட்டி(புத்தக)க்கடை கடைக்கு வந்து சிலமணிநேரம் வேலை செய்து வீடு செல்வது கட்டாயம். அதிலும் விடுமுறையில் பகலிரவு வியாபாரம்தான், பதின் தொடக்கத்திலேயே பள்ளி, வேலை என்ற இருவாழ்வி முறை.

வியாபார இடைவெளியிலெல்லாம் கண்ணில்படுவது, வாசிப்பதும் பத்திரிக்கைகள்/தினசரி/ வால்போஸ்டர் தான் இன்னும் சொல்லப்போனால் அது சினிமா /பொதுக்கூட்ட / அரசியல் போஸ்டர்கள் மத்தியில் உண்டு உறங்கும் வாழ்வு. ஒவ்வொரு நாளும் அன்றிரவு அப்பகுதியில் சுவரொட்டப்படவேண்டிய போஸ்டர்களை எங்கள் கடையில் கொடுத்து வைப்பார்கள்.

அரசியல் போஸ்டர் லே-அவுட் வண்ணங்கள் அடிப்படையில் எளிதாக மூன்று பெரும் பிரிவில் வந்துவிடும்.

கருப்பு சிவப்பு மிகுவது திமுக-அதிமுக, மூவர்ணம் மிகுவது காங்கிரஸ், சிவப்பு கம்யூனிஸ்ட் இம்மூன்று பெரும்பிரிவுகள்தான் தமிழகத்தின் அன்றைய அரசியல் அன்றாடங்கள், அன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசியல் பரப்புரைகள் மக்களைச்சேர பத்திரிக்கை, சுவரொட்டி, பொதுக்கூட்டங்கள்தான் வழி. தொலைக்காட்சி தெருவுக்கு ஒன்றாக அப்போதுதான் வர துவங்கியிருந்தது இணையம் என்ற சொல்லே புழக்கத்தில் வரவில்லை.

அதிலும் அப்போஸ்டர்களில் பெயர்களில் முன் பின் விளிப்பு வார்த்தைகளாக திரு – உயர்திரு அவர்கள் இருக்கும் கம்யூனிஸ்ட் போஸ்டர்களில் “தோழர் ” அடைமொழி தவிர்த்து பார்க்க முடியாது.

அந்த சமயத்தில்தான் இந்திய அரசியலின் முக்கிய எதிர்மறை நிகழ்வாக பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தேறியது, அதன்பின்தான் நான்காவதாக காவி நிற போஸ்டர்கள் நகரில் (நாடெங்கும் அதன் பின்தான் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை) பரவலாக தென்பட ஆரம்பித்தது.

அப்போஸ்ட்டர்களின் பிரதான வார்த்தை அத்வானிஜீ. பிஜேபி ” ஜீ” என்ற அடைமொழி பிரதானப்படுத்துவதை காட்டிலும் அதேகாலகட்டத்தில் தமிழகமெங்கும் கிளை பரப்பிக்கொண்டிருந்த பிஜேபி யின் துணை அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்த “ஜீ” யை தனது போஸ்டர்களில் பிரதானப்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் இந்து முன்னணி போஸ்டர்களின் மைய வார்த்தையே “இராமகோபாலன்ஜீ “தான்.

மத அடிப்படைவாத இயக்கங்கள் உறுப்பினர் சேர்க்கையும் ஆங்காங்கே இயக்க கூட்டங்களும் பெருகத்தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட நிற துண்டை அணிந்து கொள்வது, திலகமிட்டுக்கொள்வது, “ஜீ” சேர்த்து சக உறுப்பினரை விளிப்பது என தனி அடையாளப்படுத்துதல் அங்கிருந்துதான் தமிழகத்திற்க்குள் பரவத்துவங்கியது

இந்த “ஜீ” மனதில் ஆழப்பதியும் ஒரு சம்பவம் எனக்கு நடந்தேறியது, அது 95 ஆல்லது 96 -ஆகா இருக்கலாம் உத்தமபாளையத்தில் மர்மமான முறையில் இந்துமுன்னணி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்ட பகுதிகளில் பரபரப்பு பதற்றம் நிலவியது.

ஒரு கொலையின் நோக்கம் சொந்த கொடுக்கல் – வாங்கல், தொழில் போட்டியா…? என உண்மை வெளிவரும்முன்னே சில அமைப்புகள் வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து ஆதாயம் அடைய துடித்த துவக்கக்காலம் அது. அன்றைய தினமே அதனை கண்டித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமாக திட்டி போஸ்டர்களை நகரெங்கும் இந்து முன்னணி – பிஜேபி ஒட்டிக்கொண்டிருந்தது.

இங்கு அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகள்தான் அந்த போஸ்டர்களின் பிரதான வாசகங்கள் ( பாளையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்த ******** தீவிரவாத நாய்களை கைது செய் – இவன் – இந்து முன்னணி , தலைவர் இராமகோபாலன்ஜீ “) அன்று இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்தபின் நான் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.

போஸ்டர் கும்பல் மூடிய கடைகளில் கதவுக்கு ஒன்றாக ஒட்டிக்கொண்டுவந்து எங்கள் கடை வந்ததும் “பாய் இன்னும் கடை அடைக்கலயா…? சரி 4 சர்பத் போடு”, என்று சொல்லிவிட்டு போஸ்டர்களில் பசை தடவ தொடங்கினர் (சர்பத்துக்கு பணம் தந்திருக்க மாட்டார்கள் என்பது நான் இங்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை ) அவர்கள் ஏற்கனவே பஜாரில் வெவ்வேறு கடை ஊழியர்களாக எனக்கு அறிமுகமானவர்கள்தான், ஆனால் இன்று அவர்கள் சிரிப்பில் ஒரு நக்கல் இருந்தது, வியாபார மும்மரத்தில் நானும் சர்பது கொடுத்துவிட்டு மீதி வேலைகளை முடித்து கடை சாத்த வெளிஇறங்கி ஒருகணம் அதிர்ந்தேன்.

மற்ற இடங்களில் கதவுக்கு ஒன்றாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எங்கள் கடையில் மட்டும் ஸ்டால்களிலும் சுற்று சுவர்களிலும் முழுவது ஒட்டி மூடியிருந்தார்கள் அதுவும் அநாகரிக வார்த்தைகள் கொண்ட போஸ்டர், அந்த பஜாரில் எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியுமளவுக்கு.

அனுமதி பெறாமல் ஸ்டாலில் ஒட்டியது தவறு என்பதை கூட விட்டுவிடலாம், ஆனால் இது காழ்ப்புணர்வுடன் கூடிய அநியாயமாகப்பட்டது, விடிந்தால் ஊரே “பாய் கடைய எப்படி போஸ்டர்ல கவர் பண்ணிருக்காங்க பாத்தியா..?” என்று எள்ளி நகைக்க துவங்கிவிடுவார்கள். தேவையே இல்லாமல் கடை பெயர், குளிபானவிளம்பர ஸ்டாலில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழிக்க தொடங்கினேன், சிறிது நேரத்தில் திரும்பி வந்த போஸ்டர் கும்பல் கூச்சலுடன் வந்து என்னை சுற்றி வளைத்து நெஞ்சு சட்டையை பிடித்து ஸ்டாலோடு இறுத்தி நிறுத்தி “ஏன்டா துலுக்கா …… ” எனத் துவங்கி வன்மத்துடன் திட்டி தீர்த்ததை இங்கு எழுதிட முடியாது.

” பிரச்னை முடியுறவற எங்க போஸ்ட்டர தொட்ட பஜார்ல கடை வச்சுக்குறமாட்டா… பாய் விடியிறதுக்குள்ள கடைய காலி பண்ணிடுவாம் … ” என்று மிரட்டி நகர்ந்தனர், அப்போது அந்த பகுதியில் பணியிலிருந்த பாரா போலீஸும் இந்த நிகழ்வை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அதே போலீஸ்தான் சிலமாதங்களுக்கு முன் சில கம்யூனிச அமைப்புகளின் அரசை நேரடியாக எதிர்த்த வாசகங்கள் கொண்ட (விவசாயிகள் விடுதலை முன்னணி – புதிய ஜனநாயகம் ) போஸ்டர்களை நான் கடையில் வைத்து இரவில் சுவரொட்டுபவர்களுக்கு வழங்குவதை பார்த்து, ” பாய் இனிமே இவங்களோட சவகாசம் வச்சா உன்னையும் ஒரு கவனிக்க வேண்டியிருக்கும் ….” என மிரட்டினார்கள்.

ஆனால் அவர்களே அன்று சமூக வெறுப்புணர்வு போஸ்டர் கும்பலின் அராஜகத்தை வேடிக்கை பார்த்தபடியிருந்தனர். அன்றிரவு அவமானமும் கோபமும் இயலாமையும் எனனை பீடித்திருக்க, அந்த நாற்சந்தியில் நான் கிழித்தெறிந்த போஸ்டர்களில் “ஜீ” மட்டும் காவி நிறத்தில் பளிச்சென்று என் கடையின் சுவற்றில் பிடிவாதமாய் ஒட்டியிருப்பதை வெகுநேரம் பார்த்தபடி நின்றிருந்தேன்.

ஆனால் தமிழ் பொதுச்சமூகம் “ஜீ” யை பரவலாக பயன்படுத்துவதில் மேலேசொன்ன எந்த அரசியல் – அடிப்படைவாத கலாச்சாரப்பிரச்சார நோக்கமும் இல்லைதான். போஸ்டர்களைக் கடந்து செவிவழி பழகி இன்று ஒரு பொதுச்சொல்லாக மாற்றப்பட்டு விட்டது, பேச்சு வழக்கில் மரியாதை பிரச்சனை இல்லாமல் ஒருவரை விளிக்க இந்த ஒற்றை வார்த்தை எளிதாக இருப்பதும் ஒரு காரணம். “அண்ணா”, “தோழா”, “நண்பா” -வில் இருக்கும் இணக்கம் நிச்சயம் இந்த “ஜீ” யில் இருக்காது.

இதனை பற்றி சமீபத்தில் WHATSAPP குழுவில் ஒரு நண்பனிடம் உரையாடும்போது “இது காந்தி”ஜி” நேரு”ஜி” காலத்திலேயே இருந்துச்சே” என்றார், இருந்தது, ஆனால் அது திராவிட மொழி கலாச்சாரத்தில் கலப்பதற்கான எந்த செயல் முனைப்பும் இல்லை, வலுக்கட்டாயமாக தமிழர்கள் பெயருடன் தொங்கிக்கொண்டிருக்கவில்லை வடநாட்டு தலைவர்கள் பெயருடன் நின்றுகொண்டது, இங்கு வந்து தொழில் செய்யும் வடநாட்டவருடனான பேச்சு தொர்புக்கு மட்டும் நமக்கு உதவியது ” வா முத்துச்சாமிஜீ இன்னைக்கு களையெடுக்க போவோம்” ” மாயாக்கஜீ இன்னைக்கு நல்லமநாயக்கர்ஜீ தோட்டத்துல அறுவடை இருக்காம் ஜீ ” என்ற சொல்லாடல் நம் தந்தை தலைமுறையில் இல்லையே. ஆனால் இன்று பொதுவெளியில் புதிதாக ஒருவரிடம் அறிமுகமோ பேச்சுதொடங்களோ எந்த தடங்களுமின்றி “ஜீ”யில் தொடங்கப்படுகிறது.

இன்னொரு நபர் “ஹாய்” “சார் ” “மேடம் ” “குட் மார்னிங்” னு இங்கிலிஷ் கலந்து பேசுறத நிப்பாட்டிட்டு வாங்க அப்புறம் “ஜீ ” மாதிரி வடமொழி கலப்ப பத்தி பேசலாம்” என்றார். இதுவும் சரி எனினும் பல பத்தாண்டுகளாக ஆங்கிலம் நம் பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகிவிட்டிருக்கிறது. இன்று சொல்லவே தேவையில்லை தமிழை முடிந்தவரை தவிர்த்து ஆங்கிலம் மட்டுமே படிப்பு மொழியாக இந்நிலமெங்கும் பரவியிருக்கிறது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில கலப்பு மக்களிடம் எதார்த்த புழக்கமாகியிருக்கிறது, ஆனால் வடமொழி இன்றுவரை இந்நிலத்தின் பொதுக்கல்வியில் இணையவில்லை அவ்வகையிலும் “ஜீ ” க்கான சப்பைக்கட்டு புறந்தள்ளக்கூடியதுதான்.

இன்று அனைத்து அரசியல் – பொருளாதார – வரலாற்று செய்திகளும் இணையம்சார் சமூகத்தளங்களில் அரைகுறையாக,போலியாக போட்டோஷாப் நுனிப்புல்லாக பரப்பப்படுகிறது. இன்றைய இணையதலைமுறைக்கு சமூகஅரசியல் முகநூல் whatsapp வயதிலிருந்தான் தொடங்குகிறது. சமூக வலைதள வழியாக மட்டும் நாட்டு நடப்புகளை சமீபமாக பார்க்க துவங்கிய நண்பர் ஒருவர் சொன்னார் ” இப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் பிஜேபிய காரணம் சொல்றது வழக்கமாகிடுச்சு,” ஜீ” க்கும் பிஜேபிதான் காரணமா? ” என்றார்.

அவர்களை 20 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்து சென்று உணர்த்தமுடியாதெனினும், இன்றும்கூட நகர சுவருகளில் அதற்கான சாட்சிகள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன ஒரேயொரு உதாரணம் கீழே.

 

காவிரிக்காக திருச்சியை அதிர வைத்த மக்கள் அதிகாரம் முற்றுகைப் போராட்டம் ! படங்கள்

2

“காவிரி உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்குவோம்!” என்று தமிழகம் முழவதும் தீவிரப் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம், 24.03.2018 சனிக்கிழமை அன்று திருச்சியில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டது.

போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் நோக்கி பறையிசை முழங்க முன் வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்  என பேரணியாக சென்றனர்.

கொடிகளும் பதாகைகளும் சமீபத்தில் நடந்த மராட்டிய விவசாயிகளின் “செங்கடல்” பேரணியின் நினைவை கண்முன் காண்பித்தன. பேரணி முன்னேறி செல்லும் நேரத்திலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த விவசாயிகளும், மக்கள் அதிகாரம் தோழர்களும் தங்களை பேரணியில் இணைத்து கொண்டிருந்தனர்.

மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் பேரணியை நிறுத்தி இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் உரையாற்றினர். போராட்டக் களத்திலேயே புதிய பாடல் ஒன்றை தோழர் கோவன் பாடினார். பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேர்காணல் அளித்தனர்.

பின் தபால் நிலையம் வந்த பேரணி முற்றுகையாக மாறியது. கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என எந்த வித்தியாசமும் இன்றி அனைவரும் கொதிக்கும் சாலை அமர்ந்து முழக்கமிடத் துவங்கினர். முழக்கமிடும் தோழர்கள் களைப்படையாத வகையில் தண்ணீர் பாக்கெட்டுக்கள், உப்பு, குளுக்கோஸ் ஆகியவை வினியோகிக்கப்பட்டது.

முற்றுகை தீவிரமடைவதைக் கண்டு பீதியடைந்த போலீசு பதறியடித்துக் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொன்னது. இது அடையாளப் போராட்டம் அல்ல, தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டம் என அறிவித்தனர் தோழர்கள்.

என்ன பேசினாலும் இந்தப் போராட்டத்தை முடிக்க முடியாது என்பதால், போராடும் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தது போலீசு.

கைதாக மறுத்து தோழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் போலீசார் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கி பேருந்துகளில் அடைத்து ஏற்றிச் சென்றது. திருச்சி நகரின் பல்வேறு மண்டபங்களில் தோழர்கள் அடைக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

 

எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !

3

டப்பாடி பழனிச்சாமி அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விதமாக தமிழக அரசின் சார்பில் பலவித கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதைப் பார்த்து, ‘அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?’ என்று ஆதங்கப்பட்டார் ஒருவர். அம்மா இருந்தபோது இப்படி நடக்கவில்லையா என்ன? ’நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’, ’சாதனை புரிந்த ஈராண்டு… சரித்திரம் சொல்லும் பல்லாண்டு’ – வசனம் எல்லாம் யார் சொன்னது? ’அவற்றை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு தகுதி இருக்கிறது.. எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்பது அவர்கள் சொல்ல வருவதன் உட்பொருள்.

’அம்மா மட்டும் இருந்திருந்தா..’ – என்ற இந்த டயலாக்கை பலர், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்கிறார்கள்.
– ’’ஜெயலலிதா இருந்திருந்தா தமிழ்நாடு இவ்வளவு அசிங்கப்பட்டிருக்குமா?” – என ஒரு ஆதங்கம் போல…
– ’’ச்ச… அம்மா இல்லாம போயிட்டாங்களே” என ஓர் ஏக்கம் போல…
– ‘’அம்மா இருந்திருந்தா நடக்கிறதே வேற’’ என ஒரு சவடால் போல…

பலவித உணர்வுகளில் இந்த வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. சாதாரண மக்களில் தொடங்கி படித்தவர்கள், அறிவுஜீவிகள் என பலர் இப்படி பேசுகின்றனர்; எழுதுகின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற ஆய்வு ஒரு பக்கம் இருக்கட்டும். என் கேள்வி ஜெயலலிதா இப்போது இல்லையா?

’ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ எனக் கேட்ட ஜெயலலிதாவின் நடவடிக்கையும், மோடி தலைமையிலான கொலைகார பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு செயலையும் பாதம் பணிந்து ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையும் வேறு, வேறா? ரத யாத்திரையை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்து, அதற்கு பாதுகாப்புக் கொடுத்து, எதிர்ப்போரை கைது செய்து சிறையில் அடைக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தெரியவில்லையா?

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இசக்கிமுத்துவும், அவரது மனைவியும், சின்னஞ்சிறு இரண்டு குழந்தைகளும் தீயில் வெந்து கருகி செத்தார்களே… எத்தனையோ முறை மனு கொடுத்தும் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் கந்துவட்டி கிரிமினல்களுக்குத் துணை போனதே… இதில் ஜெயலலிதாவை உங்களால் ‘உணர’ முடியவில்லையா?

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், செவிலியர்களின் உள்ளிருப்புப் போராட்டம்… என அனைத்திலும், ‘போராட்டம் பண்ணினா வேலை இருக்காது. பரவாயில்லையா?’ எனக் கேட்டது எடப்பாடி அரசாங்கம். அப்படி போராடியவர்களை ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் வேலையை விட்டே தூக்கினார் ஜெயலலிதா. இரண்டு நடவடிக்கைக்கும் என்ன வித்தியாசத்தை கூற முடியும்?

வளர்மதி, திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம், துண்டு நோட்டீஸ் விநியோகித்தால் கைது என கருத்துரிமையை காக்கும் கருணை மிகுந்த நடவடிக்கையில் ‘ஜெயலலிதா’வின் சாயல் உங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா?

ராஜஸ்தானில் திருடனைப் பிடிக்கப் போன இடத்தில், கூட வந்த போலீஸ்காரனே சுட்டு ஒரு இன்ஸ்பெக்டர் இறந்துபோக…. திருடனைப் பிடிக்க நடந்த வீரதீர சாகசத்தில் திருடன்தான் சுட்டுவிட்டதாக கதைக்கட்டி, அந்த கொலையை தியாகமாக்கி, கொலையாளிக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்ததே எடப்பாடி அரசு… இந்த கேவலத்தில் ஜெயலலிதாவை இனம் காண முடியவில்லையா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்த போலீஸ், திருச்சியில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து கொலை செய்த போலீஸ், திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்களை அடித்து நொறுக்கிய போலீஸ், ஆரணியில் விளைந்த நெல்வயலில் டிராக்டரை விட்டு ஏற்றிய போலீஸ்.. என எடப்பாடி அரசின் போலீஸ் வீரத்துக்கும், ஜெயலலிதா அரசின் போலீஸ் வீரத்துக்கும் ஆறு வித்தியாசமேனும் உங்களால் கூற முடியுமா?

சென்னை பெருவெள்ளத்தின்போது, மக்களின் துயரம் தாளாது இதரப் பகுதி மக்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பியபோது அதன் மீது வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது ஜெயலலிதா அரசு. குமரி ஒக்கிப் புயலின்போது, தாமாக கரை மீண்ட மீனவர்களையும் தாங்கள் காப்பாற்றியதாக கணக்கெழுதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது எடப்பாடி அரசு. ஒட்டும் ஸ்டிக்கரின் நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதில் எடப்பாடியின் முன்னோடி ஜெயலலிதா என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

எம்.ஜி.ஆர். என்னும் செத்துப் போன பாம்பை வைத்து பூச்சாண்டி காட்டி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு முன்னோடி யார்? ஜெயலலிதாதானே?

அகம்பாவம், ஆணவம், பொய், பித்தலாட்டம், ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறித்தனம், பார்ப்பனத் திமிர், சாதி மேட்டிமைத்தனம் அனைத்திலும் ’ஜெயலலிதா லெகசி’யை நகல் எடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியில், இவர்கள் சொல்கிறார்கள்… ‘அம்மா மட்டும் இருந்திருந்தா’.

பார்ப்பனர்கள் இப்படி நினைப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி சொல்வதில் பெரும்பகுதி பார்ப்பனர்கள் இல்லை. அவர்களிடம் இந்த ஆற்றாமையின் ஊற்றுக்கண் எங்கிருந்து வருகிறது? ‘பார்ப்பன தலைமைக்கு பணிந்து போவது ஓ.கே. ஆனால், இந்த சூத்திர தலைமைக்கு எல்லாம் பணிந்துபோக வேண்டியிருக்கிறதே’ என்பதா? கொஞ்சம் உள்ளே பார்த்தால் மிஞ்சுவது இந்த பார்ப்பன அடிமைப் புத்திதான். ‘எங்களவா சி.எம்.மா இல்லாம போயிட்டாளே’ என்ற பார்ப்பனர்களின் ஏக்கத்தை விட இது கீழ்மையானது; கேவலமானது. இல்லாமல் போன ஜெயலலிதாவுக்காக வருந்தும் இவர்கள்தான் கருணாநிதி இருப்பதற்காகவும் வருந்துகிறார்கள்.

ஜெயலலிதா இல்லையே என்ற ஏக்கம் உண்மையில் யாருக்கு வர வேண்டும்? ஜெயலலிதா இருப்பதால் யாருக்கு ஆதாயமோ, அவர்களுக்குதான் அந்த ஏக்கம் வர வேண்டும். ஆனால் ஜெ.வால் ஆதாயம் அடைந்த சசிகலா, தினகரன், எடப்பாடி, பன்னீர்செல்வம் குழுவினர் ஜெ. இல்லாததால் மகிழ்ச்சிதான் அடைகின்றனர். மாறாக, ஜெயலலிதா இருந்த போது நாலு வார்த்தை எழுத முடியாத, நாலு வார்த்தை பேச முடியாத அறிவுலகினர் பலர், ஜெ. இல்லாமைக்காக வருந்துகின்றனர். ஜெயலலிதா இருந்தவரைக்கும் யாரை எல்லாம் தூக்கிப் போட்டு மிதித்தாரோ அவர்கள் எல்லாம், ‘அந்தம்மா இல்லையே’ என்று உச்சுக் கொட்டுகிறார்கள். உதைத்த காலையே வணங்கும் உங்கள் பெருந்தன்மை ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்குப் பின்னால் இருக்கிற உளவியல் என்ன?

ஜெயா இருக்கும் போது அ.தி.மு.க கம்பீரமாய் இருந்ததாக சித்தரிக்கும் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் “அம்மா இல்லாத ஒரு வருடம்” கார்டடூன்!

’ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஆளு. அந்தம்மா இருந்த இடத்துல கண்ட, கண்ட கழிசடை எல்லாம் இருக்குது. அததுக்கு ஒரு தராதரம் வேண்டாமா?’  என்று கேட்கிறார்கள். உண்மைதான். இந்த தராதரமற்ற கழிசடைகளை எம்.எல்.ஏ.க்களாகவும்,  அமைச்சர்களாகவும் உருவாக்கியது யார்? தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் இழிவான நிலைக்கு யார் பொறுப்பு? அதற்கு ஜெயலலிதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜெயலலிதா தைரியசாலி; ஜனநாயகவாதி; நிர்வாகத் திறமையுள்ளவர் என்ற கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்பதற்கு அ.தி.மு.க. அமைச்சரவையே சாட்சி. ஒரு துறையை நிர்வகிக்கக் கூடத் தெரியாத முட்டாள்களை அமைச்சர்களாக்கிய ஜெயலலிதா ஒரு மூடர்கூடத்தின் தலைவி என்பதைத் தவிர மேலதிகமாக எதுவும் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது தமிழ்நாடு எவ்வளவு கேவலமாக இருந்ததோ, அதைவிட இப்போது ஒருபடி கூடுதலாக கேவலம் அடைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதன்படி, ஜெயலலிதா லெகசியை இவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர் என்றுதான் மதிப்பிட வேண்டும்.  மாறாக, ‘அது ஒரு பொற்காலம்’ என்பதைப் போல சித்தரிப்பது அடிமை புத்தியும், அயோக்கியத்தனமும் நிறைந்தது.

’ஜெயலலிதா இருந்தபோது கட்சிக் கட்டுக் கோப்பாக இருந்தது. எல்லோரும் அந்தம்மா பேச்சைக் கேட்டு நடந்தார்கள். இப்போது ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுத்து கட்சி வீணாகப் போய்விட்டது’ என்பது பலருடைய கருத்து. கார்ட்டூனீஸ்ட் பாலா கூட இதுபற்றி ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.

இரட்டை இலை வாடி உதிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் தாமரை துளிர்க்கிறது. வானுலகில் இருந்து ஜெயலலிதா, ‘நான் பாடுபட்டு வளர்த்த கட்சியை இப்படி பண்ணிட்டீங்களே… பாவிகளா!’ என கண்ணீர்விடுகிறார். இதற்காக ஜெயலலிதா எதற்கு கண்ணீர் விட வேண்டும் என்று புரியவில்லை. இரட்டை இலையில் இருந்து தாமரை மலர வேண்டும் என்பது ஜெயலலிதான் விருப்பம். குடும்பத் தலைவரின் சாவுக்கு பின் சொத்துகளை உரிய வாரிசிடம் ஒப்படைப்பதைப் போல, அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் ஒப்படைக்க வேண்டும். அதைதான் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க… ஏதோ அந்தம்மா, புரட்சித் தலைவின்னு பட்டம் கொடுத்து விட்டதாலேயே புரட்சிகரமாய் வாழ்ந்தது போலவும், தன் கட்சி காவிமயமாவது கண்டு கண்ணீர் விடுவதைப் போலவும் அரசியல் அறியாமையுடன் சித்தரிக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் அமைச்சரவையை அடிமைகளின் கூடாரமாக, நாடே எள்ளி நகையாடும் வகையில் சுய மரியாதையற்ற வகையில் கீழ்த்தரமாக நடத்திய ஜெயலலிதாவின் நடவடிக்கையைப் பார்த்து, ‘ஏ யப்பா… எவ்வளவு துணிச்சல்’ என்று வியக்கிறார்கள். அப்படி வியக்கும் கணத்தில் மானசீகமாக அவர்களும் புரட்சித் தலைவியின் காலடியில் ஒருமுறை விழுந்து எழுகின்றனர்.

ஜெயலலிதாவின் பலமே இத்தகைய அடிமைத்தனத்தை தமிழகத்தில் நிறுவனப் படுத்தியதுதான். ஆண்டானை வீழ்த்துவதை விட அடிமைகளுக்கு சொரணை வரவழைப்பது பெரும் சிரமம். ஜெயாவோடு ஒப்பிட்டு எடப்பாடியை விமரிசிப்பவர்களும், கேலி செய்பவர்களும் அ.தி.மு.க அடிமைகளை விட கூடுதலான அடிமைகள். பா.ஜ.க-வின் செருப்பாய் ஆளும் எடப்பாடியை வீழ்த்துவதற்கு இந்த ஜெயா போற்றி அடிமைகளை அம்பலப்படுத்துவது ஒரு முன் நிபந்தனை!

-வழுதி

 

மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !

0

“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை…” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக!

குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே !

 

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆணையம் !
பதினோரு ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு !
சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு?

 

‘இறுதித் தீர்ப்பு’ இதுதான்! எதிர்கால காவிரி கர்நாடகக் கழிவுகளின் கூவமாகும் ! தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் நீர் வறண்ட பாலையாகும் ! காவிரி டெல்டாவைக் கடல் கொள்ளும்! நாட்டுக்கே சோறுபோட்ட உழவர்கள் அகதிகளாவர் ! தமிழகம், குடிநீர் இன்றி நா வறண்டு தவிக்கும் !

 

இரண்டாயிரம் ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் கல்லணை – காவிரியில் தமிழர்களின் உரிமைக்குச் சான்று ! நேற்று வந்த டெல்லி தமிழகத்தின் உரிமையைப் பறிக்க அனுமதிப்பதா?

 

தமிழர்களின் உணவுத் தன்னிறைவுக்கு 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பல லட்சம் உழவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பு எரிய, காவிரி நீர் வர வேண்டும்.

 

தண்ணீரைப் பண்டமாக மாற்றி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆறுகளையும், நிலத்தடி நீரையும் தாரைவார்த்து, தாகத்தில் தவிப்பவனிடம் விலைபேசும் அபாயமான இந்த அரசியல் சூழலில், காவிரி நீர் பறிபோனால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?

 

காவிரி மட்டுமா டெல்லி தாக்குதல், நீட் தேர்வு, கூடங்குளம் அணு உலை, கெயில் குழார் பதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ, சாகர் மாலா திட்டங்கள்… என கொத்துக் குண்டுகள் தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன.

தமிழனா? இந்தியனா? முடிவு செய்வோம்!

 

டெல்லியை நம்பி, நம்பி தமிழன் சாக வேண்டுமா?
கருகிய பயிரால் விவசாயிகள் பலி! ஒக்கி புயலுக்கும், துப்பாக்கி சூட்டிற்கும் மீனவர்கள் பலி!
நீட் தேர்வால் மாணவி அனிதா பலி! மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு டெல்டா விவசாயமே பலி !

 

கருவறையில் தமிழுக்கு தீட்டு ! நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லை! காவிரியில் இனி உனக்கு தண்ணீர் இல்லை ! ஏனென்றால் நீ… தமிழன்!

 

கர்நாடகத் தேர்தலுக்காக அரங்கேறும் வஞ்சகம் மட்டுமல்ல, காவிரித் தீர்ப்பு ! இது, திராவிட மரபு – தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கக்குகின்ற வெறுப்பு !

 

தமிழினத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க டெல்லிக்கு எதிராக தமிழகம் போர்க்களமாகட்டும் ! ஜல்லிக்கட்டுக்கு திரண்ட தமிழகம், காவிரிக்கு வெடித்துக் கிளம்பட்டும்!

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காவிரிப் பிரச்சினையயொட்டி திருச்சியில் நடைபெறவுள்ள தபால் நிலைய முற்றுகையையொட்டி கரூர் பகுதியில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !

0

மொரிஸ் பிஷப் (Maurice Bishop)

க்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பது குறைவு. மக்கள் நலன் பேசி பதவிக்கு வந்த பின்னர், தன்னலம் கருதி பணத்தை பதுக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மொரிஸ் பிஷப் வித்தியாசமானவர். முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கிரனடாவில், மக்களின் தேவை உணர்ந்து செயலாற்றிய முதலாவதும், கடைசியுமான பிரதமர் அவர் தான். மூன்றாமுலக ஏழை நாட்டை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம். சின்னஞ்சிறு தீவின் முக்கிய பொருளாதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்…. அடடா! இதெல்லாம் ‘கம்யூனிசம்’ ஆச்சே!

மொரிஸ் பிஷப்

உலகில் எங்காவது கம்யூனிசம் துளிர் விட்டால், அதனை நசுக்குவதை தனது நோக்கமாக கொண்ட அமெரிக்கா, ஒரு குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்தது. என்ன காரணம்? இதற்கெல்லாம் யாராவது காரணம் கேட்பார்களா? நமக்குத் தான் அது ஒரு படையெடுப்பு. அமெரிக்கர்களுக்கு இராணுவப் பயிற்சி. எத்தனை காலம் தான் கண்ணால் காணாத எதிரியுடன் போலியான மோதல் நடத்திக் கொண்டிருப்பது? நிஜமாகவே ஒரு நாட்டைப் பிடித்து, நிஜமான மனிதர்களைக் கொல்லும், நிஜமான இராணுவப் பயிற்சி.

கிரிக்கட் இரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று கிரனடா. வெனிசுவேலா நாட்டுக்கு மேலே, சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறு தீவு. முன்னூறு சதுர கிலோமீட்டரே அளவான குட்டி நாடு. பிரிட்டனின் காலனியாக இருந்ததால், இன்றைக்கும் அங்கே ஆங்கிலமே அதிகாரப்பூர்வ மொழி. பெரும்பான்மையான மக்கள் ஆப்பிரிக்க கறுப்பின வம்சாவளியினர். பொதுநலவாய நாடுகளில் உறுப்புரிமை பெற்ற கிரனடா இன்றைக்கும், பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையை ஏற்றுக் கொண்ட, பாராளுமன்ற அமைப்பை கொண்டுள்ளது.

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் மார்க்சிய எதிர்க் கட்சியாக வீற்றிருந்த New Jewel Movement (NJM), 1979 ஆம் ஆண்டு ஒரு ’சதி’ப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது. சோஷலிசப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட அந்தக் கட்சி, ஏற்கனவே ஒரு இரகசியமான மக்கள் இராணுவத்தை உருவாக்கி இருந்தது. சதிப்புரட்சியின் பின்னர், காலனிய கால சட்டங்கள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப் பட்டன. புதியதொரு அரசமைப்பு சட்டம் இயற்றப் பட்டது. “புரட்சிகர மக்கள் அரசு” ஸ்தாபிக்கப் பட்டது. அதன் பிரதமராக மொரிஸ் பிஷப் என்ற வழக்கறிஞர் தெரிவு செய்யப் பட்டார்.

பிரிட்டிஷ் காலனிய மேற்கிந்தியத் தீவுகளில் உருவான, முதலாவது ’சோஷலிச’ நாடு அதுவாகத் தானிருக்கும். NJM மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வழிகாட்டியாக கொண்டியங்கியது. உலகின் பிற சோஷலிச நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக, அயலில் இருந்த கியூபாவுடன் நெருங்கிய தொடர்பை பேணியது. கியூபாவின் உதவியுடன், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் என்பன இலவசமாக வழங்கப் பட்டன.

கரீபியன் கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிரனடா தீவு, உல்லாசப் பயணிகள் சொர்க்கமாக கருதுமளவிற்கு இயற்கை வளம் நிறைந்தது. அதற்கு அயலில் இருக்கும் தீவுகளுக்கு, வருடந்தோறும் உல்லாசப் பயணிகள் தமது விடுமுறையைக் கழிக்க சென்று வருகின்றனர். கிரனடாவுக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர வேண்டுமென்றால், ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். அதற்கான திட்டம், பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே தொடங்கப் பட்டது. ஆனால், மொரிஸ் பிஷப் அரசில் தான் அது நடைமுறைக்கு வந்தது.

சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு கியூபா உதவி செய்தது. கியூப பொறியியலாளர்களும், பணியாளர்களும் வந்திறங்கினார்கள். விமான நிலையம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அமெரிக்காவில் அன்றிருந்த ரீகன் அரசு, தனது கண்டனத்தை தெரிவித்து வந்தது. அப்போது பனிப்போர் காலகட்டம். அதனால், “சோவியத் யூனியனும், கியூபாவும் சேர்ந்து, கிரனடாவில் ஒரு இராணுவ விமானத் தளம் கட்டுவதாக” பிரச்சாரம் செய்தது. அமெரிக்காவில் இருந்து சென்ற உண்மை அறியும் குழுவினர், “அது இராணுவத் தளம் அல்ல. வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் பயணிகள் விமான நிலையம்.” என்று அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையை வாங்கி குப்பைத் தொட்டிக்குள் போட்ட ரீகன் அரசு, தொடர்ந்தும் கிரனடா பற்றிய கட்டுக் கதைகளை பரப்பி வந்தது.

இதற்கிடையே கிரனடாவில், ஆளும் கட்சிக்குள் பிளவு தோன்றியது. மொரிஸ் பிஷப்புடன் முரண்பட்ட, பெர்னார்ட் கோர்ட் (Bernard Coard) தலைமையிலான குழுவொன்று அதிகாரத்தை கைப்பற்றியது. மொரிஸ் பிஷப் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். ஆனால், எதிர்ப்புரட்சியாளர்களின் எண்ணம் ஈடேறவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த மொரிஸ் பிஷப் கைது செய்யப்பட்ட சம்பவம், கிரனடா முழுவதும் மக்கள் எழுச்சியை தூண்டி விட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த மொரிஸ் பிஷப், மகத்தான மக்கள் போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். உண்மையாகவே மக்களின் நலன் கருதி கடமையாற்றும் தலைவர்களை, மக்கள் என்ன விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள் என்பதற்கு, மொரிஸ் பிஷப்பின் வரலாறு ஒரு உதாரணம்.

விதி வலியது என்பார்கள். நிலைமையை கட்டுப்படுத்தும் வழி தெரியாத எதிர்ப்புரட்சிக் கும்பல், மொரிஸ் பிஷப்பையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் சுட்டுக் கொன்றனர். 19 அக்டோபர் 1983, கிரனடா மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர நாள். அன்று தான் மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்டார். மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்ட பின்னர், எதிர்ப்புரட்சி அரசு நீண்ட காலம் நிலைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து சில நாடகளில், அமெரிக்க மரைன் படைகள் கிரனடா தீவை சுற்றி வளைத்தன.

25 அக்டோபர் 1983, அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பமாகியது. அப்போது நடந்த சண்டையில் சில நூறு பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையினரின் இலக்கு, கியூப பொறியியலாளர்களாக இருந்தது. குறைந்தது ஐம்பது கியூபர்கள் ஆக்கிரமிப்பாளர்களினால் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்பை எதிர்த்து, ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் என்ன நடந்தது? ஏழு வருடங்களுக்குப் பின்னர், குவைத் மீது படையெடுத்த ஈராக், ஐ.நா. -வினால் கடுமையாக தண்டிக்கப் பட்டது. பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன.

அமெரிக்காவுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச கண்டனம் குறித்து அந்த நாடு எள்ளளவும் கவலைப் படவில்லை. “அமெரிக்காவைக் கண்டால் ஐ.நா.வும் நடுங்கும்,” என்பது ஒரு புதுமொழி. மொரிஸ் பிஷப் படுகொலைக்கு பழிவாங்க காத்திருந்த சிலர், அமெரிக்கப் படையெடுப்பை வரவேற்றதில் வியப்பில்லை. ஆனால், அமெரிக்கா படையெடுத்த நோக்கம் வேறு. “கிரனடாவில் கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக,” அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உண்மை அதுவல்ல. அது உலகிற்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. அமெரிக்காவின் கூட்டாளியான, பிரிட்டன் கூட படையெடுப்பை வன்மையாகக் கண்டித்ததில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம்.

கிரனடா படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், லெபனான் போரில் அமெரிக்கப் படைகள் கடுமையான அடி வாங்கி இருந்தன. வியட்நாம் போருக்குப் பின்னர், அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருந்தது. அந்தத் தோல்வியை மறப்பதற்காக, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையற்ற குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்து, தனது “வீரத்தை” காட்டி இருக்கலாம். புதிதாக உற்பத்தி செய்த, நவீன அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் தேவைப் பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், அப்படி எந்தக் காரணமும் தேவையில்லை. அமெரிக்கப் படையினர், இதையும் “ஒரு வீடியோ கேம் விளையாட்டு” என்று கருதி இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், எந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளை காரணமாகக் காட்டி, அமெரிக்கா படையெடுப்பை நடத்தியதோ, அந்த விமான நிலையம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சர்வதேச விமான நிலையத்திற்கு, 2009 -ம் ஆண்டு, கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் பெயர் சூட்டப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழிந்து விட்டதாக, பனிப்போரில் வென்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். கிரனடா தீவைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

-கலையரசன்

2013 அக்டோபர் 19 அன்று கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் முப்பதாவது நினைவு தினத்தையொட்டி கலையகம் தளத்தில் வெளியான கட்டுரை.

நன்றி : கலையகம்

 

எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்

2

மிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை.

இந்த இர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள்.

பாருங்கள் பகிருங்கள் !

 

பாடல் வரிகள்
*********************

எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை – ராம
ராச்சியத்துக்கு இங்குதான்டா இறுதி யாத்திரை
உன் ராமராச்சியம் அதான் மோடி ராச்சியம் – நீ
ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம் !

செருப்பை வச்சி ஆண்ட கதை ராமா யணத்துல – மோடி
செருப்பு ரெண்டும் ஆளுது தமிழகத்துல
பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
அப்படியே பொருந்துது – நா மோடியை சொல்லலை !

சீதையை மீட்டானாம் ராமாயணம் – அது அவன் பொண்டாட்டி
நான் எதுக்கு கூத்தாடணும் -எங்க
காவிரியும் பெண்தான் அவள் வந்தாகணும் – கடத்தி
வச்சவனே நீதான் – நாங்கள் மீட்டாகணும் !

குஜராத்து மாடலுதான் ராமராச்சியம் – குடிக்க
தண்ணியில்லே, பள்ளியில்லே டோட்டல் பூச்சியம் – அது
அம்பானிக்கும் அதானிக்கும் சர்வமானியம்
அப்பாவி இந்து வாயில் மாட்டுக் கோமியம் !

சூத்திரன் சம்புகன் தவமிருந்தான் அன்று
அவனை கொன்றானே ராமன் மனுதர்மம் என்று
அக்லக், பெக்லு கான் வெமுலாக்கள் இன்று
மோடி ராச்சியத்தை புதைப்பதுதான் தேசத்துக்கே நன்று !

 

 

எட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்

0

சிரியாவின் உள்நாட்டுப்போர் எட்டாவது ஆண்டை எட்டிவிட்டது. அமெரிக்கா மற்றும் இரசிய வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்காக இதுவரை தன்னுடைய 4,65,000 இன்னுயிர்களை இழந்து சிதிலமடைந்த சிரியா இன்னொரு ஆண்டிற்காவது தாங்குமா?

2011-ம் ஆண்டு தொடங்கிய அந்த கோரப்போரின் சுவடுகளின் ஏழுப் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மார்ச் 25, 2011 – தெற்கு சிரியாவின் டேரா நகருக்கு அருகேயுள்ள டேல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் ‘விடுதலை’ முழக்கமிடும் சிரியர்கள்.

ஜனவரி 23, 2012 – ஹோம்ஸின் தெருவொன்றில் சிரிய இராணுவத்திற்குச் சொந்தமான சேதமடைந்த கவச வண்டியொன்றின் முன்பு சிரிய சிறுவன் ஒருவன் நிற்கிறான்.

ஆகஸ்டு 21, 2013 – டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி சாக்பாவில் விசவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் முகமூடிகள் உதவியால் மூச்சு விடுகின்றனர்.

மார்ச் 9, 2014 – சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆதரவுப்படைகளால் அலெப்போவின் ஹெய்டரியே மாவட்டத்தில் வீசப்பட்ட பீரங்கி குண்டிற்குத் தப்பிய பெண்ணொருவர் அழுது கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையுடன், அல்-சக்ஹௌர் மாவட்ட மருத்துவமனையொன்றில்.

டிசம்பர் 26, 2015 – தெற்கு இட்லிப் கிராமப்புறமான ஓம் அல்-சீரின் நிலத்தடி குகையில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் உள்ள சிரிய உள்நாட்டு அகதிகள்.

டிசம்பர் 2, 2016 – சிரியாவின் அலெப்போ பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அரசாங்கப் படையினர் மீண்டும் கொண்டு வந்த பின்னர் ஹனோனோ பகுதியில் முன்பு தடுப்பரண்களாக இருந்த சேதமான வண்டிகள் அருகே காணப்படும் குழந்தை இழுபெட்டி ஒன்று.

அக்டோபர் 25,2017 – வளர்ச்சிதை மாற்ற கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டரை வயது ஹலா அல்-நுபி படுக்கையில் உட்கார்ந்து அழுகிறாள். கிழக்கு கவுடாவில் ஏற்பட்டுள்ள முற்றுகை மற்றும் உணவு பற்றாக்குறையினால் அவளது நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

நன்றி : அல்ஜசீரா

காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !

0

பத்திரிக்கைச் செய்தி

21.03.2018

காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மோடி அரசு. தேச ஒற்றுமைக்கு மொத்த குத்தகைதாரர் போல் வேடம் போடும் மோடி அரசு காவிரித் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வருகிறது. கர்நாடக அரசுக்கு பக்க பலமாய்ப் பக்க மேளம் வாசிக்கிறது. மத்திய அமைச்சர் கட்கரி, நீர்வளத்துறை செயலர் உ.பி.சிங் ஆகியோர் காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழக தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.

உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் சதி வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. தனது தீர்ப்புகளை சற்றும் மதிக்காமல் செயல்படும் சித்தராமையா அரசு, மோடி அரசு இவற்றை உச்ச நீதிமன்றம் கடுகளவு கூட கண்டிக்கவில்லை அதேநேரம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி -யை முடுக்கி விடுகிறது மோடி அரசு.

தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி -யை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழ் நாட்டை ஒரு பகை நாடு போலவே நடத்துகிறது பாஜக அரசு. ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களைச் சுரண்டுவது என்பதே தமிழகத்தைப் பற்றிய பாஜக -வின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாக தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல் படுகிறது. 12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர், இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. காவிரியாற்றின் தமிழக உரிமை வரலாற்று வழிப்பட்டது. சட்டங்களையும் அதன் ஓட்டைகளையும் காட்டி மறுப்பதையோ, இழுத்தடிப்பதையோ ஏற்கவே முடியாது.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதி உரிய வழியில் களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசில் தமிழக எம்.பிக்களுக்கு வேலையில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி வரும் மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக உரிமைக்கான இப்போராட்டத்தில் அனைத்துதரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென அறை கூவி அழக்கிறோம்.
நன்றி.

இப்படிக்கு
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

******

திருச்சி முற்றுகை  – அறைகூவல்

“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு! நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல்! தமிழகமே கொதித்தெழு!” என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற

24.03.2018 அன்று நடைபெறவுள்ள திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டத்தையொட்டி திருஅகர் முழுதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

மிழகத்தில் டெல்லியின் அதிகாரத்தை முடக்காமல் பா.ஜ.க அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல், இனியும் பொறுக்க முடியாது? தமிழகமே கொதித்தெழு!

மார்ச் 24 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் உங்களை திருச்சிக்கு அழைக்கிறது.

தமிழகத்தின் எண்ணெய் வளத்தையும், எரிவாயு வளத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க தமிழகத்தையே பலிகொடுக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினோம், பாராளுமன்றத்தில் போராடினோம். ஆனால் எந்த பயனும் இல்லை.

காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இது வரை இல்லை. தமிழகத்தின் நீரை பிடுங்கி பெங்களுர் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து இறுதி தீர்ப்பு வழங்கி வஞ்சித்தது உச்சநீதிமன்றம்.

காவிரி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சணையாக செயல்பட்டு மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை வஞ்சிக்கிறது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகாவின் அடாவடிக்கு துணைபோகும் பா.ஜ.க. மோடி அரசை ஒரு கை பார்ப்போம். திருச்சிக்கு வாரீர்!

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற டெல்லியின் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவோம்!

மக்கள் அதிகாரம் உங்களை அழைக்கிறது. மார்ச் 24 சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி, தலைமை தபால் நிலையம் தாங்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மீண்டும் அழைக்கிறோம்.

தமிழன் கிழிச்ச கோட்டை தாண்டாதவன், சட்டத்துக்கு பயந்தவன் தன்னை வருத்தி கொண்டு, மாத கணக்கில் உட்கார்ந்து, கோசம் போட்டு எழுந்து போய் விடுவார்கள் அவனுக்கு எதற்கு மேலாண்மை வாரியம்? என்று நினைக்கும் டெல்லியின் திமிரை அடக்கி காட்டுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருச்சிக்கு வாரீர்!

தமிழகத்தை கிள்ளு கீரையாக நடத்தும் டெல்லிக்கு எதிராக தமிழக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.

காவிரியை தடுத்து, பெரியார் சிலையை உடைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவிற்கு எதிராக தமிழகத்தை போர்க்களமாக்குவோம். டெல்லியின் எந்த அதிகாரமும் தமிழகத்தில் செல்லாது என்ற நிலையை உருவாக்காமல் காவிரி மட்டுமல்ல, நீட், மீத்தேன், கெயில் என எதிலும் தமிழகம் தப்பிக்காது. காவிரி நீர் உரிமை விவசாயிகள் பிரச்சினை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் உரிமை அனைவரும் திருச்சிக்கு வாரீர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321.

 

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

15

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை 09.03.2018 அன்று ‘தமிழ் இந்துவில்’ வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது.

ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி

கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து “ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது.

ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள்.

செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது.

இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை.

பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

நன்றி : வில்லவன்

 

பெர்லின் சுவர் மறைந்தாலும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் மறையவில்லை !

1

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜெர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்” என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ “க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்” என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜெர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!” என்று கூறுகிறார்க‌ள்.

“நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்.” என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜெர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.)

அங்கு இப்போதும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜெர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜெர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜெர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட‌ கிழ‌க்கு ஜெர்ம‌னியில் த‌லைமைய‌க‌த்தை கொண்டிருக்க‌வில்லை.

ஜெர்ம‌ன் அதிப‌ர் அன்கெலா மெர்க‌ல் கிழ‌க்கு ஜெர்ம‌னியை சேர்ந்த‌வ‌ர். ஆனால், அங்கே அவ‌ருக்கு ம‌திப்பில்லை. கிழ‌க்கு ஜெர்மனிய‌ருக்கு அவ‌ர் ஒரு துரோகி! பொருளாதார‌ப் பிர‌ச்சினைக‌ள், ச‌மூக‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கார‌ணமாக‌ தீவிர‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு அதிக‌ரிக்கின்ற‌து. இஸ்லாமிய‌ வெறுப்பை காட்டும் PEGIDA, அத‌னுட‌ன் சேர்ந்து வெளிநாட்ட‌வ‌ர் எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் AfD ஆகிய‌ தீவிர‌வ‌ல‌துசாரி க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு கிழ‌க்கு ஜெர்ம‌னியில் அதிக‌ம்.

“Wall is gone but not divisions” The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌ செய்தி.

“ஜெர்ம‌னியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை, பூர்வீக‌ ஜெர்ம‌னிய‌ரை விட‌ அதிக‌ம்” என்ப‌ன‌ போன்ற‌ த‌வ‌றான‌ ந‌ம்பிக்கைக‌ளும் காண‌ப் ப‌டுகின்ற‌ன‌. (முத‌லாளித்துவ‌த்தை புரிந்து கொள்ளாம‌ல், “வெளிநாட்ட‌வ‌ரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புக‌ள் கிடைக்கும்” என்று அப்பாவித்த‌ன‌மாக‌ ந‌ம்புகிறார்க‌ள்.) இத்த‌னைக்கும் கிழ‌க்கு ஜெர்மனியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை மிக‌ மிக‌க் குறைவு.

அத‌ற்காக‌ தீவிர‌ வ‌ல‌துசாரி ச‌க்திக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இன‌வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து த‌வ‌று. அங்கே முக்கியமான‌ பிர‌ச்சினை பொருளாதார‌ பின்ன‌டைவே த‌விர‌ இன‌வாத‌ம் அல்ல‌. அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்து த‌ங்க‌ள‌து குறைக‌ளை கேட்க‌ வைப்ப‌து தான், தீவிர‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு ஓட்டுப் போடும் ம‌க்க‌ளின் நோக்க‌மாக‌ உள்ள‌து. இருப்பினும், இந்த‌ வாய்ப்பை இன‌வாத‌க் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌.

தீவிர‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Die Linke -க்கும் ஆத‌ர‌வு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. அது முன்னாள் கிழ‌க்கு ஜெர்மனியை ஆண்ட‌ க‌ம்யூனிச‌ SED க‌ட்சியின் தொட‌ர்ச்சியாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. ஜெர்ம‌ன் ஒன்றிணைவின் போது, கிழ‌க்கு ஜெர்ம‌னிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் பொருளாதார‌ மேம்பாட்டுக்காக‌ இருந்த‌து. அவை மேற்க‌த்திய‌ பாணி ஜ‌ன‌நாய‌கம் கோரி ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் அல்ல‌.

-கலையரசன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌து. நான் சில‌ இட‌ங்க‌ளில் விரிவான‌ விள‌க்க‌ம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி : கலையகம்

 

ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்

0

ந்துமதவெறிக்கு இழிபுகழ் பெற்ற விசுவ ஹிந்து பரிசத் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொள்வதைக் கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகே நேற்று (20.03.2018) மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். தோழர்கள் அண்ணா சிலை நோக்கி பேரணியாகச் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு திரண்டு வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  தோழர் கணேசன், “ தமிழகத்தில் இந்துமதவெறிக் கும்பல் காலூன்ற ரத யாத்திரை பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் தாக்கப்படுவதன் மூலமாக கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலைக் காலூன்ற விடமாட்டோம்.” என்று கூறினார்.

தோழர்களை சாலையிலிருந்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யத் தொடங்கியது போலீசு. கைது செய்து வண்டியில் ஏற்றும்போது ஒரு தோழர் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார். மேலும் ஒரு பெண் போலீசு பெண் தோழர் ஒருவரை மோசமாக திட்டி, தாக்கி கியுள்ளார். கைது செய்யப்பட்ட தோழர்கள் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தி மகஇக பாடல்கள் பாடப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

_________

பத்திரிக்கைச் செய்தி

20.03.2018

ர்.எஸ்.எஸ் ஆல் திட்டமிடப்பட்டு விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் ராமராஜ்ய யாத்திரை  மத மோதலை உருவாக்கும் தீய நோக்கங் கொண்டது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த தமிழகத்தில் இப்போது முழு சுதந்திரத்துடன் நடைபோட எடப்பாடி அரசு  அதிகாரமளித்திருக்கிறது.1500க்கும் மேற்பட்ட போலீசுப்பாதுகாப்புடன் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்த யாத்திரைக்கு அனுமதியளித்திருக்கும் எடப்பாடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு 144 தடைவிதித்திருக்கிறது. பல தலைவர்கள் , தொண்டர்களை கைது செய்திருக்கிறது. எடப்பாடி அரசின் இச்செயல் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமுமாகும். மக்கள் அதிகாரம் இதனை மிக வன்மையாகக்கண்டிக்கிறது.

இதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தந்தை பெரியாரின் சிலையின் தலையைத்துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலைத்தவிர வேறு யாரும் பெரியார் சிலையை அவமதிக்கத்துணிய மாட்டார்கள்; கனவிலும் நினைக்கமாட்டார்கள்.ஆனால் எச். ராஜாவுக்கு எழுந்த எதிற்பிற்குப்பிறகும்  பெரியார் சிலையை செதப்படுத்தத் துணிகிறார்களென்றால் எடப்பாடி அரசின் எடுபிடித்தனம்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் க்கு விலை போகும் எடப்பாடி அரசின் இந்த துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

எடப்பாடி அரசுக்கு தமிழகத்தை ஆள எந்த தார்மீக உரிமையும் இல்லை.எல்லா முனைகளிலும் தோற்றுப்போய் தேர்தகளிலும் மண்னைக் கவ்விவரும் பா.ஜ.க மதவெறியெனும் அபாயகரமான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. தமிழக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமிது.  ஆர்.எஸ்.எஸ் ,வி.இ.ப முதலிய இந்து மதவெறி அமைப்புகள் முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும். பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜ க இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்.

தங்கள்
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,

மக்கள் அதிகாரம்.

________________________

சென்னை சேத்துப்பட்டில் பெரியார் சிலையில் மை பூசிய இந்துமதவெறியர்கள்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரியார் சிலையில், யாரும் பார்க்காத சமயத்தில் மை பூசியுள்ளனர் காவிகள். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் நேற்று (20.03.2018) பிரச்சாரம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழகத்தில் காவி வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிமை எடப்பாடி அரசு ரத யாத்திரையை அனுமதிப்பதற்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு, பெரியார் பெயரின் மீது மை பூசுதல் போன்ற செயல்களைக் கோழைத்தனமாக இரவோடு இரவாக காவிக் கும்பல் செய்துவருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

 

ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

4

ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு ரொம்பவும் வேகமா… நடந்திட்டு இருந்தேன்..  என்ன ஒரு பித்தாலாட்டம், ஸ்மார்ட் போனுக்கு போடுற சிம்முக்கு, 153 ரூபாய ரீஜார்ஜ் செய்துட்டேன்.  ஆனா, நெட் கனெக்ட் ஆகல.  என்னன்னு ரீஜார்ஜ் கடையில கேட்டா, சென்ட் மேசேஜ்-ஐ காட்டி, எங்களுக்கு போய்டுச்சி, நாங்க ஒண்ணும் பண்ண முடியாதுனுட்டாங்க…

சரி, வெயில் தாழ்ந்ததும் போவோம்னு, சாயங்காலம் 5.30 மணிக்கு ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு கிளம்பினேன். சரியான கேள்விக் கேட்டு,  சண்டைப் போடணும்னு  நடந்தேன். வழியில் எங்க பார்த்தாலும் ஜெயலலிதா போஸ்டரு. ரோடைக் கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு,  அடிமை விசுவாத்தை  அம்மா ஆவிக்கு காட்டியிருந்தாங்க அ.தி.மு.க. அடிமைகள்.. அம்மா இருந்தாலும் இல்லனாலும் பாதிப்பு நமக்குத்தான்னு யோசிச்சிக்கினே வேகமா நடந்தேன்.  எதிர்ல, வயதான அம்மா சிரிச்சிக்கிட்ட கிராஸ் பண்ணாங்க… நானும் சிரிச்சேன்… கடந்து வந்துட்டேன்… ஆனா, எதோ ஒண்ணு, நிறுத்தி திரும்பி பார்க்க வைச்சது….. ஏன்னடானுப் பார்த்தா, அவங்க மாட்டிருந்த சுருக்குப்பை… பல வண்ணங்கள்ள… பளபளத்தது.   என்னக் கடந்து 10 அடி போய்ட்டாங்க…

எங்க ஆயாவோட சுருக்குப்பை ஞாபகம் வந்துடுச்சி.. வயசான, எல்லாரும் சுருக்குப் பையை கடந்துத்தான் வந்திருப்போம். இப்ப காணாம போய்டுச்சினு நடந்தேன்.  இதை அப்புறம் யேசிக்கலாம்… முதல்ல சுருக்குப்பை விற்கும் அம்மாவை பிடிக்கணும்னு…. ஓடிப் பிடித்தேன்..

என்னை பார்த்ததுமே…. அவங்க முகத்துல மகிழ்ச்சி… ”என்ன பை வேணும்…..சின்னது,.. 5ரூ, இது 10ரூ,  பெருசு 20ரூ என்று திக்கி, திக்கி சொல்லி, காலைலயிருந்து இதுதான் வியாபாரம்..”  என்று,  சுருக்குப்பையை  காண்பித்து, வாங்காமல் போய்டாதே… என்பதுபோல் பார்த்தார்.  வாங்கிக்கிறேன்.. என்றதும் சிரிப்பை பதிலாக தந்தார்.

வாஞ்சையாக …பாரு, பாரு எது வேணுமோ … எடுத்துக்க…. என்று  பைகளை பிரித்து, பிரித்து காண்பித்தார்.

எந்த ஊரு?என்றேன்.
சொந்த ஊரு ஆந்திரா பக்கம்.., இங்க வந்து ரொம்ப காலமாகுது…… காஞ்சிபுரம் தாண்டி கீழம்பி…..
புள்ளைங்க… ?

பிறகு,தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்,

மனக்கு(எனக்கு), நாலு கூத்ரு……. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்.  வூட்டுகாரு செத்து,10 வருசம்… அவரு கைரேகை பாப்பாரு…  அப்பா,  …. சஸ்போனு (கக்குஸ்) கிளின்பண்றது……  பொம்பளங்க…. இறங்க முடியாதுல்ல… அதனால, அம்மா இந்த வேலைய கத்துக் கொடுத்துச்சி……அம்மாவும் இந்த வேலைய நல்லா செய்யும்…

தினமும் எவ்ளோ கூலி வரும்?

100ரூபாய் மேல வராது. அதுவும் பாதி சாப்பாட்டுக்கே போய்டும்…. எல்லாம் விலை ஏறிப்போயிடுச்சி….. 12 மணிக்கு சாப்பிட்டது….. டீ…குடிக்கக்கூட ல்ல….. வீட்டில பேரப் புள்ளங்க  பார்த்துட்ட இருக்கும்…. அதுங், திங்கறதுக்கு வாங்கிட்டுப் போவேன்…. காலைல புள்ளங்க, ஸ்கூலுக்கு கிளம்பினதும் வந்துடுவேன்… சாயங்காலம்….. 6,7 மணிக்குப் போவேன்….

வேற வருமானம்?

1000 ரூபா பென்சன் வாங்கறேன்…. வீட்டு வாடகைக் கட்ட அத வைச்சிடுவேன்.

துணி எங்க வாங்குவீங்க?

டைலர்  துணி தைச்சிட்டு, மீதி வெட்டிப் போடும் துணிதான், மாசத்துல்ல ரெண்டு கடையில போய் நிப்பேன்….. கொடுப்பாங்க….. காசு எதுவும் கேட்க மாட்டாங்க…… அவுங்க… கடைய சுத்தப்படுத்திட்டு வருவேன்……தைக்க .ஊசியும்,  நூலும் காசுக்கு, வாரம் …50 ரூபா… குஞ்சரம் கட்ட கயிறு… வாங்குவேன், … நானே கையாலயே தைப்பேன். (குஞ்சரம் பையின் அழகை கூட்டும்)

அந்த குஞ்சர கயிற்றை, தன் கழுத்துலேயும் சரடுபோல் போட்டிருந்தார். கவனித்தப் பின் தெரிந்தது.

எப்ப, வீட்டுக்கு போவீங்க….
நடந்தேதான். வியாபாரமும்… நடந்தேதான். … இப்ப கஷ்டமில்ல… வெயில் காலம் வந்தாதான் கஷ்டம்…
பேசிக்கொண்டிருக்கும்போதே… பக்கத்தில் வேர்கடலை விற்கும் அம்மா, இவரை கைதட்டி அழைத்தார். அவரிடம் சென்றார்…..

அவர்…டீ குடிக்கிறீயா? என்றார்.
டீ வேணாம்…  கடலைக் கொடு என சைகையிலேயே பேசினார்.
அவரும் கைநிறைய வேர்கடலையை அள்ளிக் கொடுத்தார்.
நான் சொன்ன மாரி, டபுள் துணி போட்டு தைச்சிருக்கியா ? என்றார்.
அதுக்கு என்னா? … இப்ப தைச்சித் தாரேன்… காசு மட்டும் கொறைக்காம கொடு…. என்றார்.
காசுல்லாம் கிடையாது… கடலை வாங்கிக்க என்றார்,

இவரும் தைக்க ஆரம்பித்தார். ஒரு பை வாங்கிக் கொண்டு … நான் நகர ஆரம்பித்தேன். அவரை கடந்ததும் ..  என் ஆயாவின் சுருக்குப்பை ஞாபகம் எனக்கு!

அப்பாவுக்கு, எவ்ளோ கஷ்டம் வந்தாலும்,  ஆயாவின் சுருக்குப்பையில் மட்டும் பணம் இல்லாமல் இருக்காது. இப்போது நானும் புடவையின் அடி முந்தானையில்  பணத்தை  முடி,   வெளியில் தெரியாமல் வைப்பதை  என் ஆயாவிடம்தான் கற்றுக் கொண்டேன்.

பள்ளியில் படிக்கும்போது பேனா, நோட்டு  வாங்க  அப்பா பணம் தரவில்லையென்றால், ஆயாவின் பக்கத்தில் நின்று அழுது சாதிப்பது, சினிமா பார்க்க பணம் இல்லை என்று சொன்ன  ஆயாவிடம், ”இல்ல…. நீ வைச்சிருப்பே….. பையைக் காட்டு… ” என அழுது புரண்டு  வாங்கியது மறக்க முடியாது..  வீட்டில் சோறு இல்லாத நேரங்களில்,  ஆயாவின் சுருக்குப்பைதான் எங்களுக்கு இட்லி வாங்கி தந்தது.

எங்களுக்கு வந்த மழைக்கால ஜூரத்துக்கு காபியாகவும் குரோசின் மாத்திரையாகவும், வெயிலின் அம்மைக்கு இளநீராகவும் மாறிய சுருக்குபை,   பொங்கலுக்கு துணி எடுக்க வசதியில்லாம  இருந்தபோது, சீட்டிதுணியில் (காட்டன்) பாவாடையாக மாறியது எங்கள் ஆயாவின் சுருக்குப்பை!

இப்படி…  பழைய நினைவில் நடந்துக்கொண்டே சென்றதில் வந்து விட்டது ஜியோ சர்வீஸ் சென்டர்.

வாங்க மேடம்., லேட்டா வந்திருக்கீங்க….. சீக்கிரம் சொல்லுங்க…. என்றார் ஊழியர்.

என் போனை டேபிளில் வைத்து……153 ரூபாய் ரீஜார்ஜ் செய்தேன்…. டச் போனுக்கு அது செல்லாதாம்… ஜியோ போனுக்குத்தான் போகுமாம்….. இப்ப நான் என்ன செய்யறது…

சாரி மேடம்… நாங்க ஒண்ணும் செய்ய முடியாது…..

ரீஜார்ஜ் பண்ண தேதியிலிருந்து 28 வது நாள் டான்னு… எனக்கு  நெட்டு கட் ஆகுது….. போன்  பேசறது கட் ஆகுது…. எல்லாமே சிஸ்டமேடிக்கா இருக்கு…. ஆனா….. ஏத்துக்காத சிம்முக்கு நான், பணம்  தெரியாமல் போடுறேன்…. அது எப்படி? உடனே …அம்பானி கல்லா பெட்டிக்கு போய்டுது…. இதுக்கு உங்க சிஸ்டமேடிக் வேலை செய்யாதா?…… என்றேன்.

சாரி மேடம்…. நீங்க கஸ்டமர் கேருக்கு போன் போட்டு சொல்லுங்க…. நாங்க எதுவும் பண்ண முடியாது….

கஸ்டமர் கேருக்கும் போன் போட்டேன்… போன காசு …போனதுதானாம்…. இந்த, பிரச்சனை நிறைய இருக்காம்….. நாங்க தெரியப்படுத்திடுறோம்….. மேடமுனு வைச்சிட்டாங்க…. கடைசியில் என்னுடைய பணம் 153, அபேஸ்… டூ… அம்பானி.

ரூபாய், 153 ஏமாந்துட்டோமேன்னு வீட்டுக்கு திரும்பி நடக்கும்போது, சுருக்குப்பை குப்பு ஆயா… சிரித்துக் கொண்டே என்னை கடந்து போனார். அவருக்கு பை தைப்பதற்கு தையற்காரங்க இருக்காங்க. பையை வித்து கடலை கொடுக்கும் அம்மாக்கள் இருக்காங்க.ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை! இவங்கள அழிச்சிட்டு வால்மார்ட்டு, அம்பானி, டாடான்னு நாடு மாறுனதுக்கு பிறகு நம்ம வருமானம் எப்படி போவுது, என்ன ஆச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது!

– லட்சுமி.

 

மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

2

மோடிக்கு முன்னாடி இவுங்க ஆன்மீக கார்ப்பரேட் சாமிங்க
மோடிக்கு பின்னாடி இவுங்க சூப்பர்மார்கெட் கார்ப்பரேட் சாமிங்க…!

படம்: வேலன்

இணையுங்கள்:

ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

0

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக வேலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் நகர திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் தி.மு.க, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்), திராவிட இயக்க தமிழர் பேரவை, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னால் நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்கள் வேலூர் மக்கான் பகுதியில்  அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

மாலை 5 மணிக்கு எழுச்சியோடு தொடங்கிய பேரணி முக்கிய சாலையைக் கடந்து தலைமை அஞ்சலகம்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. திரு. முகமது சகி அவர்கள்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பட்டன.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ் அவர்களும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்) யின் மாவட்டச் செயலாளர் தோழர் தயாநிதி அவர்களும்,  முன்னால் நாடாளுமன்ற-சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்களும் கண்டன உரையாற்றினர். இறுதியில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்துத்துவ கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்ப்பாக நடைபெற்ற இந்தப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது தவிர மேற்கண்ட பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 07.03.2018 புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து தோழர்கள் முழக்கமிட்டவாறு சென்றது மக்களிடையே பிரச்சாரமாக அமைந்தது. முன் அனுமதி இன்றி திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்​.