Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 53

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்
  • அட்டைப்படக் கட்டுரை – ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்
  • ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணிதிரட்டலும்!
  • புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்குப் பொருத்தமான காவி + போலீசின் கும்பலாட்சி
  • அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
  • ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம் காவிக் கும்பலே ஊற்றுக்கண்!
  • கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
  • கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்

கேரள மாநிலம் வயநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜூலை 30 அன்று அதிகாலையில் நடந்த நிலச்சரிவு 350 பேரை பலி கொண்டு விட்டது. இன்னும் 300 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

முண்டக்கை, சூரல்மலை, நிலாம்பூர் ஆகிய கிராமங்கள் பெருமழை வெள்ளத்தின் தாக்கத்தினால் நிலம் சரிந்து மொத்தமாக சேற்றிலும் சகதியிலும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மீட்பு படையினர் மண் மூடிய கற்பாறை இடுக்குகளிலிருந்து மனித உடல்களை பிடுங்கி எடுக்கும் காட்சிகளைக் கண்டு நாடே பதைபதைத்துப் போனது.

சடலங்களை தோண்டி எடுக்கும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் பொழுதே எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லாமல் வயநாடு பேரழிவுக்கு கேரள மாநில அரசுதான் காரணம் என்று மாநிலங்களவையில் பச்சையாக பொய் சொன்னார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஒரு வாரத்துக்கு முன்பே 23 ஆம் தேதியே கேரள மாநில அரசுக்கு பேரிடர் நேர இருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தும், முன்னேற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தும், கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அக்கறையற்று இருந்ததே இவ்வளவு மக்கள் பலியாவதற்கு காரணம் என்று அமித்ஷா கூறினார். இவ்வளவு மக்கள் செத்து மடிந்ததைப் பற்றி எவ்வித மனித உணர்ச்சியும் இல்லாமல் பச்சையான பொய்யைச் சொல்லி, தான் இட்லரின் கோயாபெல்ஸ் ரகத்தைச் சேர்ந்த ஒரு பாசிஸ்ட் என்று விகாரமாக வெளிக்காட்டிக் கொண்டார்.

வயநாடு நிலச்சரிவு பேரிடரினால் மாநிலமே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பொதுவாக பெருமழை வரக்கூடும் என்ற அளவில் தான் எச்சரிக்கை விடுத்தனரே தவிர இப்படிப்பட்ட பேரிடர் நேரும் வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியோ நிலச்சரிவு ஏற்படும் வகையில் பெரிய மழை வெள்ளம் வரும் என்றோ எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை என்று உடனடியாக மறுப்பு தெரிவித்தார். சிறிதும் நேர்மையில்லாமல் பொய் பேசிய அமித்ஷாவை அம்பலப்படுத்தினார்.

இவ்வளவு பெரிய செயற்கைப் பேரிடர் நிகழ்ந்திருக்கும் நிலையிலும் ஊடகங்களோ, இதை உள்துறை அமைச்சருக்கும் கேரள முதல்வருக்கும் இடையிலான கொள்கை வேறுபாடாக ஊதிப் பெருக்கி விவாதப் பொருளாக்கின.

இது இந்த இருவருக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு தான்.


படிக்க: தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!


நாட்டின் உழைக்கும் மக்கள் யார் எப்படி செத்தாலும், எக்காலத்திலும் எந்தக் கவலையும் படாதவர். அதை தமது கட்சியின் கொள்கையாகவே கொண்டவர். அதிலும் தமக்கு வாக்களிக்காத மாநிலத்து மக்களின் மேல் வன்மத்தை கக்கக் கூடியவர் இந்த அமித்ஷா.

ஒரு பெரும் இயற்கை பேரிடர் நிகழ்ந்து விட்ட நிலையில் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு மக்களை மீட்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருப்பவர் பினராயி விஜயன்.

இவ்விரண்டு கொள்கைகளும் வேறு வேறானவை தான்.

ஆனால், நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் கொள்கை ஒற்றுமையைப் பற்றித் தான்.

அதாவது இந்தியாவில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சுற்றுலா தொழிலை – சுற்றுலாப் பொருளாதாரத்தை ஊக்குவித்து வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு எதிரானவர்கள் யாராயினும் அவர்கள் தேசத்தின் விரோதிகளாவர். எனவே அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது இருவரினுடைய பொதுக் கொள்கையாகும்.

நமது நாட்டில் சுற்றுலா துறையை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற இந்த கொள்கையின் காரணமாகத்தான் மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் மேலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளை மீறி பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. மூன்று நட்சத்திர ஐந்து நட்சத்திர விடுதிகள் பெரியப் பெரிய ரிசார்ட்டுகளுடன் சுற்றுலாத்தலங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுகின்றன.

மேலும் புதிதாக கோடை வாசஸ்தலங்களும் பல இடங்களில் மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

சரிவான மலைப் பகுதியை வெட்டிச் சமன்படுத்தி இப்படிப்பட்ட கட்டுமானங்களை எழுப்புகின்றனர். இன்னும் பல வகை கனிமங்கள் அகழும் சுரங்கங்கள் வெட்டுதல், கருங்கல் குவாரிகள் அமைத்தல், சிறிய பெரிய அணைக்கட்டுகளைக் கட்டி நீரைத் தேக்கி நீர் மின்சார நிலையங்கள் அமைத்தல் என மிகப்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரளம் தமிழ்நாடு கர்நாடகம் கோவா மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பலநூறு கிலோ மீட்டர்கள் நீண்டிருக்கின்றது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகளைக் கொண்டிருக்கிறது. அடர்ந்த காடுகளுடன் கூடியது.

பெருமரங்கள் மற்றும் பிற மலைத் தாவரங்களின் வேர்களின் தனிச்சிறப்பான ஆற்றல்தான் பாறைகளை மூடி இருக்கும் மண் பகுதியை இறுக்கமாக பிடித்திருக்கின்றது. மழை நீரால் மண் கரைந்து ஓடி விடாமல் தாவரங்களின் வேர்கள் தான் ஒருசேர நீரையும் மண்ணையும் தடுத்து நிறுத்தி வைக்கின்றன.

மொத்த மலைச்சரிவின் சாய்வுப் பகுதியில் ஒரு இடைநிலைப் பகுதி வெட்டிச் சமன்படுத்தப்பட்டு கான்கிரீட் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படும் போது உச்சியில் இருந்து அடிவாரம் வரையிலுமான பாறையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் மண்ணின் தொடர்ச்சி அறுபட்டுப் போகிறது.

மண்ணையும் மழை நீரையும் தாங்கிப் பிடிக்கும் மலை தாவரங்களின் வேர்கள் அறுத்தெறியப்படுவது தான் நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலை முழுவதிலும் எல்லா மாநிலங்களுமே எந்த வேறுபாடுமின்றி போட்டி போட்டுக் கொண்டு காடுகளை அழித்து கட்டுமானங்களை எழுப்பி வருகின்றன.

தமிழ்நாட்டின் ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களில் பெரு நகரங்களுக்கு இணையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தவறாமல் மலர் கண்காட்சி நடத்தி ஊடக விளம்பரங்களின் மூலம் இந்தியா முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.


படிக்க: வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்


மாநில அரசுகளின் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் இந்திய சுற்றுச்சூழலியல் ஆய்வு மையத்தின் தலைவர் மாதவ் காட்கில் அறிக்கை 2011 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை செய்தது.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் நிலச்சரிவுகளாலும் பெருமழை வெள்ளங்களாலும் ஏற்படும் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்பதை அறுதியிட்டு அந்த அறிக்கை கூறியது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை மூன்று சுற்று சூழல் உணர்திறன் (Eco sensitive) மண்டலங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்குமான தனித்தனி வழிகாட்டுதல்களை முன்வைத்தது மாதவ் காட்கில் கமிஷனின் அறிக்கை.

ஆனால் கர்நாடகம் மகாராஷ்டிரம் கேரளம் ஆகிய மாநிலங்கள் காட்கில் அறிக்கை மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி நிராகரித்து விட்டன. ஒன்றிய அரசும் அதே பார்வையுடன் அந்த அறிக்கையை புறந்தள்ளிவிட்டது.

இப்போது சூழலியலாளர்கள் எச்சரித்திருந்தவாறு பேரிடர் ஒன்று நேர்ந்துவிட்டவுடன் நான் இல்லை நீ இல்லை என்று அவரவரும் பிறர் மீது பழி சுமத்திவிட முயல்கிறார்கள்.

கேரளத்தில் மட்டுமல்ல இமாச்சலப் பிரதேசத்திலும் உத்தராகாண்டிலும் நிலைமை இதுவே தான்.

ஆண்டுதோறும் பேரழிவுகள் நடந்து மக்கள் பலிகொள்ளப்படுகின்றனர். இந்தியாவெங்கும் காடுகள், மலைகள், கடல் வளங்கள் என்று எல்லா இயற்கை வளங்களும் எல்லையில்லாமல் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் சூறையாடப்படுகின்றன.

இந்த சுரண்டலுக்காக அரசும் ஆட்சியாளர்களும் மேற்கொள்ளும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே இப்பேரிடர்களுக்கு அடிப்படையாகும்.

எத்தனை இயற்கை பேரிடர்கள் நடந்தாலும் எந்த ஒரு கார்ப்பரேட் திட்டங்களும் எப்போதும் கைவிடப்பட்டதில்லை. அனைத்து கட்சி ஆட்சியிலும் இதுவே நிலைமை.

காலநிலை நெருக்கடி மேலும் மேலும் முற்றி வருகின்ற நிலையில் மேகப் பெருவெடிப்புகள் ஏற்பட்டு திடீர் பெருவெள்ளம் நகரங்களை சூழ்வதும், மறுபுறம் கடும் வறட்சி, கடும் வெப்பம், நில அதிர்ச்சிகள் சூறாவளிகள் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் புயல் கடலில் சுனாமி என்று கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு எதிராகத்தான் இயற்கை கடுஞ்சீற்றத்துடன் எதிர்வினையாற்றுகின்றது.

எனவே ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்த அளவில், மாதவ் காட்கிலின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோது நாடு முழுவதற்கும் மக்கள் நலனையும் இயற்கைப் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தும் மாற்று பொருளாதாரக் கொள்கைகள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதற்காக அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களும் மக்களுடன் இணைந்து போராடவும் தலைமை ஏற்று வழிநடத்தவும் முன்வர வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்
  • அட்டைப்படக் கட்டுரை – ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்
  • ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணிதிரட்டலும்!
  • புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்குப் பொருத்தமான காவி + போலீசின் கும்பலாட்சி
  • அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
  • ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம் காவிக் கும்பலே ஊற்றுக்கண்!
  • கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
  • கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்! மக்கள் அதிகாரம் கோரிக்கை

கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்!
மக்கள் அதிகாரம் கோரிக்கை

03.08.2024

பத்திரிகை செய்தி

வ்வொரு ஆண்டும் காவிரியில் உரிய நீரை திறந்து விடுவதற்கு கர்நாடகா அரசு மறுக்கிறது. எனினும் கர்நாடகப் பகுதிகளில் பெய்யும் பெரும் மழையின் காரணமாக ஒவ்வொரு ஆண்டுமே தேக்கி வைக்க முடியாத நீரை உபரியாக திறந்து விடுகிறது.

இதனால் 15 டிஎம்சி வரை தண்ணீர் வீணாகிறது. குறிப்பிட்ட அளவு நீர் கடலில் கலப்பது என்பது தேவை எனும்போது கூட, தேவைக்கு அதிகமாக அதுவும் நீர் தேக்கி வைப்பதற்கு வாய்ப்பு இருந்தும் கூட வீணாக கடலில் நீர் கலக்கிறது.

கொள்ளிடம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் அதிகாரம் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது. இந்த ஆண்டு உரிய நீரை கர்நாடகாவில் இருந்து பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் இருந்த போதும் உபரியாக வந்த நீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பது என்பது உண்மை.

ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினரும் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் மக்களுக்கு இன்னல் விளைவித்து வருகிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு, ராசி மணல் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான வேலைகளிலும் கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவதற்கான வேலைகளிலும் உடனே ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை! பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!
பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

02.08.2024

கண்டன அறிக்கை

ரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, டெஹ்ரானில் பாசிச இஸ்ரேல் அரசால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

1963-ஆம் ஆண்டு பாலஸ்தீன அகதி முகாமில் பிறந்த ஹனியேவின் மனைவி, மகன்கள், மகள்கள் சகோதரிகள் அவரது குழந்தைகள் என குடும்பம் முழுவதையும் பாசிச இஸ்ரேல் அரசு திட்டமிட்டு கொன்றொழித்தது. அதற்குப் பின்னரும் கூட ஹமாஸ் இயக்கத்தின் உறுதியான தலைவராக இருந்தார்.

அமெரிக்க உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு பாசிச இசுரேல் அரசு செயல்பட்ட போதும் கூட இதுவரையும் முழுமையான வெற்றியை காண முடியவில்லை.

பாசிச இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் இஸ்ரேலில் வெடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தான் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்த குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. காசாமுனைப் பகுதியில் ஏறத்தாழ 86 சதவீதம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் ஏன் உலக மக்கள் அனைவரும் போரை நிறுத்து என்று ஒற்றைக் குரலில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தினம் தோறும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

எத்தனை பேர் இறந்தாலும் விடுதலை உணர்வு ஒருபோதும் அடங்கப் போவதில்லை. இஸ்மாயில் ஹனியே, ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ஒருபோதும் பாலஸ்தீன விடுதலை உணர்வு மடிந்து விடாது. பாலஸ்தீன மக்கள் மட்டுமல்ல; உலக மக்கள் அனைவரும் இணைந்து விரைவில் பாசிச இஸ்ரேல் அரசை புதைகுழியில் வீழ்த்துவார்கள் என்பது நிச்சயம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இஸ்‌ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை

மத்திய காசாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்.

தெற்கு மற்றும் மத்திய காசாவில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இஸ்ரேலிய படைகள் அழுத்தத்தை அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டு வரும் தெற்கு நகரமான கான் யூனிஸின் கிழக்குப் பகுதிகளில் ஜூலை 28 அன்று கடுமையான தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களை தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி நெரிசலான பகுதிகளான மேற்கில் உள்ள அல்-மவாசி (al-Mawasi) அல்லது வடக்கே உள்ள டெய்ர் எல்-பலா (Deir el-Balah) நகரங்களை நோக்கித் தள்ளியது.

இஸ்ரேலிய டாங்கிகள் நகரின் கிழக்கில் உள்ள அல்-கராரா (கிசுஃபுயிம்) [al-Karara (Kissufuim)], அஸ்-ஸன்னா [az-Zanna] மற்றும் பானி சுஹைலா [Bani Suheila]  ஆகிய நகரங்களுக்குள் நுழைந்ததால், கடந்த 24 மணி நேரத்தில் இராணுவத் தாக்குதல்களில் 66 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு கான் யூனிஸில் டஜன் கணக்கான போராளிகளைக் கொன்றதாகவும், இராணுவ உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்‌ரேலிய படைகள் கூறுகின்றன.

இதற்கிடையில், எகிப்து எல்லைக்கு அருகிலுள்ள ரபாவில், இஸ்ரேலிய படைகள் நகரத்தின் வடக்குப் பகுதிகளுக்குள் ஆழமாக முன்னேறின. அங்கு அவர்கள் இன்னும் முழு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவில்லை.

மத்திய காசா பகுதியில் டாங்கிகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாலும், இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்ததாலும், அங்கு உள்ள புரைஜ் முகாம், நுசிராத் முகாம் மற்றும் ஜுஹோர் அத்-திக் கிராமம் பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காசாவின் 86 சதவிகித பகுதிகள் இப்போது வெளியேற்ற உத்தரவின் (evacuation orders) கீழ் உள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமை (யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ) தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 39,324 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 90,830 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வளவு பேரைக் கொன்று குவித்த பின்னரும் இரத்த வெறி அடங்காமல் இஸ்‌ரேல் காசாவில் நடத்தி வரும் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி வருகிறது.

புரைஜ் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் செல்லும்போது குழந்தைகள் ஒரு டிரக்கின் பின்புறத்தில் சவாரி செய்கிறார்கள்.
மத்திய காசாவில் உள்ள புரைஜ் மற்றும் அல்-ஷுஹாதாவின் பல பகுதிகளை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டது.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா முகமையின் தலைவரான பிலிப் லஜாரினி, “காசாவில் 14 சதவீத பகுதிகள் மட்டுமே வெளியேற்ற உத்தரவுகளுக்கு உட்படுத்தப்படவில்லை” என்று கூறினார்.

 

அடிக்கடி வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால் இஸ்ரேல் “அழிவையும் பீதியையும்” உருவாக்குவதாக லாஸ்ஸாரினி குற்றம் சாட்டினார்.
பாலஸ்தீனியர்கள் தங்கள் தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொண்டு புரைஜை விட்டு வெளியேறினர்.
அங்குள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, புரைஜ் மற்றும் நுசைராட் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
புரைஜில் இருந்து தப்பிச் செல்லும்போது சேதமடைந்த வேனில் மக்கள் சவாரி செய்கிறார்கள்.
நுசிராட் மற்றும் புரைஜ் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வெளியேற்ற உத்தரவுகள் சுமார் 29,000 மக்களை பாதித்துள்ளது.


ராஜேஷ்

நன்றி: அல்ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இதுவும் வன்முறை தான் | கவிதை

ன்முறை

இதுவும் வன்முறை தான்
வன்முறையாக ஒரு போதும் பார்க்கப்படுவதில்லை

அது உன் விருப்பம் என்று திணிக்கப்படுகிறது

சேரியில் வீடிருந்தால்
பிள்ளைக்கு கல்யாணம் ஆவதில்லை

கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வீட்டை மாற்ற வேண்டும்
கல்யாணம் கூட எளிதில் முடிந்து விடும்
ஆனால் வீடு கிடைப்பது?
அதுவும் சேரியில் இருந்து வந்தவர்களுக்கு
குதிரைக்கொம்பு

சென்னையில் எந்த பகுதியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது மாடியில் இருந்து கேட்பார்கள்

சேரியாக இருந்தால் வீடு இல்லை என்பார்கள்

ஊர் பேரை மாற்றிச் சொன்னாலும்
மூஞ்சியைப் பார்த்து
ஐந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு பத்தாயிரம் ரூபாய் என்பார்கள்

மற்ற சாதியினரை விட தாழ்த்தப்பட்டவர் என்றால் வாடகை அதிகம்
ஆயிரம் நிபந்தனைகள்

மாட்டுக்கறி சமைக்க கூடாது
வெளியே வாங்கி வந்து தின்னவும் கூடாது

எப்படியும் இவர்கள் மாட்டுக் கறி தின்று விடுவார்கள்
என்பதால் கறியே சமைக்க கூடாது

யாரையும்  அழைத்து வந்து மாட்டுக்கறியை நாங்கள் வாயில் திணிக்கவில்லை
ஆனாலும் நாங்கள் என்ன தின்ன வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்

என் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று எவன் கழுத்திலும்
கத்தியை வைக்கவும் இல்லை
ஆனாலும் நாங்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் வீடும் நிலமும் அவர்களுக்கு சொந்தமில்லை

இதுவும் சென்னை தான்

சென்னை இன்னொரு முகம்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில் புரட்சியை முன்னெடுப்போம்!

2


நாள்: 20-07-2024

பத்திரிகைச் செய்தி:

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயாகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில்
புரட்சியை முன்னெடுப்போம்!

மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர
வழிமுறையில் ஊன்றி நிற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் கோலோச்சும் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை எமது அமைப்பின் 10-வது பிளீனத்தில் இருந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். அதன் முக்கியமான பகுதியாக, போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறை தொடர்பான ஓர் உட்கட்சி விவாதத்தை நடத்தி முடித்துள்ளதை தோழர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைப்பின் சித்தாந்த மட்டத்தில் ஒரு பெரும் உந்துதலை ஏற்படுத்தும் வகையிலான இந்த உட்கட்சி விவாதமானது, “அராஜகவாத செயல்தந்திரக் கண்ணோட்டமும் மா-லெ செயல்தந்திரக் கண்ணோட்டமும்” என்ற தலைப்பில் 21-10-2023-இல் தொடங்கப்பட்டது. எனினும் எடுத்துக் கொண்ட உள்ளடக்கத்தின் ஆழம் மற்றும் விரிவான தன்மை காரணமாக ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.

கட்சி முழுவதுமுள்ள கட்சிக் குழுக்களிலிருந்து இந்த சிறப்புக் கூட்டத்திற்கான சிறப்பு விவாதக் குழுக்கள் கட்டியமைக்கப்பட்டு, அக்குழுக்கள் விவாதித்து தங்களது குழு பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்பினர். இக்குழுக்களும், நேரடிப் பிரதிதிகளான முழுநேரப் புரட்சியாளர்கள், தேர்வுநிலை முழுநேரப் புரட்சியாளர்களும் தங்களது கருத்துகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிறப்புக் கூட்டம் தள்ளிப்போனது. அந்தவகையில், கடந்த மே மாதம் 12-ஆம் தேதி அன்று இந்த சிறப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த உட்கட்சி விவாதமானது 1) மார்க்சிய-லெனினிய போர்தந்திர-செயல்தந்திர வழிமுறை 2) நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்ற இராணுவப் பாதை மற்றும் நிரந்தர தேர்தல் புறக்கணிப்பு ஆகியவற்றின் பொருத்தமின்மை 3) பாசிசம் அரங்கேறும் இன்றைய சூழலும் நமது குறித்தத் திட்டமும் ஆகிய அம்சங்களைத் தீர்மானிக்கும் வகையில் நடந்தேறியது.

சிந்தாந்தப் பிரச்சினைகள் தொடர்பான இந்த உட்கட்சி விவாதம் தோழர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சிறப்புக் கூட்டம் பேருற்சாகத்துடன் நடந்தது. விரிவான பரிசீலனை, பிரதிநிதிகளின் ஜனநாயக பூர்வமான கருத்துகள் – விவாதங்களுடன் நடந்தேறிய இக்கூட்டத்தில், புதிய இளம் தோழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டது முக்கியமான அம்சமாகும்.

மா.அ.க.வில் ஏற்பட்ட பிளவுக்கான காரணம் கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் என்று அரசியல் சித்தாந்த ரீதியாக எமது அமைப்பின் 10-வது பிளீனத்தில் அடையாளப்படுத்தியது மட்டுமல்ல, அதற்கு அடிப்படை வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதம் என்று இந்த மா.அ.க. சரியாக வரையறுத்தது, மார்க்சிய-லெனினிய இயக்கத்திற்கு மா.அ.க.வின் முக்கியமான பங்களிப்பும் திருப்பு முனையாக அமைந்ததாகும். புதிய திசையில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்பிக்கையூட்டியதாகும். இது உண்மை என்பதை கடந்த மூன்றரை ஆண்டு மா.அ.க.வின் அனுபவங்களும் தற்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சிறப்பான பங்களிப்பும் மீண்டும் உறுதிசெய்கிறது.

000

இந்தியாவில் மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறை தொடர்பாக, மா.அ.க.வைத் தவிர வேறெந்த மா-லெ குழுக்களும் தொகுப்பான ஒரு கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில்லை. அந்தவகையில், 1980-களில் வகுக்கப்பட்ட அரசியல் கோட்பாட்டு ஆவணம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. ஆனால், அன்று முதல் மா.அ.க.வோ இந்த வழிமுறையைக் கைவிட்டு, அராஜகவாதக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வந்துள்ளது.

“மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்”, “பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம்”; “கட்டமைப்பு நெருக்கடிக்கு மாற்று மக்கள் அதிகாரம்”; “காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்” என்று கடந்த காலங்களில் மா.அ.க. வகுத்து செயல்படுத்தியவை அனைத்தும் இடைக்கட்டத்திற்கான முழக்கங்களை செயல்தந்திர முழக்கங்களாகக் கருதிக் கொண்டவையே அன்றி, இவை செயல்தந்திரங்கள் அல்ல. இந்த மைய முழக்கங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் முழங்குவதையே மைய இயக்கங்களாக தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, பிரபலம் தேடும் வழிமுறைக்கு வழிவகுத்ததே அன்றி, அரசியல் படை கட்டுவதற்கு வழி வகுக்கவில்லை.

இவ்வாறு எமது அமைப்பு திசைவிலகிச் சென்றதன் விளைவுதான் பிளவு என்பதை போர்த்தந்திர-செயல்தந்திர கோட்பாட்டு வழிமுறையைப் பின்பற்றுவதில் நிகழ்ந்த தவறான கண்ணோட்டத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

போர்த்தந்திர-செயல்தந்திர கோட்பாட்டு வழிமுறையின் முதன்மையான கூறுகள், அவற்றின் பருண்மையான செயல்பாடுகள், அவற்றை பிரித்தறிவதில் உள்ள சிக்கல்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் போன்றவை இந்த உட்கட்சி விவாதத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

மா-லெ இயக்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பதற்கும் பொருளாதாரவாதம், நவீன கலைப்புவாதம், நவீன அராஜகவாதம் என பல்வேறு திசைகளிலும் அடையாள அரசியலை இணைத்துக் கொண்டும் பிரிந்து பிளவுப்பட்டிருப்பதற்கான காரணங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பரிசீலிக்கப்பட்டன.

000

1980-களில் நிலவிய அன்றைய இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவத்தின் நிலைமைகளிலிருந்து நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்கிற இராணுவப் போர்த்தந்திரப் பாதையானது இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு உடையது என்று தீர்மானித்தோம். இந்த பாதையில் விவசாயிகளின் விவசாயப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

தற்போதைய மறுகாலனியாக்க டிஜிட்டல் யுகத்தில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைப் பொருந்தாது என்று முதல்நிலையிலேயே முடிவெடுத்தாலும், இது தொடர்பாக 1980-களில் நாம் வகுத்த முடிவுகளைப் பரிசீலிக்கும் போது, அன்றைய காலத்தில், புறநிலைமை குறித்து அரசியல் கோட்பாட்டு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையிலேயே அன்றைக்கே நீண்டகால மக்கள் யுத்தப் பாதை நமது நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

குறிப்பாக, நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையைத் தீர்மானிப்பதற்கான சீனாவின் நிலைமைகளுடன் இந்தியாவின் நிலைமைகளை ஒப்பிடும் அதேவேளையில், இந்தியாவிற்கு 10 சிறப்பம்சங்கள் (மையப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த அரசு; மூன்றாம் உலக நாடுகளிலேயே தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஒரு துணை வல்லரசு; தொழிலாளர் வர்க்கத்தில் செல்வாக்கு செலுத்தும் குட்டிமுதலாளித்துவ ஆதிக்கம்; அதுவரையில் நாடு தழுவிய எழுச்சி அனுபவங்கள் இன்மை; இந்திய கம்யூனிச இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் திரிபுவாதம்; மையப்படுத்தப்பட்ட இந்திய இராணுவம்; சாதி வேறுபாடுகளால் மக்கள் பிளவுற்றிருப்பது, மா-லெ கட்சி பலவீனப்பட்டு பல குழுக்களாகப் பிரிந்திருப்பது… போன்ற பத்து சிறப்பம்சங்கள்) இருப்பதால், துவக்கத்திலேயே ஆயுதப் போராட்ட முனை இருக்காது என்றும், அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில்தான் ஆயுதப் போராட்ட முனை உருவாகும் என்றும் தீர்மானித்திருந்தோம்.

உண்மையில், இந்த பத்து சிறப்பம்சங்கள் இந்தியாவின் நிலைமைக்கு நீண்டகால மக்கள் யுத்தப் பாதை பொருந்தாது என்பதை உணர்த்துகின்றன. ஆனால், அன்றைய காலத்தில், நக்சல்பாரி இயக்கம் என்றாலே நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற இடது சந்தர்ப்பவாத மனநிலையில் இருந்துதான் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைதான் புரட்சியின் பாதை என்ற முடிவை எடுத்துள்ளோம் என்பதை உணர்கிறோம்.

அந்தவகையில், புறநிலை யதார்த்தமான இந்த பத்து சிறப்பம்சங்களின் அடிப்படையில் அரசியல் இயக்கம் எடுப்பதை மட்டுமே நாம் செய்துள்ளோம். நக்சல்பாரி இயக்கம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நாம் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் செயல்படுவதாகக் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் முற்றாக நிராகரித்துவிட்டோம் என்பதுதான் நமது சிறப்பம்சமாகும்.

அதேவேளையில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதாகக் காட்டிக் கொள்ள, இத்துடன் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிரந்தரப் போராட்ட வடிவத்தை இணைத்துக் கொண்டோம். அந்த காலத்தில், தேர்தல் பங்கேற்பு என்பது திரிபுவாதம், தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே புரட்சிப் பாதை என்று வறட்டுத்தனமான அணுகுமுறை நக்சல்பாரி இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியதானது நம்மையும் பீடித்துள்ளது என்பதை உணர்கிறோம்.

மொத்தத்தில், 1980-களில் நாம் வகுத்த பத்து சிறப்பு நிலைமைகள் காரணமாக நீண்டகால மக்கள் யுத்தப் பாதை இந்தியப் புரட்சிக்குப் பொருந்தாது என்ற முடிவுக்கு வந்தாலும், 40 ஆண்டுகளில் மாறியுள்ள நிலைமைகள் அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றின் காரணமாக, இந்தியப் புரட்சியானது, முதலாளித்துவ நாடுகளில் பின்பற்றப்படும் மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையைப் (Insurrection) முதன்மையாகக் கொண்டதாக இருக்கும் என்று தீர்மானிக்கிறோம்.

அதேசமயம், வாய்ப்புள்ள சில பகுதிகளில் – வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மலைகளும் காடுகளும் சூழ்ந்த, மறுகாலனியாக்கத்தின் கீழ் நகரமயமாக்கம் தீவிரமடையாத பகுதிகளில், அரசின் கண்காணிப்பு வலைப்பின்னல் இன்னும் விரிவடையாத பகுதிகளில் மக்கள் அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இந்தியப் புரட்சியின் இராணுவப் பாதையானது, பிரதானமாக மக்கள்திரள் எழுச்சிப் பாதையைக் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் சில கூறுகளையும் கொண்டதாகவும் இருக்கும் என்று தீர்மானிக்கிறோம். அக்காலத்தில் நமது முன்னோர்கள் தீர்மானித்த நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற கட்சியின் அடிப்படை நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என்று கருதுவது, இயங்கியலுக்கே எதிரான வறட்டுத்தனமாகும்.

000

மா-லெ போர்த்தந்திர – செயல்தந்திரக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளூராட்சி மன்றங்கள் – அதாவது நிலவுகின்ற ஆளும் வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்திற்கானவற்றை, மற்ற ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதைப் போலவே ஒரு போராட்ட அரங்கமாக பயன்படுத்த வேண்டும்.

ஆகையால், நாம் நிரந்தர தேர்தல் புறக்கணிப்பை ஏற்கவில்லை. அதேபோல, நிரந்தர தேர்தல் பங்கேற்பையும் ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட தருணத்தின் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப நாம் வகுத்துள்ள செயல்தந்திரத்தின் அடிப்படையில்தான் தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பும், தேர்தலை வேறு வகைகளில் அணுகுவதும் அமையும்.

மேலும், தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு என்பது செயல்தந்திரத்தின் கூறுகளில் ஒன்றான போராட்ட வடிவமாகும் (Form of Struggle). தொழிலாளர்கள் நடத்தும் கெரோ போராட்டம், மறியல் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டம் முதலானவற்றைப் போலவே, தேர்தல் பங்கேற்பும் புறக்கணிப்பும் ஒரு போராட்ட வடிவமேயாகும்.

இவற்றில் எந்தப் போராட்ட வடிவம், குறிப்பிட்ட அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகவும், மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு அவசியமாகவும் இருக்கிறதோ, அதைச் செயல்படுத்துவது என்பதுதான் செயல்தந்திரத் தலைமையாகும். எப்போதும் ஒரே போராட்ட வடிவத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறுவது இயக்க மறுப்பியல் கண்ணோட்டமாகும்.

செயல்தந்திரத்தின் கூறுகளில் ஒன்றான போராட்ட வடிவத்தை மட்டுமே உரைகல்லாகக் கொண்டு, தேர்தலில் பங்கேற்பவர்கள் திரிபுவாதிகள், தேர்தலைப் புறக்கணிப்பவர்கள்தான் புரட்சியாளர்கள் என்ற ஒரு தவறான கருத்து நீண்டகாலமாக நமது அமைப்பிலும் நக்சல்பாரி இயக்கத்திலும் நிலவுகிறது. இத்தகைய இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

தோழர் லெனின் கூறியது போல, நாடாளுமன்றத்தில் பங்கேற்பதன் நோக்கமானது, நாடாளுமன்றத்தின் வர்க்கத் தன்மையை உழைக்கும் மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதாகும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத நாடாளுமன்றத்தின் யோக்கியதையை, அருகதையை மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதாகும். முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் மூடுதிரையாக உள்ள நாடாளுமன்றத்தின் சூழ்ச்சிகளையும் பல்வேறு கட்சிகளின் தன்மைகளையும் அம்பலப்படுத்துவதாகும்.

சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.எம்-எல் உள்ளிட்ட நவீன திரிபுவாதிகள் நீண்டகாலமாக இந்தக் கடமையைச் செய்யவில்லை. அதற்கு மாறாக, ஆளும் கட்சியின் சில ஊழல்களை அம்பலப்படுத்துவது, அதற்காக நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதையே செய்து வந்துள்ளனர். மக்களுக்கு நாடாளுமன்ற முறையின் மீது இன்னமும் பிரமைகள் உள்ளதால், அதைப் போக்குவதற்காக நாடாளுமன்றத்தில் பங்கேற்று அதை அம்பலப்படுத்துவது அவசியம் என்று நவீன திரிபுவாதிகள் இன்னமும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய இந்திய நாடாளுமன்ற முறையானது மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நவீன காலனியாதிக்கக் காலகட்டத்தில் இயங்கிய நாடாளுமன்ற முறைக்கும் தற்போதைய மறுகாலனியாக்கக் கட்டத்தில் இயங்கும் நாடாளுமன்ற முறைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அந்தக் காலத்தைப் போல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் பிறகு சட்டமாக்கப்படும் நடைமுறை என்பது இப்போது இல்லை.

சட்டங்கள் பிரதமர் அலுவலகத்தால் அல்லது அமைச்சரவையின் ஒரு சிறு கும்பலால் தீர்மானிக்கப்படுகின்றன. 1990-களுக்குப் பின்னர், நாடாளுமன்றக் கூட்டங்களில் எண்ணற்ற மசோதாக்கள் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டு, எவ்வித விவாதமும் இல்லாமல் ஒரே நாளிலேயே சட்டமாக்கப்படுகின்றன. நாட்டு மக்களுக்கே தெரியாமல், நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் அந்நிய நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவற்றைப் பற்றி ஓட்டுக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புலம்பும் நிலைமைதான் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் நேரடியாக பங்கேற்கும் ஆணையங்கள், தீர்ப்பாயங்கள், முகமைகள் போன்ற அதிகார அமைப்புகளுக்கு அனைத்து அதிகாரங்களும் மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும், தேர்தல் கட்டுமானமே சீரழிந்து, கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைக்கு மாறிப்போய் விட்டது. மறுகாலனியாதிக்கத்தைத் திணிக்கும் சர்வாதிகார மன்றமாக அது மாறிப் போயுள்ளது. அதாவது, அரசு கட்டமைப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றம், தேர்தல் பிரதிநிதித்துவ முறை, உள்ளூராட்சி முறை உள்ளிட்ட அரசாங்கக் கட்டமைப்புகளும் மறுகாலனியாக்கத்திற்குப் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதையே நாம் கார்ப்பரேட் நலனுக்கான ஆட்சி அல்லது கார்ப்பரேட் ஆட்சி என்று குறிப்பிடுகிறோம்.

மன்மோகன் சிங் ஆட்சியின் 10 ஆண்டுகளில் உருவான இந்த நிலைமையானது, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் கடந்த 10 ஆண்டுகளில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான அடையாளங்கள் கூட இல்லாமல் ஒழிக்கப்படும் நிலைக்கு முன்னேறியுள்ளது. பல்வேறு சட்டங்களைத் திருத்தியதன் மூலமும் மரபுகளை மாற்றியதன் மூலமும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இத்தகைய நாடாளுமன்றத்தில் பங்கேற்று அதனை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளோ, கட்டுமானமோ தற்போதைய சூழலில் மிகமிக சொற்பமாகவே உள்ளன. இந்நிலையில், தேர்தலை ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் சுருங்கியுள்ளன. மா-லெ இயக்கம் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் நாம் பங்கேற்று, அதை அம்பலப்படுத்துவதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

000

2021 செப்டம்பரில் நடந்த உட்கட்சி விவாதத்தில், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற முழக்கமானது நமது செயல்தந்திரம் என்று தீர்மானித்திருந்தோம்.

அந்த ஆவணத்தில் வகுத்துள்ள பாசிசம் குறித்த சர்வதேச அளவிலான பொதுவான விளக்கங்கள் சரியானவையே எனினும், தற்போதைய மா-லெ போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறையின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, நமது நாட்டில் பாசிசம் அரங்கேறுவது ஓர் இடைக்கட்டத்தைக் குறிக்கிறது எனவும், அதற்கான தயாரிப்பு நடக்கும் இன்றைய சூழல் ஓர் இடைமாறுதல் கட்டம் என்ற முடிவுக்கு வருகிறோம்.

மேலும், காவி-கார்ப்பரேட் பாசிசம் என்ற வரையறையானது இன்றைய பாசிசப் போக்கின் பொதுவான சித்தாந்தத் தன்மை, வர்க்கத் தன்மையே குறிக்கிறதே அன்றி, அது இன்றைய நமது நாட்டின் பாசிச சக்தியை குறிப்பாக அடையாளம் காட்டவில்லை. நூற்றாண்டு அனுபவம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பல்தான் பாசிச சக்தி என்று வரையறுப்பதுதான் பொருத்தமானதாகும். இந்த பாசிச சக்தியானது, மார்வாரி, சிந்தி, பார்ப்பன, பனியா பின்னணி கொண்ட, அதிலும் குறிப்பாக, அம்பானி-அதானி-அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் நலனிற்காக முன்னிற்கிறது. அந்தவகையில், இன்றைய பாசிச சக்தியானது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி வகையறா பாசிசம் என்று வரையறிக்கிறோம்.

இந்த பாசிசம் நிச்சயம் அரங்கேறியே தீரும் என்பதால், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றை இப்போதே முன்வைத்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஆகியவற்றைக் கட்டுவதற்கான பணிகளில் இறங்க வேண்டும். எனினும், இப்போது இருப்பது பாசிசம் அரங்கேறுவதற்கான தயாரிப்புக் காலம் என்பதால், இடைமாறுதல் கட்டமாக இதனை வரையறுத்து, அதற்குரிய அரசியல் நடத்தை வழியை முன்வைத்து செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம்.

மேலும், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள குறித்த திட்டத்தில் உள்ள உடனடிக் கடமைகளில், நடைமுறைக்குப் பொருந்தாத பல அம்சங்களை நீக்கியும்  திருத்தியும் செழுமைப்படுத்தியுள்ளோம்.

சான்றாக, பக்கம் 338-இல் 10-வது அம்சமான, “கோயில்கள், மத நிறுவனங்கள், மடங்கள், டிரஸ்டுகளுகு சொந்தமான அனைத்து நிலங்களும் அவர்களது தனிச்சிறப்பான உடமைகளும் எவ்வித நட்ட ஈடுமின்றி பறிமுதல் செய்து, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களின் செல்வாக்கு நீக்கப்படும்” என்ற வறட்டுத்தனமான அம்சங்களை நீக்கியுள்ளோம்.

000

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் இந்தப் புதிய கோட்பாட்டு முடிவுகளுக்கு வந்துள்ளோம். இப்புதிய கோட்பாட்டு முடிவுகளின் அடிப்படையிலான செயல்பாடுகள்தான், நமது அமைப்பில் நீண்டகாலமாக நிலவிவந்த தவறான போக்குகளையும், நக்சல்பாரி இயக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாகப் பீடித்துள்ள நோயையும் விரட்டுவதற்கான அருமருந்தாகும். மக்களுடன் ஐக்கியப்பட்ட போல்ஷ்விக் முறையிலான கட்சியைக் கட்டியமைப்பதற்கான புதிய பாதையாகும்.

இம்மாபெரும் கடமையை சாதிக்க, உற்சாகத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்படுவோம்! தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அர்ப்பணிப்புடன் புரட்சிப் போரில் பீடுநடைபோட்டு தொடர்ந்து முன்னேற உறுதியேற்போம்!

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறையில் ஊன்றி நிற்போம்!

வலது சந்தப்பவாத – நவீன அராஜகவாத, நவீன கலைப்புவாதப் போக்குகளை முறியடிப்போம்!

பரந்துவிரிந்த மக்கள் திரள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில் புரட்சியை நோக்கி முன்னேறுவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை சாதித்து முடிப்போம்!

புரட்சிகர வாழ்த்துகள்!

✼ ★ ✼

சொந்த மக்களை அகதிகளாக்கும் “கார்ப்பரேட் திராவிட மாடல்” அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்காக 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் தி.மு.க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் இரண்டாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

ஆனால், தி.மு.க அரசு போராடும் மக்களின் கோரிக்கைக்குத் துளியும் செவிமடுக்கவில்லை. மாறாக, போராடும் மக்களை பொய் வழக்குகளில் கைதுசெய்து சிறையிலடைப்பது; போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்பவர்களை கிராமத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பது என இப்போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கி வருகிறது.

ஆனால், உறுதியாகப் போராடிவரும் மக்கள் தி.மு.க அரசைத் தங்களது கோரிக்கைகளை ஏற்க வைப்பதற்காக நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால், மக்களின் கோரிக்கைகளை கிஞ்சித்தும் மதிக்காத தி.மு.க அரசு, ஜூன் 10-ஆம் தேதி பொடவூர், சிறுவள்ளூர், நெல்வாய், எட்டையார்பாக்கம், வளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

“சொந்த மண்ணில், நிலத்தை இழந்து அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத அந்நிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழலாம்”

– பரந்தூர் மக்கள்

இதனால், ஆத்திரமடைந்த பரந்தூர் மக்கள், போராட்டத்தின் 700-வது நாளான ஜூன் 24 அன்று தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவிற்குத் தஞ்சம் புகப் போவதாகவும், இதற்காகப் போராட்டக்குழு நிர்வாகிகள் ஆந்திராவின் சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்தனர்.

மேலும், “நாங்கள் போராட்டத்தைத் தொடங்கி இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், தற்போதுவரை எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலத்தை கையகப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கும் அரசிடம் போராடி என்ன பயன்? வேறு வழியே இல்லாமல் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்திருக்கிறோம். சொந்த மண்ணில், நிலத்தை இழந்து அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத அந்நிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வதென்று அனைவருமாகப் பேசி முடிவு செய்திருக்கிறோம்” என்று தங்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதையடுத்து, சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக்கொடுக்கும் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாகவும், ஆனால் அம்முடிவில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் பரந்தூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது. கார்ப்பரேட் சேவையில் சமரசம் செய்துகொள்ளாத தி.மு.க-வின் இந்த மக்கள் விரோத போக்கு குறித்து அதன் கூட்டணிக் கட்சிகளும் வாய் திறப்பதில்லை. மொத்தத்தில், அகதிகளாக்கப்படுவதென்னவோ உழைக்கும் மக்கள்தான்.

“தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்” என்ற பரந்தூர் மக்களின் வார்த்தைகள் கேள்வியெழுப்புவது தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியையும்தான். இனியும் அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமலிருந்தால், அந்த அநீதியில் நமக்கும் பங்கு உண்டு!


அறிவு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒன்றிய அரசு ஊழியர்கள் பாசிச ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்வதற்கான தடை நீக்கம்! பாசிசமயமாகும் இந்திய அரசு!

ஒன்றிய அரசு ஊழியர்கள் பாசிச ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்வதற்கான தடை நீக்கம்!
பாசிசமயமாகும் இந்திய அரசு!

24.07.2024

கண்டன அறிக்கை

68 ஆண்டுகளுக்கு பின்னர், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் கழித்து மீண்டும் அத்தடை விலக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு பசுக்கொலைகளை தடுக்கிறோம் என்ற பெயரில் இந்திய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டது பாசிச ஆர்.எஸ்.எஸ். அதன் விளைவாக அந்த அமைப்பில் ஒன்றிய அரசு ஊழியர்கள் சேரக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டில் தற்பொழுது அந்தத் தடை மீண்டும் விலக்கப்பட்டு, ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி ஆட்சியை மேற்கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்து ராஷ்டிரத்தை நிறைவேற்றும் வகையில் அரசு உறுப்புகள் முழுமையையும் காவிமயமாக்குவதில் முதன்மையான நடவடிக்கையே இது.

அயோத்தி, குஜராத் முதல் குமரி வரை இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களுக்கு பாசிச ஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவாரங்களுமே அடிப்படையாக செயல்பட்டிருக்கின்றன. இனி இந்த நாட்டில் நடைபெறும் அனைத்து சாதி மற்றும் மதக் கலவரங்களில் அரசு உறுப்புகளும் நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் நெருங்கி விட்டன.

ஆகவே, பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இயல்பானதொரு அமைப்பாக மாற்ற முயற்சிக்கும் இந்த நடவடிக்கையையும், அரசு நிறுவனங்களை காவிமயமாக்கும் நடவடிக்கையையும் மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

பாசிச மோடியின் மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழ்நாட்டில் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!

தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!
பாசிச மோடி அரசிடம் நிதியைக் கெஞ்சி பெற முடியுமா?

23.07.2024

பத்திரிகை செய்தி

பாசிச மோடி அமித்ஷா கும்பலின் 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முன்வைக்கப்பட்டுள்ளது. சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் செலவினத்தைக் கொண்டதாக அமைந்துள்ள இந்த பட்ஜெட்டில், ஆட்சியை காப்பாற்றுவதற்காக பீகாருக்கும் ஆந்திராவுக்கும் நிதி வாரி இறைக்கப்பட்டுள்ளது.

பேரரசர் தனக்கு விருப்பப்பட்டவர்களுக்கு பிச்சை போடுவார் என்பது போல, பாசிச மோடி அரசு தனக்கு யார் தேவையோ அவர்களுக்கு மட்டும் நிதியை வாரி இறைத்திருக்கிறது. இந்த நாட்டில் அதிகப்படியாக வரியை ஒன்றிய அரசுக்கு வாரி கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. அந்த தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி எதுவும் கிடையாது என்றால், தமிழ்நாட்டின் பெயரே பட்ஜெட்டில் இருக்காது என்றால் இதற்குப் பெயர்தான் இந்து ராஷ்டிரத்தின் முதல் பட்ஜெட். இனி இந்த நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை யாரும் பேச முடியாது என்பதை விளக்கும் ஒற்றை ஆட்சி முறையின் முதல் பட்ஜெட்.

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் வேளாண்மை கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று வேளை உணவை சாப்பிடுகின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இந்த நிலையில் தங்கத்தின் விலையை குறைத்து விட்டோம், விண்வெளி சாதனங்களுக்கான பொருட்களின் விலையை குறைத்து விட்டோம் என்கிறது மோடி அரசு.

பீகாரும் ஆந்திராவும் முறையாக கேட்பது போல கேட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கும் நிதி கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்கள் பாசிச பிஜேபியினர். தமிழ்நாடு வாரிக் கொடுத்த நிதியில் எங்களது பங்கு எங்கே என்று கேள்விக்கு பதில் கூற வக்கில்லாதவர்கள் ஒன்றிய அரசின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்கிறார்களோ?


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மகாராட்டிரம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிதியை மறுத்திருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயிலுக்கான சிறப்பு நிதி, பேரிடர் சிறப்பு நிதி போன்ற பல வகைகளில் நிதியின் தேவையை பக்கம் பக்கமாக அறிக்கையாக கொடுத்து பல மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் பாசிச மோடி அரசு ஒருபோதும் பதில் அளிக்கவில்லை.

இந்த நாட்டில் செல்வ வளங்கள் ஒரு சதவீதத்துக்கு குறைவானவர்களிடம் குவிந்து கிடைக்கிறது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மூன்று வேளை உணவு அருந்துவதே கேள்விக்குறியாகிவிட்டது. அதற்கெல்லாம் எந்த விடையும் சொல்லாத பட்ஜெட் இது. இருக்கின்ற அரசுத்துறைகளை எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கான பட்ஜெட் இது.

ஆந்திராவுக்கும் பீகாருக்கும் வாரிக்கொடுத்ததன் மூலம் அந்த மாநில மக்களுக்கு ஒரு போதும் பயன் இல்லை. கட்டுமானங்களை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் அங்கு இருக்கிற கார்ப்பரேட்டுகளின் வயிற்றை நிரப்புவதுதான் இந்த பட்ஜெட்டின் வேலை.

ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துவிட்டதை போலவும் மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதைப் போலவும் இதோ இப்போது வேலையில்லாதவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என்று மோடி வித்தை காட்டத் தொடங்கி இருக்கிறது பாசிச மோடி அரசு.


படிக்க: மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!


“வேலையில் சேரும் தொழிலாளி ரூ 5000 மூன்று மாத தவணைகளில் பெறுவார். ஆனால் அவரை பணியமர்த்தும் முதலாளி ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ரூ 72000 பெறுவாராம். இது அரசு நிதியை கார்ப்பரேட்டுகளுக்கு மடை மாற்றம் செய்யும் ஏற்பாடே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இந்தியா உச்ச அளவிலான ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இது கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிற அரசின் கொள்கைகளின் தொடர்ச்சியே ஆகும்” என்று பாசிச மோடி அரசின் இந்த பட்ஜெட் திட்டத்தை அம்பலப்படுத்துகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுக்க இனியும் ஒன்றிய அரசு மறுத்தால், தமிழ்நாட்டில் இருந்து எந்த நிதியும், எந்த வரியும் ஒன்றிய அரசுக்கு செல்ல முடியாது என்ற நிலையை நாம் உருவாக்காத வரை இப்படிப்பட்ட அநீதிகள் தொடர்ந்து நடக்கும் என்பதே உண்மை.

அந்த வகையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பட்ஜெட்டை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் பாசிச மோடி அரசை தூக்கி எறிவதற்கான போராட்டங்களை மேற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் மீதான அடக்குமுறையை தவிர்க்க முடியாது என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஐரோப்பாவை அச்சுறுத்தும் பாசிச அபாயம்

டந்துமுடிந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில், தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுக்க ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தலில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் வெற்றி் பெறுவதற்கான அபாயம் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் எச்சரித்து வந்த நிலையில், பாசிசக் கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் முடிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில், இறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் கடந்தமுறை வெற்றிபெற்ற “ஐரோப்பிய மக்கள் கட்சி” (European Peaople’s Party) என்ற மைய-வலதுசாரி (Right-Centrist) கட்சி 188 இடங்களை பெற்று மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும், இத்தேர்தலில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தனி முகாமாக உருவாகியிருப்பது உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

தேர்தலில் பாசிச சக்திகளின் ஆதிக்கம்

ஐரோப்பிய ஒன்றியம்  (EU-European Union) என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாகும். இதில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளுக்கும் தனித்தனி நாடாளுமன்றம் இருப்பது போல, மொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனி நாடாளுமன்றம் (EP- European Parliament) உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் இந்நாடாளுமன்றத்திற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டு மக்கள்தொகைக்கேற்ப ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுத்து அனுப்புவர். மொத்தமாக, 720 பிரதிநிதிகளை கொண்ட இந்நாடாளுமன்றத்திற்கு, சட்டங்களை நிறைவேற்றுவது; ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பட்ஜெட்டை வகுப்பது; அவற்றை கண்காணிப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தும் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றில் பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருப்பது பெரும் அபாயமாகும்.


படிக்க: பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!


பிரான்ஸ் நாட்டில் “தேசிய பேரணி” (National Rally) என்ற பாசிசக் கட்சி மொத்தமுள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியை (Renaissance Party) தோற்கடித்துள்ளது. மேலும், மறுமலர்ச்சி கட்சியை காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிக வாக்குகளைப் (31 சதவிகிதம்) பெற்றுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், கருத்துக்கணிப்புகளோ நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச கட்சியான தேசிய பேரணிதான் வெற்றிபெறும் என்று கூறிவருவதால் பாசிச சக்திகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பிரம்மாண்டமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவையெல்லாம், பிரான்ஸ் நாட்டில் குழப்பமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.

இதேபோல், ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை பொறுத்தவரை, நவ-நாஜி கொள்கைகளையும் சீன-ரஷ்ய ஆதரவு போக்கையும் கொண்ட “ஜெர்மனிக்கான மாற்று” (AfD – Alternative for Germany) என்ற பாசிசக் கட்சி இத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் ஆட்சித்துறைத் தலைவர் (Chancellor) ஓலாஃப் ஷோல்ட்ஸ்-இன் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (SPD-Social Democratic Party of Germany) எனும் போலி இடது  கட்சி வெறும் 13.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், “ஜெர்மனிக்கான மாற்று” கட்சி 16 சதவிகித வாக்குகளை பெற்று 15 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான கருத்துகணிப்பு ஒன்று, இந்த பாசிச கட்சிக்கு 20 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்ததையடுத்து இரண்டு இலட்சம் ஜெர்மானிய மக்கள் ஒன்றுதிரண்டு பாசிச கட்சியான “ஜெர்மனிக்கான மாற்று” கட்சிக்கு எதிராக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினர். மேலும், இக்கட்சி உளவு பார்த்தல், லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளது. அதனையெல்லாம் மீறி “ஜெர்மனிக்கான மாற்று” கட்சி ஜெர்மனியில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் “ஜெர்மனிக்கான மாற்று” என்ற பாசிச கட்சிக்கு எதிராக ஜெர்மனியில் நடந்த போராட்டத்தில் 2 லட்சம் மக்கள் குவிந்தனர்.

இத்தாலியில் ஏற்கெனவே “இத்தாலியின் சகோதரர்கள்” (Brothers of Italy) என்ற பாசிசக் கட்சி ஆட்சி செய்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலிலும் நான்கில் ஒரு பங்கு வாக்குகளுடன் வென்று  இத்தாலியின் சகோதரர்கள் கட்சி அதன் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இத்தாலியின் சகோதரர்கள் கட்சியின் தலைவரும் பாசிஸ்டுமான பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, “ஐரோப்பாவின் முகத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று வெளிப்படையாக பேசியிருப்பது பாசிஸ்டுகளின் நோக்கத்தை பறைசாற்றுகிறது.

இவையன்றி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளன.

இத்தகைய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய “ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள்” குழு (ECR – European Conservatives and Reformists) மற்றும் “அடையாளம் மற்றும் ஜனநாயகக்” குழு (ID – Identity and Democracy) ஆகிய தீவிர வலதுசாரி கூட்டணிகள் மொத்தமாக 141 இடங்களை கைப்பற்றி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய குழுக்களாக வளர்ந்துள்ளன. இதன்மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பகுதி இடங்களை பாசிச சக்திகள் கைப்பற்றியுள்ளன.

ஐரோப்பா மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்

பாசிசக் குழுக்கள் இத்தேர்தலில் வெற்றிபெறவில்லை எனினும் அவை அதிக இடங்களை கைப்பற்றியிருப்பது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பாசிச சக்திகளின் கைகளை ஓங்கச் செய்துள்ளது.

குறிப்பாக, தற்போது வெற்றிபெற்றுள்ள ஐரோப்பிய மக்கள் கட்சி குழுவுடன் கூட்டணியில் உள்ள “பசுமை” குழுவும் (Greens) “புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பா” குழுவும் (RE-Renew Europe) இத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதேசமயத்தில், தீவிர வலதுசாரி குழுக்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக, சில சட்டங்களை இயற்றுவதற்கு தீவிர வலதுசாரி குழுக்களின் ஆதரவை நாட வேண்டிய சூழல் ஐரோப்பிய மக்கள் கட்சி கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், குடியேற்றச் சட்டம், காலநிலைக் கொள்கை, பாதுகாப்பு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களையொட்டி கொண்டுவரப்படும் சட்டங்கள், தீவிர வலதுசாரி-பாசிச கட்சிகளின் பாசிச நோக்கத்திற்கேற்ப நிறைவேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் மக்களுக்கு எதிரான “குடியேற்ற எதிர்ப்பு சட்டம்” கொண்டுவரப்படுவதற்கான அபாயம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளதோடு, ஐரோப்பாவில் சிறுபான்மை மக்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரமடையும்.


படிக்க: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!


ஏற்கெனவே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் “இடம்பெயர்வு மற்றும் புகலிடக் கொள்கை”யை (Migration and Asylum Rules) மறுவடிவமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தஞ்சம் கோருவோரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்க விரும்பவில்லையெனில் அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட ‘மாற்று உதவிகளை’ வழங்கலாம்; ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அதிகளவிலான புகலிட விண்ணப்பங்களை பெற்றால், விண்ணப்பத்தாரர்களை மற்ற உறுப்பு நாடுகளுக்கு ‘விநியோகிக்க’ அழைப்பு விடுக்கலாம்; ‘தகுதியற்றவர்கள்’ என கண்டறிப்படும் விண்ணப்பதாரர்களை விரைவாக திருப்பி அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லை வசதிகளை நிறுவ வேண்டும் உள்ளிட்டு மனித உரிமைகளுக்கு எதிரான பல அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.

இது ஐரோப்பாவிற்குள் தஞ்சம்புகுந்துள்ள மக்களை நாடுகடத்துவது; புகலிடம் கோரும் மக்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பேராபத்துக்கு வழிவகுத்தது. ஆனால், இது புலம்பெயரும் மக்களை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என தீவிர வலதுசாரி-பாசிசக் கட்சிகள் அப்போதே குற்றஞ்சாட்டின. தற்போது இதுபோன்ற புலம்பெயரும் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தும் சட்டங்களின் தன்மை தீவிரமடையும்.

மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ள ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த வான் டெர் லெயன் ஏற்கெனவே பாசிஸ்ட் ஜியார்ஜியா மெலோனியுடன் நெருக்கமான உறவில் உள்ளார். இவர் மெலோனியுடன் சேர்ந்து, துனிசியாவின் எல்லைகளில் புகலிடம் கோருவோரை ஐரோப்பாவிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக நிதி திரட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மெலோனியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் வான் டெர் லெயன் அறிவித்துள்ளார்.

ஆக, இத்தேர்தலில் பாசிசக் கட்சிகள் வெற்றிபெறவில்லை என்று நிம்மதியடையவோ, வெற்றிபெற்றுள்ள கட்சிகள் பாசிச சக்திகள் வளர்வதற்கு ‘அரணாக’ இருக்கும் என கருதுவதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. சொல்லபோனால், இந்த மைய-வலது, போலி இடதுசாரி கட்சிகள்தான் தாங்கள் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டத்திட்டங்கள் மூலமாகவும் பிழைப்புவாத அரசியல் மூலமாகவும் பாசிஸ்டுகள் வளர்வதற்கான பாதையை செப்பனிட்டன. இந்தியாவில் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கு பலியாகி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிதவாத இந்துத்துவத்தைக் கையில் எடுப்பதைப்போல, இக்கட்சிகள் தீவிர வலதுசாரிகளின் இனவெறி அரசியலுக்கு பலியாகி, தீவிர வலதுசாரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து அப்பாதையை மேலும் விரிவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே, அடுத்த ஐந்தாண்டு என்பது ஐரோப்பாவில் பாசிச சக்திகள் பகாசுரமாக வளர்வதற்கான பேரபாயம் உள்ளது.

நெருக்கடிகளை அறுவடைச் செய்யும் பாசிஸ்டுகள்

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நெருக்கடி தலைவிரித்தாடுவதை போலவே ஐரோப்பாவிலும்  நெருக்கடி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் உள்ளிட்டவை இந்நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, உக்ரைன்-ரஷ்யா போரால் ஐரோப்பாவின் எரிசக்தி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது; ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் கடுமையான ராணுவச் செலவுகள்; போர் மற்றும் நெருக்கடி ஆகியவை அடிப்படை வாழ்க்கை தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு ஐரோப்பிய மக்களை தள்ளியுள்ளது.

அதேபோல், உலக வர்த்தக கழகத்தின் (World Trade Organization) தலைமையில் அமல்படுத்தப்படும் புதிய தாராளவாத கொள்கைகளால் ஐரோப்பா விவசாயத்துறை தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் ஐரோப்பா முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக போடப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர்.

இத்தகைய புதிய தாராளவாத கொள்கைகளின் தோல்வியை சமாளிக்கும் முயற்சியாக ஆளும் வர்க்கங்கள், பாசிச சக்திகளை மாற்றாக முன்தள்ளுகின்றன. பாசிச சக்திகளும் இந்நெருக்கடிகளை அறுவடை செய்துகொண்டு பகாசுரமாக வளர்கின்றன.

குறிப்பாக, ஐரோப்பா மக்கள் மத்தியில் உருவாகியுள்ள கோவத்தையும் அதிருப்தியையும் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக திருப்பி பாசிசக் கட்சிகள் இனவெறி, மதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க போட்டாப்போட்டியால் உருவாகியிருக்கும் போர்களாலும், மறுகாலனியாக்க கொள்கைகளை மூர்க்கமாக அமல்படுத்துவதனாலும் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வறுமை, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்கு தஞ்சம் புகுகின்றனர். ஆனால், அவற்றை மூடிமறைத்துவிட்டு அகதிகளாக்கப்பட்ட மக்களை தடுக்கும், நாடுகடத்தும் “குடியேற்ற எதிர்ப்புச் சட்டம்” போன்ற மனிதவிரோத சட்டங்களை இந்நெருக்கடிகளுக்கான தீர்வாக பாசிச சக்திகள் முன்னிறுத்துகின்றன. அதேபோல், ஐரோப்பா முழுவதும் நடந்த விவசாயிகளின் போராட்டங்களையும் பாசிச சக்திகள் ஆதரித்துக் குரல் கொடுத்து அவர்களை தங்களுக்கான அடித்தளமாக மாற்றிக்கொள்ள முயற்சித்தன.

ஐரோப்பிய மக்கள் மத்தியில் பாசிசக் கட்சிகளுக்கான எதிர்ப்பு இருந்தாலும், அவ்வபோது தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தாலும், ஐரோப்பாவிலுள்ள போலி இடது கட்சிகள் மைய-வலதுசாரி கட்சிகளுடன் கைக்கோர்த்து நிற்பதால் அவை தீவிர வலதுசாரி-பாசிசக் கட்சிகளுக்கு இன்னும் சாதகமாக அமைகிறது.

அதேபோல், ஐரோப்பாவிலுள்ள பல தீவிர வலதுசாரி கட்சிகளும் பாசிச கட்சிகளும் ரஷ்ய-சீன ஆதரவாக உள்ளதும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சில பாசிச சக்திகள் அமெரிக்க மேலாதிக்கத்தையும் எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. எனவே, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்ப்பதாக நாடகமாடும் ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களும் இத்தகைய பாசிசக் கும்பல் வளருவதை ஆதரிக்கின்றன.

ஆனால், இருளை கிழித்துக்கொண்டு ஒளிக்கீற்று கிளம்புவது போல பிரான்ஸ் நாட்டு மக்கள் பாசிச சக்திகளுக்கு எதிராக வீதிக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் பிரான்சில் பாசிச கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றதையடுத்து “பாசிச சக்திகள் நாட்டை ஆள அனுமதியோம்” என இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். அதே சமயத்தில் அதிபர் மேக்ரோனின் மக்கள் விரோத தன்மையையும் அம்பலப்படுத்துகின்றனர். இத்தகைய பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டங்களை ஐரோப்பா முழுவதும் வளர்த்தெடுப்பதே பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளத்தை தகர்ப்பதற்கும் பாசிச சக்திகளை ஐரோப்பாவிலிருந்து பிடிங்கி எறிவதற்குமான தீர்வு.


பானு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திடு! | ஆர்ப்பாட்டம் | நெல்லை

மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திடு!
ஆர்ப்பாட்டம் | நெல்லை

வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!

 

காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை | படக்கட்டுரை

கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன குழந்தைகளை மக்கள் சுமந்து செல்கிறார்கள். இஸ்ரேலால் கொல்லப்பட்ட 39,000 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (ஜூலை 22) காசாவில் கான் யூனிஸ்-இன் கிழக்கு பகுதியில் இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 39 கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியிலிருந்த மக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியது இஸ்‌ரேல் இராணுவம். ஆனால், மக்கள் வெளியேறுவதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தாக்குதலைத் தொடுத்து காசா மக்களைப் படுகொலை செய்துள்ளது.

காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறிவருகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் தொடர்ந்து நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது.

கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டளையிட்டதைத் தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக வெளியேறிய சிறுவன்

 

அக்டோபர் மாதம் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியதில் இருந்து காஸாவில் உள்ள மக்கள் பலமுறை பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

 

கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் இஸ்‌ரேலிய தாக்குதலால் ஏற்பட்ட புகை மூட்டம்.
கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்.
கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன குழந்தைகளை மக்கள் சுமந்து செல்கிறார்கள். இஸ்ரேலால் கொல்லப்பட்ட 39,000 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
டெய்ர் எல்-பலாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு காயமடைந்த பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மருத்துவ வசதிகள் இஸ்ரேலிய தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளன.
டெய்ர் எல்-பலாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கி அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் போதிய இடமில்லாததால் தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!

டந்த ஆண்டு ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பலாசூரில் சரக்கு ரயில்-கோரமண்டல் விரைவு ரயில்-ஹவுரா விரைவு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி தடம்புரண்டதால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர ரயில் விபத்து நடந்து சரியாக ஒராண்டு நிறைவடைந்த நிலையில், மற்றொரு கோர ரயில்விபத்து மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியில் நடந்திருக்கிறது.

கடந்த ஜூன் 17 அன்று நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்காபானி ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கஞ்சன் ஜங்கா பயணிகள் ரயில் மீது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சரக்கு ரயில் ஓட்டுநரும், பயணிகள் ரயில் பாதுகாவலரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டவுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹா, இவ்விபத்திற்கு சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக ரயிலை ஓட்டிச் சென்றதுதான் காரணமென்று கூறினார். ஆனால், அந்தப் பகுதியின் ரயில்வேதுறை அதிகாரிகள் சிலர், அன்று காலை 5:50 மணியிலிருந்தே ஆட்டோமேட்டிக் சிக்னல்கள் வேலை செய்யவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் மட்டுமல்ல, ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தபோதும், மனிதத் தவறுகள்தான் காரணமென்று உண்மையை மூடிமறைக்க முயற்சித்தது ரயில்வே அமைச்சகம். ஆனால், ஒடிசா ரயில் விபத்திற்கு மனிதத் தவறுகள் மட்டுமே காரணமல்ல, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்ற ரயில்வேதுறையை சீரழிக்கும் பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மயமாக்க நடவடிக்கைகளே முதன்மை காரணம் என்று பலரும் அம்பலப்படுத்தினர்; படுகொலைகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டது.


படிக்க: மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்


ஆனால், அவற்றையெல்லாம் துளியும் மதிக்காத மோடி அரசு, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ரயில்வே துறைக்கு மீண்டும் அஸ்வினி வைஷ்ணவையே அமைச்சராக நியமித்துள்ளது. இதன்மூலம் ரயில்வேதுறையை கார்ப்பரேட்மயப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை பாசிசக் கும்பல் அறிவிக்கிறது.

தீவிரப்படுத்தப்படும் கார்ப்பரேட்மயமாக்கம் தொடரும் படுகொலைகள்

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2023 வரை சுமார் 638 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.  2014-ஆம் ஆண்டிலிருந்து, சராசரியாக வருடத்திற்கு 71 ரயில்கள் தடம்புரள்வதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

சிக்னல்கள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பதே ரயில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், 2021-22 ரயில்வே வாரிய புள்ளிவிவரத்தின்படி, மொத்தமுள்ள 8,747 சிக்னல் கருவிகளில் 2,592 கருவிகள் பழுதடைந்துள்ளன. இதற்கு, சிக்னல் சம்பந்தப்பட்ட 14,850 பணியிடங்கள் காலியாக இருப்பதே முக்கியக் காரணமாகும். அதேபோல், ரயில் ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான 20,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சரே, ரயில்வேயில் மட்டும் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!


அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் 28, 2023 அன்று, அகில இந்திய ரயில்வே பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 60,000 பொறியாளர்கள், “தண்டவாளங்கள், சிக்னல் கருவிகளைப் பராமரிப்பது மற்றும் பழுதுபார்ப்பது போன்ற பணிகளுக்குரிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், அப்பணிகளை தனியார் நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பாதுகாப்புப் பணிகளுக்காக செலவு செய்யாமல், வேறு காரணங்களுக்காக செலவிட்டதால்தான் ரயில் விபத்துகள் ஏற்படுவதாக 2021-22-ஆம் ஆண்டு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்துகிறது. கடந்த 2017-18 முதல் 2021-22 வரையில், ரயில்வே பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் வழித்தடங்களிலும், ரயில் பாதுகாப்பு சாதனமான கவாச் இயந்திரத்தை ரூ.45,000 கோடி செலவில் பொருத்தியிருக்க முடியும்.

ஆனால், இத்தகைய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளாமல், மேட்டுக்குடிகளுக்கான “வந்தே பாரத்”, “கவுரவ் பாரத்” போன்ற ஆடம்பர ரயில்கள் தொடங்குவது, ரயில் நிலையங்களில் 6.25 லட்சம் செலவில் “மோடியின் தன்பட முனையம்”(Modi selfie booth) அமைப்பது, ஃபூட் மாசாஜர் (Foot Massager), ஆடம்பரப் பொருட்கள் (crockery, furniture), மடிக்கணினிகள் வாங்குவது என ரயில்வே நிதி அயோக்கியத்தனமாக செலவிடப்பட்டிருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கியது. இதிலிருந்தே பாசிச மோடி அரசின் மக்கள் விரோதத் தன்மையை புரிந்துக் கொள்ள முடியும்.

மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட கோரமான கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்திற்குப் பிறகு, ரயில்களில் கவாச் இயந்திரம் பொருத்தப்படாமல் இருப்பது குறித்து பெரும் விவாதம் எழுந்த பிறகே, 2023-க்குள் 6,000 கி.மீ. நீளமுள்ள டெல்லி-குஹாத்தி ரயில் வழித்தடங்களில் (இதில் மேற்கு வங்கமும் உள்ளடங்கும்) ரயில் பாதுகாப்புச் சாதனமான கவாச் இயந்திரம் பொருத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. ஆனால் வெறும் 1,500 கி.மீ. வரையிலான ரயில் வழித்தடங்களில் மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை திட்டமிட்டப்படி கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியும் என்பதே கசப்பான உண்மை.

ஆகவே, கஞ்சன் ஜங்கா, கோரமண்டல், ஹவுரா போன்ற ரயில்கள் தடம்புரண்டதை விபத்துகள் என்று சொல்ல முடியாது, இது கார்ப்பரேட் கொள்ளைக்காக மோடி அரசு நடத்திய படுகொலையாகும்.

சேவைத்துறைகள் லாபத்திற்கானதல்ல!

ரயில்வேதுறையை கார்ப்பரேட்மயப்படுத்த வேண்டுமென்பதற்காகவே திட்டமிட்டே காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, பாதுகாப்புப் பணிகளை புறக்கணிப்பது, ரயில்களில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பது ஆகியவற்றை செய்து வருகிறது மோடி அரசு. மற்றொருபுறம் ரயில்வேதுறை நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி ரயில் கட்டணத்தை ஏற்றுவது, சாதாரண உழைக்கும் மக்கள் பயன்படுத்துகிற பொதுப் பெட்டிகள் மற்றும் உறங்கும் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை அதிக விலைக்கொண்ட குளிர்சாதனப் பெட்டிகளாக மாற்றுவது ஆகியவற்றை செய்து வருகிறது. இதனால், உழைக்கும் மக்கள் ரயில் பெட்டிகளின் மூலைமுடுக்குகளிலும் கழிவறைகளிலும் ஆடுமாடுகளைப் போல் அடைந்துக்கொண்டு பயணிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவையெல்லாம் மக்கள் மனமுவந்து கார்ப்பரேட்மயத்தை ஏற்றுக்கொள்வதற்கு அரசால் செய்யப்படும் சூழ்ச்சிகளாகும்.

மேலும், இவையெல்லாம் மக்களின் வரிப்பணத்தாலும், இரயில்வே தொழிலாளர்களின் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட ரயில்வேதுறையை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி, ரயில் பயணத்தை உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிற நடவடிக்கைகளாகும். ரயில்வேதுறை மட்டுமின்றி, மறுகாலனியாக்கக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவரும் கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளிலும், விவசாயம் மற்றும் தொழிற்துறைகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடித்து லாபத்தில் கொழுக்க வேண்டுமென்பதற்காகவே “சேவை”த்துறைகளின் அடிப்படைகளை ஒழித்துக்கட்டி அவற்றை மக்களை ஒட்டச்சுரண்டுவதற்கான துறைகளாக பாசிசக் கும்பல் மாற்றிவருகிறது. இக்கொடூர சுரண்டலுக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை தங்களது பாசிச சர்வாதிகாரத்தின் மூலம் ஒடுக்கிவிடவும் எத்தணிக்கிறது.

எனவே, பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால், பாசிசத்திற்கு அடிப்படையான மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட, மாற்று அரசியல்-பொருளாதார திட்டங்களை முன்வைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறன்றி, மறுகாலனியாக்கக் கொள்கைகளால் நாட்டில் நடக்கும் ரயில் விபத்துகள், நீட் படுகொலைகள், விவசாயப் படுகொலைகள் என எதையும் தடுக்க முடியாது, தவிர்க்கவும் முடியாது.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube