Monday, July 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 68

காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்

டந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5, காஷ்மீர் முழுவதும் ராணுவத்தை  குவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் துண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் வீட்டு சிறையிலடைத்து  ஒரு ராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கிய சட்டப்பிரிவு 35A  ஆகியவற்றை ஒரு சட்டத்தின் மூலம் தடாலடியாக நீக்கியது பாசிச மோடி அரசு.

இச்சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காஷ்மீரின் உயிராதாரமான தேசிய சுய நிர்ணய உரிமை சம்பந்தமான இவ்வழக்கை நான்கு ஆண்டுகளாக அடைகாத்து வைத்திருந்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில், சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது இறுதித் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11 அன்று அறிவித்தது.

காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வு, காஷ்மீரிகளின் தேசிய இன உரிமை, 1947-க்கு முன்பு வரை காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படாத தனிநாடு என்ற வரலாற்று உண்மை, 1947-இல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தருணம், இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு இழைத்த துரோகம், இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள், காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பிய போதும் சட்டவிரோதமாக ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைத்தது என எதையும் கணக்கில் கொள்ளாமல், பாசிஸ்டுகளின் குரலாக தீர்ப்பை அறிவித்தார், சந்திரசூட்.

காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பானது, இனி காஷ்மீரில் காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் கரத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


ஆனால், இத்தீர்ப்பானது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது பாசிச நடவடிக்கையாக இருக்கட்டும், ஆனால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டதா? என்ற கேள்வியின் அடிப்படையில்தான்  தொடக்கத்திலிருந்தே விசாரணை நடத்தப்பட்டது. அதனால்தான் 370 பிரிவு ரத்து செய்வதற்காக, பிரிவு 367-இல் திருத்தம் மேற்கொண்ட வழிமுறை என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று கண்டித்த அரசியல் சாசன அமர்வு, 370-வது பிரிவை ரத்து செய்தது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது பயன்படுத்திய வழிமுறை தவறாம்; ஆனால், ரத்து செய்தது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செல்லுமாம். என்னெ ஒரு தீர்ப்பு!

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளை ஒடுக்கும் தீர்ப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதோடு, இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கான தனி இறையாண்மை இல்லை என்றும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகமானது போலியானது என்பதை தனது தீர்ப்பின் மூலம் நிரூபித்திருக்கிறது உச்சநீதிமன்றம். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய ஒன்றியத்திலிருந்து எந்த ஒரு தேசிய இனமும் விடுதலைப் பெற முடியாது என்பதிலிருந்து காவி பாசிஸ்டுகளின் அகண்டபாரதக் கனவை சட்டப்பூர்வமாக நனவாக்கியிருக்கிறது.

மேலும், மாநிலங்களின் எல்லை, பகுதி மற்றும் பெயரை மறுவரையறை செய்யவும், மாற்றவும் இந்திய ஒன்றிய அரசிற்கு அதிகாரமளிக்கிறது என்ற இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 3-ஐ எடுத்துக்காட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உடைத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பின் மூலம், பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தங்களுக்கு ஒத்துவராத மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு சட்டப்பூர்வமாக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்காலத்தில், இத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சித்தாந்த ரீதியாக தங்களுக்கு ஒவ்வாத பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டை, தனது பாசிசப் பிடிக்குள் கொண்டுவர பல யூனியன் பிரதேசங்களாக உடைக்க முடியும்.  “தமிழ்நாடு” என்று காவி கும்பலுக்கு உறுத்திக் கொண்டிருக்கின்ற பெயரை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். ஏனெனில் ஏற்கெனவே தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவி பேசியது; தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும், மதுரையை தலைமையாகக் கொண்டு மற்றொரு மாநிலம் தனியாகப் பிரிக்க வேண்டும் என காவி கும்பல் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. சித்தாந்த ரீதியாக மோதி வீழ்த்த முடியாத தமிழ்நாட்டை, புறவழியாக தனது இந்துராஷ்டிரக் கனவிற்குள் அடைக்கவே இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிவகுக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன்லோகூர் கூறுவது போல, இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை என்பதுமட்டுமல்ல, இனி ஜனநாயக மற்றும் தேசிய தன்னுரிமைகளுக்கு உச்சநீதிமன்றத்தில் இடமில்லை என்பதே இத்தீர்ப்பு இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கும் செய்தியாக உள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளும்

இத்தீர்ப்பு வெளியானதும் காவி கும்பல்கள் இத்தீர்ப்பைக் கொண்டாடினர். “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு உறுதியை, நம்பிக்கையை ஏற்படுத்தும் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார், பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம்,  “பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் குறித்த தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்கவில்லை. இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும்வரை பிரிவு 370 மதிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் செயற்குழு தீர்மானத்தை நாங்களும் வலியுறுத்துகிறோம்” என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். காங்கிரஸின் செயற்குழு தீர்மானத்திலிருந்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் உள்விருப்பமாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். காஷ்மீர் குறித்த காங்கிரசின் இக்கருத்துதான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகிற சிவசேனா கட்சியும் இத்தீர்ப்பை வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான மறுநாள் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட காஷ்மீர் தொடர்பான மூன்று மசோதாக்களைத் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சரான அமித்ஷா. அப்பொழுது இம்மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தி.மு.க-வின் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முகமது அப்துல்லா, “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ரத்து என்பது கூட்டாட்சியின் மீதான தாக்குதல் என்றும், ஒவ்வொரு இனத்திற்கும் தங்களது சொந்த விதியைத் தாங்களே நிர்ணயிக்கும் உரிமை உள்ளது, அது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும்” என்ற பெரியாரின் மேற்கோளை எடுத்துக்காட்டி பேசினார்.

மோடியின் காட்டுத்தர்பாரில், பெரியாரின் பெயரையும், காஷ்மீரிகளுக்கும் தேசிய இன சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்ற உண்மையையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் ஆத்திரத்தில் கூச்சலிட்டது. அப்துல்லாவின் பேச்சையும், அவர் மேற்கோள் காட்டிய பெரியாரின் கருத்தையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கியது.

மேலும், நிர்மலாவும், அமித்ஷாவும் தி.மு.க. உறுப்பினரின் கருத்துடன் காங்கிரஸ் உடன்படுகிறதா? என்று எழுந்து பதிலளிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை வலியுறுத்தினர். காவிகளுக்கு பதிலளித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார் கூறியதை அப்துல்லா மேற்கோள் காட்டியிருக்கிறார், அதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒருவரை அவையில் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று மழுப்பலாக பதில் கூறினார். ஆனால், கார்கேவிற்கு அடுத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினரான ஜெய்ராம் ரமேஷ் அப்துல்லாவின் பேச்சில் காங்கிரஸ் உடன்படவில்லை என்று உறுதியாக காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். வழிமுறைகளில் உள்ள வேறுபாட்டைத் தவிர தானும் மென்மையான பா.ஜ.க.தான் என நிரூபித்திருக்கிறது காங்கிரஸ்.


படிக்க: உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!


ஒருவேளை, மோடி அரசின் மீதான விரக்தியால், காங்கிரஸை 2024 தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகூட மீட்கப்படாது என்பது தெளிவாகிறது. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பாசிசத்தை எதிர்ப்பதற்கான மாற்றுத் திட்டம் இல்லாத இந்தியா கூட்டணியை ஆதரிப்பதும் மக்களை ஆதரிக்கச் சொல்வதும் பாசிஸ்டுகளிடம் மக்களை அடகுவைப்பதாகும்.

அம்பானி-அதானிகளின் வேட்டைக்குக் காஷ்மீரைத் திறந்துவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு

பாசிச மோடி அரசின் இந்துராஷ்டிரம் என்பது, அம்பானி-அதானிகளின் கார்ப்பரேட் மேலாதிக்கமாகும். உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு காஷ்மீரை அம்பானி -அதானி கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கே வழிவகுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாள், காஷ்மீர் குறித்து முக்கிய மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி-ஷா கும்பல். ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு-காஷ்மீர் பட்டியலின பழங்குடி சட்டத் திருத்த மசோதா 2023  ஆகியவற்றை தாக்கல் செய்தது.

பட்டியலின பழங்குடி சட்டத் திருத்த மசோதாவில், பகாரி, கட்டா பிராமணர்கள், கோலி மற்றும் பட்டாரி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  “ஜம்மு-காஷ்மீரின் பிர்பஞ்சால் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் பகாரி இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் சமூக ரீதியாக முன்னேறியவர்கள்; ஏற்கெனவே அரசுத்துறை வேலைவாய்ப்பில் செல்வாக்கு செலுத்துகிற பகாரிகளுக்கு எஸ்.டி அந்தஸ்து அளிப்பதன் மூலம் தங்களின் இடஒதுக்கீடு பறிபோகும் என்கின்றனர்”, குஜ்ஜார்-பகர்வால் பழங்குடியினர்கள். கடந்த ஜூலையில் நடைபெற்ற மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பழங்குடியின சட்ட மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்ததும், இதை எதிர்த்து குஜ்ஜார்-பகர்வால்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023-இன் மூலம், அந்த யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை இடங்களை 83 -லிருந்து 90 ஆக அதிகரித்திருக்கிறது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 24 இடங்களையும் சேர்த்து மொத்தம்114 இடங்களாக அதிகரிக்கப்பட்டியிருக்கிறது. இடஒதுக்கீட்டு மசோதாவின் மூலம், 3 இல் 1 பங்கு இடங்கள் பெண்களுக்காகவும், 9 இடங்கள் பட்டியலின பழங்குடிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களின் மூலம் காஷ்மீரை முழுமையாக தனது இந்துராஷ்டிரத்திற்குள் கொண்டுவர எத்தனிக்கிறது மோடி-ஷா கும்பல்.

குறிப்பாக, பகாரிகள், பட்டாரி, கோலி, கட்டா பிராமணர்கள் ஆகியவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவதன் மூலம் மணிப்பூரைப்போல் காஷ்மீர் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி, காஷ்மீரின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மணிப்பூரின் உத்தியையே காஷ்மீரிலும் நடைமுறைப்படுத்துகிறது காவி கும்பல்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், ரூ.81,122 கோடி முதலீடுகளுக்கு அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், ரூ.24,729 கோடி மதிப்பீலான முதலீடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜம்மு-காஷ்மீரில், 19 தொழிற்துறை பூங்காக்கள் அமைக்கவும், இரண்டு மருத்துவ நகரங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. துபாயைச் சேர்ந்த எமார் குழுமம் (EMAAR Group), ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நூன் (Noon.com), அல் மாயா குழுமம் (AI Maya Group), ஜி.எல். எம்பிளாய்மெண்ட் (GL Employment), மட்டு இன்வெஸ்ட்மெண்ட் (MATU Investments) போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் ரூ.500 கோடி முதலீட்டில் மால் கட்டத்திட்டமிட்டுள்ளது, எமார் குழுமம்.

இதுவரை இந்தியாவை அம்பானி-அதானி கும்பலுக்கு படையல் வைத்த மோடி அரசு, 370 ஐ நீக்கி காஷ்மீரையும் படையல் வைத்திருக்கிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் பக்கபலமாக அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு சட்ட அங்கீகாரம் கொடுத்திருக்கிறது.

ஜனநாயகத் தூண்களான நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் கூடாரமாகவும், ஊடகங்கள் பாசிச ஊதுகுழல்களாகவும் மாறிவிட்டச் சூழலில், உச்சநீதிமன்றமும் பாசிஸ்டுகளுக்கானதுதான் என்று இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

எனவே, உழைக்கும் மக்களும், தேசிய இனங்களும், ஜனநாயகச் சக்திகளும் தங்களுக்கான நீதியையும், ஜனநாயக உரிமைகளையும் இந்த அரசமைப்புச் சட்டகத்துக்கு வெளியிலான மக்கள் போராட்டத்தின் மூலமே பெறமுடியும். இனியும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களைத் துல்லியமாக கணிப்பது எப்படி?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனக் கட்டமைப்பைவிட வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிக்கிறார்களே, இதை எப்படிப் பார்ப்பது?

வெதர்மேன் ஜானுடன் ஒப்பிட்டுக் கேட்டது சரியான விசயம். வெதர்மேன் ஒரு அரசு அதிகாரி கிடையாது. அப்படி இல்லாதபோதும் இயல்பாக அவர் மக்கள் சார்புடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்கிறார். மக்களின் வாழ்நிலை என்ன, பொருளாதாரம் என்ன என்பதையெல்லாம் இணைத்துப்பார்த்து பேசுகிறார். ஆனால் அதிகார வர்க்கத்திற்கு (Bureaucratic) அதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது. இங்குதான் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் சமூகத் தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும் வேறுபாடு வருகிறது. இதிலிருந்துதான் மக்களுக்கான உண்மையான மாற்றைப் பற்றிக் கூற வேண்டியுள்ளது. மக்கள் தொண்டு, மக்கள் சேவை கண்ணோட்டம் கொண்ட கட்டமைப்பை உருவாக்குவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வே ஒழிய, இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்

எண்ணெய் கழிவு:
நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
மீளாத் துயரத்தில் வடசென்னை

சென்னை மிக்ஜாம் புயலில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகள் முக்கியமானவை. குறிப்பாக, சென்னையின் பூர்வகுடி மக்கள் வாழும் எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டதாலும் அவை வெள்ளநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததாலும் எண்ணூர் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்; குழந்தைகள் உட்பட பலரும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். லாபவெறிப்பிடித்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) உள்ளிட்ட பெருநிறுவனங்களின் இக்கொடூர செயலினால் வடசென்னையின் பெரும்பான்மை பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

டிசம்பர் நான்காம் தேதி மிக்ஜாம் புயலின்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்., தன்னுடைய நிறுவனத்தில் தேக்கி வைத்திருந்த டன் கணக்கான எண்ணெய் கழிவுகளை பக்கிங்காம் கால்வாயில் திருட்டுத்தனமாக வெளியேற்றியது. இதனை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உறுதி செய்துள்ளது.

எண்ணூர் கழிமுகத்தில் உள்ள நீரை ஆய்வுசெய்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், நீரில் பென்சீன் (benzene),டொலுயீன் (toluene) போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட 40 மடங்கு அதிகமாக இருக்கிறது எனவும் அத்தகைய ஆபத்தான எண்ணெய் கலந்த நீரில் 40 கிராம மக்கள் ஐந்து நாட்கள் வாழ்ந்திருப்பதாகவும், இதன் விளைவாக அம்மக்களுக்கு பல உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறுகிறார்.

“வழக்கமா சென்னைல மழை பேஞ்சா ஆத்துல தண்ணி அதிகமாகும். பளபளன்னு கண்ணாடி மாதிரி வரும். ஆனா 5-ஆம் தேதி வந்த தண்ணி கறுப்பு நிறத்துல சாக்கடை மாதிரி இருந்துச்சு. ஊரெல்லாம் ஒரே ஆயில் நாத்தம். கண்ணெல்லாம் எரியத் தொடங்கிடுச்சு. நிறைய பேருக்கு வீசிங் வந்துடுச்சு. அப்பப்போ தண்ணியில ஆயில் மிதக்கும். ஆனா இது விபரீதமா இருந்துச்சு. அஞ்சு நாளு இந்த கருமத்துக்குள்ளேயே கெடந்தோம்” என்று தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிக்கிறார், நெட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்.


படிக்க: அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது


இத்தகைய அபாயகரமான எண்ணெய் கழிவுகளை புயலின்போது பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றினால், கழிவுகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகும்; மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும்; வாழ்வாதாரம் அழிக்கப்படும் என்பதெல்லாம் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றி இருக்கிறது. சி.பி.சி.எல். நிறுவனத்தின் இந்நடவடிக்கை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகும்.

ஆம், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் கனிம வளங்களை சூறையாட காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்படுவதைப் போல, இதுவும் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மீனவ மக்கள் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகும்.

வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான மீனவ மக்கள்

கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் எண்ணூர் கழிமுகத்தைச் சுற்றி தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள சுமார் 30,000 மீனவ மக்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல், கட்டுமரத்தை ஒத்த சிறிய அளவிலான படகுகளை கொண்டு கழிமுகத்தில் குறைந்த அளவிலான மீன்களை பிடிப்பதையே தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் எட்டு கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள், என்ஜீன்கள் மீது எண்ணெய் கழிவுகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நாசமாகி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.வெளியேற்றப்பட்ட எண்ணெய் கழிவு பழவேற்காடு ஏரிவரை பரவியுள்ளதால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டுக்குப்பம் கிராம மீனவர்கள் வினவு களச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சாவுற நிலமையில இருக்கிறோம். கிராமத்துல அரிசி கொடுத்தாங்க. அதை வைத்துதான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கிறோம். போர் பம்பில் தண்ணீர் அடித்தால் ஆயில் கலந்த தண்ணீர் வருகிறது. அதை எப்படி குடிக்க முடியும். ஒரு கேன் வாங்குனா 20 ரூபாய். அதை வாங்ககூட வழியில்ல” என்று தங்களின் அவலநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், எண்ணூர் கழிமுகம் மீன், இறால் போன்ற பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கான இடமாக உள்ளது. வஞ்சிரம் போன்ற பல மீன்கள் இங்கு உற்பத்தியாகித்தான் கடலுக்குள் செல்கின்றன. இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை எண்ணெய் கழிவுகள் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கின்றன. மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

“இனிமே இந்த ஆத்த நம்பி ஒன்னுமே செய்ய முடியாது சார். மேலே மிதக்குற ஆயில் அப்படியே பூமியில படிஞ்சுடும். மீன் இனப் பெருக்கத்துக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்” என குமுறுகின்றனர் பாதிக்கபட்ட மீனவர்கள்.

ஏற்கனவே, எண்ணூர் மீன் என்றாலே எண்ணெய் நாற்றம் அடிக்கும் என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதனால் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தாலும் மக்கள் வாங்க மறுக்கின்றனர் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால் மீனவர்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது.

இவையன்றி, பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் தோல்நோய், கண்ணெரிச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர். பகுதி முழுக்க எண்ணெய் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் மக்கள் சமைப்பதற்கு அடுப்பு பற்றவைக்க கூட அஞ்சுகின்றனர். மண்ணை தோண்டினால் நீருக்கு பதில் எண்ணெய் கழிவுகள் சுரக்கும் அளவிற்கு அப்பகுதி நாசமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ள நீர் வடிந்த பிறகும் எண்ணெய் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அக்கழிவுகள் மீது சூரிய வெளிச்சம் பட்டால் துர்நாற்றம் வீசுவதாகவும் அதை சுவாசிப்பதால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்றுவரை தி.மு.க. அரசு அதை சுத்தம் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பது குறித்தும் தி.மு.க. வாயை திறக்கவில்லை. சொல்லப்போனால், மக்களை மீட்பது குறித்து தி.மு.க-விடம் எந்த திட்டமும் இல்லை. சி.பி.சி.எல். நிறுவனத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பதில் மட்டுமே தி.மு.க. கவனம் செலுத்தி வருகிறது.

மீனவ மக்களை வஞ்சிக்கும் தி.மு.. அரசு

எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்ட இவ்விவகாரத்தில் தி.மு.க. அரசானது, ஆரம்பம் முதலே சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு ஆதரவாகவும் மீனவ மக்களுக்கு விரோதமாகவுமே செயல்பட்டுவந்தது. எண்ணெய் கழிவுகள் ஐந்து நாட்களாக மக்கள் குடியிருப்புகளுக்குள் சூழ்ந்திருந்த போதும், தி.மு.க. அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் அப்பகுதி மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இவ்விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளான பிறகுதான் அப்பகுதிகளை பார்வையிட சென்றனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், “அதிகப்படியான மழையால் சி.பி.சி.எல். தனது ஆலையைக் காப்பாற்ற மழைநீரை வெளியேற்றியது. அந்த நீருடன் எண்ணெய் தடயங்கள் வெளியேறின” என அயோக்கியத்தனமாக கூறியது. நீர்நிலைகளில் 5 கி.மீ. நீளத்துக்கு மேல் தடிமனான எண்ணெய்பொருள் மிதந்தது என்பதனை நீர்வள ஆதாரத்துறையே அம்பலப்படுத்திய பிறகும் சி.பி.சி.எல். நிறுவனமே சொல்லத் துணியாத பொய்யை தமிழ்நாடு அரசு கூறியது.


படிக்க: எண்ணூர் எண்ணெய் கசிவு – பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா


மேலும், சி.பி.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து எண்ணெய் கழிவுகளை அகற்றுமாறு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடும்வரை தி.மு.க. அரசு கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவே இல்லை. பணிகளை தொடங்கியபோதும் சி.பி.சி.எல். நிறுவனத்தை இப்பணியில் ஈடுபடுத்தாமல் அப்பாவி மீனவ மக்களை வைத்து கழிவுகளை அகற்ற வைத்தது. கடலுக்கு அருகே சென்றாலே மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான நீர்நிலைகளை காப்பதற்காக, மீனவர்கள் இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் எண்ணெய் கழிவுகளை அகற்ற சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு உத்தரவிட்டது. ஆனால், எண்ணெய் கழிவுகளை அகற்ற ஒரு டிரமுக்கு ரூ.1000 தருவதாக கூறி மீனவர்களின் கையறு நிலையை நயவஞ்சகமாக பயன்படுத்திக்கொண்டது, சி.பி.சி.எல். நிறுவனம். மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உள்ள சூழலில் அரசின் துணையின்றி அந்நிறுவனத்தால் இத்தகைய செயலை செய்யமுடியாது.

மேலும், கழிவுகளை அகற்றுவதற்கு எண்ணெயை  உறிஞ்சும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசின் அறிக்கைகள் கூறிவந்தது. ஆனால், எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் பேரல், ஜக்கு, புனல், பேப்பர்களைக்கொண்டு கழிவுகளை அகற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி தி.மு.க. அரசை அம்பலப்படுத்தின.

கார்ப்பரேட்டுகளை விரட்டியடிப்போம்

வடசென்னையை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே ‘வளர்ச்சி’ திட்டங்கள் என்ற பெயரில் பாரத்மாலா, சாகர்மாலா போன்ற நாசகர திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில், சி.பி.சி.எல். நிறுவனம் எண்ணெய் கழிவுகளை திறந்துவிடுவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னர் பலமுறை திறந்துவிட்டிருக்கிறது. அப்பகுதியில் அமைந்துள்ள மற்ற தொழிற்சாலைகளும் நீர்நிலைகளில் அபாயகரமான கழிவுகளை பல ஆண்டுகளாக திறந்துவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்பகுதிகளில் மட்டும் அனல்மின் நிலையங்கள், உரத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் என மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 43 சிவப்புநிற வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (Red Category Industries) உள்ளன. இந்த ஆலைகளிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO2), நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) ஆகிய வாயுக்களும் பல நுண் துகள்களும் காற்று மண்டலத்தில் விதிமுறைகளை மீறி வெளியிடப்படுவதால் கடுமையான காற்றுமாசு ஏற்படுகிறது. அனல்மின் நிலையங்கள், திறந்தவெளியில் சாம்பல் கழிவுகளைக் கொட்டி வைத்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இத்தகைய அபாயகரமான கழிவுகள் வெளியேற்றத்தால் எண்ணூர், எர்ணாவூர், மணலி ஆகிய பகுதிகள் வாழத் தகுதியற்றவையாக மாறிவருகின்றன. இங்குள்ள நாசகர தொழிற்சாலைகளால் தங்கள் உயிருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவித அச்ச உணர்விலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மத்தியில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இப்பகுதிகளில் கார்ப்பரேட் சுரண்டல் தீவிரமாக்கப்பட்டு, இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தி.மு.க. அரசும் இவ்விவகாரத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மக்கள் விரோதமாக கார்ப்பரேட் சேவை செய்கிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ-கார்பன் எடுப்பது, அதானி துறைமுக விரிவாக்கம் வரிசையில் சி.பி.சி.எல். எண்ணெய் கழிவு வெளியேற்றத்தில் இது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

அரசு-கார்ப்பரேட் கூட்டின் இந்த அபாயமிக்க நாசகர திட்டங்களை தடுத்து, மக்களையும் இயற்கை வளங்களையும் அழிவிலிருந்து காக்க வேண்டுமெனில், மீனவ மக்களுடன் இணைந்து வடசென்னையில் உள்ள அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் வெளியேற வைக்கும் வகையிலான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். இதனை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைப் போல மாபெரும் மக்கள்திரள் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அண்மையில் வந்த மழைவெள்ளத்தை பொறுத்தவரை காலநிலை மாற்றம் கணிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையை எட்டிவிட்டதா? இல்லை வானிலை ஆய்வு மையங்களின் தொழில்நுட்பத்தில்தான் பிரச்சினையா?

இரண்டுமே உள்ளது. கணிக்க முடியாத அளவிற்கு வேகமாக மாறுகின்ற காலநிலை மாற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் 113 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. தற்போது, வானிலை ஆய்வு மையம் வைத்திருக்கும் விதிப்படி மிக அதிகனமழை என்பதில் 21 செ.மீ. அளவுதான் வருகிறது. அதற்கு மேல் பொழியும் மழையின் அளவை கணிக்க விதிகளே கிடையாது. எனவே காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள புதிய இயல்பு நிலைக்கேற்ப புதிய அளவீடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதேபோல, அரசுகளால் இந்த மாற்றங்களை கட்டுப்படுத்த முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இயல்பிலேயே இங்குள்ள அரசு மக்கள் விரோதத்தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாவது, சுற்றுசூழலை அழிக்கின்ற நடவடிக்கைகள் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. “பாரிஸ் ஒப்பந்தம்” தொடங்கி காலநிலை மாற்றம் குறித்த எல்லா சர்வதேச மாநாடுகளும் ஒரு சதவிகிதம் கூட தாங்கள் ஒப்புக்கொண்ட முடிவுகளை நடைமுறையில் நிறைவேற்றுவதில்லை. காப் 27 (COP 27), காப் 28 என மாநாடுகள் மட்டும் ஆண்டுந்தோறும் நடந்துக்கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதலையும் ஏகாதிபத்தியங்களுடைய சுரண்டலையும் தடுக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்க்கமுடியாது. இந்த பாதிப்புகள் அதிகரிக்கவே செய்யும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜனவரி 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”
  • சென்னை வெள்ளம்: யார் தான் குற்றவாளி?
  • எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
    மீளாத் துயரத்தில் வடசென்னை
  • தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்
  • ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிக்கு பதவி உயர்வு: இந்த அரசு,
    அதிகார வர்க்கத்தை ஒருபோதும் தண்டிக்காது!
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை
  • காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்
  • தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
  • காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்
  • அட்டைப்படக் கட்டுரை பாட்டளி வர்க்க ஆசான் தோழர் லெனின்
    100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பொன்முடியின் கைது விவகாரத்தை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பொன்முடியின் கைது விவகாரத்தை எப்படி பார்ப்பது? இது ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, பா.ஜ.க. இதை வைத்து அரசியல் செய்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது. அதேசமயம் தி.மு.க. அமைச்சர்கள் பலரும் ஊழல்வாதிகளாக உள்ளார்களே, இதுவும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விசயம்தானே?

பாசிச அடக்குமுறை நிலவுகின்ற தருவாயில், அதாவது எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒழித்துக்கட்டுகின்ற நடவடிக்கைகளை பாசிச பா.ஜ.க. மேற்கொண்டுவரும் நேரத்தில், பொன்முடி ஊழல் செய்தாரா? இல்லையா? என்று வாதத்தைக் கொண்டுவந்து நிறுத்துவது பா.ஜ.க-வின் நடவடிக்கைகளுக்கும் பாசிச அடக்குமுறைகளுக்குமே முகாந்திரத்தை உருவாக்கிக் கொடுக்கும். எனவேதான், இதை பேசுவதற்கான தருணம் இதுவல்ல என்கிறோம். ஆனால், அதற்காக பாசிச எதிர்ப்பில் ஊழலின்மை, நேர்மை குறித்தெல்லாம் பேசக்கூடாது என்பது அயோக்கியத்தனமானது. பாசிச எதிர்ப்பில் நிற்பவர்கள் ஊழல்வாதிகளாக இருக்க முடியாது. ஊழல்வாதிகளால், பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியாது. மக்களுக்கு நேர்மையாக, மக்கள் பக்கம் நிற்பவர்களால்தான் பாசிசத்தை வீழ்த்தமுடியும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஊழலை பற்றி பேசுபவர்கள் சொந்தமுறையில் அக்கட்சிகளை அம்பலப்படுத்தட்டும். மாறாக, பாசிச கும்பல் முன்வைக்கின்ற நிகழ்ச்சிநிரலுக்குள் சென்று பேசுவது பாசிச அடக்குமுறைகளுக்கு துணைபோவதன்றி வேறில்லை.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”

டந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி உட்பட எட்டு மாவட்டங்கள் புயல் மற்றும் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்; சற்றும் எதிர்பார்க்காத இப்பேரிடர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை “தேசிய பேரிடராக” அறிவிக்க வேண்டும்; ரூ.21,000 கோடி நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரியிருந்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்ப்பனத் திமிருடன், “இதையெல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை கிடையாது” எனப் பேசினார். மேலும், பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் தூத்துக்குடிக்கு சென்ற நிர்மலா, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் கோவிலுக்கு சென்று “பெருமாளுக்கு ஊர்வலம் செல்ல சாலை வசதி இல்லை, அதற்கு நிதி ஒதுக்குங்கள்” என அதிகாரிகளை மிரட்டி அருவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமாக நடந்துக்கொண்டார். இறுதிவரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது குறித்து வாயே திறக்கவில்லை.

இதேபோன்று, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இமாச்சலப்பிரேதசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதை தேசியப் பேரிடராக அறிவித்து ரூ.10,000 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநிலக் காங்கிரஸ் முதல்வர் மோடி அரசிடம் கோரியிருந்தார். ஆனால், பாசிச மோடி அரசோ தற்போது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதைப் போலவே அற்ப நிதி ஒதுக்கி அம்மாநில மக்களையும் வஞ்சித்தது.

ஜி.எஸ்.டி. போன்ற பயங்கரவாத பொருளாதார கொள்கைகளால் “மோடி ராஜ்ஜியத்தின் காலனிகளாக மாற்றப்பட்ட மாநிலங்களுக்கு, மாநில உரிமை என்று பேச ஒரு வெங்காயமுமில்லை, வாயை மூடிக்கொண்டு கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பதையே பாசிசக் கும்பல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. பரந்துப்பட்ட உழைக்கும் மக்களை தனக்கான அடிமைகளாக-சூத்திரர்களாக பார்க்கும் பார்ப்பனப் பாசிசக் கும்பலிடம் வேறெதை நாம் எதிர்ப்பார்க்க முடியும்.

இவ்வாறே, கொரோனா பெருந்தொற்றையும் மனிதாபிமானமின்றி கொடூரமான முறையில் கையாண்டு பலரை கொன்றொழித்தது பாசிசக் கும்பல். கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் ஏற்பட்ட ஒவ்வொரு பேரிடரையும் பாசிஸ்டுகளுக்கே உரிய அணுகுமுறைகளுடன் கையாண்டு அதனை மக்கள் மீதான பேரழிவாக மாற்றி வருகிறது பாசிச மோடி அரசு.

இன்னொருபுறம், மோடிக் கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாடுமுழுவதும் இயற்கைவளங்கள் கட்டற்றமுறையில் சூறையாடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான வளங்களை சுரண்டுவதற்காக மணிப்பூர் எரிந்துக்கொண்டிருப்பதை போல இந்தியா முழுவதும் காடுகளுக்கு அரணாக உள்ள பழங்குடியின மக்கள் மீது மறைமுகமான போரை தொடுத்து வருகிறது. இந்த சூறையாடல் காரணமாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் மோடியின் பாசிச ஆட்சியில் மேலும் கோரமானதாக உருவெடுக்கின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மோடியின் அரசு மேற்கொண்டுவந்த கார்ப்பரேட் சுரண்டலால் ஒரு பேரழிவாக மாறியதே அதற்கு சான்று.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பள்ளி சிறுவர்கள் சண்டை!

பள்ளி சிறுவர்கள் சண்டை

சாதாரணமானவையாகத் தெரியும்
சம்பவங்களுக்குப் பின் இருக்கும் அரசியல்!

னது மகள் இலக்கியா அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளி அந்த வட்டாரத்தில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பள்ளி. அடித்தட்டு உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மட்டும்மல்ல ஓரளவு நடுத்தர வர்க்கத்தினர் பிள்ளைகளும் அங்கு படிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் எனது மகளின் வகுப்பில் நடந்த சம்பவம் என்னை பல நாட்கள் இரவில் தூக்கம் இழக்கச் செய்தது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கொலை வெறியுடன் மோதிக் கொண்ட நிகழ்வுதான் அது.

ராமுவின் புத்தக பை மீது சோமு படுத்து ‌ உறங்கியிருக்கிறான் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இதனால் ஆத்திரம் அடைந்த ராமு கூரான பென்சிலால் சோமுவின் வலது கண்ணில் தாக்கியிருக்கிறான். நல்வாய்ப்பாக, புருவத்தின் கீழ் பகுதியில் தான் அது பட்டது.

தாக்குதலுக்கு உள்ளானதும், வலியால் ராமு சத்தமிட்டு கத்தினான். அருகில் இருக்கும் மாணவர்கள் தடுப்பதற்குள் ராமு தாக்குதலைத் தொடர்ந்தான். கண்ணைப் பதம் பார்த்தவன் சோமுவின் இடது கையின் முழங்கை மீது தனது கால்களால் அதுவும் இரண்டு கால்களால் தனது முழு பலத்தையும் சேர்த்து மிதி மிதியென மிதித்தான். இதற்குள் அருகில் இருக்கும் மாணவர்கள் கூடி ராமுவின் தாக்குதலை நிறுத்தி சோமுவை மீட்டனர். கையின் எலும்புகள் முறியும் வகையில் தாக்கியிருக்கிறான் ராமு.

”மதிய உணவு இடைவேளை நேரம் ஆசிரியர் வகுப்பில் இல்லை. மாணவர்களும் அங்கும் இங்குமாக சென்றிருந்த நேரம். சண்டை அப்போது நடந்ததால் தடுக்க முடியாமல் போய்விட்டது” என எனது மகள் சொன்னார்.

ஆனால், நேரத்தின் மீது பழி சுமத்திவிட்டு நாம் இதைக் கடந்து சென்றுவிட முடியாது. பிரச்சினையின் வேரை புரிந்து கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நேரத்தின் மீது பழி போட்டுக்கொண்டு இருந்தால் போதாது.


படிக்க: பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?


இங்கு அரசுப் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை அரசியல், சமூக – பொருளாதார நோக்கில் அணுகாமல் தனிப்பட்ட தவறாகக் கருதினால் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது.

அமெரிக்காவில் வெறி தலைக்கேறிய ஒரு மாணவர் சக மாணவர்களை, ஆசிரியரைத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடுவது போன்ற சம்பவங்களை செய்திகளில் பார்க்கிறோம். காரணம், மறுகாலனியாக்கம் தோற்றுவித்துள்ள பொருளாதார நெருக்கடியும் அது நிறுவியுள்ள நுகர்வு கலாச்சாரமும் சமூக வாழ்வில் தீராத மன அழுத்தை ஏற்படுத்தி மக்களை மன நோயாளிகளாக, வெறியர்களாக மாற்றுகிறது.

சினிமா முதல் சமூக வலைத்தளங்கள் வரை நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவையாக உள்ளன. அதில் தோன்றுபவர்கள் நுகர்வதைக் காணும் குழந்தைகள் அவர்களைத் தாமாகப் பாவித்துக் கொள்கின்றனர். திரையில் காணும் பொருட்களை எல்லாம் தானும் நுகர வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதில் சிலர், அவற்றை அடைய தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் செல்கின்றனர். மற்றவர்களை, ஏன் சக நண்பர்களையே போட்டியாகக் கருதுகின்றனர். இங்குதான் வெறித்தனமான நடவடிக்கைக்கான செயல்பாடு ‌ கரு வடிவில் வளரத் துவங்குகிறது.

ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையானது, எப்படி அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் குழந்தைகள் – பெரியவர்கள், இயற்கையின் தாவரங்கள், காற்று உள்ளிட்ட அனைத்தையும் மாசுபடுத்துவதைப் போல், மறுகாலனியாக்கம் உருவாக்கும் பண்பாடானது, பொருட்களை உடைமையாக்கும் கண்ணோட்டத்துடன் மற்ற மனிதர்களின் மீதான வெறுப்பையும் வெறியையும் அனைவரிடமும் ஊட்டுகிறது. கலை மற்றும் கருத்து வடிவிலான சாதனங்கள் வழியே மேற்கண்ட கருத்துகள் ஓயாத அலையைப் போல சமூகத்தை திணறடிக்கும் வகையில் மனிதர்களின் சிந்தனையில் புகுத்தப்படுகிறது. இதில் உழைக்கும் வர்க்கமும் அவர்களின் பிள்ளைகளும் பலிகடாவாக மாற்றப்படுகின்றனர் என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயம்.

இதுதான் நாம் மேற்கூறிய மாணவனிடமும் வெளிப்பட்டிருக்கிறது.

மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சிக்குப் பின்னர் அமைந்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோவியத் சோசலிச அரசில், பள்ளிகளும் அதில் பயின்ற மாணவர்களும் எப்படி இருந்தனர் என்பது குறித்துத் தனது சோவியத் பயணத்தை முடித்த ரவீந்திரநாத் தாகூர் கூறியது நினைவிற்கு வருகிறது. சோவியத்தில் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வை கண்டு ஆச்சரியப்பட்டார் தாகூர்.

சோவியத் சோசலிச ரஷ்யாவின் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு அடித்தளமாக அமைந்தது, ஆளும் வர்க்கத்தை வீழ்த்திய மகத்தான நவம்பர் புரட்சி !

எனவே சமூக பொருளாதார அரசியல் துறையில் நாட்டின் கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் சமூக மாற்றமே, அதாவது புரட்சியே, மக்களுக்கும், மாணவர்களுக்கும் உண்மையான விடுதலையைத் தரும். மறுகாலனியாக்கம் உருவாக்கியுள்ள நுகர்வு வெறி உள்ளிட்ட கேடுகெட்ட பண்பாடுகளையும் உடைத்தெறியும்.


ஆ.கா.சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”
  • சென்னை வெள்ளம்: யார் தான் குற்றவாளி?
  • எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
    மீளாத் துயரத்தில் வடசென்னை
  • தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்
  • ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிக்கு பதவி உயர்வு: இந்த அரசு,
    அதிகார வர்க்கத்தை ஒருபோதும் தண்டிக்காது!
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை
  • காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்
  • தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
  • காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்
  • அட்டைப்படக் கட்டுரை பாட்டளி வர்க்க ஆசான் தோழர் லெனின்
    100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் உடனடி கோரிக்கையை தமிழக அரசே  நிறைவேற்று!

02.01.2024

பெருமழை துயரம்: பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின்
உடனடி கோரிக்கையை தமிழக அரசே நிறைவேற்று!

பத்திரிகை செய்தி

2023 டிசம்பர் 18ஆம் தேதி தென்காசி, நாகர்கோயில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து பெரும் அழிவை ஏற்படுத்தியது .

இது தொடர்பாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ரவி உள்ளிட்டோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதிலிருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கிறோம்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான தூத்துக்குடியில் மழையின் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது. மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிகவும் முக்கியமான உடனடியாக தீர்க்க வேண்டிய இரண்டு பிரச்சனைகள் உள்ளன.

  1. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் உடுத்த துணி கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். இதனை தீர்ப்பதற்கு அரசு ஊர்தோறும் முகாம் அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  2. தூத்துக்குடியை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழை ஓய்ந்து 15 நாட்கள் ஆகியும் இன்று வரை மழை நீர் வடியவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர 90% இடங்களில் இதை அரசு கண்டு கொள்ளவே இல்லை . மழைநீர் தேங்கி சாக்கடை கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.இதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக முகாம்களை அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புத்தாண்டே வருக! புரட்சியின் நாயகரைத் தருக!

புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் தருக!

புதியதொரு ஆண்டு மட்டும் பிறக்கப் போவதில்லை

புதியதொரு வாழ்வும்
பிறக்கப் போகிறது

பாசிச அடக்கு முறைகள்
பிறக்கும் இதே ஆண்டில் தான்

விடுதலைக்கான கொடியும் பறக்கப் போகிறது

இதோ இந்த பாராளுமன்றம்தான் நம் உரிமைகளைப் பறிக்கிறது
என்ற முழங்கிய
பகத்சிங்கின் வார்த்தைகள்
காற்றில் கலந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன

அடக்குமுறைகளும்
கொடுஞ் சட்டங்களும்
ஒரு போதும் விடுதலை உணர்வை சிதைக்க போவதில்லை

இங்கே கோழைகளுக்கும் துரோகிகளுக்கும் கூட இடம் உண்டு
ஆனால் வாழப்போவது வீரர்கள் மட்டும் தான்

கோழைகளும் துரோகிகளும் உருவாகின்ற இந்த காலத்தில் தான்
விடுதலையின் நாயகர்களும் உருவாக போகிறார்கள்

விடுதலையின் நாயகர்கள் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை

தோழனே
நீ மட்டும் ஏன் நம்பிக்கை இழக்கிறாய்?

இருக்கின்ற ஒரு வாழ்வை மக்களுக்காக வாழ்வதைவிட சிறப்பேதும் உண்டோ?

உரத்து முழங்கு!
இது பாசிஸ்டுகளின் மண்ணல்ல
பகத்சிங்குகளின் கட்டபொம்மன்களின்
பூலித்தேவன்களின்
தீரன்களின்
ஒண்டி வீரன்களின் மண்
நமது மண்!

புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் நம்மிலிருந்து தருக!

ஆம்,
கோழைக்கு வாழ்வு கிடையாது!

வீரர்க்கு சாவே கிடையாது!


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம் என்ற வார்தையையே அழிக்கத் துடிக்கும் யூத மதவெறி இஸ்ரேல்! | காணொளித் தொகுப்பு

க்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கை இன்னமும் முடியவில்லை. கிட்டத்தட்ட 9,000 குழந்தைகள் உட்பட 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தும் இஸ்ரேலின் இரத்த வெறி அடங்கவில்லை. “பாலஸ்தீனம்” என்ற சொல்லையே அழிக்க நினைக்கிறது இஸ்ரேல்.

காசா: 2023-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையும்.

மொத்தமாக அழிக்கப்பட்ட வடக்கு காசாவில் உள்ள பெயிட் லாகியா (Beit Lahiya) நகரம்.

பிணவறைகள் நிரம்பி வழிவதால் காசாவின் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் உடல்கள். பிணங்கள் அழுகுவதால் தொற்று நோய் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பதால் துயரம் தாங்க முடியாமல் கதறி அழும் பாலஸ்தீனப் பெண்.

இஸ்ரேலின் ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்புகளும் மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது.

18 வயதைக் கடந்த இஸ்ரேலிய குடிமக்கள் அனைவரும் இராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும். பெண்கள் 2 ஆண்டுகளும், ஆண்கள் 2 வருடம் மற்றும் 8 மாதங்களும் பணிபுரிய வேண்டும். மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால் இஸ்ரேலிய இளைஞர்கள் சிலர் இராணுவத்தில் பணிபுரிய மறுத்து வருகின்றனர். அதற்காக அவர்கள் சிறை செல்லவும் தயாராக உள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் வீதிகளில் இறங்கி தங்களது ஆதரவைப் பதிவுசெய்து வருகின்றனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!

31.12.2023

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக நியமனம்!

இந்த அரசு குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்காது!

பத்திரிகை செய்தி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளக் கூடிய நபரும் அன்றைய தென்மண்டல ஐஜியுமான சைலேஷ் குமார் யாதவ் பணி மூப்பு என்ற பெயரில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தூய காற்று, நீர், நிலம் வேண்டும் என்று போராடிய தூத்துக்குடி மக்களை காக்கை, குருவிகள் போல ஒளிந்திருந்தும் வாகனம் மீதேறியும் சுட்டுக் கொன்ற தமிழ்நாடு போலீஸ், அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் கொலைகாரனுக்கு சேவகம் செய்தது. ஏறத்தாழ 15 பேர் தமிழ்நாடு போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகிகள் ஆகினர். பலர் முடமானார்கள், பாதிக்கப்பட்டார்கள். எனினும் ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தலைவணங்கியது, தோள் கொடுத்தது.

அதன் விளைவாகவே வேறு வழியின்றி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. தனது ஆலை மூடப்பட்டதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவும் மக்களின் போர்க் குணமான போராட்டங்களின் விளைவு காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மனு செய்திருக்கிறது; விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஸ்டெர்லைட்டை மூடிய வீரம் செறிந்த போராட்டங்கள் நடந்தும் சுட்டுக் கொல்லப்பட்டும் ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டன.

அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என்று சுட்டிக் காட்டியதோ அவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று போராடுவதற்கும் பேசுவதற்கும் கூட தூத்துக்குடியில் உரிமை இல்லை. அரசு எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தையும் அதிகாரிகளையும் காப்பாற்றி கார்ப்பரேட்டுக்காக மட்டுமே வேலை செய்யும் என்பதை இந்த நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்பொழுது மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இதோ இப்பொழுது, துப்பாக்கிச் சூடு நடந்த போது தென் மண்டல ஐஜியாக இருந்தவரும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவை டிஜிபி ஆக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் சைலேஷ்குமார் யாதவ் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், துப்பாக்கி சூடு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விரட்டியடிக்கப்படும் அனகாபுத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள காயிதேமில்லத் நகர், சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளை அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்கும் பணியில் அடாவடித்தனமாக ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

கடந்த 4-ஆம் தேதி, போலீசின் துணையோடு வந்த பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், புல்டோசர் மூலமாக டோபிகானா தெருவில் உள்ள வீடுகளை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர்.

அப்பகுதி மக்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்த்துப் போராடியதன் காரணமாக பிற பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்காமல் நிறுத்திவைத்துள்ளது, தி.மு.க அரசு. ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாரிகளும் போலீசும் தங்கள் வீடுகளை இடிக்க வரலாம் என்ற அச்சத்திலேயே அப்பகுதி மக்கள் உள்ளனர்.

அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்!

கடந்த ஐந்து மாதங்களாக, போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கப்போவதாகவும், பகுதிகளை விட்டு வெளியேறக்கூறியும் அப்பகுதி மக்களை மிரட்டி வந்துள்ளனர். மேலும் அதிகாரிகள், “அனகாபுத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளில் குறைந்த அளவிலான வீடுகளே உள்ளது. முதலில் வருபவர்களுக்கே அப்பகுதியில் வீடுகள் வழங்கப்படும். இல்லையெனில், பெருங்களத்தூரைத் தாண்டிதான் வீடுகள் வழங்கப்படும்” எனக் கூறி வஞ்சகமான முறையில் அம்மக்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கும்போது மக்களின் உடைமைகளை கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் மிகவும் அடாவடித்தனமாக செயல்பட்டுள்ளனர். வீட்டு வரி செலுத்தியிருப்பதற்கான ஆவணங்களையும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு பட்டா அளிப்பதாக கொடுத்த சான்றிதழையும் மக்கள் அதிகாரிகளிடம் காண்பித்தபோதும் அதைப் பார்ப்பதற்குகூட அதிகாரிகள் தயாராக இல்லை. எப்படியாவது வீடுகளை இடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஒரே குறிக்கோளாய் இருந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்து ஒடுக்குமுறையையும் ஏவியுள்ளது, தி.மு.க. அரசு.


படிக்க: அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு புல்டோசர்கள்! | தோழர் மருது


வீடுகளை இடிக்கவந்த அதிகாரிகளிடம் சில பள்ளி மாணவர்கள், “வீடுகளை இடித்து எங்களை வெளியேற்றினால் எங்கள் கல்வி பாதிக்கப்படுமே” என்று கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் “நீங்க எல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? நீங்க படிச்சா என்ன? படிக்கலனா என்ன?” என மிகவும் கீழ்த்தரமாக பதிலளித்துள்ளனர். இந்த அராஜகங்கள் எல்லாம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலையிலேயே நடந்துள்ளன.

“வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, கரண்ட் பில் என எல்லாமே வைத்திருக்கிறோமே இதுக்கப்புறம் என்ன? நாங்க என்ன அகதிகளா? நாங்களும் இந்த ஊரை சேர்ந்தவங்க தான? அப்ப நாங்களும் இங்க தான இருக்கணும்? எங்கள மட்டும் ஏன் இந்த மாதிரி பண்ணுறாங்க” என்று தன்னுடைய ஆதங்கத்தை வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் அனகாபுத்தூரை சேர்ந்த பெண் ஒருவர்.

தங்களுடைய உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தங்கள் கண்முன்னே இடிக்கப்படுவதைப் பார்த்து துக்கம் தாங்க முடியாமல் மக்கள் கதறி அழுதனர். சிலர் “வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லை, அதற்குள் வீடுகளை இடிக்கிறார்களே” என்று புலம்பினர். ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டடங்களை இடிக்காமல் தங்கள் வீடுகளை மட்டும் இடிக்கும் தி.மு.க. அரசை வசைபாடினர்.

மாற்று குடியிருப்புக்காகக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் வாழவே தகுதியற்றவையாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். “மருத்துவமனை, பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், சுடுகாடு போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. அவங்க கொடுக்கிற 350 அடி வீட்டுல ஒரு நாள் கூட தங்க முடியாது. சுவரைத் தொட்டாலே சுண்ணாம்பு கையோட வருது. எல்லா சுவர்களிலும் விரிசல் விட்டிருக்கு. ஜன்னல் வச்சுருக்காங்க, ஆனா ஜன்னலுக்கு கதவு இல்ல” எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-ஆம் தேதி அன்றே அனகாபுத்தூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 13-ஆம் தேதி “எங்களுக்கு எந்த சலுகையோ மானியமோ தேவையில்லை. எங்கள் இடத்தில் எங்களை வாழவிடுங்கள் போதும்” என்ற முழக்க அட்டைகளுடன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டன.

சிங்கார சென்னையில் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை!

அனகாபுத்தூர் பகுதியில் உழைக்கும் மக்களின் வீடுகளை “ஆக்கிரமித்து கட்டப்பட்டவை” என்று கூறி இடிக்கும் தி.மு.க. அரசு, அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாதா கல்லூரியையும், காசா க்ராண்ட், ஒலிம்பியா போன்ற ரியல் எஸ்டேட் பெருநிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு கட்டடங்களாக கருதவில்லை. அதைபோல், மாற்று குடியிருப்பு வீடுகளையும் ஆற்றிலிருந்து 50 அடி தொலைவில்தான் கட்டிக்கொடுத்துள்ளது. இதிலிருந்தே, “ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம்” என்று தி.மு.க. அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதன் மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் பகுதியில் வசித்துவந்த மக்களையும், 2022-ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாய் அருகே வசித்துவந்த மக்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி விரட்டியடித்துள்ளது.

இவ்வாறு, ஆற்றங்கரையோரங்களில் வாழும் உழைக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவது “ஆற்றங்கரை மேம்பாடு” (Riverfront Development) என்ற திட்டத்தின் அடிப்படையில்தான். இத்திட்டம், ஆற்றங்கரையோரங்களில் பொழுதுபோக்கு வசதிகள், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த பகுதியில் மேட்டுக்குடி மக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம். இந்த உழைக்கும் மக்கள் விரோத திட்டத்தையே தி.மு.க அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது.

சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற கார்ப்பரேட் நலத் திட்டங்களால் உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடிக்கும் கார்ப்பரேட் நல அரசே. அதனை, தி.மு.க. அரசின் அடுத்தடுத்த கார்ப்பரேட் சேவைகள் நமக்கு உணர்த்துகின்றன.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்

ஏரல் பகுதியில் இடிந்த பாலம்

வடியாத மழை வெள்ளம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube