Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 719

ஈழ அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா!

6

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

மே நாள்

பேரணி, டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மே நாள் பேரணி நோட்டிஸ்சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக்கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளையும் விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிராக இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். “கணவனைப் பார்க்க வேண்டும்” என்ற ஒரு மிகச்சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்துகாக பிள்ளைகளுடன் அவரைக் கைதுசெய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் இந்த சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான்.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடைமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70,000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப்பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத்தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதாபத்துக்குரிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாகவே நடத்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்று தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் “கியூ பிரிவு” உளவுத்துறைதான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் திமுக, அதிமுக அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்கள் மீது “புலி” என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, ஒரு சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூட கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக் கூடப் பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கை கால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப்படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒரு வகை ஆயுள் தண்டனை.

சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும்போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூடப் பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை 6 மணிக்குள் முகாமிற்கு திரும்பவேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும்தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்கு சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலித்தின் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப் படாததால், குறுக்கு நெடுக்காக தொங்கும் மின்சாரக் கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு, இரவு மட்டும்தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்றன தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆள் அனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசார் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளைத் தாங்க முடியாமல்தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். “தாய்த்தமிழகம்” ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள் கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் ஈழ அகதிகளை கவுரவமாக நடத்துகின்றன. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித்தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதில்லை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால், ஐநா அதிகாரிகளை அகதி முகாமுக்குள் நுழைய தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்தபோதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே கண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ. தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணை தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒரு முறை வெளியேறிவிட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்திவிட்டது ஜெ அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக்கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெ அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெ அரசு. ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர். இன்றைக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் உரிமைகளுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப் படவேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டிற்குத் திரும்புவதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழ அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஈழமக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் காட்டவேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேசப் பாட்டாளிவர்க்கம் என்ற முறையில் நமது கடமை.

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலிசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!

தகவல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டம் – திருந்தாத அதிகார வர்க்கம்!

2
பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.
கொல்கத்தா போராட்டம்
கொல்கத்தாவின் பூங்காதெரு பகுதியில் ஒரு பெண்ணை கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது தாமதமின்றி விசாரணை நடத்தி தண்டிக்கக் கோரி பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் நடந்த வல்லுறவுக் கொலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வர்மா கமிசனின் பரிந்துரைகளை நீர்த்துப்போக வைத்துவிட்டு,  ஒரு அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்தது. வர்மா கமிசனின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மசோதாவைத் தயாரித்து, அதை நாடாளுமன்றத்தில் விவாதித்துச் சட்டமாக்கி, பின்னர் அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இச்சட்டத்தை அமலாக்க வேண்டுமென்பதால், இடைக்காலத்தில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசு அறிவித்தது.

இப்படியொரு அவசரச் சட்டம் வந்த பிறகாவது பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மே.வங்கப் பெண் முதல்வரான மம்தா பானர்ஜியோ, மக்கள் தொகையும், கார்களும், சினிமா அரங்குகளும் அதிகரிக்கும்போது, பாலியல் குற்றங்களும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று ‘சமூக அக்கறை’யுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற அமைச்சர்கள் குழு பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவின் மீது மயிர்பிளக்கும் விவாதத்தை நடத்திக் கொண்டிருந்த போதே, தாஜ்மஹாலைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணியான ஜெசிகா டேவிஸ் எனும்  லண்டனைச் சேர்ந்த பெண்ணை, ஆக்ரா நகரில் அவர் தங்கியிருந்த ஓட்டல் முதலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், அப்பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துக் கால்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

டெல்லி மங்கோல்புரி
டெல்லி மங்கோல்புரியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து பகுதி வாழ் உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – போலீசின் அடக்குமுறை ஓய்ந்த பின்னர் காணப்பட்ட போர்க்களம்.

கடந்த மார்ச் 15 அன்று ம.பி.யில் சுற்றுலாப் பயணிகளான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் சைக்கிளில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவில் காட்டுப்பகுதியில்  ஓய்வெடுத்தபோது, அங்கு ஒரு கும்பல் கணவனைத் தாக்கிவிட்டு, அப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வீச்சாக நடந்துள்ள தலைநகர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் 3 பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13,11,10,9 மற்றும் 7 வயது நிரம்பிய 5 சகோதரிகளையும் அச்சிறுமிகளின் சித்தப்பா கடந்த ஈராண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை இப்போது வெளியே வந்து, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மதுரை மாவட்டம், கூடல்நகர் அருகிலுள்ள குலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பழநி அருகேயுள்ள பதினாறுபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட விவகாரம் மக்களது போராட்டத்தால் அம்பலமானது. கடந்த ஓரிரு மாதங்களாக நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் கடுமையான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் நிலைமைகள் மாறிவிடவில்லை என்பதையும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டுகின்றன.

பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.

பஞ்சாபில் தரண்தரண் மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹர்பிந்தர் கவுர் என்ற பெண்ணை, லாரி ஓட்டுநர் ஒருவன் பாலியல் தொல்லை செய்துள்ளான். உடனடியாக அருகிலுள்ள போலீசு நிலையத்துக்குச் சென்று ஹர்பிந்தர் கவுரின் தந்தை காஷ்மீர சிங்கும், அவரது சகோதரரும் உதவி கேட்டுள்ளனர். போலீசார் இது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்துவிட்டு, அவன் கொடுத்த மாமூல் பணத்தை வாங்கிக் கொண்டு உதவி கேட்ட ஹர்பிந்தர் கவுரையும் அவரது தந்தை மற்றும் சகோதரரையும் சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். காக்கிச் சீருடை அணிந்த கிரிமினல்கள் நடத்திய இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது கைபேசி காமிராவில் பதிவு செய்து, அதனை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்த வீடியோ, தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் வெளியாகி பரபரப்பானதைத் தொடர்ந்து இத்தாக்குதலை நடத்திய 4 பொறுக்கி போலீசாரும் தற்காலிகப் பணிநீக்கம் செயப்பட்டுள்ளனர். ஆனால், மாவட்டப் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, அப்பெண்ணின் தந்தை குடித்துவிட்டுத் தகராறு செததாகவும், அதைத் தடுக்க முயற்சித்த போலீசாரை அப்பெண் தடுத்ததால் அடித்ததாகவும் நியாயவாதம் பேசி கிரிமினல் போலீசுக்கு வக்காலத்து வாங்குகிறார். பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்தை மேலும் கடுமையாக்கி, தண்டனையை அதிகரிப்பதும், போலீசு ரோந்தை விரிவுபடுத்துவதும் வேண்டும் என்று முன்வைக்கப்படும் தீர்வின் அபத்தத்தை இந்த நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டுகிறது.

உ.பி.யின் டியோரியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான தாழ்த்தப்பட்ட விவசாயப் பெண், வயல்வெளியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது கழுத்தை நெறித்துக் கொல்லவும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த காமுகர்கள் முயற்சித்துள்ளனர். உள்ளூர் போலீசில் இது பற்றி புகார் கொடுத்த போதிலும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்டப் போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபோது,  பல குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள  35 வயதான பெண்ணை எவனும் பாலியல் பலாத்காரம் செவானா என்று கிண்டலடித்து நக்கல் செய்திருக்கிறார், அவர். அருகே இருந்த பத்திரிகையாளர்கள் இந்த வக்கிரத்தை உள்ளூர் நாளேடுகளில் அம்பலப்படுத்தினர். பாலியல் வன்கொடுமை பற்றி புகார் கொடுக்கும் பெண்களிடம் பரிவோடும் ஆறுதலாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டு உபதேசங்களைச் செய்தாலும், போலீசுத்துறை கடுகளவும் மாறிவிடவில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று கூறப் போதுமானது.

ஜெசிகா டேவிஸ்
பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க ஆக்ரா மஹால் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்துள்ள ஜெசிகா டேவிஸ் என்ற லண்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி.

ம.பி.யில் சுவிட்சர்லாந்து பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரோ, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக அரசால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்கிறார். அவரது பேச்சை பொன்மொழி போல ஐரோப்பாவின் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. “இந்தியாவுக்குப் போகும் பெண்களுக்குச் சில எச்சரிக்கைகள்” என்று ஐரோப்பிய ஊடகங்களும் அரசும் விளம்பரப்படுத்தும் அளவுக்கு, இந்தியாவின் யோக்கியதை கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் வல்லுறவு நோயால் இந்திய ஜனநாயகம் சீக்குப் பிடித்துக் கிடக்கிறது என்று பல நாடுகளும் பரிகசிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் பெருகிவரும் இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் பெண்ணினத்தின் உரிமைகளையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

மாறாக, டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மாண்டுபோன இளம்பெண்ணுக்கு நிர்பயா (அச்சமற்றவர்) என்று பெயர்சூட்டி, அவருக்கு வீரப்பெண்மணி விருதளித்தும், ரூ. 1000 கோடி முதலீட்டில் நிர்பயா என்ற பெயரில்பெண்களுக்கென தனி வங்கி தொடங்கப்போவதாக அறிவித்தும், பெண்ணினத்தின் மீது அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஆட்சியாளர்கள் காட்டிக் கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு  கடந்த மார்ச் 19 அன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளனர்.

தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது, ஒளிந்திருந்து பெண்களின் மறைவிடங்களைப் படம் பிடிப்பது-பரப்புவது உள்ளிட்ட குற்றங்களுக்குக் கடுமையான  தண்டனைகள், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை – முதலானவை இப்புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வர்மா கமிசனும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் அளித்த முக்கியமான பரிந்துரைகளை முற்றாகப் புறக்கணிக்கத்துவிட்டு, ஆணாதிக்கப் பிற்போக்குத்தனத்தைக் கட்டிக்காக்கும் வகையிலேதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“காப்” எனப்படும் சாதியப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை என்றும், அவை திருமண உறவு தொடர்பாக எந்த தீர்ப்பும் அளிக்க உரிமை  கிடையாது என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்தது. ஆனால், இச்சாதியக் கட்டப்பஞ்சாயத்துகளையும் கௌரவக் கொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இராணுவப் படையினரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கும் வகையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற வர்மா கமிசனின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே என்றும், மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் அவள் மீது பாலுறவைத் திணிப்பதும் வல்லுறவுக் குற்றமே என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்ததையும் தற்போதைய சட்டம் நிராகரித்துள்ளது.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ஆதிக்கத்திலும் உள்ள ஒருவர் பாலியல் குற்றம் செய்தால் அது கொடிய குற்றம் என்று கருதப்படவேண்டும்  என்ற முந்தைய 2010-ஆம் ஆண்டின் உத்தேச மசோதாவின் விதிகளை நீர்த்துப் போக வைத்து, “சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தில் உள்ளவர்” என்ற சொல் திட்டமிட்டே இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்ற பரிந்துரையும் ஏற்கப்படவில்லை.

ஒருவர் பாலுறவுக்கு மனப்பூர்வமாக இசைவு தெரிவிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் நீண்டகாலமாக நம் நாட்டில்  இருந்தது. இருப்பினும், ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிர்ப்பந்தத்தால், அதை 18 வயதாக தற்போதைய குற்றவியல் சட்டத் திருத்த மசோதா(2013)வில் இந்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

உடல் மற்றும் மன வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலுறவுக்கான மனப்பூர்வ ஒப்புதல் அளிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் இருக்கிறது. பாலுறவுக்கான இசைவு வயது 16 என்று தீர்மானித்துள்ள நாடுகள், பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பள்ளிகளிலும் பாலியல் குறித்த விழிப்புணர்வை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், நம் நாட்டில் சாதிய- மதவாத அமைப்புகள்  குழந்தைத் திருமணங்களை ஆதரித்துக் கொண்டே, பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 16-ஆக இருப்பதையும் எதிர்க்கின்றன. தங்களது குடும்பம் மற்றும் சாதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேற்று சாதி இளைஞனைக் காதலிப்பதையும் திருமணம் செய்வதையும் தடுத்து தண்டிக்கும் நோக்கத்துடன்தான் ஆணாதிக்கப் பிற்போக்குவாதிகள் பாலியல் உறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதை 18-ஆக உயர்த்த வேண்டுமென்கின்றனர். இதன் மூலம் பெருகிவரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கப் போவதாக அரசு கூறிக் கொண்டாலும், காதலர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான வாய்ப்பையும் அதிகாரத்தையும்தான் இது போலீசுக்கு வழங்கியுள்ளது.

கடந்த  பிப்ரவரி 6-ஆம் தேதியன்று, டெல்லி சிறீராம் வணிகவியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவுக்கு வந்த இந்துவெறி பயங்கரவாத மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்குவந்த இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள குண்டர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி, மாணவிகளின் ஆடைகளைக் கிழித்தும், மார்பகங்களைப் பிடித்து இழுத்தும் அவமானப்படுத்தினர். நூற்றுக்கணக்கில் போலீசு நிறுத்தப்பட்டிருந்தபோதிலும், இக்குண்டர்களைத் தடுக்கவோ, கைது செய்யவோ முன்வரவில்லை. பட்டப்பகலில் நடக்கும் ஒரு பாலியல் தாக்குதலைக்கூட தடுக்க முன்வராத இத்தகைய போலீசிடம்தான், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டத்தை அமலாக்கவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆணாதிக்கத் திமிர்த்தனத்தில் ஊறிப்போயுள்ள நீதித்துறையிடம்தான் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இப்புதிய சட்டமும் பெண்கள் மீதான வன்கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் ஒழித்துவிடாது என்பதையே இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

– பாலன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

காங்கிரஸ் வாலா, தாமரை வாலா, போயஸ் வாலா -பாடல்

2

ஹவாலா ஊழல்டிகர்கள் மட்டும்தான் மாறுகிறார்கள். மேடையும் மாறுவதில்லை, பாத்திரங்களும் மாறுவதில்லை. 1990களில் ஹவாலா ஊழல் வெளிவந்த சமயத்தில் இயற்றி வெளியிடப்பட்ட பாடல் இது. இந்த பாடல் வரிகளில் ‘ஹவாலா ஊழல்’ என்பதற்கு பதில் ‘2G ஊழல்’ என்றும் ‘நரசிம்ம ராவு’ என்பதற்கு பதில் ‘மன்மோகன் சிங்கு’ என்றும் ‘ஜெயின்’ என்பதற்கு பதில் ‘நீரா ராடியா’ என்றும் மாற்றிக் கொண்டால் இன்றைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.

ராஜீவ் காந்தி – வி.பி. சிங், நரசிம்ம ராவ் – அத்வானி, மன்மோகன் சிங் – சுப்ரமணிசாமி என்று இவர்கள் மேடையில் ஒருவரை ஒருவர் அடித்து மக்களுக்கு சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்க, திரைக்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஆ. ராசா சிறைக்குப் போவதோ அல்லது ஒரு ப. சிதம்பரம் மீது வழக்கு தொடரப்படுவதோ கோமாளிகள் செய்து காட்டும் குட்டிகரணங்கள் போன்றவைதான். அதனால் எதுவும் மாறி விடப்போவதில்லை.

இனி பாடலைக் கேளுங்கள்!

==============

வாலா! ‘இது வரலாறு காணாத ஊழல்’ என்று எழுதுகிறார்கள் பத்திரிகைகள். இதில் ஆச்சரியம் இல்லை. முந்திரா ஊழல் முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வரை ஒவ்வொரு முறை புதிய ஊழல் அம்பலமாகும் போதும் இவர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.

ஹவாலா ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் ஒரு உண்மையைச் சொன்னார். ‘தேசத் தந்தை மகாத்மா காந்தியே பஜாஜ் என்னும் தரகு முதலாளியிடம் காசு வாங்கியவர்தான். அப்படியிருக்க எங்களை மட்டும் ஏன் ஏசுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. ஏனென்றால் ஊழலில்தான் உயிர் வாழ்கிறது இந்த நாடாளுமன்றம்.

இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஆட்சி செய்யும் நாடுகளில் இதுதான் உண்மை. தங்களுக்குள், தீவிரமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போல நடிக்கின்ற ஓட்டுக் கட்சிகளிடையே ஒரு ஒருமைப்பாடு இருக்கிறது.  அதுதான் ஊழல்!

ரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மத்ராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அர்ஜூன்சிங்கும், என்.டி.திவாரியும் வந்தான் ராவுக்கு சவாலா …
கோரஸ் : வந்தான் ராவுக்கு சவாலா
அத அடக்க வேற வழியில்லேன்னு அவுத்து விட்டான் ஹவாலா…
கோரஸ்
: அவுத்து விட்டான் ஹவாலா
இப்ப நீயும் திருடன்… நானும் திருடன்னு ராவு பாடுறான் லல்லாலா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அஞ்சு காசு கூட வாங்கலண்ணு அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
கோரஸ் : அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
அந்த அத்வானி வாங்குன காசுக்கு ஜெயினு எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
கோரஸ் : எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
அட ராமா…இவன் ராமராஜ்ஜிய கனவு எல்லாம் நொறுங்கிப் போச்சு சில்லு சில்லா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

வசனம் : வாங்கினவன் 115 பேர் அதில் சிக்குனவன் 67 பேர்
பொம்பள ஒரு பொம்பள – நம்பர் ஒம்பது மட்டும் சிக்கல…
சி.பி.ஐ. இவள சுத்தல – கேசு செத்தவன் கையில வெத்தல…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அந்துலே, முந்திரா, தர்மதேஜா…ஆவியா சுத்துறான் நகர்வாலா…
கோரஸ்
: ஆவியா சுத்துறான் நகர்வாலா…
அந்த இந்திரா மவனும் ஹவாலா – காச திங்கிறா சோனியா குசாலா…
கோரஸ் : திங்கிறா சோனியா குசாலா…
நேரு மாமா… இந்த மாமன் பரம்பர வறண்டி வறண்டி தேசம் போச்சு திவாலா

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

வசனம் : ஹவாலா.. ஊழல் 60 ஆயிரம் கோடி, அதில் அகப்பட்டது 65 கோடி…
சிக்கல மிச்சம் சிக்கல – அந்த பட்டியல் ஏண்டா சிக்கல
அமெரிக்க கம்பெனி யாரு அம்பானி டாடா பிர்லா யாரு
அவன்தாண்டா ஆணிவேரு ஜெயினு வெறும் புரோக்கரு…

நொங்கத் தின்னவனை வுட்டுட்டான் – அத
நோண்டி தின்னவன் சிக்கிட்டான்

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

____________________

க்கள் கலை இலக்கிய கழகத்தின் “ஓட்டு போடாதே, புரட்சி செய்” எனும் பாடல் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

___________

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

_____________________________________

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

20

மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.

குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.

35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.

காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி இன்றைய போலி ஜனநாயக அரசமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.

நேபாளத்தை சேர்ந்த மான்சிங் என்பவர் ராஜ்கோட்டிலுள்ள ரையாதர் பகுதியில் உள்ள சோட்டுநகர் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். தங்கியிருந்து வேலை பார்ப்பதற்காக, குடியிருப்பு சங்கத்தினால் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 900 சதுரஅடி இடம் வழங்கப்பட்டுள்ளது. மான்சிங் அந்த இடத்தில் சிறிய வீடு கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் 35 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது; அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.

2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

மான்சிங் குடும்பத்தினர் இடத்தை விட்டு உடனே வெளியேறவில்லை என்றால், அவர்களது வீடு ஏழு நாட்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்று மேலும் ஒரு நோட்டீஸில் ஆகஸ்ட் மாதம் பீதியூட்டப்பட்டது. ‘1978-ல் மான் சிங்கிற்கு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் வழங்கி கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடம் தங்களுக்கே உரிமையானது’ என்று மான்சிங்கின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

self-immolation-2ஏப்ரல் 2 ஆம் தேதி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை அறிந்த குடும்பத்தினர், இதற்கு மேலும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்ற விரக்தியோடு ராஜ்கோட் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணைய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மான் சிங்கின் மகன் பரத் (40), அவரது மனைவி ஆஷா (35), மான் சிங்கின் இளைய மகன் கிரீஷ் (27) ஆகிய மூவரும் சம்பவத்தன்றே உயிரிழந்தனர். மான்சிங்கின் மனைவி வசுமதி (60), மகன் மகேந்திராவின் மனைவி ரேகா (35) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய கிரீஷின் மனைவி கௌரி, ‘வீட்டு வசதி சங்கத்தினரும் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளும், மான் சிங்கின் குடும்பத்தை தொல்லைகளுக்கும், வேதனைக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கி வந்தனர்’ என்றும். ‘குடியிருக்கும் இடத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி உயிரை விடத் துணிந்தோம்’ என்று கூறினார்.

இந்த குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு வீட்டு வசதி சங்கத்துடன் சேர்ந்து தொல்லை தந்த ஆளும் பி.ஜே.பி. கட்சி பிரமுகர்கள், தற்கொலை சாவுகளுக்கு பிறகு முதலை கண்ணீர் விட்டு, மாநகராட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பொய் வேடமிட்டு வருகின்றனர். கிரீஷின் மரண வாக்குமூலத்தில் அவரது குடும்பத்தை, பி.ஜே.பி. கவுன்சிலர்கள் ராஜ்பா ஜாலாவும், கமலேஷ் மிரானியும் சோட்டு நகர் கூட்டுறவு வீட்டு வாரிய சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

தீக்குளிப்புகாங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினருமான ராஜு பர்மர், மான் சிங் குடும்பத்தினருக்கு, நஷ்டஈடு தந்து அனுதாபங்கள் தெரிவிக்க சென்றிருக்கிறார். இறந்துபோன பரத்தின் மூத்த மகள் மது அவர் கொடுக்க வந்த காசோலையை ஏற்க மறுத்து, “எங்களுக்கு முன்பே உதவ ஏன் முன்வரவில்லை?” என்று விரட்டியிருக்கிறார். போலீசையும், மாநகராட்சியையும் பலமுறை அணுகியும் யாரும் உதவவில்லை என்றும், தந்தையும், தாயும், உறவினர்களும் நெருப்பில் எரியும் போதும் அவர்களை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை என்றும் புலம்பி அழுது இருக்கிறாள் அந்தப் பெண்.

‘சோட்டு நகர் கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினர், அவர்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை தடை செய்து, குழந்தைகள் தெரு விளக்கின் ஒளியில் படிக்க வேண்டியது ஏற்பட்டது’ என்றும், ‘தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர்’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம் சிங் குடும்பத்தினர் நியாயம் கிடைக்கும் வரையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு நீதிகிடைக்க உதவுவதாக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கிய பின்னரே சடலங்களை பெற்று சென்றுள்ளனர்.

வழக்கம் போல போலீஸார் குற்றச்சாட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றவாளிகளை கைவசம் வைத்துகொண்டே, குடும்பத்தினரை இந்நிலைக்கு ஆளாக்கிய அயோக்கியர்களை பிடித்தே தீருவோம் என்று முழங்கிவருகிறார் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் பி. சிங். குடியிருப்பில் வசிக்கும் துஷ்யந்த் தனக், ஹரேஷ் வஜா, மற்றும் ஜெயந்தி டோலாக்கியா ஆகிய மூவரை பெயருக்கு கைது செய்துள்ளனர்.

சோட்டுநகர் போன்ற குடியிருப்புகள் பணம் சேர்க்க முடிகின்ற நடுத்தர வர்க்கத்தினரை தனித் தீவுகளாக வாழ வைப்பதற்காக அமைக்கப்பட்டவை. மான் சிங்கின் மறைவிற்கு பின், அவருடைய செக்யூரிட்டி வேலையை அவர் குடும்பத்தினர் யாரும் செய்யவில்லை எனினும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியின் அங்கத்தினராகவே வாழ்ந்து வந்துள்ளனர். பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இறுதியாக சட்டரீதியாக தாக்குதல் நடத்தி வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பணம் படைத்தவர்களுக்குத்தான் வாழும் உரிமை என்ற இந்த சமூக அமைப்பில் உழைத்து வாழும் ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மோடியின் குஜராத் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மேலும் படிக்க
Fearing eviction, 5 of family set selves afire
Family self-immolation: Family agree to take bodies for cremation
NHRC member visits grieving family in Rajkot with aid

கருப்பியைக் கொன்ற போலிஸ் நாய்கள்: சிரமப்பட்டு வந்த நீதி!

1

கொட்டடிக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் தமிழகத்தில், 10 வருடங்களுக்கு முன் பாசிச ஜெயாவின் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண், போலீஸாரால் லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை கட்டவிழ்க்கும் அரசு மற்றும் ஆதிக்க சாதியினர் சார்பில் ஏவல் செய்வது போலீஸ் துறையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. தங்களிடம் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான அடக்கு முறையையும், தாக்குதலையும், போலீஸ்காரர்கள் செலுத்தாமல் விடுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

‘தி இந்து’ நாளேட்டில் வெளியான முன்னாள் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனின் தலைவர் டாக்டர். வசந்தி தேவியின் கட்டுரையை தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கொட்டடி கொலைகள்
கொட்டடி கொலைகள் – மிக மோசமான மனித விரோதச் செயல். (படம் உதவி : தி ஹிந்து)

48 வயது நிரம்பிய கருப்பி பரமக்குடியை சேர்ந்தவர். அருந்ததியர் சமூகப் பெண்ணான அவர் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார். 2002 ஆம் ஆண்டு, பணியிடத்தில் தங்கச் சங்கிலியை திருடியதாக வீட்டு உரிமையாளர்களால் பழி சுமத்தப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் கருப்பி ஆறு நாட்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளானார். இறுதியில் அவரது உயிரற்ற சடலம், டிசம்பர் 1 2002 அன்று காவல் நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. நடந்தது தற்கொலை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

காவலில் இருக்கும் ஒருவர் தப்பித்து சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்லும் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. சம்பந்தப்பட்ட சாட்சிகளை போலீஸார் அச்சுறுத்துவதாக தெரிவித்து, இவ்வழக்கில் தலையிடுமாறு தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனுக்கு பரிந்துரை செய்தன.

அப்போது கமிஷனில் தலைமை பதவியில் இருந்த வசந்தி தேவி இவ்வழக்கை விசாரித்தார். முதலில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, கருப்பியின் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சம்பவம் நடந்த காவல் நிலையத்தை பார்வையிட்டவருக்கு, கருப்பியால் தப்பித்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தெளிவாகியது. கருப்பியின் குடும்பத்தாரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் எல்லாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் விளங்கியது.

அவர்களது வாக்குமூலங்கள், ‘கருப்பி திருடியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாள்’ என்ற போலீஸின் கதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன. இக்கொலைக்கு போலீஸ் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று அவர்கள் உறுதியாக பதிவு செய்துள்ளனர்.

பயத்தால் தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று உணர்ந்த வசந்தி தேவி, தன்னை நம்பி உண்மையை வெளியிடலாம் என்று கூறியும், அவர்களது பயம் குறையவில்லை. நடந்தது என்ன என்பதை இனியும் அறிய முடியாது என்று நம்பிக்கை இழந்து அங்கிருந்து புறப்பட இருந்த வசந்தி தேவிக்கு இறுதியில் திருப்பு முனையாக ஒரு ஆதாரம் கிடைத்தது.

கருப்பியின் நாத்தனார் கணவரான கிறிஸ்து தாஸ் என்பவர் இம்மரணத்தின் காரணத்தை மூடிமறைத்து இருந்த இரகசியத் திரையை விலக்கினார். “அம்மா என்னையும் என் பிள்ளைகளையும் தயவு புரிந்து காப்பாத்துங்க, நாங்க பெரிய ஆபத்திலே மாட்டியிருக்கோம்” என்று கூறி வசந்தி தேவியின் காலில் விழுந்து கதறியிருக்கிறார் கிறிஸ்து தாஸ். ‘உண்மையை நான் சொல்லியே ஆகணும், இல்லேனா ஈமத்தீயிலே என் நெஞ்சு வேகாது’ என்று சொல்லி நடந்ததை கூறியிருக்கிறார்.

நவம்பர் 26, 2002 அன்று இரவு கிறிஸ்து தாஸையும் அவருடைய மனைவியையும், கருப்பியின் மகள் மற்றும் மருமகன் ஆறுமுகத்தையும் பரமக்குடி போலீஸார் காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கருப்பி திருடியதாக போலீஸார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றனர. அதன் பிறகு கிறிஸ்து தாஸின் ஆடைகளைக் களைந்து, கைகளில் விலங்கிட்டு, கால்களை மேசையில் கட்டி வைத்து விடியும்வரை உடல் ரீதியான தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கத்தான், கருப்பியின் உறவினர்களை பிடித்துவந்து, அவளுடைய கண்முன்னரே போலீஸார் அடித்துள்ளனர் என்பதை உணர்ந்தார் கிறிஸ்து தாஸ்.

மூன்று நாட்களும், கருப்பியை நான்கு போலீஸார், மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். தான் அப்பாவி என்று மன்றாடிய அப்பெண்ணின் கதறல்களுக்கு செவிசாய்க்காமல், பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

மூன்று நாட்கள் கழித்து கிறிஸ்து தாஸ் குடும்பத்தை போலீஸார் விடுவித்தனர்.

டிசம்பர் 1 2002 அன்று, இறந்த பெண் ஒருவரின் உடல் காவல் நிலையத்தின் பின் கிடைத்துள்ளது என்றும், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்ட கிறிஸ்து தாஸ் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.

வசந்தி தேவியின் விசாரணை துவங்குவதற்கு முன்பே, போலீஸார் கருப்பியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர் என்ற உண்மையையும் கூறினார் கிறிஸ்து தாஸ்.

விவரங்களுடன் சென்னைக்கு திரும்பிய வசந்தி தேவி கருப்பி வழக்கின் முக்கிய ஆவணங்களான, பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை இவற்றை சேகரித்தார். சம்பவத்திற்கு பிறகு நடந்த சப் கலெக்டர் விசாரணையில், ஐந்து போலீஸ் அதிகாரிகளும், ஒரு இன்ஸ்பெக்டரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை ஆகிய ஆவணங்களை சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவ தடயவியல் துறை தலைவரின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.

தடயவியல் துறைத் தலைவர் கீழ்க்காணும் முக்கிய குறிப்புகளை அனுப்பினார்.

  • மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.
  • உடல் முழுவதும் பல இடங்களில் கன்றிப்போன காயங்கள் உள்ளன.
  • இறப்பதற்கு 1-3 நாட்கள் முன்பு வரை கூர்மையற்ற ஆயுதத்தின் மூலம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்.
  • இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • வலது நெற்றியில் உள்ள உறைந்துப்போன காயம் தான் அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ள கடைசி காயமாகும்.

கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இவ்வழக்கை சி.பி.ஐ. அல்லது மாநில கிரைம் பிரான்ச் மூலமாக, விசாரிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும் தலைமை செயலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடிதங்களுக்கும் நினைவூட்டல்களுக்கும் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன் சட்டப்படியான அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக இருந்ததால் வழக்கின் சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் உரிமை அதற்கு கிடையாது. ஆகவே, வசந்தி தேவி, தேசிய பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த பூர்ணிமா அத்வானியை தொடர்பு கொண்டார். தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன்கள் சேர்ந்து, அக்டோபர் 28 2003 அன்று கூட்டு பொது விசாரணையை மதுரையில் நடத்தினர்.

விசாரணைக்கு கருப்பியின் உறவினர்களும், பல சாட்சிகளும் பரமக்குடி சப்-கலெக்டரும், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களும் அழைக்கப்பட்டனர். கருப்பி, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகித்தான் இறந்திருக்கிறார் என்பது மேலும் தெளிவானது. நடந்து தற்கொலை அல்ல போலீஸாரால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியது.

கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், கருப்பியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 2 லட்சமும், கொடுமைகளுக்கு ஆளான ஆறுமுகம் மற்றும் கிறிஸ்து தாஸ் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சமும், நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், வசந்தி தேவியின் பணிக்காலம் முடிவடைந்த மார்ச் 2005 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் அப்போது மாநில மகளிர் ஆணையத்தின் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் இவ்வழக்கை பரமக்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சி.பி.ஐ பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவினை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். “பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரால் மனிதத் தன்மையற்ற விதத்தில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றும் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கின் புலனாய்வை தன்னிச்சையான அமைப்பு ஒன்று செய்யவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

5 வருடங்களுக்கு பிறகு, சென்ற பிப்ரவரி 14ம் தேதி அமர்வு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கருப்பியை கொன்ற எட்டு போலீஸ்காரர்களில் 5 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனையும் இன்னும் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

லாக்கப் கொலையை தற்கொலை என்று சித்தரித்து கருப்பியின் உடலை மின் கம்பத்தில் தூக்கிலிட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சாஹில் ஹமீதுக்கு ரூ 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

சட்டத்தின் காவலர்களான போலீஸ்காரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஆதரவுமற்ற ஒரு பெண்ணை படுகொலை செய்திருக்கின்றனர். அவரது குடும்பத்தையும் சித்திரவதை செய்திருக்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகளும் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நமது நீதி நிர்வாக அமைப்பின் லட்சணம்.

மேலும் படிக்க
The rugged road to justice

தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !

6

ருணை மனுவை நிராகரிப்பதில் குடியரசுத் தலைவர் காலதாமதமாக நடந்து கொண்டார் என்பதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பஞ்சாபின் தேவேந்திரபால் புல்லர் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து தினமணி இன்று ஒரு தலையங்கம் (சர்ச்சையில் நியாயமில்லை) எழுதியிருக்கிறது.

தேவேந்திரபால் சிங் புல்லர்
தேவேந்திரபால் சிங் புல்லர்

தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பவ்யமாகத் தெரியும். ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா, வைத்தி மாமாவின் பேனா விசம் கக்காமல் இருக்குமா?

உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது குறித்தும், பொதுவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் நாடெங்கும் நடக்கும் விவாதம் தினமணியின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வைத்தியின் மனதை கள்வெறியுடன் ஆடவைத்திருக்கிறது.

சில்லறைத் தகராறு கொலை வழக்குகளோடு தடா, தீவிரவாத வழக்குகளின் தூக்குத் தண்டனைகளை ஒப்பிடக்கூடாது, குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறக்கூடாது, மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்க முடியாது, காலதாமதத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியாது, என்று தீர்ப்பின் வைர வரிகளை மேற்கோளிடும் வைத்தி, தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் ஏனைய கைதிகளுக்குமான தீர்ப்பு இது; ஒற்றை வரிகளில் ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ள தீர்ப்பும் இதுதான் என்று உச்சிமோருகிறார்.

தமிழக மூவர் மற்றும் சந்தன வீரப்பன் வழக்கிலுள்ள அப்பாவிகள் உட்பட அனைத்து கைதிகளையும் தூக்கில் போடவேண்டியதுதான் என்று நேரடியாக சந்தோஷப்படமால் தீர்ப்பின் வழியாக சட்டப்படியே மகிழ்ச்சியடைகிறார் வைத்தி. அதாவது இதற்காக யாராவது தினமணியை விமரிசித்திருந்தால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும், ஜாக்கிரதை!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

குடி அரசை கொலை அரசாக மாற்றிவரும் காங்கிரசு அரசு மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காலத்தில் தினமும் மந்திரம் சொல்வது போல கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஏராளமான பேர் தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கும் நிலையை வைத்தி தீபாவளி போல கொண்டாடுகிறார். அதனால் ஜனாதிபதிகள் மீது வைக்கும் விமரிசனத்தை கொண்டு பொங்கி எழுகிறார்.

கருணை மனுவை கால தாமதாக தள்ளுபடி செய்வதில் குடியரசுத் தலைவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக கூறுவது அபாண்டம், குடியரசுத் தலைவர் பதவி மீதுதான் அரசியல் சாயம் பூசப்படாமல் இருக்கிறது, அதன் மீது சேற்றை வாரி இறைக்க கூடாது என்று பாடம் எடுக்கிறார் வைத்தி.

இந்திரா காந்தி காலம் தொட்டு சோனியா காலம் வரை இடையில் வாஜ்பாயி காலம் உள்ளிட்டு இருந்த குடியரசுத் தலைவர்களெல்லாம் சொக்கத் தங்கமாம். அரசியல் செய்யாத அரிய மாணிக்கங்களாம். இதைக் கேட்டால் பிரியங்கா குழந்தை கூட விழுந்து விழுந்து சிரிக்கும். தங்களது குடும்பத்திற்கு இத்தகைய ரப்பர் ஸ்டாம்ப் அடிமைகள் செய்த சேவைகள் அந்தக் குழந்தைக்குத் தெரியாதா என்ன?

வைத்தி மாமா இன்னும் கொஞ்சம் கூரிய பார்வையுடன் குடியரசுத் தலைவர்களின் யோக்கியதைக்கு சான்று தருகிறார். அதாவது தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் கருணை மனுக்களை விரைந்து முடிவெடுத்தார். அவருக்கு முந்தைய தலைவர்கள் கிடப்பில் போட்டனர். ஏன்? அப்படியாவது அந்த கைதிகளுக்கு வாழ்நாள் கொஞ்சம் நீடிக்கட்டுமே என்ற நப்பாசைதானாம். அப்படி நீட்டி விட்டு இறுதியில் தூக்கு என்று முடிவெடுத்தால் அந்த நீட்டப்பட்ட நாட்கள் இலாபம்தானே என்று பச்சையாக பாயிண்டை முன்வைக்கிறார் வைத்தி. அதாவது வெட்டப்படும் ஆட்டிற்கு தழை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்தால் அந்த அளவிற்காவது ஆடு ஃபிரஷ்ஷாக இருக்குமே, அது இலாபமில்லையா என்கிறார். தேர்ந்த பாசிஸ்டுகள் கூட இப்படி வக்கணையாக யோசிக்க மாட்டார்கள்.

கருணை அரசியலாக்கப்பட்டு விடுமோ என்றுதான் பல தருணங்களில் மேற்கண்ட குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களை நிராகரிக்காமல் காலதாமதமே மேல் என்று நினைத்தார்களாம். அப்படி கருணை உள்ளம் கொண்டு யோசித்தவர்களைத்தான் நாமெல்லாம் நாக்கில் நரம்பே இல்லாமல் விமரிசிக்கிறோமாம்.

சரி, வைத்தி மாமாவின் பார்வையையே எடுத்துக் கொள்வோம்? அப்சல் குருவின் கருணை மனு தாமதத்திற்கு காரணம் காஷ்மீரில் மீண்டும் ஒரு தலைவலியை வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆளும் வர்க்கம் கருதியதே. பின்னர் காஷ்மீரை விட ‘இந்துக்களின்’ ஓட்டு அதிகம் என்பதால் பாஜகவிற்கு போட்டியாக அப்சல் குருவை கொன்றார்கள். மூவர் தூக்கைப் பொறுத்தவரை தமிழகத்தில் நடந்த போர்க்குணமிக்க போராட்டங்களே இத்தனை ஆண்டு தாமதத்தை சாதித்தது. தற்போது அப்சல், கசாப் வழியில் வேறு வழியின்றி மூவர் தூக்கு கருணை மனுவை தள்ளுபடி செய்வதாக ஒரு கணக்கு காண்பித்து பிரணாப் முகர்ஜியை செயல்பட வைத்தது காங்கிரசு அரசின் முடிவு.

இந்த முடிவால் தமிழகத்தில் காங்கிரசு சுத்தமாக துடைத்தெரியப்படும் என்று தெரிந்தும் சோனியாவிற்காகவோ இல்லை இலங்கை அரசை குஷிப்படுத்தவோ மூவர் தூக்கு கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய அரசியல் சதுரங்க ஆட்டத்தையெல்லாம் காந்தி குரங்கு போல கண், காது, வாய்களை மூடிக்கொண்டு காணாமல் போ என்று சொல்லிக் கொடுக்கிறார் வைத்தி.

இறுதியில் இனி யாரும் குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்தார் என்று கூறிக்கொண்டு வழக்கு போட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறார் வைத்தி. ஆனாலும் அந்த எச்சரிக்கையுடன் கூடவே கொஞ்சம் கருணையையும் பிச்சை போல போடுகிறார்.

அதாவது குடியரசுத் தலைவரின் நடத்தைக்கு களங்கம் கற்பிப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றம் மூலமாக மரண தண்டனை கூடாது என்று மாற்றுவது சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார். அதாவது கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரண தண்டனை ஒழிப்பு என்பது இல்லை என்பதால் கும்பலோடு கும்பலாக மரண தண்டனை ஒழிப்பு என்று கோஷம் போடுவதற்கு வைத்தி மாமா வெட்கப்படவில்லை.

ஆனாலும் அடுத்த வரியில் இந்த வெட்கத்தை அவரது விசேடமான பாசிசம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

” ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களுக்கான தூக்கு தண்டனையைக் குறைப்பது கூடாது என்று நாடாளுமன்றம் முழுஆதரவுடன் கருத்து தெரிவிக்குமேயானால், அத்தகைய குற்றவாளிகளுக்கு குடியரசுத் தலைவரும்கூட கருணை வழங்க முடியாது என்பதையும் சட்டப்படி உறுதி செய்துவிட்டால், இத்தகைய சிக்கல் ஏற்படாது. கயிறா? கருணையா? ஏதாவது ஒன்றை விட்டுவிடத்தான் வேண்டும்!”

தினமணிஇதுதான் வைத்தி மாமா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அம்மணமாக ஆடும் இடம்.

அதாவது தமிழக மூவர் போன்ற ‘தேசத்தின் மேல் படையெடுத்தவர்களுக்கு” குடியரசுத் தலைவரே கருணை வழங்க முடியாது என்று நாடாளுமன்றம் மூலம் ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டால் அவரது கவலை முடிவுக்கு வரும். அதன்படி முதலாவதாக இனி யாரும் குடியரசுத் தலைவரை விமரிசிக்க முடியாது, இரண்டாவதாக தேசத்தின் மீது போர் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு தூக்கு நிச்சயம். இதுதான் சோழியன் குடுமி ஆடியதன் இரகசியம்.

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாத தாக்குதலாக இல்லாமல் ஈழத்தமிழர் மீது போரே தொடுத்தவர்கள்தான் ராஜிவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம். இந்த அரசு பயங்கரவாதிகளை காப்பாற்றத்தான் அப்பாவி தமிழக மூவர்களை கொல்ல வேண்டும் என்று குதிக்கிறது வைத்தியின் மனது.

அரசு பயங்கரவாதத்தை ஒரு ஊடக பாசிஸ்டு எப்படி முட்டுக்கொடுப்பார் என்பதை கற்க வேண்டுபவர்கள் உடனடியாக வைத்தி மாமாவிடம் வேலைக்குச் சேருங்கள்! வைத்தி மாமாவின் அருமை பாசிச ஜெயாவுக்கு தெரிந்தது போல இந்திய அரசுக்கு தெரியவில்லையோ என இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தேனொழுக நஞ்சை தயாரிக்கும் லேகியம் வைத்தியிடம் அண்டா அண்டாவாக ஸ்டாக் உள்ளது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !

69

டந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் நகரில், தில்சுக் நகர் எனுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் இறந்துபோனார்கள்; ஏறத்தாழ நூறு பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்பே, இன்னும் சொல்லப்போனால் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்தும் முன்னரே, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காகவே இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும்; இந்தியன் முஜாஹிதீன் என்ற முசுலீம் தீவிரவாத அமைப்புதான் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாகவும்” மைய அரசு, மாநில அரசு, போலீசு, உளவுத் துறை, பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஒரே குரலில் அடித்துக் கூறின.

தில்சுக் நகர்
ஹைதராபாத் தில்சுக் நகரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிக்கும் போலீசு.

ஆனால், இக்குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட பின்னும் இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஒரு துரும்பைக்கூட போலீசாலும் உளவு நிறுவனங்களாலும் காட்ட முடியவில்லை.  இக்குண்டு வெடிப்பு குறித்து தற்பொழுது போலீசிடமும் உளவுத் துறையிடமும் இருப்பதெல்லாம் ஏதாவதொரு முசுலீம் தீவிரவாதி அமைப்பு இக்குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும்தான். இப்படியொரு சந்தேகம் கொள்வதற்குக்கூட அதனிடம் வலுவான ஆதாரங்கள் கிடையாது.  மாறாக, நாடெங்கும் போலீசுத் துறையிடம் ஊறிப்போயுள்ள முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் அடிப்படையிலிருந்து மட்டுமே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீசு மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு அல்ல.   “ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், அது முசுலீம்களின் வேலையாகத்தான் இருக்கும்; அந்த முசுலீம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உத்தரவுப்படிதான் இயங்கியிருக்கும் என்றுதான் தற்பொழுது போலீசு சிந்திப்பதாக” ராமன் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறியிருப்பதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜுவும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

எனினும், ஆந்திர மாநில போலீசோ தனது சந்தேகத்தை மட்டுமே முன்னிறுத்தி இக்குண்டு வெடிப்பு தொடர்பாக பல அப்பாவி முசுலீம் இளைஞர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்த அப்பாவி முசுலீம் இளைஞர்களுள் முப்பத்திரண்டு வயதான முகம்மது ரயீசுதினும் ஒருவர்.

முசுலீம் இளைஞர்கள்
2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முசுலீம் இளைஞர்கள், இந்திய அரசை மன்னிப்புக் கேட்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஆந்திர போலீசார் ரயீசுதினைத் தீவிரவாதி என முத்திரை குத்தி வேட்டையாடுவது இது முதன் முறையல்ல.  2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலும் ரயீசுதின் ஹைதராபாத் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்.  இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றம் அவரைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தது.  பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஆந்திர மாநில அரசு ரயீசுதினுக்கு நட்ட ஈடு வழங்கியது.  ஆனாலும், போலீசு ரயீசுதினைத் தீவிரவாதிகள் பட்டியலில் வைத்தே கண்காணித்து வருகிறது.  ரயீசுதின், தில்சுக் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் காயமடைந்ததையே காரணமாகக் காட்டி, குண்டு வைக்க போனபொழுது அவர் காயமடைந்திருக்கலாம் என்ற கதையைக் கட்டி, அவரைச் சந்தேகத்தின் பேரில் சட்டவிரோதமாகத் தூக்கிச் சென்று விசாரணை நடத்தியது, ஹைதராபாத் போலீசு.

முசுலீம் இளைஞர்களை போலீசு  வேட்டையாட, ஏதாவதொரு குண்டு வெடிப்போ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடக்க வேண்டும் என்ற கட்டாயம்கூட இப்பொழுது அருகிவிட்டது. போலீசும் உளவுத்துறையும் தாங்கள் இயங்கி வருகிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்கே, முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் பீதியைக் கிளப்பிவிடுவதையும்; தாங்கள் கிளப்பிவிடும் பீதியையே ஆதாரமாகக் காட்டி முசுலீம் இளைஞர்களைக் குறிவைத்துத் தூக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

அகமது மிர்ஸா, முத்தி-உர்-ரஹ்மான்
கர்நாடாகா மாநில போலீசாரால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இளம் ஆராய்ச்சியாளர் அய்ஜாஸ் அகமது மிர்ஸா (இடது) மற்றும் பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக்.

பெங்களூரூ நகர போலீசு கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரூ மற்றும் ஹூப்ளியில் 15 முசுலீம் இளைஞர்களை வீடு புகுந்து கைது செய்தது.  பெங்களூரூ போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரா போலீசார் நான்டேட் நகரைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.  “இந்த 19 இளைஞர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொபா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற இரு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்; கர்நாடகாவைச் சேர்ந்த முக்கியமான அரசியல் தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் திட்டத்தோடு இவர்கள் இயங்கி வந்தனர்.  இக்கும்பலைச் சேர்ந்த ஹகீன் ஜமாதார், ஷோயிப் அகமது ஆகிய இருவரையும் நாங்கள் அவர்கள் அறியாமலேயே வேவு பார்த்து வந்தோம்.  இந்த இருவரும் ஆகஸ்டு 29 அன்று கன்னட பிரபா பத்திரிகையைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்ற பத்திரிகையாளரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோது, நாங்கள் இந்த இருவரையும் அமுக்கிப் பிடித்து விசாரித்து, இந்தக் கும்பலின் திட்டத்தை முறியடித்ததோடு, மற்றவர்களையும் கைது செய்தோம்” – என இந்தக் கைதுகள் குறித்து போலீசு ஒரு சுவாரசியமான கதையை அவிழ்த்துவிட்டது.

போலீசால் கைது செய்யப்பட்ட இந்த 19 இளைஞர்களுள் ஒருவரான அஜஸ் அகமது மிர்ஸா இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி அமைப்பில் இளம் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார்; முத்தி-உர்-ரஹ்மான் சித்திக் டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்; இரண்டு இளைஞர்கள் முதுகலை மருத்துவ மாணவர்கள்; மற்றொருவர் கணினிப் பொறியாளர்.

முகமது ரயிசுதீன்
தில்சுக் நகர் குண்டுவெடிப்பு தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முகமது ரயிசுதீன்.

இந்த இளைஞர்கள் அனைவரும் ஒரு மாதம் வரை போலீசு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.  எனினும், இவர்கள் குறித்து போலீசு புனைந்த கதைக்கு எந்தவொரு சிறு ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை.  “இவர்களுக்குச் சர்வதேச முசுலீம் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு கிடையாது; தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டமும் இவர்களிடம் இல்லை” என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு நகர போலீசு தள்ளப்பட்டது.  எனினும், சட்டவிரோதமான முறையில் இந்த இளைஞர்களைக் கைது செய்ததை நியாயப்படுத்துவதற்காக, இந்த இளைஞர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, போலீசு.

கர்நாடகா பா.ஜ.க. அரசு புனைந்துள்ள இந்தப் பொய் வழக்கின் விசாரணையைத் தற்பொழுது மைய அரசின் தேசியப் புலனாவு அமைப்பு நடத்தி வருகிறது.  இந்த 19 இளைஞர்களுள் 15 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான பிறகும் நான்கு இளைஞர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாமல் போனதால், அவர்களைக் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கிறது.

விடுதலையானவர்களுள் இளம் ஆராய்ச்சியாளரான அஜஸ் அகமது மிர்ஸாவும் ஒருவர். அவர் குற்றமற்றவர் என்ற உண்மை ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமான பிறகும்கூட, இந்திய இராணுவம் அவரைத் திரும்ப வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் பிணையில் விடுதலையான அதே நாளில் அவரை வேலையிலிருந்து தூக்கியடித்து விட்டது.

இந்து மதவெறிக் கும்பல் நடத்திய குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள கர்னல் புரோகித் விவகாரத்தில், இந்திய இராணுவம் இதே அளவுகோலைப் பயன்படுத்தவில்லை.  இந்திய இராணுவம் கர்னல் புரோகித்தை இன்னமும் பதவியிலிருந்து விலக்காமல், சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜமாத் இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு.

லியாகத் அலிஷா
டெல்லியில் குண்டு வைக்க வந்த தீவிரவாதி என்று டெல்லி போலீசாராலும்; பாகிஸ்தானிலிருந்து சரண்டைய வந்த முன்னாள் தீவிரவாதி என்று காஷ்மீர் அரசாலும் கூறப்படும் லியாகத் அலிஷா (வட்டத்துக்குள்)

இந்து மதவெறிக் கும்பலின் தளபதியான மோடியின் குஜராத் அரசு மட்டுமல்ல, மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்கூட முசுலீம் தீவிரவாத பீதியைக் கிளப்பி, தம் மனம்போன போக்கில் முசுலீம்களைக் கைது செவதில் மும்மரமாக உள்ளன.  அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் டெல்லி நகரில் குண்டு வைக்கும் நோக்கத்தோடு, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமான முறையில் டெல்லிக்கு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காஷ்மீரியான லியாகத் என்ற தீவிரவாதியைக் கைது செய்ததோடு, “அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்டுப் பல்வேறு வெடிபொருட்களையும் கைப்பற்றியிருப்பதாக” டெல்லி போலீசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரைச் சேர்ந்த லியாகத், பாகிஸ்தானிலிருந்து சரணடையும் நோக்கத்தோடுதான் இந்தியாவிற்கு வந்ததாகவும்; தங்கள் மாநில போலீசு அவர் சரணடைவதற்கு அனுமதித்திருப்பதையும் எடுத்துக் கூறி, டெல்லி போலீசின் பித்தலாட்டத்தை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

போலீசும் உளவுத்துறையும் பரிசு, பதவி உயர்வுக்காகவே இது போன்ற பித்தலாட்டங்களில் ஈடுபட்டு, அப்பாவி முசுலீம்களைக் கைது செய்து, பொய் வழக்குகளில் சிக்க வைத்து வதைத்து வருவது அடுத்தடுத்து அம்பலமாகி வந்தாலும், ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் போலீசின் இந்த அதிகார அத்துமீறல்களைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேச மறுக்கின்றனர்.  முசுலீம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு வருவது குறித்து சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா எழுப்பிய கேள்விக்கு, “மைய அரசிடம் அந்த முசுலீம் இளைஞர்கள் குறித்தெல்லாம் எந்தவிதமான ஆவணப் பதிவுகளும் கிடையாது” எனத் தான்தோன்றித்தனமாகவும் திமிராகவும் பதில் அளித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1994-ஆம் ஆண்டு ஜகந்நாத் பூரி ரத யாத்திரை நடந்த சமயத்தில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 11 முசுலீம்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்த போலீசு அதிகாரிகளைக் கண்டிப்பதற்கு மாறாக, “தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிபுரிந்து வரும் போலீசு அதிகாரிகளின் பதற்றத்தையும், அப்பணியின்பொழுது அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளையும் நீதிமன்றம் புரிந்துகொள்வதாக” அத்தீர்ப்பில் குறிப்பிட்டு, போலீசின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது.

தேசிய மற்றும் உள்ளூர் பத்திரிகைகள் இது போன்ற வழக்குகளில் போலீசின் ஊதுகுழல்களாகவே செயல்பட்டு வருகின்றன.  “ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில், குண்டு வெடிப்பை நடத்துவதற்கு தீவிரவாதிகள் எப்படியெல்லாம் திட்டம் தீட்டினார்கள்” என்றெல்லாம் புலனாய்வு என்ற பெயரில் தெலுங்கு ஊடகங்கள் முசுலீம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை நடத்தியுள்ளன.  பெங்களூரு வழக்கில், “பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக், இராணுவ ஆராய்ச்சியாளர் அஜஸ் அகமது மிர்ஸா ஆகிய இருவர்தான் இந்த நடவடிக்கையின் மூளைகள்” என்றவாறு கன்னட ஊடகங்களால் கதை கட்டப்பட்டன.  அந்த இருவர் மீதும் போலீசால் எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை என்ற உண்மை அம்பலமான பின்னரும்கூட, கன்னட ஊடகங்கள் தங்கள் அவதூறு பிரச்சாரத்திற்கு மன்னிப்புக் கேட்க முன்வரவில்லை.

பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் முசுலீம் வெறுப்பு இந்து மதவெறி பாசிச அரசியலில் ஊறிப் போயிருப்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் அழுந்தச் சொல்லுகின்றன.

– குப்பன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

மறையாது மடியாது நக்சல்பரி…. பாடல்!

3

பாடலில் வரும் உரை:

இது ஜனநாயகம் இல்லை, தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் நடத்தும் சர்வாதிகாரம் என்று நாம் சொன்னோம்.

‘இல்லை, இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று மார்தட்டியவர்கள் ‘ஐயோ, கிரிமினல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதே’ என்று இப்பொழுது மார்பில் அடித்துக் கொள்கிறார்கள். ‘இந்திய ஜனநாயகத்தை சுத்திகரித்து விடலாம்’ என்றும் ஆசை காட்டுகிறார்கள்.

பேசுபவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள், அதாவது பெரிய பெரிய முதலாளிகளின் கையாள்கள். புதிய பொருளாதாரக் கொள்கையை, நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்தத்ததை ஆதரிப்பவர்களும் இந்த அறிவாளிகள்தான். திடீர் பணக்கார அரசியல் ரௌடிகள் பாசிச ஆட்சிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குண்டர் படையாக இருந்து மக்களைத் தாக்கும் போது இவர்கள் தொண்டர் படையாக இருந்து அதை ஆதரிப்பார்கள்.

நக்சல்பரி

ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பையே தகர்த்தெரியாமல் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாது. கட்சிகளை மாற்றுவதால் காரியம் நடக்காது என்பதை நம் சொந்த அனுபவமே நிரூபித்துள்ளது. மிஞ்சியிருப்பது ஒரே பாதை, அது புரட்சிப் பாதை. அன்னிய ஆதிக்கம், பண்ணை ஆதிக்கம், கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம், அனைத்திலிருந்தும் இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்க வல்ல பாதை. அந்தப் பாதையில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் வரையில், புதிய ஜனநாயக இந்தியாவை படைக்கும் வரையில் நக்சல்பாரிகளின் முழக்கம் ஓயாது.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இமயத்தின் அடிவாரத்தில் எழும்பிய அந்த போர் முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்.

பாடல்:

ஏ… தன்னே னான னன்னே, தன்னானே னான னன்னே னானே னன்னே…
நக்சல்பரி, நக்சல்பரி
கோரஸ் : நக்சல்பரி, நக்சல்பரி
மறையாது மடியாது

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
கோரஸ்: கண்ணீரில் தோன்றி, கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
கோரஸ்: செங்கொடி ஏந்தி, செங்கொடி ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
கோரஸ்: திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
இடியாய் பிளந்ததே நக்சல் பரி – மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி

கோரஸ்: நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து
கோரஸ்:
மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து

பறை தட்டி… உழவர் படை கட்டி …
கோரஸ் : பறை தட்டி… உழவர் படை கட்டி …
இந்த பாரெங்கும் பண்ணைகள் மடிகின்ற வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்
கோரஸ் : ஆடும் அரசாங்கம், ஆடும் அரசாங்கம்
மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்
கோரஸ் : நாற்காலி மோகம், நாற்காலி மோகம்
அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
கோரஸ் : அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
அலையாய் எழுந்ததே நக்சல்பரி – அரி
தாரம் கலைத்ததே நக்சல்பரி

கோரஸ்:
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
கோரஸ்: வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
கோரஸ்: புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
கோரஸ்: இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
அடி வேரோடு பூவோடு பிடுங்கிடும் வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்
கோரஸ் : நாடாளுமன்றம், நாடாளுமன்றம்
பொது நீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்
கோரஸ் : அது நீதி மன்றம், அது நீதி மன்றம்
வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
கோரஸ் : வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
எதிர்கொண்டு நின்றதே நக்சல் பரி – மக்கள்
இதயத்தை வென்றதே நக்சல் பரி

கோரஸ் :
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
கோரஸ் : எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
கோரஸ் : விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
கோரஸ் : தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
அது முன்னேறும் முன்னேறும் விடிகின்ற வரையில்.

கோரஸ்
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
____________________

க்கள் கலை இலக்கிய கழகத்தின்’அண்ணன் வர்றாரு’ பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற ‘மறையாது மடியாது நக்சல்பரி’ என்ற பாடல். ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

___________

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

95
முதலாளித்துவம்
முதலாளித்துவ நியாயம்.

“பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான், அது போல பணம் இருக்கிறவன் காபி ஷாப்பில் காபி சாப்பிடுவான், 7 நட்சத்திர ஹோட்டலில் தண்ணி அடிப்பான், வேலியிட்ட குடியிருப்பில் வீடு வாங்குவான், அப்பல்லோவில் சிகிச்சை பார்த்துப்பான்.’ அதைப் பார்த்து ஏன் பொறாமைப்படுறீங்க?”

‘யாருக்கு பொருட்களும் சேவைகளும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களின் பதில் இதுதான்.

ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலாளித்துவ கனவு உலகத்தில், ஐடியல் சந்தை பொருளாதாரம் செயல்படும் ‘பூலோக சொர்க்கத்தில்’, மருந்து வாங்குவதற்கு அவர் மாதம் ரூ 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும். அதாவது கிலிவெக் என்ற பெயரில் நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு ரூ 18 லட்சம் செலவழிக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 90 லட்சம், 10 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 1.8 கோடி.

இவ்வளவு பணத்தை யார் செலவழிக்க முடியும்? அந்தப் பணம் எப்படி வந்திருக்கும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ‘நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை’, அதனால் நாயையோ, பேயையோ விற்று பணம் குவித்த முதலாளிகளுக்கு மட்டும்தான் வாழும் உரிமை இருக்கும்.

‘அப்படி பணம் குவித்திருக்காதவர்கள் செத்து விட வேண்டியதுதான். அவ்வளவு பணம் சம்பாதிக்க வக்கில்லாத ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பலன்’ என்கிறது முதலாளித்துவம்.

“உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருத்த செலவாகிறது. கண்டு பிடித்த மருந்துகளை மருந்தகங்களில் பரிசோதனை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை கழகங்களிடம் ஒப்புதல் வாங்க இன்னும் பெரும் தொகை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்த மருந்தை அதிக விலைக்கு விற்றால்தான் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பணம் கிடைக்கும்” என்ற வாதத்தின் அடிப்படையில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளில் காப்புரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய மருந்தை முதலில் கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனத்துக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்பதற்கு 20 ஆண்டுகள் தனி உரிமை கொடுக்கப்படுகிறது. கண்டுபிடித்த நிறுவனத்தின் அனுமதி இன்றி மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை நகல் செய்து உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றம்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் உழைப்பின் பலன்கள்; ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் வந்த ஆயிரக்கணக்கான முன்னோடிகளின் தோள்களின் மீது நின்றுதான் புதிய அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்பது நோவார்டிஸ் கம்பெனியின் கிணற்றுக்குள்ளோ, ஒரு தனிநபர் வீட்டு புழக்கடையிலோ விளைவதில்லை. உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒட்டு மொத்த உலகும் சேர்ந்து ஆதரிப்பதுதான் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி; எந்த தனிப்பட்ட நிறுவனமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது மேற்கத்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் படி அறிவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டுமானால், மனித குலத்தின் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எந்த ஆதாயமும் பெறாத ஒரு குழுவை நிறுவனம் உருவாக்க வேண்டும்.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், ‘தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அறிவியலை வளர்த்துச் செல்ல முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முறையின் முட்டாள்தனம் விரிவாக விவாதிக்கப்பபட வேண்டிய விஷயம். இங்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு தொடர்பான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டு உரிமைகளை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.

காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புரிமை காலாவதி ஆன பிறகு, மற்ற நிறுவனங்களும் உற்பத்தியில் நுழைய விலை 20-ல் ஒரு பங்காக வீழ்ந்து விடுகிறது.

ஆனால், இந்தியாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயற்றபட்ட இந்திய காப்புரிமை சட்டம் 1970 வித்தியாசமாக இருந்தது. மருந்து பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவது சட்டத்தில் இல்லை. மாறாக, மருந்தை உற்பத்தி செய்யும் முறைக்குத்தான் காப்புரிமை வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். இதன்படி பன்னாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை மாற்று முறையில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து அதே மருந்தை பல மடங்கு குறைந்த செலவில் சந்தைப் படுத்த முடிந்தது. இப்படி உருவாக்கப்பட்ட மருந்துகள் அடிப்படை மருந்துகள் (generics) என்று அழைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கத்திய நிறுவனங்களின் மருந்து விலைகள் கட்டுப்படியாகாத மக்கள் கோடிக்கணக்கான பேர் பலன் பெற்றார்கள்.

1990களுக்குப் பிறகான ஒற்றைத் துருவ மேலாதிக்க உலகில் ‘ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அமெரிக்கா வைப்பதுதான் சட்டம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ‘அப்படி உலகப் பொருளாதாரத்தோடு இரண்டற கலந்து விடா விட்டால் நாட்டில் சோறு, தண்ணீர் கிடைப்பது நின்று போகும்; குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இறந்து போவார்கள்; பள்ளிக் கூடங்கள் நடப்பது நின்று போகும்; மருத்துவமனைகள் செயலிழந்து விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்திலும் (TRIPS) இந்திய அரசு கையெழுத்திட வைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியாவின் காப்புரிமை சட்டம் 1999, 2002, 2005, 2006 ஆண்டுகளில் மாற்றப்பட்டது. இனிமேலும் புதிய நிபந்தனைகள் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் போது அவற்றிற்கு ஏற்ப சட்டம் மாற்றப்படும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

இந்த திருத்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன செல்லுபடியாகுமோ அதுதான் இந்தியாவிலும் செல்லுபடியாகும். ‘மருந்து நிறுவனங்களுக்கு மருந்து மீதான காப்புரிமை வழங்கப்பட வேண்டும், அதுவும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படை வடிவிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாது.’

இதன் விளைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய மருந்து நிறுவனங்கள் ரான்பாக்ஸி, பிரமல், மேட்ரிக்ஸ் லேப், ஆர்சிட் நிறுவனத்தின் ஒரு பிரிவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் என்று வரிசையாக பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன.

இனிமேல் புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் வைப்பதுதான் விலை. அதற்கான காப்புரிமையை இந்திய அரசு வழங்கியே தீர வேண்டும். இனிமேல் மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிலைமையை இம்மியளவு கூட மாற்றி விடவில்லை. அமெரிக்க காப்புரிமை சட்டங்களை வளைத்து விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு உத்தியை மட்டும் இந்தியாவில் தடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.

நோய் பற்றி ஆராய்ச்சி செய்வது, அதற்கான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது, அதற்கான பரிசோதனைகளை நடத்துவது என்று நீண்ட முயற்சிக்குப் பிறகு லாபம் கிடைப்பதை முதலாளிகளின் லாப வேட்கை சகித்துக் கொள்ளப் போவதில்லை. குறுக்கு வழியில் லாபத்தை பெருக்க கண்டு பிடித்த வழிகளில் ஒன்றுதான் “என்றென்றும் பசுமை” என்ற முறை. அதாவது ஒரு மருந்தின் மூலம் என்றென்றும் லாப அறுவடை செய்யும் வழிமுறை.

மருந்தின் 20 ஆண்டு கால காப்புரிமை காலாவதி ஆவதற்கு முன்பு அந்த மருந்தின் உள்ளடக்கத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்து புதிதாக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள். ‘இந்த மாற்றத்தினால் நோய்க்கான சிகிச்சை பல மடங்கு மேம்பட்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்வார்கள். ஒரிஜினல் மருந்துக்கும் ‘புதிய’ மருந்துக்கும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை கிடைத்து விடும்.

கிலிவெக் மருந்தின் காப்புரிமை காலம் முடியப் போகிறது. சென்ற ஆண்டு மட்டும் நோவார்டிஸ் $8.5 பில்லியன் மதிப்பிலான கிலிவெக் மருந்துகளை உலகம் முழுக்க விற்றிருக்கிறது. அந்த ஏகபோக சந்தை வருமானத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கிலிவெக் மருந்தில் அப்படி ஒரு மாற்றம் செய்து இமதினிப் மெசிலேட் என்ற வேதி சேர்மத்துக்கான காப்புரிமைக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது நோவார்டிஸ்.

சென்னை அலுவலகம் அந்த விண்ணப்பத்தை 2006-ம் ஆண்டு நிராகரித்து விட்டது. ‘இந்திய காப்புரிமை சட்டம் (2005)ன் பிரிவு 3(d)ன் படி அப்படி சிறு அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை’ என்று சொல்லி விட்டது.

அதை எதிர்த்து நோவார்டிஸ் சென்னை உயர் நீதி மன்றம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுக் கழகம் இவற்றில் மேல் முறையீடு செய்து இறுதியாக ஆகஸ்ட் 2009-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு வந்தது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ‘சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் முடிவு சரியானதுதான், நோவார்டிஸூக்கு கிலிவெக் மருந்தில் சிறிதளவு செய்த மாற்றத்தின் அடிப்படையில் காப்புரிமை வழங்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஆனால், இதே அடிப்படையில் சீனா, ரஷ்யா, தாய்வான் உட்பட 40 நாடுகளில் நோவார்டிஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் காப்புரிமை பெறுவதற்கான தடைகளை தகர்த்தெறிவதற்கு முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மன்மோகன் சிங் - ஏஞ்சலா மெர்கல்
மன்மோகன் சிங் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உடன்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே ‘இனிமேல் இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் வருவதே குறைந்து போகும்’ என்று எச்சரித்தார் நோவார்டிஸ் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் ஷாஹானி. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இப்போது ஜெர்மனிக்கு காவடி தூக்கிக் கொண்டு போயிருக்கும் மன்மோகன் சிங், ‘இது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஜெர்மனி வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லுடனான மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது. அந்த ஒப்பந்தத்தில் அறிவு சார் சொத்துரிமையில் உலக வர்த்தக நிறுவன பொறுப்புகளை விட உறுதியான சட்டங்களை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

இந்திய நீதித் துறையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கா விட்டால், சட்டத்தையே மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” என 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை’ என்று பிரகடனம் செய்து, ‘அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொல்கிறார்.

அதன்படி, இந்த ஆண்டு இல்லா விட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்குள், காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் இல்லா விட்டால் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் அசௌகரியங்கள் நீக்கப்பட்டு தடையின்றி அன்னிய மூலதனம் இந்தியாவிற்குள் பாய்வதற்கான மடை வெட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் சாதாரண மக்களுக்கு அடிமை வாழ்வும் உறுதி.

– அப்துல்

மேலும் படிக்க
HIV cancer patients seek access to affordable medicines
A Just order
Top three MNC pharma companies Novartis, Pfizer and Abott lose 10 in 2013
Novartis loses Indian Glivec patent case
Novartis denied cancer drug paten

தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

21

விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கு ஒரு அவசரக் கடிதம்

______________________________________________________________________________________________________________________

ஜெயபாரதம்

அயோத்தியில் ராமனுக்கு                                                                                                        ஆலயம் அமைப்போம்

பூஜ்ய ஸ்ரீ அஷோக் ஷிங்கால்ஜி அவர்களின் சமூகத்திற்கு
ராமஸ்வாமியின் பணிவான விக்ஞாபனம்:

ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியைப் பார்த்தேன். ஸ்ரீராமனின் ஜென்மபூமியைக் கண்டு பிடித்ததுடன், பரதன் பாதுகையைப் பெற்ற மரத்தடியையும் நீங்கள் கண்டு பிடித்து விட்டது பற்றி ரொம்ப ஸந்தோஷம். இந்த மரத்தடியை முஸல்மான்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. போகட்டும். இங்கே தமிழ்நாட்டில் நம்மவா ஆட்சிதான் என்றாலும் அவ்வப்போது மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடிய கார்யங்கள் நடக்காமலில்லை. நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

குஷ்பு
இந்து கடவுள் படங்கள் கொண்ட சேலையை அணிந்தார் என்று தமிழகத்து ஸ்ரீராம் சேனாவான இந்து மக்கள் கட்சி குஷ்புவை எதிர்த்தது.

ஸமீபத்தில் மதறாஸ் ‘குமரன் சில்க்ஸ்’ கடையில் என் பெண்ணுக்கு பட்டுப்புடவை வாங்கப் போயிருந்தேன். இந்த வருஷ தீபாவளிக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புடவைக்கு ‘குஷ்பு சேலை‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் நான் கடையைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். கடை முதலாளியும் ஹிந்துதான் என்பதை சொல்லத்தேவையில்லை. இங்கே திரும்பின இடமெல்லாம் குஷ்பு வளையல், குஷ்பு பொட்டு, பொட்டுக்கும் குஷ்புவுக்கும் என்ன ஸம்பந்தம்? கேட்க சகிக்கவில்லை. அதிகம் சொல்வானேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் என் கடைசிப் பையன் கூட நோட்டுப் புஸ்தகத்துக்குள் இந்தப் பிசாசின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த குஷ்பு என்பவள் தமிழ் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை. இருந்து விட்டுப் போகட்டுமே என்று அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். அவள் ஒரு முஸ்லீம். அவளுடைய உண்மைப் பெயர் நக்கத். பம்பாய்க்காரியாம். இந்துவா முஸ்லீமா என்று கண்டு பிடிக்க முடியாதபடி குஷ்பு என்று வேண்டுமென்றே ஈரெட்டாக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தையே நான் தற்செயலாக ஒரு சினிமா பத்திரிகையைப்பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ‘ஹிந்துவே விழிப்புணர்வுகொள்’ என்று சொல்லிக்கொண்டு நம் பத்திரிகைகள் தூங்குகின்றன.

ஹிந்து சமுதாயத்துக்கு ஏன்தான் இப்படி புத்திகெட்டுப் போனதோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி பந்தலில் ‘கூந்தலிலே என்ன பூ குஷ்பு’ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன். நம்மவாளே சினிமாவில் இப்படி பாட்டு போடும்போது நாம் அவனை எப்படி கேட்க முடியும்? பாலசந்தர், மணிரத்தனம், விசு, ஜீவி இவாளுக்கெல்லாம் நீங்களாவது சொல்ல வேணும். இல்லையானால் ஆசாரிய சுவாமிகளையாவது இதில் தலையிட்டு அவாளுக்கு புத்தி சொல்லச் சொல்லவும். இப்படியெல்லாம் எழுதுவதால் லெளகிக நிலைமை புரியதாவன் என்று என்னை எடைபோட்டு விட வேண்டாம்.

இன்றைக்கு ஸினிமாதான் எல்லாம் என்று ஆனபிறகு நாமும் இறங்கி ஒருகை பார்த்துவிட வேண்டியதுதான். இந்த அகண்ட ஹிந்து தேசத்தில் ஹிந்து பெண்களுக்கா பஞ்சம்? நமக்கு பாரம்பர்யம்தான் இல்லையா? ரம்பை, ஊர்வசியென்ன, திலோத்தமையென்ன, அப்ஸரஸ் ஸ்திரீகள் என்ன…. ஆனானபட்ட விஸ்வாமித்ரனையே வழிக்குக் கொண்டுவந்த மேனகை பிறந்த பூமியல்லவா இது. அந்த காலத்தில் ஆலயங்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தன. இப்போ எல்லாமே ஸினிமா கொட்டகைதான். சிற்பிகளும் இப்போது சுவாரசியமில்லை.

தமிழ் பார்ப்பனர்போன எலக்ஷனில் சத்ருக்னன் சின்ஹா மாதிரி ஹிந்து நடிகர்களை ஈடுபடுத்தியதிலிருந்து நீங்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் லக்ஷணமான ஸ்திரீகள் இல்லாத பக்ஷத்தில் ஹிந்து தர்மத்தின்பால் வாலிபர்களை ஈர்ப்பது கஷ்டம். உமாபாரதியெல்லாம் இதற்கு லாயக்கில்லை. ஜீ.வியிடம் இந்த விஷயத்தை நீங்கள் காதில் போட்டுவிட்டால் போதும். ஆக வேண்டியதை பார்த்துக்கொள்வார்.

ஏதோ ஒரு அலையில் நம்மவா ஆட்சி இங்கே வந்துவிட்டது. ஆனால் அடுத்த வேர்தலில் இந்த ராக்ஷஸி (குஷ்பு) போட்டி போட்டால் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எனக்கு இன்னொரு ஸம்சயமும் உண்டு. தமிழ்நாட்டைத் துண்டாட பாகிஸ்தான் நடத்தும் சதியாகவும் இது இருக்கலாம். வடக்கே காஷ்மீரில் ஏ.கே.47ஐக் கொடுப்பவன், தெற்கே மோகனாஸ்திரத்தை ஏவுகிறான். இதில் கருணாநிதியும் உள்கையாக இருக்கலாம். எதற்கும் நீங்கள் பிரதமர் காதில் இதைப் போட்டுவைக்கவும்.

ராமஜன்ம பூமி விஷயமே இன்னும் முடியாத போது இப்போதைக்கு இதை பெரிய விஷயமாக கிளப்புவது நமது கக்ஷிக்கு உசிதமில்லை. தமிழ்நாட்டுக்கு கோவிந்தாசார்யாவை அனுப்பியிருக்கிறீர்கள். விஷயத்தை அவரிடம் விட்டுவிட்டால் பிரமாதமாக கவனித்துவிடுவார். குறைந்த பக்ஷம் ஹிந்து தயாரிப்பாளர்கள் ஹிந்து நடிகைகளைப் போட்டு படம் எடுக்க வேண்டும் என்று பிரச்சாரத்தைக் கிளப்பினாலே இந்த சனியனை சீக்கிரம் ஒழித்து விடலாம். எப்படியோ இந்த முஸல்மான் மோகினியிடமிருந்து ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற பகவான் அருள் பாலிக்கட்டும். ஜெய் சியாராம்.

அனந்தகோடி நமஸ்காரங்களுடன்
ராமஸ்வாமி (ஐயர்)

பின் குறிப்பு: ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியை இண்டியன் எக்ஸ்பிரஸ் 10-ம் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். தலைப்பு செய்தியாகப் போடாவிட்டாலும் முதல் பக்கத்திலாவது போடக்கூடாதா? பாதுகையை ‘ஸ்லிப்பர்’னு இங்கிலீஷில் மொழி பெயர்த்து எழுதறாள். இதெல்லாம் ரொம்ப அநியாயம். சம்பந்தப்பட்டவாளிடம் சொல்லி கவனிக்கச் சொல்லவும்.

___________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1992

____________________________________________

அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

162

ஹியுகோ சாவேஸ்

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.

“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

சாவேஸ் இறப்பு துயரம்
தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

சாவேஸ்

1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

சாவேஸ் இறுதி ஊர்வலம்
பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாவேஸின் இறுதி ஊர்வலம்.

நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

வெனிசுலா மருத்துவத் துறை
இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார். கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் வெனிசுலாவின் ஏழைக் குழந்தைகள் (கோப்புப் படம்).

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

வெனிசுலா ஆட்சிக் கவிழ்ப்பு
அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

மாதுரோ
வெனிசுலாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாவேஸின் உற்ற தோழர் நிக்கோலஸ் மாதுரோ.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

– சூரியன்

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

பிட்சா, பர்கர் தொழிலாளி என்றால் இளப்பமா?

2

துரித உணவு ஊழியர்கள்

மெரிக்காவில் இயங்கும் தனியார் துரித உணவகங்களின் ஆண்டு லாபம் உயர்ந்து கொண்டே போக அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசமாக உள்ளது. இதை எதிர்த்து பல்வேறு துரித உணவகங்களின் ஊழியர்கள் ஒன்று திரண்டு சங்கம் அமைத்து, ஊதிய உயர்வு கோரி அடையாள வேலை நிறுத்த போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எதிர்த்துப் போராடும் பல்வேறு துரித உணவகங்கள் இந்தியாவில் சமீப காலமாக கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.

“போதும், நான் சோர்ந்து போய் விட்டேன், கடந்த பல ஆண்டுகளாக அதே சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறேன், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது, நிறுவனத்தின் லாபம் விண்ணைத் தொடுகிறது ஆனால் என் சம்பளம் அப்படியே தான் இருகிறது. வேலை நிறுத்தம்தான் ஒரே வழி ” என்று குமுறுகிறார் பிரபல துரித உணவு விற்பனை நிறுவனமான பர்கர் கிங்ஙில் வேலை செய்யும் தபிதா.

கடந்த வியாழன் அன்று (ஏப்ரல் 4, 2013) சுமார் 60 துரித உணவகங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தமக்குள் சங்கம் ஒன்றை அமைத்து நியூயார்க் நகரில் பல்வேறு இடங்களில அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக பஙகேற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை செய்யப்பட்ட நாளில் இந்த அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

“குறைந்த பட்ச ஊதியம் ஒரு மணி நேரத்துக்கு $15 டாலராக உயர வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமெரிக்காவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் வேகமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை துரித உணவகங்கள். இன்று இந்தியாவில் கூட இவை   காளான்கள் போல் முளைத்து விட்டன. மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, டாமினோஸ், பீட்சா ஹட், பீட்சா கார்னர், டாகோ பெல் என்று துரித உணவகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களது ஆண்டு வருமானமும் பல கோடி டாலர்களை கடந்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்யும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசம்.

துரித உணவு பலகை

இந்த உணவகங்களில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு  $7.25 ( சுமார் ரூ 370 ) வரை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்று வைத்துக்கொண்டாலும், வாரத்திற்கு ஏழு நாள் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தால் மாதத்திற்கு ரூ 82,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் நியூயார்க் போன்ற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் வசிப்பதற்கு நகரத்திற்கு பல மைல் வெளியிலிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே மாத வாடகை மாத்திரம் சுமார் ரூ 1 லட்சம் முதல் ரூ 1.50 லட்சம் வரை ஆகிறது.

எட்டு மணிநேரம் இடை விடாத வேலை, மூன்று ஆள் வேலை வரை ஒருவரே பார்க்க வேண்டும், எந்நேரமும் வேலை பறி போகலாம். வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்பச் செலவு, போக்குவரத்துச் செலவு, மருத்துவக் காப்பீட்டு கட்டணம் என அனைத்தையும் ஊழியரே தன் சம்பளத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல நேரம் ஊழியர்கள் பணம் போதாமல், உணவை   தவிர்ப்பது, பல மைல்கள் நடந்தே பணிக்கு வருவது, பல நோய்களுக்கு மருத்துவமனை செல்லாமல் இருப்பது என தங்கள் செலவுகளை கட்டுப் படுத்துகிறார்கள். யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?

மாறாக நிறுவனங்களின் லாபமோ கொள்ளையாக உயர்ந்து வருகிறது. மெக்டொனல்ட்ஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் உயர்ந்து சுமார் $2.6 பில்லியனை ( ரூ 13 ஆயிரம் கோடி ) எட்டியுள்ளது. பர்கர் கிங் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிக லாபம ஈட்டியுள்ளது. கேஎஃப்சி, பிட்சா ஹட், டாகோ பெல் நிறுவனங்கள் 2011 -ம் ஆண்டு $1.3 பில்லியன் லாபம் ஈட்டின. ஆனால் டாகொ பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜோசப்பிற்கோ ஒரு மணி நேரத்திற்கு $7.25 தான் சம்பளமாக கிடைக்கிறது. இதே நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தன் 15 வயதில் சேரும் போது அவர் வாங்கிய சம்பளம் $7.10. கடந்த 6 ஆண்டுகளில் சூப்பர்வைசராக பதவி உயர்வும் பெற்றுள்ள அவரது சம்பளம் வெறும் $0.15 தான்   உயர்ந்துள்ளது.

1968 -ல் $1.60 ஆக இருந்த குறைந்த கூலியின் இன்றைய டாலர் மதிப்பு $11. ஆனால் 2013 -ல் அது $7.25 ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதாவது 45 ஆண்டுகளில் கூலி 50% வீழ்ச்சியடைந்திருக்கிறது.

பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், அகதிகளாக வரும் வெளிநாட்டினர்.  கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த உதிரி தொழிலாளர்களும் சேர்ந்துக் கொள்ள, நிறுவனங்கள் மனித வேட்டையில் திக்கு முக்காடி போயின. சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். அவருக்கு பதிலாக வேலையில் புதிதாக சேருபவர் சில ஆண்டுகள் கழித்து சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். இது தான் ஊழியர்களின் அவல நிலை.

இந்த நிலையை சாக்காக வைத்து நிறுவனங்கள் வேலையை மும்மடங்கு அதிகரித்து விட்டன. அதனால் இரண்டு ஆள் சம்பளம் நிறுவனத்திற்கு லாபம். இப்பொழுது புரிகிறதா கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் லாப உயர்வுக்கு காரணம் ?

ஊழியர் போராட்டம்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊழியர்கள், சங்கம் அமைத்தனர். கடந்த வியாழன் அன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தால் பல நிறுவனங்கள்   தாமதமாக கடையை திறக்க வேணடிய நிலை ஏற்பட்டது. நேரடியாக அந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஊழியர்களே எதிர்பாரா விதமாக பல்வேறு சங்கங்கள், இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தன.

மக்கள் முன் தங்கள் நிலையையும், கோரிக்கையையும் புரிய வைக்க இவர்கள் “துரித உணவு முன்செல்க” என்ற வலைத்தளம் ஒன்று துவங்கியதுடன், பல்வேறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்னர்.

வேலை நிறுத்தம் செய்தால் வேலை போய்விடும் என்று தெரிந்தாலும், தற்போதைய தங்கள் மோசமான வாழ்கையினால் விரக்தியுற்றிருக்கும் இவர்கள் போராடி பார்த்துவிடுவது என்று முடிவுடன் இருக்கிறார்கள். அடையாள வேலை நிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் நிறுவனத்திற்கு போனால் தாங்கள் மிக மோசமாக நடத்தப்படுவோம் என்று அவர்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது ஆனால், அவர்கள் கோரிக்கையை கேட்க மறுத்து   வந்த நிறுவனங்களின் செவிகளை அதிர செய்திருக்கிறார்கள்.

1980 களில் ரீகன் காலத்தில் பணி நீக்கம் என்று பயமுறுத்தி ஊழியர்கள் மத்தியிலான போராட்டங்கள் அடக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்த விமான கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களை ரீகன் வேலை நீக்கம் செய்து ‘ வரலாறு ‘ படைத்தார். ஆனால் தொழிலாளர்களின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

சிகாகோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், வால்மார்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தம், நியூயார்க் குப்பை அள்ளும் ஊழியர்களின் வேலை நிறுத்தம், வால்வீதி ஆக்கிரமிப்பு போரட்டங்கள், இப்பொழுது துரித உணவு ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் என அனைத்து போராட்டங்களும் ஊழியர்களால் தனியார் நிறுவன்ங்களை எதிர்த்து நடத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தனியார்மயத்தையே எதிர்த்து நடக்கின்றன. தங்கள் எதிரியை கண்டுணர்ந்து அவனை எச்சரிக்கும் போராட்டங்கள் இவை. வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியவை.

நம் நாட்டிலும் வால்மார்ட் முதல் மெக்டானால்ட் வரை பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் வருகை, ‘வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வளம் பெருகும், தனிநபர் வருமானம் உயரும்’ என பல கவர்ச்சி வாசகங்களைச் சுமந்து வருகிறது. ஓரளவு ஊழியர்கள் நலச் சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்க போன்ற நாட்டிலேயே ஊழியர்களை கடுமையாக சுரண்டும் இந்நிறுவனங்கள், மிக மோசமான ஊழியர் நடை முறை சட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில் ஆடப் போகும் ருத்ர தாண்டவத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் நடந்துவரும் இந்த வேலை நிறுத்த போரடடங்கள் ஒரு நல்ல துவக்கம்.

சோவியத் புரட்சியின் 10 -ம் ஆண்டை நினைவு கூற சோவியத் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரபல திரைப்பட இயக்குனரான ஐசன்ஸ்டீன் மூன்று படங்களை இயக்கி கொடுத்தார். சோவியத் புரட்சிக்கு வித்தாக அவர் எடுத்த முதல் படம் “ ஸ்ட்ரைக் ”. ஆம், எண்ணற்ற தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் தான் புரட்சியின உந்துசக்தியாக, விதைகளாக இருந்தன.

அந்த வகையில் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் தொழிலாள்ர்களின் இந்த வேலை நிறுத்தங்கள் தனியுடமை முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கு சாவு மணியடிக்கட்டும்.

மேலும் படிக்க
I am loving it. NYC fast food workers take to streets
Fast Food Forward
Average rent in New York
Fast food workers plan surprise strike
Fast food workers strike citing low wages

மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!

2
உச்சநீதி மன்றம்
உச்சநீதி மன்றம்

தூத்துக்குடியில் கடந்த 16 ஆண்டுகளாக நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் குற்றங்களுக்கெல்லாம் கண்துடைப்பு தண்டனையாக ரூ 100 கோடி அபராதம் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஏ கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.

‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவதற்காக ஸ்டெர்லைட் பொய்யான தகவல்களை தந்ததும், தகவல்களை மறைத்ததும் உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கா விட்டால் அது தொழிற்சாலையை மூடுவதில் முடிந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட்டின் அந்த குற்றத்தை மன்னித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறது’ என்று சவடாலாக உறுமியிருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

‘ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்’ என்று ‘பாலியல் வல்லுறவு செய்த மைனர் அபராதம் செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்’ என்ற  ஆலமரத்து சொம்பு நாட்டாமையைப் போல தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஸ்டெர்லைட்2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே. ஸ்டெர்லைட்டின் மொத்த விற்பனை வருமானத்தில் 0.48% பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களின் உடல் நலத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

சென்ற நிதியாண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய ரூ 960 கோடி கலால் வரியையும், சுமார் ரூ 550 கோடி வருமான வரியையும் முழுவதுமாக செலவிட்டால் கூட நிலங்களுக்கும், கடல் வளங்களுக்கும், மக்களின் உடல் நலத்துக்கும் இந்த ஆலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் செய்வது சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.

சமூகத்துக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்ற ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில்ல் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது.

ராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.

அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட்டை இரு கரம் நீட்டி வரவேற்று 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களும், உழைக்கும் மக்களும், சில கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகில் உள்ள குருசடி தீவில் பவளப் பாறைகள். (படம் உதவி : பிரண்ட்லைன்

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் கொடுத்த பொய்யான தகவல்களையும், உண்மை நிலவரங்களை திரித்து கூறியதையும் அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து ஆலை தொடர்ந்து இயங்க வழி வகுத்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இழுத்தடித்த வாதங்களுக்குப் பிறகு 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் தாமிர தேவைக்காக ஸ்டெர்லைட் தொண்டு செய்கிறது என்பது ஆதாரமற்ற வாதம். 1992-ல் இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்தது. இப்போது இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரமும் தாமிரப் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.

தாமிர உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஏன் இந்தியாவில் இடம் பெயர்ந்தன?   வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

மாசு உருவாவதையும், வெளியாவதையும் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கோ, உருவான மாசை தூய்மைப் படுத்துவதற்கோ பணம் செலவழிக்காமல் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் முதலாளிகளும், வாங்கி பயன்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளி, நீர், நில மாசுகளை தொடர்ந்து வெளியேற்றி தமது சுரண்டலையும் கொள்ளை லாபம் ஈட்டலையும் தொடர்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஏற்பட்ட கந்தக டை ஆக்ஸைடு கசிவினால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தீவிரமடைந்த எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் ஸ்டெர்லைட்டின் மேல் முறையீட்டை பசுமை வாரியம் விசாரித்து வருகிறது.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் அழித்தொழித்த நொய்யல் ஆற்றையும் அவற்றால் பாழாக்கப்பட்ட சார்ந்த விளைநிலங்களையும் வேலூர் மாவட்டத்தில் தோல் பட்டறைகளால் பாழடிக்கப்பட்ட விளைநிலங்களையும் நீர் ஆதாரங்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்கள் காட்டுவதில்லை.

உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளை இணைத்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு குறைந்த செலவிலும் மக்களுக்கு அதிக பாதிப்பிலும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டி கொழுக்கின்றனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் அதன் மூலம் மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு பாயைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தமது கொள்ளையைத் தொடர நகர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அழிவுகளின் விளைவுகளை மக்கள் சுமக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் அமைச்சகம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ம.தி.மு.க.வின் வழக்குகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகளை அத்தகைய தொழில் செய்யும் முறையின் சைட் ஷோக்களாகவே கருதி தமது சுரண்டலை தொடர்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

இதில் ஸ்டெர்லைட்டை கொண்டு வந்த ஜெயலலிதா தற்போதைய இடைக்காலத் தடை மூலம் போற்றப்படுகிறார். போராடும் மக்களை திசைதிருப்பும் இந்த ஏமாற்று நடவடிக்கையை பலரும் ஆதரிக்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் நடந்து வரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் மக்களை மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் அழிக்கின்றன என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை ஒரு துலக்கமான சான்று.

– செழியன்.

மேலும் படிக்க
For Sterlite it’s crisis situation once again
SC slaps Rs 100 Cr penalty on Sterlite for pollution
Government orders closure of Sterlite Copper smelter
Sterlite Industries’ copper smelter ignites toxic debate
Sterlite case, the unforseen part
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
Sterlite Annual Report 2011-12
Indian copper industry – 1
Indian copper industry – 2
World copper industry

விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!

0

க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பருவ ஆட்சியில், அக்கூட்டணி அரசு 2008-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபொழுது, 2009-ஆம் ஆண்டு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து,  விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இத்திட்டத்திற்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கவுள்ளதாகக் கூறிய அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “விவசாயிகளுக்கு இந்நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்” என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஆந்திர விவசாயிகள்
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் சடலங்களைக் கண்டு கதறும் உறவினர்கள் (கோப்புப் படம்).

இக்கடன் திட்டத்தால் ஏறத்தாழ 3.45 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் எனக் கூறப்பட்டாலும், சிறு-குறு விவசாயிகள் அனைவரும் இக்கடன் தள்ளுபடியைப் பெற முடியாதபடியும், விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதும் தள்ளுபடி ஆகிவிடாதபடியும், இந்நிவாரணத் திட்டம் நரித்தனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

“ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இக்கடன் நிவாரணத் திட்டம் பொருந்தும்; 50,000 ரூபாய் வரையிலும் கடன் பெற்ற விவசாயிகள் மட்டும்தான் முழுத் தள்ளுபடி கோர முடியும்.  50,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள், தாம் வாங்கிய கடனில் 75 சதவீதத்தை ஜூன் 30, 2010-க்குள்  திருப்பிச் செலுத்தியிருந்தால், மீதி 25 சதவீதக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோர முடியும்.  இந்த 25 சதவீத தள்ளுபடியும் இருபதாயிரம் ரூபாய் என்ற வரம்பைத் தாண்டாது” என்றவாறு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  அதேசமயம், ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள்  ரூ. 1 இலட்சம் வரையிலும்; கோழிப்பண்ணை, பால்பண்ணை நடத்துவோர் மற்றும் சுய உதவிக் குழுக்களும் இக்கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறத் தகுதி வாய்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஏறுக்குமாறான விதிகளின் காரணமாக, நாட்டிலேயே விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகமாக நடந்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விதர்பா பகுதி பருத்தி விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடியால் எந்தவிதமான பலனும் கிடைக்காது என்று இத்திட்டம் அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன.

விவசாய கடன்கள்

கடன் தள்ளுபடித் திட்டத்தின் இவ்வர்க்கச் சார்பு ஒருபுறமிருக்க, இக்கடன் தள்ளுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து நாடெங்கிலும் 800 வங்கிக் கிளைகளையும், அக்கிளைகளில்  கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளுள் 90,576 கணக்குகளையும் வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த மையத் தணிக்கைத் துறை, “இவற்றுள் கடன் தள்ளுபடி பெறத் தகுதியற்ற 20,216 கணக்குகளுக்கு முறைகேடாகக் கடன் தள்ளுபடி தரப்பட்டிருப்பதை” அம்பலப்படுத்தியிருக்கிறது.  மேலும், “கடன் தள்ளுபடி பெற அனைத்துத் தகுதிகளும்  இருந்தும் 9,334 விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டுள்ளது. 4,826 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நீட்டிப்பு வழங்கப்படவில்லை” என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.  ஒரு தனியார் வணிக வங்கி, விதிமுறைகளுக்கு மாறாக நுண்கடன் நிறுவனங்களின் கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்டி ரூ.164.6 கோடி ரூபாயை அரசிடம் இருந்து சுருட்டியுள்ளதை, அவ்வங்கியின் பெயரைக் குறிப்பிடாமல் அம்பலப்படுத்தியுள்ள தணிக்கை அறிக்கை, அந்நுண் கடன் நிறுவனங்களிடம் கடன்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடியாகியிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய்யப்பட்ட வேளாண் கடன் தொகையில் 7 சதவீதத் தொகை சென்னையைச் சேர்ந்த புள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரகசியத்தைத் தமிழகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு ஊழியர் சங்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.  ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சொர்க்க பூமியாக மாறிவிட்ட சென்னையில், மொட்டை மாடியில் காய்கறிகளைப் பயிரிடும் ‘விவசாயிகளுக்கு’ இந்தக் கடன் தள்ளுபடியை வங்கிகள் வழங்கியுள்ளன போலும்.

இத்திட்டம் 3.45 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்ற அரசின் அறிவிப்பையும் தணிக்கையில் அம்பலமாகியிருக்கும் முறைகேடுகளையும் ஒப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேர் முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றிருக்கக்கூடும்; தகுதிவாய்ந்த 34 இலட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டிருக்கக்கூடும்.  இம்மோசடியால் கடன் தள்ளுபடி செய்வதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட 52,000 கோடி ரூபாயில் தோராயமாக 10,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வர முடியும்.

விஜய் மல்லையா
வங்கிகளில் கோடிகோடியாய் தொழில்கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா.

அரசியல் புள்ளிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட கும்பல்தான் வேளாண் கூட்டுறவு வங்கிகளை இயக்கி வருவதால்; இவர்களோடு நுண்கடன் நிறுவனங்கள், நவீன பண்ணை விவசாயத்தில் இறங்கியிருக்கும் புதியவகை தரகு முதலாளிகள் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து இந்த ஊழலை நடத்தியிருப்பதால், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் இந்த ஊழலை அமுக்குவதில் முன்னணியில் நின்றார்.  அதனால், இக்கடன் தள்ளுபடி ஊழல் நாடாளுமன்றத்திலோ, தேசியப் பத்திரிகைகளிலோ பெரிய அளவில் விவாதிக்கப்படாமல், வந்த சுவடே தெரியாமல் அமுங்கிப் போய்விட்டது.

இவ்வூழலால் பலனடைந்த கும்பலைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முன்வராத அரசு, முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றவர்களிடமிருந்து அத்தொகையைத் திரும்பப் பெறுமாறு பொத்தாம் பொதுவாக வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.  வங்கிகளோ, இதைச் சாக்காக வைத்துக் கொண்டு நியாயமாகக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு பணத்தைத் திரும்பக் கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.  மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டக் கூட்டுறவு வங்கி மட்டும் 49,000 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டிலோ, சில பொதுத் துறை வங்கிக் கிளைகள் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் புகைப்படங்களை வங்கிகளின் வாசலில் ஒட்டி, விவசாயிகளை ஏதோ ஜேப்படி திருடர்களைப் போல அவமானப்படுத்தும் அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன.  கடன் தள்ளுபடியை ஏப்பம் விட்ட கும்பலோடு,வங்கியில் தொழில்கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளோடு இணக்கமாகவும், அக்கொள்ளையில் பங்காளியாவும் நடந்துவரும் வங்கி நிர்வாகம், சிறு விவசாயிகளைக் கிள்ளுக்கீரைகளாக நடத்துவதையும் எட்டி உதைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் இந்த விவகாரங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.

– அழகு

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

ஈழத்தாய்

கேள்வி 1:
ஈழம் தொடர்பான குரல்கள் பலமாக எழும் இவ்வேளையில், ஜெயலலிதாவின் ஐ.பி.எல் லில் இலங்கை வீரர்களை புறக்கணிக்க சொல்லும் குரலையும், அதன் தொடர்ச்சியாய் சுப்பிரமணிய சாமி ஜெ.அரசை  356 வது பிரிவை பயன்படுத்தி கலைக்க கோருவதையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஈழம் தொடர்பான ஜெயாவின் போக்கு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும்?

கேள்வி 2:
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?

கேள்வி 3:
கேள்வி பதில் பகுதி தற்போது இயங்குவதே இல்லையே ஏன்? வினவில் அதிக செய்திகள் வரும் இக்காலகட்டத்தில் வாசகர்களின் பழைய பொருத்தமான கேள்விகளோடு இன்றைய செய்திகளை இணைத்து வழங்கலாமே…

– சீனிவாசன்

__________________________________________

ன்புள்ள சீனிவாசன்,

வேலைச்சுமை காரணமாகவே கேள்வி பதில் பகுதி தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. இனி முடிந்த மட்டும் எழுத முயல்கிறோம்.

ஐபிஎல் தொடர்பாக ஜெயாவும் சு.சாமியும் நேரெதிர் நிலை எடுத்திருப்பதாக தோன்றலாம். அப்படி இல்லை. காலந்தோறும் பார்ப்பனியம் என்ற வழக்கின் படி இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

முதலில் ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 வெளியீடைப் பார்த்து விடுவோம். பொது வாக்கெடுப்பு, தனி ஈழம், பொருளாதாரத் தடை, நட்பு நாடு என்று அறிவிக்க கூடாது இன்னபிற ஜெயாவின் அறிவிப்புக்களை உள்ளடக்கி இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தீர்மானம்.

முதலில் சட்டசபை தீர்மானம் குப்பைக் கூடைக்குச் செல்லும் பயன்மதிப்பு கூட அற்றது. அந்த வகையில் இவை வெறும் ஒரு அபிப்ராயம் மட்டுமே. மேலும் இவை குறித்து ஜெயா அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி வருகிறார். மத்திய அரசும் உங்கள் கடிதம் கிடைத்தது என்று ஒப்புதல் தெரிவித்து வருகிறது என்றாலும் மீனவர் கொல்லப்படுவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதைக் கிண்டல் செய்வோர் ஜெயா கடிதம் எழுதுவதை மட்டும் தீவிர நடவடிக்கையாக பார்க்கின்றனர்.

ஒரு கருத்து அமலுக்கு வருவதற்காக பேசுவது, போராடுவது ஒரு ரகம். அமலுக்கு வராது என்பதை நிச்சயம் தெரிந்து கொண்டு, விரும்பிக் கொண்டு, அதைப் பயன்படுத்துவதற்காக உணர்ச்சி பொங்க பேசுவது ஒரு நாடகமே அன்றி வேறல்ல.

ஈழத்தாய்ஜெயாவின் நோக்கம் தெளிவானது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்று, மத்திய அரசில் முக்கியமான கட்சியாக பேரம் பேசுவது, வரலாற்று விபத்து ஏதும் நடந்தால் பிரதமர் பதவியையும் கைப்பற்றுவது, இறுதியில் மத்திய அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கை நீர்த்துப் போகச் செய்வது, தமிழக அளவில் இருந்து இந்திய அளவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவது இவைதான் ஜெயாவின் அரசியல் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதாவது நாற்பது தொகுதிகளையும் வெல்ல வேண்டுமென்றால் மக்கள் வாக்களிக்க வேண்டும். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு என்று நாற்புறமும் தத்தளிக்கும் மக்களை திசை திருப்புவதற்கு ஜெயாவிற்கு கிடைத்த ஆயுதம்தான் ஈழம். அதில் மற்றவர்களை விட தான்தான் முன்னணியில் போராடுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் தமிழின ஆர்வலர்களின் உதவியுடன் ஈழத்தாயாக மீண்டும் உருவெடுத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று ஜெயா பகிரங்கமாகவே முயல்கிறார். அதற்கு தோதாக அனைத்து வித தமிழின ஆர்வலர்களும், குழுக்களும் ஜெயாவின் ஈழம் குறித்த நாடகங்களை உண்மையென அங்கீகரிக்கின்றன.

ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்களை தடை செய்வது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டித்தான் தமிழக அரசு செய்திருக்கிறது. முக்கியமாக இந்திய அரசு, கிரிக்கெட் வாரியமும் கூட இதனை எதிர்க்கவில்லை, எதிர்க்கும் அவசியமில்லை என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் திமுக சார்ந்த கலாநிதி மாறனின் ஹைதராபாத் அணியின் கேப்டனே இலங்கை வீரர்தான் என்பதால் கருணாநிதியை கட்டம் கட்டுவதற்கும் இது உதவும். அந்த வகையில் தனது மேல் உள்ள மக்கள் அதிருப்தியை கருணாநிதி மேல் உள்ள வெறுப்பாக மாற்றுவதற்கும் ஈழப்பிரச்சினை ஜெயாவிற்கு உதவும்.

மற்றபடி ஐபிஎல் வீரர்கள் போல இலங்கையில் தொழில் செய்யும் அம்பானி, டாடா, ஏர்டெல், பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரமாட்டார் என்பது உங்களுக்கே தெரியும். இதனை ஏன் செய்ய முடியாது, வீரர்களை தடை செய்வது ஏன் சாத்தியம் என்பதன் வேறுபாடு கூட ஈழம் குறித்த ஜெயாவின் நாடகத்தை பளிச்சென அம்பலப்படுத்தும். ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்பதை ஒரு அரசியல் நடவடிக்கையாக ஈழ ஆர்வலர்கள் கோருகிறார்கள். போராடுகிறார்கள். ஜெயாவோ நானே அதை முடித்து தருகிறேன், அமைதியாக இருங்கள் என்கிறார். இதுதான் பிரச்சினை.

சு.சாமி, ஜெயலலிதா

அதனால்தான் ஜெயாவின் இத்தகைய ஆபத்தில்லாத நடவடிக்கைகளை இந்தியா ஆளும் வர்க்கம் அனுமதிக்கிறது. இருப்பினும் சில தேசிய ஊடகங்கள், சு.சாமி போன்ற தரகர்கள் இதை எதிர்க்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்தில் ஒரு முரண்பாடு ஏற்படுத்தும் அளவிற்கு வலுவாக, அடிப்படையாக இல்லை. எனினும் சு.சாமி பேசும் இந்திய அரசு, வெளியுறவுக் கொள்கை, சட்டத்தின் ஆட்சி போன்றவை உண்மையில் இந்தியாவின் அடக்குமுறையை, இலங்கை குறித்த கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பவை. இதுதான் இந்திய அரசின் கொள்கை என்றாலும் அதற்கு பங்கம் விளைவிக்காத அளவுக்கு ஜெயாவின் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அப்படி அனுமதிக்க கூடாது என்ற சு சாமியின் கருத்து குறித்து கவலைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. இது சு சாமிக்கும் தெரியும்.

ஆகவே அவரது எச்சரிக்கை ஒரு செல்லமான கண்டிப்பே அன்றி வேறல்ல. முக்கியமாக புலிகளை அழித்து, ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, அவர்களது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட்டபிறகு ஜெயாவைப் போன்றவர்கள் ஈழம் குறித்து என்ன குரல் எழுப்பினாலும் பலன் ஒன்றுமில்லை என்பதையும் ஈண்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் போராடும் போது அதற்கு ஆதரவு என்பதாக காட்டிக் கொள்ளும் ஜெயா டெக்னிக்கலாக மட்டும் செயல்படுகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதே அவரது அரசுதான் என்றிருக்க இன்றைக்கு போராட்டம் நடைபெறுவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தற்காலிக தடையைத்தான் விதித்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கை வென்று வந்திருக்கும் ஸ்டெர்லைட் அலை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் வழக்கில் வென்று வர முடியாதா என்ன? இதுவும் ஜெயாவுக்குத் தெரியும்.

அது போல கெயில் எரிவாயு குழாய் பதிப்பிற்காக  அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறார். ஆனால் 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்ததே அவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அபாயகரமான யோசனையின் உட்கிடை என்ன? விவசாயத்தையும், அதை நம்பி வாழும் மக்களையும் துரத்த வேண்டும் என்பதைத் தாண்டி வேறென்ன?

கூடங்குளம் போராட்டம் குறித்தும் ஜெயா எப்படி நடந்து கொண்டார் என்பது நமக்குத் தெரியும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆரம்பத்தில் எதிர்ப்பது போல நடித்து, நிபுணர் குழு, மத்திய அரசுக்கு கோரிக்கை என்று இழுத்து இறுதியில் அந்தப் பகுதியில் கடும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கி வருகிறது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் கூட ஜெயாவை இறுதிவரை நம்பினார்கள் என்பதும் உண்மையில்லையா?

இதே போன்று மூவர் தூக்கு விவகாரத்திலும் அவர் அடித்த பல்டியை நினைவுபடுத்திக் கொள்வோம். வரலாறு இத்தனை சாட்சியங்களை கொண்டிருந்தும் ஒவ்வொரு முறையும் ஜெயா அடிக்கும் சவடால்கள் கணிசமானோரை ஈர்க்கவே செய்கிறது. இதன் அரசியல் அடிப்படை என்ன?

மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு நாம் அதில் பாதிப்படையும் மக்களையும், பாதிக்காத பிற பிரிவு மக்களிடையே பிரச்சாரம் செய்தும் அணிதிரட்டி போராட வேண்டும். ஆனால் அத்தகைய மக்கள் திரள் வேலையினை சுமையாகக் கருதும் நடுத்தர வர்க்க அரசியல் முன்னணியாளர்கள்தான் இப்படி அரசு, ஆளும் கட்சிகள் வழியாக ஏதும் நல்லது நடக்காதா என்று முயல்கிறார்கள். மக்கள் சக்தியால் நடைபெற வேண்டிய ஒரு விசயம் ஜெயா அரசால் மட்டுமே நடைபெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது குறுக்கு வழி என்ற போதும் அவர்கள் விரும்பியே செல்கிறார்கள். மக்களை நம்பாத எவரும் இத்தகைய சமரச அழிவுப் பாதையில்தான் பயணிக்க முடியும்.

எனவே ஜெயாவை, அவர் எந்த வர்க்கங்களை பிரதிபலிக்கிறார், யாருக்காக ஆட்சி நடத்துகிறார், அவரது பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள்.