Sunday, November 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 818

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 6

ஆண் என்றும் பாராமல்
என்னைப் பேச அனுமதித்த
பெண்களுக்கு முதல் வணக்கம்.

பெண்களைத்
திட்டியே தீர்த்த ஆணாதிக்கத்தின்
சொற்கொலைகளையும் தாண்டி,
பெண்ணின் வர்க்க உணர்வுக்கு
வார்த்தைகளை உசுப்பிவிடும்
இறவா தமிழுக்கும் என் வணக்கம்.

கைத்தலம் பற்றி
நான்குசுவருக்குள் நயம்படச்சுரண்டி
தன்னைச்சுற்றி நடப்பதேதுமே
தெரியாததுபோல்,
பொய்த்தவம் பூண்டவர் மத்தியில்,

வலைத்தளம்பற்றி  சமூகம் பற்றி
வாழ்வின் சகலமும் சுற்றி, வாதம்புரிந்து
எதிரெதிர் பேசி, இணக்கமிலாவிடினும்
தன்னைத் தாண்டியும் சிந்திக்கும்
வினவாளர்களுக்கு உரிய வணக்கம்.
_______________________________________
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத
தந்திரக்கார சமூகமிது.

பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.

ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.

ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..

’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி…

ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும்
ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…

இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி
ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…

ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை
மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.

மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?

என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!

’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப்
பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள
ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது
பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல,
______________________________________
ஒரு பெண் சுதந்திரமாகத்
தன் காதல் உணர்வை
வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
முக்கியமானது
அவள் அரசியல் உணர்வை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்

அனுமதித்ததுண்டா
ஆணாதிக்கத் தந்திரம்

’லவ்வர்ஸ்டே’ மூலமாக
பெண் காதல் உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’மதர்ஸ் டே’ மூலமாக
தாய்மை உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’வெட்டிங் டே’ மூலமாக
குடும்ப உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

ஏன்?
’வயசுக்கு வந்ததையே’ உறுத்தலின்றி
ஊரறியச் சொல்வதற்கும் சம்மதம்.
ஆனால் ஒரு பெண்
கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக
தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும்
பயம்.. பயம்.. பயம்..
_______________________________________
பெண் பேசுவது பிறகு
விளக்கம் சொல்ல வந்தாலே
வாயை அடக்கு என – என்
தாயை அடக்கிய தந்தையைப் பார்த்து,
சின்ன வயதிலேயே
பெண் மீதான கொடுமையை
கண்ணெதிரே பார்த்து, பார்த்து
’ஆம்பிள்ளைத் தனத்தை’ வெறுத்ததுண்டு.

சொந்த அனுபவத்தில்
சொல்கிறேன் ஒன்று.
அந்த நாளில் அம்மாவுக்கு…
மோரு புளித்தால் அடி
நீரு வைக்க மறந்தால் வார்த்தைக் கடி
குழம்பு தன் சூடு மறந்தால்
கிளம்பும் கரண்டி,
ஒரு நாள் சோறு குழைந்ததற்காய் அடி

அழுதுகொண்டே தடுக்கப் போய் நானும் அடிவாங்கி
நோட்டில் எழுதிவைத்தேன் இப்படி;

’’அன்னம் குழைந்தாலென்ன?
அருமை குறைந்தாலென்ன,
தின்னும் உன் எருமை வயிறு
ஏற்காதா?
கன்னம் குழையும்படி
என்னமாய் அறைந்தாய்
என் அம்மாவை
சின்னஞ் சிறியவனாய் இருப்பதனால்
செய்வதறியாது நிற்கிறேன்
பின்னம் பெரியவனாய் ஆன பின்னே
உன்னை என்ன செய்கிறேன் பார்!’’

ஆசிரியப்பாவால்
அடித்தேன் அப்பாவை
என ஆற்றிக் கொண்டிருந்த மனதை
ஒருகீறு கீறிவிட்டாள் அம்மா…

’’அப்பாவைப் போல் இருக்காதே
பொம்பளையை அடிக்காதே
அவள் சொல்றதையும் கேளு!’’

எனக்கு திருமணமானவுடன்
என் அம்மா சொன்ன அறிவுரை இது.

என்ன இருந்தாலும்
நீயும் ஆம்பிள்ளைதாண்டா? எச்சரிக்கை!
என எனக்கு உணர்த்திய
அம்மாவின் வார்த்தையில் அர்த்தங்கள் ஆயிரம்
அனைவருக்கும் அதில் பொருத்தமுள்ளதால்
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

பெண்ணைப் பார்த்து
என்ன கொண்டுவந்தாய்
எனப் பேசுபவனுக்குத் தெரியுமா?

இந்த பூமியே
அவள் உனக்கு போட்ட பிச்சை.
_________________________________________________
விஷ மூச்செறியும் மலைப்பாம்புகள்,
வெறிகொண்டு இரைதேடும் விலங்குகள்,
பாறைகள் கரையும் சூறை மழை,
சூரியன் நடுக்கும் கோரப்பனி
இவையிடமிருந்து உயிர்க்கரு காத்து
விழிக்குடம் தளும்பினும் பனிக்குடம் தளும்பாமல்
கானகம் தெறிக்க அலறி தொண்டை நரம்புகள் குழறி
உயிர் ஈன்றவள் பெண்ணடா!

எந்தக் காலத்திலும் பெண்
சும்மாயிருந்ததில்லை…
காந்தள் மலர் கைகளெல்லாம்
தின்று தீர்த்து
வாந்தியெடுக்கவும் உதவி தேடும்
மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கே!
கறுத்துச் சிவந்த வாழைப்பூ தோலென
தடித்துக் காய்த்திருக்கும் தலைமுறையாய்
உழைக்கும் பெண்களின் கைகள்.

ஆட்டுடன், மாட்டுடன் சென்று
அதன் இயல்பறிந்து
பொறுமையாய் புல்மேய உடனிருந்து
புதிய மேய்ச்சல் நிலங்களை
கண்டறிந்தவள் பெண்
ஆணோ
அவளை ஆடு, மாடாய் நடத்தி
உழைப்பைக் கறந்தான்.

வேட்டைச் சமூகம் முடிந்து
பெண் சும்மாயிருந்தாளா?
முதலில் பயிரிடக் கற்று
விதைநெல்லைக் கொடுத்தாள்
ஆணோ உடனே அவளை
வீட்டினில் அடைத்தான்.

சிக்கி, முக்கி கல்லை உரசி
முதலில் நெருப்பைத் தந்தவள் பெண்
ஆணோ
சிக்கிக் கொண்டாள் இலவச வேலைக்காரி
என அவளை அடுப்பினில் வைத்தான்.

வெறும் பெருமை அல்ல உண்மை,
அன்று;
பெண் தலைமுறை பல விளைவித்த காரணத்தால்
தாங்கும் நிலமும் ’’தாய்மண்’’ ஆனது.

குடும்ப அமைப்பின் சுமைகளனைத்திற்கும்
தாங்கும் குவிமையமாக அவளே ஆனதால்
வீட்டின் முக்கியச் சுவரும் ’’தாய்ச்சுவரானது’’.

வரலாற்றில்
எதையெல்லாம் பெண்
கண்டறிந்து தந்தாளோ
அதைவைத்தே அவளை
சிறைவைத்தான் ஆண்.

வேட்டையாடி பெற்ற
பெண்ணின் சமநிலையை
வேளாண் சமூகத்தின்
உபரி பறித்தது..

காட்டு வாழ்க்கை வழங்கிய
கைகளின் சுதந்திரத்தை
வீட்டு வாழ்க்கை
வேலைக்காரியாய் அடக்கியது.
முதல் வர்க்க ஒடுக்குமுறை
பெண் குரல்நெறித்து துவங்கியது..

தொல்குடி வேட்டையில்
காட்டு விலங்கினை வேட்டையாடி
வெற்றி கண்டவள் பெண்.
கடைசியில் வீட்டு விலங்கிடம்
மனைவியாய் மாட்டிக்கொண்டு
இல்-குடி என வேட்டைக்கு இரையானாள்.

செல், கொல் என
இனக்குழுச் சண்டையில் தலைமையேற்று
சமர்க்களம் புரிந்த
பெண்ணின் அமர்க்களம் பார்த்து
சமமாய் நடந்தான் அன்று காட்டுவாசி.

நில், கேள், சொல்வதை மட்டும் செய்
எனப் பெண்ணை
அடக்கி ஆள்கிறான் வீட்டுவாசி.

பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை
புனிதமென்று விளைநிலத்தில் தெளித்து
பெண்ணைக் கொண்டாடினான் புராதனவாசி,
பெண்ணின் மாதவிடாயை
தீட்டு என்று வீட்டுக்குள்ளேயே
தள்ளி வைப்பவன் நாட்டுவாசி

காலத்தால் இவன் முன்னேறியவனாம்
மூளையிருந்தால் மாத்தி யோசி!
____________________________________________
ஒவ்வொரு சமூகக்கட்ட
உழைப்பினில் மட்டுமல்ல,
வரலாற்றில்
பெண்வாடையில்லாத
போராட்டம் ஏதுமில்லை..
பெண் கை கொடுக்காமல்
புரட்சிகள் ஜெயித்ததுமில்லை…

ஜான்சிராணியும், வேலுநாச்சியும்
அசரத்பேகமும்,
வெள்ளையனுக்கு எதிராகத்
தன்னையே தீம்பிழம்பாக வெடித்த
குயிலியும் இல்லாமல்
விடுதலைப் போரில்லை.

தில்லையாடி வள்ளியம்மை மட்டும்
இல்லையெனில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி கதை
முன்னமே முடிந்திருக்கும்.
இந்தியாவும் எப்பாதோ விடிந்திருக்கும்.
வ.உ.சிக்கு
தென்னாப்பிரிக்க மக்கள் கொடுத்த காசையே
தான் ஓசிக்கு அமுக்கிக் கொண்ட
தில்லாலங்கடி காந்தி பற்றி
பாவம்! தில்லையாடிக்கு தெரியவில்லை.

காந்தியத்திற்கும்
பெண்கள் பெரும்படையாய்
கதராடை உடுத்தினர்.
போராட்டத்திற்கு
கைவளையல்கள் கழட்டிக் கொடுத்தனர்.
பெண் படை தைரியத்தில்
காலை முன்வைத்த காந்தியும்
பெண் உணர்வு மதித்தாரா?

’’இச்சாபத்தியம்’’ எனும் பெயரில்
இரண்டு இளம்பெண்களுடன்
பாலியல் உணர்வை அடக்கிப் பழக
நிர்வாணமாய் கிடந்த காந்தியின்
ஆணாதிக்க அருவருப்பைப் பார்த்துதான்
காந்தியின் குரங்குப் பொம்மையும் கண்ணை மூடியது.

அந்நியத் துணி எரிப்புக்காய்
ஆங்கிலேயரால் துகிலுரியப்பட்ட
பெண்களின் நிர்வாணமோ
தேசத்தின் மானம்!

வெட்கத்தை எதிர்பார்த்த
அடக்கு முறையாளர்களிடம்
தம் வர்க்கத்தை காட்டி
எதிரியின் இரத்தத்தை
காறித்துப்பியவர்கள் உழைக்கும் பெண்கள்!

கீழத் தஞ்சை விவசாயி எழுச்சியில்
கருக்கரிவாளை
கம்யூனிச அரிவாளாய் உயர்த்திப் பிடித்து
நிலப்பண்ணைகளுக்கெதிராக
அறுவடை இயக்கம் செய்தவர் பெண்கள்.

தெலுங்கானாவிலோ
நிஜாம் நிலப்பிரபுத்துவக் குண்டர்களின் முகத்தில்
எண்ணையை காய்ச்சி ஊற்றி
தங்கள் அதிகாரத்தை
சமைத்தவர்கள் பெண்கள்

தெபாகா போராட்டமோ
தினஜ்பூர், ராங்பூர், மால்டா,
மிதுனப்பூர், குல்னா, பர்கானா,
என எல்லா மாவட்டங்களும்
சேலை கட்டிக் கொண்டுதான்
இந்து, முசுலிமாய் இணைந்து போராடின

ஆண்டைகளுக்கு அடியாளாய் வரும்
போலிசு கிராமத்திற்குள் நுழைந்தவுடனேயே
ஒரு பெண் சங்கெடுத்து ஊதுவாள்,
இன்னொரு பெண் மணி அடிப்பாள்
கேட்ட மாத்திரத்தில்
பால்குடிக்கும் குழந்தையையும்
பாதியில் கிடத்திவிட்டு
’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றெழும்
பெண்கள் கையில் விளக்கமாறும் ஆயுதமாகும்.

கையில் கிடைக்கும் போலீசை
கூட்டிப் பெருக்காமல்
பெண்கள் கூட்டம் கலையாது.
இது தெபாகா வரலாறு.

திருவாங்கூர் சமஸ்தானத்தின்
இராணுவத் தாக்குதலை
கல், அம்பு, ஈட்டியுடனும்,
எந்த ஆயுதங்களையும் எதிர்க்கும்
வர்க்கக் கோபத்துடனும்
எதிர்த்துப் பாய்ந்து தம் இரத்தத்தில்
நிலப்பிரபுத்துவத்தை மூழ்கடித்தவர்கள்
வயலார்-புன்னப்புரா போர்க்களப் பெண்கள்.

கய்யூர் விவசாயிகள் போராட்டக் காட்சிகளோ
உங்கள் கண்ணில் நீரை வரவழைக்காது!
அடக்குமுறைக்கெதிராக போராடியதால்
அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞாம்பு
ஆகிய நால்வரையும் தூக்கிலேற்றியது
பிரிட்டிஷ் அரசு.

நால்வரின் தாய்மாரே
நாட்டு மக்களைப் பார்த்து சொன்னார்கள்..
’’நாட்டுக்காக மரணத்தை துச்சமாக மதித்த
எங்கள் பிள்ளைகளின் பிணத்தைப் பார்த்து
யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம்
கனன்றெழும் கோபத்தை மட்டும்
தாருங்கள் என்றார்கள்!

மன்னன் கொட்டமடித்து வாழ
விழுப்புண் எய்திய மகனைப் பார்த்து
மகிழ்ந்து போவாளாம் தாய்.
என்னடா புறநானூறு!

உழைக்கும் வர்க்க உரிமைக்காக
பிரிட்டிஷ் செருக்கை அடக்கிய
பெண்களின் வீரகாவியம் கய்யூரு.
______________________________________________
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

இந்துமதம் என்பதைவிட – இதை
ஆணாதிக்க விந்துமதம் என்றால்
மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை
இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.

’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.

’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!

கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..

பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார  மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.

புத்தரும் கூட
மணலைப் போல உறுதியற்றவர்கள்
பெண்கள் என்று மட்டம் தட்டினார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.

’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’
______________________________________________
பெண்களைப் பற்றிப் பேசாதவன் யார்?
ஆனால்.. பெண்களுக்காகப் பேசியது யார்?

வேதாந்தமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்சியம் ஒன்றே
பெண்களை புரட்சி பேச வைத்தது!

வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில்
சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென
காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.

ஏன் தெரியுமா?

வேலைக்குப் போகும் ஆணின்
உழைப்பு நடவடிக்கைக்காக
வீட்டில் அவனுக்கு வேலைகள் செய்து
தன் உழைப்புச் சக்தியை செலவிடுபவள்
பெண் என்பதால்
ஊதியத்தின் பங்கு அவளுக்கும் சேரும் என
உறுதிபட விளக்கியது மார்க்சியம் மட்டுமே!

நெசவுத் தொழிலில்
பிழியப்பட்ட பெண்களின் கைகளுக்காக,
முதலாளித்துவத்தின் ஈரலை எடுத்தது
மார்க்சின் மூலதனமல்லவா!
’’இங்கிலாந்தில்  தொழிலாளி வர்க்கத்தின் நிலைமையில்’’
பெண்கள் மீதான அவலச்சுரண்டலை
எங்கெல்சின் எடுத்துக்களல்லவா
உலகுக்கு எடுத்துக் காட்டியது!

சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு உலகை
சோசலிச ரசியாவே படைத்துக் காட்டியது!

அதனால்தான்
தங்களின் புதிய உலகை
பறிக்க வந்த பாசிச இட்லரை
சோவியத் பெண்கள்
தெருவில் இறங்கி அவன் கருவைக் கலைத்தனர்.

பக்தி உணர்வால் பெற முடியாததை,
மத உணர்வால் பெற முடியாததை,
சமூக உணர்வால் ஆணோடு பெண்ணும் சமமென்று
சோசலிச உணர்வால் நிரூபித்தது ரசியா!

ஆணுக்கு பெண் எதிரியென
முதலாளித்துவம் மடை மாற்றியது
ஆணையும், பெண்ணையும் வர்க்கமாய் சேர்த்து
கம்யூனிசமே முதலாளித்துவ சுரண்டலை பழி தீர்த்தது!
பொது லட்சியத்தோடு இன்னும்
பெண் போக வேண்டிய இலக்குகளையும்
அடையாளம் காட்டியது…

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
முதலாளித்துவம் இரங்குமா?
ஒரு போதும் இரங்காது என
மூலதனத்தின் இரத்தத்தில்
ரசியா எழுதிக் காட்டியது.
ஆனால் முடியவில்லை சுரண்டல் இன்னும்
___________________________________
மூலதனத்தின் நகங்கள்
உன்னை நோக்கியே முளைக்கிறது பெண்ணே!

உனது சுயமரியாதைக்கான
கைத்தொழில், சிறுதொழிலை பிடுங்கி
மீண்டும் உன்னை
பண்ணையடிமையாக்குகின்றன
பன்னாட்டு கம்பெனிகள்!

அன்று உன் அன்னைக்கு
சொந்தமாக ஒரு மாடிருந்தது.
இன்று அதுவும் போய்
’நோக்கியா’ பட்டியில்
நீயே ஒரு கறவை மாடாய் கட்டப்பட்டுவிட்டாய்.

ஊர்மணக்க உனக்கிருந்த
விளைநிலம் பாழாகி
நீயோ தெருவுக்கு தெரு
ஊதிவத்தி விற்கிறாய்,

பார்க்கும் பெட்ரோல் பங்கிலெல்லாம்
வார்க்கப்படுகிறது உன் இள இரத்தம்

அதிரும் ஆயத்த தையற் கூடங்களிலெல்லாம்
உருவப்படுகிறது உனது நரம்பு,

எந்த முதலாளியின் சோப்பை விற்கவோ
வெயிலில் கரைந்து போகிறாய் நீ,

எந்த பன்னாட்டுக் கம்பெனி
கழிவறை கிளீனர் விற்கவோ
மாடிப்படிகள் ஏறி இறங்கி
நாறிப்போகிறது உனது வாழ்க்கை.

கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
கண்களை விற்று சம்பளம் வாங்கி
கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்
என்று கூலியுழைப்பின் பதைப்பிலேயே
துடிக்கிறது இதயம்  உனக்கு!

உனது சொந்தத் தறியை அறுத்தது யார்?
உன் துண்டு நிலத்தைப் பறித்தது யார்?
உனது தயிர்கூடையை பிடுங்கியது யார்?
உன் ஆடு, மாட்டை அடித்து ஓட்டியது யார்?
எந்த உரிமையும் இல்லாமல்
சந்தை மாடாய் பெண்ணே உன்னை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மூன்று முடிச்சில் கோர்த்தது யார்?

இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற
பச்சை அயோக்கியர்கள்தான் என்பது
உனக்குத் தெரியாதா என்ன?
அலுவலகத்திலும், வீட்டிலும்
உன் ரத்தத்தை முறிக்கும்
புல்லுருவிகளை எதிர்த்து போராட தயக்கமென்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே
பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

ஆணே ஒரு அடிமை
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
எப்படி விடுதலை தர முடியும்?

ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் வர்க்க உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!

போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன்
தந்தையாய், கணவனாய்,
தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும்
எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!

இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம்
இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே
நக்சல்பாரியே நல்லறம்…
நாடே எதிர்பார்க்குது உன்னிடம்..

போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம்
பொம்பளை வரமாட்டாங்க
என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!

உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத
ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!’’.

— துரை.சண்முகம்

________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!

vote-0122008 ஆம் ஆண்டு நாளிதழ்களில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்களுக்கு கண்பார்வை பறிபோனதை படித்திருப்பீர்கள். இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC, ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) நடத்திய நீதிமன்ற போராட்டத்திற்கு இடைக்கால வெற்றி கிடைத்திருக்கிறது.

முதலில் அந்தப் பிரச்சினையை மீண்டும் நினைவு கூர்வோம். விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் கடுவனூர் பகுதியிலிருந்து 66பேரை மருத்துவர் அசோக் தலைமையிலான குழு தேர்வுசெய்து பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்தது. இப்படி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மூலம் அரசு பணம் 750 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இலவசம் என்று நாடகம் போடுகிறார்கள். மேலும் வெளிநாட்டில் இதை வைத்து பிரச்சாரம் செய்தும் நன்கொடை திரட்டுகிறார்கள்.

29.7.2008 அன்று கண் அறுவைச் சிகிச்சை செய்த அனைவரும் கடுமையான வலியால் அவதிப்பட்டதை மருத்துவமனை ஊழியர்கள் கூட பொருட்படுத்தவில்லை. மறுநாள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் பெரிய டாக்டர் வந்து மீண்டும் சிகிச்சை செய்கிறார். பலன் இல்லை. கண்களில் சீழ்பிடித்து தலைமுழுவதும் கடுமையான வலியில் அந்த ஏழைகள் அலறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூட அருகில் உறவினர்கள் யாருமில்லை. கொஞ்ச நேரத்தில் வலி சரியாகிவிடும், பத்து நாட்களுக்கு சொட்டு மருந்து போடுங்கள் என்று தேனொழுக பேசிய மருத்துவமனை நிர்வாகம் அந்த மக்களை கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு ஓடிவிட்டது.

கண் பறிபோய்விடுமோ என்ற அவலநிலையில் அந்த ஏழைகள் கையிலிருக்கும் சொத்து பத்துக்களை விற்று, கடன்வாங்கி வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அப்போதுதான் கண் சீழ் பிடித்துவிட்டது, இனி தெரியாது, வலியை மட்டும் நிறுத்த மருந்து சாப்பிடலாம் என்ற அதிர்ச்சி உண்மையை மக்கள் தெரிந்து கொண்டார்கள். கண்ணில்லாமல் வேலைக்கு கூட போகமுடியாது என்ற நிலையில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். வேறு சிலர் கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில் கலந்து கொண்டனர். அங்கேயும் கண் போனது போனதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

பிறகு மீண்டும் பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கே கண்ணுக்கு ஆபத்தில்லை, சொட்டு மருந்து போடுங்கள் சரியாகிவிடும் என்று கொஞ்சம் கூட கருணையோ மனிதாபிமானமோ இன்றி பச்சைப்பொய் சொன்னார்கள். மக்கள் கூடி நின்று இந்த அநீதியைக் கேட்டபோது டாக்டர்கள் “மருந்து கெட்டுவிட்டது நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கைவிரித்தனர். இதற்குப் பிறகுதான் அந்த மக்கள் நடுத்தெருவில் இறங்கி மறியல் செய்ய, கண் பறிபோன இந்த அயோக்கியத்தனம் வெளிவுலகிற்குத் தெரியவந்தது.

அதுவரை கோமாவில் இருந்த அரசு நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பது போல காட்டிக்கொண்டது. இலவச கண் சிகிச்சை முகாமுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அப்ரூவர் ஆன அரசு அதை மீறியதற்காக ஜோசப் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். கண்பறிபோனவர்களுக்கு ஆளுக்கொரு இலட்சம் என்று அறிவித்தார்கள். கண்பறிபோன செய்தி காட்டுத்தீயாய் பரவாமல் இருப்பதற்காக பொது விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்தது அரசு. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கெட்டுப்போன மருந்து அளித்திருந்தால் அந்தக் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு இலட்சம் பணம் அதுவும் அரசு பணம் வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தை அவர்களின் வார்த்தையிலேயே கேளுங்கள்:

மூகனூர் கிராமத்தின் சுப்பராயலு, “கண் தெரியாட்டியும் வலியில்லாமல் இருந்தா போதும்னு தாங்கமுடியாம தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்”. மூகையூரின் வள்ளியம்மை, “தலைவலின்னு போனேன், அப்போ கண் நல்லா தெரிஞ்சுது. டாக்டர் ஆப்பரேஷன் செஞ்சா சரியாயிடும் என்றார். என் பொண்ணுங்க வேணாண்ணு சொல்லியும் வலுக்கட்டாயமா அழைச்சிட்டுப்போய் கண்ணை கெடுத்துட்டாங்க, வலி தாங்க முடியல.” கடுவனூரைச் செர்ந்த புத்தி சுவாதினம் இல்லாத குப்புவின் அம்மா,” லேசா தெரிஞ்ச கண்ணை லென்சு வைச்சா சரியாயிடும்னு டாக்டர கூட்டிக்கிட்டு போய் சுத்தமா கெடுத்துட்டாங்க, என்ன செய்யறதுன்னு தெரியல” என்று கண்ணீர் விடுகிறார்.

நைனார்பாளையத்தின் மருதாயி” ஒரு கண்ணு தெரியலைன்னு போனேன், இப்ப ரெண்டு கண்ணும் தெரியலை, இந்த டாக்டர்களை விடக்கூடாது”. நாவம்மாள், ” இடது கண்ணு தெரியலைன்னு போனேன் வலது கண்ணுல ஆபரேஷன் செஞ்சு இரண்டு கண்ணும் தெரியலை” முருகேசன்,” கால் வலின்னு காட்ட போனேன், கண்ணுல ஆப்ரேஷன் செய்யனும்னு சொல்லி கட்டாயப்படுத்தி கூப்டாங்க. இப்போ கண் போச்சு”. மற்றொரு முருகேசன்,” ஒரு நாளைக்கு ஏர்மாடு ஓட்டி ரூ.500 சம்பாதிப்பேன். இப்போ முடியல, கண் போயிடுச்சு. என் காட்ட வித்து அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்சம் செக்கோடு நானும் ஒரு இலடசம் தாரேன், என் கண் பார்வை கிடைக்குமா” என்கிறார்.

இப்படி எல்லா மக்களின் துயரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் இம்மக்களை வற்புறுத்தி ஆடுமாடுகள் போல நடத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. மக்களுக்கு கண்பார்வையை பிடுங்கிய ஜோசப் மருத்துவமனை இந்த உண்மையை 25நாட்களுக்கு மறைத்து வைத்தது. மக்களிடமும் வெள்ளை மாத்திரை, சொட்டு மருந்து என்று ஏமாற்றி வந்தது. இந்த இடைவெளியில் எல்லா தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது.

அப்போது பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களை அணிதிரட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள் தோழர்கள். கண்பார்வை பறிபோனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியது அரசுதான், ஆனால் மருத்துவமனை உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கிரிமினல் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டுமென்று ம.உ.பா.மை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இறுதி தீர்ப்புக்கு முன் இடைக்கால தீர்ப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு கண்புரை சிகிச்சை வல்லுனர் குழுவைக் கொண்டு அளிக்க வேண்டுமென்றும் எதிர்காலத்தில் தனியார் மருத்துவமனையின் தகுதியை பறிசோதித்து உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

இறுதி தீர்ப்பில் ஜோசப் மருத்துவமனையும் கண் பறிப்புக்கு பொறுப்பான மருத்துவர்களும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு ஏழைகளுக்கு உரிய நீதியை பெறுவதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடுகிறது.

ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

32

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.

பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?

என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.

ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.

இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.

என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.

காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.

விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து  குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?

இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.

என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.

ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?

இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.

_______________________________________

இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.

இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.

–       ரதி.

_____________________________________________

ரதி ஈழத்தைச் சேர்ந்தவர். இனவெறிப் போரினால் அகதியாகி இப்போது கனடாவில் வாழ்கிறார். வினவில் “ஈழத்தின் நினைவுகள்” எனும் தொடர் எழுதுகிறார்.

அவரது வலைப்பு – http://lulurathi.blogspot.in/

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா

25

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 4

பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி.

பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அவை எல்லாம் ஏதோ பெரிய‌ம்மை, ப்ளேக் நோய் போன்ற‌ பெருவியாதிக‌ள்; அவை இக்கால‌த்தில் முற்றாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன; அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன். ப‌தின்ம‌ வ‌ய‌தில் முத‌ல் முத‌லாக‌க் க‌ண் திற‌ந்து என் தாயின் வாழ்க்கையையும், மாமியின் வாழ்க்கையையும் உற்றுப் பார்க்கும் வரை.

அவர்கள் என்னதான் மறுத்தாலும், தங்கள் வாழ்க்கைக்குச் சப்பைக்கட்டு கட்டினாலும், அவ‌ர்க‌ளின் ஆத‌ர்ச‌ க‌ண‌வ‌ரான‌ என் த‌ந்தை என்கிற‌ ஆல‌ம‌ர‌த்தின் நிழ‌லில் வெளுத்துச் சாம்பிய‌ செடிகள் என்றுதான்
தோன்றும்.

ஆண்தான் உய‌ர்ந்த‌வன்; பெண் அவ‌னுக்கு அடுத்த‌ ப‌டிதான் என்ற ந‌ம்பிக்கை என‌க்கும் அக்காவுக்கும் சிறுவய‌து முத‌லே ஊட்ட‌ப்ப‌ட்ட‌து. வீட்டில் அப்பா, தாத்தா ஆகியோரை ‘நீங்க‌ வாங்க’ என்று மரியாதையாகவும், அம்மா, பாட்டியை ‘நீ வா’ என்று ஒருமையிலும் விளிப்போம்.

என‌க்கும் என் அண்ண‌னுக்கும் சின்ன‌ வ‌ய‌தில் ஆகாது. சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்; போட்டியும் இருக்கும். அவ‌னோடு போட்டியிடுவ‌த‌ற்கே என‌க்குத் த‌குதியில்லை என்று என் ம‌ண்டையில் அடிக்க‌ப்பட்ட‌து என் ப‌தின்ம‌ வ‌ய‌தில். “அண்ண‌ன் சாப்பிட்ட‌வுட‌ன் அவ‌ன் த‌ட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ!” என்றார் அம்மா. அப்போது அவ‌னுட‌ன் எனக்கு ஏதோ சண்டை. ஆம்பளை த‌ட்டெடுக்க‌க் கூடாது, துடைப்ப‌த்தை எடுக்கக்கூடாது என்று காரணம் வேறு. நான் அதைச் செய்த போது என் மனம் வெதும்பியதும் அவன் கொக்கரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

திரும‌ண‌த்துக்குப் பின், ச‌மைக்க‌த் தெரியுமா என்று கேட்ட கணவனை அச‌த்த‌ வேண்டும், பாராட்டு ம‌ழையில் ந‌னைய‌ வேண்டும் என்று சில நாள் வ‌ரிந்து க‌ட்டிக் கொண்டு ச‌மைத்தேன்.  என்றைக்கு அது என் வேலைதான் என்று Taken for granted ஆன‌து என்றே புரிப‌டவில்லை. (திடீரென்று ஒரு நாள்  தான் மூளையில் அந்த பல்பு எரிந்தது!) அதற்கப்புறம் எனக்கு அதில் முன்பிருந்த ஈடுபாடு இல்லை. (இல்லை என்பதால் லேசான குற்ற உணர்வுதான் இருக்கிறது!)

தனிப்பட்ட முறையில் யோசித்தால், இதெல்லாம் ஒரு குறையா? வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுமை, மாமியார் கொடுமைன்னு நாட்ல‌ எத்த‌னை பெண்க‌ள் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை எல்லாம் பார்த்தால் ந‌ம‌க்கென்ன‌ குறை என்றும் தோன்றுகிற‌து.

இந்த‌க் குறுகிய‌ ம‌ன‌ப்பான்மைதான், ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னளவில் மட்டும் திருப்தியோ ஆத‌ங்க‌மோ அடையும் ம‌ன‌ப்பான்மையாலும்தான் பெண்க‌ளுக்குப் பொருளாதார‌ச் சுத‌ந்திர‌ம் அடைந்திருந்தாலும் இன்னும் முழுச்சுத‌ந்திர‌ம் கிடைக்க‌வில்லை என்று நினைக்கிறேன். இத‌ற்கு இன்னும் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கலாம்.

தோன்றுவதில் சில:

முதலாவது, ப‌யம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்ப‌த்தில் எல்லாரையும் அனுச‌ரித்துப் போக‌வேண்டும் என்று நமக்குக் க‌ற்றுத் த‌ர‌ப்ப‌ட்டிருக்கிறது. இன்னும் ந‌ம் நாட்டைப் பொறுத்த‌வ‌ரை பெண் என்ப‌வ‌ள் ஆணை ம‌ட்டும‌ல்ல‌,அவ‌ன் குடும்ப‌த்தையும் சேர்த்தே திரும‌ணம் செய்து கொள்கிறாள்.

அதனால்தான்: நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம், அதற்கு மறுக்கும் மறு நொடியே அவன் தன் கணவன் முகத்தைக் காட்டி “இப்போது மரியாதையில் அழைக்கச் ச‌ம்ம‌த‌மா, நான் இனி உன் ந‌ண்ப‌ன் இல்லை” என்ப‌து போல் ந‌ட‌ந்து கொள்வ‌தும் ந‌ட‌க்கிறது.

மாம‌னார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்ப‌த‌ற்காக, அலுவ‌ல‌க‌த்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாம‌ல், தின‌மும் நான்கு ம‌ணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, ச‌மைய‌ல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்ட‌ர் ப‌ஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் ப‌ய‌ணம் செய்து அலுவ‌லக‌த்துக்கு வ‌ந்து தூங்கி விழும் புதும‌ண‌ப்பெண்க‌ள் இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் படித்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் ஜோசியம் ஜாதகம் போன்ற அழுக்குகளை விட்டொழிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதனால்தான்: காத‌லித்துத் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ன், ஆண்மைய‌ற்ற‌வ‌ன் என்று மருத்துவரீதியாகத் தெரிந்த பின்னும், ஜோசிய‌ர் அடித்துச் சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையில், இல்லறம் ஆரம்பிக்கும், குழ‌ந்தைப் பேறுவ‌ரும் என்று ஆண்டுக்கணக்கில் க‌ன்னித் த‌வ‌ம் புரிந்து கொண்டு கணவன் வீட்டுக்குச் ச‌ம்பாதித்துக் கொட்டும் ஆஃபிஸ‌ர் பெண்க‌ள் இருக்கிறார்கள்.

ஊர் உல‌க‌ம் என்ன‌ சொல்லுமோ? குழ‌ந்தைக்குத் த‌க‌ப்ப‌ன் அவ‌ன் தானே.. என்ற‌ ம‌றுகலால்தான்: திரும‌ண‌மாகிப் ப‌த்தே மாத‌ங்க‌ளில் குழ‌ந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொட‌ர்ந்த‌ ம‌ன‌க்க‌ச‌ப்புகளாலும் கொடுமைக‌ளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திரும‌ண‌த்தை நினைத்தும் பார்க்க‌ முடியாம‌ல் எதிர்கால‌மே இருண்டுவிட்ட‌தாயக் க‌ண்ணீரில் நாட்க‌ளைக் க‌ரைக்கும்
பேதைக‌ள் இருக்கிறார்கள்.

கல்வி என்ப‌து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும் க‌ருவியாக‌ இருப்பதும் இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம்.ப‌டிப்ப‌தும் வேலைக்குச் சென்று ச‌ம்பாதிப்ப‌தும் ஓர‌ள‌வு த‌ன்ன‌ம்பிக்கையைப் பெண்க‌ள் ம‌ன‌தில்
விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் த‌ன்போக்கில் த‌ங்க‌ளுக்குப் பிடித்த‌ வ‌கையில் தீர்மானித்துக் கொள்ளும் சுத‌ந்திர‌ம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.

மேலும்,

சிக‌ப்ப‌ழகும், க‌ருமையான‌ நீண்ட‌ கூந்த‌லும், ச‌ம்க்கி ஒர்க் வைத்த‌ ப‌ட்டுப் புட‌வைக‌ளும்தான் உங்க‌ள‌து அத்தியாவ‌சிய‌த் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்ப‌ழுக்க‌ற்ற‌ கிச்ச‌ன் மேடைக‌ளும் உங்க‌ள் க‌ட‌மைகள்.

உங்க‌ளைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஆண்க‌ள் வாய் பிள‌ப்ப‌தும் த‌டுமாறிக் கீழே விழுவ‌தும்தான் உங்க‌ள் பெருமைக‌ள் என்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வ‌ந்த‌ மிச்ச‌ நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.

பெண்ணாக‌ப் பிற‌ந்த‌த‌ற்குப் பெருமைப்ப‌டும் வித‌மாக‌, என்னைக் கவ‌ர்ந்த‌ பெண்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக்கள்!

–          தீபா

_________________________

தீபா
ப‌டிப்பு: க‌ட்டிட‌ப் பொறியிய‌ல்
வ‌சிப்ப‌து: சென்னையில் க‌ண‌வ‌ர் குழ‌ந்தையுட‌ன்
வேலை: த‌னியார் நிறுவ‌ன‌த்தில்
வ‌லைப்பூ ஆர‌ம்பித்த‌ நோக்க‌ம்:  முதலில் எழுதிப் ப‌ழகத்தான். ஒத்த‌ சிந்த‌னையுடைய‌ ப‌லரின் ந‌ட்பு கிடைத்த‌தும், நல்ல எழுத்துக்களை வாசிப்பதும் என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்க‌ உத‌வுகிற‌து.

தீபாவின் வலைப்பூ:http://deepaneha.blogspot.com/

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.

45

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 3

எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. பின்னர், ஒரு பதிவு கூட ஒழுங்காக எழுதாத என்னையும் பெண் பதிவர் குழுவில் சேர்த்து மகளிர் தினத்தையொட்டி எழுதச்சொன்னதை வேறென்பது?! மறுத்தாலோ என் மேலேயே எனக்கு மரியாதை போய் விடும் அளவுக்கு இருந்தது வந்த அழைப்புக் கடிதம். அதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டேன்.

நண்பர் ஆணாதிக்கம், இன்றைய பெண்கள் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறார். எனக்கு பதில் சொல்ல நிறையத் தகுதிகள் கிடையாது. நான் இதை ஒரு பொய்யான தன்னடக்கத்தோடு சொல்லவில்லை. நிஜமாகவே நான் அவ்வளவு ஆணாதிக்கத்தினால் பாதிக்கப்பட்டேனா என்று நீண்ட நாட்களுக்குப்பின் யோசித்துப் பார்க்க வேண்டி வந்தது. எனக்கு அவர் கேட்டிருந்ததுக்கான பதிவாக இது அமையுமா என்று தெரியவில்லை. என்னுடைய சில அனுபவங்களையும் அதன் மூலம் வந்த அறிவையும் வேண்டுமானால் பகிரலாம்… இது மேலோட்டமாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு எழுதிய பின் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும், பல பெண்கள் என்னைப் போல இருக்கிறார்கள் என்பதால் இதை அனுப்பி வைக்கிறேன்.

_____________________________________

நான் சுதந்திரமானவளா?

அவசரப்படாமல் கொஞ்சம் என்னைப் புரிந்து கொண்டால் நான் இப்போது  A சென்டர் பெண். சரி தப்பு மீறி என் இன்றைய நிலை அதுதான். வேலையில் நல்ல பதவியில் இருக்கிறேன். பொருளாதார சுதந்திரம் உண்டு. கார் வாங்கி ஒட்டுகிறேன். உள்நாடு வெளிநாடு என்று தனியாக அலைகிறேன். பல நாட்டவரைச் சந்திக்கிறேன். தெரியாதவர்களோடு உணவருந்த வெளியே செல்கிறேன்; சில சமயம் சேர்ந்து ஒரே வீட்டில் அவர்களோடு தங்குகிறேன். அலுவலகத்தில் பல ஆண்கள் சில பெண்கள் எனக்காக/என்னோடு வேலை செய்கிறார்கள். இரவு கண்ட நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறேன்.

வீட்டில் மகாராணி. சுவாதீனம் சோம்பேறியாக்கும் அளவுக்கு உண்டு. வீட்டில் எல்லா விஷயத்திலும் seat in the table  உண்டு. என்னவாவது செய்து கொள் – டென்ஷன் ஆகாமல் இருந்தால் போதும் என்ற ஒரே விதி. நான் எதற்காகவாவது கவலைப்படாத வரையில் யாருக்கும் என்னைப் பற்றி கவலையில்லை.ஆனாலும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர லேட்டாகும்போது விசாரித்து ஃபோன் வரவில்லையென்றால் என்ன இப்படி கை கழுவி விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

நான் ஒரு முடிவெடுக்கும் முன்பு அவரைக் கேட்க வேண்டும் என்றால் புரிந்து கொண்டு ஆமோதிப்பவர்கள், அவர் என்னைக் கேட்டுக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால் அவரை “Hen Pecked” என்று கேலி பேசுவது கடுப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால்… சுத்தமாக இருட்டி மூடி விடுகிறது.

வீட்டில் இருக்கும் போது ஆஃபிசில் செய்யாத வேலைகள் ஞாபகம் வருகின்றன. ஆஃபிஸில் இருக்கும் போது வீட்டில் இல்லாத குற்ற உணர்வு வருகிறது.

அவ்வப்போது ரோட்டில் ஆண் டிரைவர்கள் நான் பெண் என்பதால் தவறு மட்டுமே செய்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். நான் வீட்டில் செய்ய மறந்த வேலைகளைப் போய் செய்யுமாறு ஞாபகமூட்டுகிறார்கள்.

பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கார்பெண்டர், கார் மெக்கானிக், மேஸ்த்ரி போன்ற டெக்னிக்கல் வேலை செய்பவர்கள் பொதுவாக நான் சொல்வது தவறு அல்லது எனக்குப் புரியாது என்று அலட்சியப் படுத்துகிறார்கள். நான் சொன்னதையே அவர் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள். “அவர் வயதும் தாடியும்தான் காரணம்… அவருக்கு ரிமோட் பயன்படுத்தவே நான் தேவை” என்று நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சில சமயம் சுருக்கென்று இருக்கத்தான் செய்கிறது.

அலுவலகத்தில் diversityக்காக பெண்களை சில விஷயங்களில் உப்புக்கு சப்பாணியாகச் சேர்த்துக் கொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. பிரசவத்திற்குப்பின் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண் ஊழியர்களை அல்லது பகுதி நேர வேலை செய்யும் பெண்கள் பற்றி இளக்காரமாகப் பேசிக் கேட்கும் போது கோபம் வருகிறது.

கணவரின் மேலாளர் என்ற முறையில் சில கஷ்டப்படும் மனைவிகள் என்னை அணுகி “வேலையிலிருந்து அனுப்பி விடு”, “இரவு வேலையாக மட்டும் கொடு” என்னும் போதெல்லாம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு வழியில்லை என்று மட்டும்தான் சொல்ல முடிந்திருக்கிறது.

தான் பெண் என்பதை சரியாக வேலை செய்யாத போது சமாளிப்பதற்காக பயன்படுத்தும் பெண்களும், ஆண்களை manipulate செய்யும் பெண்களும், சட்டத்தைக் கொண்டு ஆண்களை அலைக்கழிக்கும் பெண்களும் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விட அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

ஆஃபிஸில் நல்ல நண்பர்கள் கூட, ஆண்கள் கோபமாக விவாதித்தால் aggressive என்றும், பெண்கள் கோபமாக விவாதித்தால் (என்ன, கொஞ்சம் குரல் கிறீச்சீட்டு விடுகிறது) emotional  என்றும் சொல்வது விநோதமாக உள்ளது. அலுவலகத்தில் என்றாவது என்னை மீறி அழுதுவிட்டால் மறுநாள் விடியவே வேண்டாமென்று தோன்றுகிறது.

பல இடங்களில் வேலை பார்த்த, பல பெண்களின் அனுபவத்தில் – பொதுவாக ரொம்ப முக்கியமான பொறுப்பான வேலை, பயிற்சி என்றால் முதலில் ஆண்களைத்தான் அணுகுவார்கள்; அதே சமயம் கஷ்டமான அல்லது கோபத்திலிருக்கும் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தப் பெண்களைத் தேடி முன் நிறுத்தவும் செய்வார்கள் என்று தெரிகிறது.

எப்படியோ Glass Ceiling  கார்ப்பரேட் உலகத்தின் ஒரே உண்மை – சில விதிவிலக்குகளைத் தவிர. “இந்தப் பழம் புளிக்கும். கொஞ்சம் கீழேயே இருந்தால்தான் வீட்டு வாழ்க்கையையும் கொஞ்சம் வாழ முடியும்” என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. பணத்தேவை கருதி கணக்கில் வராத நாட்களாக வருடங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

________________________________________

இப்படி என் சொந்தக் கவலையெல்லாம் மீறி வசதி இருக்கும் போது நேரம் காலம் பார்த்து, பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை ஸ்கூல் ஃபீஸூக்காக கொடுத்த பணத்துடன் கடன் வாங்கியாவது விமர்சையாகக் கொண்டாட ஆசைப்படும் வீட்டு வேலை செய்து கொடுப்பவரை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

தேவநாதனின் பெண் குழந்தைகளை பள்ளியில் தொடரத் தடை செய்பவர்களையும், வன்புணர்ச்சிக்குள்ளான 12 வயது சிறுமி போலீசில் புகார் சொன்னதால் பள்ளியை விட்டு அனுப்பப் பார்ப்பவர்களையும் ஏதாவது செய்தால் கண்டிப்பாக முக்தி நிச்சயம் என்றே தோன்றுகிறது. Child Abuse என்று கேள்விப்பட்டால் பாடத்தில் சொல்லப்பட்ட Pedophilic என்ற வெறும் வார்த்தையையும் அதன் காரணங்களையும் தாண்டி அந்த கொடுமைக்காரன் மீது பாயத் தோன்றுகிறது.

மொத்தத்தில் கஷ்டப்படும் பிற பெண்களைப் பார்த்து holocaust survivor’s guilt வருகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டிருப்பதைப் போல சில பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே சமயம் பல பெண்கள் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.

இதற்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று தீர்மானமாகவில்லை. பெண்ணியவாதிகள், பெண்கள் இயக்கம் என்றெல்லாம் கேட்டால் ரொம்பத் தயக்கமாக இருக்கிறது.

________________________________

எப்படி இப்படி ஆனேன்?

நான் வளர்ந்தபின் சுதந்திரமாக இருப்பதற்காக, வளர்க்கப்பட்டேனா?

மிருகங்களை விட மனிதர்கள்தான் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமளவு வளர பல வருடங்கள் ஆகின்றதே. இந்த சார்புள்ள சூழலில் இருந்து சுதந்திரமானவளாக வளருவதுதான் எனக்கு சிறிது கடினமானதாக இருந்துள்ளது. நம்மால் நமக்கே உபயோகமாய் இருக்க முடியாத நிலை, வயது.

எனக்கு இருக்கும் கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நான் தேர்வு செய்யும் எந்த உறவும் நன்றாக இருப்பதற்கும் நாசமாய்ப் போவதற்கும் நான் மட்டுமே காரணம் என்று எல்லாச் சமயங்களிலும் சொல்லமுடியாது என்றாலும், என் பொறுப்பின் பங்கு அதில் அதிகமுள்ளது. ஆனால் தான் சுதந்திரமாக இல்லை என்று புரிந்து கொள்வதற்கும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வதற்கும் கூட வளர்ப்பின் பாதிப்பு தேவையாகிறது.

என் பிறந்த வீட்டில், நெருங்கிய உறவினர் வீடுகள் உட்பட, பெண் குழந்தைகள் மட்டுமே. ஒவ்வொரு முறை குழந்தை பிறந்த செய்திக்குப் பின் “இதுவும் பொண்ணாப் போச்சு, போ!” என்ற அங்கலாய்ப்பு நான் மூத்த பேத்தி என்பதால் கேட்டிருக்கிறேன். நானும் வீட்டில் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று பெரியவர்களோடு சேர்ந்து கொண்டு கவலைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து 9 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே தங்கையை அவள் பிறந்த அன்று பார்த்து தம்பியாகப் பிறக்கவில்லையே என்று அழுதிருக்கிறேன்.

பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லித்தான் வளர்க்கப்பட்டேன். ஆனால் அறிவு வளர்கையில் இப்படியும் இருக்கலாம் என்று படிக்க, பார்க்க, கேட்க முடிந்தது. அப்படி இருக்க ஆசைப்படுவதில் நாலில் ஒன்றாவது பெற பெற்றவரில் ஒருவரது ஆதரவாவது இருந்தது. தான் செய்ய முடியாததை என்னை செய்யவைக்க வேண்டி வந்த ஆசையா, இல்லை, பிள்ளைப்பாசமா என்று நான் புரிந்து கொள்ளும் முன்பே கிடைக்காத மூன்றை நினைத்து, கிடைத்த ஒன்றிற்கும் நன்றி மறந்திருக்கிறேன். “ஆம்பிளையாக வளர்கிறேன்! அடங்காப்பிடாரியாக ஆகிவிட்டேன்” என்று பேச்சு கேட்டால் இன்னும் கொஞ்சம் வீடு கட்டி ஆட்டம் காட்டி இருக்கிறேன். நான் வருத்தப்பட்டால் கலங்கிவிடும் சில உறவினர்களால் தப்பிப் பிழைக்க விடப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப பதின் வயதுகளில் பெண் ஆண் இருவருக்கும் வளர்ந்த பின் உள்ள பொதுவான எதிர்காலம் நான் வளர்ந்த ஒரு சிறிய டவுனில் உள்ளவர்களைப் பார்த்துப் புரிந்த பின் பயந்து நடுங்கியிருக்கிறேன். இரவு வேளைகளில் தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு பெற்றவர்கள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டிருக்கிறேன். ஒரு முறை, அவர்கள் ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” படித்து விட்டு, “இப்படியெல்லாம் நம் பெண்ணுக்கு நடந்து விடக்கூடாது; அதனால்தான் அவள் விருப்பத்திற்கு விடக்கூடாது” என்று (நாமொன்று எழுத அவர்களாக ஒன்று புரிந்து(!) கொண்டு படிக்கும் சில பதிவுலக நண்பர்கள் போல) பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்கள் பெற்ற பெண்ணாய் மழை நாட்களில் எங்கும் வெளியே செல்லாமல் கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தும் பார்த்தேன்!

சினிமா பாடல்கள் கேட்கக் கூடாது, யாரும் வீட்டுக் கதவைத் தட்டினால் பெண்கள் போய் திறக்கக் கூடாது என்ற விதிகளுக்கிடையில், வீதியில் நான் சைக்கிள் ஓட்டினதே ஒரு சாதனை ஆகியது. சல்வார் கமீஸ் இமாலய சாதனையாகியது. பத்தாம் வகுப்பில் தாவணி போட மறுத்தது பெரும் புரட்சி வெடித்ததாகக் கருதி அடக்கப்பட்டது. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் விஷயங்கள் ஏன் என்னை அப்போது அவ்வளவு பாதித்து வெறுப்பாக்கின என்று இன்றும் புரியவில்லை. ஏதோ நான் மட்டுமே அடக்கி ஆளப்படுகின்ற victim என்ற உணர்வு. காப்பாற்ற ராஜகுமாரர்கள் மட்டும் வரப்போவதில்லை என்ற ஒரே தெளிவு. புத்தகங்கள் மட்டும் கிடைத்திருக்கா விட்டால்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

நான் படித்த புத்தகங்களும், பேசிக் கேட்ட சில படைப்பாளிகளும் எதையோ திருகி விட்டனர்; சினிமாவில் நடிக்க ஊரை விட்டு சென்னை வரும் இளைஞர்களைப் போல, எள் விற்ற காசில் சினிமா எடுக்க ஆசைப்படுபவர்களைப் போல, நானும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி வேலைக்கு தயாராவது என்ற முடிவு எடுத்து விட்டேன். ஒன்று மட்டும் தெரியும் – “+2 வரை பொறுக்க முடியாது! பொருளாதார சுதந்திரம்தான் என் சர்வரோக நிவாரணி!”

என்றோ சுஜாதா படித்து, அவரால் கேம்பஸ் இன்டர்வியூ செய்யப்பட்ட பக்கத்து வீட்டு அண்ணன் பேசியதைக் கேட்டு கம்ப்யூட்டர் என்ற வார்த்தை மட்டும் நிலாவிடம் ஒட்டிக்கொண்ட ஜீனோ போல என்னோடு ஒட்டிக்கொண்டது. “15 வயசில கல்யாணம் பண்ணலைன்னா பின்னாடி கல்யாணத்தில் பிரச்சினை வரும். எட்டுல சனி” என்ற இரவு நேரப் பேச்சுக்கள் பீதி, பேதியைக் கிளப்ப, பத்தாவது ரிசல்ட் வந்தவுடன் அறிவித்து விட்டேன். “நான் இனிமே ஸ்கூல்க்கு போகப்போறதில்லை. கம்ப்யூட்டர் படிக்கப் போறேன்.” சுத்தமாக எந்த காலேஜ், எந்த இன்ஸ்ட்டிட்யூட், எந்த கோர்ஸ் என்று ஒண்ணும் தெரியாது. பேப்பரில் பார்த்த ஒரு விளம்பரம் மட்டும் கலங்கலாக ஞாபகம்.

அதற்கப்புறம் மூன்று வருடங்கள் ஹாஸ்டல், ஆறு மாதங்கள் கழித்து சென்னை மாநகரில் முதல் சம்பளம். Mission Accomplished but Partially பணம் சம்பாதிக்கும் பச்சைமண்!

பிறகு ருத்ரனைச் சந்தித்தல், அவரால் எல்லாவகையிலும் என் இப்போதைய வளர்ச்சி, உறவினர்களின் எமோஷனல் ப்ளாக்மெயில், நான் என் சுயநலம் பேணல், காசுக்காக அமெரிக்க வாசம், பெற்றோர் ஒரு வழியாக சமாதானமாதல் என்று பல அத்தியாயங்கள் தாண்டி, இப்போது.

என்னில் பிறர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்த முயலும் நேரங்களில் மரத்துப்போய் கடினமாக நின்றிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருக்கிறேன் என்றபோது நான் என் நிலையில் அழுத்தமாக இருக்கிறேன் என்று என்னையே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதில் எவ்வளவு என்னால் மட்டுமே முடிந்தது, இதில் எந்த நல்லது கெட்டதுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு, இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் இருக்கிறதா, கடவுள் காப்பாற்றியதா என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு என்னால் இன்னும் அன்னியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

______________________________________

என்ன சொல்ல வந்தேன்?.

இவ்வளவு நேரம் சுய புராண கொசுவத்திக்குப் பிறகு என்ன சொல்ல வந்தேன் என்றால்,

ஒரு பெண் மணந்து கொள்வதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது முதல், மணப்பதானால் யாரை மணந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும் அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்பதால் அவள் பொறுப்பும் அதிகம். சுதந்திரம் வேண்டுமென்றால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அலுவல், தொழிலும் அப்படியே.

மணந்தபின் வரும் உறவு முறைகளைச் சந்திக்க, சமாளிக்க அதற்குமுன் அவள் முழுவதும் தயாராகி இருக்க வேண்டும் – தேவைப்பட்டால் அந்த உறவுகளைத் துறந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவும் தயாராகி இருக்க வேண்டும். சொல்வது எளிது! ஆனாலும் அந்த நேரத்து விரக்தியை மீறி மீண்டு வரத் துணிவு, தேவை என்றவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தன்னிறைவுக்கான தகுதிகள் -அந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே தேவை.

இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது.

பள்ளிக்கல்வி கற்றுக் கொடுப்பதை விட இலக்கியம் கற்றுக் கொடுக்கும் என்பது, என் வாழ்க்கைப் பாடம். எப்படியும் கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆண் பெண் எல்லோருக்கும் கண்டிப்பாகத் தேவை. அதைத் தவிர, தன்னளவில் ஒரு பெண் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

  • உணர்வு பூர்வமான சார்பு நிலையிலிருந்து வெளியே வரமுடியாது – அதனால், அதைப் பற்றிய புரிதலாவது வேண்டும். உணர்வுகளை வைத்துச் செய்யப்படும் ப்ளாக்மெயில், குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி குளிர்காயப் பார்க்கும் கயமையை அடையாளம் கண்டு விலகுவது.
  • பெற்றோர் உறவினரிடமிருந்துப் பெற்ற சுதந்திரத்தை கணவன், பிள்ளையிடம் இழக்காமலிருப்பது.
  • பெற்ற பெண்ணை அடிமையாக இருக்கவும், ஆணை ஆதிக்கம் செய்யவும் பழக்காமல் இருப்பது.
  • மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது. Sometimes it is better to give up fighting wars to win battles

பிறர் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

  • ஒரு நாள், “மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” என்று எல்லோரும் கேட்குமாறு ஆக வேண்டும். சீக்கிரமாய் இந்த நாள் வர முடிந்ததைச் செய்யுங்கள்.
  • வீட்டிலும் வெளியிலும் ஆண்தான் அல்லது பெண்தான் செய்ய வேண்டிய வேலை என்று நிறைய வேலைகள் இல்லை. Dignity of Labour ஐ வீட்டிலும் ஆரம்பிக்கலாம்.
  • “உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?” என்று கேட்டு லொள்ளு பண்ணாமல் திருச்செங்கோடாய் இருக்க உதவி செய்யுங்கள். “Who wears the pants in your house?” என்பது அபத்தம். பாண்ட்டோ ஸ்கர்ட்டோ எப்போது எந்த சைஸாக இருக்கிறது, யார் அதை அணிந்தால் அந்த நேரம் பொருத்தம் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டியது.

–   உமா ருத்ரன்

______________________________

உமா ருத்ரன்:

படித்தது: கணினி தொழில்நுட்பப் பட்டயம், மனவியல் முதுநிலை, மேலாண்மை முதுநிலைப் பட்டயம், தர மேலாண்மை முதுநிலை, ஆய்வுப்படிப்பு இப்போதைக்கு ஆசை மட்டுமே.
பிடிப்பது: சினிமா, இலக்கியம், கலை, இசை
வேலை: தனியார் கணினி தொழில் நுட்ப நிறுவனமொன்றில் மேலாளர்
வாழ்வது: கணவர் டாக்டர் ருத்ரனுடன் சென்னை.
உமா ருத்ரனது வலைப்பூ:http://umarudhran.blogspot.com/

_______________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 2

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத  லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம்.  ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம்  தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர்,  கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி  சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள்  நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட  ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால்  லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட  சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை.  எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை  திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன.  ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில்  மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே  சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக  பெண்களே  இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன?  ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

–          சந்தனமுல்லை.

_______________________________________

சந்தனமுல்லை – ”எம் சி ஏ பட்டதாரி. பள்ளி படிப்பை இந்து மேனிலைப் பள்ளி,ஆம்பூரிலும், கல்லூரி படிப்பை அன்னை தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானலிலும் முடித்தேன். தற்போது,  ஒரு தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். மகள் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனது சிறுவயது நினைவுகளை பதிவு செய்ய  தொடங்கிய வலைப்பூ, தற்போது  மகளுடனான தருணங்களையும், சமூகத்தில் என்னை பாதித்த  நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். ”

சந்தனமுல்லையின் வலைப்பூ: http://sandanamullai.blogspot.com/

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!


நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததில் குமுதத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் கூரூப் பத்திரிகைகள் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலைமுன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.2.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள். இந்த தீடீர் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து போலீசார் தயாராக குமுதம் அலுவலக வாசலில் குழுமியிருந்தனர்.

போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நித்தியானந்தனையும், அதற்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை ஆதரித்தனர். சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.

இறுதியில் போலீசின் தள்ளுமுள்ளுவிற்குப்பிறகு ஏ.சி, டி.சி அதிகாரிகளோடு காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தாவை உருவாக்கியும் இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை மக்களிடம் அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில் எழுப்பட்ட முழக்கங்கள்:

  • மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
    நித்யானந்தனை வளர்த்துவிட்ட
    குமுதமே மன்னிப்புக்கேள்!
  • தடைசெய்! தடைசெய்!
    தமிழக அரசே தடைசெய்!
    சாமியார்களின் பிரச்சாரத்தை
    தடைசெய்! தடைசெய்!
  • கைதுசெய்! கைதுசெய்!
    நித்யானந்தனைக் கைதுசெய்!
    பறிமுதல்செய்! பறிமுதல்செய்!
    அவன் சொத்துக்களை பறிமுதல்செய்!
  • விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
    சாய்பாபா, பிரேமானந்தா,
    சங்கராச்சாரி, தேவநாதன்,
    கல்கி, நித்தியானந்தா
    கழிசடைகளை விரட்டியடிப்போம்!
  • அடித்து விரட்டுவோம்! அடித்து விரட்டுவோம்!
    காவியுடைக்க கிரிமினல்களை
    நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!

______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழகம் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்ட சுவரோட்டிகளைக் கீழே பார்க்கலாம்.

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!


vote-012( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென  ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம்  ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! படம் போட்டு காசு பார்க்க புவனேஸ்வரி, பிலிம் காட்டி கல்லா கட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு  சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா?  அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி.  இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது!  (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும்,  அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு..  காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்.)

ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!

50

vote-012மார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.

ஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)

________________________________________
உ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.

அந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அதுவும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.

இவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.

இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.

வரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.

கட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.

இனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.

________________________________________________

மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா? அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

கவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை! அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆனால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.

ஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்!

____________________________________________

இன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா?

கட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா?

குடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா?

சகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் இருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.

ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.

குற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

_____________________________________

வரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

வரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன? ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.

பாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.

அந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி  என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.

தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal.    அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.

அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.

தங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.

நிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்?

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.

அச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா? அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.

சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

97


பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும்

vote-012இந்து மதத்திற்கு பெரிய ‘களங்கம்’ ஏற்பட்டு விட்டது.

புனிதமான இந்து மதத்தைக் களங்கப்படுத்தி விட்ட நித்தியானந்தா, தான் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே வெளியில் நடமாட வேண்டும் என்று இந்துப் பாசிஸ்டுகளும், தமிழ் பெண்களையும் தமிழ் கலாசாரத்தையும் இழிவு படுத்திவிட்டார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலரும் கொதித்துப் போய் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்ரமங்கள் மீது தாக்குதல், சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து எரித்தல், உருவபொம்மை எரிப்பு என்று நமது மரபார்ந்த போராட்டங்கள் மீடியாவின் காட்சிப்படுத்தலோடு தடபுடலாக இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இலவசமாகக் கிடைத்த வீடீயோ க்ளிப்பிங்ஸ்சை வைத்து தனது ரேட்டிங்கையும் உயர்த்திக் கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி. தி.மு.க தலைவர்களின் மைனர் கால லீலைகளை படம் பிடித்திருந்தால் பல ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் வண்ணம் ஃபுட்டேஜ் கிடைத்திருக்கும். என்ன இருந்தாலும் தன்னையே படம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்களில்லை.

நித்தியை கார்ப்பரேட் தீர்க்கதரிசியாக உருவாக்கிய குமுதமோ நித்தியின் ஆபாச வீடியோவை தன் இணையத்தில் கூச்சமில்லாமல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டுகிறது. “ஏண்டா நாயே, நீதான்டா அந்த நாய்க்கு ஐந்து வருடமா பூஜை போட்டு கொண்டாடினாய்” என்று வாசகர்கள் செருப்பைக் கொண்டு அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் குமுதம் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கல்லாக்கட்டுகிறது

நித்தியின் ஆபாசத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்ட நக்கீரன் இணையமோ அந்த வீடியோவின் சில பகுதிகளை மட்டும் டிரெய்லர் மாதிரி போட்டு வாசகன் நித்தி மோனத்தில் ஆட்படும் வேளையில் எடிட் செய்யப்படாத முழு வீடியோவையும் காண சந்தா கொடுங்கள் என்று சுயமைதுனம் செய்வதோடு நைசாக பாக்கெட்டில் கைவைக்கிறது. ஆபாசப் படத்தை விற்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம். நக்கீரன் செய்து கொண்டிருக்கிற இந்த விற்பனைத் தந்திரம் என்பது சட்ட பூர்வ நீலப்பட விற்பனையல்லாமல் வேறென்ன?  முன்பு பிராபகரன் படத்தை மாஃபிங் செய்து ஆபாசமாக கல்லாக் கட்டியவர்கள் இன்று நித்தியின் கைங்கரியத்தில் இரண்டாவது பதிப்பு போட்டெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

ஈழப் போரின் போது கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு, தாங்கள் இழைத்த துரோகத்தை மறைத்து, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கிறது என்றெல்லாம் ஈழ மக்களின் துயரத்தை மறைத்தும் கொலைகார இந்தியாவுக்கு காவடி தூக்கியும் எழுதிவந்தார்கள். கடந்த சில வாரங்களாக வித விதமான ஆபாச சாமியார்களின் உல்லாச ஆசிரமங்கள், கருவறைக் களியாட்டங்கள், மோசடிகள், என்று ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

கருவறையில் செக்ஸ் லீலை செய்த தேவநாதனுக்கு முன்னரும் பின்னருமாக வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றன. வாசகர்களும் பழக்கப்பட்டுப் போன தங்களின் வக்கிர ரசனைகளுக்குத் தீனி போடுகிறது என்பதற்காக இவைகளைப் படித்துக் கொண்டே ஊர் ஊராக ஆஸ்ரமங்களுக்கு அலைகிறார்கள். கவர்ச்சி நடிகைகளின் இடத்தை சாமியார்கள் பிடித்துக் கொண்டதால் இனி இவை அடிக்கடி வாசகர்களுக்காக படைக்கப்படும்.

________________________________________

யார் இந்தச் சாமியார்கள்?

பெரியவா….. சின்னவா….எல்லோரது போதனைகளையும் போட்டு வெகு மக்களிடம் காசு பார்க்க முடியாத சூழலில் ஆனந்த விகடனால் இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுவாமி சுகபோதானந்தா. “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்ற தொடரைத் துவங்கி சுகபோதானந்தாவை பிரபலமாக்கியது ஆ.வி. இதே சுகபோதானந்தா பின்னர் குமுதம் இதழிலும் எழுதினார். பின்னர்தான் ஆ.வி சத்குருவைக் கொண்டு வந்தது. ஆனந்த விகடனின் இந்த போட்டியை எதிர்கொள்ள குமுதம் நித்தியானந்தாவைக் களத்தில் இறக்கியது.

இன்றைய தேதியில் சத்குரு நக்கீரன், ஆனந்த விகடன், விஜய் தொலைக்காட்சி என எல்லா இதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் எழுந்தருள்கிறார். கூடவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களைக் கொண்டு சத்குருவை வைத்து நேர்காணல் செய்து வெளியிட்டதும் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆக இந்தச் சாமியார்களை உருவாக்கியது ஊடகங்கள்தான்.

சுவாமி சுகபோதானந்தா, சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்.. திடீரென ஒரு நாளில் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்?  ஒரு நள்ளிரவிலோ ஒரு ஆதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மதவாதிகளும் கடைவிரிக்கிறார்களோ எங்கெல்லாம் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் காலம் தோறும் புதிது புதிதாக இந்த ஆபாச்ச் சாமியார்கள் உருவாகிவருகிறார்கள். இந்த சாமியார்களின் தேவை ஆளும் வர்க்கங்களின் அடிப்படைத் தேவை. எப்படி என்பதில்தான் இந்த காவியுடை காமப் பிசாசுகளின் உண்மை முகம் ஒளிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஆகமவிதி, மனுதர்மம், மதம், வேதம் என்று வருண தர்மத்தின் அடிப்படையின் பார்ப்பன மதம் பரப்பி வந்தார்கள். பழமையை விட்டுக் கொடுக்காமல் ஆகம விதிகளை கறாராகக் கடை பிடித்து பார்ப்பன வெறியை மக்கள் மீது திணித்து வந்த சங்கரமடம் மாதிரியான மடங்கள் ஒரு வகை. இந்த பார்ப்பன சாமியார்களோ கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். கட்டுப்பாடு என்றால் செக்ஸில் அல்ல செக்ஸ் விதிமுறைகளில். அதாவது இவர்கள் மனுதர்மப்படி பார்ப்பன பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார்கள். சூத்திரப் பெண்களைத் தொட்டால் தீட்டு அல்லவா?

இந்த பார்ப்பன அதிகார பீடங்களின் அடுத்த வடிவம்தான் கார்ப்பரேட் சாமியார்கள்.  மறுகாலனியாதிக்கம் அறிமுகமான தொண்ணூறுகளை ஒட்டிய காலப்பகுதியில் இவர்கள் அறிமுகமானார்கள். கார்ப்பரேட் சாமியார்கள்தான் நவீனமானவர்கள் அல்லவா? அவர்கள் பார்ப்பனர்களுடனும் உறவு வைப்பார்கள் சூத்திர பெண்களுடனும் உறவு வைப்பார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பதில்லை.ஆனால் கருவைறையில் செக்ஸ் வைத்தாலும் சரி மடத்துக்குள்ளேயே கொலை செய்தாலும் சரி பார்ப்பனச் சாமியார்களாக இருந்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியும், அதுவே சூத்திர பிரேமானந்தாவாக இருந்தாலோ ஏனைய சூத்திர மோசடிச் சாமியார்களாகவோ இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இந்து மதம் காப்பாற்றப்படும். இவர்களை தண்டிப்பதன் மூலம் ஜெயேந்திரன் செய்த பாவத்தை கழுவிக் கொள்கிறது, மனுதர்மம், ஆகமவிதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை தயார் படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகள், கருப்புப் பண முதலைகள் என எல்லோருமாகச் சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அவர்களே புதிய சாமியார்களையும் உருவாக்கினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியால் உருவான புதிய தலைமுறையைக் குறிவைத்து சாமியார்களை உருவாக்கியது ஊடகங்களே.

சாமிப்படங்களைக் காட்டுவதை விட இந்துமதத்தின் கருமக் கோட்பாடுகளை கொஞ்சம் மென்மையாக ஆடல் பாடலோடு போதித்து வந்தார்கள். இவர்களில் டான்ஸ் சாமியார் சிவசங்கரபாபாவும், யாகவா முனிவரும் லைம் லைட்டுக்கு வந்தது இப்படித்தான். இன்னொரு பக்கம் பங்காரு அடிகளார் என்னும் பெயரில் செவ்வாடை வழிபாட்டைத் துவங்கி மேல்மருவத்தூரையே தன் வசப்படுத்தினார். இன்று மலைமுழுங்கி மகாதேவன் மாதிரி தோற்றம் அளிக்கும் பங்காருவின் சக்தி பீடம் மிகப்பெரிய நிறுவனம்.

தனது பிறந்த நாளின் போது 100 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார் பங்காரு. அப்படி என்றால் எத்தனையாயிரம் கோடிகள் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார் இந்த செவ்வாடைச் சாமியார்? பார்ப்பன மடங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியவில்லையே என்று தயங்கி நின்ற திராவிட இயக்கத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.கவினர் இன்று பங்காரு அடிகாளாரின் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள். ( அமைச்சர் துரைமுருகன் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியதும், காஞ்சி மடங்களுக்குச் சென்று வருவதும் எல்லோருக்கும் தெரிந்த கதை)

சாய்பாபா என்னும் பன்றித்தலையன் பாபாவின் மோசடிகளை சில வருடங்களுக்கு முன்னர் வெளிக் கொண்டு அம்மணமாக்கும் முயற்ச்சியை வெளிக்கொண்டு வந்தது பி.பி.சி மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் உயரிய ஆளும் வர்க்கங்கள் வரம் வேண்டும் இடமாக இருக்கும் புட்டபர்த்தி ஒரு மர்மமான பிரதேசம் என்று பல ஊடகங்கள் எழுதியும் இந்திய ஆட்சியாளர்கள் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். சாய்பாபா ஒரு ஓரினச் சேர்க்கைப் ப்ரியன் என்பதையும் கட்டாயமாக பல இளைஞர்களை கரெக்ட் செய்து சிஷ்யப் பிள்ளைகளாக வைத்திருப்பதையும் அமபலப்படுத்திய வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு.

__________________________________

ரௌடி அரசியலின் காவி முகம்?

வேதாந்தியை உங்களுக்கு நினைவிருக்கும். சேதுக் கால்வாய் தொடர்பாக கருணாநிதி, ராமன் குறித்துத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த வேதாந்தி கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு என்று அறிவித்தான். அந்த காவி உடை மிருகத்தை நீங்கள் ராமனின் காவலனாக நினைக்கக் கூடும், ஆனால் அதுதான் இல்லை. இந்திய முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் திருட்டு வங்கியாக பணக்காரர்களுக்கு செயல்பட்டான் வேதாந்தி.

வேதாந்தி மட்டுமல்ல எவனெல்லாம் ஏழைகளுக்குச் சேவை செய்கிறோம் என்று அறக்கட்டளை நிறுவி சாமியார் போர்வையில் போதுச் சேவைக்கு வருகிறானோ அவன் எல்லாமே இம்மாதிரியான கருப்புப் பண பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறான். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு வரி விலக்கு அளிக்கிறது. கோடி கோடியாக பகதர்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆஸ்ரமம் என்ற பெயரில் பெரிய நவீன பாலியல் விடுதிகளைக் கட்டுகிறார்கள். ஒரு மோசடிச் சாமியார் மோசடி நிறுவனமாக மாறுவது இந்தியப் பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.

நித்தியின் உல்லாச வீடியோ குறித்துப் பேசுகிற ஊடகங்கள் என்றாவது நித்தியின் ஆஸ்ரமங்கள் குறித்தோ கோடிகளை ஈட்டி, மேல் மட்டத் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட விதம் பற்றியோ எழுதியிருக்குமா? தான் அடிக்கிற கொள்ளையில் கொஞ்சம் பணத்தை பிச்சைக்காசாக மக்களுக்கு இவர்கள் கொட்டி விடுவதால் சமூகச் சாமியார்களாகவும் உருவாகிவிடுகிறார்கள். தொண்ணூறுகளில் ரௌடி அரசியல் கூட்டு பற்றி ஆராய அமைக்கப்பட்ட வோரா கமிட்டி ரௌடி – அரசியல்வாதி – போலீஸ் கூட்டின் ஒரு அங்கமாக சாமியார்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. ஆமாம் பெரும் பண முதலைகளின் கூட்டு இல்லாமல் எந்த ஆஸ்ரமங்களும் செயல்படவே முடியாது. இப்படி பலப் பல கோடி ரூபாய்களைக் கொண்டு கொட்டி வைக்க சங்கரமடமும் பயன்படுகிறது, நித்தியானந்தா மடமும் பயன்படுகிறது…

__________________________________________

ரஞ்சிதாவுடன் காதலா?

ஒரு நண்பர் சொன்னான். அவர் ரஞ்சிதாவைக் கொண்டாடுகிறார். ரஞ்சிதாவும் அவருக்கு அன்புடன் பணிவிடை செய்கிறார். அதாவது அவர் சொல்ல வருவது ரஞ்சிதாவும் சாமியாரும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கிறார்கள் என்பதுதான். ஆமாம் ஏன் காதல் வராது? புகழ் போதையில் மூழ்கி கோடிகளைச் சம்பாதித்து அதில் சில லட்சங்களைக் ரஞ்சிதாவுக்குக் கொட்டி அவரை கொண்டாடவும் செய்கிற நித்தியின் காதல் ரஞ்சிதாவோடு முடிந்து போகிற ஒன்றா என்ன? இது மாதிரி எத்தனை ரஞ்சிதாக்களை பெங்களூர் ஆஸ்ரமத்தில் கொண்டாடியிருப்பார்? நித்தியாவின் ஆசிரமத்தில் முன்னாள் நீலப்பட நாயகிகளைக் கண்டிருப்பதாக நித்தியாவின் சீடர் சாருவே தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சிதா சினிமா, சீரியல்களில் நடித்து தனியாக சீரியல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதற்கு நித்தியா பைனான்சும் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் சம்பந்தப்படும் மேட்டுக்குடி விபச்சாரத்தில் ரஞ்சிதா போன்றுதான் பணிவிடை செய்யவேண்டும். ஏனெனில் இதற்கு சன்மானமாக பல இலட்சங்கள் தரப்படுகின்றது. அனுபவ் தேக்குமர நடேசனுக்கு இரவுப் பணிவிடை செய்யும் பெண்கள் குடும்பப் பெண் போல நடந்து கொள்ள வேண்டுமென்பது நிபந்தனையாம். இதெல்லாம் மேட்டுக்குடி விபச்சாரத்தில் சகஜம்.

இங்கே ரஞ்சிதாவை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து பரிதாப்படுபவர்கள் மேற்கண்ட விசயத்தை பார்க்கத் தவறுகிறார்கள். ரஞ்சிதா இடத்தில் ஒரு சாதரணப் பெண் இருந்திருந்தால் இந்தப் பரிதாபம் வந்திருக்காம என்பது ஐயமே. மேன்மக்களின் சோகம்தானே கீழே பரவும் நியதியைக் கொண்டிருக்கிறது.

முன்பு குஷ்பு கற்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதற்காக சுஹாசினி, ரேவதி எல்லாம் குஷ்புவுக்காக வரிந்து கட்டி வந்தார்கள். ரஞ்சிதாவோ, குஷ்புவோ, சுஹாசினியோ இவர்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை? காலையில் எழும்பி ஒரு டீயும் ஒரு பன்னும் வாங்கி தின்று விட்டு கிடைக்கிற கூலியில் கத்தரிக்காய் வாங்கி சுண்டக் குழம்பு வைத்தா  தினம் தோறும் தின்று கொண்டிருக்கிறார்கள்? அல்லது அண்ணாசாலை சாந்தி தியேட்டர் சப்வேயில் தன் வயிற்றுக்காக தன்னை விற்று அதையே பிழைப்பாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளியின் கற்பு பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர, உழைக்கும் மக்களின் காதல் ஒழுக்கத்தை காதல் மரபை முதலாளித்துவ ஒழுக்கங்களில் மூழ்கித்திழைக்கும் இந்த பிழைப்புவாத கும்பலின் உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?

______________________________

சாமியார்களின் மோசடி செக்சில் மட்டுமா?

சில சாமியார்கள் அரசியல் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள். சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். கருப்புப் பண வங்கிகளாக சிலரும், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில் என எல்லா கேடு கெட்ட தொழிலையும் காவி உடையில் செய்கிறார்கள். உழைக்காமல் முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக இந்து மதமும் ஏனைய மதங்களும் இவர்களுக்குப் பயன்படுகிறது. அடுத்தவன் நிலத்தை அபரித்து, மக்கள் நம்பும்படி மாஜிக் மாய்மாலங்கள் செய்து, கோடிகளைக் குவித்து, மாமா வேலை பார்க்கிற வரை இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,  இந்தச் சாமியார்களின் ஆஸ்ரம சாம்ராஜ்யங்கள் யார் கண்ணையும் உறுத்துவதும் இல்லை.

ஆஸ்ரமம் வளர வளர புற்றீசல் போல பக்தர்கள் படையெடுக்கிறார்கள். அவன் கொடுக்கிற போதை வஸ்துவை உண்டு மோனத்தில் ஆழ்ந்து அந்த மோனத்தையே முக்தி நிலை என்றும் நம்புகிறார்கள். ஆயிரம் பேரிடம் அவன் நடத்துகிற காமக் களியாட்டங்களுக்குப் பின்னர் ஏதோ ஒரு பெண் அட சாமியார் என்று போனோமே சுத்த கேடிப்பயலா இருக்கானே என்று சொன்ன பிறகு இந்து மதத்துக்கே கேடு, தமிழ் கலாசாரத்திற்கே தீங்கு என்று கதறுகிறார்கள்.

தேவநாதனின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இரு தாசாப்த கால வரலாறு உண்டு. இருந்தும் ஏன் இப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் லோக குருவாக வலம் வர முடிகிறது என்றால் ஜெ, கருணாநிதி ஆட்சி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அரசியல் கூட்டு இவர்களுக்கு இருக்கிறது.

ஜெயேந்திரனின் வழக்கில் எல்லா சாட்சிகளும் வரிசையாக பல்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கருவறை லீலை செய்த தேவநாதனுக்கு 94 நாட்களில் ஜாமீன் கிடைத்தது எப்படி?  கேட்டால் பொலீஸ் தரப்பு வாதம் வீக்காக இருந்தது என்கிறார்கள். தேவநாதன் சரணடைந்து 94 நாட்கள் ஆகியும் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால் அவனை ஜாமீனில் விட்டது காஞ்சிபுரம் நீதிமன்றம்.

ஆனால் அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய இருந்த நேரத்தில் தேவநாதன் வழக்கை விசாரித்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் அதைக் காரணம் காட்டியே அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான இன்றைய தமிழக அரசு ஜெயேந்திரன் வழக்கு, தேவநாதன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வழக்கு என சூத்திர மக்களுக்கான எல்லா நீதி போராட்டங்களிலும் தவறான வாதங்களையும் பார்ப்பனர்களுடன் கரிசனமான போக்கையுமே கொண்டிருக்கிறது.

பாதிக்கப்படும் பெண்களும் தாங்கள் சாமியாரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டோம் என்பதை சொல்ல முன்வருவதில்லை. ஏனென்றால் ஏமாறுகிற பெண்களில் சிலருக்கு கருவறை சாமியாரின் கதகதப்பு தேவையாக இருக்கிறது. அப்பாவி பகதர்களிடமும் சாமியார் தூண்டிலை வைக்கும் போது பிரச்சனையாகிவிடுகிறது. ஆனால் ரஞ்சிதாவின் விஷயத்தில் நடந்ததோ முற்றிலும் வேறு.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் உள்குத்து வேலைகளில் பாதிக்கப்பட்ட ஒருவர் முழு நீள படத்தை எடுத்து அதில் ஒரு பகுதியை மட்டும் இப்போது வெளியிட்டிருக்கிறார். இந்த இலவச திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நாம் விரைவில் காணலாம். பெங்களூருவின் சொத்து ஒன்றை வாங்கும் பிரச்சினையில் தோல்வியுற்ற ஒரு அரசியல் புள்ளி சாமியாரின் சீடர்களை ஏற்பாடு செய்து இதை வெளியிட்டிருக்கிறார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது இந்த இரகசியங்கள் இன்னும் வரும்போலத் தோன்றுகிறது.

___________________________________

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனின் கரிசனமும் நமது கேள்வியும்….

” எனக்கு அக்காட்சியைப் பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே. சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.” என்று எழுதி தனது கரிசனத்தோடு கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்களின் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்.

மிகப்பெரிய கோடீஸ்வரச்சாமியாரிடம் தமிழ் செல்வன் காட்டும் கரிசனம் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சிக்காக முழு நேரமும் உழைத்து தொழிற்சங்க தோழர்களின் நன்மதிப்பைப் பெற்று போலி மார்க்ஸ்சிஸ்ட் அரசியலில் நேர்மையாக இருந்த தோழர் வரதராஜன் கொலையில் கட்சித் தலைமையும் பிரகாஷ் காரத்தும் காட்ட மறுத்த கருணையை தமிழ்செல்வன் ஏன் கண்டிக்கவில்லை?  வரதராஜன் ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதரிக்கும் தமிழ்செல்வன் நித்தியானந்தா என்ற பொறுக்கியின் உணர்வுக்கு கண்ணீர் வடிக்கிறார். என்னே மனிதநேயம்?

வரதராஜனின் மரணம் என்பது தற்கொலை அல்ல கொலைதான் என்பதும் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட தீர்ப்பை ஒரு பொய்யான நீரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் வரதராஜன் மீது சுமத்தி அவரை போரூர் ஏரி நோக்கித் துரத்திய இரக்கமில்லாத தன் தலைமை குறித்தோ, அல்லது மோசடிப் பேர்வழியான பிரணாய் விஜயனை ஆதரித்து நிற்கிற இதே பிரகாஷ்காரத் அந்த பொருளாதார மோசடிகள் எதுவும் செய்யாத அப்பாவியான வரதராஜன் மீது நடவடிக்கை எடுத்ததோ தமிழ்ச் செல்வனுக்கு பிரச்சினை இல்லை.

__________________________________________

சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால……..

எதிர்பார்த்ததைப் போலவே சாரு நித்தியானந்தாவை அலட்டிக் கொள்ளாமல் உதறுவது போல காட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நித்யா பல நூறு மேதைகளுக்கு நிகரான ஒரு மேதையாம். பல புற்று நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறாராம். பல இலட்சம் பக்தர்களுக்காக நித்தியா மட்டுமே சிந்தித்தாராம். இவ்வவளவு வல்லமை கொண்டவர் தனது சக்தியை காமத்திற்கு கொடுத்து விட்டார் என்று பேசுகிறார் சாரு. அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாகவும், தன்னை நம்பி பல ஆயிரம்பேர் ஏமாந்து விட்டதாகவும் இதனால் சுய இரக்கம் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

அடிக்கடி நடிகையின் பின்புறத்தை நித்யா நக்குவதாக கூறிக்கொண்டு திட்டுவது போல காட்டிக்கொண்டு மேற்கண்ட மகத்துவங்களை பட்டியலிடுகிறார். பல இலட்சம் பக்தர்கள் மத்தியில் நித்யா மட்டும் சிந்திக்கும் சுமையை எடுத்துக் கொண்டால் இத்தகைய ரிலாக்சேஷன்கள் தவறில்லையே. ஒரு படைப்பை படைப்பாளியிடமிருந்து பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறும் சாரு நித்யாவின் காம லீலைகளை அவரு குண்டலனி யோகத்திலிருந்து பிரித்துத்தானே பார்க்க வேண்டும்?

ஊரே காறித்துப்புவதுதான் சாருவின் பிரச்சினை. புற்று நோயாளிகளை நித்யா குணப்படுத்தினார் என்று கூறும் சாருவை இந்திய மருத்துவச் சட்டப்படி கைதே செய்யலாம். ஊருப்பட்ட வியாதிகளுக்காக மக்கள் மருத்தவமனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கும் போது இந்த லேகியக்காரனை இப்படிச் சொல்லித்தானே பலரும் கொண்டாடினார்கள்? மற்றவர்கள் கூட இப்போது திருந்திவிட்டாலும் சாரு தனது விசுவாசத்தை விடுவதாக இல்லை.

தன்னை நம்பி பல்லாயிரம்பேர் நித்யாவிடம் ஏமாந்து விட்டதாக சாரு கூறுவது உண்மையானால் அதற்கு என்ன தண்டனை?

___________________________________

முதலில் வறுமையைப் பரிசளிப்போம்… சலிப்பைப் போக்க சிட்டுக்குருவி லேகியமும் உண்டு…..

நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி வறுமை காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி, ஏழைகளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்க இடியென இறங்கி இருக்கிறது பட்ஜெட் அறிவிப்புகள். இந்திய தொழில் கூட்டமைப்பின் சிந்தனையில் உருவான பட்ஜெட்டில் அத்தியாவசியப் பண்டங்களின் விலை எக்குதப்பாய் எகிறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்றால், நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் இதை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மன்மோகன்.

கருணாநிதியோ கலகமில்லாமல் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். மக்களை வைத்து கபடியாடிக் கொண்டிருக்கும் இந்த புரோக்கர்களுக்கு மத்தியில் ஒரு முருங்கைக்காயின் விலை ஐந்து ரூபாயாகி விட்டது. ஒரு கிலோ வெங்காயம் 36 ரூபாய். இன்னும் சில நாட்களில் லாரி வாடகை 20% அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்படி அதிகரிக்கிற அடுத்த நிமிடமே அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் பல மடங்கும் உயரும் சூழல் உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட் என்னும் பெயரில் மக்கள் மீது வீசியுள்ள இந்த குண்டை அடுத்து மாநில அரசு என்ன குண்டை வீசப் போகிறதோ என்ற கவலை மத்திய தர வர்க்கத்தை உசுப்பி வருகிறது.

மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். போதிய வருவாய் இல்லாமலும் வேலையிழப்பாலும் வறுமையை நோக்கி நகருகிற பெரும் மக்கள் கூட்டத்திற்கு போதை ஏற்றவும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை விடுவித்து போதையில் ஆழ்த்துவதற்காகவும் ஆளும் வர்க்க ஊடகங்களும், ஆட்சியாளர்களும் உருவாக்கும் சிட்டுக்குருவி லேகியம்தான் இந்த செக்ஸ் விவகாரங்கள்.

உலக மக்களின் எதிர்ப்பை மீறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அமெரிக்க மக்களின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி தடையில்லாமல் ஆயுத விற்பனையைத் தொடர கிளப்பிவிட்டதுதான் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவாகாரம். மக்கள் மோனிகாவின் கனவுகளில் ஆழ்ந்திருக்க கொடூரமான போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இதோ விஷம் போல் ஏறும் விலைவாசி என்னும் கசப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப, எங்கும் உருவாகி வரும் மக்கள் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் செக்ஸ் ஸ்கேண்டல் யுத்திதான் இந்த போலிச்சாமியார்களின் காம லீலைகள்.

__________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

யதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். போர், நிலங்கள் பறிப்பு, கனிமவளக் கொள்ளை, அடிப்படை சுகாதார வசதியின்மை, உணவு, உடை, உறைவிடத்தேவைகள் மறுக்கப்பட்ட நிலையை நாம் காண்கிறோம். நமது நாடு, நமது நகரம், நமது அரசு என்கிறார்கள். ஆனால் இது டாட்டா, பிர்லாக்களின், அம்பானிகளின் நாடாகவும் அவர்களின் அரசாகவுமே இருக்கிறது. நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை…….

___________________________________

–          இராவணன்.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!” புரட்சிகர அமைப்புகள் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்.
  2. முல்லைப் பெரியாறு: கருணாநிதி மறைக்கும் உண்மை
  3. விலைவாசி உலகத்தரமானது பட்டினி நிரந்தரமானது
  4. நெருப்பைப் பஞ்சால் அணைக்க முடியுமா?
  5. கிராமப்புற மருத்துவர்கள பஞ்சு மிட்டாய்த் திட்டம்!
  6. நூதனக் கல்வி்க் கொள்ளை: தி.க.வீரமணியின் ‘சாதனை’!
  7. நுண்கடன்… மீப்பெரும் கொள்ளை!
  8. வாழ்வுரிமைக்குப் போராடுவது தேசவிரோதச் செயலா?
  9. “உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது!” -போஸ்கோ நிறுவனத்துக்கு எதிராக ஒரிசா மக்களின் போராட்டம்
  10. தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
  11. “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம், மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணி வகுப்போம்! தமிழகமெங்கும் தொடரும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  12. கொலைகார ப.சிதம்பரத்தின் கொடும்பாவி எரிப்பு! மேற்குவங்கத்தை உலுக்கிய பேரணி-ஆர்ப்பாட்டம்!
  13. அறிவுத்துறையினர் மீது பாயும் அரசு பயங்கரவாதச் சட்டம்
  14. சி.பி.எம்.இன் பரிணாம வளர்ச்சி: முதலாளிகளே ஊழியர்களாக…
  15. சி.பி.எம். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கையாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம்!
  16. பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஐ.
  17. மராத்திய இனவெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள்!
  18. மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
  19. ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்திண்ணி அமெரிக்கா!

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!

174

vote-012ஒரு மாதம் முன்பு பதிவர் அக்னி பார்வையை சந்தித்த போது நித்தியானந்தாவிற்கும் சாருவுக்கும் உள்ள  மெய்சிலிர்க்கும் உறவை விரிவாகப் பேசினார். அதையே ஒரு கட்டுரையாக எழுதவும், வாய்ப்பு கிடைக்கும் போது பெங்களூருவிலிருக்கும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று தகவல் திரட்ட வேண்டுமென்றும் கேட்டபோது உற்சாகமாக ஒத்துக்கொண்டார்.

ஆசிரமம் செல்வதற்கு சற்று காலதாமதம் ஆகி ஒரு வழியாக சென்று விவரம் திரட்டப்பட்டது. சென்ற ஞாயிறு அவர் எழுதி அனுப்பியிருக்க வேண்டும். வேலைச்சுமையால் பெரும்பகுதி முடிக்கப்பட்ட அந்தக்கட்டுரை அவரது ட்ராப்ட்டில் இருந்தது. புதன் இரவு நடக்க இருக்கும் திவ்ய தரிசனத்திற்குப் பிறகுதான் அந்தக் கட்டுரை எழுதப்பட வேண்டுமென்பது காலத்தின் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?

________________________________________

புதன் இரவு 8.00 மணி: நண்பரொருவர் தொலைபேசியில் உடன் சன் நியூஸ் பார்க்குமாறு அவசரத்துடன் கூறினார். என்ன விடயம் என்றதும் சொன்னார். ஆனால் நாம் இருந்த இடத்தில் டி.வி இல்லை என்பதால் வாய்ப்பிருக்கும் நண்பர்களிடம் பார்க்கச் சொல்லி விட்டு அக்னி பார்வையிடம் விசயத்தைச் சொன்னோம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியிலிருந்தவர் ப்ரேக்கிங் நியூஸைக் கேட்டதும் உற்சாகமடைந்தார். உடன் சென்று கட்டுரையை முடித்து அனுப்புவதாக கூறினார். டி.வியைப் பார்த்தவர் இவ்வளவு தெளிவாக எடுத்திருக்கிறார்களே என்று வியந்து விட்டு கட்டுரையை அனுப்பினார்.

_________________________________

அதற்குள் தமிழ்மணத்தில் வார்த்தைகளாகவும், யூ டியூபில் காட்சியாகவும் நித்தியானந்தாவின் பள்ளி இரவு பவனி வர ஆரம்பித்தது. இடையில் தோழர் கில்லியிடம் சொல்லி சாருநிவேதிதா தளத்தின் முகப்பு பக்கத்தை காப்பி செய்யுமாறு கூறிவிட்டு காத்திருந்தோம்.

இரவு 12.00 மணி சுமாருக்கு சாருவின் தளத்தில் போஸ் கொடுத்த நித்தியானந்தா மாயமாக மறைந்து போனதை அக்னி பார்வை தெரிவித்தார். நல்லவேளை அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை சேமித்து விட்டோம்.

_______________________________________

கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கொஞ்சம் கவனிக்காமல் கதவை திறந்து வைத்ததால் அவரின் படுக்கையைறையில் காமிர நுழைந்து இப்பொழுது டீவிக்களில் நித்தியானந்தரின்  காமக்களியாட்டம் அரைமணி நேரத்திற்கொருமுறை நவராத்திரி பூஜையாக ஓடுகிறது.

முன்பு நினைத்தவுடன் அந்த பின்நவீனத்துவ எழுத்தாளரின் எதிரில் திடீரென்று காரில் கடந்து போகும் நித்தியானந்தர், இனி நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் செல்போன்களில் சிரித்தபடி ஒரு பெண்ணுடன் காட்சி தருவார்..

நித்தியானந்த சுவாமிகள், பக்தர்களுக்கு ஜீவன முக்தி கொடுத்து, தியான பீடம் நடத்தி, வாழக்கை வாழ கற்று கொடுத்துக்கொண்டிருந்தவர் ஒரு சில நொடி சலனப்படத்தால் இப்பொழுது சலனப்பட்டுக் கொண்டிருக்கலாம்!

___________________________________

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகர் ஏதோ குறி சொல்லிக் கொண்டிருந்த பையனாக இருந்தவர் ஒரு இனிய நாளில் கார்ப்பரேட் சுவாமியாக களமிறக்கப்பட்டார். அகமுடை முதலியார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இந்த பையன் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆன்மீகம், நிறைய சரக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் ஓரளவு கணிசமாக வாழும் இந்தச்சாதிப் பிரமுகர்கள்தான் நித்தியானந்தாவை திட்டமிட்டு உருவாக்கினர். அரசியலில் அண்ணா, அன்பழகன் என்று பெரும் கைகள் உருவாயிருந்த இந்த சாதி வட தமிழகத்தில் எல்லா விதங்களிலும் முன்னேறிய சாதியாகும். எல்லாத் துறையிலும் கொடி கட்டிப் பறந்த இவர்களுக்கு ஆன்மீகத்தில் மட்டும் ஆளில்லை என்ற போது இந்தப்பையன் கிடைத்தான்.

ஆனந்த விகடனில் சுகபோதானந்தா ‘மனசே ரிலாக்ஸ்’ என்று பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த போது குமுதம் போட்டிக்காக நித்தியை ஆரவாரமாக இறக்கியது. சில வருடங்களுக்குள் நித்தியானந்தா கார்ப்பரேட் தரத்தை அடைந்து விட்டார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நித்தியானந்தா ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒளிக் குறுந்தகடுகள், திரும்பிய இடமெல்லாம் விவேகானந்தர் போல, பரமஹம்சர் போல, முண்டாசு கட்டி, சிரித்தவாறு, என்று என்னன்னமோ தினுசுகளில் படங்கள்……….என்னடா ஒரு அரைலூசுப் பையன் இந்த போடு போடுகிறானே என்று தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம்.

___________________________________

பெங்களூரு மைசூர் சாலையில் புறநகரில் பல பத்து ஏக்கர் நிலத்தில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. நவீன பளிங்குகள் பதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்த்தால் அது ஆசிரமம் அல்ல, ஐந்து நட்சத்திர விடுதி என்றே தோன்றும். விடுதிகள், தியான மண்டபங்கள், சாமி அருள்பாலிக்கும் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம் என்று எல்லா வசதிகளும் அங்கே நேர்த்தியாக இருக்கின்றன.

ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகள் தெரிந்த உதவியாளர்கள் – பெண்களையும் உள்ளிட்டு –  எல்லா பக்தர்களையும் மொழிபெயர்த்து சாமியிடம் சேர்ப்பதும் பின்னர் சாமி தமிழிலும், கன்னடத்திலும் பேசுவதை பக்தர்களிடம் சேர்ப்பிப்பதுமாய் இருப்பார்கள். பல்வேறு தியான பேக்கேஜ்கள் காலத்தைப் பொறுத்து 2500, 5000, 10,000 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். காசுக்கேற்ற தோசை. அல்லது சேலம் சிவராஜ வைத்தியரின் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம், சாதா செட், ஸ்பெஷல் செட் போலவும் சொல்லலாம்.


நித்தியானந்தா தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிக செல்வாக்குடன் திகழ்ந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள். முதலமைச்சர் எடியூரப்பா முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் எல்லாம் சாமியின் தீவிர பக்தர்கள். அடுத்து குறுகிய காலத்தில் உடலையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பாதுகாப்பதற்கு விரும்பும் நவீன இளைய சமூகம் அதாவது ஜ.டி ஜென்டில்மேன்கள் ஆசிரமத்தை எப்போதும் நிரப்பி வந்தனர்.

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் முக்கியமான இடத்தை நித்தியின் ஆட்களை கைப்பற்றி ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். இந்த இடம் குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உள்குத்து இருப்பதால் இப்போது இவர்கள் சாமி அம்பலப்பட்ட பிறகு எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு ஊர் ஆசிரமங்களையும் சேர்த்தால் நித்தியானந்தா பல கோடிகளுக்கு அதிபதி.

நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக வகுப்புக்கள பல சுயநிதிக் கல்லூரிகளில் நடந்திருக்கின்றன. தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு கல்லூரி முதலாளிகள் மாணவர்களை மிரட்டி கொண்டு வந்திருக்கின்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்ப்பு காட்டியதும் அவ்வப்போது செய்தியாக கசிந்தது உண்டு.

அப்புறம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிம்மதியை இடைவிடாமல் தெடும் வெள்ளைத் தோல் மனிதர்கள் வந்து சாமியை கண்டம் கடந்து தூக்கி சென்றார்கள். இப்படியாக ஒரு இளைஞன் பக்காவான கார்ப்பரேட் சாமியாக நிலைபெற்றான்.

____________________________________

கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது சொல்லில் புரியவைக்க கூடியதல்ல. ஏனெனில் அந்த உறவு ஒரு நேர்த்தியான மார்க்கெட் தந்திரம். சாமியாரின் அசட்டு பிசட்டு தத்துவ அவஸ்தைகளை விறுவிறுப்பான மொழியில் நுட்பமான கதை சொல்லாடல்களுடன் பக்தர்களிடம் அள்ளி வீசுவதற்கு நவீன இலக்கியவாதிகள் கட்டாயம் தேவை.

விசிறி சாமியாரைப் பற்றி பாலகுமாரன், சுகபோதானந்தாவிற்கு ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர்கள், ஈஷா யோக ஜக்கி வாசுதேவிற்கு இரட்டையர்கள் சுபா என்றால் நித்தியானந்தாவை குமுதம் பத்திரிகையே தத்து எடுத்துக் கொண்டது. ஆனாலும் குமுதம் விரும்பிய அளவிற்கு நித்தியானந்தாவின் பத்திகள் அவ்வளவாக எடுபடவில்லை.

இந்த இடத்தில் சாரு வருகிறார்.

__________________________________

சாருவின் அபிமானிகள் என்ன கருதுகிறார்கள் என்றால் அவர் தெரியாமல் நித்தியானந்தாவிடம் சிக்கிக் கொண்டாராம். ஸீரோ டிகிரி என்ற கொலாஜ் கூட்டெழுத்து கதை நாவலாக தமிழில் முளைத்து, மலையாளத்தில் திளைத்து, ஆங்கிலத்தில் கொடிநாட்டி, அப்புறம் பிரெஞ்சு வரைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் சிக்கிக் கொண்டவரின் தகுதியல்ல.

பார்க், சோழா டீக்கடைகளில் அந்துமணி இரமேஷோடு குடிக்கும் அளவு உயர்மட்டங்களில் நெருக்கம் உள்ள சாரு விரும்பியே இந்த பிராண்ட் அம்பாசிடர் வேலையை இணையத்தில் செய்து வந்தார். தனது எழுத்தின் அக்கப்போர் சுவராசிய வலிமை காரணமாக நித்தியானந்தாவை வலையுலகில் நிலைநாட்டுவதை ஒரு சவாலாகவே செய்து வந்தார்.

இதற்காக சாரு எவ்வளவு பணம் பெற்றிருப்பார்? கூச்சல் நிறைந்த டாஸ்மார்க் பாரில் ஒரு உன்னத தமிழ் எழுத்தாளனை குடிக்கவைத்து சித்ரவதை செய்யும் தமிழ் உலகோடு அற ஆவேசப் பகை கொண்டுள்ள அந்த எழுத்தாளன் ஒரு பெருங்கனவோடு இந்த காரியத்தை விருப்பத்துடனே ஏற்றிருக்க வேண்டும். ரிசல்ட் காட்டிய பின்புதான் பணம் என்பாதாகக் கூட அந்த ஒப்பந்தம் இருந்திருக்கலாம். ஒப்பந்தம் குறித்து சாருவே தெரிவித்தால்தான் உண்டு.

சாய்பாபாவின அற்புதக் கதைகள், வாயிலிருந்து லிங்கம், கையிலிருந்து தங்க நகை, காலன்டரிலிருந்து விபூதி, நிலவில் சாய்பாபா முகம் என்றெல்லாம் ஆன்மீக உலகை நிறைவித்து பழக்கியிருக்கிறது என்பதால் சாருவும் துணிந்து அடித்தார். விழுப்புரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர் காரில் நித்தியானந்தா ஆசிர்வதித்து சென்றாராம். உண்மையில் அந்த நேரம் நித்தியானந்தா பெங்களூருவில் இருந்தாராம். இவையெல்லாம் நமது கற்பனை அல்ல. நேரம் பார்த்து வைரசால் அழிக்கப்பட்ட சாருவின் புதைபொருள் பத்திகளில் எழுதப்பட்ட அற்புதக் காவியங்கள்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட சாருவும், அவரது மனைவியும் பெங்களூரு ஆசிரமம் சென்றார்களாம். சாமியும் அவர்கள் காலில் குச்சியை தட்டியதும் வீக்கம் குறைந்து நோய் மறைந்ததாம். டி.ஜி.எஸ் தினகரின் முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், என்ற சாட்சிக்கதைகள் சாருவால் நவீன ஊடகமான இணையத்தில் அள்ளி வீசப்பட்டன.

இவையெல்லாம் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை தெரிந்தே செய்த சதிகளா? நித்தியானந்தாவிற்கு தான் பொறுக்கி என்பது தெரிந்திருந்தாலும் முகத்தில் தேஜஸ்ஸுடன் ஆன்மீகத்தை ஒன்றிப் பேசும்போது அவனை மார்கெட் செய்யும் ஒரு தரகனும் தனது மோசடியை நீதியாக நிலைநாட்டத்தான் செய்வான். சாரு செய்தார்.

அவரது பின் நவீனத்துவ அறத்தின் படி இது ஒன்றும் தவறல்ல. இப்போது நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் குடும்பம் நடத்தும் காட்சிகளும் கூட அந்த அறத்தின் படி தெற்றல்ல. என்ன இருந்தாலும் செக்ஸ் என்பது கூட தாந்தீரிக யோகத்தின் படி  முக்தியை அடையும் ஒரு வழிதானே? ஆனாலும் சாரு தனது தளத்தில் தனது குருநாதனின் படத்தை அழித்து விட்டார். இது வேறு எதனைக்காட்டிலும் பின் நவீனத்துவத்திற்குச் செய்யப்படும் துரோகமாகும்.

இலக்கிய உலகின் கிசுகிசுக்களையும், அக்கப்போர்களையும் வாரமலரின் துணுக்கு மூட்டை தரத்தில் எழுதி இரசிகனுக்கு தீனி போட்ட ஒரு எழுத்தாளனின் குருநாதனும் அதே முறையில் ஆனால் கிசுகிசுவாக இல்லாமல் தெளிவான வீடியோ காட்சிகளாக பரபரப்பாக தமிழக இளைஞர்களுக்கு தீனி போட்டது நகை முரணல்ல. ஒத்ததை ஒத்ததுதான். ஆனால் முரண்பாடாக இருப்பது சாரு ஒரு நிலபிரபுத்தவ ஒழுக்க சீலனாக தன்னை இப்போது காட்டிக் கொள்ள நினைப்பதுதான்.

ஆனால் நாம் பின் நவீனத்துவத்தை ஏற்கவில்லை. பெரும் பணக்காரர்களின் பணத்தைக் கொண்டு உல்லாசமாக பொறுக்கியாக வாழும் ஒரு ஆசிரமப் பொறுக்கிக்கு இணையத்தில் தரகு வேலை பார்த்தவர்தான் சாரு நிவேதிதா. நித்தியானந்தாவை காறி உமிழ்பவர்கள் முதலில் குமுதத்தையும் அடுத்து சாருவையும்தான் கவனிக்க வேண்டும். ஆன்மீகத்திற்கு அறிவின் பெயராலும், மொழியின் கருவியாலும் அச்சாரம் போட்டு வாசகனை இழுத்து விட்டவர்கள் இவர்கள்தான்.

__________________________________________

சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை. இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர். வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல. ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.

தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.

சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.

சாய்பாபா  ஆசிரமத்தில் நடந்த கொலைகளும், பாபாவின் பாலியல் வன்முறைகளை வெளிநாட்டு சானல்களே அம்பலப்படுத்தியிருந்தாலும் அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை. இன்றும் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் அங்கே அடிபணிந்தே வணங்குகிறார்கள். மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அம்மாவை யாரும் அசைக்க முடியவில்லை.

கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.

மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?

__________________________________

நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?

சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.

நக்கீரன் பத்திரிகை நித்தியானந்தாவை வெளியிடுவதும் கூட போட்டி மற்றும் தனது குழும சாமியார் அல்ல என்ற தைரியம் மட்டும்தான். ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.

_________________________________________

கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?

யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் சாருவும்  கூட நம்பிக்கையை கைவிடவேண்டியதில்லை.

சாருவின் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த நித்தியானந்தா இப்போது மறைந்துவிட்டார். இடப்பக்கத்தில் இருப்பது நல்லி விளம்பரம். நல்லி இடத்தில் காமரா நுழைவது சாத்தியமல்ல என்பதால் சாரு சற்று நிம்மதியாக இருக்கலாம். இத்தனைக்குப் பிறகும் இந்தப்பொறுக்கி சாமியாரின் இணையத் தரகனுக்கு அனுதாபம் தெரிவித்து ஆதரவு தெரிவிப்பதற்கு ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?

–   அக்கினிப்பார்வை, இராவணன் உதவியுடன் வினவு.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இமேஜ் அடிவாங்கிய குழப்பத்தில் சாரு !!! போட்டார் – தூக்கினார் !!!

பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும் – நன்றி பதிவர் ரோமியோ

விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!


vote-012அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளிலேயே மிக அதிக அளவாக 2009 டிசம்பர் கணக்குப்படி உணவுப் பொருட்களின் பணவீக்கம் 19.75 சதவீதத்தை எட்டிய பிறகு, எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் புலம்பத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் நடத்தும் வழக்கமான பம்மாத்துக்களால் மக்கள் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை நாலுகால் பாச்சலில் முன்னேற்ற விரும்பி ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் தற்செயலாகவோ, தானாகவோ பணவீக்கம், விலைவாசி உயர்வு என்ற நெருக்கடிக்குள் பொருளாதாரத்தைச் சிக்க வைத்து விட்டன என்பதாகச் செய்தி ஊடகங்கள் புலம்புகின்றன. அதேசமயம், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பலின் தலைமையிலான பொருளாதாரப் புலிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைச் சரி செய்து விடுவார்கள் என்று செயற்கையான நம்பிக்கையூட்டப்படுகின்றன.

தற்போது நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கம் – விலைவாசி உயர்வு என்ற நெருக்கடி எதிர்பாராத காரணங்களால் தானாகவோ, தற்செயலாகவோ ஏற்பட்டுவிட்ட பிரச்சினை அல்ல. பொருட்களின் விலையைக் கேட்டவுடன் தெருமுனையில் உள்ள சில்லரை விற்பனையாளர் வேண்டுமென்றே திடீரென்று அதிக விலை வைத்து விற்கிறார் என்று பாமர மக்கள் கருதுவதைப் போன்று இது நடக்கவில்லை. உண்மையில் விலைவாசி உயர்வு என்பது தமது ஆட்சியையோ, தாம் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ள பொருளாதாரத்தையோ, தாம் அக்கறைப்படும் மக்கள் பிரிவினரின் நலத்தையோ பாதிக்கும் ஒரு பிரச்சினையாகக் கருதி ஆட்சியாளர்கள் அஞ்சிவிடவில்லை. குட்டையில் நீந்திக் களிக்கும் எருமை மாடுகளை, சாக்கடையில் படுத்துப் புரளும் பன்றிகளைப் போலத்தான் மன்மோகன் – மாண்டேக் சிங் கும்பலுக்கு விலைவாசிஉயர்வு என்பது ஒரு பிரச்சினையே இல்லை. விலைவாசி உயர்வு என்பது தமது எஜமானர்களுக்கும் தமக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பரிதவிக்கையில் கூட 30 இலட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருக்கிறது. இந்த ஏற்றுமதிக்கான சலுகையாக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு மானியமாக வழங்கியிருக்கிறது. அதேசமயம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அதைவிடக் கூடுதலான விலையில் சர்க்கரை இறக்குமதிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது. அம்பானி, பிர்லா போன்ற முதலாளிகள் சில்லரை விற்பனையில் நுழைந்த பிறகு இந்த சலுகையின் மூலம் கொள்ளை இலாபமடிப்பதற்குச் சட்டபூர்வ அனுமதி அளித்துள்ளது.

அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் பெருமளவு சில்லரை வணிகத்தில் நுழைந்து ஏகபோக ஆதிக்கத்தை நிறுவத் தொடங்கிய பிறகு, உணவு தானியங்கள், பருப்பு வகைகளில் மட்டுமல்லாது, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறி-பழம் ஆகியவற்றிலும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது, புறநகர்ப் பகுதிகளில் குளிர்பதன வசதிகளுடன் பிரம்மாண்டக் கிடங்குகளில் சேமித்து வைத்து ஏகபோகமாக்கிக் கொள்ளையடிக்கின்றனர்.

இதைத் தடுக்காத அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாகக் கோரியும் உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்க மறுத்தே வருகிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 70,000 டன்கள் உணவு தானியங்கள் வீணாகிப் போகின்றன. சென்னை கோயம்பேடு மையக் காய்கறி-பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகி நாறிக் குப்பையில் கொட்டப்படுகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக தரகு முதலாளிகள் மட்டுமல்ல, விவசாய விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து குவிக்கும் சரக்கு உந்து, (லாரி) ஏகபோக முதலாளிகள், தரகு பெரு வணிகர்கள் ஆகியோரின் பகற்கொள்ளைக்குப் பிறகு, எல்லாச் சுமையும் நுகர்வோர்களாகிய ஏழை-எளிய மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது.

“இனி அரசு ஆதரவுகள், மானியங்கள், நியாயவிலை விற்பனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது; சந்தைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும், சந்தைக்கான தொழில் போட்டி, உற்பத்தி, விநியோகம்தான் ஆட்சி நடத்தவேண்டும்; இதுதான் இந்த நாட்டின் தொழிலையும், உற்பத்தி-விற்பனையையும் உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பாதை” என்று மன்மோகன் – மாண்டேக் சிங் ஆகிய ஆளும் கும்பல் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக நம்புகின்றன. மொத்தத்தில், அமெரிக்காவின் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முழு மூச்சில் புகுந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இவர்களின் எண்ணம்!

மத்தியிலோ, மாநிலங்களிலோ எங்கு, எந்தக் கட்சி  ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக, காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தக் கொள்கையை உறுதியுடன், இன்னும் சொல்வதானால் “வெறி”யுடன் அமல்படுத்துகிறார்கள். இந்தப் பாதையிலிருந்து தாங்கள் விலகிப் போவிடமாட்டோம் என்று இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறார்கள். அவர்களது சிந்தனை, செயல், அறிவிப்பு எல்லாவற்றிலும் இதுதான் வெளிப்படுகிறது.

இப்படிச் செய்வதற்காக ஆட்சியாளர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதோ, தயங்குவதோ கிடையாது. தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வருபவர்கள் என்ன எண்ணுவார்களோ என்று அஞ்சுவதும் கிடையாது. ஏனென்றால், ஆட்சியாளர்கள் எப்போதும் எண்ணுவதும் பேசுவதும் உலகச் சந்தையில் போட்டி, உலகத் தரத்துக்கு தொழில் – உற்பத்தி! உலகத்தரம், உலகச் சந்தையில் போட்டி எனும்போது, உலகிலுள்ள பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க ஏழை நாடுகளை மனதில் கொள்வதில்லை.

மிகமிக முன்னேறிய, பணக்கார நாடுகளாகச் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான்! இதன் பொருள் என்ன? தொழிலும் உற்பத்தியிலும் மட்டுமல்ல, சந்தையிலும் நுகர்விலும் கூட உலகத் தரத்தை எட்டவேண்டும் என்பதுதான்! இதெல்லாம் உலகத் தரம் என்கிறபோது, சந்தையிலும் நுகர்விலும் மட்டும் இந்தியத் தரம் என்பதை ஆட்சியாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த நாட்டின் மக்கள் தொகை 100 கோடி என்றால், அவர்களில் 10 கோடிப் பேரையாவது உலகத் தரம், உலகச் சந்தை பொருட்களைப் பாவிப்பதற்கான நுகர்வாளர்களாக்கு என்பது மட்டும்தான் ஆட்சியாளர்களின் குறிக்கோளாக உள்ளது.

எனவேதான், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 10 கோடி “இந்திய மக்களின்” வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களின் வாங்கும் சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் முக்கியக் கவனம் செலுத்தினர். ஏற்கெனவே கூட்டுப் பங்கு நிறுவனங்களின் பணியாளர்களின் ஊதியம் சராசரி இந்தியரின் வருமானத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகம். அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விலைவாசி-வீட்டு வாடகை போன்ற சந்தை விலையேற்றத்துக்கு ஈடாக அவ்வப்போது கிரமமாக ஊதியம் உயர்த்தப்பட்டு வந்தது. இது போதாதென்று, இப்போது அரசு மற்றும் அரசுத் துறை தொழில்-வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களது ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.

ஆகக் கூட்டிப்பாருங்கள். கூட்டுப்பங்கு நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்; அரசு மற்றும் அரசுத்துறை தொழில்-வர்த்தக நிறுவன அதிகாரிகள், “ஊழியர்கள்”; ஏற்கெனவே கொழுத்துப் போயுள்ள தரகு முதலாளிகள் – தரகு வர்த்தகர்கள், கிராமப்புற முதலாளிய விவசாய உற்பத்தியாளர்கள், மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிக்கான உற்பத்தி வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், அவர்களின் பணியாளர்கள்; பல்வேறு சேவைத்துறை முதலாளிகள், பணியாளர்கள்; தொழில்முறை அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கிரிமினல் குற்றக் கும்பல்கள் இவர்கள் அனைவருமாக, இவர்களின் குடும்பத்தோடு ஒரு 10 கோடிப் பேராவது உலகத்தர வாழ்க்கையும், வாங்கும் வசதியும் படைத்தவர்களாக இந்த நாட்டில் இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தப் பிரிவினரைப் பாதிப்பதே இல்லை. அம்பானி, பிர்லாக்களின் “சூப்பர் மார்க்கெட்”களில் என்ன விலை வைத்தாலும், உலகத் தரத்திற்கு டப்பாக்களில், பெட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனப் பொருட்களையே பாவிக்கிறார்கள்.

இந்த 10 கோடி இந்திய மேட்டுக்குடியினருக்கான சந்தையைப் பற்றி மட்டுமே மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் அக்கறைப்படுகிறது. எனவேதான், அது மிகவும் திமிரோடு பேசுகிறது. விலைவாசி உயர்வு என்பது “தவிர்க்கமுடியாதது”; “நிச்சயமான ஒன்று” என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்தியச் சந்தையை உலகச் சந்தையுடன் இணைப்பது, சந்தையே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நுகர்பொருட்களின் விலையைத் தீர்மானிப்பது என்றான பிறகு, விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, எதிர்பார்க்க வேண்டியதுதான்.

10 கோடி இந்திய மேட்டுக் குடியினரின் வருவாயைப் பெருக்கி, வாங்கும் சக்தியை உயர்த்திய மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் மீதி விவசாயிகள், தனியார்துறைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை உள்ளடக்கிய 90 கோடி இந்திய மக்களுக்கு என்ன செய்தது? இவர்களின் மலிவான உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, இம்மக்களடங்கிய பரந்து விரிந்த சந்தையிலும் கொள்ளையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏகாதிபத்திய ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோகத் தரகு முதலாளிகளுக்கும் செய்து கொடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய 33 சர்க்கரை உற்பத்தி முதலாளிகள் 2009-ஆம் ஆண்டு மட்டும் 900 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கின்றனர்; அவர்களின் இலாபம் 2,900 சதவீதம்அதிகரித்திருக்கிறது. 2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டிலிருந்து சர்க்கரையை ஏற்றுமதி செய்யச் சொல்லி டன்னுக்கு 2350 ரூபாய் மத்திய மற்றும் மராட்டிய அரசுகள் மானியமாக வழங்கின. 2008 டிசம்பரில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்த மத்திய அரசு, அதன்பிறகு சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டபோது சர்க்கரை இறக்குமதி செய்யச் சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி தள்ளுபடி செய்தது. ஆக, இரண்டு வகையிலும் மத்திய வேளாண் மற்றும் உணவு அமைச்சர் சரத்பவார் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்க்கரை ஆலை கும்பல் ஆதாயம் அடைந்து கொள்ளையடித்தது.

மிகை உற்பத்தியின் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைப்பது, பற்றாக்குறையின் போது சேமிப்பை விடுவித்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற “பொது நலப் பொறுப்பு” எதையும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை; எல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கை வருவதற்கு முன்பிருந்தே தனியார்-பெரு வர்த்தக முதலாளிகள் மிகை உற்பத்தியின்போது பதுக்கி வைப்பதையும், பற்றாக்குறையின் போது பன்மடங்கு விலைவைத்து விற்பதையும் செய்து வந்தார்கள். முன்பு சட்டவிரோதமாகக் கருதப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்பொழுது அரசே துணை செய்து ஊக்குவிக்கிறது.

சந்தையில் “நிலவும்” போட்டியே விலைவாசியைக் கட்டுப்படுத்திவிடும் என்ற முதலாளிய பொருளாதாரவாதிகளின் வாதத்தை இத்தகைய நடவடிக்கைகளும் ஏகபோக நிலையும் பொப்பித்து விடுகின்றன. இவ்வளவு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு அவ்வப்போது உயர்த்தியதோடு, இனி சந்தைப் பெருமுதலாளிகளே தீர்மானித்துக் கொள்வதற்கு விட்டு விடுவது; அரசு கட்டுப்பாட்டில் இருந்து உரவிலையையும் விற்பனையாளர்களே தீர்மானிப்பது என்றும் முடிவு செய்து விட்டது. அதற்கு முன்பாக அரசே விலையையும் உயர்த்திவிட்டது. அரசு நிறுவனங்கள் உட்பட ஒருசில நிறுவனங்கள் ஏகபோக நிலையில் உள்ள இந்தத் தொழில்களில் வரைமுறையற்ற கொள்ளைக்குத்தான் இது வழிவகுக்கும்.

உலக சராசரிக்கும் குறைவாக இந்தியாவில் விளைபொருட்கள் கிடைக்கும் நிலையை மாற்றி, உலகச் சந்தையின் நிலைக்கு விலைவாசியை ஏற்றி விடுவது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. கடும் எதிர்ப்பின்றி அதை எப்படிச் சாதிப்பது என்பதற்குத்தான் பல்வேறு நாடகமாடுகிறார்கள். இதுதவிர, தொழில் துறையும், சேவைத்துறையும் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் நிதி ஆதிக்கத்துக்கு வசதி செய்து கொடுத்துள்ள இந்திய அரசு, சமீப ஆண்டுகளில் விவசாய விளைபொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் ஊகவணிகம், முன்பேர வணிகம், ஆன்-லைன் வணிகம் ஆகியவற்றிலும் சூதாட்டம் மற்றும் நிதி ஆதிக்கம் செலுத்துவதற்கும் எல்லாவசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

ஆகவே, விலைவாசி உயர்வு என்பது பல்வேறு வகையிலும் அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். ஆனால், அதுபற்றித் தாமும் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை!

–          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

விண்ணைத் தாண்டி வருவாயா – காதலை அவமானப்படுத்தவா…?

80

vote-012காதலை வைத்து தமிழகத்தில் கல்லா கட்டியவர்கள் ஏராளம். காதலிக்க எளிதாக வாய்ப்பில்லாத நாட்டில் காதல் குறித்த கனவுகளும் அதை நனவு போல சித்தரிக்கும் படங்களும் விலைபோகாமல் இருக்குமா என்ன?

கருப்பு வெள்ளைப்படங்களில் காதலன் பட்டப்படிப்பு படித்துவிட்டு படியவாரிய தலையுடன் நாசுக்காக காதலிக்க, காதலியோ இரட்டைத்தலை சடையோடு தளையக்கட்டிய சேலையோடு வெட்கப்பட ….ஓவர் டு 2010

__________________________________________

பொறியில் படிப்பு, டீ ஷர்ட், பைக், சினிமா உதவி இயக்குநர், மாடர்ன் தங்கச்சி, அழகான அம்மாவுடன் சிம்பு காதலுக்கு 22 வயதில் ரெடியாகிறார். ஜெஸ்ஸி , டிசைனர் காட்டன் சேரி, சல்வார், அலைபாயும் முடி, ஐ.டி துறை வேலையுடன் 23 வயதில் த்ரிஷா வருகிறார்.

“காதல் என்பது தானா வரணும், நாம அதை தேடிப் போகக்கூடாது, நம்மள அடிச்சுப் போடணும்” என்று காதலுக்கு இலக்கணம் பேசும் சிம்புவுக்கு அது வந்துவிட்டது. மலையாளப் பெண், கிறித்தவ மதம், தந்தை மறுப்பு என்று த்ரிஷா அவ்வப்போது சிணுங்குகிறார். அதனால் காதலின் கிக் அல்லது அவஸ்தை ஏறுகிறது.

“காதலிக்காக அவனவன் அமெரிக்கா போறான், நாம ஆலப்பிக்கு போகக்கூடாதா” என்று அமெரிக்கா ஏதோ உசிலம்பட்டி போல பேசும் சிம்பு எதிர்பார்க்கமலேயே த்ரிஷா தேவாலயத்தில் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒப்புதல் கொடுக்காமல் புரட்சி செய்கிறார். அவஸ்தையின் அளவு கூடுகிறது.

இதற்குள் மூன்று பாட்டு முடிகிறது. தாமரை எப்போது ஆங்கிலத்தில் பாடல் எழுத ஆரம்பித்தார்? இடைவெளி முடிந்து அமர்ந்தால் மீண்டும் மீண்டும் த்ரிஷா சிணுங்குகிறார். ” டேய் படத்தை எத்தனை வாட்டி ரிவைண்ட் பண்ணி போடுவ” என்று இரசிகர்கள் (தியேட்டர் கமெண்ட்) தாங்க முடியாத அளவில் அந்த அவஸ்தை சவ்வாக இழுக்கப்படுகிறது. நாங்க படம் பார்த்தது A சென்டரில்ல இல்லை!

ஒரு வேளையாக த்ரிஷா அந்த காதல் உலக்கத்திலிருந்து லூசுத்தனமாக (தியேட்டர் கமெண்ட்) மறைந்து போக சிம்பு சினிமா இயக்குநராக ஆகிறார். தனது ஜெஸ்ஸியின் கதையையே படமாக எடுக்கிறார். நிஜத்தில் த்ரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்ய…. படம் எப்போது முடியுமென்று பொறுமையிழந்த மக்களின் பொறுமலில் கடைசிக் காட்சிகளின் வசனங்கள் சுத்தமாக கேட்கவில்லை. சிம்புவின் படத்தில் அவர்கள் சேருவதுபோல எடுக்கப்பட்டு படம் முடிகிறது.  விட்டால் போதுமென்று தியேட்டரிலிருந்து எஸ்கேப்!

___________________________________________

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே  பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல்  காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

____________________________________

தமிழ் படங்கள் காதலிக்க கற்றுக்கொடுப்பதில்லை, போராடி வெற்றபெற வேண்டிய காதலை  அற்ப உணர்ச்சிகளின்  நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. அதனால்தான் காதலர்களது திருமண வாழ்க்கையின் இன்பம் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வருகிறது. இப்படி பத்தாண்டுகளுக்கொரு முறை வரும் தலைமுறைகளிடம் சில காதல் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால் சமூகத்தில் இன்னமும் காதல் வெற்றி பெறவில்லை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் !!!

78


vote-012காந்தி, நேரு, அண்ணா வரிசையில் சேர விரும்பி, கனவு கண்டு இப்போது சேர்ந்ததாக எண்ணும் கருணாநிதி சமீபகாலமாக என்ன செய்கிறார்? காலையில் வண்டியை அரசினர் தோட்டத்திற்கு விடுகிறார். 500 கோடியில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவையை காரிலிருந்தபடியே பார்க்க, அதிகாரிகள் வரைபடத்தின் மூலம் கர்ம சிரத்தையாக விளக்க, கலைஞரின் வரலாற்றுச் சாதனையை நிறைவேற்ற உயரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் தமிழினித்தின் தனிப்பெருமை கட்டிடத்தை புயல் வேகத்தில் கட்டுகின்றனர்.

அப்புறம் வண்டி கோட்டூர்புரத்தில் கட்டப்படும் அண்ணா நூலகத்திற்கு செல்கிறது. அங்கும் அதே அதே. பிறகு தலைமைச் செயலகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு என்ன தீனி போடுவது என்று அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு. குடிமைப்பணி இப்படி முடிய வீடு செல்லும் தலைவர் அப்புறம் இருமனைவிமார்களின் வாரிசுப் பிரச்சினைகள் பற்றி பேசும் குடும்பப்பணி, பஞ்சாயத்துக்கள். இடையில் ஜெயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அறிக்கை, கேள்விபதில்களை ரெடிமேடான வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள் மூலம் சரிபார்த்து விட்டு, கலைஞர் டி.வியின் அடுத்த வார மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்த தீம்களை ஒகே செய்து முடித்தால் வருகிறது மாலை.

வள்ளுவர் கோட்டத்திலோ, ஜவஹர்லால் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்திலோ நடத்தபடும் பிரம்மாண்டமான ஜால்ராபிஷேகம். கோட்டத்தில் கவிதை மழை என்றால் மைதானத்தில் குத்தாட்ட மழை. கன்னத்தில் கை வைத்து முழுவதையும் இரசித்து உருகி மருகி தோய்ந்து நனைந்து இதற்குமேல் வார்த்தைகள் தேவைப்படுவோர் வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். நடனம், நாடகம், நகைச்சுவை, சொற்பொழிவு எல்லாம் அந்தத் தங்கத் தலைவனை தமிழின் எல்லா வார்த்தை மற்றம் கலைகளைக் கொண்டு பாராட்டி, சீராட்டி, தாலாட்டித் தள்ள தலைவர் அடையும் மோன நிலை இருக்கிறதே அதோடு ஒப்பிடத்தகுந்தது இந்த உலகில் ஜெயமோகன் அடையும் படைப்பு மோன நிலை மட்டும்தான்.

ஜெயலலிதா கட்டவுட்டில் தன்னைக் கண்டு புளகாங்கிசத்திற்கு புதுமை படைத்திட்டதைப் போல கருணாநிதி வார்த்தைகளில் தன்னைக் கண்டு புல்லரிப்பிசத்திற்கு இலக்கணம் படைக்கிறார். இந்த இரண்டு இசங்களும் சேர்ந்தால் அது நார்சிசம். தன்னையே மோகமுறுதல். தலைவரின்றி வேறுயாருக்கும் கிட்டாத இந்த மோகம்தான் தள்ளாத வயதிலும் அந்த தங்கத் தலைவனை குடும்பத்திற்காக ஓயாது ஓடி ஓடி உழைக்க வைக்கிறது.

அதிலும் திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது. பெண் பெயரில் ஒரு ஆண் சும்மா கலாய்ப்பதற்காக சாருவை கண்டேன், வாசித்தேன், விழுந்தேன் என்று விட்டு விளையாடினால் சாருநிவேதிதாவிற்கு மூன்று நாள் தூக்கம் கெடும் போது கருணாநிதிக்கு அழைத்து வரப்படும் ஐஸ் கட்டிகள் அதுவும் பிரிட்ஜில் வைக்கப்படும் கோடம்பாக்கத்து கட்டிகள் என்றால் என்னவெல்லாம் கெடும்?

விலைவாசி உயர்வா, முல்லைப்பெரியாறு பிரச்சினையா, ரயில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா எல்லாம் பஞ்செனப் பறந்து போகும். கண்ணில் அந்த அலங்கார மனிதர்களைக் கண்டு, கேட்டு, இரவில் படுக்கும் போது அடையும் பிரம்மநிலையை யாரும் கனவில் கூட புரிந்து கொள்ள முடியாது. கட்டாயப் பாராட்டா, வெறுப்புப் பாராட்டா, பயந்து பாராட்டா, ஆளும் கட்சிக்கு ஜே போடும் சீசனல் பாராட்டா, எதுவாக இருந்தால் என்ன? பாராட்டுக்கு உருகும் அந்தப் ‘பச்சைப்பிள்ளை’க்கு எந்த பேதமும் இல்லை.

பாராட்டு தலைவனுக்கு என்றால் அதை வைத்து தலைவனது குடும்பம் பணமாக்குவதற்கு கலைஞர் டி.வி. ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி. சூப்பர் ஸ்டார், உலக ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளையத தளபதி ஸ்டார், என எல்லா ஸ்டார்களும், ஸ்டார்ரினிகளும் வந்தால்தான் டி.விக்கு ஸ்பான்சர். ஸ்டார்களை வரவழைக்க என்ன செய்தார்கள்? பையனூர் அருகே 115 ஏக்கர் நிலத்தை சினிமாத் தொழிலாளிகளுக்கு என்று கலைஞர் தனது சட்டைப்பையிலிருந்த சொந்த சொத்திலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுக்க முடிந்தது மேட்டர். இப்போ ஒரு கல்லில் மூணு ஸ்டாரபெரி. பாராட்டு, பணம், ஏழைப் பங்காளன்.

எல்லாம் கூடிப் பேசி திரைக்கதை எழுதி, செட்போட்டு, ரிகர்சல் பார்த்து மூகூர்த்த நாளும் வந்தது. திட்டமிட்டபடி ஐஸ் நிகழ்வு நல்லபடியாக செல்லும்போது அஜித் மட்டும்,” எங்கள மிரட்டுராங்கையா” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட வார்த்தையைப் பேச, ரஜினி ஆவேசமாய் எழுந்து கைதட்ட விழுந்தது கரும்புள்ளி.

தானைத் தலைவன் அப்செட்டாகி தொழிலாளிகளுக்கு கட்டிக்கொடுப்பதாக இருந்த வீட்டுத் திட்டத்தையும், முதலாளிகளுக்காக கட்டவிருந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோவைக் குறித்தும் தனது பேச்சில் டெலிட்டோ, எடிட்டோ செய்து விட்டதாக பெப்சி சங்கம் குமுற அப்புறம் ஜாகுவார் தங்கத்தின் பேட்டி, வீடு தாக்கப்படுதல், வி.சிறுத்தை ஆதரிப்பு, ரெட் கார்டு, நடிகர் சங்கம் – பெப்சி மோதல், தயாரப்பாளர் சங்கம் பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போதைக்கு அஜித் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற வகையில் முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் அஜித்தின் அடுத்த படம் அண்ணன் அழகிரியின் பையனது தயாரிப்பு என்பதால் அல்டிமேட் போங்கடா வெண்ணைகளா என்று போல்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மேல் அந்தக் கரும்புள்ளியை அழிக்க சூப்பரும், அல்டிமேட்டும் கோபாலபுரத்திற்கு மலையேறி சாமியைக் குளிர்வித்திருக்கிறார்கள். தலைவரும் சூப்பரின் மகள் நிச்சயதார்த்ததிற்கு சென்று வாழ்த்தியிருக்கிறார்.

இத்தோடு இதை உண்மைத் தமிழன் முடித்திருந்தால் நாம் இந்த இடுகையை எழுதியிருக்க வேண்டியதில்லை.

இதற்குமேல் அல்டிமேட்டும், சூப்பரும் மாபெரும் கலகக்காரர்களாக, அவர் காட்டியதையும் அதற்கு கிடைத்த ஆதரவும்தான் நீங்கள் இதை வாசிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.

இந்த உலகிலேயே பெரும் வித்தியாசமான அவலமான தொழிற்சங்கமென்றால் அது பெப்சி சங்கம்தான். பெரும் சினிமா முதலாளிகளின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக நிமாய் கோஷ் போன்ற மூதாதைகள் கம்பீரமாக ஆரம்பித்த அந்த சங்கம் இன்று அதே முதலாளிகளின் கைப்பாவையாய் பலவீனமாகிவிட்டது. ஒரு ஆட்டோ தொழிற்சங்க கிளைக்கு இருக்கும் குறைந்த பட்ச வர்க்க உணர்வு கூட இங்கு குறைந்து வருகிறது.

நிலையான வேலை, ஒழுங்கான வேலை நேரம் இல்லை. சங்கங்களில் சேர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு. அதற்கு கட்டணம். நடனம் போன்ற சங்கங்கங்களில் கட்டணமும் அதிகம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பெப்சி படைப்பாளிகள் பிரச்சினை வந்த போது இந்த சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி பொதுக்கூட்டமெல்லாம் நடத்தினோம். துணை நடிகர்கள், லேட்மேன் போன்ற சாதாரண மக்களின் துன்பமும் அந்த துன்பத்தை உணர்ந்து அணிதிரளவிடாத சினிமா கலாச்சாரமும் அவர்களை என்றும் விடுவிக்கப் போவதில்லை.

வி.சி குகநாதன் இன்று பெப்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கும் தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த முருகனுக்குத்தான் தெரியும்.  தி.மு.க ஆதரவினால் குகநாதன் ஏதோ கொஞ்சம் ஏக்கர் நிலங்களை கலைஞரின் சட்டைப்பையிலிருந்து தொழிலாளிகளுக்கு தானம் பெற்றார். இது உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு போகிறதா என்றால் அதிலும் தி.மு.க தொழிலாளிகள், கமிஷன் கொடுக்கும் தொழிலாளிகள் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் உள்ளன. சரி சில தி.மு.க ஆதரவு தொழிலாளிகளுக்கு கூட அந்த இடம் கிடைத்துவிட்டு போகட்டுமே. அடுத்து அம்மா வந்தால் அ.தி.மு.க தொழிலாளிகளுக்கு வாங்கிக்கொடுத்தால் போயிற்று. ஜவகர்லால் விளையாட்டரங்கமும், ஜெயா டி.வியும் ஓடவா போகிறது?

கலைஞரின் தானத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஐஸ் நிகழ்ச்சிக்கு, ஏதோ நம்ம நடிப்பிற்கு லைட் பிடித்து, டூப்பாக உயிரைக் கொடுத்து நடித்து பாடுபடும் தொழிலாளிகளை மனதில் நினைத்தாவது தலையைக் காட்டிவிட்டு, கொஞ்சம் வார்த்தைகளை பாராட்டாக கொட்டி விட்டு வந்திருக்கலாம். தொப்புளில் ஆம்லெட் போடுவது, டூயட்டிற்காக உலக அதிசயங்களை கேவலப்படுத்துவது, சண்டைக்காக காய்கனி வண்டிகளை உடைப்பது போன்ற லூசுத்தனங்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு இழிவானவையல்ல.

ஏற்கனவே ஈழத்திற்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடத்திய ஆறு மணி நேர உண்ணாவிரதத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் என்னபாடு பட்டார்கள் என்பதை வினவில் எழுதியிருக்கிறோம். அந்த உலக மகா ஃபிராடு நிகழ்ச்சியைக் கூட நம்ம அல்டிமேட்டால் தாங்கமுடியவில்லை. மேடைக்கு போனவர் “சினிமா இன்டஸ்ட்ரியை சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று முழங்கிவிட்டுத்தான் சென்றார். அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. சினிமா ஈழத்திற்காகப் போராடுகிறது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் படித்த முட்டாள் கூட நம்ப மாட்டானே? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?

அல்டிமேட் கூறுவிரும்புவது என்னவென்றால் நைட் ஒரு ஃபுல்லை போட்டுவிட்டு காலையில் லேட்டாக எழுந்து அல்லக்கைகளோடு ஷூட்டிங்கிற்கு போய் கையையும், காலையையும் சோம்பல் முறிப்பது போல நடித்துவிட்டு அதில் களைத்துப் போய் சொகுசு கேரவானில் ஓய்வு எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முப்பதோ, அறுபதோ நாட்களைக் கழித்தால் ஐயாவுக்கு ஊதியமாய் ஐந்தோ இல்லை பத்தோ கோடிகள் வரும். அந்தக் கோடியும் சினிமா ஓப்பனிங்கில் ஏலமிடப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்கள் அடகுவைத்து அழும் ரத்தப்பணம்தான். இதுதான் சினிமா இன்டஸ்ட்ரி இருக்க விரும்பும் இலட்சணம்.

“ஒரு லைட்மேன் வாங்கும் 250 அல்லது 350 ரூபாய் சம்பளத்தை நடிகனான எனக்கும் கொடுங்கள், இயக்குநருக்கும் கொடுங்கள், நாமெல்லாம் ஒரு இன்டஸ்டரியாக இருப்போம்” என்று சொன்னால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இவரு கோடி கோடியாக வாங்குவாராம். அந்த கோல்மால்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மேல் ஒரு தூசிகூட விழக்கூடாதாம். இதுதான் அல்டிமெட்டின் தன்மானக் கர்ஜனையின் பின்னணி.

நட்சத்திரப் பதவி, அதை முதலாளிகள் உருவாக்கும் விதம், இரசிகர்கள் கொடுக்கும் அங்கீகாரம், ஊடகங்களில் பில்டப்புக்கள் எல்லாம் இருந்தால்தான் கோடி சம்பளமும், சொர்க்க வாழ்வும் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதும் செய்யவேண்டும். எல்லா ஊழலும் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். இதில் நான்மட்டும் யோக்கியம் என்று காட்டுவது அம்மணாண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவனின் கதைதான்.

ஒப்பனிங்  காட்சிகள் ஏலம் கிடையாது, பிளாக் டிக்கெட் கிடையாது, திரையரங்கின் வழக்கமான கட்டணம்தான் என்று நேர்மையாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் எப்படி மில்லியனராக மிளிர்ந்திருக்க முடியும்? இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?

ஆபாசத்தையும், அண்டப் புளுகையும் வைத்து இரசிகனை உணர்ச்சியால் திறமையாக சுரண்டுவதினால்தானே நீங்கள் நட்சத்திரங்கள்? பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்? நடிகன் – இரசிகன் உறவே இப்படி ஊழல்மயமாக இருக்கும் போது வெள்ளித்திரையில் போடும் டூபாக்கூர் ஹீரோ வேடத்தை வெளியில் காட்டுவதை சகிக்க முடியவில்லை.

அஜித் உண்ணாவிரத்த்திற்கு வரவில்லை என்ற செய்தியினால் ஏகன் படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அல்டிமேட் என்ன செய்திருக்கவேண்டும்? வெளிநாடு ரைட்ஸை என்ன ரேட்டுக்கு விற்றீர்களோ அதன் நட்டத்தை நான் தருகிறேன் என்று அப்போதே தன்மானஸ்தனாக காட்டியிருக்கலாமே? அதே போல குசேலன் படம் பெங்களூருவில் வெளியிட எதிர்ப்பு வந்த போது ரஜினியும் தயாரிப்பாளரிடம் கர்நாடகா ரைட்சுக்குரிய பணத்தை திருப்பியிருக்கலாமே? ஆனால் இரண்டு ஸ்டார்களும் என்ன செய்தார்கள்?

அஜித் கருப்பு சட்டையைப் போட்டுவிட்டு உண்ணாவிரத்த்தில் போஸ் கொடுத்தார். ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.

இந்த விடயத்தை பலரும் கலைஞருக்கு ஜால்ரா போட மறுத்த விசயமாக மட்டும் பார்ப்பதில் பலனில்லை. கருணாநிதியை எதிர்ப்பது வேறு. அதற்காக இரண்டு அல்பைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவது வேறு. ரஜினியை வைத்து முதலாளிகள் சம்பாதித்தது போல அந்த முதலாளிகளை வைத்து ரஜினியும் சம்பாதிக்கிறார். அதற்கு மாஸ் நடிகன் என்ற பம்மாத்து தேவைப்படுகிறது. ஆனால் ரஜினியின் மாஸ் பேஸ் என்ன என்பதை அவரது புகழ்பெற்ற பாபா படம் வரும்போது ரஜினி தலைமை ரசிகர் மன்றம் இருக்கும் திருச்சியிலேயே நேருக்கு நேர் சந்தித்து விரட்டியிருக்கிறோம்.

தமிழ்சினிமா உருவாக்கியிருக்கும் இரசனைதான் தமிழ்மக்களின் எல்லாப் பார்வைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பால் உள்ள அக்கறையற்ற நிலைக்கும் கூட இதுவே அடிப்படைக் காரணம். இந்த பலவீனத்தை வைத்தே தமிழ் சினிமாவின் பிரபலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். இன்று கட்சிக் கூட்டங்கள் கூட குத்தாட்ட நடன கேளிக்கைகளாக மாறிவருகின்றன. இப்படி சினிமா என்பது நம்மை மேலும் மேலும் சமூகத்திடமிருந்து அன்னியப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு, பழங்குடி மக்களின் துயரம், வன்னி முகாம் அவலம் என்ற கண்ணை அறுக்கும் யதார்த்தத்தில் அஜித்தின் தன்மானப் பிரச்சினைதான் நமது பேசுபொருளாக என்றால், நம்மை அந்த பழனி பிக்கினி முருகனால் கூட காப்பாற்ற முடியாது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்