privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

-

டாடா மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் உள்ள தாதுப் பொருட்களை எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கின்றன.

மாவோயிஸ்ட் vs MOUஸ்ட்
பெரும் போர் – மாவோயிஸ்ட் எதிர் MOUஸ்ட் (பழங்குடி மக்கள் எதிர் கார்ப்பொரேட்டுகள்+அரசு)

மலை இருக்கிறது, காடு இருக்கிறது, மலைக்கு கீழே, காட்டு நிலத்துக்கு அடியில், சந்தையில் பெரும் லாபம் ஈட்ட உதவும் தாதுக்கள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளை சரிக்கட்டி, சட்டங்களை மாற்றி, உரிமங்களை விலைக்கு வாங்கி விட்டால், தாதுக்களை அகழ்ந்து, உலகச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். இந்த சமன்பாட்டுக்கு இடைஞ்சலாக, குறுக்கீடாக அந்தப் பகுதியில் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.

பணம், மாற்று இடத்தில் நிலம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற மோசடி பொருளாதார மந்திரங்கள் அவர்களிடம் எடுபட மாட்டேன் என்கிறது. முதலாளிகள் பாணி ‘நாட்டுப் பற்று’ என்ற பசப்பு வார்த்தையும் அவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் பைபிள் அல்லது கஞ்சா கொடுத்து வசப்படுத்தும் 19-ம் நூற்றாண்டு உத்திகளும் செல்லுபடியாகவில்லை. லீனா மணிமேகலை போன்ற படைப்பாளிகளின் “தேஜஸ்வினி” எனும் விஷூவல் வித்தைகளும் அம்மக்களிடத்தில் எடுபடவில்லை.

எங்கள் நிலம், எங்கள் வாழ்க்கை, எங்கள் உரிமை என்பதை டாடா அல்லது எஸ்ஸாரின் ஆதாயத்துக்காக அல்லது மன்மோகன் சிங்/ப சிதம்பரத்தின் ‘வளர்ச்சி’ பார்வைக்காக அந்த மக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகளின் பண பலத்தையும் அரசின் ஆயுத பலத்தையும் எதிர்த்து நிற்க மாவோயிஸ்ட் அமைப்பின் கீழ் அணி திரள்கிறார்கள்.

ஒரு கட்டபொம்மன் பிறந்த அதே மண்ணில் ஒரு எட்டப்பன் பிறக்காமலா போய் விடுகிறான். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நின்ற திப்பு சுல்தானை காட்டிக் கொடுக்க மகாராஷ்டிராவின் பேஷ்வா கிடைக்காமலா போய் விட்டார். சாம, தான முறைகள் எடுபடாமல் போய் தண்டம் சாத்தியப்படாமல் இருக்க முதலாளிகள் பேதத்தில் இறங்குகிறார்கள்.

மகேந்திர கர்மா
மகேந்திர கர்மா

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெருநில உடைமையாளர் குடும்பத்தில் பிறந்த மகேந்திர கர்மா 1990-களிலேயே நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு எதிராக ஜன் ஜாக்ரன் அபியான் என்ற படையை உருவாக்க முயற்சித்தார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாடாக்களும், எஸ்ஸார்களும் அவர்களது திட்டங்களுக்காக பழங்குடி பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு மாவோயிஸ்டுகள் என்ற தடையை எதிர் கொள்வது வரை அவரது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

2005-ல் கார்ப்பரேட்டுகள் தேவையான நிதி உதவி வழங்க, மத்திய அரசு மற்றும் மாநில அரசு, ஆயுதங்கள் கொடுத்து பழங்குடி மக்களிடையே, முதலாளிகளின் பணம், இன்சொல்லில் மயங்கும் ஒரு சிறு பிரிவினரை அணி திரட்டுகிறார்கள். அதற்கு சல்வா ஜூடும் அல்லது சுத்திகரிக்கும் வேட்டை என்று பெயர் சூட்டுகிறார்கள்.

2011-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தால் கலைக்கப்படும் வரையிலான அடுத்த 5 ஆண்டுகளில் தமது எஜமான்களான கார்ப்பரேட்டுகளின் சார்பில் தமது மக்கள் மீதே ஒரு மிகப்பெரும் சுத்திகரிப்பு வேட்டையை நடத்தினர் சல்வா ஜூடும் படையினர். சல்வா ஜூடும் செயல்பட ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டுகளில் சுமார் 644 கிராமங்களில் வீடுகளை எரித்து அங்கு வாழ்ந்த சுமார் 3 லட்சம் மக்களை வெளியில் துரத்தினர். சுமார் 1 லட்சம் பழங்குடி மக்கள் தென் சத்திஸ்கரில் உள்ள பல்வேறு முகாம்களில் குடியேற்றப்பட்டனர்.

‘மாவோயிஸ்டுகள் செயல்படுவதற்கு கிராமங்கள் இல்லாமல் செய்வதாகவும், மக்களை மாவோயிஸ்டுகள் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக முகாம்களில் குடியேற்றுவதாகவும்’ கூறி இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் படு கொலை செய்யப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு காவலாக சல்வா ஜூடும் படையினர் தம்மைத் தாமே நியமித்துக் கொண்டனர். இலங்கையில் முள்வேலி முகாம்களிலும், தமிழகத்தில் அகதி முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களைப் போல சல்வா ஜூடும் குண்டர்களின் ஆதிக்கத்தில் அடைபட்டிருந்த பழங்குடி பெண்களும், குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இவற்றை தடுக்க வேண்டிய காவல் துறையும், நீதி மன்றங்களும் கைகட்டி வேடிக்கை பார்த்தன. கொல்லப்படும் அரச படைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல லட்ச ரூபாய் இழப்பீடு, கண்ணீர் அஞ்சலி வழங்கும் அரசு, கார்ப்பரேட்டுகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கொலைவேட்டையை ஊக்குவித்தது.

பழங்குடி மக்கள் மத்தியில் பிரிவு ஏற்படுத்தி, அவர்களது கிராம வாழ்க்கையை அழித்து, பெரும் எண்ணிக்கையிலான மக்களை நாடோடிகளாக மாற்றிய சல்வா ஜூடும் கூலிப்படைக்கு எதிரான பழங்குடியினர் போராட்டங்களும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர் போராளிகளாக மாறினர். 2008-ம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சல்வா ஜூடுமின் பயங்கரவாத பிடி பெருமளவு பலவீனமடைந்தது. மக்கள் தத்தமது கிராமங்களுக்கு மறு குடியேற ஆரம்பித்தனர்.

சல்வா ஜூடும் மக்கள் முகாம்
சல்வா ஜூடும் அடக்குமுறை முகாம்

கூலிப்படை உருவாக்கம், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு இவற்றுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், திரைக்கதை ஓடி முடிந்த பிறகு, 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சல்வா ஜூடும் அமைப்பை அரசே நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் சொன்னது. உடனடியாக சல்வா ஜூடுமை கலைத்து அது செய்த கிரிமினல் செயல்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சத்திஸ்கர் அரசை பணித்தது. ஏற்கனவே பல் பிடுங்கப்பட்டிருந்த சல்வா ஜூடுமுக்கான பிணப்பெட்டியின் கதவுகள் இறுதியாக மூடப்பட்டன.

ஆனால், சல்வா ஜூடுமின் 3 ஆண்டுகள் பயங்கரவாத வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட பழங்குடி மக்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள், அழிக்கப்பட்ட கிராமங்கள் இவற்றுக்கு சத்திஸ்கர் அரசும், மத்திய அரசும் எந்த விதமான நியாயத்தையும் வழங்கவில்லை. அந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்கவில்லை. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. குற்றவாளிகள் தங்களைத் தாங்களே விசாரித்து தண்டித்துக் கொள்வார்களா என்ன?

மாறாக சல்வா ஜூடுமை உருவாக்கி, கட்டியமைத்து, இயக்கிய மகேந்திர கர்மா சத்திஸ்கர் காங்கிரசின் முக்கிய தலைவராக தொடர்ந்தார். அவருக்கு அரசின் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எந்திர துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் அவரை காத்து நின்றார்கள். ஆனால், பழங்குடி மக்களின் நியாயத் தராசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசின் நியாயங்களுடன் ஒத்து வருவதில்லை.

கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 தலைவர்கள் 25 கார்களில் சுக்மா மாவட்டத்தில் ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜக்தால்பூருக்கு அருகில் உள்ள கேஷ்லூர் என்ற இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதை இந்த ஆண்டு வர இருக்கும் தேர்தலுக்கான பரிவர்த்தன் யாத்திரை என்று காங்கிரசு கட்சி அழைக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் வித்யா சரண் சுக்லா, முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், ராஜ்நந்த்கான் சட்ட மன்ற உறுப்பினர் உதய் முதலியார், பூலோ தேவி நேத்தம் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த கார்கள் அணிவகுப்பில் இருந்தனர். அடர்ந்த வனப்பகுதியான தார்பா பள்ளத்தாக்கு பகுதியில் கார்களை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட சுமார் 250 பழங்குடி மாவோயிஸ்ட் போராளிகள் காங்கிரஸ் தலைவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மகேந்திர கர்மாவை கொல்வது அந்த தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி மக்களின் எதிரி மகேந்திரா கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றனர். எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களுக்கு எதிரான தனது நாடு தழுவிய போராட்டங்களை தள்ளி வைத்திருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கியிருக்கின்றன. ஆனால் பழங்குடி மக்களை இந்திய துணை இராணுவப் படைகள் கொன்றதற்கெல்லாம் இத்தகைய நிவாரணங்கள் ஏதுமில்லை. சொல்லப் போனால் இவர்களின் கொலைகளுக்கு கணக்கே இல்லை.

எனினும் மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை இந்திய அரசு மிருக பலத்துடன் ஒடுக்கவே முனையும். சம்பவம் நடந்த பிறகு கோப்ரா கமாண்டோ பிரிவு அடங்கிய சிஆர்பிஎஃப் படையினர் 600 பேர் சத்தீஸ்கருக்கு அனுப்பப்பட்டனர். பாஜகவைச் சார்ந்த சத்தீஸ்கரின் முதல்வர் ரமண் சிங்கிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை உடன் வழங்கியிருக்கிறது இந்திய அரசு. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட் அமைப்பினரை ஒடுக்குவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் உறுதி பூண்டுள்ளார். வரும் நாட்களில் கணக்கு வழக்கு இல்லாமல் கொல்லப்படும் பழங்குடி மக்களை பார்க்க இருக்கிறோம்.

எனவே பழங்குடி மக்கள் மீது கடுமையான எதிர் நடவடிக்கைகளை அவிழ்த்து விடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகின்றன. அவற்றை எதிர் கொண்டு நமது நாட்டையும் இயற்கை வளங்களையும் கொள்ளை போவதை தடுக்கும் சுமை சத்தீஸ்கரின் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த பழங்குடி மக்களை ஆதரிக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

– செழியன்

மேலும் படிக்க
Was Bastar tiger, Mahendra Kumar face of Salwa Judum the real target in Naxal attack