Saturday, April 1, 2023
முகப்புமங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!
Array

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!

-


vote-012இந்த பதிவை எழுதும் முன்பாக பின்னூட்டம் எழுதப் போகும் வாசகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவெனில் சிலபல ஆயிரங்கள்  சம்பளம் பெறும் விமானப்பணியாளர்களைப் பற்றி எழுதுவதற்கு பதிலாக பஞ்சாலைத் தொழிலாளி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலை தொழிலாளி, முறைசாராத் தொழிலாளிகளின் சிரமங்களைப்பற்றி எழுதலாமே என நீங்கள் கேட்கலாம்.

84 ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலாளி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தி, இழப்புகளை சந்தித்து, இரத்தம் சிந்தி பெற்ற “தொழிலாளர் நலச்சட்டங்கள்” என்பதும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, சங்கம் அமைத்து உரிமைகளை கோரும் உரிமை ஆகியவையும் இன்று ஏர்இந்தியா விசயத்தில் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு பின்னர் பின்னூட்டத்திற்கு தயாராகுங்கள்

இந்த ஏர் இந்தியா வேலைநிறுத்தம் குறித்த செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்தரிகையின் இணைய தளத்தில் படிக்கும் போது  பின்னூட்டங்களில் பலர் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது என எழுதியிருந்தனர். அதன் நடுவில் ஒருவர் எழுதியிருந்த பின்னூட்டத்தில் “எனது தந்தை விமானியாக பணியாற்றுகிறார் – பிரச்சனையான நாணயத்தின் ஒரு பக்கத்தினை மட்டும் பார்க்காமல் அதன் மறு பக்கத்தையும் வாசகர்கள் பார்க்க வேண்டும் – எனது தந்தை எனக்கு நினைவு தெரிந்து 12 லிருந்து 14 மணி நேர பணிபுரிந்துவிட்டு திரும்பி வருவார்.  அவர்களுக்கும் யாரேனும் விடுப்பு எடுத்தால் பணிச்சுமை அதிகமாகி ஓவர்டியூட்டி என்பது வரும்- தொழில் ரீதியாக பல சிரமங்களை அடக்குமுறைகளை வீட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்” என எழுதப்பட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் வெள்ளித்திரையில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் இளவரசியாக வரும் கொடுங்கோலாட்சி நாயகி ஆயிரம் பேர் தலையைச் சீவுவதாக பார்த்திருக்கிறோம்.  கடந்த 2001ம் ஆண்டு பாசிச ஜெயலலிதா முதல்வராக இருந்த போது லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ‘டிஸ்மிஸ்’ என்று கொத்துக் கொத்தாக கோட்டையிலிருந்து வெளியே வீசியது நினைவிருக்கலாம்.  அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் (டி.கே.ரங்கராஜன் -எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கில்) அரசு ஊழியர்களுக்கு “வேலை நிறுத்த உரிமை இல்லை” என்றது.  அது ஒரு வகை நீதிமன்ற பாசிசம். (ம.க.இ.க. வின் வெளியீடாக நீதிமன்ற பாசிசம் குறித்து விரிவாக பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

இருப்பினும் இன்றைய நிலையில் குஷ்பு வழக்கு, ரிலையன்ஸ் சகோதரர்களின் வழக்கு போன்ற ‘அரசியலமைப்புச் சட்டச் சிக்கலெழும்’ (Is it constitutionally important one?!..) வழக்குகளில் விரைவு தீர்ப்பு தவிர மற்றவற்றில் இல்லை என்பது உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஒரு இடுகை எழுத ஆவல் – அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன் – தற்போது ஏர் இந்தியா பிரச்சனைக்கு வருவோம்

அந்த நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டி இன்று வரை தொழிற்சங்க சம்மேளனங்கள் எதுவும் மனுச்செய்யவில்லை. வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஜெ உத்திரவிட்டவுடன் எதிர்ப்பு குரல் கொடுத்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (திமுக), அரசு ஊழியர்களுக்காக வாதாடிய ப.சிதம்பரம் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இரண்டும் தற்போது ஆட்சியில் இருக்கின்றன. எனினும் தொழிற்தாவாச் சட்ட சரத்திற்கு (மத்திய சட்டம்) எதிராக மாநில அரசு சட்டம் கொண்டு வர முடியாது – ஜெ கொண்டுவந்தது செல்லாது என சட்டத்திருத்தம் (தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள்) கொண்டுவர இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  விளைவு இன்று ஏர் இந்தியா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்த ஜாதவ் பேனாவையே வாளாக்கி தொழிலாளர்களின் தலையை சீவிக்கொண்டிருக்கிறார்.

நடந்தது என்ன?

ஒருபுறம் இந்த விபத்து குறித்து உயிரிழப்பு குறித்து நாடே வருத்தத்தில் இருக்கும் போது மற்றொரு தடத்தில் செல்ல வேண்டிய விமானத்தை சான்றளிக்க ஏர் இந்தியா பொறியாளருக்கு பதிலாக தனியார் நிறுவன பொறியாளரை பயன்படுத்தியதை ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்த்தனர்.

ஆதாரம் ( http://livestreamingx.com/air-india-strike-2010-story-behind-air-india-strike-05252583.html ).

இதை உடனடியாக பொறியாளர்கள் சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார் மனுவாக அளிக்கிறது.  ஆனால் நிர்வாகம் “எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்பாக செய்தி ஊடகங்களில் இந்த தகவல் எவ்வாறு வந்தது?” என கொதிக்கின்றனர்.  அதற்கு தொழிற்சங்க தரப்பிலிருந்து தொழிற்சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் நடந்த விபரத்தை மக்கள் அறியச் செய்ய செய்தி ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் தவறொன்றுமில்லை என தெரிவிக்கிறார்.  அன்று இரவே தொழிலாளர் எவரும் எந்த செய்தி ஊடகத்திற்கும் எதையும் சொல்லக்கூடாது என்ற தடை சுற்றறிக்கை போடப் படுவதுடன் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

ஒருபுறம் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விமான ஓட்டி, பணிப்பெண்கள் உள்ளிட்ட தனது சக ஊழியர்களுடன் பல உயிர்கள் மாய்க்கப்பட்டிருக்கிறது என்கிற உணர்வில் வேதனையுற்றிருந்த தொழிலாளர்களிடையே இந்த தற்காலிக வேலை நீக்க நடவடிக்கை கோபத்தை தூண்ட உடனடி வேலைநிறுத்தத்தில் சுமார் 20000 பேர் ஈடுபடுகின்றனர் (மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 32000).   ஏர் இந்தியா இரண்டு மூன்று கம்பெனிகளாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.  தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டது என்பதுடன்- மத்திய பொதுத்துறை என்ற அடிப்படையில் முன்மாதிரி நிர்வாகியாக (model employer) செயல்பட வேண்டிய பொறுப்பும் உள்ள நிறுவனம்.

இவைகளை ஒன்றுபடுத்தி செயல்படுகிற நாசில் (நேஷ‌னல் ஏவியேஷ‌ன் கம்பெனி ஆப் இந்தியா) என்கிற நிறுவனம் சார்பில் மறுநாள் காலை மும்பாய்- மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் இந்த வேலை நிறுத்தம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.  அதே சமயம் தொழிற்தாவாச் சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்படாத வேலைநிறுத்தம் என்ற போதிலும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பங்கெடுத்திருப்பதால் சமரச நடவடிக்கையில் ஈடுபட மத்திய தொழிலாளர் நல ஆணையாளர் திரு முகோபாத்யாயா உடனடியாக இதை ஒரு தாவாவாக விசாரணைக்கு எடுக்கிறார்.  நீதிமன்றம் அன்றே விசாரித்து “நடைபெறும் வேலைநிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம், எனவே சமரச அலுவலர் முன்னிலையில் தாவாவை தீர்த்துக் கொள்ள வேண்டும்- அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்” என்கிறது.

தொழிலாளர் ஆணையரும் அனைவரும் வேலைக்குச் செல்லுங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியதை ஏற்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறது.  இந்நிலையில் இரண்டு தினங்கள் அம்பானிகள், டாட்டாக்கள், அமைச்சர் பெருமக்கள், மேட்டுக் குடியினர் தவித்துப் போனதால் வேலை நிறுத்தத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் பேட்டி கொடுக்கிறார்.  உடனே ஏர் இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந் ஜாதவ் தன்னுடைய பேனாவையே கூர்வாளாக மாற்றி 17 பேர்கள் பணிநீக்கம், 24 பேர்கள் தற்காலிக பணிநீக்கம் என்கிறார்.

தொழிலாளர் ஆணையர் திரு முகோபாத்யாயா வியந்து போய் “நான் சமரச நடவடிக்கை துவக்கியிருக்கும் போது ஏன் இப்படி செய்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக 29 மே இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது.  மறு தினத்திற்குள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மேலும் பலர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.  இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.  தொழிற்சங்க அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைக்கப்படுகிறது.   இங்குதான் நாம் சோனியா சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் மன்மோகன் அரசில் இருக்கிறோமா? அல்லது திடீரென ஹிட்லர் போன்ற சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா என்ற வியப்பு மேலிடுகிறது.

ஏற்கனவே தொழிலாளர் ஆணையர் தாவா நடவடிக்கை தொடங்கி விட்டதால் பழிவாங்கும் நடவடிக்கை எது மேற்கொண்டாலும் அது தொழிலாளர் விரோத நடவடிக்கை என தொழிற்தாவாச் சட்டம் வகைப்படுத்துகிறது.  மேலதிகமாக தொழிற்சங்கங்களிலிருந்து முறையாக மீண்டும் ஒரு 14 நாட்கள் முன்னறிவிப்பாக வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.  அந்த அறிவிப்பு தொழிலாளர் ஆணையரை சென்று சேர்ந்த நிமிடம் முதல் சமரச நடவடிக்கை துவங்கியதாகவே கொள்ள வேண்டும் என்பது சட்டத்தி்ன் நிலைப்பாடு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலில் இருக்கிற நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்வதென்றால் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்க வேண்டும். பதில் தர சந்தர்ப்பம் தர வேண்டும். பதில் திருப்தியளிக்காவிட்டால் உள்துறை விசாரணை நடத்த வேண்டும். விசாரித்தபின் விசாரணை அலுவலர் தரும் முடிவின் மீது குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி கருத்து தெரிவிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் வேலை நீக்கம் என்ற தண்டனை தர உத்தேசித்தால் அந்த உத்தேச தண்டனை குறித்து காரணம் காட்டக் கோரும் அறிவிப்பு கொடுக்கப் பட வேண்டும். அதற்கு பதில் பெற்றபின் அதுவும் திருப்தியளிக்கவில்லை என்றால்தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

அதுவும் பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தாவா நிலுவையிலிருக்கிறபோது வேலை நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொண்டால் தொழிலாளர் ஆணையரின் ஒப்புதல் பெறவேண்டும்.  இவையெல்லாம் நான் சொல்லவில்லை பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட வரலாற்றிற்கு பின்னர் இயற்றப்பட்ட 1947ம் ஆண்டு தொழிற்தாவாச்சட்டம் சொல்கிறது.  (இந்த சட்டங்கள் எவையும் எமக்கு பொருந்தக் கூடாது என இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கலைஞருடனும், துணை முதல்வர் ஸ்டாலினுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் SEZ புதிய பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் துவங்கும் பன்னாட்டு கம்பெனிகள் கூறி வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை)

இது ஒருபுறமிருக்க வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும்” என எண்ணுவதைப் போன்று தொழிற்சங்க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டால் தொழிலாளர்கள் அடங்கிவிடுவார்கள் என சர்வாதிகாரி அரவிந் ஜாதவ் எண்ணுவது எங்கணம் என்பது நமக்கு புரியவில்லை.  இந்திய தொழிற்சங்க சட்டத்தில் அங்கீகாரம் என்பதற்கு தொழிலாளர் ஆணையர் தலையிட்டு தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்திற்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கலாம் என்றுள்ளது.

ஒரு தொழிற்சங்கத்திற்கு பதிவு செய்யும் அதிகாரம் படைத்த தொழிலாளர் துணை ஆணையர் அந்த பதிவை ரத்து செய்ய முழு உரிமை உள்ளது என்ற போதிலும் இரண்டு மாத முன்னறிவிப்பு கொடுத்து அதன் மீது பதில் பெற்றபின்னர்தான் காரண காரியங்களை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தொழிற்சங்க சட்டம் கூறுகிறது.  அதேபோல் அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் முன்னறிவிப்பு கொடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாமல் இது போன்ற சர்வாதிகாரப் போக்கினை அனுமதித்தால் நாளை எந்த தொழிற்சாலையிலும் தொழிற்சங்கங்களே இருக்காது.  தொழிற்சங்கங்களே இருக்கக் கூடாது, அரசுத் துறையே இருக்கக் கூடாது, எல்லாம் தனியார் மயமாக வேண்டும், தனது குறையை முறையிடும் வாய்ப்பு தொழிலாளிக்கு இருக்கக் கூடாது என்ற மறு காலனியாதிக்க நடவடிக்கைகளின் மறுபதிப்புத்தான் அரசுத்துறையான ஏர் இந்தியாவில் இன்று அரங்கேறியிருக்கிறது.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் சுமார் 32000 பேர் பணிபுரியும் ஏர் இந்தியாவில் 14 தொழிற்சங்கங்கள் இருக்கிறதாம்.  இது போல் ஆலைகள் தோறும் பணிப்பிரிவு, அரசியல் சார்பு வாரியாக தொழிலாளர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு துணைபோகும் விதமாக அமைந்துவிடுகிறது.  இந்த செய்தியின்மீது தொழிற்சங்க தலைவர்களின் கண்டன அறிக்கைகள் கூட இல்லையென்பது வேதனையான ஒன்று.  இந்திய தொழிலாளி வர்க்கம் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புத்தன்மையை விட்டு வெளியேறி புரட்சிகர இயக்கங்களின் தலைமையில் ஒரு ஆலைக்கு ஒரு தொழிற்சங்கம் என்று ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஏர்இந்தியா போன்ற மேல்தட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கே கதி இதுதானென்றால் மற்ற சாதாரண நிறுவனங்களின் நிலைமை பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மறுகாலனியாக்க கொடுமையை முறியடிக்க ஒன்றிணைந்து போராடினால்தான் இந்த போக்கை முறியடிக்க முடியும். அந்த அரசியலை இந்திய தொழிலாளி வர்க்கம் என்று கையிலெடுக்கப் போகிறது?

___________________________________________

– சித்திரகுப்தன்.

___________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு; விவரங்கள் நன்றாக சொல்லப்பட்டு இருக்கின்றன
    நவீன காலங்களில் தொழிலாளர் நல சட்டங்கள், ஏதோ காக்கி சட்டை போட்ட கூலிகாரர்களுக்கு ஏற்பட்டவை என்றும், அவை தங்களுக்கு அவசியம் இல்லை என்பது போன்ற ஒரு இமேஜ் , இன்றைய IT தொல்ழிலாரகளுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
    இந்த IT கம்பனிகள் பெண் என்றும் பார்க்காமல் தொழிலார்களை சக்கையாக பிழிவது கண்கூடு. தாங்கள் IT செக்டர் பற்றியும் ஒரு பதிவு போடலாமே.

  2. நல்ல பதிவு. வினவு ஏற்கனவே ஐடி துறையிலுள்ள்வர்களைப் பற்றி பதிவு எழுதி உள்ளது. தனி புத்தகமும் வெளியிட்டு உள்ளது. மேலும், தொழிலாளர் பிரச்சனை என்று வரும்போது, பத்திரிக்கைகளும், மேட்டுக்குடிகளும் சொல்லும் ஒரு காரணம் அரசு தொழிலாளார்கள் பணியே செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள், அதனால் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதாகும். ஆளும் வர்க்கம் ஆனது ஒரு பொதுதுறையை தனியார் மயமாக்கி கொள்ளை அடிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுமாதிரியான பொதுதுறை விரோத கருத்துக்களையும், தனியார் மய ஆதரவு கருத்துககளையும் திட்டமிட்டு உருவாக்கும். உதாரணமாக, தனியார் பஸ் முதலாளிகள் ஒரு சில பேருந்துகளை வைத்து திறமையாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் போது, அரசு ஆயிரக்கணக்கான பேருந்துகளோடு ஓட்டை உடைசலோடு நஷ்டத்தில் இயங்குவது போன்ற ஏராளமான ‘உண்மைகளை’ சொல்லலாம். ஆனால், கண்ணால் காணுவதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது போன்று, நடக்கும் ஊழல்களின் பெரும் பகுதி ஊழல் மைய அதிகார வர்க்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் நடக்கின்றது. இதற்காக போக்குவரத்து தொழிலாளர்கள் மீது தவறே இல்லை என்று சொல்லவில்லை. பணிச்சுமை, தொழிலாளர்களை வெறும் கோசமிடும் அடிமைகளாக, அரசியலற்ற பிழைப்புவாதிகளாக வைத்திருக்கின்ற போலிகள் முதலிய காரணங்களே இதற்கு காரணம். இதனை இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட வுள்ள ஏர் இந்தியா தொழிற்சங்கங்கள் மூலமாக உறுதி படுத்தி கொள்ள முடியும், புரட்சிகர சங்கங்களில் சேரும்போது, ச்ங்கங்களில் உள்ள ஜனநாயகம், அதிகார வர்க்கத்திற்கும் ஆப்பு வைப்பதோடு, தவறு செய்யும் தொழிலாளர்களை தட்டி கேட்கவும் செய்கிறது.

    • உங்கள் கருத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறேன் நன்றி .

  3. Viswamithra மகரிஷி – ஐடி துறை நண்பா என்ற் புத்தகத்தின் விவ்ரம் வலது பத்தகத்தில் வரும் நூல் அறிமுகம் பகுதியில் மின்னுகிறது பாருங்கள். இது போன்ற ஏராளமான கட்டுரைளை வினவு வெளியிடுகிறது. வினவில், IT என்று தேடி பாருங்கள். கிடைக்கும்.
    https://www.vinavu.com/2008/11/14/tmstar5/

  4. நல்ல பதிவு நண்பரே !
    தொழிலாளிகள் அடிமையாக இருக்கும் வரையில்தான் தொழிலாளிக்கு மதிப்பு, எதிர்த்து கேள்வி, உண்மை பேசினால் இது தான் நிலைமை!  2001 இல் தமிழகத்தில் நடந்தது யாராலும் மறக்க முடியாது!
    மேலும் மக்கள் போராட்ட பாதையை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலையில் எல்லதரப்பிலும் தள்ளபடுகிறார்கள் என்பதும்
    தெளிவாகிறது !

  5. நல்ல பதிவு. குட்டி முதலாளித்துவ வர்க்க என்ற கோணத்தில் பிரச்சனை பார்க்காமல் உரிமை பறிபோகிறது. அதிலும் தமிழகத்தில் தான் இத்தகைய அநீதி ஆரம்பமானது . இதை முறியடிக்க வேண்டும் என்றால் இந்திய தொழிலாளி வர்க்க ஒற்றுமை முக்கியம் .

  6. உழைக்கும் வர்க்கம் எந்த உயரமானாலும் ஒன்றே என்றும் யாருக்கு இடர் என்றாலும் யாரும் உணர்த்தலாம் என்று உணர்த்திய கட்டுரை வாழ்த்துக்கள்

  7. தோழர்களே!

    இக்கட்டுரையில் ஒரு தகவல் பிழை உள்ளது.

    முதலில் மங்களூர் விபத்து நடந்தது. பின்னர் விபத்தில் சிக்கியவகளின் உறவினர்கள் மங்களூர் வருவதற்காக தில்லியில் இருந்து ஒரு ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் மீண்டும் தில்லி செல்ல சான்று அளிக்கும் ஏர் இந்தியா பொறியாளர் இல்லாததால் எ-320 விமானதிற்கு சான்றளிக்கும் தகுதி இல்லாத “கிங்பிஷ‌ர்” பொறியாளர் சான்றளித்துள்ளார். இதனால் தான் வேலை நிறுத்தம் நடை பெற்றது.

    (http://livestreamingx.com/air-india-strike-2010-story-behind-air-india-strike-05252583.html).

    கட்டுரை நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

  8. நல்ல கட்டுரை .இது ஒரு பா ச்சிசம் என்பதை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்
    சு செஷன்

  9. இங்குதான் நாம் சோனியா சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் மன்மோகன் அரசில் இருக்கிறோமா? அல்லது திடீரென ஹிட்லர் போன்ற சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா என்ற வியப்பு மேலிடுகிறது//

    போலி சன நாயகத்தை திரைக்கிழிக்கும் அருமையான வரிகள்

    தொழிலாளி வர்க்கம் மக்களை சார்ந்து இருப்பதையோ மக்களிடம் உறவு வைத்திருப்பதையோ அரசு ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

    //ந்த அரசியலை இந்திய தொழிலாளி வர்க்கம் என்று கையிலெடுக்கப் போகிறது?//

    இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கலாம், நாம் அதற்கு என்ன செய்யப்போகிறோம்?

  10. மேற்கண்ட கட்டுரை மற்றும் சில கட்டுரைகளை மென் நூலாக்கியதில் தவறு உள்ளது தயவு செய்து சரி செய்யவும். வேலன்

  11. நே என்ப பெரிய அறிவாளியா எல்லாத்தையும் விமர்சிக்கற . குட். நல்லாத்தான் இருக்கு பட் சிம்ப்லிய சொல்லு ப படிக்கச் கடுப்ப இருக்குப

  12. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தவறு என்று நீதிமன்றம் கூறியது பாசிசம் என்று கூறுவது நகைப்புக்குரியது. A government is not a profit oriented organization and cannot be considered so. அங்கு எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் மற்றும் வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் (என் தந்தையும் அரசாங்க அதிகாரியாக இருந்தவர் தான். அரசாங்க அலுவலங்கங்களில் நடக்கும் “வேலையை” நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன். அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் போதவில்லை என்றால் அந்த வேலையை விட்டு விடவேண்டியதுதானே… வேறு யார் அவர்கள் “திறமைக்கு” ஏற்ற சம்பளம் கொடுக்கிறார்களோ அங்கு வேலை பார்க்க வேண்டியதுதானே. The country has so many bright poor youngsters who needs job. தொழிலாளர்கள் எல்லோரும் நல்லவர்கள்,, முதலாளிகள் எல்லோரும் கயவர்கள் என்ற இந்த பழமை வாத கருத்தை கேட்டு ஏமாற யாரும் தயாரில்லை.

    • உண்மை சுடும் சொல்வது நயவஞ்சகமான பிராமணியர்களின் வார்த்தை போல் உள்ளது… அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தவறு என்று நீதிமன்றம் கூறியது தவறுதான்.. அது பாஸிஸம் தான்… அதற்கு அரசு ஊழியர்களின் மெத்தனத்தை காரணம் காட்டி உனக்கு உரிமையேயில்லை என்பது என்ன வாதம் ? அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதும், வேலையே செய்யாமல் பெஞ்சு தேய்ப்பதும் உண்மைதான். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்களே யோசித்து அரசை வற்புறுத்தினால் அது உங்கள் சமூக அக்கறையை காட்டும்.

      தனியார்த் துறையில் இந்த மாதிரி யாராவது வேலை செய்யாமலேயே காலம் கடத்தினால் அவர்கள் உடனே சீட்டுக் கிழிக்கப்படுவர். அது போன்று இல்லாமல் கொஞ்சம் கடுமையான விதிகளையும், அவர்களின் வேலைத் திறத்தை கவனிக்க தனியார் போல் ஒரு Quality டிபார்ட்மெண்டும் அமைக்கப்படவேண்டும். அது போல ஒவ்வொரு முறை தவறு செய்து பிடிபடும் அதிகாரிக்கும் தற்காலிக வேலை நிறுத்தம் தவிர, தவறின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நெகடிவ் பாயிண்ட் வழங்கப்படும். இத்தனை நெகண்டிவ் பாயிண்ட்களுக்கு மேல் அவர் எடுக்கும் பட்சத்தில் அவர் பதவியிறக்கம் செய்யப் படவேண்டும். இன்னும் பல காலம் அவருடைய போக்கில் மாற்றம் இல்லையெனில் இறுதியாக அவரை பணிநீக்கம் செய்யவும் இயலவேண்டும். இப்படி பல அடுக்குத் தண்டனைகள் செய்யப்படும் போது இக்குற்றங்கள் குறையும். இதுதான் உங்கள் போல் ‘அந்நியன்’க்கு கடிதம் எழுதும் ஆட்களுக்கு நான் சொல்ல விரும்புவது.

      தொழிலாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்பது உண்மை. தொழிலாளர்கள் என்னும் வர்க்கம் தனது நடுத்தரவர்க்க சுயலாபங்களுக்காகவே போராடும் ஒரு சுயநல வர்க்கமாக இன்று சுருங்கியிருக்கிறது. அவர்களுக்குள் சாதிகள் போல் கட்சிகள் ஊடுருவி அவர்களைப் பிரித்து வைத்துள்ளன. அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரச்சனைகளையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இவையெல்லாம் உண்மைதான்.

      ஆனால் அதே போல முதலாளிகளில் 99 சதவீதம் பேர் கெட்டவர்கள் என்பதும் மறைக்க இயலாத உண்மை. அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் முதலாளியாக செயல்படுகிறது. ஆனால் இந்த அரசே டாடாக்களுக்கும், பிர்லாக்களுக்கும் கைகட்டி நிற்கும் சேவகனாகவும் இருக்கிறது. அதனால் டாடாக்களின் கம்பெனியும் பிர்லாக்களின் கம்பெனியும் ‘ரொம்ப சூப்பரா இருக்கு’ என்று உங்கள் போல் ஆட்கள் சர்டிபிகேட் கொடுக்கவேண்டுமென்றால் அதற்கு அரசுத்துறைகள் மிகக் கேவலமாக செயல்படவேண்டும். உடனே எல்லோரும் பாருங்கள் பாருங்கள் இந்த அரசுத்துறை நிறுவனங்களை என்று சங்கூதி விடுவீர்கள். இன்று அப்படி சங்கூதி இறுதி ஊர்வலம் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களி்ல் பெரியது பி.எஸ்.என்.எல் தான்.

      2002ல் பி.எஸ்.என்.எல் இந்தியாவின் கைபேசி-Cellphone வாடிக்கையாளர்களின் 85 சதவீதத்தை தன்னிடம் கொண்டிருந்தது. இன்று 2010ல் அதன் வாடிக்கையாளர்கள் வெறும் 20 சதமாகச் சுருங்கிவிட்டனர். கேட்டால் சர்வீஸ் சரியில்லை. டவர் கிடைப்பதில்லை. அதனால் ஏர்டெல்லுக்கு மாற்றிவிட்டேன் என்று உங்கள் போல் சாமானிய சீனுவாசன்கள் சொல்வது சாதாரணம். 2008 ஆரம்பத்தில் பி.எஸ்.என்.எல் 800 செல்போன் டவர்கள் வாங்க ஒரு ஜப்பானிய கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தது. ஒரு வருடத்திற்குள் இவை டெலிவர் செய்யப்படவேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஆர்டர் தொகையின் ஒரு சிறு சதவீதத்தை பி.எஸ்.என்.எல்லுக்கு தண்டத்தொகையாக கட்டவேண்டும் என்பது டெண்டர் ஒப்பந்தத்தின் வழக்கமான ஒரு ஷரத்து.

      அந்த ஜப்பானிய நிறுவனம் இரண்டு வருடங்களாக அனுப்பிய டவர்களின் எண்ணிக்கை 5. ஒப்பந்தப்படி டவர்களை அனுப்ப இயலாததால் இரு வருடங்களாக தண்டத்தொகையை மட்டும் தவறாது கட்டிவிடுகிறது. இதில் என்ன என்கிறீர்களா ? இதே கம்பெனிக்குத்தான் ஏர்டெல் நிறுவனமும் டவர்கள் செய்ய ஆர்டர்கள் கொடுத்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்துக்கு வருடந்தோறும் தவறாமல் டவர்களை அனுப்பும் இந்த ஜப்பானிய நிறுவனம் பி.எஸ்.என்.எல்லுக்கு டவர்களை அனுப்ப இயலாமல் கட்டும் தண்டத்தொகையை அவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் தவறாமல் வழங்கிவிடுகிறது. அத்துடன் பி.எஸ்.என்.எல்லில் தலைமைப் பதவியில் இருக்கும் முக்கியமான அதிகாரிகளுக்கும் பெட்டி தவறாது போய்விடுகிறது. இந்தமாதிரி தகவல் தொழில் புரட்சி பண்ணும் இந்திய ஏர்டெல்லின் மேனேஜராக இருக்கும் உங்களைப் போன்ற கபூரைப் போய்க் கேளுங்கள் இது நியாயமான வர்த்தகமா ? என்று.

      • புரியவில்லை.. உரிமை, சுதந்திரம் இவற்றை அனுப்பவிக்கவேண்டும் என்றால் பொறுப்புணர்வு இருக்கவேண்டும். *Freedom comes along with responsibility^. அவர்களுடைய உரிமைக்காக வாதாடும் நீங்கள் அவர்களுடய பொறுப்பற்ற தன்மைக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? . பார்பனீயம், முதலாளித்துவம் — எல்லா பிரச்சனைக்கும் இந்த இரண்டும் தான் காரணம் என்ற உங்கள் தொலை நோக்கு பார்வை புல் அரிக்க வைக்கிறது..

    • வேலை நிறுத்த உரிமை மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றென ஏற்கப்பட்டது. அதை மறுப்பது அடிப்படை உரிமை மீறல்.
      இது ஒன்றும் தனிப்பட மனிதர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ என்கிற விடயமல்ல.
      தொழிலாளர்களின் சட்டரிதியான உரிமைகட்கான சட்டரீதியான போராட்டமே வேலை நிறுத்தம்.
      தொழிலாளி உயிர் வாழ முதலாளி வேலை கொடுக்கிறான், எனவே தொழிலாளி ஆயுள் பரியந்தம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது நிலவுடைமைச் சிந்தனைக்குரிய பத்தாம் பசலித்தனம்.
      வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று அடிமைச் சாசனம் எழுதச் சொல்லுகிறாரா unmai sudum ?

      • நன்றி கடன் தேவையில்லை… அனால் கிடைக்கும் கூலிக்கு உழைக்க வேண்டும், அதை செய்யாமல், சம்பளம் மட்டும் வாங்குவது கோழைத்தனம். ,.

        வேலை நிறுத்தம் சட்ட ரீதியானது. சரி… அதற்க்கு முதலில் அவர்கள் வேலை செய்ய வேண்டும் அய்யா. , வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற அடிமை சாசனம் தேவையில்லை. வேலை செய்வோம் என்று அவர்கள் உறுதி எடுத்தாலே போதுமானது, புரிந்துகொள்ளுங்கள்.

        • சிறிய குற்றங்களைப் பெரிதுபடுத்திப் பெரிய ஒட்டுண்ணிகளையும் அவர்கட்குக் கேடயமாக நிற்கும் அரசையும் நியயப்படுத்துவதத் தன திரும்பத்க திரும்பக் கேட்கிறோம். பொதுமக்கள் பற்றிய அக்கறைகளெல்லாம் மக்கள் போராடுகிற போது தான் அம்பலமாகின்றன.
          ஒவ்வொரு போராட்டத்தையும் கொச்சைப் படுத்த எதாவது கையிருப்பில் இருக்கும்.

      • கொடுக்கிற கூலிக்கு மேலாக உழைப்பைப் பெறாவிட்டால் லாபம் எது?
        எந்தக் கோழைத்தனைத்தை பற்றிப் பேசுகிறிர்கள்?
        தொழிலாளரின் உரிமைகளை மறுக்க அரச வன்முறையைப் பாவித்துச் சட்டத்தையும் வளைக்கிறதல்லவா கோழைத்தனம்.

        • எது உரிமை ? அப்பாவி மக்கள் அரசாங்கத்தின் உதவியை நாடி , அரசாங்க ஊழியர்களிடம் வரும்போது, அவர்களின் ரத்தம் குடிக்கும் இவர்களின் தன்மைக்கு உரிமை என்று நீங்கள் பெயரிட்டால்…. மன்னிக்கவும்… இவர்கள் மக்களின் இரத்தம் குடித்தார்கள், அரசாங்கம் இவர்களின் ரத்தம் குடிகிறது போலும்… இந்த ஒட்டுண்ணிகளின் செயல் கோழைதனமின்றி வேறு என்ன?

          • அரசே தனது ஊழியர்களை மக்களை மேலாதிக்கம் செய்யும் வண்ணம்தான் பழக்கியிருப்பதோடு அப்படி அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால் அதே அரசால் அதே அரசு ஊழியர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மக்கள் விரோத அதிகாரங்கள் தவறு என்று உணருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அரசு ஊழியர்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டுமென்றாலும் அதற்கு பிற மக்கள் ஆதரவு அவசியம். எனவே இரண்டையும் சமப்படுத்தி பார்ப்பது சரியல்ல.

  13. //கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏர் இந்தியா விமானம் ஏர் பஸ் 320 (மங்களுரில் விபத்திற்குள்ளாகிய அந்த விமானம்) பெங்களுரிலிருந்து டெல்லி புறப்படும் போது (மே 22 – இன்று இந்த விமானம் பொறியியற் காரணங்களுக்காக அடுத்த நடையில் நிறுத்தப்பட வேண்டும்) மங்களுரில் விதிப்படி தகுதியுள்ள ஏர் இந்தியா பொறியாளர் சரி பார்த்து சான்றளிக்க வசதியில்லை. //

    நீங்கள் இனைப்பு கொடுத்த தளத்திலுல்ல செய்திக்கும் இதற்க்கும் முற்றிலும் வித்தியாசம் உண்டு. மிக மிக தவறாக மொழி பெயர்த்துள்ளீர்கள். விபத்திற்குள்ளானது வேறு விமானம், பொறியியல் காரனத்திற்க்காக நிறுத்தப்பட்டது வேறு விமானம்.

    ரகு.

  14. வினவு பதிப்பு குழுமத்திற்கு-

    இரண்டு தோழர்கள் கிங்பிஷ‌ர் தனியார் நிறுவன பொறியாளர் சான்று அளித்த விமானம் வேறு- விபத்து நடந்த விமானம் வேறு என்று சுட்டிக்காண்பித்துள்ளனர். எனவே கட்டுரையில் “நடந்தது என்ன” என்ற தலைப்பின்கீழ் “கடந்த சில தினங்களுக்கு முன்.. என்பதிலிருந்து 158 உயிர்கள் பறிபோயுள்ளது” என்பது வரை உள்ள 2 பத்திகளை நீக்கிவிட்டு கீழ்கண்டவாறு திருத்தியமைத்தால் பொருள் பிழையின்றி சரியாகிவிடும் என எண்ணுகிறேன். விபத்திற்கும் மேற்சொன்ன சான்றளிப்பிற்கும்- விபத்து நடந்த விமானத்தின் வகை (விமான எண் குறிப்பிட்டதில் தவறு) குறிப்பிட்டதில் தவறு கண்ட போதிலும் அரவிந்த் ஜாதவின் உடனடி டிஸ்மிஸ் குறித்தும் அந்த தோழர்கள் கருத்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    நடந்தது என்ன?

    ஒருபுறம் இந்த விபத்து குறித்து உயிரிழப்பு குறித்து நாடே வருத்தத்தில் இருக்கும் போது மற்றொரு தடத்தில் செல்ல வேண்டிய விமானத்தை சான்றளிக்க ஏர் இந்தியா பொறியாளருக்கு பதிலாக தனியார் நிறுவன பொறியாளரை பயன்படுத்தியதை ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்த்தனர்.

    • தோழர் திருத்தம் செய்யப்பட்டது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க